2017ஆம் ஆண்டுக்கான வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை ஜூலை முதலாம் நாள் துவங்கி நான்காம் நாள் வரையிலும் மின்னசோட்டா மாகாணத்திலிருக்கிற மினியாபோலிசு செயிண்ட்பால்

வட அமெரிக்காவில் ஆங்காங்கேயிருக்கிற தமிழ்ச்சங்கங்களின் ஒன்றியமாய்க் கடந்த முப்பது ஆண்டுகளாக இயங்கிவரும் அமைப்புதான், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை என்பதாகும். ஆண்டுதோறும் அதன் ஆண்டுவிழாவினை, வட அமெரிக்காவிலிருக்கிற ஏதோவொரு நகரில் அமெரிக்கத் தமிழர் திருவிழாவாகக் கொண்டாடி வருகின்றனர். அதன்படி 2017ஆம் ஆண்டுக்கான விழாவினை, எதிர்வரும் ஜூலை முதலாம் நாள் துவங்கி நான்காம் நாள் வரையிலும் மின்னசோட்டா மாகாணத்திலிருக்கிற மினியாபோலிசு செயிண்ட்பால் இரட்டைநகர்ப் பகுதியில், மின்னசோட்டா தமிழ்ச்சங்கமும் தமிழ்ச்சங்கப் பேரவையுமிணைந்து நடத்துகின்றன.
 
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் ஒவ்வொரு ஆண்டுவிழாவும், தமிழ் இலக்கியம், பண்பாடு, சமூகத்திற்குப் பணியாற்றிய ஆன்றோர் நினைவாக இடம்பெறுவது மரபாகும். அந்த மரபுக்கொப்ப, இந்த ஆண்டுக்கான விழாவானது நாடகக்கலையின் தலைமையாசிரியரான சங்கரதாசு சுவாமிகளின் நூற்றைம்பதாவது பிறந்தநாள் விழாவாகக் கொண்டாடப்படுவதோடு மட்டுமல்லாமல், ‘தமிழர் கலையைப் போற்றிடுவோம்! தமிழர் மரபினைக் மீட்டெடுப்போம்!!’ என்கிற முகப்புமொழிக்கொப்ப நிகழ்ச்சிகள் இடம்பெறவிருக்கின்றனயென்பது குறிப்பிடத்தக்கது.
 
மிசிசிப்பி, மின்னசோட்டா ஆற்றங்கரைகளையண்டிய பகுதியில் அழகுற அமைந்திருக்கும் எழில்மிகு அரங்கம்தான் மினியாபொலிசு மாநாட்டு அரங்கம். இந்த அரங்கத்தில்தான் அமெரிக்கத் தமிழர் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. திருவிழாவின் முதல்நிகழ்ச்சியாக ஜூன் முப்பதாம்நாள், ’விருந்தினர் மாலை’ நிகழ்ச்சியாக விருந்தினர்களுக்கான வரவேற்பும், தொடர்ந்து இளையோர் தமிழிசை நிகழ்ச்சியும் இரவு விருந்தும் இடம் பெறும்.
 
ஜூலை ஒன்றாம் தேதியன்று மாநாட்டு அரங்கில் காலை ஒன்பது மணிக்கு, தமிழ் மரபிசையான தவில் நாகசுரத்துடன் திருக்குறள் மறையோதல், தமிழ்த்தாய் வாழ்த்து, அமெரிக்கநாட்டுப்பண, குத்துவிளக்கேற்றல் ஆகியவற்றோடு முறையாக முதல்நாள் நிகழ்ச்சிகள் துவங்கும். அதைத்தொடர்ந்து, பேரவைத் தலைவர், மின்னசோட்டா தமிழ்ச்சங்கத் தலைவர், விழா ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் வரவேற்றுப் பேசுவர்.
 
முதல்நாளின் முக்கிய நிகழ்ச்சிகளாக, கவிஞர் சுகிர்தராணி அவர்களின் நெறியாள்கையில் ‘தமிழ் போற்றும் தலைமுறையும் தழைக்காதோ!’ எனும் தலைப்பில் கவியரங்கம், மாணவர்கள் பங்கேற்கும் தமிழ்த்தேனீ, குறள்தேனீ போட்டிகள், சிகாகோ தமிழ்ச்சங்கம் வழங்கும் சங்கரதாஸ் சுவாமிகளின் சாரங்கதாரன் நாடகம், தமிழ் முனைவோர் மாநாடு, ஆண்டுவிழா மலர் வெளியீடு, இயக்குநர் மிஷ்கின் கலந்துரையாடல், வந்திருப்போரின் மக்களின் மனத்தைக் கொள்ளையடிக்கக்கூடிய வகையில் பண்ணிசைப்பாடகர் ஜெய்மூர்த்தி வழங்கும் மரபுக்கலை மக்களிசை நிகழ்ச்சி, தமிழ்ச்சங்கள் வழங்கும் தமிழ்மரபுக் கலைநிகழ்ச்சிகள், சமூக ஆர்வலர் கார்த்திகேய சேனாபதி சிறப்புரை முதலானவற்றோடு, தமிழறிஞர் நா.வானமாமலை அவர்கள் தொகுத்தளித்த ’மருதநாயகம்’ மாபெரும் மரபுநாடகம் சிறப்பு நிகழ்ச்சியாக இடம் பெறும்.
 
மரபுக்கலைகளில் முக்கியமானவையாகக் கருதும் தெருக்கூத்து, தோற்பாவைக்கூத்து, பொம்மலாட்டம், பகல்வேடம், இலாவணி, உடுக்கைப்பாட்டு, சேவையாட்டம், ஒயிலாட்டம், கணியான்கூத்து, வில்லுப்பாட்டு, கரகாட்டம், காவடியாட்டம், பொய்க்கால்குதிரையாட்டம், தேவராட்டம், கோலாட்டம், மயிலாட்டம், காளையாட்டம், குறவன் குறத்தி, கைச்சிலம்பம், சக்கையாட்டம், மரக்கால், தப்பு, புலிக்கலைஞன், வில்லுப்பாட்டு போன்றவற்றைச் சார்ந்தவையாக, விழாவில் தமிழ்ச்சங்க நிகழ்ச்சிகள் தொடர்ந்து இடம்பெறும்.
 
இரண்டாம்நாள் நிகழ்ச்சிகள், ஜூன் இரண்டாம் தேதி காலை ஒன்பது மணிக்கு, அமெரிக்க நாட்டுப்பண், தமிழ் மரபிசையான தவில் நாகசுரம், தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கும். தொடர்ந்து தமிழ்ச்சங்கங்களின் தமிழ்மரபு சார்ந்த நாடக நாட்டியம், கலைநிகழ்ச்சிகளோடு, இயக்குநர், இலக்கியவாதி, களப்பணியாளர் எனப் பன்முகத்தன்மையோடு விளங்கும் பாகுபலி புகழ் நடிப்புக்கலைஞர் ரோகிணி அவர்களின் தலைமையில் கருத்துக்களம் நிகழ்ச்சி, இலக்கிய விநாடி வினா, குறும்படப்போட்டி, பண்ணிசை ஆய்வாளர் நல்லசிவம் நிகழ்ச்சி, தமிழர்நிலம்சார் ஆய்வாளர் ஒரிசா பாலு அவர்களின் சிறப்புரை, ஒலிம்பிக் விருதாளர் மாரியப்பன் தங்கவேலு சிறப்புரை, எழுத்தாளர் சுகுமாரன் சிந்தனையுரை, சமூக சேவகர் வெ.பொன்ராஜ் சிறப்புரை முதலானவற்றோடு ‘நெருப்புடா’ புகழ் அருண்ராஜா, சூப்பர் சிங்கர்கள் நிரஞ்சனா, ஸ்ரதா, ராஜகணபதி முதலானாரோடு அக்னி குழுவினர் வழங்கும் மாபெரும் இன்னிசை நிகழ்ச்சி இடம் பெறும்.
 
முதன்மைப் பேரரங்கத்தில் சிறப்புநிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, இதர அரங்குகளில் இணையமர்வு நிகழ்ச்சிகளாக, இயக்குநர் மிஸ்கின், பேரா. சுவர்ணவேலுடன் திரைப்படம் குறும்படம் குறித்தான பயிற்சிப் பட்டறை, தமிழ்த் தொழில்முனைவோர் கருத்தரங்கம், மருத்துவத் தொடர்கல்விக் கருத்தரங்கம், திருமண ஒருங்கிணைப்பு, தமிழ்க்கல்வி ஒருங்கிணைப்பு, பேலியோ உணவுப்பழக்கக் கருத்தரங்கம், திருமூலரின் பிராணாயாமம் குறித்தான கருத்தரங்கமும் பயிற்சிப் பட்டறையும், ஆயுர்வேத சித்த மருத்துவக் கருத்தரங்கம், நல்லசிவம் வழங்கும் பண்ணிசைப் பயிற்சிப் பட்டறை, பல்கலைக்கழக முன்னாள் மாணவர் ஒன்றுகூடல், வலைஞர் கூட்டம், குடியேற்றச்சட்ட மாற்றங்கள் குறித்தான விழிப்புணர்வுக் கருத்தரங்கம், விருந்தினர்களான தமிழ்ப்பண்பாட்டு ஆய்வாளர் ஒரிசா பாலு,  சமூக சேவகர் பொன்ராஜ், சமூக ஆர்வலர் கார்த்திகேயசேனாபதி ஆகியோருடன் கலந்துரையாடல், அமெரிக்கத் தமிழர் முன்னோடி விருது பெறும் ஆளுமைகளுடன் கலந்துரையாடல் உள்ளிட்ட இன்னும் பல நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறும். 
 
வாய்மொழி இலக்கியம், நாட்டுப்புற வழக்குகள், மரபுகள் குறித்தான விரித்துரை, சிலம்பம், பறையிசை, தமிழ்ச்சங்கங்களின் கூட்டுநிகழ்ச்சி போன்றவையும் இடம் பெறும். திருவிழாவில், அமெரிக்கத் தமிழர் முன்னோடி விருதுகளும், தெரிவு செய்யப்பட்ட ஆன்றோருக்கு வழங்கப்படும்.
ஜூலை மூன்றாம் நாள், திரைப்பட ஆளுமையும் இலக்கிய ஆளுமையுமான ரோகிணி, எழுத்தாளர் சுகுமாரன், வரலாற்று ஆய்வாளர் ஒரிசா பாலு, கவிஞர் சுகிர்தராணி, கலையாளுநர் மிஷ்கின் முதலானோர் கலந்து கொள்ளும் இலக்கியக் கூட்டம் இடம் பெறும். 
 
அமெரிக்கத் தமிழ்விழா குறித்த கூடுதல் தகவலை உடனுக்குடன் பேரவையின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்: https://fetnaconvention.orghttps://tefcon.fetnaconvention.org/
Series Navigation  கிருஷ்ணா !      இலக்கியங்கள் வழிபாட்டுக்கன்று ந. முருகேசபாண்டியன் எழுதிய “மறுவாசிப்பில் செவ்வியல் இலக்கியப் படைப்புகள்” கட்டுரைத் தொகுப்பை முன்வைத்து]