LunchBox – விமர்சனம்

This entry is part 9 of 18 in the series 12 பெப்ருவரி 2017

lunchbox_movie

ஒரு இல்லம். கணவன் , மனைவி, ஒரு குழந்தை. மனைவி பெயர் இளா. கணவன் மனைவியை கண்டுகொள்ளமறுக்கிறான். கணவனின் அன்பைப்பெற மனைவி தினம் தினம் கணவனுக்கு தன் கையால் சமைத்து டப்பாவாலாக்கள் மூலமாக அனுப்புகிறாள்.  அந்த உணவின் ருசியிலும், அது சொல்லக்கூடிய அன்பிலும் கணவன் தன்னிடம் ஆசை கொள்வான் என்கிற மறைமுக எதிர்பார்ப்பே அவளை நகர்த்துகிறது.

ஆனாலும் கணவன் தொடர்ந்து அவளை புறக்கணிக்கிறான். ஒரு நாள் அவள் கணவனுக்கு உருளைக்கிழங்கு செய்து அனுப்ப, அவன் மாலையில் ” நீ செய்த  காலிஃப்ளவர் நன்றாக இல்லை” என்கிறான். அப்போதுதான் அவளுக்கு புரிகிறது அவள் தினம் தினம் செய்து அனுப்பும் உணவு வேறு யாருக்கோ செல்கிறது என்பது.

அந்த யாரோவுக்கு “என் கணவனுக்கு அவனது அன்பைப்பெற நான் சமைத்தது உங்களுக்கு வந்துவிட்டது ” என்று கடிதம் எழுதுகிறாள்.  அந்த டப்பா வந்து சேர்வது ஒரு மாதத்தில் ஓய்வு பெற இருக்கும் இர்ஃபான் கானுக்கு தான். அவர் ஓய்வு பெற்றுவிட்டால் அவர் இடத்தை நிரப்ப ஒரு ட்ரெய்னி வந்து சேர்கிறான். அவனுக்கு வேலையை கற்றுத்தராமல் துவக்கத்தில் அவனை அலைய விடும் இர்ஃபானுக்கு இதெல்லாம் நடக்கிறது.

இர்ஃபானும் அவளுக்கு பதில் எழுதிகிறார். இப்படியே அவர்கள் தினம் தினம் உணவு டப்பாவிலேயே கடிதங்கள் பரிமாறிக்கொள்கிறார்கள்.
இளாவுக்கு கணவனிடம் கிடைக்காத அந்த “கவனிப்பு” ஒரு மாதத்தில் ஓய்வு பெற இருக்கும் இர்ஃபானுடனான கடிதப்போக்குவரத்தில் கிடைக்கிறது. மனைவியை இழந்துவிட்ட இர்ஃபானும் அந்த கடிதப்போக்குவரத்தில் இருக்கும் பரஸ்பர அன்பை விரும்புகிறான். அது அவனது தனிமையை போக்கிக்கொள்ள உதவுகிறது.

அந்த கடிதங்களில் அவள் தனது கணவனுக்கு இன்னொரு முகமறியா பெண்ணிடம் இருக்கும் கள்ள உறவு குறித்து பகிர்ந்து வருத்தப்படுகிறாள். அமைதி நிலவும் பூட்டானுக்கு தப்பிச்சென்றுவிட்டால் தேவலை என்கிறாள்.

“பூட்டானுக்கு நானும் வரவா” என்று கேட்டு எழுதுகிறான் இர்ஃபான் கான். அந்த கடிதத்துக்கு “உங்கள் பெயர் கூட தெரியாது.. நான் எப்படி வர?” என்று பதில் அனுப்புகிறாள் இளா. ஆனால் அதன் பிறகு அவளே ஒரு நாள் இர்ஃபானை சந்திக்க அப்பாயின்ட்மென்ட் தருகிறாள். அன்றும் சந்திப்புக்கென அவள் குறிப்பிட்ட இடத்துக்கு வந்து காத்திருக்கிறாள். ஆனால் இர்ஃபான் அன்று அவளை சந்திப்பதில்லை. மாறாக தொலைவில் அமர்ந்து அவள் காத்திருப்பதை பார்த்து நிற்கிறான்.

அவனுக்கு தயக்கம் வருகிறது. தனக்கு வயதாகிவிட்டதோ என்கிற தயக்கம். அதனால் அவன் அவளை சந்திப்பதில்லை. ஆனால் கடிதத்தில் விளக்கமாக சொல்லிவிடுகிறான் காரணத்தை.

இடையில் இளாவின் அப்பாவுக்கு உடல் நிலை மோசமடைகிறது. அப்போது இளாவின் தாய் , கணவனுக்காக உழைத்து எப்படியெல்லாம் தான் கஷ்டப்பட நேரிட்டது என்பது குறித்து இளாவிடம் பகிர்ந்து கொள்கிறாள். பிற்பாடு இர்ஃபானும், இளாவும் இணைந்தார்களா என்பதுதான் கதை.

புறக்கணிக்கும் கணவனுக்கென இளா மாய்ந்து மாய்ந்து உணவு தயாரிப்பதைப்பார்க்க எரிச்சலாக இருக்கிறது.  திருமணம், குழந்தைகள், குடும்பம் என்பதின் மீதெல்ல்லாம் எனக்கு மதிப்பிருக்கிறது. ஆனால் அந்த மதிப்பு சுத்தமாய் இல்லாத ஒருவன் கணவனாகிவிட்டான் என்பதற்காக  ஒரு பெண் மாய்ந்து மாய்ந்து உழைத்து அன்பை பெற முயற்சிப்பது மடத்தனமாக தோன்றுகிறது. இது , புறக்கணிப்பவனுக்கே இத்தனை அர்ப்பணிப்பை பெண் செய்ய வேண்டுமென்றால், புறக்கணிக்காமல் அரவணைப்பவனுக்கு எத்தனை அர்ப்பணிப்பை பெண் செய்ய வேண்டும் என்கிற கேள்வியில் வந்து நிற்கிறது.

என்னைப்பொறுத்தவரை, தகுதியில்லாத ஆணிடம் காட்டப்படும் அன்பும், அரவணைப்பும் மோசமான சமூக முன்னுதாரணங்கள். தகுதியில்லாத ஆணுக்கு ஒரு பெண் அன்பை வாரி வழங்கினால், பெண்ணின் அன்பு கிடைக்க தகுதி தேவையில்லை என்றல்லவா அர்த்தமாகிறது. பொறியியல் படிக்கும் பெண்ணிடம் தறுதலை காதலை சொல்வது,  ஒப்புக்கொள்ளாவிட்டால் முகத்தில் ஆசிட் வீசுவது அல்லது கொல்வது போன்ற பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு இதுவே அடிப்படை என்றே நினைக்கிறேன்.

நிர்பயா கேஸை எடுத்துக்கொள்ளலாம். மருத்துவ மாணவி நிர்பயா. ஆனால், அந்த இரவில் பேருந்தில் அவளை வன்புணர்ந்த ராம்சிங் ஒரு பேருந்து ஓட்டுனர். படித்த பெண்ணுக்கென்று ஒரு மனம், அதில் விருப்பங்கள், அபிலாஷைகள் இருக்கும், அதை மதிக்க வேண்டும் என்கிற எண்ணம் ராம் சிங்குக்கு வந்ததாக தெரியவில்லை. ஏன்? இது போன்ற தகுதியே இல்லாத ஆண்களுக்கு திருமண சந்தையில் ஒழுக்கத்தில் சிறந்த பெண்கள் ஜாதி, ஜாதகம் என்கிற பெயரால் கிடைக்கிறார்கள். அதுவே தகுதியற்ற ஆண்களுக்கு தங்களை தகுதியான பெண்களுக்கு பொறுத்தமானவர்களாக பார்க்க வைக்கிறது என்பது என் வாதம். இதன் அடிப்படையில் தான் பெண்களுக்கெதிரான வன்முறைகள் நிகழ்கின்றன என்றே நான் நினைக்கிறேன்.

பெண் எப்போதெல்லாம் வன்கொடுமை செய்யப்படுகிறாளோ அப்போதெல்லாம் “ஆண்களுக்கு பெண்களை மதித்து நடக்க கற்றுக்கொடுக்க வேண்டும்” என்று பேசப்படுவதை , புரிந்துகொள்ளாதவர்களின் புலம்பல்களாகத்தான் என்னால் பார்க்க முடிகிறது. பிரச்சனை அது அல்ல. பிரச்சனை , தகுதியற்ற ஆணுக்கு கிடைக்கும் ஒரு தகுதியான பெண் தான். அதை ஜாதியின் பெயரால், ஜாதகத்தின் பெயரால், சொத்துகளின் பெயரால் இந்த சமூகம் மென்மேலும் செய்துகொண்டு தான் இருக்கிறது. அது நில்லாதவரை பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறைந்துவிடும் என்று எண்ணுவதற்கில்லை.

இந்த பின்னணியில் எனக்கு இளா என்கிற கதாபாத்திரத்தை பிடிக்கவில்லை. தகுதியே இல்லாத ஆணுக்கு அவர் கற்பையும், உழைப்பையும், அன்பையும், காதலையும் வாரி வழங்குகிறார். ஆனால் இர்ஃபான் கான் “உன்னுடன் நானும் பூட்டான் வரட்டுமா?” என்று கேட்கையில், “உன் பெயர் கூட தெரியாது.. எப்படி வருவேன்?” என்கிறாள் இளா.  இதற்குள் அவர்களுக்குள் மேலதிக புரிதல்களுடைய கடிதப்போக்குவரத்துகள் நடந்துவிடுகின்றன என்று தான் காட்சிகளில் காட்டுகிறார்கள். அதாவது பரிச்சயம் இல்லையாம். அதனால் வரமாட்டாராம்.

இதற்கு என்ன பொருள்?  கணவன்  தகுதியற்றவன் என்றாலும் காதலை தருவேன், ஆனால் பரிச்சயம் அற்றவன் தகுதியுள்ளவன் என்றால் கிடையாது என்பதா?   அப்படியானால் தகுதி என்பது தேவையில்லையா? அப்படியானால்  “பெண்ணுக்கு ஒரு மனம் இருக்கிறது..அதையும் பாருங்கள்” என்கிற கோஷமெல்லாம் சொல்லப்படுகையில் அதே மனம் ஆணுக்கும் இருக்குமல்லவா?  ஆணுக்கு ஒரு நியாயம், பெண்ணுக்கு ஒரு நியாயமா?

அதே நேரம் இர்ஃபான் இளாவை சந்திக்க தயங்குகிறான். தனது முதுமை தடைக்கல்லாக இருக்குமோ என்று பயம் கொள்கிறான்.  தன்னை பார்த்துவிட்டால் இளாவுக்கு தன்னை பிடிக்காமல் போய்விடுமோ என்று அஞ்சுகிறான்.   இளாவின் கணவன் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பதை இளா மூலமாக தெரிய வந்துவிட்ட பிறகு  திருமணம் செய்யும் தனது உதவியாளனிடம் “மனைவியை சரியாக பார்த்துக்கொள்” என்கிறான்.

ஏனெனில் ஓய்வு பெற இருக்கும் வயதில் இருக்கும் இர்ஃபானுக்கு மனைவி என்கிற பெண்ணை கணவன் சரியாக பார்த்துக்கொண்டால், மனைவி என்கிற பெண்ணுக்கு இன்னொரு ஆடவனை தேட வேண்டிய தேவைகள் இல்லை என்பது புரிந்தே இருக்கிறது.  ஆண்களை விட எல்லா பெண்களிடத்திலும் ஒரு தார்மீக நேர்மை இருக்கிறது.  ஒவ்வொரு பெண்ணும் தன் மனசாட்சிக்குட்பட்டு நடப்பவளாகத்தான் இருக்கிறாள். இந்த இயல்பு எல்லா பெண்களிடத்தும் பொதுவான குணம். ஒரு பெண் எவ்வித காரணமும் இல்லாமல் கணவன் அல்லாத இன்னொரு ஆடவனை நெருங்க அணுமதிப்பதில்லை. காரணம், திருமண உறவில் பெண்ணுக்கு இருக்கும் தார்மீக நேர்மை, நியாயப்பாடு.  அந்த நியாயம் ஒன்றே பெண்ணுக்கான கை விலங்கு. ஆணுலகம் அதை புரிந்துகொள்வதில்லை.  அதனாலேயே திருமணமாகும் தனது உதவியாளனிடம் “மனைவியை சரியாக பார்த்துக்கொள்” என்கிறான்.

அன்பு நாடி வரும் பெண்ணை சந்திக்காமல் திருப்பி அனுப்பும் இடத்தில் இர்ஃபானை ரசிக்க முடியவில்லை.

கணவனின் காதல் தன்னிடம் இல்லை என்பதை புரிந்துகொள்ளும் ஒவ்வொரு பெண்ணும் பரிதாபத்துக்குரியவளே.  அது ஒரு பேதைத்தனம். கிட்டத்தட்ட திருவிழாவில் தொலைந்து போன குழந்தையின் நிலைப்பாடு.
அன்பு கிடைக்காமல், அது கிடைக்கும் என்று நம்பி வரும் இடத்திலும் ஏமாற்றம் என்பது ஒரு பெண்ணை எப்படி வேண்டுமானாலும் செலுத்திவிடலாம். கிட்டத்தட்ட கொய்த பூவை, எதற்கு கொய்யப்பட்டதோ அதற்கு பயன்படுத்த முடியாது போகையில், அழகான பூவை நசுக்கி கசக்கி தூக்கி எறிந்துவிடத்தோன்றும் வெறுப்புணர்வை போன்றது அது.  எது பாதுகாத்து வைக்கப்பட்டதோ அதை கிழித்தெரியத்தூண்டும் வெறுப்புணர்வு போன்றது அது. இந்த நிலைப்பாடு வருகையில் பெண்களால் பெரிதும் பாதுகாக்கப்படுவது அவளது கற்புணர்வு தான் என்பதை நாம் இங்கே மனதில் இருத்திக்கொள்ள வேண்டும். ஒரு மோசமான சூழலில் அவள் தற்கொலைக்கோ அல்லது தவறான தேர்வில் சிக்கிக்கொள்ளவோ கூட நடந்துவிடலாம்.  அப்படி நம்பி வரும் இடத்தில் அவளது எதிர்பார்ப்புகளுக்கு ஒரு பொய்யான வடிகாலாவது கிடைப்பதே கிட்டத்தட்ட ஒரு முதலுதவி போன்றது.

ஆனால் இர்ஃபான் அங்கே மிகவும் மூர்க்கமாக அவளை நடத்துகிறான். சந்திக்காமல் திருப்பி அனுப்புகிறான். அதுவும் யாரிடம்? அவளை புறக்கணிக்கும் அவளது கணவனிடமே. கிட்டத்தட்ட அவளது பெண்மையை அவமதித்த, மரியாதைக்குறைவாக நடத்தியதாகவே அர்த்தப்படும் அது ஒரு மோசமான எதிர்வினை.  அதற்கு பதிலாக ஒரு முறை சந்தித்திருக்கலாம். சில காலம் அவர்களது கடிதப்போக்குவரத்தை தொடர்ந்திருக்கலாம்.  அவளுக்கும் அவளது கணவனுக்குமான நல்லுறவு ஏற்படும் வரை அவளுக்கு தேவையான அன்பை கடிதம் மூலமாகவே அவன் வடிகாலாக சிறிது காலம் தந்திருக்கலாம். காதல் என்பதும், அன்பின் வெளிப்பாடு என்பதும் உடல் சார்ந்ததாகவே எப்போதும் இருக்க வேண்டும் என்றில்லை. இன்னும் சொல்லப்போனால் அன்பின் வெளிப்பாடு மனம் சார்ந்ததாக இருப்பதில் தான் அதிகமான பூரணத்துவமும் , முழுமையும் , உச்சக்கட்ட பேரின்பமும் வெளிப்படுகிறது.

அந்த வாய்ப்பை மிகவும் மூர்க்கமாக நிராகரித்தது, அவனுக்குள் இருக்கும் தன்னம்பிக்கையின்மையை காட்டுவதாகவே நான் எடுத்துக்கொள்கிறேன். ஒரு பெண்ணாக அவள் தானாகவே முன்வந்து, வீட்டில் ஆயிரத்தெட்டு பொய்கள் சொல்லி நாடகமாடி அவனை சந்திக்க நேரமொதுக்கி காத்திருந்தால் , அவளது காத்திருப்பை கொச்சை செய்யும் விதமாக இர்ஃபான் சந்திக்க வராமல் இருப்பது எரிச்சலூட்டுகிறது. அது ஏதோ, அவன் தன்னை நியாயவானாக காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக அவனாகவே நினைத்துக்கொள்வது போன்ற பிரமையை தந்துவிடுகிறது. அது ரசிக்கும்படியாக இல்லை.

உண்மையில் தொடுதல் இல்லாத நட்பு பெண்ணுடன் சாத்தியமே எனும்போது அவளை சந்திப்பதை தவிர்த்திருக்க வேண்டியில்லை. இளாவை சந்தித்திருக்கலாம். அவள் ஏங்கும் அன்பை பரஸ்பர நட்பிலும், கடிதங்களிலும் தற்காலிகமாக, அவளுக்கு அவளது கணவனுடனான கருத்து வேறுபாடு களையப்படும் வரை இர்ஃபானே தருவதாக படத்தின் காட்சிகள் அமைந்திருந்தால் படத்தை நான் இன்னும் அதிகமாக ரசித்திருப்பேன் என்றே நினைக்கிறேன்.

தன்னைத்தானே நியாயவானாக நினைத்துக்கொண்டு, தன்னைத்தானே ஏமாற்றிக்கொண்டு நாசிக் ஓட நினைக்கும் இர்ஃபான் பிற்பாடு இளாவைத்தேடி மீண்டும் தனது பழைய வீட்டுக்கே திரும்பி வரும் காட்சிகள், தனது பைத்தியக்கார  முடிவை மறுபரிசீலனை செய்து திரும்பி வருவதாக எடுத்துக்கொள்ளலாம்.

இளா மீண்டும் தன் கணவனிடமே , அதுவும் திருந்தியிராத தன் கணவனிடமே செல்வது சரியென தோன்றவில்லை.. தவறு செய்யும் கணவனின் முகத்திரையை கிழிக்காமல் அவனிடமே சென்று சேர்வதன் வாயிலாக, அவன் குறைகளை மறைத்து அவனை நல்லவனாக சமூகத்தின் முன் அடையாளப்படுத்துவது ஒரு மோசமான சமூக முன்னுதாரணம் என்றே நினைக்கிறென். ஆனால், இளா வேலைக்கு செல்வதில்லை. சுய சம்பாத்தியம் இல்லை. ஒரு பெண் குழந்தை வேறு. நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கை முறையில், விவாகரத்துக்கு பிறகான வாழ்க்கைக்கு பயந்து கிடைத்ததை ஏற்றுக்கொண்டாரோ என்று நினைக்க வைக்கிறது. அது கிட்டத்தட்ட வாழ்க்கை பிச்சை எடுப்பது போன்றது. அதை செய்வது ஒரு பெண்ணுக்கு மிகப்பெரும்  இழுக்காகவே இருக்கும். இளாவின் உளவியல் புரிந்துகொள்ள முடிகிறது.

எல்லா பிரச்சனைகளும் ஆண் பெண் தேர்விலேயே இறுதியாக வந்து நிற்கிறது. ஜாதி ஜாதகம், போன்றவைகளை தவிர்த்து பொறுத்தமான தகுதியான இருவரை பிணைக்கையில் இது போன்ற சிக்கல்கள் எழாதுதான் . ஆனால் அதற்கு நாம் தயாராக இருக்கிறோமா என்றால் பதில்கள் ஏமாற்றமடையவைப்பதாகத்தான் இருக்கிறது, நமது எல்லா பிரச்சனைகளும் அந்த இடத்திலிருந்தே துவங்குகின்றன. இதுதான்  இர்ஃபான், இளா போன்றவர்களின் பிரச்சனைகளுக்கான தீர்வுகளை முன்மொழிய “உங்கள் எண் என்ன?” என்கிற நாவலை கணித நாவலாக எழுத வைத்தது. இந்த படத்தை பார்க்கையில் “உங்கள் எண் என்ன?” நாவல் ஒரு உலகத்தரமான பார்வையைத்தான் முன்வைக்கிறது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகிறது.

– ராம்ப்ரசாத்

Series Navigationஎங்கிருந்தோ வந்தான்இளைய தலைமுறை எழுத்தாளர்களுக்கும் அவர்கள் நண்பர்களுக்கும்
author

ராம்ப்ரசாத்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *