சோ – மானுடத்தின் பன்முகம்

author
5
0 minutes, 0 seconds Read
This entry is part 13 of 17 in the series 11 டிசம்பர் 2016

cho-ramaswamy

குமரன்

வாழ்வின் பல்வேறு சமயங்களில் நம் எத்தனிப்பு ஏதுமின்றி சில நல்ல விஷயங்கள் நடைபெறும். அவற்றை “அதிர்ஷ்டம்” என்று அழைப்பதுண்டு. “துக்ளக்” வாசிக்கபடும் வீட்டில் பிறந்தது என்பது எனக்கான ஆரம்பகால அதிர்ஷ்டம். இருப்பினும், எந்தவித “ஜனரஞ்சக” விஷயமும் இல்லாமல் எழுத்துக்களால் மட்டுமே நிரம்பிய அப்பத்திரிக்கையை பார்த்தாலே முதலில் போரடிக்கும். படிக்கத் தோன்றாது. ஆனால், அந்த எண்ணம் விலகிய வகை, ஆச்சரியமானது. எண்பதுகளின் நடுப்பகுதியில் எனக்கு கிரிகெட் கிறுக்கு தலைக்கேறியிருந்தது. அதனால், கிரிகெட் சார்ந்த எந்த செய்தி எந்த வடிவில் இருந்தாலும் என்னை ஈர்த்தது. அப்போது தான் தமிழை கோர்வையாக வாசிக்கவும் எழுதவும் துவங்கியிருந்தேன். “கபில்தேவ் பற்றிய ஒரு கேள்விக்கு சோ எப்படி பதில் சொல்லியிருக்கிறார்” என்ற வீட்டினரின் உரையாடலின் வழியே தான் “துக்ளக்” தொட்டுப்பார்க்கும் ஆர்வமே வந்தது. பின்னர் பல மாதங்கள் துக்ளக் வீட்டிற்கு வந்தவுடன், “கேள்வி பதில்” பகுதியை மட்டும் தேடுவதும் அதிலும் கிரிகெட் பற்றிய ஏதெனும் கேள்வி இருக்கிறதா என்று பார்ப்பதும் வழக்கமானது. கண்ணை மூடிக்கொண்டு தேட முடியாதே…மிகவும் ஸ்வாரஸ்யமான பிற பதில்கள் அவ்வப்போது குறுக்கிடும். அவ்வாறு கேள்வி பதில் பக்கங்களை தேடிப்போகும் போது “ஒண்ணரை பக்க நாளேடு” குறுக்கிடும். முதன் முதலாக வாசித்து நாள் முழுதும் சிரித்துக் கொண்டே இருந்த இதழ் ஞாபகம் இருக்கிறது. “வெங்காய விலை வீழ்ந்தது எப்படி” என்று “வெங்காய நிருபர்” ஒருவர் பேட்டி எடுக்கும் நக்கலும் நையாண்டியும் நிறைந்த “பேட்டி” அது. யார் எவர் என்று பார்க்காமல் “அடித்து வெளுக்கும்” ஆள் இவர் என்று குறைந்த காலத்திலேயெ புரியத் துவங்கியது.

மெதுமெதுவாக கேள்வி பதிலும் ஒண்ணரை பக்க நாளேடும் வாசிக்கத் துவங்கினேன். மேலோட்டமாக வெறும் கேலியாகத் தெரியும் பல்வேறு விஷயங்களின் அடியில் இருந்த ஆழமான “கோணம்” மெல்ல மெல்ல பிடிபடத் துவங்கியது. அப்படியென்றால் மீத பக்கங்களில் இருக்கும் கட்டுரைகளும் இப்படித்தான் இருக்கும் என்ற ஆர்வத்தில், புரிந்ததோ இல்லையோ, அனைத்தையும் படிக்கலானேன். சில வருடங்களில் “அட்டை டூ அட்டை” ரசிகனானேன். ஏன் துக்ளக் மாதம் இருமுறை மட்டுமே வருகிறது தினம் வந்தால் நன்றாக இருக்குமே என்று ஏங்கும் அளவு “செய்திகள்” வெளிப்படையாகவும் உள்ளுறையாகவும் இருந்தன. சில வருடங்கள் முன்பு வாரம் ஒரு முறை வெளிவரத்துவங்கினாலும், அந்த ஏக்கம் இன்றும் இருக்கிறது…

பால்யத்திலிருந்து இளைமக்கு மனம் மாறிக்கொண்டிருந்த காலத்தில், சமூகம் மற்றும் அரசியல் அரிச்சுவடியாக துக்ளக்கை பாவிக்கும் அளவு என்னுள் மாற்றம் நிகழ்ந்து முடிந்திருந்தது. இவை சார்ந்த எந்தவொரு சிந்தனை தோன்றினாலும், அப்பார்வை குறித்த தெளிவு பெறும் கண்ணாடியாய் மாறியிருந்தது துக்ளக். ஒரு விஷயத்தை இப்படியொரு கோணத்தில் எல்லாம் பார்க்க முடியுமா என்ற வியப்பு முதலில் தோன்ற, அதை வாசித்து பழகிப் பழகி, எப்படி சந்தனக் கட்டையில் தண்ணீர் ஊற்றி விரலைத் தேய்த்தால் அதிலும் கொஞ்சம் சந்தனம் ஒட்டுமோ அது போல், நம் சிந்தனையையும் அதே போன்று பல்வேறு கோணங்களில் யோசிக்கப் பழகும் வித்தைக்குரிய ஆசிரியர் ஆனார் சோ.

எந்தவொரு உருவாக்கத்திலும், அது சார்ந்த சிந்தனை கூர்மையிலும், வெளிப்படுத்தும் நேர்மையிலும் பெரும் தாக்கத்தை நம்முள் ஏற்படுத்தும் வலிமை அவருக்கிருந்தது. ஒரு சிந்தனையில், அதன் பொருள் குறித்த தன்னிலை சார்ந்த பாரபட்சமின்றி யோசிக்கும் திறன் அவருக்கிருந்தது. எனவே தான், மேம்போக்காய் பார்க்கையில், ஒரு தொகுப்பாய் அவரின் நிலைப்பாடுகளை நோக்குகையில் முரண்பாடு போல் தெரியும். ஆனால் அதனடியில் பக்குவம் ஒளிந்திருந்தது. அவரால் ஒருவரின் ஒரு செயலை பாராட்டியும் மற்றொரு செயலை எதிர்த்தும் விமர்சிக்க முடிந்தது. அறியாமையால் ஆர்ப்பரிக்கும் அரைகுறைகளுக்குக் கூட, தன் பாதைக்கு முற்றிலும் எதிர்துருவத்தில் இருப்பவர்களுக்குக் கூட தன் பத்திரிகையில் எழுதும் வாய்ப்பு கொடுத்தார். ஒரு அரசாங்கத்தின் தலைமை துவங்கி பஞ்சாயத்து வரை வேலை எப்படி நடக்க வேண்டும், எப்படி நடக்கிறது என்பதை சாமானியனும் புரிந்து கொள்ளும் வண்ணம் துக்ளக்கில் வெளிவந்த கட்டுரைகள் ஆயிரத்தை தாண்டக்கூடும்.

துக்ளக்கில் அவர் இத்தனை “வேலை” செய்கிறார் என்றால் வேறு என்னவெல்லாம் இவர் செய்திருப்பார் என்று ஆர்வம் என்னை அவரின் புத்தகங்கள், நாடகங்கள், சினிமா என்று அழைத்துச் சென்றது. அவரின் எழுத்துக்கள் அனைத்திலுமே அவர் தன்னை ஒரு “அற்ப பதர்” போலக் காட்டிக் கொள்வார். “அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள்” என்னும் தொகுப்பில் பல்வேறு (உண்மையான) பெருந்தலைவர்களை சந்தித்த அனுபவங்களை சொல்லும் பொழுதெல்லாம், தான் சாதாரணன் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கொண்டே இருப்பார். எனக்குப் போய் இந்த வாய்ப்பெல்லாம் கிடைக்கிறதா என்ற ரீதியில்தான் கட்டுரையின் போக்கு இருக்கும். ஐந்து நிமிடம் புகழ் வெளிச்சம் கிடைத்தாலே அலப்பறை காட்டும் இன்றைய “பிரபலங்கள்” அறிய வேண்டிய ஏராளமான பண்புகள் அவரின் கட்டுரைகளில் கொட்டிக் கிடக்கின்றன.

சமூகம், அரசியல் தாண்டி, ஆன்மீகம் சார்ந்த புரிதலுக்கும் அவரின் படைப்புகள் பெரும் உதவியாய் இருக்கின்றன. கடவுள் துவங்கி அனைத்து வித நம்பிக்கைகள் சார்ந்த கேள்விகளுக்கும், பதிலோ அல்லது நம்மை அடுத்த கட்ட சிந்தனைக்கு அழைத்து செல்லும் பாதையோ அவரிடம் இருந்தன. சொல்லும் செயலும் ஒருவருக்கு ஒன்றாயிருத்தல் அபூர்வம். அதை நாம் காணப்பெறுதல் அதைவிட அபூர்வம். சுனாமி வீசிய அடுத்த மாதம் துக்ளக் ஆண்டு விழாவில் அவரிடம் ஒருவர் கேள்வி கேட்டார் “தர்மம் நியாயம் என்று பேசுகிறீர்களே, சுனாமி நிவாரணத்திற்கு என்ன செய்தீர்கள்” என்றார். அவரை சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்த சோ, இந்த கேள்வி கேட்டதற்காக நீங்களும், பதில் சொல்வதற்காக நானும் வருத்தப்படப்போகிறோம் என்று சொல்லி, “இப்போதெல்லாம் கோயிலுக்கு நன்கொடை செய்த ட்யூப் லைட்டில் வெளிச்சம் மறைக்கும் வண்ணம் பேரெழுதுவது தான் தர்மம். செய்வதை விட அதை வெளிக்காட்டிக்கொள்வதில் தான் பெருமை. அதன் பாதிப்புதான் இந்த கேள்வி. எல்லார் முன்பும் கேட்டு விட்டீர்கள் என்பதால் பதில் சொல்கிறேன். ஆனால் வெளியே சொல்ல நேர்ந்ததற்காக வருந்துகிறேன்” என்று சொல்லி, தன் சொந்த இருப்பிலிருந்து ஒரு சின்ன தொகை (அது ஒரு பெரும் தொகை) கொடுத்ததாகச் சொல்லி, என்னால அவ்வளவு தான் தர முடிந்தது என்றார்.

மற்றொரு முறை, கருணாநிதியை இவ்வளவு காட்டமாக விமர்சித்தாலும் அவரின் பெயரை குறிப்பிடாமல் கலைஞர் என்கிறீர்களே என்ற கேள்விக்கு, அவரின் வயதுக்கு பெயர் சொல்லி அழைப்பது மரியாதையில்லை என்றார்.

தன் சார்பு குறித்த சந்தேகங்கள் அனைத்தையும் பொய்ப்பிக்கும் வண்ணம் டிசம்பர் 6, 1992 அடுத்த வந்த இதழ் அட்டையை வெறும் கருப்பில் வெளியிடும் நேர்மை அவருக்கிருந்தது.

இஸ்லாமியர்கள் என்றாலே தீவிரவாதிகள் அல்ல, அவர்கள் மார்க்கமும் மேன்மையுடையது என்று அனைவரும் அறிய வேண்டும் என்பதற்காகவே அம்மதம் குறித்த தொடரை துக்ளக்கில் வெளியிட்டார். குரான் வாசிக்கும் வாய்ப்பற்ற பிற மதத்தினருக்கு ஒரு கையேடு போல அத்தொடர் விளங்கியது.

நடிகைகளை நடுப்பக்கத்திலும் அட்டையிலும் போடும் பத்திரிக்கைகள் லட்சக்கணக்கில் விற்கும் தமிழ்த் திருநாட்டில் கழுதைகள் அட்டையில் பேசும் துக்ளக் ஆயிரக்கணக்கில் மட்டுமே விற்பதில் ஆச்சரியமில்லை. ஆனால் வேறெந்த இதழையும் வாசிக்கையில் கிடைக்காத ஒன்று துக்ளக்கில் இருக்கிறது. ஒவ்வொரு முறை துக்ளக் வாசித்து முடிக்கும் பொழுதும் நேர்மை குறித்த ஒரு பெருமிதம் நமக்குள் பரவுவதை நாம் உணர முடியும். நாமே ஏதோ நேர்மையாக இருந்து விட்டதை போன்றதொரு பெருமிதம்…அந்த பெருமிதம் நாளடைவில் நாம் ஏன் நேர்மையாக இருக்கக் கூடாது என்ற எண்ணமாக மாறும்…நம்மை நேர்மையின் சாலையை நோக்கி அழைத்துப் போகும்…இதுவே சோவின் யுக்தி. துக்ளக்கின் வெற்றி. ஏனெனின் நம் நாடும் சமூகமும் இப்படி சீரழிகிறதே என்ற ஓயாத ஆதங்கத்தின் வெளிப்பாடே துக்ளக். சமூகத்தில் மீண்டும் ஒரு சீர்மை
வாராதா என்ற ஏக்கத்தின் வெளிப்பாடே துக்ளக். ஆயிரம் பேரில் ஒருவரேனும் நேர்மையாளாராக மாறி விட மாட்டாரா என்ற எதிர்பார்ப்பின் வெளிப்பாடே துக்ளக். அதனால் தான் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக “அப்படியே” வந்து கொண்டிருக்கிறது துக்ளக்.

சற்றே யோசித்து பார்ப்போம்…கடந்த இரண்டு தலைமுறைகளில், அரசியல், ஆன்மீகம், சமூகம், கலை, கல்வி என எதிலுமே ஒரு மேன்மையான தலைவர் உருவாகவே இல்லை. ஏன்? விடை நம் ஒவ்வொருவரிடமும் இருக்கிறது. நாம் தனி வாழ்விலும், சமூக வெளியிலும் “என் வாழ்க்கை” என்ற பெயரில் செய்யும் கோமாளித்தனங்களை குழந்தை மேல் கொண்ட தாயின் பெருங்கருணையுடன் காலம் மன்னித்து வந்திருக்கிறது…அதற்கும் எல்லை உண்டல்லவா? காலத்தின் தண்டனை தாமதமாகத்தான் வரும். மீள முடியாத அழிவைத் தரும்.
எனவேதான், மேற்கூறிய‌ அனைத்துத் தளங்களிலும் தற்போது பொறுக்கிகளையும் பொறுப்பற்றவர்களையும் தலைவர்களாக ஆக்கி வைத்திருக்கிறது காலம். நாம் இருக்கும் இருப்புக்கும் வாழும் லட்சணத்திற்கும், சோ போன்றவர்கள் எல்லாம் இனிமேல் “இங்கு” தோன்ற மாட்டார்கள். அவர் படைத்த “ஜக்கு”வின் பாஷையில் சொல்வதானால், சோமாறிகள் தான் மேதாவிகளாய் இனி இங்கு நடமாடுவார்கள்.

சோ என்பவர் காலம் தமிழகத்தின் மேல் காட்டிய கடைசி கரிசனம். இதை நாம் உணர்தல் அவசியம்!

Series Navigationவெண்ணிற ஆடைதொடுவானம் 148. கலகலப்பான கிராமம்
author

Similar Posts

5 Comments

 1. Avatar
  sanjay says:

  Written by a die hard cho fan. Though for many qualities, cho deserves mention, his attitude ^ remarks against women was disappointing.

 2. Avatar
  ஜோதிர்லதா கிரிஜா says:

  திரு குமரன் அவர்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுகள். அவர் சொல்லி யிருப்பவை அனைத்தும் நடுநிலையாளர்களின் கருத்துகளே.
  திரு சஞ்சய் அவர்களின் எதிரொலியில் கண்டுள்ளதும் மிகவும் சரியே. பெண்களுக்கு நீதி வழங்குவதில் அவருக்கு நியாயம் தெரிந்தது இல்லை என்பதே கசப்பான உண்மை. எனினும் என்னைப் போன்றவர்களின் எதிர்ப்புக் கட்டுரைகளில் சிலவற்றை – சிலவர்றை மட்டுமே – அவ்வப்போது அவர் பெருந்தன்மையோடு துக்ளக்கில் வெளியிட்டதும் உண்டு. மொத்தத்தில் அவர் மிக, மிக நல்லவர்.
  அவருடைய விசிறி ஜோதிர்லதா கிரிஜா

 3. Avatar
  K.Kannan says:

  Yes. Verbally, he has not shown the respect for women. But I feel he had his respect for women where they deserved it. It is difficult to comprehend the contradiction unless one approach CHO wholistically.

  1. Avatar
   BSV says:

   “…respect for women where they deserved it.” is a wrong way of putting it. தவறான வாசகம். ஒவ்வொரு பெண்ணும் மதிக்கப்பட வேண்டும் .. அவள் ஒரு நிலைதவறிய வாழ்க்கையுடையவளாக இருப்பினும் கூட. அவளை மதிக்க மறுத்துவிட்டு, பெண்கள் என்ற வர்க்கத்தை நான் மதிக்கிறேன் என்று சொல்ல முடியாது. எப்படிப்பட்ட பெண்ணாக இருப்பினும் பெண் மதிக்கப்படவேண்டியவள் என்ற நிலையில் இருவேறு கருத்துக்கள் இரா. உங்கள் வாசகம் இருக்கிறது எனகிறது. வருந்துகிறேன்.

   சோ போன்ற பொது வாழ்க்கையில் உள்ளோர், அவர்கள் எழுத்துக்களையும் கருத்துக்களையும் எதிர்பார்த்து ஏற்றுக்கொள்போர் நிறைய இருக்க, அவர்கள் நேரடியாக சொற்களால் பெண் வர்க்கத்தை சிறுமைப்படுத்தவேண்டுமென்ற அவசியமே இல்லை. எங்காவது ஒரு நூலில், பெண்ணைப்பற்றி அலல்து பெண்ண்டிமைத்தனத்தைப் போற்றும் பகுதியிருந்து அதை இவர்கள் உச்சிமோந்து வழிமொழிந்தால், அது தவறான வழியில் சமூகத்தை இட்டுச்செல்லும்.

   சோ அப்படி ஒரு நூலுக்கு விளக்கமெழுதும்போது பெண்கள் வர்க்கத்தையே சிறுமைப்படுத்தி எழுதியிருந்தார். அதறகு எதிர் வினையாக எழுத்தாளர் Jyothirlatha Girija சோ அவர்களைக் கடுமையாகச் சாடி எழுதியிருந்தார். அக்கடிதத்தை ஒரு முழுபக்க அளவில் கட்டம் கட்டி துகளக் வெளியிட்டது. She is referring to it here.

   சோ மிசோஜைனிஸ்ட் என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால், ஆண்-பெண் உறவு அல்லது சமூகத்தில் பெண் எப்படி இருக்க வேண்டுமென்னும்போது, அவர் ஒரு பழமை வாதியே.

   நம் தமிழ்ச்சமூகத்தில் வளரும் ஆண் தலைமுறை பெண்கள், ஆண்களுக்காக படைக்கபப்ட்ட அடிமைகள்; அவள் எப்படி மறுக்கலாம்; எதிர்த்துப்பேசலாமென்ற இன்னபிற ஆணாதிக்கக்கொள்கை உள்வாங்கி வளர்வதற்கு, பொறுப்பான இம்மனிதர்களின் ஆணாதிக்கச் சிந்தனையே காரணம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *