முருகபூபதி – அவுஸ்திரேலியா
தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் ஒருவரின் பணிகளை ஆதரிப்பது ஊக்குவிப்பது முதலான அரிய நற்குணங்கள் கொண்ட மனிதர்களை இக்காலத்தில் காண்பது அபூர்வம். கலை இலக்கிய உலகத்தில் மற்றவர்களின் ஆற்றல்களை இனம் கண்டு ஊக்குவிக்கும் சிறப்பியல்புகொண்டிருந்த நண்பர் – இலக்கிய விமர்சகர் தி.க.சிவங்கரனின் நினைவுகள் சாசுவதமானவை. அவர் பொதுவுடைமை கருத்துக்களினால் ஈர்க்கப்பட்டு முற்போக்கு இலக்கியத்தையும் இலக்கியவாதிகளைப்பற்றிய கருத்துக்களையும் தனது வாழ்நாள் பூராவும் பதிவுசெய்துகொண்டிருந்தவர்.
ஒரு இலக்கியப்படைப்பை படித்தவுடன் தனது வாசிப்பு அனுபவத்தை நயப்புரையாகவே தாமதமின்றி எழுத்தில் பதிவுசெய்துவிடும் அவரது இயல்பு எமக்கெல்லாம் முன்னுதாரணமானது .
வயது வித்தியாசம் பாராமல் எவரது படைப்பையும் ஆழ்ந்து வாசித்துவிட்டு, குறைந்த பட்சம் வாசகர் கடிதம் அல்லது அஞ்சலட்டையாவது எழுதிவிடுவார். அதனால் அவரை அஞ்சலட்டை விமர்சகர் என்றும் சில புகழ்பெற்ற எழுத்தாளர்கள் நையாண்டி செய்துள்ளார்கள்.
தி.க.சி. என்று எம்மவர்களினால் கலை – இலக்கிய இதழியல் ஊடகத்துறையில் அழைக்கப்பட்ட சிவசங்கரன் மொழிபெயர்ப்பாளராக சென்னை சோவியத் தூதரக தகவல் பிரிவில் பணியாற்றிய காலத்திலேயே எனக்கு அறிமுகமானார்.
நான் சென்னைக்கு முதல் தடவையாக 1984 இல் சென்றபொழுது நண்பன் காவலூர் ஜெகநாதன் எனக்கொரு வரவேற்பு கூட்டத்தை தி.க.சி.யின் தலைமையிலேயே நடத்தினார். அந்த நிகழ்ச்சி நா. பார்த்தசாரதியின் தீபம் அலுவலகத்தில்தான் நடந்தது. அதற்கு ஜெயந்தன், சா. கந்தசாமி, ராஜம் கிருஷ்ணன், ரகுநாதன், சிட்டி சுந்தரராஜன், சோ. சிவபாதசுந்தரம், அசோகமித்திரன், தீபம் நிருவாகி திருமலை, நான்காவது பரிமாணம் நவம், கணபதி கணேசன் , மு.கனகராஜன் உட்பட சிலர் கலந்துகொண்டனர்.
ஆனால், தீபம் பாரத்தசாரதி ஏனோ வரவில்லை. இவர்களில் சிலர் இன்று உயிரோடு இல்லை. நினைவுகளில் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.
மேலே குறிப்பிடப்பட்ட இலக்கிய ஆளுமைகள் கலந்துகொண்ட அந்த இனிய மாலைநேரச்சந்திப்பு எனது வாழ்வில் மறக்கமுடியாதது. தரையிலே ஒரு பெரிய கம்பளத்தை விரித்து அமர்ந்து உரையாடினோம்.
தி. க.சி அவர்கள், எனது முதலாவது சிறுகதைத்தொகுதியான சுமையின் பங்காளிகள் நூலைப்படித்துவிட்டு வந்தே தலைமையுரையாற்றியது எனக்குள் பெரும் ஆச்சரியத்தை உருவாக்கியது.
வழக்கமாக நூலைப்படிக்காமலேயே மேம்போக்காக நுனிப்புல் மேய்ந்து பேசிக்கொண்டிருந்தவர்கள் மத்தியில், தி.க.சிவசங்கரன் அக்காலப்பகுதியில் வளர்ந்துவந்த இளம்தலைமுறையைச்சேர்ந்த என்னையும் ஒரு பொருட்டாக மதித்து எனது நூலைப்படித்துவிட்டு வந்து தமது தலைமையுரையை நூலின் நயப்புரையாகவே சமர்ப்பித்தமை எனக்கு ஒரு அதிசயமே.
தீபம் ஆசிரியர் நா. பார்த்தசாரதி அதற்கு வரவில்லை என்பது எனக்குச் சற்று ஏமாற்றமே. இத்தனைக்கும் அவர் எங்கள் இலங்கையில் நீர்கொழும்பூருக்கு வந்து உரையாற்றியவர். அப்பொழுது நான் சிறுவன். இலக்கியம் பற்றி எதுவும் தெரியாத அந்தப்பருவத்தில் ஆகிருதியான தோற்றமுள்ள அவரைப்பார்த்திருக்கின்றேன். நான் சென்னைக்கு வருமுன்னரே காவலூர் ஜெகநாதன் அவரிடம் கேட்டு அலுவலகத்தை அச்சந்திப்புக்கு ஒழுங்குசெய்துவிட்டார்.
தி.க.சி . தலைமையென்றால் நிச்சயமாக முற்போக்கு இலக்கியவாதிகள்தான் வருவார்கள். அங்கு ஈழத்து எழுத்தாளரின் வரவேற்பு நிகழ்வுக்குப்பதிலாக இலக்கிய சர்ச்சையே மேலோங்கியிருக்கும் என்பதனாலோ என்னவோ தீபம் பார்த்தசாரதி அந்நிகழ்வுக்கு தனது அலுவலகத்தை தந்துவிட்டு நகர்ந்துகொண்டார்.
1983 ஆம் ஆண்டின் இனக்கலவரத்தையடுத்து ஈழத்து இலக்கியப்படைப்பாளிகளின் குறிப்பாக தேசிய ஒருமைப்பாடு பற்றி உரத்துக்குரல்கொடுத்த முற்போக்கு எழுத்தாளர்கள் -உணர்ச்சிக்கொந்தளிப்புகளை பதிலுக்குப்பதிலாக படைப்புகளில் பதிவுசெய்து இனவாத சிந்தனைகளை தூண்டிவிடாமல் சிங்கள மக்களிடமிருக்கும் முற்போக்கு சக்திகளுடன் இணைந்து இயங்கவேண்டும் என்ற சிந்தனைவயப்பட்டவராக தி.க.சி. சிறந்த உரையை அன்றையதினம் நிகழ்த்தினார்.
யாழ்ப்பாணத்தில் சட்டர்டே ரிவியூவின் ஆசிரியர் காமினி நவரட்ணா தமிழ்மக்களின் உரிமைகள், பாதுகாப்பு தொடர்பாக குரல்கொடுத்து எழுதியபொழுது அவரை சிங்கள பேரினவாத சக்திகள் ” அவர் காமினி நவரட்ணா இல்லை. காமினி நவரத்தினம் ” என்று ஏளனமாக வர்ணித்தார்கள் என்று நான் சொன்னபொழுது – தி.க.சி. – ” தம்பி இனவாதிகள் அப்படித்தான் பேசுவார்கள். அத்தகைய பேச்சுக்களை நிராகரித்துக்கொண்டு நாம் முன்செல்லவேண்டும் ” என்றார்.
அன்றைய சந்திப்பு மிகவும் பயனுள்ளதாகவே அமைந்தது. 1983 இன் வன்செயலுக்குப் பின்னர் தமிழகத்திற்கு அகதிகளாக வந்தவர்களை உரிய கௌரவத்துடன் நடத்துவதற்கு தமிழக அரசு மட்டுமல்ல தமிழக படைப்பாளிகளும் முன்வரவேண்டும் என்று தி.க.சி. வலியுறுத்தினார்.
மீண்டும் 1990 இல் சென்னைக்கு நான் சென்றிருந்தவேளையில் அடையாறில் இலக்கிய அன்பர் ரங்கநாதன் அவர்களின் இல்லத்தின் மொட்டை மாடியில் தி.க.சி. தலைமையில் மல்லிகை 25 ஆவது ஆண்டு மலர் அறிமுக நிகழ்வு நடந்தது. மல்லிகை ஜீவாவும் இலங்கையிலிருந்து வந்திருந்தார்.
இந்நிகழ்வில் கவிஞர்கள் அக்கினி புத்திரன் – மேத்தா – மேத்தாதாசன், சு.சமுத்திரம் – சிவகாமி – சிட்டி மற்றும் இலங்கையைச்சேர்ந்த சோ. சிவபாதசுந்தரம் – சுந்தா சுந்தரலிங்கம் – செ.யோகநாதன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
தி.க.சி. ஈழத்து மற்றும் தமிழக படைப்பாளிகளுக்கு மத்தியில் ஒரு பாலமாகவே வாழ்ந்திருப்பவர் என்பதற்காகவே இந்தத் தகவல்களை பதிவு செய்கின்றேன்.
2011 ஆம் ஆண்டு தொடக்கத்தில் நாம் கொழும்பில் முதலாவது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளையும் மேற்கொண்டிருந்தவேளையில் – அதற்கு முன்னர் 2010 இறுதியில் அதற்கு எதிராக கீற்று இணையத்தளமும் தமிழகத்திலிருந்த எஸ்.பொன்னுத்துரையும் முதல் கொள்ளிவைத்து தீ மூட்டியபொழுது தி.க.சியும் அவர்களின் பேச்சை நம்பி தீராநதியில் தனது கருத்துக்களை பதிவு செய்திருந்தார்.
தி.க.சி.யின் நீண்ட கால இடதுசாரி இலக்கியத்தோழர் மல்லிகை ஜீவா உட்பட பலர் அந்த மாநாட்டின் பின்னணியில் இயங்கிக்கொண்டிருக்கும் செய்தி எதுவும் தெரியாமல் வெளியான கருத்துக்களையடுத்து இலங்கை இலக்கிய நண்பர் ஓ.கே.குணநாதனுடன் தொடர்புகொண்டு தி.க.சி – பொன்னீலன் முதலானோரின் தொலைபேசி இலக்கங்கள் பெற்று இவர்களுடன் நீண்ட நேரம் உரையாடினேன். அவர்களுக்கு பல விடயங்களை தெளிவுபடுத்தவேண்டியிருந்தது.
அப்பொழுது தி.க.சி – ” ஏன் இந்த மாநாடு பற்றி தமிழகத்தின் தாமரை இதழில் எழுதவில்லை?” எனக்கேட்டார். சித்தனின் யுகமாயினி இதழில் ஏற்கனவே விரிவாக வந்திருக்கிறதே நீங்கள் பார்க்கவில்லையா?” எனக்கேட்டேன்.
தனது கவனத்தில் தவறிவிட்ட விடயங்களின் பிரசுரங்களை தாமதமின்றி தபாலில் அனுப்புமாறு கேட்டுக்கொண்டு தனது முகவரியைத்தந்தார். நான் உடனடியாகவே பொன்னீலன் – தி.க.சி. ஆகியோருக்கும் இன்னும் சில தமிழக ஊடகவியலாளர்களுக்கும் அவற்றை அனுப்பிவைத்தேன்.
இதுபற்றி எனது உள்ளும் புறமும் நூலில் விரிவாகப்பதிவுசெய்துள்ளேன்.
தீவிர வாசிப்பும் – வாசிப்பு அனுபவத்தை பதிவு செய்து படைப்பாளிகளை ஊக்குவிக்கும் இயல்பும் தி.க.சியிடம் நாம் கற்றுக்கொண்ட சிறந்த பாடம்.
கவிஞர் – நாடகாசிரியர் – சினிமா விமர்சகர் – இலக்கிய விமர்சகர் – பத்திரிகையாளர் – திறனாய்வாளர் – இலக்கியச் செயற்பாட்டாளர் எனப் பல்வேறு தளங்களில் இயங்கிய தி.க.சிவசங்கரன் எழுதிய விமர்சனங்கள் – மதிப்புரைகள் – பேட்டிகள் நூலுக்கு 2000 ஆம் ஆண்டில் சாகித்திய அக்கடமி விருது கிடைத்தது.
இலக்கிய உலகில் கவனிப்புக்குள்ளான படைப்பாளி கல்யாண்ஜி என்ற புனைபெயரில் எழுதும் வண்ணதாசன் தி.க.சி.யின் புதல்வர்- இலக்கிய வாரிசு.
தி.க.சி . ஆரம்பத்தில் ஒரு வங்கி ஊழியராக பணியாற்றிய அதேவேளை தொழிற்சங்கவாதியாகவும் இயங்கியவர். அவரது தீவிர வாசிப்பு இயல்பே அவரை இலக்கிய விமர்சகராக்கியது. மொழிபெயர்ப்புத்துறை தொ.மு.சி ரகுநாதனுக்கு வருவாய்தரும் தொழிலாகமாறியது போன்றே தி.க.சி.யும் அவருடன் சமகாலத்தில் மொழிபெயர்ப்பாளராக சோவியத் தூதரக தகவல் பிரிவில் பணியிலிருந்தார்.
பல படைப்பிலக்கியவாதிகளை இந்த மொழிபெயர்ப்புத்துறை உள்வாங்கி திசைதிருப்பியிருக்கிறது. காலப்போக்கில் சிறுகதை – கவிதை – நாவல் – நாடகம் முதலான துறைகளில் எழுதுவதிலிருந்து அவர்களை அந்நியப்படுத்தியுமிருக்கிறது.
தி.க.சி.க்கும் இந்த ஆபத்து நேர்ந்தாலும் அவர் சிறுகதை – நாவல் – கவிதைகளை – அவற்றை எழுதியவர்களின் தலைமுறை இடைவெளி பாராமல் வாசித்து திறனாய்வுகள் எழுதினார். வாசகர் கடிதங்கள் பகுதிக்கு தனது கருத்துக்களை அனுப்பினார். கடிதம் எழுதி உறவுகளைப் பேணிக்கொண்டார். அதனால் ஊக்கம் பெற்றவர்களும் தம்மை வளர்த்துக்கொண்டார்கள்.
தனது வாழ்வனுபவங்களை சுயசரிதையாக எழுத விரும்பியிருந்தவர் தி.க.சி. ஆனால் – அந்த எண்ணம் ஈடேறாமலேயே எழுதும் கரத்துக்கு நிரந்தர ஓய்வுகொடுத்துவிட்டு 2014 இல் கண்களை மூடிக்கொண்டார்.
புதுமைப்பித்தனின் வாழ்க்கைச்சரிதையை சிதம்பர ரகுநாதன் எழுதினார். சிதம்பர ரகுநாதனின் சரிதையை பொன்னீலன் வரவாக்கினார். அதுபோன்று தி.க.சி.யின் சரிதையை யாராவது எழுத முன்வரவேண்டும்.
எமது மாநாடு பற்றிய தகவல்கள் அடங்கிய ஆவணங்களை நான் அவருக்கு தபாலில் அனுப்பிவைத்த முகவரி: 21 , இ. சுடலைமாடன் தெரு. திருநெல்வேலி டவுன். இதில் என்ன வேடிக்கை என்றால் அந்தமுகவரியின் பெயரிலேயே எஸ். இராஜகுமாரன் என்பவர் தி.க.சி பற்றிய ஒரு ஆவணப்படத்தை இயக்கியிருப்பதாக அறியப்படுகிறது.
தோழர் ஜீவானந்தம் தொடக்கிய தாமரை இதழுக்கும் தி.க.சி ஆசிரியராக சிறிதுகாலம் பணியாற்றியிருக்கிறார்.
இலக்கிய முன்னோடியான தி.க.சி. பற்றிய நினைவுகள் அவரது முன்னுதாரணமான இயல்புகளையே பதிவுசெய்துகொண்டிருக்கும்.
படைப்பாளிகளை வயது வித்தியாசம் பாராமல் அவர்களின் படைப்புகளை மாத்திரம் வாசித்து இனம்கண்டு, தமது கருத்துக்களை உடனுக்குடன் எழுதி ஊக்குவிக்கும் அவரது அந்த நற்பண்புதான் முன்னுதாரணமானது.
இன்றைய மின்னஞ்சல் யுகத்திலும் முகநூல் கலாசாரத்திலும் அவருக்கிருந்த இயல்புகளை ஏனையோரிடம் பார்க்க முடிவதில்லை. ஆனால், அவரோ இந்த நவீன சாதனங்கள் எவற்றினதும் பாதிப்புக்களேயற்று, தபால் நிலையம் சென்று அஞ்சலட்டை வாங்கிவந்து அதன் ஊடாக உடனுக்குடன் கருத்துப் பகிர்ந்தவர்.
திருநெல்வேலி கணபதிஅப்பன் சிவசங்கரன் என்ற பெயருக்குரியவரே தி.க.சி. என அழைக்கப்பட்டிருக்கிறார் என்ற தகவல் அவர் மறைந்த 25-03-2014 ஆம் திகதிக்குப்பின்னரே எனக்குத்தெரியவந்தது.
எமது காலத்தில் இப்படியும் அதிசய மனிதர்கள் தி.க.சி. உருவத்தில் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை எனது வாழ்வை திரும்பிப்பார்க்கும்போதுதான் தெரிகிறது.
—0—
- காலநிலையும் அரசியலும்
- யானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும் – 12
- நாசாவின் காஸ்ஸினி விண்ணுளவி முதன்முதல் சனிக்கோளின் சுற்று வளையத்தை ஊடுருவி ஆய்வு செய்கிறது.
- சரியும் தராசுகள்
- ரிஷி((லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- இரு கோடுகள் (நான்காம் பாகம்) -நிறைவுப் பகுதி
- பூமிக்கு ஆபத்து? (அதிர்ச்சி தகவல்)
- கடன் அட்டை, ஏடிம் அட்டை ஹேக்கிங்
- அறிவியல் கதை – எனக்கு ஒரு மகன் பிறந்தான்
- கனவு : இலக்கிய நிகழ்வு
- பாரதியாரின் நவீனத்துவம்
- வெண்ணிற ஆடை
- சோ – மானுடத்தின் பன்முகம்
- தொடுவானம் 148. கலகலப்பான கிராமம்
- உமர் கயாம் ஈரடிப் பாக்கள் -2 & 3
- திரும்பிப்பார்க்கின்றேன் படைப்பாளிகளை ஊக்குவித்த தி.க. சிவசங்கரன்
- இயக்குனர் மிஷ்கின் நடத்தும் ஒருநாள் பயிற்சிப் பட்டறை. 18-12-2016