திரும்பிப்பார்க்கின்றேன் – எழுத்தை மாத்திரம் நம்பி வாழ்ந்த மு. கனகராசன்

author
0 minutes, 9 seconds Read
This entry is part 8 of 13 in the series 18 டிசம்பர் 2016

 late-m-kanakarasan

முருகபூபதி – அவுஸ்திரேலியா

 

“உங்களுடைய       கையெழுத்து      அழகாக        இருக்கிறது” என்றேன்.

“தலை    எழுத்து       அப்படி      அல்ல” – என்றார்       கனகராசன்.     சொல்லும் போது       மந்தகாசமான      புன்னகை.       பல      எழுத்தாளர்களின்     தலை எழுத்து      அவர் சொன்னது        போன்று      அழகாக    அமையவில்லை   என்பது        என்னவோ       உண்மைதான்.

வேறு       எந்தத்      தொழிலும்    தெரியாமல்     எழுத்தை    மட்டுமே நம்பிவாழ்வைத்        தொடங்கியவர்களின்       வரிசையில்     இடம்    பெற்றவர்  மு.கனகராசன்.

இவர்       பணியாற்றிய        பத்திரிகைகள்       பல.       இலக்கியச் சிற்றேடுகள் சிலவற்றுடனும்      நெருங்கிய        தொடர்பு      கொண்டிருந்தார்.      நான்     அறிந்த வரையில்              மு.க.       என               எம்மால்       அழைக்கப்பட்ட             மு. கனகராசன்         சுதந்திரன் – தேசாபிமானி –  புதுயுகம் , தினகரன்      முதலான  பத்திரிகைககளிலும்           சோவியத்நாடு இதழிலும் பணியாற்றியவர்.

சிற்பி      சரவணபவனின்      கலைச்செல்வி    செல்வராஜாவின்      அஞ்சலி   முதலான       இலக்கியச்       சிற்றேடுகளில்       வேலை     செய்திருக்கிறார். மல்லிகை      ஜீவாவுக்கும்      மல்லிகை       தொடர்பாக      அவ்வப்போது  ஆலோசகராக        இயங்கினார்.       மரணப்படுக்கையில்      விழுவதற்கு முன்னர்       இறுதியாக       தினகரனில்      வாரமஞ்சரியை      கவனித்துக்  கொண்டிருந்தார்.

கவிதை       சிறுகதை       நாடகம்       மொழிபெயர்ப்பு      இதழியல்      முதலான துறைகளில்       ஈடுபாடு      கொண்டிருந்த      மு.க      சிறிது காலம்    சோவியத் தூதுவராலயத்தின்      தகவல் பிரிவிலும்    வேலை செய்தார்.  எழுத்தாற்றல்        மிக்க      இவரது     படைப்புக்கள்     நூலாக வெளிவருவதில்தான்     எத்தனை       தடைகள்       தடங்கல்கள்  ஏமாற்றங்கள்.

கெமுனுவின் காதலி      என்ற       சிறிய      நாடக      நூலை அச்சுக்கூடத்திலிருந்து       பெறுவதற்கு      முடியாமல்     பொருளாதார  நெருக்கடியில்      தவித்தார்.

முட்கள்      கவிதை    நூலிற்கு       பேராசிரியர்    க.கைலாசபதியின் முன்னுரையைப் பெற்று      அச்சடித்து       ஒப்புநோக்கப்பட்ட    படிகளை  மாத்திரம்      சுமார்     ஒரு     வருடகாலம்     கொண்டலைந்து      இறுதியில்   ஒருவாறு      அச்சிட்டு       வெளியிட்டார்.

‘பகவானின்   பாதங்கள்’      கதைத் தொகுதியும்      பல       சிரமங்களுக்கு  மத்தியில்     வெளியானது.

இந்தத்தொகுப்பு       சற்று       வித்தியாசமானது.      இதில்     இடம்பெற்ற  ஒவ்வொரு        சிறுகதைபற்றியும்      அதனைப்படித்தவர்கள்     எழுதிய   நயப்புரையையும்       இணைத்து      நூலை      தொகுத்திருந்தார்.

சிங்கத்      தமிழர்    நாமென்றால்      சிங்கக்     கொடியும்     நமதன்றோ என்று        துணிச்சலாக       கவிதையும்       எழுதிய     மு.க.    1983    இனவாத  வன்செயலின்போது      மனைவியுடன்     தமிழகம்   சென்று – அண்ணாநகரில்      சிறிது      காலம்      குடியிருந்தார்.

இலக்கிய        உலகில்      மிகவும்       புதிராகவே     எனக்குத் காட்சியளித்த மு.க.      என்மீது      நிறைந்த     பாசம்     கொண்டிருந்தார்.     எனக்கு      இவரை  அறிமுகப்படுத்தியது      மல்லிகை ஜீவா.

19.2.1972    ஆம்     திகதியன்று     மல்லிகை நீர்கொழும்பு சிறப்பிதழ்     அறிமுக நிகழ்வை       எமது      வீட்டில்       நடத்தினோம்.       ஜீவா,      கனகராசனுடன்   கொழும்பிலிருந்து       வந்தார்.

கூட்டம்       முடிந்த      பின்பு –     ஜீவாவை –     நீர்கொழும்பில்      அவரது    சகோதர்      இல்லத்தில்       விட்டு     விட்டு,     கனகராசனுடன்    பஸ்    நிலையம்     வரையில்     சென்று      வழியனுப்பி வைத்தேன்.

பஸ் புறப்படும்       வரையில்     என்னுடன்      அவர்   பேசிய இலக்கியப்புதினங்கள்     –      எழுத்துலகில்     கால்பதித்த    அக்காலப்பகுதியில்      எனக்கு    பயன்மிக்கதாக   இருந்தன.     அன்று ஆரம்பித்த    அந்த    நட்புறவு    –    அவர்     மரணிக்கும்      வரையில்  நீடித்தது.

பிரேம்ஜி    –      தெளிவத்தை ஜோசப்    –      சிறிபதி     –    பெரி. சண்முகநாதன் – இராஜகுலேந்திரன்       பேராசிரியர்     கா.சிவத்தம்பி,     ராமா     ராமநாதன்…  இப்படி      பலரை       எனக்கு      அறிமுகப்படுத்தியவர்.

1972       ஆம்       ஆண்டு       கொழும்பில்     –     விவேகானந்தா வித்தியாலயத்தில்    பூரணி”     காலாண்டிதழின்      வெளியீட்டு     விழா நடந்தபொழுது     அந்த     விழா      அழைப்பிதழை     எனக்குக்     காண்பித்தார் மு.க.

சிவத்தம்பியின்        தலைமையில்      நடந்த      அந்த       நிகழ்வில்        ஈழத்து   இலக்கிய   வளர்ச்சி      என்ற     தலைப்பில்     ஒரு    கருத்தரங்கு  நடைபெற்றது.

“     இந்தக்      கூட்டத்துக்கு    அவசியம்     செல்லும்.      அங்கே     பலரை நீங்கள்      சந்திக்க    முடியும்.  நான்      வெளியூர்      போகிறேன்.      அதனால் வரமுடியாது”    எனச் சொல்லி     அழைப்பிதழைத்       தந்துவிட்டு    புறப்பட்டார்.

அவர்      சொன்னது      போன்று    அந்த     நிகழ்ச்சியில்தான்       நான்    முதல் முதலில்     என்.கே.மகாலிங்கம்   –     மு.தளையசிங்கம்    –      எஸ்.பொ. – மு.பொன்னம்பலம்      –     மு.நித்தியானந்தன்   –    கே.எஸ்.சிவகுமாரன் – சில்லையூர்    செல்வராசன்        உட்பட    பலரைச் சந்தித்தேன்.   அன்று ஆரம்பித்த   –     இலக்கியவாதிகளுடனான      நேசிப்பு      இன்றும்தான்   நீடிக்கிறது.

1983       இனக்கலவரம்    பலரது      வாழ்வை      திசைமாற்றியது    போன்று மு.க.வின்     சீரான     வாழ்வையும்     புரட்டிப்போட்டது.     அவர் திருமணபந்தத்தில்     இணையும்     வரையில்     சுதந்திரமாகத்தான்    சுற்றிக் கொண்டிருந்தார்.       வயிற்றுப்பாட்டுக்கும்      திண்டாடினார்.

பசித்தால்    –    ஒரு பிளேய்ன் ரீ    –      ஒரு     சிகரெட்டுடன்     அப்பசிக் கொடுமையை     போக்கிக்கொண்டவர்.       மனைவி     வந்த    பின்புதான் அக்கொடுமை     இன்றி     வாழ்ந்தார்    எனச் சொல்ல     வேண்டும்.

மு.க.வின்    முட்கள்    கவிதைத்       தொகுப்பிற்கு       நீர்கொழும்பில் இரண்டு      அறிமுக    நிகழ்வுகளை      நடத்திக்கொடுத்தேன். நீர்கொழும்புக்கு     அடிக்கடி    வருகைதந்தவர் –     அங்கு     வாழும்    மீனவ மக்களின்      பேச்சுவழக்கைக்      கேட்டு      சொக்கிப்போனார்.      அந்தத் ‘தமிழை’    வெகுவாக ரசித்தார்.

ஒரு    சமயம்    அவர்      ஹொரணை     என்ற      ஊருக்குச் சென்றிருந்தபோது      மதியம்    இலங்கை       வானொலியில்     ஒரு   மரண அறிவித்தலை      அரையும்    குறையுமாக      கேட்டிருக்கிறார்.     முருகபூபதி – நீர்கொழும்பு     –     பொது மயானம்    –    இந்த     வார்த்தைகள்    மாத்திரமே அவரது    செவியில்    விழுந்துள்ளன.

எனது      தந்தையார்       இறந்துவிட்டார்      என      நினைத்துக் கொண்டு    உடனே     புறப்பட்டு     கொழும்பு     வந்து      நீர்கொழும்புக்கு      வந்து விட்டார். நேரே     எங்கள்      வீட்டுக்கு      வந்த     அவருக்கு     அதிர்ச்சி.   மரணச்சடங்கு       நடந்த    சுவடே     இல்லாமல்     எங்கள்    வீடு     வழக்கமான கலகலப்போடு    காட்சி     அளிக்கிறது.

என்னை     அவர்      விசாரிக்கிறார்.      நான்     கொழும்பு    சென்றிருப்பதாக சொல்லியிருக்கிறார்கள்.       வீட்டிலிருந்தவர்களிடம்      எதுவும்     சொல்லாமல்   மௌனமாக       திரும்பியிருக்கிறார்.

நான்      கொழும்பிலிருந்து      வந்து     கொண்டிருக்கின்றேன்.     என்னை வழியில்    சந்தித்து    நடந்ததைச்   சொல்லிச்    சிரித்தார்

அன்று      மரணச்சடங்கு    நடந்ததோ      வேறு     ஒருவருக்கு.     இறந்தவரின் ஒரு    மகனின்     பெயரும்     முருகபூபதி.         அன்றுதான்      எனக்கும்  தெரியும்      அந்தப் பெயரில்     எங்கள்    ஊரில்    இன்னுமொருவர்   இருக்கிறார்     என்பது.

மு.க.வின்     நட்பு     எத்தகையது     என்பதை    அன்றுதான் புரிந்துகொண்டேன்.      எனது    குடும்பத்தில்      இழப்பு    என்றால்    அது தன்னுடையதும்    என     அவர்     கருதி      நெடுந்தொலைவு     பயணத்தையும் இடைநிறுத்திக் கொண்டு       ஓடோடி      வந்திருக்கிறாரே    –    இந்த    இயல்பு அபூர்வமானது.

எனது       தந்தையார்    –    இச்சம்பவத்திற்குப் பின்பு      சில     வருடங்கள் கழித்தே    காலமானார்.      அப்பொழுது     மு.க.     மனைவியுடன்      தமிழ் நாட்டில்     இருந்தார்.

மு.க.வின்     ‘பகவானின் பாதங்கள்    கதைத்      தொகுதி   யாழ்ப்பாணத்தில்     வெளியிடப்பட்ட     வேளையில்       ஈழநாடு   பத்திரிகையில்       பிரசுரமான      செய்தியைப் படித்த       சந்நியாசி    ஒருவர் – தமது    காவி     அங்கவஸ்திரத்துடன்       கூட்டத்துக்கு      வந்துவிட்டார்.

‘பகவானின் பாதங்கள்’ –    ஏதோ சமயம்    –     ஆத்மீகம்     சம்பந்தப்பட்ட  நூல்      என்று     அவர்     நம்பியதனால்       அக்கூட்டத்துக்கு      வந்து   ஏமாற்றமடைந்தார்        அந்தத்துறவி.

நான்      மு.க.விடம்     சொன்னேன்.      “அன்று     வானொலிச்      செய்தி     கேட்டு      நீங்கள்      துக்கத்தில்      கலந்து      கொள்ள      ஓடோடி     வந்து ஏமாற்றமடைந்தீர்கள்.       இப்பொழுது    பத்திரிகைச்      செய்தியை படித்துவிட்டு      கூட்டத்துக்கு      வருகை    தந்த       அந்த      காவியுடைச்சாமியார்       ஏமாற்றமடைந்துள்ளார்.”

இலக்கியத்துறைகளிலும்        இதழியலிலும்      புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்தவேண்டும்     என்ற      விருப்பம்      கொண்டவர்    மு.க.

கவிதைகள்      எழுதுவார்கள்     –    கதைகள்    படைப்பார்கள்.    ஆனால்   மு.க.       ‘நான்கு கவிதைகள்’    ஒரு    சிறுகதை       என்ற     படைப்பை  மல்லிகையில்      தந்தார்.

சாவு   –   பெண்மை   –    வாழ்வு     –     கயமை    முதலான     தலைப்புகளில் கவிதை     எழுதி     அதற்கு    ஒரு     சிறுகதை      வடிவம்     கொடுத்து படைப்பை      எழுதியிருந்தார்.       பல      முன்னோடி      எழுத்தாளர்களின்   கடிதங்களைத்        தேடி     எடுத்து      வீரகேசரியில்      தொடர்ந்து வெளியிட்டார்.

மு.க.வின்       வாழ்வு    காற்றாடி     போன்று       அல்லாடியதுதான்   கவலைக்குரியது.      அதனால்      அவர்       மற்றவர்களுக்கு      புதிராகத்   தோன்றினார்.

ஆயுதம்      ஏந்திய       ஒரு     தமிழ்     தீவிரவாத    இயக்கத்துடன்    நெருங்கிய      தொடர்பு      வைத்து       அவர்களின்      பிரசுரங்கள்    பலவற்றுக்கு      மு.க.பின்னணியாக    செயல்பட்டார்      என்ற    தகவலும் உண்டு.     இதனை    ஊர்ஜிதப்படுத்தும்      விதமாக    –   ‘திம்பு’வில்     நடந்த அரசியல்     பேச்சு     வார்த்தையிலும்      குறிப்பிட்ட     இயக்கத்தின் பிரதிநிதியாக       கலந்து      கொண்டார்.     பின்னாளில்     தமது     உயிருக்கு எச்சமயமும்      ஆபத்து     நேரலாம்    என    சிறிது    காலம்     தலைமறைவு வாழ்க்கையையும்       மேற்கொண்டிருக்கிறார்.

1987     இல்      நான்      அவுஸ்திரேலியாவுக்கு     வந்த      பின்பு    – இலங்கை – இந்திய      ஒப்பந்தம்    நடந்து    அமைதி       தோன்றக்கூடிய     அறிகுறி தென்பட்டது.       குடும்பத்தினரை      விட்டு     வந்து     Home Sick    உடன்   இங்கே நான்      வாடிக்கொண்டிருந்த    வேளையில்    அந்த     அமைதிப்பேச்சு வார்த்தை     நம்பிக்கை      அளித்தது.

நானும்     இலங்கை     திரும்புவதற்கு      தீர்மானித்தேன்.     எனது தீர்மானத்தை    ராஜஸ்ரீகாந்தன்       மூலம்      அறிந்து கொண்ட     மு.க. உடனடியாகவே      எனக்கு      கடிதம்      எழுதினார்.        “அப்படியொரு முட்டாள்தனமான        முடிவை       எடுக்க     வேண்டாம்.      விரைவில் குடும்பத்தை        அவுஸ்திரேலியாவுக்கு       அழைப்பதற்கு      முயற்சிக்கவும்” என்று      அன்புக் கட்டளை      விடுத்திருந்தார்.

நானும்      முடிவை       மாற்றிக் கொண்டேன்.     எனது      குடும்பம் புறப்படவிருப்பது     அறிந்து     –             எனது       பிள்ளைகளை      பார்க்க     வந்துள்ளார்.         பின்னர்         அவர் விடைபெற்றுப்  புறப்பட்டவேளையில்தான்,      அவர்     ஒரு     வாகனத்தில்     ஆயுதம் ஏந்தியவர்களின்        பாதுகாப்புடன்       அங்கே       வந்தார்      என்பது குடும்பத்தினருக்கு      தெரியவந்தது.

பேனாவை       ஏந்தி        எழுதிக்கொண்டிருந்த    மு.க.வுக்கு     ஏன் ஆயுதப்பாதுகாப்பு       தேவைப்பட்டது.      கஷ்டமோ      நஷ்டமோ  இலக்கியவாதிகளுடனேயே       அவர்       வாழ்ந்திருக்கலாம்.     ஆயுதவாதிகளின்       பக்கம்      அவர்      போனது    விதியா….? – நிர்ப்பந்தமா….?

காலப்போக்கில்     1997     ஆம்     ஆண்டளவில்     அவர்     மீண்டும் எழுத்துத்துறைக்கு      வந்தார்.      தினகரனில்       வேலைகிடைத்திருந்தது.  நண்பர்கள்         பிரேம்ஜி         ராஜஸ்ரீகாந்தன்       சிவாசுப்பிரமணியம்   ஆகியோர்        மு.க.வின்      நலனில்     விசேட      அக்கறை      காண்பித்தவர்கள்.       அவருக்கு       தினகரனில்     வேலை     கிடைத்த    செய்தி எனக்கு     ஆறுதலாகவிருந்தது.

தமிழக      புலப்பெயர்வு –     அரசியல்    இயக்கங்களுடன்      தொடர்பு – தேர்தல் ஒன்றில்     போட்டி …     இப்படி      அலைக்கழிந்த     மு.க.     மீண்டும் பத்திரிகைக்கு      வந்திருக்கிறார்       என்பதை      அறிந்து    இலங்கை  சென்றதும்     அவரையும்     அவரது       மனைவியையும்      சந்தித்து     அழைத்துக்      கொண்டு      ஒரு      சைவ      உணவு விடுதியில்     உணவருந்தச்  சென்றேன்.

எப்பொழுதும்     விரக்தியாகச்    சிரிக்கும்     இயல்பினைக்    கொண்டிருந்த மு.க.     அறிவாலும்    ஆற்றலினாலும்      எங்கோ   உயர்ந்திருக்கவேண்டியவர்.        கரடு   முரடான      மேடுபள்ளங்கள்      நிறைந்த      வரட்சியான      வாழ்க்கைப்பாதையை        அவராகத்  தேர்ந்தெடுத்தாரா       அல்லது      சூழல்      அவருக்கு       பூரண   விடுதலையை        கொடுக்கத்தவறியதா       என்பது      அவிழ்க்க     முடியாத  புதிர்     முடிச்சு.

அந்திமகாலத்தில்    தனிமையை       பெரிதும்      விரும்பிய மு.க. மருத்துவமனையில்     மரணப்படுக்கையில்     இருக்கும்     போதும் எனக்கு     தகவல்      அனுப்புமாறு     வாயால்      சொல்லாமல்     ஒரு   காகிதத்தில்     பேனாவால்      எழுதி     மனைவியிடம்     கொடுத்திருக்கிறார். மறுநாள்      இறந்துவிட்டார்.      மரணம்    நெருங்கும்      வேளையிலும்     அவர் என்னை     நினைத்திருக்கிறார்     என்பதனை       அறிந்தபோது      மனதுக்குள்  குமுறினேன்.

மு.க.வின்     அந்திமகாலத்தை       புதுமைப்பித்தனது      அந்திமகாலத்துடன் ஒப்பிடலாம்.      மு.க.வுக்கு      குழந்தைகள்       இல்லை.     மனைவியை    அவரும் –     அவரை      மனைவியும்    பரஸ்பரம்     குழந்தை     போன்று  நேசித்தனர்.

மு.க.      இலக்கியத்தில்       நிறைய     சாதித்திருக்கக் கூடிய       ஆற்றல்     நிரம்பப் பெற்றவர்.      ஆனால்      அந்த       ஆற்றல்     வீண்    விரையமானது  இலக்கியத்திற்கு      நேர்ந்த      இழப்பு.

ஈழத்து      இலக்கிய     வளர்ச்சியில்     சிறந்த     கதைகள்      குறித்த    தேர்வு நடைபெறுமாயின்      நிச்சயம்     மு.க.வின்     கதைகளும்     அதில் இடம்பெறும்.       துன்பியல்     நாடகமாகிப்போன     அவரது வாழ்விலிருந்து      நாம்     கற்றுக்    கொள்ளவேண்டியவையும்       இருந்தன.

மு.க.வின்       கல்லறை     இலங்கை   வவுனியாவில்.       அவரைப்பற்றிய      நினைவுகள்     எனது        நெஞ்சறையில்.

—-0—-

 

Series Navigation‘உயிர்த்தெழுதலின் கடவுச்சொல்’ வெளியீட்டுவிழா100,000 ஆண்டுக்கு ஓர்முறை நேரும் மர்மமான பனியுகச் சுழற்சி எப்படி நிகழ்கிறது ?
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *