நோய்வாய்ப்பட்ட ” சுமங்கலிகள் “

நோய்வாய்ப்பட்ட ” சுமங்கலிகள் “
This entry is part 1 of 12 in the series 8 ஜனவரி 2017

tirupur

டீ சர்ட் போட்ட பொண்ணா இருந்தா கார்மெண்ட்சில வேலை

பாத்த ” பொண்ணா இருக்கும் சட்டைப் போட்ட பொண்ணா இருந்தா மில்லில் வேலை பாத்த “ பொண்ணா இருக்கும் . லுங்கி கட்டிய பொண்ணா இருந்தா வீட்டு வேலை பாத்த பொண்ணா இருக்கும் . இல்லீன்னா வீட்லே வேலை பாக்கற பொண்ணா இருக்கும். நைட் கவுன் போட்டப் பொண்ணா இருந்தா வீட்லே சமைக்கறதுக்குன்னே இருக்கற பொண்டாட்டிமாரா இருக்கும் .

– இப்படி பெண்களுக்கான டிரஸ் கோட் dress code பொதுப்புத்தியில் வந்து விட்டது ஆச்சர்யமாக இருக்கிறது.

சுமங்கலித்திட்டத்தில் வேலை பார்க்கும் பெண்களின் டிரஸ்கோர்ட் வீட்டுப் பெண்களிடமிருந்து மாறுபட்ட்தில்லை. சமையலறையிலிருந்து நேராக பஞ்சாலைக்கு வந்த்து போல் இருப்பார்கள்.

சுமங்கலித்திட்டம், கல்யாணத்திட்டம், கண்மனித்திட்டம், தாலிக்குத்தங்கம் போன்ற திட்டங்களின் பெயரில் கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, நாகை ., திருவாரூர் போன்ற பல மாவட்டங்களிலிருந்து இளம் பெண்களை வேலைக்கு அழைத்து சென்று தஙக வைப்பது போன்று ஐந்து வருடத்திற்கு மேல் வேலைவாங்குகிறார்கள். தாலிக்குத்தங்கம்தருகிறோம். திருமணத்திற்கு பணம் தருகிறோம் என்று பெரும்பாலும் மோசடிகளாக இருக்கிறது.அப்படி அந்தக் குறிப்பிட்ட காலம் முடிவதற்குள் தப்பித்து காலோடிந்து கை ஒடிந்து நோயாளிகள் ஆகிறவர்கள் பலர். இரண்டு அரை லட்சம் பெண்கள் இந்நிலையில் தமிழகத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.அக்காலம் முடிகிற சமயத்தில் பெண்கள் மேல் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளில் பெரும்பாலும் பாலியல் தொடர்பான அவதூறுகள். அதிலிருந்து தப்பித்து வந்தாலும் அங்கே ” அவ சுமங்கலியிலெ இருந்தவ “ என்ற வசவில் தயங்கும் ஆண் மாப்பிள்ளைகள். இந்தத் திட்டம் ஓர் ஆண்டு, இரண்டு ஆண்டுகள், அய்ந்து ஆண்டுகள் என வெவ்வேறு பெயர்களில் நடைமுறையில் இருக்கின்றன. குறைந்த பட்ச கூலியாக தற்போது நீதிமன்றத்தாலும், தொழிலாளர் நலத்துறையாலும் நிர்ணயிக்கப்பட்டிருப்பது ரூ 692.50 என்றால் நம்ப முடிகிறதா. இதில் கால் பங்குதான் இப்பெண்கள் பெறுகிறார்கள். இந்த வேலைமுறையே சுரண்டலுக்கான அடிப்படையாக இருக்கிறது. பஞ்சாலைத் தொழிலாளர்களின் வாழக்கையை சுமங்கலித்திட்ட்த்திற்கு முன், சுமங்கலித்திட்ட்த்திற்குப் பின் என்றே தன்னார்வலர்கள் பிரிக்கிறார்கள். 30000 கோடி ரூபாய் அந்நிய செலவாணி பெறும் திருப்பூர் கூட இவ்வகைத்தொழிலாளர்களின் உழைப்பில் கொண்டாட்டத்தை அனுபவிக்க ஆரம்பித்திருக்கிறது.. சுமங்கலித்திட்ட தொழிற்சாலைகளில் கூலிச்சுரண்டல், பாலியல் சுரண்டல்,மன அழுத்தம் என்று தமிழகத்தில் இதுவரை 90 தற்கொலைகள் நடந்திருக்கின்றன. இதில் ஆணவக்கொலைகள் கூட இருக்கின்றன( தனியாக ஆணவக்கொலைகள் தமிழகத்தில் 90ஆகிவிட்டது ) .பத்து சதவீதம் பயிற்சியாளர்கள் என்று சொல்லப்பட்டாலும் பஞ்சாலைகளில்90 சதவீதம் அவ்வகையில் இளம்பெண்கள் வேலை செய்கிறார்கள். சுரண்டல், வியாபார லாபம் என்ற இரு மொழிகளே அங்கு பேசப்படுபவை. பீகார், ஒரிசா, வங்காளம் என்று கூட்டமாய் வந்து நகரங்களில் அடைக்கலம் ஆகியிருக்கும் இவர்களுள் பெரும்பான்யானவர்களின் பொது மொழி சைகையே.சின்னச்சின்ன யூனிட்டுகளில் கூட இவர்கள் அடைக்கலம் பெறுகிறார்கள். தொழில்நுட்ப முன்னேற்றங்கள் பெரிய யூனிட்டுகளை இன்னும் சவுகரியப்படுத்துகின்றன. சிறிய யூனிட்டுகளில் அதிகபட்ச விதிமீறல்கள்.

முதலாளித்துவம்ம் கார்ப்பரேட்டுகள் ஏகதேசம் தொழிலாளி வர்க்கத்தை அடிமைகளாக மாற்றி விட்டன. நிரந்தர வேலை, சமூகப் பாதுகாப்பு என்று இல்லாமல் தினசரி கூலி, ஒப்பந்த்த் தொழிலாளி , பீஸ்ரேட் வெர்க்கர் என்று தொழிலாளர்களை மாற்றிவிட்டது. இதில் பாதிகப்படுபவர்கள் பெரும்பாலும் பெண்கள். அதிலும் பதின்மபருவத்தினரே.

எல்லா சாலைகளும் பெரும் தொழிற்சாலைகள் இருக்கும் நகரங்களை நோக்கியே திருப்பி விடப்பட்டு விட்டன. அல்லது வழிகள் மாற்றி வைக்கப்பட்டுள்ளன,

அந்த வழிகளில் தெனபடும் அல்லது திரும்பிக்கொண்டிருப்பவர்களில் பெரும்பாலும் நோய்வாய்ப்பட்ட இளம் பெண்கள்தான். பெயரளவில் சுமங்கலிகள் அவர்கள். ( ஆண்கள் வெவ்வேறு வகையான வடிகால்களால் தப்பிக்க முயல்கிறார்கள் அதில் ஒன்று மது. நாற்பது வயதிற்குப்பின் சாக தயாராகிவிடுகிறார்கள் )

பெரும் நகரங்களில் தென்மாவட்ட இளைஞர்கள், இளைஞிகள் பட்டாளம் இருந்த கூட்டதில் இப்போது வடநாட்டு இளைஞர் கூட்டமும் சேர்ந்து விட்டது. பீகார், ஒரிசா, வங்காளம் என்று கூட்டமாய் வந்து நகரங்களில் அடைக்கலம் தேடிக்கொண்டிருக்கின்றனர். வடநாட்டினருக்கு ஆட்டா மாவு மூட்டையும் உருளைக்கிழங்கு கொஞ்சம் கிலோ கணக்கில் தந்தால் போதும் சுலபமாக கொத்தடிமை ஆகிவிடுகிறார்கள். அவர்களின் குழந்தைகளுக்கான கல்வி தமிழ் நாட்டில் சிக்கலாகிக் கொண்டே இருக்கிறது. இணைப்புப்பள்ளி என்ற பெயரில் சில சமூக அமைப்புகளும் தன்னார்வக்குழுக்களும் நடத்தும் பள்ளிகள் அவர்களுக்கு ஆசுவாசம். இல்லாவிட்டால் குழந்தைத் தொழிலாளர்களாய் சுலபமாய் ஆகும் அவலம். குழந்தைத் தொழிலாளர்கள் வேலை அழுத்தம், சிறு வயதில் குடிக்கும் பழக்கங்களால் பின்னர் அவர்கள் கலாச்சார ரீதியானக் குற்றப்பரம்பரையினராக தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆங்கில காலனி ஆதிக்கம் முத்திரை குத்திய குற்றப்பரம்பரையினரான தலைமுறை இருந்து கழிந்து விட்டது. வரும் தலைமுறையினர் மேல் குத்தப்படும் அவ்வகை முத்திரைகள் வேறு மாதிரியானவை. அதில் முதலாளித்துவ , கார்ப்ப்ரேட் அரக்கின் நிறம் கூடுதலாக இருக்கிறது.இது இந்த நூற்றாண்டின் பொருளாதார வளர்ச்சி தந்திருக்கும் கரிய நிழலின் அடையாளம்.கரிய நிழல் இளம் மற்றும் சுமங்கலிப் பெண்களின் உழைப்பு முகங்கள் நோய்வாய்ப்பட்டதை இன்னும் இருட்டாக்குகிறது..

கல்யாணம் செய்து கொள்ள சட்டப்படி 18 வயது, ஓட்டுப்போட 18 வயது ( ஓட்டன்று ஊருக்குபோய் வர இரு இரவுகள் ஒரு பகல் வேலையில்லை என்ற சலுகை பிரியாணி ,பணம் ஆகியவற்றுடன் )என்று கட்டாயப்படுத்தும் சட்டங்கள் வேலை செய்ய மட்டும் வயதைப்பார்ப்பதில்லை என்ற முணுமுணுப்பு உரத்தக்குரல்களாக மாறிவிட்டன.சமீபத்தில் சுமங்கலித்திட்டத்தில் ஆள் சேர்க்கும் பிரசுரம் ஒன்றில் பார்த்தது :

“ ஓர் இளம் பெண்ணை பஞ்சாலையில் சேர்த்து விட்டால் 2 கிராம் தங்கம் பரிசு. 5பெண்களைச் சேர்த்தால் 6 கிராம் தங்கம்பரிசு . 10 பெண்களைச் சேர்த்தால் 12 கிராம் தங்கம்பரிசு . இதைத்தவிர ஒருவருக்கு 1000 ரூபாய் கமிசன்.. “

சந்தைக் கலாச்சாரம் எல்லா பிரிவுகளிலும் நீண்டுவிட்டது. அதன் பாதைகள் ரொம்பவும் கரடுமுரடானவை.

–சுப்ரபாரதிமணியன்

subrabharathi@gmail.com / 8-2635 pandian nagar, tiruppur 641 602 -94861 01003

Series Navigationமிளிர் கொன்றை

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *