அட கல்யாணமே !

author
3
0 minutes, 11 seconds Read
This entry is part 10 of 14 in the series 5 மார்ச் 2017

      சோம.அழகு      

 

திருமணம் என்பது இரு மனங்களின் இணைப்பு. கூடுதலாக உறவினர்களும் நண்பர்களும் கூடி மகிழ்வதற்கான நல்ல வாய்ப்பு என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை. ஆனால் அதை ஆடம்பரமாக்கி பண பலத்தையும் ஆள் பலத்தையும் வெட்கமின்றி வெளிக்காட்டும் ஒரு தளமாக மாற்றும்போது, அந்த எதிர்பார்ப்பு இல்லாதோரிடத்தும் வைக்கப்படுகிறது. இந்நிகழ்வு சமூகத்தை பொருள் இருப்போருக்கே உரியதாக மாற்றுகிறது. அதற்கான கண்டனத்தை இப்படியும் பதிவு செய்யலாமே !

 

 • பெண் பார்க்கும் படலம் : இதுதான் முதல் படி என்பதால் நிறைய பேர் தேவையில்லை. 25 பேர் மட்டும் (!) போய் பெண்ணைப் பார்த்து வரலாம். ஒரே தடவையாகச் சென்றாலும் சரி………இல்லையேல் “மணமகள் வீட்டார் ஜந்துக்கள் இல்லை…… மனிதர்கள்” என்று பெரிய மனதுடன் இரக்கப்பட்டு தவணை முறையில் சென்றாலும் சரிதான்.

 

 • ‘திருமணத்திற்கான ஒத்திகையே நிச்சயதார்த்தம் என்பவாம்’ என்று ஒரு காலத்தில் தொல்காப்பியரே சொல்லியிருக்கிறார் போலும்(!). எனவே, நிச்சயதார்த்தத்தில் தாலி கட்டுவது தவிர மற்ற சடங்கு சம்பிரதாயங்கள், எப்படி/எவ்வளவு சிரிப்பது? எப்படி நின்று மொய்/பரிசுப்பொருள் வாங்குவது? எப்படி புகைப்படத்திற்கு நளினமாக போஸ் கொடுப்பது? என அனைத்தையும் மணமக்கள் பின்னணி இசையோடு ஒத்திகை பார்த்துக் கொள்ள வேண்டும்.

 

 • ‘ஷாப்பிங்’ என்னும் உன்னத மரபை நான் இங்கு குறிப்பிடவில்லை எனில், முப்பத்து முக்கோடி தேவர்களின் சினத்திற்கு ஆளாகி நரகத்தில் தள்ளப்படுவேன். குறைந்தது 15 பேரோடு தமது மற்றும் பக்கத்து நகரின் அனைத்து ஜவுளி, நகைக்கடைகளை அலசி ஆராய்ந்து அல்லோல கல்லோலப் படுத்த வேண்டும்.

 

 • முதல் சுற்றிலேயே எதையாவது வாங்கினால் அடுத்தடுத்த கடைகளுக்குச் செல்கையில் நெஞ்சு வெடித்துவிடும் என்பது நியூட்டனின் நான்காம் விதி. 7ம் கடையில் கண்ட நிறம், 18ம் கடையில் பூ டிசைன், 27ம் கடையில் கண்ட ஆடை வடிவமைப்பு – இவை அனைத்தும் சேர்ந்த வாக்கில் 42ம் கடையில் கிடைக்க வாய்ப்பு உண்டு. பொறுமை மிக முக்கியம் அமைச்சரே!

 

 • சொத்துக்கள் அனைத்தையும் இழந்து கல்யாணத்திற்கு அடுத்த நாள் இரந்து வாழும் நிலை வந்தாலும் பரவாயில்லை. கல்யாணத்தன்று ஒவ்வொருவரின் மனதிலும், தான் அம்பானியின் ஒன்று விட்ட தம்பி/தங்கை என்ற எண்ணத்தை ஆழ்மனதில் பதியவிட்டு அதற்கேற்றாற் போல் நடை உடை பாவனை ஆகியவற்றை அமைத்துக் கொள்ளுதல் நன்று. ஆங்……..அப்புறம், இந்திய திருமணச் சட்டம் – பிரிவு 420(1001)ன் படி மணமகளின் சேலை 50,000 ரூபாய்க்கும் குறையாமல் இருத்தல் வேண்டும்.

 

 • ‘உற்றார் உறவினர்களைக் காணவும் மகிழ்ந்திருக்கவும்’ என்னும் ஒற்றைக் காரணத்தைப் பிடித்துக் கொண்டு தைரியமாக நிச்சயதார்த்தத்திற்கு 500 பேரையும் திருமணத்திற்கு 1000 பேரையும் அழைக்கலாம். (“ஒரு பெண்ணும் ஆணும் சேர்ந்து வாழ்க்கையைத் தொடங்க சாட்சிக்கு மணமக்களின் பெற்றோர், ஆச்சி-தாத்தா, உடன்பிறந்தோர் போதாதா?” என கேட்பவர்களுக்கு ட்ரம்பிடம் சொல்லி விசா வழங்க மறுக்கச் சொல்லலாம்). மணமகனி/ளின் தாய் வழி மாமாவின் மைத்துனரின் மாமனாரின் தங்கையின் மருமகளின் ஓர்ப்படியின் சித்தியின் ஒன்று விட்ட தம்பியையும் மறக்காமல் அழைக்க வேண்டும். இத்தனைக்குப் பிறகும், எண்ணிக்கை  தேறவில்லையெனில், முன் பின் தெரியாதவர், அதிக பழக்கமில்லாதவர் என கண்ணில் காண்போருக்கெல்லாம் அழைப்பிதழ்கள் தந்தாவது இலக்கை அடைதல் முக்கியம்.

 

 • உறவினர்களுக்குத் திருமணப் பத்திரிக்கையோ தாம்பூலப்பையோ கொடுக்கையில் அவர்கள் வீட்டில் புழங்குவதற்கான ஏதாவது ஒரு பண்ட பாத்திரம் (அண்டாவோ குண்டாவோ) சேர்த்துக் கொடுக்கும் தற்கால உயரிய நாகரிகத்தை மறந்து விடாதீர்கள். வழக்கமாகக் கொடுக்கும் எலுமிச்சம்பழத்தை திருமணம் முடிந்த பிறகு திருமண வீட்டார் உச்சந்தலையில் தேய்த்துக்கொள்ள பத்திரப்படுத்திக் கொண்டால் நல்லது.

 

 • மிகப்பெரிய்ய்ய்ய மண்டபம், மணமக்களின் ஆடை வடிவமைப்பிற்கு மணீஷ் மல்ஹோத்ரா, ஆடைக்கேற்ற மேடை அலங்காரத்திற்கு (Backdrop) ‘தோட்டா’ தரணி, நளவிருந்துக்கு தாமு (சற்று வசதி குறைந்தவர்களுக்கு இவர்களின் ஒன்றுவிட்ட தம்பிமார்கள் கிடைக்காமலா போவார்கள்?) என ரணகளப்படுத்துவதற்கு என்ன போலிக் காரணம் சொல்லலாம்?…..ஆங்! புடிச்சுட்டேன்….. ‘திருமணம் என்பது வாழ்க்கையில் ஒரே ஒரு முறை நடைபெறுவது. அது இஸ்பெசலாக இருக்க வேண்டும் இல்லையா?’

 

 • கல்யாண மண்டபம், சாப்பாடு என எல்லாவற்றிற்குமான ஏற்பாடு 3 மாதங்களுக்கு முன்பே முடிந்திருக்குமாகையால் பெற்றோர்கள் வேலை வெட்டி இல்லாமல் நிம்மதியாக இருக்கக்கூடும். ‘கல்யாண வேலை’ என்றால் என்ன என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும் – அஃதாவது உறவினர்களுக்குப் பணிவிடை செய்வது. திருமணத்திற்கு ஒரு வாரம் முன்பு மணமக்கள் வீட்டில் பதற்றம் தொற்றத் தொடங்குகிறதோ இல்லையோ, உறவினர்கள் மணமக்கள் வீடுகளுக்குப் போவதும் வருவதுமாக பதற்றத்தைப் பற்ற வைக்கும் நற்பணியில் ஈடுபடுதல் வீடுபேறு அடைய வழிவகுக்கும்.

 

 • பொழுது போகவில்லை என்றால் மணமகளைப் பிடித்து வைத்து, ‘புகுந்த வீட்டில் அனுசரித்துப் போவது எப்படி?’, ‘மாமனார், மாமியாரைப் பார்த்துக் கொள்வது எப்படி?’, ‘வாழ்க்கை என்ற சவாலைச் சந்திப்பது எப்படி?’ என்று கண்ட கண்ட புத்தகங்களில் படித்ததையெல்லாம் நினைவிற்குக் கொணர்ந்து ‘நாங்களும் வாசிப்போம்ல’ எனப் பீற்றிக்கொள்ளலாம்.

 

 • 10 மணிக்குத் திருமணம் என்றால் ‘ஏன்?’ ‘எதற்கு?’ என்றெல்லாம் யோசிக்காமல் அனைவரும் 3 மணிக்கே துயிலெழுந்து, நீராடி, தயாராகி, இஞ்சி தின்ற எதையோ போல் உட்கார்ந்திருக்க வேண்டும்.

 

 • பட்டுப்புடவை சரசரக்க ‘ஜொலிக்குதே……….ஜொலி ஜொலிக்குதே’ என்று புடைவைக்கும் நகைக்கும் சேர்த்து ஒரே விளம்பரமாக நடிக்கக் கிளம்பும் இந்தக் கூட்டத்தை 2 அல்லது 3 வேன்கள் அள்ளிக் கொண்டுபோய் மண்டபத்தின் வாசலில் கொட்டும்.

 

 • ‘உர்ர்ர்ர்………’ என்று உறுமியபடி ஓர் இயந்திரம் பன்னீரைக் கொப்பளிக்க, பொம்மை ஒன்று கைகூப்பி வரவேற்கும். இதற்கு மேல் என்ன பெரிசா எதிர்ப்பார்க்குறீங்க?

 

 • மணமக்கள் அவரவர் அறைக்குச் சென்று முதற்கட்ட சடங்குகளுக்காக தயாராகி வந்த பின், புரோகிதர் சமஸ்கிருதத்தில் (ஆமாங்க ! தமிழ்க் கல்யாணத்துலதான்…) தனது புலமையை (!) நிரூபிக்கப் போராடிக் கொண்டிருப்பார். மணமக்கள் தயாராகி வந்த பின், “சுக்லாம் ப்ரதம் ப்ராப்ளம் ளம்….குட்டிகரணம்” என்று திருமந்திரம்(!) ஓதப்பட்டுக் கொண்டிருக்கும்.

 

 • இத்தருணத்தில்தான் இருவீட்டுப் பெண்களுக்கும் உச்சி முதல் உள்ளங்கால் வரை மின்சாரம் பாய்ந்து உதறலெடுக்க ஆரம்பிக்கும். மணமேடையில் மணமக்களைச் சுற்றி நிற்க இடம்வேண்டி களமாடத் தொடங்குவார்கள். திருமணச் சடங்குகள் அனைத்தும் பெண்களின் மூளையில் இருந்து உடனுக்குடன் அழிந்து விடுவதால், நாடி நரம்புகளையும் செல்களையும் உயிர்ப்போடு வைக்கத் தேவையான அக்காட்சிகளை இயன்ற வரை (அது 100வது முறை எனினும்) எல்லாத் திருமணங்களிலும் கூடி நின்று குரளி வித்தையைப் பார்ப்பது போல் கவனித்தல் நலம்.

 

 • “அதே ‘பிலக்ஷ்யாம்…..புதுக்ஷ்யாம்……துஜுக்ஷ்யாம்’ மந்திரங்கள், அதே அக்னிக்குண்டம், அதே புகை, அதே கண்ணெரிச்சல், அதே நசுநசு கூட்டம், அதே தாலி………. முசரக்கட்டைகள் மட்டும்தானே வேறு” என்றெல்லாம் எக்குத்தப்பாக சலித்துக் கொண்டீர்களேயானால் சாமி உங்கள் கண்னைக் குத்திவிடும்.

 

 • ‘எப்போது தாலி கட்டப்படுகிறது?’ என்பது புரோகிதரையும் மணமேடையைச் சுற்றி நிற்கும் ஆர்வக்கோளாறுகளையும் தவிர யாருக்கும் தெரியாது. எனவே, அத்தருணத்தில் ஒலிக்கப்படும் மங்கள இசையை வைத்து, மறைத்து நிற்கும் அத்தனை கிழத்திகளின் மீதும் மலர் தூவி ஆசீர்வாதம் செய்து மன நிம்மதி அடைந்து கொள்ளலாம்.

 

 • ‘தாலி கட்டும் படலம்’ முடிந்த பின்தான் திருமண வீடே களைகட்ட ஆரம்பிக்கும். மணப்பெண்ணின் உடை, நகை, சிகை, ஒப்பனை என எல்லாவற்றையும் நுணுக்கமாக அலசி ஆராய்ந்து விமர்சனத்திற்கு உள்ளாக்கும் தருணமிது. ‘இந்திய வழக்கத்தின் படி எல்லாமே கொஞ்சம் ஜாஸ்தியாகத்தான் இருக்கிறது. எனவே இவர்கள் சட்டத்திற்குக் கட்டுப்பட்டவர்களே! தேசத் துரோகிகள் அல்ல’ என்று இந்தியப் புலனாய்வுத் துறைக்கு நற்சான்றிதழ் அனுப்பிக் கொண்டிருப்பார்கள்……..உறவினர்கள் வேடத்தில் அமர்ந்திருக்கும் ஒற்றர்கள்.

 

 • வெகு விரைவில் பேரிளம் பெண்களாகவிருக்கும் கிழத்திகள்,  இளம்பெண் யாரேனும் கண்ணில் பட்டால் அவளைப் பிடித்து வைத்து, “ அப்புறம்? அடுத்து நீதானே? கேட்டுட்டே இருக்கேன், சொல்லவே மாட்டேங்குற…..எப்போதான் கல்யாணம் பண்ணி settle ஆகப்போற?” என்று (பாஸ் என்ற பாஸ்கரனில் வரும் நயன்தாராவின் அப்பாவைப் போல்) அக்கறையாக (!) விசாரிக்கலாம்.

 

 • இப்போது ‘மொய்/பரிசுப் பொருட்கள் படலம்’. 500 கி.மீ. தூரத்துச் சொந்தங்களும் தமது இருப்பைப் பதிவு செய்துவிட்டுப் போகும் இடம் இதுதான். ‘யார்? என்ன?’ என்றெல்லாம் தெரியாமல் எல்லோரிடமும் சிரித்துப் பேசி சர்க்கஸை மிக அழகாக முன்னின்று நடத்திக் கொண்டிருப்பார்கள் மணமக்கள்.

 

 • தமிழ்த் திருமணங்கள் என்றாலும் கூட இந்திய இறையாண்மையைப் போற்றிப் பாதுகாக்கும் விதத்தில் வட இந்தியச் சடங்குகளான ‘மெஹந்தி’, ‘சங்கீத்’ போன்றவற்றையும் (செயற்கையாகத் தோன்றினாலும் கூட) சேர்த்துக் கொள்ள வேண்டும்.

 

 • இன்றைய திருமணங்களின் இரண்டு முக்கிய சம்பிரதாயங்கள் :

‘…..கண்ணும் எழுதேம் கரப்பாக் கறிந்து’ என்பதையெல்லாம் சற்று மறந்து விட்டு மணப்பெண்ணின் முகத்தை ஒப்பனையின் உதவியுடன் அகழ்வாராய்ச்சிக்குத் தயார் செய்தல் வேண்டும். குறைந்தபட்சம் ‘அவதார்’ பட ‘நவி’ போலவாவது ஆக்கி விட வேண்டும். இதில்  ஒப்பனைக்காரர்களையும் சும்மா சொல்லக் கூடாது. ஒப்பனைக்குத் தேவையான அத்தனை ‘ஆயுதங்களையும்’ கையில் ஏந்தி கொல்கத்தா காளியுடன் போட்டி போடும் இவர்கள், ‘வாங்கும் சம்பளத்திற்கு சற்றும் குறைந்ததல்ல தமது ஒப்பனையிடும் திறமை’ என மணப்பெண்ணின் முகத்தில் தமது ‘கைவண்ணத்தை’ காட்டுவார்கள்.

 

நமது அம்மா-அப்பா காலங்களில் போர்வைக்குள் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை தற்காலத்தில் ‘Wedding Photography’ என்னும் பெயரில் 360 கோணங்களிலும் எடுப்பது தனிச்சிறப்பு. கார்ப்பெட்டோடு ஒன்றி தரையில் படுப்பது, நாற்காலியில் ஒற்றைக் காலில் 128 டிகிரி கோணத்தில் வளைந்து நிற்பது – புகைப்படம் எடுக்கும் இவர்களது ‘நுண்ணறிவில்’ சுளுக்கு மற்றும் தசைப்பிடிப்பைப் போக்குவதற்கான மருத்துவ அறிவும் கலந்திருப்பது கூடுதல் அம்சம். போதாக்குறைக்கு, “கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி” (Helicam) , இன்னிசை ரீங்காரத்துடன் மண்டபத்தில் அமர்ந்திருக்கும் வழுக்கைத்தலைகளின் கணக்கெடுப்பை நடத்திக் கொண்டிருக்கும்.

 

 • இப்போது மணமக்கள் காதல் ரசம், சாம்பார், வத்தக்குழம்பு சொட்ட ‘போஸ் கொடுக்கும் வைபவம்’ நடைபெறும். இப்பிரிவில் குறைந்த பட்சம் 50 புகைப்படங்களாவது இருக்கும். காணக் கிடைக்க வேண்டுமே இக்காட்சிகளெல்லாம் ! ‘ஷாருக்-கஜோல்’ எல்லாம் இவர்களிடம் பிச்சை எடுக்கத்தான் வேண்டும். டாடீ! எனக்கு ஒரு டவுட்டு……….இந்தப் புகைப்படங்களையெல்லாம் எப்படி எல்லோரிடமும் காண்பிப்பார்கள்? பார்ப்பவர்கள் ஒவ்வொரு புகைப்படத்திற்கும் எவ்வாறு எதிர்வினை ஆற்றிப் புகழ்வார்கள்? புகைப்படக் கலைஞர்களை திருமணம் முடிந்தவுடன் ‘அம்போ’வென்று கழற்றி விடாமல் தமது தேனிலவிற்கும் அழைத்துச் சென்று விழாவைச் சிறப்பிக்கும் தாராள மனதுக்காரர்களும் இப்பூவுலகில் உண்டு ! இவர்களைப் பார்த்துக் கத்துக்கோங்க சார்……!

 

 • ‘சூடானில் பஞ்சம்…. சோமாலியாவில் பஞ்சம்’ போன்ற செய்திகளை அம்னீசியாவின் பொறுப்பில் விட்டு, இலையோ தட்டோ இடம்கொள்ளாத அளவிற்கு எண்ணிலடங்கா பதார்த்தங்களைப் படைத்தல் பாராட்டுக்குரியது. மதிய விருந்து எவ்வளவுதான் பிரமாதமாக இருந்தாலும், ‘சோத்த பதிமூன்றரை செகண்டுக்கு முன்னாடி எடுத்திருக்கணும்….. கொழஞ்சு போச்சு’, ‘அவியல்ல பீட்ரூட்டையே காணோம்’, ‘சொதியில எவனாவது சீரகத்த தாளிச்சு போடுவானா? ’, ‘மோர் வெள்ளையா இருக்கு……சாம்பார் மஞ்சளா இருக்கு’ என கார்டன் ராம்சே உறவினர் போல குறைகளை வலை வீசித் தேட வேண்டும்.

 

 • எனவே ஆடம்பரம், தண்டச் செலவு, வெட்டிப் பெருமை போன்ற கணைகளையெல்லாம் வீசும் அறிவிலிகளைக் கண்டு கொள்ளத் தேவையில்லை (என்னவோ இத்தனை நாள் கண்டுகிட்ட மாதிரி!). திருமணச் செலவைக் கட்டுப்படுத்த பாராளுமன்றத்தில் புதியதாக பரிசீலனைக்கு வைக்கப்பட்டுள்ள சட்ட முன்வரைவை அறிந்து மனச் சோர்வடைந்து விடாதீர்கள். நாம ஜாம் ஜாம்னு போட்டுத் தாக்குவோம். வாங்க!!!!
Series Navigationதொடுவானம் 160. பட்டமளிப்பு விழாகுடைவிரித்தல்
author

Similar Posts

3 Comments

 1. Avatar
  அன்னம் says:

  திருமணங்கள் இப்போது இப்படித்தான் நடக்கின்றன. இணையதளம் உள்ளிட்ட தொழில்நுட்ப சாதனைகள், ஆடம்பரங்களையும், அலட்டல்களையும் மாநில எல்லைகளை உடைத்தெறிந்து ஊடுருவியுள்ளன.
  “தற்காலத்தில் ‘Wedding Photography’ என்னும் பெயரில் 360 கோணங்களிலும் எடுப்பது தனிச்சிறப்பு.” முற்றிலும் உண்மை.
  உடையிலிருந்து உள்ளாடை வரை, மினி-சினிமா ஷூட்டிங் (இதில் pre-shootting, post-shooting என்ற தொசுக்குகள் பல திரைப்பட இயக்குனர்களையே விஞ்சிவிடும். தயாரிப்பாளர் தலையில் துண்டுதான்) என்று ஒவ்வொரு மாநில ஸ்பெஷல்-effect வேறு பயமுறுத்தும்.
  மிகவும் ரசித்தது: “போதாக்குறைக்கு, “கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி” (Helicam) , இன்னிசை ரீங்காரத்துடன் மண்டபத்தில் அமர்ந்திருக்கும் வழுக்கைத்தலைகளின் கணக்கெடுப்பை நடத்திக் கொண்டிருக்கும்.”

  Helicam-க்கு தும்பி என்னும் அழகிய வண்டை உவமை சொன்னது அருமை. அதைவிட அருமை வழவழப்பாக மின்னும் தும்பி என்னும் அழகிய வண்டு, தன்னினும் அழகாய் பளபள என்று மின்னும் வழுக்கை மண்டைகளிடம் காதல் கொண்டு கணக்கெடுப்பு நடத்துவது அழகோ அழகு! அழகிய பளபளப்பான சிறகுகளைக் கொண்ட தும்பி இனத்தைச் சேர்ந்த வண்டே! விருப்பு-வெறுப்பில்லாமல் கூறு! என் வீட்டுக்காரரின் வழுக்கையைக் காட்டிலும் பளபளப்பான வழுக்கையை இவ்வுலகில் வேறு எங்கும் கண்டதுண்டோ!” என்று பேரிளம் பெண்ணாகிய ஒவ்வொரு மனைவியும் இனி helicam-மிடம் கேள்வி கேட்கலாம். கவிதை எழுத இயலாத மனைவிகளுக்காக இதோ என் கவிதை உபயம்:
  கொங்குதேர் வாழ்க்கை!(வழுக்கை?) அஞ்சிறைத் தும்பி(helicom)!
  காமம் செப்பாது கண்டது மொழிமோ!
  பயிலியது கெழீஇய நட்பின் பளபளப்பான
  வழுக்கை தலைத் தலைவன் சொட்டையின்
  பளபளப் புமுளதோ நீ அறியும் வழுக்கையே! – வழுக்கையார் மனைவி.

  இதற்காக வரிவளை மானி பாண்டிமாதேவி மங்கையர்க்கரசி விரும்பினால் எனக்கு பொற்கிழி வழங்கலாம். ஏற்கச் சித்தமாய் உள்ளேன். (தருமி(நாகேஷ்) மன்னிப்பாராக! இக்கவிதையை இரவல் தர விருப்பமில்லை! மகாராணி அவையில் உமக்காக எந்த ஒரு நக்கீரியுடனும் குடுமிச் சண்டைக்கு நான் தயாரில்லை! நீர் சொர்க்கத்திலிருந்து வரவேண்டாம்!)
  “:மணமக்கள் தயாராகி வந்த பின், “சுக்லாம் ப்ரதம் ப்ராப்ளம் ளம்….குட்டிகரணம்” என்று திருமந்திரம்(!) ஓதப்பட்டுக் கொண்டிருக்கும்.” என்ற வரிகள் தமிழ்க் கல்யாண முறைகளின் ஒட்டாமைக்கு எடுத்துக்காட்டு.
  Nice Satire!

  திருமதி.அன்னம்

 2. Avatar
  Moorthy VN says:

  சிரிப்பதற்கும் சிந்திப்பதற்கும் நிறையவே இக்கட்டுரையில் இருந்தது..!..?

 3. Avatar
  Santhini B says:

  சிறப்பு எழுத்துக்களை எழுதுவதற்கான பழைய வழியை வைத்திருப்பதில் மகிழ்ச்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *