தமிழ்க் கவிதையின் வெளிகள் விரிவடைகிறதா?

author
1
0 minutes, 21 seconds Read
This entry is part 9 of 11 in the series 25 டிசம்பர் 2016

இரட்ணேஸ்வரன் சுயாந்தன்

“பறவைகளைப் படைத்தபின் கடவுளுக்கு வானத்தை விரிவுபடுத்தும் வேலை வந்து சேர்ந்தது”
-கலாப்ரியா கவிதைகள்.

இதுபோன்ற தலைப்புக்களை இடும்போது சமகாலத்தினூடாக பயணிக்கின்ற கவிதையின் சாராம்சங்கள் என்ற அர்த்தத்தில் தான் ஆராயவேண்டும். இருபதாம் நூற்றாண்டில் பிறந்த நான் இருபத்தோராம் நூற்றாண்டிலும் வாழ்கிறேன். இது நூற்றாண்டுகளுக்கு ஒரு பொருட்டல்ல. ஆனால் எனது பார்வையில் இது பெரும் சாதனையாக இருக்கலாம். அதே போல கவிதைகளும் இருக்கமுடியாது. சங்ககால மரபையோ, கம்பன் கால விருத்தப்பாவையோ, பாரதிகால புரட்சியையோ மட்டும் கவிதையில் இன்றும் கூறிக்கொண்டிருக்க முடியாது. மரபை உடைத்து புதுக் கவிதை, நவீனகவிதை என்ற தரத்தில் தமிழ்க்கவிதைகள் படரத் தொடங்கியுள்ளது. நவீன கவிதைகளின் வெளி மேலும் கட்டமைந்துள்ள சில  மரபு உள்ளீடுகளை உடைப்பதாகப் போய்க்கொண்டிருக்கின்றது.

அதற்குக் கவிஞர்கள் மட்டுமே காரணமல்ல விமர்சகர்களின் பங்கு அளப்பரியது தாம். அண்மைக்காலக் கவிஞர்களின் படைப்பனுபவங்களின் வெளிப்பாடு ஆக்கபூர்வமாக உள்ளதா என்ற அர்த்தத்தில் இக்கட்டுரையை நகர்த்தலாம். அண்மையில் வெகுஜன இதழில் எழுத்தாளர் மற்றும் கலை விமர்சகர் என்றறியப்படும் இந்திரன் ‘தமிழில் கவிஞர்களே இல்லை’ என்றொரு கருத்தைக் கூறியிருந்தார். இதுவும் கவனிக்கத்தக்க ஒரு கருத்தாகும்.

பிரமிள், கல்யாண்ஜி, மனுஷ்ய புத்திரன், கலாப்ரியா, சுகுமாரன், சல்மா, சுரா, ஞானக்கூத்தன், பிரம்மராஜன், ஆத்மாநாம், மோகனரங்கன் தேவதச்சன் (இதில் பெருங்கவிஞர்கள் பலர் விடுபட்டிருக்கலாம்) முதனானோர் தவிர்ந்த இன்றைய கவிதைப் படைப்புலகின் நிலவரம் எப்படியாகவுள்ளது.  இந்தக்கட்டுரையை நகர்த்த பின்வரும் கவிஞர்களின் கவிதைகளை இங்கு ஆதாரமாக எடுக்கவுள்ளேன். நரன், இசை, அனார், மனுஷி, றியாஸ் குரானா, இளங்கோ கிருஷ்ணன், வெய்யில், கண்டராதித்தன், (இதிலும் பலர் விடுபட்டிருக்கலாம்)

புனைவுலகத்தில் கவிதையின் வெளிப்பாடென்பது வாசகனின் மனநிலையை வேறொரு பருவகாலத்துக்கும், தனித்துள்ள உலகத்துக்கும் கொண்டு செல்வதாகும். ஒரு காலத்தில் கவிதைகள் நிறைந்துவிட்டன, நிறையப் பேர் கவிதை எழுதுகிறார்கள் என்பதாக ஒருசாரார் கடிந்துகொண்டிருந்தனர். மொழி ஜனநாயகமடைந்துள்ளது என்று இதனைக் கருதலாம் அல்லவா?. அப்படியாயின் அந்த ஜனநாயகத்தின் அரசவையில் அமைச்சு, மந்திரிகள் போல உள்ள கவிஞர்களின் கவிதை வெளி மேலும் வளர்ச்சிகாணலாம்.  இன்றைய சூழலில் தமிழ்க் கவிதையின் மட்டுப்படுத்தப்பட்ட மரபுகளை உடைத்தெறிந்து பல கவிஞர்கள் கவிதை படைக்கத் தொடங்கிவிட்டனர். ஒரு காலத்தில் எதுகையிலும் மோனையிலும் எழுதினால் தான் கவிதை என்றும், அப்படியான சொற்களுக்கும் தவமிருந்து கொண்டிருந்த பழமைவாத முறைமை தகர்ந்துவிட்டது.

“ஜன்னலின் மீது வந்தமரும் பறவைகளிடம்
மொழியைக் கற்றுக்கொள்ள முயன்றவளுக்கு
பறவைகள்
அவளுக்குப் பறக்கவும் கற்றுத்தந்தன.”
-மனுஷி.

_mg_9309

மனுஷி எனும் புனைபெயரில் எழுதிவரும் ஜெயபாரதி தமிழின் நவீன கவிதையுலகில் தடம்பதித்து வருகிறார் எனலாம். இவரின் அநேக கவிதைகளில் ‘தனக்கு வேண்டுவன எல்லாம் மிதமாக கிடைப்பதை விட அதீதமாக இருப்பதே சிறப்பு’ என்பதாக அமைகின்றது. எப்போதாவது ஜன்னலில் பறவைகள் அமரும். அவை மொழியைக் கற்றுக்கொடுப்பது நடவாதது, அதைக்கடந்து அவை பறக்கவும் கற்றுத்தருகின்றன என்று பெண்ணியப் பார்வையின் விரிவினை அலங்கரித்து விடுகிறார்.  அடிமைப்பட்டவள் அறியாதவிடயங்களை அறிந்துகொண்டு சுதந்திரமாகப் பறக்க முயலவேண்டும் என்பதாக பல அர்த்தங்களை இதுபோல் எழுதி வருகிறார். Infinite எனும் வாசல்களைத் திறந்துவிடுகிறார். Why does a woman stay with a violent man? என்பதான கேள்விகள் மனுஷியின் கவிதைகளில் அடிநாதமாக ஒலிக்கின்றது. அதற்குத்தான் அவர் பறவை-மொழி-பறத்தல் என்ற ஆதரவமைப்புக்களை (Supporting Structure) கைக்கொள்கிறார் போலும்.

“ஆட்டுக்காரா…
சமண மலையின் உள்ளே 17ஆயிரம் தேரைகள்
நீ யாரை மேய்த்து கொண்டு செல்கிறாய் …

உன் ஆடுகளின் மேல் சிறு சிறு உண்ணிகள்
அதையும்தான் அழைத்துக் கொண்டு செல்கிறாய் மேய்ச்சலுக்கு ….

யாருக்காய் குழலூதுகிறாய் …
உண்ணிகள் மயங்குகின்றன …
ஆடுகள் உன் மனைவியையும் , தாயையும் உண்டு விட்டன .
உண்மைதான் .
அதன் கடைவாயில் வெண்ணிற பெண் முடிகள் ….
கடந்த வாரம் அதன் இணை ஆட்டின் கறுத்த முடிகளை
உன் கடை வாயில் பார்த்ததாய் நினைவு .
அதன் தகப்பனை விருந்துண்டீர்கள் அல்லவா.
உன் தகப்பனைப் புதைந்த இடம் தெரியும் அதற்கு

நேசம் மிகுந்த ஒரு ஆடு
அது  புதைந்த உன் தந்தையின்
திறந்த வாயின் இடையே வளர்ந்த  புற்களை
முத்தமிட்டபடியே உண்டு கொழிக்கும் .

கோபம் மிகுந்த ஒரு ஆடு
அது  புதைந்த உன் தந்தையின்
இரு தொடை நடுவே  வளர்ந்த புற்களை
கர முர…கர முரவென்று” …
-நரன் கவிதைகள்.

கவிஞர் நரனின் கவிதை எடுத்துரைப்பானது எப்போதும் மனதுக்குள் பரவசத்தையும், அடுத்தவரி என்ன என்கின்ற கிளர்ச்சியையும் ஏற்படுத்துவதாகும். தேவதச்சனுக்கு Substitute ஆன கவிஞன் என்று இவரைக்கூறலாம். மேலேயுள்ள ஆடுகள் பற்றிய கவிதை எவ்வளவு பேருணர்வானது. அதற்குள் வரும் பழிவாங்கலினதும், கொலைகளதும், ஜென்நிலைகளதும் வீரியங்களை கவிதைக்குள் ஒளித்து வைத்து கொப்புளித்து விடுவது நரனின் இயல்பு.  தேவதச்சன் சுருக்கமாகச் சொன்ன கவிதை ஒன்று இங்கே ஞாபகம் வருகிறது. “வெட்ட வெளியில்
ஆட்டிடையன் ஒருவன்
மேய்த்துக் கொண்டிருக்கிறான்
தூரத்து மேகங்களை
சாலை வாகனங்களை
மற்றும் சில ஆடுகளை.”
-தேவதச்சன்.

d-d-10
இந்தக் கவிதையில் ஆட்டுக்காரன் அனைத்தையும் மேய்க்கிறான். ஆனால் நரனின் கவிதையில் ஆட்டுக்காரனை சில ஆடுகள் மேய்ப்பது போன்ற உட்பொருளில் வருகிறது. கவிதைகள் கற்க முக்கிய காரணம் என்ன என்று என்னிடம் கேட்டால்  புத்தியை வளர்க்க (To excercise our brain) என்றோ, உள்ளுணர்வினைக் கடந்த பேருணர்வை அடைய என்றோ கூறலாம். அப்படியான பிரக்ஞையை நரனின் கவிதைகளில் சமகாலப் படைப்புக்களின் மூலம் காணக்கூடியதாகவுள்ளது.

naran

“நெடு நாட்களுக்குப் பின்
மிக ஆழமாக உறங்கிக்கொண்டிருந்தபோது,
பகல் பொழுது
இரண்டாக பிளந்துவிட்டது
ஒரு பகுதியிலிருந்து
மறு பகுதிக்காக காத்திருக்கிறேன்
மீண்டும் இணையும்போதுதான்
எனது நாள் முடிவடையும்
எவ்வளவுதான் நகர்ந்தாலும்
காலம் ஒரே இடத்தில் நிற்கிறது
நீ நடந்திருக்காவிட்டால்
பகலை இரண்டாக துண்டாட
அறிந்திராமலே ஒரு நாளைக் கடத்தியிருப்பேன்.”
-றியாஸ் குரானா.

தமிழ்க்கவிதைகளை வேறொரு போக்கில் கொண்டு செல்வதற்கான கவித்துவச் சிக்கல்களை (Poetry Complexities) பரிசோதனை  முயற்சியின் மூலம்  எழுதிவரும் கவிஞராக றியாஸ் குரானா அறியப்படுகிறார். கவிதைகளில் நவீனத்துவம் தாண்டிய வெள்ளத்தை இங்கு கொணர்வதற்காக சொல் அட்டவணைகளைக் (Vocabularies)  கவிதைகளில் இறைத்து வருகின்றார் என்றும் கூறலாம். மேற்குறித்த கவிதையில் நாட்களுக்கும்-பொழுதுக்கும் இடையிலான அந்நியமாதலையும், ஆலிங்கன உணர்வுகளையும் வரிகளின் சாகசத்தால் சாத்தியமாக்கி விடுகிறார்.

“நான் நினைத்திருக்கவில்லை
விரும்பிய இடத்திற்கு
எனை அழைத்துச் செல்லும்
சிறகுகள் எனக்கு முளைக்கும் என்று.
எனக்குத் தெரியாது
நான் ஒரு பறவை
ஆகிக்கொண்டிருந்தேன் என்று.
இது ஒரு மந்திரக் கிணறு என்பது
தெரியாமல் இதன் நீரைப் பருகினேன்.”
-இளங்கோ கிருஷ்ணன்..

ilangokrishnan

அண்மைக்காலத்தில் இளங்கோவின் கவிதைகளை வாசிக்க முடிந்தது. Admirable என்று கூறத்தக்க வகையில் சில கவிதைகள் மனதுக்கு வளம் சேர்த்தன. அதில் ஒன்றுதான் மேற் சொன்னது. பிரிக்கமுடியாத அளவுக்கு (Inextricably) கவிதைகளின் ஆரம்பச் சொல் இறுதிச்சொல்லுக்கான அர்த்தங்களில் சென்றடைந்து விடுகின்றது. “Don’t mess with our faith” இப்படிச் சொல்கிற அளவுக்கு இவரது கவிதைவெளி எதிர்காலத்தில் வளம்பெறலாம்.  அதற்காக அவரது சொற்சேர்க்கைகள் பெருமளவில் கூடவர வாய்ப்புள்ளது. சேர்பிய-அமெரிக்க எழுத்தாளர்
சார்ளஸ் சிமிக் (Charles Simic) இன் தர்பூசணிகள் (Watermelons) என்றொரு கவிதையுண்டு.
‘Green Buddhas
On the fruit stand
We eat the smile
And spit out the teeth’.
“பழக்கடையில் நின்ற பச்சைப் புத்தனின் சிரிப்பை உண்டு பற்களை வெளியில் உமிழ்வது” போன்றதான ஒரு கவிதை. இதே போன்ற Theme & Style இளங்கோவின் கவிதைகளிலும் எதிரொலிக்கின்றது எனலாம்.

“கொதிநிலை விதிக்கப்பட்டிருக்கும்
எரிமலைநெருப்பு உங்கள் முன்
மெழுகுவர்த்திகளில் ஏற்றப்பட்டும்
ஊதுபத்திகளில் புகையவிடப்பட்டும்
அவமானத்துக்குள்ளாவதன் சித்திரவதை நான்.”
-அனார்.

பெண்ணியம் பற்றிச் சாத்வீகமாகக் கவிதை புனைந்துவருபவர் அனார். இவர்தம் கவிதைகளின் பொதுப்பண்பு சுயாதீனவுணர்வு ஆகும். சூழலமைவுத் தன்மைகளை புனைவுடன், (Fictional Situation) அதேநேரம் இருண்மை குறைந்தவாறு கவிதைகளை எழுதுபவர்.  மதம், பிரதேசம் கடந்து எல்லாப் பெண்களுக்குமான குரல் போலவே இவரின் கவிதைகள் வெளிப்படுகின்றது. சில பெண்ணியக் கவிஞர்களின் கவிதைகள் மதத்தையும், ஜாதியையும் மட்டுமே ஏகோபித்த ஒலிப்பில் வெளிப்படுத்தி நிற்கும். ஆனால் அனாரின் பல கவிதைகள் பெண்களுக்கான பொதுவான பிரச்சனைகளை கையிலெடுத்து காட்சிகளை விரிவுக்குள்ளாக்கி விடுபவர்.

“தற்கொலைக்கு தயாராகுபவன்
பித்துநிலையில்
என்னென்னவோ செய்கிறான்.
அவன் கையில்
குடும்பப் படமொன்று கிடைக்கிறது.
அதிலிருந்து தனியே தன்னுருவைப்
பிரித்தெடுக்கும் முயற்சியில்
கத்தரிக்கத் துவங்குகிறான்
எவ்வளவு நுட்பமாகச் செயல்பட்டும்
கைகோர்த்திருக்கிற
தங்கையின் சுண்டுவிரல்நுனி
கூடவே வருவேனென்கிறது.”
-இசை.

சமீபத்தில் சமூகவலைத் தளங்களிலும், அச்சிதழ்களிலும் பரவலாக இசையின் கவிதைகளை ஆதர்சமாக எடுத்துக்கொள்ளத் தொடங்கியுள்ளனர் அல்லது பகிரத் தொடங்கிவிட்டனர். “காற்று கோதும் வண்ணத்துப்பூச்சி”
“உறுமீன்களற்ற நதி”
“சிவாஜி கணேசனின் முத்தங்கள்” என்ற தொகுப்புகளே கவிதைசொல்லும்  வரிகளாக மாறிவிட்டன. இசை தமிழ்க் கவிதைகளின் முக்கிய புள்ளியாக இருப்பார் என்பதனை தொடர்ந்து வெளிவரும் அவரது படைப்புக்கள் மற்றும் அதன் விடயப்பரப்புக்கள் மேற்கோள்காட்டுகின்றன. தமிழ்க் கவிதைகளில் எழுத இனியெதுவும் இல்லை என்ற சொல்லாடல் பயன்படுத்தப்பட்டபோது சில கவிஞர்கள் படைத்த படைப்புக்கள் இப்படியும் எழுதலாம். இப்படியே எழுதலாம். இன்னும் எழுத நிறைய உள்ளது என்ற உணர்வைக் காட்டியிருந்தது. அப்படிப் பட்ட கவிஞருள் ஒருவரே இசை. சமூகத்தில் Primary Influence ஆன பாடு பொருளால் கவிபுனையும் இசை தமிழ்க்கவிதையுலகின் முக்கிய கவிஞர் எனலாம்.

“நான் பெண்ணாகப் பிறந்திருந்தால்
யாரைப்போல இருப்பேனோ
நேற்று அவளை நான் பார்த்தேன்
பேருந்தின் கடைசியில் நின்றிருந்த
அந்த பெண்ணிற்கு என் வயதிருக்கும்
அந்த நாசி,
அந்தக் கண்கள்,
கருங்கூந்தல்,
மாநிறம்,
சற்றே திமிரான பார்வை
வடிவான தோற்றமென
நான் பெண்ணாய் பிறந்தால்
வடிவெடுக்கும் தோற்றம்தான் அது.
இரண்டொருமுறை யதேச்சையாக இருவரும்
பார்த்துக்கொண்டோம்
இரண்டொருமுறை யதேச்சையாக இருவரும்
பார்ப்பதைத் தவிர்த்தோம்
இப்போது பேசும் தொலைவில் நிற்கும் அவளிடம்
நீங்கள் இளங்கோவா என்றேன்
ஆமாம் என்ற அவள்
நீங்கள்
ஞானப்பூங்கோதைதானே என்றாள்.
-கண்டராதித்தன்.

kandarathithan

சமகாலத்தில் நம்முடன் இருக்கும் யதார்த்த கவிஞன் கண்டராதித்தன். கி.பி 950களில் சோழ அரச எல்லைகள் குறுகுவதை தடுக்கமுடியாமல் திணறிய இடைக்காலச் சோழ அரசர் தான் கண்டராதித்தர். அவரது பெயரே இக்கவிஞருக்கும். ஏமாற்றம், அரசியல், துரோகம் முதனானவற்றை கனத்த குரலில் கூறும் கவிதைகள் இவருடையது. சிலவேளைகளில் இவரது கவிதைகளில் Memoirs என்கின்ற பாணியிலான எழுத்துமுறைக் கவிதைகளின் வெளிப்பாட்டையும் காணலாம். மேற்குறித்த கவிதையில் உணர்வுநிலைப்பட்ட Scope விரிவடைகின்ற அதேநேரம் காட்சிகளின் நாடகப்போக்கினை கண்டராதித்தனிடம் அவதானிக்கலாம். இது மிகவும் அரிதான முறையில் கவிதை படைப்போரிடமிருந்து எழுகின்ற கவிதைக்கான சமன்பாடாகும்.

யாரோ தினமும்
ஒரு பூவைக் கொன்று
புத்தரின் கையில் வைத்துவிடுகிறார்கள்
விரல்கள் நடுங்க…
பூ அதிர்வதாய் சொன்னேன்
காற்றென்று காரணம் சொன்னார்கள்
கடந்த வாரத்திலோர் நாள்
புத்தர் அழுததாய் சொன்னபோது
மழை என்று மறுத்தார்கள்
நேற்று அதிகாலையிலும் கூட
கண்ணீர் கசிவதாய் பதறினேன்
பனித்துளிகள் என்று சிரித்தார்கள்
மாலை நேரத்து
மந்திர உச்சாடனத்தில்
புத்தரின் விசும்பல் யாருக்கும்
கேட்காமல் போக
இன்றும் கூட யாரோ
ஒர பூவைக் கொன்று.
-வெயில்.

பரந்தளவிலான வாசகர்களிடம் இடம்பிடித்துள்ள ஒரு கவிஞர் வெயில் ஆவார். கவிதைகளின் வார்த்தைகளை உடைத்துடைத்து கதைவடிவில் நேர்த்தியான முறையிலும் சிந்திக்கத்தூண்டும் அம்சங்களை ஒன்றிணைத்து சலிப்புத்தட்டாமலும் கூறும் சிறப்பு வெயிலினுடையது எனலாம். ஒரு கவிதைக்கான புதிய அமைவு இதுதான் என்பது போன்றதொரு பாதிப்பு இவரது கவிதைகளில் ஏராளம் வெளிப்படுகிறது.  Flexibility ஆன வார்த்தைகளை உள்நுழைக்கும் ஒரு கவிஞர். சிந்தனைக் கோலங்களை அகலப்படுத்தி வாசித்தால் இவரது கவிதையின் ரகம் பிறிதொரு வகை என்றே எண்ணத் தோன்றும்.

ஆரம்பத்தில் கலாப்ரியாவின் கவிதை ஒன்று பதிவிட்டிருந்தேன். அதன் ஒட்டுமொத்த அர்த்தம் கவிஞர்களுக்கும் பொருந்துவதாகும். அதாவது கவிதைகளைப் படைத்தபின் கவிஞர்களுக்குக் கவிதையின் வெளிகளை விஸ்த்தரிக்கவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்பதாகும். மேற்சொன்ன, சொல்லும் போது விடுபட்ட கவிஞர்களின் கடமைகள் இதுவாகவே இருக்கும். அதற்கான நம்பிக்கைகளாக இவர்களைக் கருதலாம். இதில் விடுபட்ட பலரும் அவ்வகையினரே.
====
இரட்ணேஸ்வரன் சுயாந்தன்

Series Navigationஉமர் கயாம் ஈரடிப் பாக்கள் – 7, 8 , 9காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் இலக்கியப் போட்டிகள்
author

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *