கம்பனைக் காண்போம்—

This entry is part 13 of 18 in the series 12 பெப்ருவரி 2017

 

1                           யானைகளும் குரங்குகளும்

காட்டில் மாலைநேரம் நெருங்குகிறது. யானைகள் எல்லாம் நீர் அருந்த குளங்களை நோக்கிச் செல்கின்றன. குரங்குகள் எல்லாம் இரவில் தங்குவதற்காக மரத்தை நாடிப் போகின்றன. இதைக்கம்பன் இரு அடிகளில் பாடுகிறான்

”தந்தியும் பிடிகளும் தடங்கள் நோக்கின

மந்தியும் கடுவனும் மரங்கள் நோக்கின”

தந்தி என்பது ஆண்யானையையும் பிடி என்பது பெண்யானையையும் காட்டும். மந்தி என்பது பெண் குரங்கினையும், கடுவன் என்பது ஆண் குரங்கினையும் குறிக்கும். யானைகளைச் சொல்லும்போது ஆண்யானை முன்னே செல்லப் பின்னே பெண்யானை குளத்தை நோக்கிச் சென்றதாம்; குரங்குகளைச் சொல்லும்போது பெண்குரங்கு முன்னே செல்ல ஆண்குரங்கு பின்னே சென்றதாம்? ஏன் தெரியுமா?

எப்பொழுதும் காட்டில் நீர் நிலைகளில் தண்ணீர் அருந்த வரும் விலங்குகளை வேட்டையாட அங்கே புலி, சிங்கம் போன்றவை மறைந்திருக்கும். எனவே ஆண்யானை முன்னே சென்று விலங்கு ஏதாவது இருக்கிறதா எனப் பார்க்க முன்னே பாதுகாப்பாகச் செல்கிறதாம்.

முன்னே செல்லும் பெண்குரங்கு மரத்தில் ஏறி மேலே சென்று  தூங்குவதற்கேற்ற நல்ல கிளையில் உட்கார்ந்து கொள்ளும். பின்னால் வரும் ஆண்குரங்கு எல்லாம் ஏறினபிறகு அடிமரத்தின் கிளையில் இரவில் வேறு விலங்குகள் வந்தால் தடுப்பதற்கேற்றவாறு உட்கார்ந்து கொள்ளும். எனவேதான் இங்கே பெண்குரங்கை முதலிலும் ஆண்குரங்கைப் பின்னாலும் கம்பன் சொல்கிறான்.

அதனால்தான் அங்கே ஆண்யானையை முன் வைத்தும் இங்கே பெண்குரங்கை முன்வைத்தும் கம்பன் பாடுகிறான்.

1.ஆற்றுப்பபடலம்

கம்பனைக் காண்போம்—2

பூனையும் பாற்கடலும்

 

வால்மீகி முனிவன் வடமொழியில் எழுதிய இராமகாதையைக் கம்பன் தமிழ் மரபிக்கேற்ப எழுதத் தொடங்குகிறான். எந்தப் புலவனும் நூல் தொடங்குமுன் அவையடக்கம் பாடுவது மரபு. கம்பனும் அவையடக்கம் பாடுகிறான்.

”ஓசை பெற்று உயர்பாற்கடல் உற்று ஒரு

பூசை முற்றவும் நக்குபு புக்கென

ஆசை பற்றி அறையலுற்றேன் மற்று இக்

காசு இல் கொற்றத்து இராமன் கதை அரோ”            [4]

[ஓசை= ஒலி; பூசை=பூனை; அறைதல்=சொல்லுதல்; காசு=குற்றம்]

 

”ஒரு பூனை ஒலியைப் பெற்று உயர்ந்த பாற்கடலைப் பார்க்கிறது; அக்கடல் முழுதும் பாலால் நிரம்பி இருப்பதைப் பார்த்து மகிழ்ச்சி கொள்கிறது. அப்பூனையானது இப்பாற்கடல் முழுவதையும் நான் நக்கிக் குடித்து விடுவேன் என்றெண்ணி முற்படுகிறது. அதுபோல நான் என் விருப்பத்தால் குற்றம் இல்லாத இராமனின் கதையை முழுதும் சொல்லத் தொடங்கினேன்” என்று ஓர் அருமையான உவமையை வைத்துக் கம்பன் அவையடக்கம் பாடுகிறான்.

கம்பனைக்காண்போம்—3

அசுணத்திற்குத் துன்பம்

 

கம்பன் அவையடக்கத்தில் தன்னை மிகவும் தாழ்த்திக் கொள்கிறான். அசுணம் எனும் பறவை முன்பு இருந்தது. கம்பன் அதை ’மா’ எனக்கூறி விலங்கென்கிறான். அது தன் செவியில் பறையொலி போன்ற வன்மையான ஒலி கேட்டால் மிகவும் வருந்தித் துன்பப் படுமாம். அதைத் தன் அவையடக்கத்தில் கம்பன் உவமையாகக் கூறுகிறான்.

”சான்றோர் பெருமக்கள் பல துறைகளை உடைய விருத்தப்பாக்களைக் கேட்டவர்கள்; அப்படிச் சிறந்த பாக்களுக்கு உறைவிடமாக இருக்கும் அவர்தம் செவிகளுக்கு என் பாடல்களை நான் ஓதினால், யாழின்  தேன் போன்ற இன்னிசையைக் கேட்டு மகிழ்ந்த அசுணத்தின் செவிக்கு வன்மையான பறையொலியைக் கேட்டது போல இருக்கும்” எனத் தன்பாடல்களைப்பற்றி அவையடக்கத்தோடு கூறிக்கொள்கிறான் இப்பாடலில் எனலாம்.

துறை அடுத்த விருத்தத் தொகைக் கவிக்கு

உறை அடுத்த செவிகளுக்கு ஓதில் யாழ்

நறை அடுத்த அசுண நல்மாச் செவிப்

பறை அடுத்தது போலும் என்பார் அரோ”               [7]

[நறை=தேன்]

கம்பனைக் காண்போம்—4

சிற்பியும் சிறுபிள்ளைகளும்

 

கம்பனின் அவையடக்கம் தொடர்கிறது. ஒருகாட்சியைக் காட்டுகிறான்.

“சிறு பிள்ளைகள் நிலத்திலே வீடுகள் கட்டி விளையாடுகின்றனர். தங்கள் வீடுகளில் பல அறைகளையும், ஆடுவதற்காக அமைந்த மேடைகளயும் தரையில் கிறுக்கி அமைத்து விளையாடுகின்றனர். சிற்ப நூல்களில் தேர்ச்சி பெற்ற தச்சரும் சிற்பிகளும் அவற்றைக் கண்டு “இது சரியில்லை, அது சரியில்லை” என்று அவர்களிடம் கோபம் கொள்வார்களோ? அதுபோல இறையருளும் ஞானமும் பெறாத நான் இயற்றிய அற்பமான தமிழ்ப்பாக்களைப் பார்த்து முறையாக நூலறிவு பெற்ற சான்றோர்கள் என்னிடம் கோபம் கொள்வார்களோ?” என்று இப்பாடலில் கம்பன் கேட்கிறான்

அறையும் ஆடரங்கும் பட பிள்ளைகள்

தறையில் கீறிட தச்சரும் காய்வரோ

இறையும் ஞானமும் இலாத என் புன் கவி

முறையின் நூல் உணர்ந்தாரும் முனிவரோ

[தறை=தரை]                                        [9]

கம்பனைக் காண்போம்—5

யார் அந்த மூவர்?

 

தேவ பாடையின் இக்கதை செய்தவர்

மூவர் ஆனவர் தம்முளும் முந்திய

நாவினான் உரையின்படி நான் தமிழ்ப்

பாவினால் இது உணர்த்திய பண்பு அரோ

கம்பன் எழுதிய இராமாயணம் ஒரு வழிநூலாகும். அதற்கு முதல் நூல்கள் உள்ளன. தேவ பாடை என்பது தேவ பாஷை எனும் வடமொழியைக் குறிக்கும். அம்மொழியில் இந்த இராமகாதையை மூன்று பேர் பாடியுள்ளார்கள். உரையாசிரியர்கள் அம்மூவர்களாக முறையே வால்மீகி, வசிட்டர், போதாயனர் ஆகியவர்களைக் காட்டுகின்றனர். ”அவர்களில் முதன்மையான நாவன்மை நிரம்பப்பெற்றவரான வால்மீகி உரைத்த முறையே நான் இக்காப்பியத்தைச் செய்த முறையாகும்.” என்று கம்பன் கூறுகிறான்.

கம்பனைக் காண்போம்—6

ஆற்றுப் படலம்

ஐந்து அம்புகளும் இரண்டு அம்புகளும்

ஆசலம் புரி ஐம்பொறி வாளியும்

காசு அலம்பு முலையவர் கண் எனும்

பூசல் அம்பும் நெறியின் புறம் செலாக்

கோசலம் புனை ஆற்று அணி கூறுவாம்.      [13]

[ஆசு=குற்றம்; பொறி=புலன்; காசு=ஒருவகைமாலை; அலம்பு=ஒலித்தல்;

ஆற்றுப்படலத்தில் கம்பன் கோசலநாட்டில் பாயும் சரயு நதியை நமக்கு அறிமுகம் செய்யப் போகிறான். முதலில் கோசலநாட்டைப் பற்றிக் கூறுகிறான். அந்த நாட்டில் இருக்கும் ஆடவர் அனைவரிடமும் குற்றத்தை அதிகமாகச் செய்கின்ற மெய், வாய், கண், மூக்கு செவி என்னும் ஐந்து பொறிகளாகிய அம்புகள் உள்ளனவாம். அந்நாட்டில் வாழும் பெண்களிடம் இரண்டு அம்புகள் உள்ளனவாம். அவை அவர்களின் முகத்தில் இருக்கும் இரு கண்களாம். இப்படிப் போர் புரியும் ஆயுதங்களான அம்புகளைப் பெற்றிருந்தாலும் அன்பு நெறியை விட்டுவிட்டுப் புறம் செல்லாத மக்கள் வாழும் கோசல நாட்டில் பாயும் சரயு ஆற்றின் அழகினை இனி கூறுவோம் என்று முதல் பாடலில் தொடங்குகிறான். அந்நாட்டின் பெண்கள் தம் கழுத்தில் காசு என்னும் இரத்தின மாலைகளை அணிந்துள்ளனராம். அவை ஒன்றோடு ஒன்று உராய்ந்து அவர்களின் மார்புகளில் ஒலிகள் எழுப்புகின்றனவாம். ஆண்டாள் நாச்சியார் கூடத் திருப்பாவையில் ‘காசு’ என்னும் மாலையை ஆயர்குலப் பெண்கள் அணிந்திருப்பதைப் பாடுவார்.

கம்பனைக் காண்போம்—7

சிவனும் திருமாலும்

நீறு அணிந்த கடவுள் நிறத்த வான்

ஆறு அணிந்து சென்று ஆர்கலி மேய்ந்து அகில்

சேறு அணிந்த முலைத் திருமங்கைதன்

வீறு அணிந்தவன் மேனியின் மீண்டவே        [14]

[ஆர்கலி=கடல்; வீறு=மேன்மை]

இந்தப் பாடலில் சைவ வைணவ ஒற்றுமையைக் காட்ட சிவன், திருமால் என்னும் இரண்டு கடவுளரையும் கம்பன் உவமைக்குப் பயன்படுத்துகிறான். மழை வரப் போகிறது. சிவன் பூசிக்கொண்டிருக்கும் திருநீறு போல வெண்மை நிறம் உடைய மேகங்கள் தாம் செல்லும் வழியை அழகுபடுத்திக்கொண்டே செல்கின்றன. அவை ஒலிக்கின்ற கடலின் நீரைக் குடிக்கின்றன. பிறகு திருமாலின் திருமேனி போலக் கருமை நிறம் கொள்கின்றனவாம். கார்மேனி என்று திருப்பாவையில் திருமால் குறிப்பிடப்படுவார். வைணவ மரபில் திருமாலைச் சொல்லும்போது பிராட்டியையும் சேர்த்துச் சொல்ல வேண்டும். திருமால் தம் மேன்மைக்கு அணியாக அகில் குழம்பைத் தம் மார்பில் பூசிக்கொண்டிருக்கும் திருமகளை அணிந்துள்ளார் என்று கம்பன் காட்டுகிறான்.

கம்பனைக் காண்போம்—8

மாமனும் மருமகனும்

மேகங்கள் மழைபொழிவதற்காக இமயமலை மேல் போய்ப் படிந்தன. அம்மலையிலிருந்து தோன்றி வரும் கங்கையானது கடலில் போய்க் கலக்கிறது. இந்த இயற்கை நிகழ்வைக் கம்பன் மிக அழகாக நயம் தோன்றக் காட்டுகிறான். இமயமலையின் மகள்தான் கங்கையாறாம். அந்த மகள் கடலான ஆண்மகனைப் போய் மணந்து கொள்கிறாள். எனவே இமயமலை கடலுக்கு மாமன் முறை ஆகிறது. அந்த இமயமலையானது கதிரவனால் வெப்பம் அடைகிறது. தன் மாமனாகிய இமயமலை சூரியனால் வெப்பம் அடைந்தான். அவ்வெப்பத்தைத் தன் அன்பினால் மாற்றுவோம் என எண்ணிக் கடலானது மேகமாய் மாறி இமயமலையின் மேல் போய்ப் படிந்ததாம். அழகான பாட்டு இது.

பம்பி மேகம் பரந்தது பானுவால்

நம்பன் மாதுலன் வெம்மையை நண்ணினான்

அம்பின் ஆற்றுதும் என்று அகன் குன்றின்மேல்

இம்பர் வாரி எழுந்தது போன்றதே                     [15]

[பம்பி=எழுந்து; பரந்தது=படிந்தது; பானு=சூரியன்; மாதுலன்=மாமன்; நண்ணினான்=அடைந்தான்; அம்பின்=அன்பின்; அகன்=அகன்ற; இம்பர்வாரி=கடலின் மேகம்]

கம்பனைக் காண்போம்—9

மேக வள்ளல்கள்

புள்ளி மால்வரை பொன்என நோக்கி வான்

வெள்ளிவீழ் இடை வீழ்த்தெனத் தாரைகள்

உள்ளி உள்ள எலாம் உவந்து ஈயுமவ்

வள்ளியோரின் வழங்கின மேகமே                 [16]

[புள்ளி வரை=இமயமலை; தாரை=மழைத்தாரை; உள்ளி=உணர்ந்து; வள்ளியோர்=வள்ளல்கள்]

பொன்மயமான இமயமலைமேல் வானமானது வெள்ளிக் கம்பிகள் போல மழைத்தாரைகளைப் பொழிந்தது. பிறருக்குக் கொடுப்பதே சிறந்தது என உணர்ந்த வள்ளல்கள் தம்மிடம் உள்ள எல்லாப்பொருள்களையும் மகிழ்ச்சியோடு அள்ளித் தருவது போல மேகம் மழை பொழிந்தது எனக் கம்பன் உவமை கூறுகிறான்.

 

கம்பனைக் காண்போம்—10

விலைமாதரும் மழைவெள்ளமும்

தலையும் ஆகமும் தாளும் தழீஇ அதன்

நிலைநிலாது இறைநின்றது போலவே

மலையின் உள்ள எலாம் கொண்டு மண்டலால்

விலையின் மாதரை ஒத்தது அவ்வெள்ளமே             [18]

[ஆகம்=உடம்பு; மண்டலால்=கவர்தலால்]

விலைமாதர்கள் தம்மிடம் வருவோரின் தலையையும், உடம்பையும், காலையும், தழுவி வெளியே தாங்கள் காட்டிய விருப்பமானது நிலைத்திருக்காமல், சிறிது நேரமே விருப்பம் கொண்டு அவர்களின் பொருள்களையெல்லாம் கவர்ந்துகொண்டு சென்றுவிடுவார்கள். அவர்களைப் போல இவ்வெள்ளமும் மலையின் உச்சியையும், அடிவாரத்தையும், தழுவி அங்கேயே நிலைத்திருக்காமல் சிறிது நேரமே நின்று, மலையில் உள்ள பொருள்களையெல்லாம் கவர்ந்து கொண்டு சென்றதாம். எனவே அவ்வெள்ளம் விலைமாதரை ஒத்திருந்ததாம்.

கம்பனைக் காண்போம்—11

அணைகட்டப்போகும் வெள்ளம்

வெள்ளம் எங்காவது அணைகட்டப்போகுமா? கம்பன் போகிறது என்கிறான். இராமகாதையின் கதையையே கம்பன் இன்னும் தொடங்கவில்லை. பின்னால் இலங்கை மீது படையெடுத்துச் செல்லும்போது கடலைக் கடக்க இராமன் அணை கட்ட விரும்புகிறான். பின்னால் நிகழப்போவதை முன்னரே சொல்வது காப்பியத்தில் ஓர் உத்தியாகும். கம்பன் அந்த வெள்ளத்தை இராமன் அணைகட்ட விரும்பிய நிலைக்கு உவமையாகச் சொல்கிறான்.

மலை எடுத்து மரங்கள் பறித்து மாடு

இலை முதல் பொருள் யாவையும் ஏந்தலான்

அலைகடல் தலை அன்று அணைவேண்டிய

நிலையுடைக் கவிஒத்தது அந்நீத்தமே                   [21]

மலைகளை எடுத்துக் கொண்டும், மரங்களைப் பறித்துக் கொண்டும், மலையில் இருக்கும் செல்வம் மற்றும் இலை முதலான பொருள்கள் எல்லாவற்றையும் ஏந்திக்கொண்டும் வருதலால், அலைகளை உடைய கடலானது, இராமன் அதைக் கடப்பதற்காக அணை கட்ட விரும்பியபோது பெற்ற நிலையை அவ்வெள்ளம் பெற்றது. அதாவது ஓர் அணையையே கடலில் கட்டக் கூடிய அளவுக்குப் பொருள்களையெல்லாம் அவ்வெள்ளம் சேர்த்து அடித்துக்கொண்டு வருகிறதாம்.

கம்பனைக் காண்போம்—12

வெள்ளமும் கள்குடித்தவரும்

வெள்ளமானது கள்ளைக் குடித்தவரைப் போல இருந்தது என்கிறான் கம்பன்.

ஈக்கள் வண்டோடு மொய்ப்ப வரம்பு இகந்து

ஊக்கமே மிகுந்து உள்தெளிவு இன்றியே

தேக்கு எறிந்து வருதலின் தீம்புனல்

வாக்குதேன் நுகர் மாக்களை மானுமே                [22]

[வரம்பு=எல்லை; வாக்கு=வார்க்கும் கள்]

கள் குடிப்பவரை மக்கள் என்று கூறாமல் மாக்கள் அதாவது விலங்குகள் என்கிறான். வெள்ளத்தை ஈக்களும் வண்டுகளும் மொய்த்துக் கொண்டிருக்கின்றன. எல்லை கடந்து ஊக்கம் மிகுந்து ஆனால் உள்ளே தெளிவில்லாமல் ஓடி வருகிறது. அந்த இனிய வெள்ளம் தேக்கு மரங்களை வீசி வருகிறது. கள் குடித்தவரும் ஈக்கள் வண்டுகள் மொய்க்கக் கிடக்கிறார்கள். அவர்கள் தம் குலம், குணம், பதவி முதலிய எல்லைகளைக் கடந்து, உற்சாகம் பெற்று ஆனால் மனத்தில் தெளிவில்லாமல் இருக்கிறார்கள் ஆதலால் வெள்ளம் கள்குடித்தவரை ஒத்திருந்ததாம்.

====================================================================================

கம்பனைக் காண்போம்—13

கடலுடன் போர்

ஒரு படை போரிடக் கிளம்பிச் சென்றால் அப்படையை உடைய மன்னனின் கொடிபோகும். அவனுடைய யானைப்படை செல்லும். கடலும் அதேபோலப் படையெடுத்துக் கொண்டு கடலரசனுடன் போரிடச்செல்வது போலச் சென்றதாம்.

பணை முக்களி யானை பல் மாக்களோடு

அணி வகுத்தென ஈர்ந்து எடுத்து ஆர்த்துவெண்

மணி நுரைக்கொடி தோன்ற வந்து ஊன்றலால்

புணரிமேல் பொரப் போவதும் போன்றதே             [23]

[பணை=பருத்த; களி=மகிழ்ச்சி; மாக்கள்=விலங்குகள்; புணரி=கடல்; பொர=போரிட]

வெள்ளமானது பருத்த முகத்தையும், மகிழ்ச்சியையும் உடைய யானைகளையும் இன்னபிற விலங்குகளையும் அணிவகுத்து வரும் படை போல் இழுத்துக்கொண்டு, நீரில் தோன்றும் வெண்மையான நுரையானது கொடிபோல் தோன்றும்படி கடலரசனுடன் போரிடச் செல்வதுபோல் வந்தது.

=====================================================================================

கம்பனைக் காண்போம்—14

தாய்முலையன்ன சரயு

இரவிதண் குலத்து எண்இல் பல்வேந்தர்தம்

புரவுநல் ஒழுக்கின்படி பூண்டது

சரயு என்பது தாய்முலை அன்னது இல்

உரவுநீள் நிலத்து ஓங்கும் உயிர்க்கு எலாம்.           [24]

கம்பன் இந்தப்பாடலில் ஒரு நதிக்கு இதுவரை யாரும் கூறாத ஓர் உவமையைப் பயன்படுத்துகிறான். சரயு நதியானது ஒரு தாயின் முலை போன்றதாம்; அதாவது தன் குழந்தைக்கு எப்பொழுது பசிக்கும் எனத் தெரிந்து தாயின் மார்பு பால் சுரந்து அப்பசியைத் தீர்க்கும். அதே போன்று அந்நதியும் அயோத்தி மக்களின் துயர் துடைக்குமாம்.

சூரிய குலத்தில் எண்ணற்ற அரசர் தோன்றி உள்ளார்கள். அவ்வரசர்களின் ஒழுக்கத்தைத் தன்னிடம் கொண்டிருக்கும் நதியே சரயு. வெள்ளப் பெருக்கை உடைய சரயு நதியானது கடல் சூழ்ந்த உலகத்தின் உயிர்களுக்கு எல்லாம் தாய்முலை போலப் பயன் கொடுக்கும்

 

 

கம்பனைக்காண்போம்—15

மன்னர் சேனை போல மாபெரும் வெள்ளம்

எயினர் வாழும் சீறூர் அப்பு மாரியின் இரியல் போக்கி

வயின்வயின் எயிற்றி மாதர் வயிற்று அலைந்துஓடஓட்டி

அயில் முகக்கணையும் வில்லும் வாரிக்கொண்டு அலைக்கும் நீரால்

செயிர்தரும் கொற்ற மன்னர் சேனையை மானும் அன்றே       [26]

[எயினர்=வேடர்; அப்புமாரி=அம்புமழை; இரியல் போக்கி=நிலைகுலையச் செய்து; வயின்=வயிறு; எயிற்றி=அடித்து; அயில் முகக்கணை=கூரிய முனை உடைய அம்பு; செயிர்தரும்=துன்பம் தரும்; மானும்=ஒத்திருந்தது]

வெள்ளமானது வேகமாக ஓடி வருகிறது. அப்படி வரும்போது வேடர்கள் வசிக்கும் சிற்றூர்களைத்தன் மழைத்துளிகளாகிய அம்புகளால் நிலைகுலையச் செய்கிறது. தான் செல்கின்ற இடங்களில் எல்லாம் வேடர்குலப்பெண்கள் தம் வயிற்றில் அடித்துக்கொண்டு ஓடச் செய்கிறது. அக்குடியிருப்பில் உள்ள கூரிய முனைகளை உடைய அம்புகளையும் விற்களையும் வாரி அடித்துக்கொண்டு ஓடி வருகிறது. அச்செயல்களால் அவ்வெள்ளமானது பகைவர்க்குத் துன்பம் தருகின்ற வெற்றியைப் பெற்ற மன்னரது சேனையை ஒத்திருந்ததாம்.

==================================================================================

கம்பனைக் காண்போம்—16

கண்ணன் போன்ற வெள்ளம்

செறிநறுந் தயிரும் பாலும் வெண்ணெயும் சேந்த நெய்யும்

உரியொடு வாரி உண்டு குருந்தொடு மருதம் உந்தி

மறி விழி ஆயர் மாதர் வனை துகில் வாரும்நீரால்

பொறிவரி அரவின் ஆடும் புனிதன் போலும் அன்றே!           [27]

[செறி=உறைந்த; மறிவிழி=மான்குட்டி போல மருண்ட பார்வை; வனை துகில்=உடுத்திய ஆடை; பொறி=புள்ளி; புனிதன்=கண்ணன்]

அந்த வெள்ளம் என்ன செய்ததாம்? உறைந்த நல்ல மணமுள்ள தயிர், பால், வெண்ணெய், ஆகிய இவற்றைக், கட்டித் தொங்கவிடப்பட்டுள்ள உரியுடன் வாரி விழுங்கியதாம்.  குருந்த மரத்தையும், மருத மரத்தையும் முறித்துத் தள்ளியதாம். மான்குட்டியின் விழி போல மருண்ட பார்வை உடைய இடைச்சியர் உடுத்திருந்த ஆடைகளையும் கவர்ந்ததாம். இவை எல்லாம் கண்ணன் சிறுவயதில் செய்த செயல்கள் அல்லவா? எனவே அந்த வெள்ளம், புள்ளிகளையும் வரிகளையும் உடைய பாம்பின் மீது ஆடுகின்ற கண்ணனை ஒத்திருந்ததாம்.

 

கம்பனைக்காண்போம்—17

பாவ புண்ணியம் போல வெள்ளம்

முல்லையைக் குறிஞ்சி ஆக்கி மருதத்தை முல்லை ஆக்கி

புல்லிய நெய்தல் தன்னைப் பொருஅரு மருதம் ஆக்கி

எல்லைஇல் பொருள்கள் எல்லாம் இடைதடுமாறும் நீரால்

செல்லுறு கதியில் செல்லும் வினைஎனச் சென்றது அன்றே!  [29]

[புல்லிய=அற்பப்பயன் அளிக்கும்; பொருஅரு=நிகரற்ற பயன் அளிக்கும்]

வெள்ளமானது ஓடி வருகிறது; அது தன் நீரால் முல்லை நிலத்தைக் குறிஞ்சி ஆக்குகிறது. மருத நிலத்தை முல்லை நிலம் ஆக்குகிறது. அற்பப் பயன் தரும் நெய்தல் நிலத்தை நிகரற்ற பயன் தரும் நன்கு விளையும் மருதமாக்குகிறது. இவ்வாறு அந்தந்த நிலங்களில் உள்ள பொருள்களை எல்லாம் தத்தம் நிலங்களை விட்டு வேறு நிலங்களுக்குச் செல்ல வைக்கிறது. இந்த தன்மையானது எப்படி இருக்கிறதென்று கம்பன் கூறுகிறான். உலகில் தேவர், மனிதர், விலங்கு, தாவரம் என்ற வகைகளில் உயிர்களில் பிறக்கின்றன. அவ்வுயிர்கள் தத்தம் வகைகளில் மாறி மாறிப் பிறக்குமாறு அவை செய்யும் பாவபுண்ணியங்களால் அமைகிறது. பாவ புண்ணியங்கள் உயிர்களின் பிறவிகளை மாற்றுவது போல வெள்ளம் நிலங்களைத் தன் நீரால் மாற்றுகிறதாம்.

கம்பனைக் காண்போம்—18

வெள்ளமும் பரம்பொருளும்

கல்லிடைப் பிறந்து போந்து கடலிடைக் கலந்த நீத்தம்

எல்லைஇல் மறைகளாலும் இயம்ப அரும்பொருள் ஈடு என்னத்

தொல்லையில் ஒன்றே ஆகி துறைதொறும் பரந்த சூழ்ச்சிப்

பலபெருஞ் சமயம் சொல்லும் பொருளும்போல் பரந்தது அன்றே[31]

கம்பன் இந்தப் பாடலில் வெள்ளத்தைப் பரம்பொருளுக்கே உவமையாகச் சொல்கிறான். அவன் கவிநயம் பொங்கும் பாடல்களில் இதுவும் ஒன்று. சரயு ஆற்றின் வெள்ளமானது இமயமலையில் தோன்றிக் கடலில் சென்று கலக்கிறது. இடையில் ஏரி, குளம், குட்டை போன்ற பல நீர்த்துறைகளிலும் பல வகையாகப் பரந்துள்ளது. முதலில் வெள்ளமானது எல்லையில்லாத வேதங்களினாலும் விளக்கிச் சொல்ல முடியாத பரம்பொருள் போலத் தனித்து ஒன்றாக விளங்கியது. பின்னால் அதுவே பரம்பொருளைப் பற்றிச் சொல்லும் பலவகைப் பொருள்கள் போலப் பல வகையான நீர்த்துறைகளாகப் பரவியிருந்தது. இந்த உவமை எந்தப் புலவரும் கூறாத அருமையான உவமையாகும்.

=====================================================================================

கம்பனைக் காண்போம்—19

உடம்புகளில் உயிர்போல வெள்ளம்

தாதுஉகு சோலை தோறும் சண்பகக் காவு தோறும்

போதுஅவிழ் பொய்கை தோறும் புதுமணல் தடங்கள் தோறும்

மாதவிவேலிப் பூக வனம் தோறும் வயல்கள் தோறும்

ஓதிய உடம்பு தோறும் உயிர் என உலாயது அன்றே       [32]

உடம்பையும் உயிரையும் உவமைகளாகக் கூறுவது கம்பனுக்கு எப்பொழுதும் வழக்கம். பின்னால் தசரதனை உடம்பாகவும் அவன் நாட்டின் மக்களை உயிராகவும் கூறுவான் அவன். இங்கு ”மகரந்தம் சிந்தும் சோலைகளிலும், சண்பகம் நிறைந்துள்ள சோலைகளிலும், மலர்கள் மலரும் குளங்களிலும், புதிய மணல்தடங்களிலும், மாதவிக்கொடி என்னும் குருக்கத்திக் கொடிகள் வேலியாகப் படர்ந்துள்ள தோட்டங்களிலும் புகுந்து வருகிறது” என்கிறான். பல்வேறு நூல்களிலும் சொல்லப்பட்ட உடம்புகளிலும் உயிரானது புகுந்து வருவது போல அது இருந்ததாம்.

 

  1. நாட்டுப் படலம்

கம்பனைக்காண்போம்-20

முத்தும் பொன்னும் பவழமும்

கோசல நாட்டில் பாயும் சரயு ஆற்றைப் பற்றி விரிவாக வருணித்துப் பாடிய கம்பன் அடுத்து கோசல நாடு எப்படி இருந்தது என்று கூற வருகிறான்.

வரம்பு எலாம் முத்தம் தத்தும் மடை எலாம் பணிலம் மாநீர்க்

குரம்பு எலாம் செம்பொன் மேதிக்குழி எலாம் கழுநீர்க் கொள்ளை

பரம்பு எலாம் பவளம் சாலிப் பரப்பு எலாம் அன்னம் பாங்காக்

கரும்பு எலாம் செந்தேன் சந்தக் காஎலாம் வண்டு ஈட்டம்      [35]

[வரம்பு=வரப்பு; தத்தும்=பாயும்; பணிலம்=சங்கு; குரம்பு=வாய்க்கால் கரை; மேதி=எருமை; கழுநீர்க் கொள்ளை=செங்கழுநீர் மலர்க் குவியல்; சாலி=ஒருவகை நெல்; பாங்கர்=பக்கம்; சந்தம்=அழகிய]

அழகிய ஓசை நயத்தோடு உள்ள பாடல் இது. கோசல நாடு எப்படி வளமாக இருந்தது என்பதைக் கம்பன் இந்த ஒரு பாடலிலேயே விளக்கி விடுகிறான். அந்த நாட்டின் வயல் வரப்புகளில் எல்லாம் முத்துகள் உள்ளன. நீர் தாவி ஓடுகின்ற மதகுகளில் எல்லாம் சங்குகள் உள்ளன. நீர் நிறைந்த  வாய்க்கால் கரைகளில் எல்லாம் செம்பொன் கட்டிகள் உள்ளன. எருமைகள் படுத்திருந்ததால் ஏற்பட்ட பள்ளங்களில் எல்லாம் செங்கழுநீர் மலர்க் குவியல்கள் உள்ளன. வயலில் பரம்படித்த இடங்களில் எல்லாம் பவழங்கள் உள்ளன. சாலி எனும் ஒருவகை நெல் விளைந்த இடங்களில் எல்லாம் அன்னப் பறவைகள் மேய்கின்றன. பக்கங்களில் உள்ள கரும்புகளில் எல்லாம் சிறந்த தேனைக் குடித்து மகிழ்ந்த வண்டுக் கூட்டங்கள் உள்ளன. இவ்வாறு கோசல நாடு வளமாக இருந்ததாம்.

கம்பனைக்காண்போம்—21

மருதம் வீற்றிருக்கும் மாதோ

மருத நிலத்தின் ஓர் இயற்கைக் காட்சியைக் கம்பன் நம் கண்முன்னே கொண்டுவந்து காட்டுகிறான்.

அழகான ஒரு சோலையில் மருதம் என்னும் மன்னன் கொலுவீற்றிருக்கிறது. அங்கே மயில்களாகிய ஆடல் அழகிகள் நடனம் ஆடுகின்றன. தாமரைக் கொடிகளாகிய பணிப்பெண்கள் தாமரை மலர்களாகிய விளக்குகளைத் தாங்கி நிற்கின்றன. மேகங்கள் மத்தளங்கள் போல் ஒலிக்கின்றன. நீர் நிலைகளில் தோன்றும் அலைகள் திரைகளாக விளங்குகின்றன. தேனைப் போன்ற இனிமையான மகர யாழின் இசையைப் போல வண்டுகள் பாடுகின்றன. இக்காட்சிகளை எல்லாம் கருங்குவளை என்னும் பார்வையாளர்கள் கண் மலர்த்திப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. தான் காணும் ஒவ்வொன்றையும் ஒவ்வொன்றாக உருவகப் படுத்தித் தன் குறிப்பை அவற்றின் மேல் கம்பன் ஏற்றிக்காட்டும் அருமையான பாடல் இதுவாகும்.

தண்டலை மயில்கள் ஆடத் தாமரை விளக்கம் தாங்க

கொண்டல்கள் முழவின் ஓங்கக் குவளைகண் விழித்து நோக்க

தெண்திரை எழினி காட்ட தேம்பிழி மகர யாழின்

வண்டுகள் இனிது பாட மருதம் வீற்றிருக்கும் மாதோ!         [36]

 

கம்பனைக் காண்போம்—22

எல்லாம் உறங்கும்

ஒரு நாட்டின் வளம் கூற வரும்போது உடன்பாடான நிகழ்வுகளையே காட்டுவது பாவலர்களின் மரபு. ஆனால் கம்பன் மரபை மீறி நாட்டு வளம் சொல்லப் போகும்போது எதிர்மறையாக எது எது தூங்குகின்றன என்று கூறுகிறான். தூக்கம் எனும் சொல்லே பிற்காலத்தில் வந்ததுதான். உறக்கம் என்ற சொல்லே அப்பொழுதெல்லாம் வழங்கப்பட்டது. ”

சங்குகள் நீரிலே உறங்கின்றன. ஏனெனில் அந்த நீர் நிலையில் கிடந்து கலக்கும் எருமை தன் வயிறு நிறையத் தின்றதால் நிழலிலே உறங்குகிறது. மக்களும் மன்னனும் அணியும் மாலைகளில் தேன் குடித்த வண்டுகள் உறங்கின்றன. வாடாத புத்தம் புதிய மலர்கள் கொண்டு தொடுக்கப்பட்ட  மாலைகள் அவை. எல்லார் வீட்டிலும் செல்வம் நிரம்பிக் கிடப்பதால் திருமகளும் தாமரை மலரிலே தங்குகிறாள். ஆமைகள் எவ்வித இடையூறுமின்றிச் சேற்றிலே உறங்குகின்றன. முத்துச் சிப்பிகள் நீர்த்துறையிலே உறங்குகின்றன. எருமை நெல்லைத் தின்ன வராததால் அன்னப்பறவை நெற்போரிலே உறங்குகின்றது. மயில்கள் அழகோடு சோலையில் உறங்குகின்றன.

இதோ பாடல்:

நீரிடை உறங்கும் சங்கம் நிழலிடை உறங்கும் மேதி

தாரிடை உறங்கும் வண்டு தாமரை உறங்கும் செய்யாள்

தூரிடை உறங்கும் அன்னம் துறையிடை உறங்கும் இப்பி

போரிடை உறங்கும் அன்னம் பொழிலிடை உறங்கும் தோகை  [38]

[மேதி=எருமை; செய்யாள்=திருமகள்; தூர்=சேறு; இப்பி=முத்துச் சிப்பி; போர்=நெற்போர்; பொழில்=சோலை; தோகை=மயில்]

கம்பனைக் காண்போம்—23

பலவகைக்கண்கள்

படைஎழ உழந்த பொன்னும் பணிலங்கள் உயிர்த்த முத்தும்

இடறிய பரம்பில் காந்தும் இனமணித் தோகையும் நெல்லின்

மிடைபசுங் கதிரும் மீனும் மென்கழைக் கரும்பும் வண்டும்

கடைசியர் முகமும் போதும் கண்மலர்ந்து ஒளிரும் மாதோ      [39]

[படை=கலப்பை; பணிலங்கள்=சங்குகள்; காந்தும்=ஒளிவிடும்; கடைசியர்=உழத்தியர்; போது மலர் அரும்ப இருக்கும் நிலை]

முகத்தில்தான் கண்கள் இருக்கும். கோசல நாட்டில் பல இடங்களில் கண்கள் ஒளிவீசும் என்கிறான் கம்பன். ஒளிவீசுபவை எல்லாமே கண்கள்தாம்; அதுமட்டுமன்று; கண்களுக்கு அழகே ஒளியோடு இருப்பதுதான். கோசல நாட்டில் பல இடங்களில் பல வகைக் கண்களைக் காட்டுகிறான்.

கலப்பைகள் உழுவதால் நிலத்தின் மேலே எழுந்து இருக்கிற தங்கம், சங்குகள் ஈன்ற முத்துகள், பரம்படித்த வயல்களில் ஒளிவிடும் இரத்தினங்கள், நெல்களில் நிறைந்துள்ள பசுமையான கதிர்கள், மீன்கள், உழத்தியரின் முகங்கள், மலர்ந்து கொண்டிருக்கின்ற அரும்புகள் ஆகியன கண்களைப் போல மலர்ந்து ஒளிவீசுகின்றனவாம்.

கம்பனைக் காண்போம்—24

ஐவகைத்தேன்

ஆலைவாய்க் கரும்பின் தேனும் அரிதலைப் பாளைத் தேனும்

சோலைவாய்க் கனியின் தேனும் தொடைஇழி இறாலின் தேனும்

மாலைவாய் உகுத்த தேனும் வரம்புஇகந்து ஓடி வங்க

வேலைவாய் மடுப்ப உண்டு மீன்எலாம் களிக்கும் மாதோ

[அரிதலை=அரியப்பட்ட நுனி;  தொடை இழி இறால்= அம்பு தொடுக்கப்பட்ட தேன்அடை; வரம்பு=எல்லை; வங்கம்=கப்பல்; வேலை=கடல்; மடுத்தல்=கலத்தல்; மாதோ=அசைச்சொல்]

கரும்பாலைகளில் இருந்து கருப்பஞ்சாறாகிய தேன் ஓடி வருகிறது. தென்னை, பனை மரங்களின் நுனி அரியப்பட்டு அதன் பாளைகளிலிருந்து கள்ளாகிய தேன் ஓடுகிறது சோலைகளில் உள்ள மரங்களின் பழங்களிலிருந்து பழச் சாறாகத் தேன் ஓடி வருகிறது. அம்பு தொடுக்கப்பட்ட தேன் அடைகளிலிருந்து தொடர்ந்து தேன் ஓடி வருகிறது. மக்கள் அணிந்திருந்த மாலைகளிலிருந்து தேன் ஓடி வருகிறது. இந்த பலவகைத் தேனும் எல்லை கடந்து ஓடி கப்பல்கள் உலவும் கடலில் போய்க் கலக்கின்றன. அவற்றை மீன்கள் எல்லாம் உண்டு களிக்கின்றன.

’தொடை இழி இறால்’ என்பது அருமையான சொல்லாட்சி. வேடர்கள் தேனெடுக்க தேனடையை நோக்கி அம்பு எய்வார்கள். அம்பு அந்த அடையில் துளையிடும். அத்துளை வழியே தேன் இடைவிடாது ஒழுகும். அதைப் பிடித்துக் கொள்வார்கள். அடைக்கும் சேதமேற்படாதவாறு, தேனீக்களுக்கும் துன்பம் செய்யாமல் தேனெடுக்கும் வழியைக் கம்பன் அறிந்திருக்கிறான். கடலுக்கு அடைமொழியாக வங்கம் எனும் சொல்லைக் கையாள்கிறான். அது வங்கக்கடல் என்று திருப்பாவையில் ஆண்டாள் நாச்சியார் சொல்வதாகும்.

 

கம்பனைக் காண்போம்–25

பெண்ணாசை விடுவாரோ

பண்கள்வாய் மிழற்றும் இன்சொல் கடைசியர் பரந்து நீண்ட

கண்கைகால் முகம்வாய் ஒக்கும் களைஅலால் களைஇ லாமை

உண்கள்வார் கடைவாய் மள்ளர் களைகிலாது உலாவி நிற்பர்

பெண்கள்பால் வைத்த நேயம் பிழைப்பரோ சிறியோர் பெற்றால்

[மிழற்றும்=பேசும்; கடைசியர்=உழத்தியர்; மள்ளர்=உழவர்; நேயம்=ஆசை]

உழவர் கள் குடிக்கிறார்கள்; அது அவர்கள் வாய்க்கடைசியில் வழிகிறது. அத்துடன் அவர்கள் வயலில் களை எடுக்கப் போகிறார்கள். அந்த வயலிலே மலர்களாகிய களைகள்தாம் இருக்கின்றன. அம்மலர்கள் இனிமையான இசை போலப் பேசுகின்ற சொற்களை உடைய உழத்தியரின் விரிந்து நீண்ட கண்களையும், கைகளையும், முகங்களையும், வாய்களையும் ஒத்திருக்கின்றன. அவற்றைப் பறிக்கப்போகையில் உழத்தியரின் நினைவு வந்து அம்மலர்களைப் பறிக்காமல் உலாவி நிற்பார்களாம். கள் குடிக்கும் மக்கள் பெண்கள் பால் வைத்த ஆசையிலிருந்து தப்புவார்களோ? பெண்களின் அழகைச் சொல்வதோடு இப்பாட்டில்  எப்பொழுதும் பெண்ணாசையை விடமாட்டார்கள் என்பதும் சொல்லப்படுகிறது.

==============================================================================

Series Navigationஉமர் கயாம் ஈரடிப் பாக்கள்சொல்வனம் இணையப் பத்திரிகையின் 166 ஆம் இதழ்
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *