எஸ். ஜயலக்ஷ்மி
உலகில் பிறந்த எல்லோரும் அரசனாக இருந்தாலும் ஆண்டியாக இருந்தாலும் ஒரு நாள் மரணமடைய வேண்டும் என்பது நியதி. ஆனால் பொதுவாக எல்லோருமே மரணத்தைக் கண்டு அஞ்சு கிறார்கள். பிறப்பு உண்டேல் இறப்பு உண்டு என்பதை உணர்ந்த அருளாளர்களும் மரணத்திற்கு அஞ்சா விட் டாலும் யமவாதனைக்குக் கவலைப்படவே செய்கிறார்கள்.
ஆதி சங்கரரின் கவலை
முற்றும் துறந்த ஞானியான ஆதி சங்கரரும் யமவாதனை பற்றிக் கவலைப் படுவ தைப் பார்க்கிறோம்.. செந்தூர் முருகனிடம் தன் கோரிக்கையை “சுப்ரமண்ய புஜங்கம்” என்ற தோத் திரத்தில், முருகா! என் இறுதிக்காலத்தில் யம தூதர் கள், இவனை வெட்டுங்கள், பிளந்து தள்ளுங்கள், சுட்டுப் பொசுக்குங்கள் என்று அதிக கோபத்துடன் என் அருகில் வருவார்களே! அப்பொழுது நான் உன்னைக் கூப்பிட முடியாதே. எனக்குத்தான் அறிவழிந்து, நிலை மறந்து, கபம் அடைக்க, பேசவும் முடியாமல் நினைவு தடுமாறி விடுமே! என் செய்வேன்? அந்த சமயம் நீ உன் மயில் வாகனத்தில் வேலோடு வந்து என்னைத் தொட்டு அஞ்சேல் என்று அருள் செய்ய வேண்டும் என்று விண்ணப்பம் செய்கிறார்
வெட்டு பிள பொசுக்கென்று வெஞ்சினமாய் யமதூதர்
கிட்டவரும் காலமதில் திருமயிலும் வேலுடனே
கெட்டலைய விட்டிடாமல் கிட்ட வந்து அஞ்சேல் என
தொட்டுக்காத்தருளத் தோன்றிடுவாய் வேலவனே
என்று வேண்டுகிறார்.
புலனடங்கி, நினைவிழந்து. பொறிகலங்கி, நெறிமயங்கி, நலம் நசிந்து உயிர் பிரிந்து நமனை நாடும் போதிலே நம்மால் இறைவ னையோ இறைவியையோ அழைக்க முடியாது. அதனால் தான் பெரியாழ்வார்
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்
அரங்கத்து அரவணைப் பள்ளியானே
என்று முன்னதாகவே வேண்டுதல் வைக்கிறார்.
அருணகிரிநாதரின் கவலை
அருணகிரிநாதருக்கும் இந்தக் கவலை இருந்திருக்கும் என்பதை அவருடைய பல பாடல்களில் பரக்கக் காணலாம். எத்தனை யெத்த னையோ தலங்களுக்கு யாத்திரை சென்று முருக னைத் தரிசித்தவர் யமவாதனையைப் பற்றி விரிவாகச் சொல்லி அதிலிருந்து தன்னைக் காக்க வேண்டு
மென்று விண்ணப்பம் செய்கிறார். அறுபடை வீடுகள் மற்றும் பஞ்சபூதத் தலங்களுக்கும் சென்றவர் அங்கு வீற்றிருக்கும் முருகப்பெருமானிடம் எப்படியெல்லாம் கோரிக்கை வைக்கிறார் என்பதைப் பார்ப்போம்.
திருப்பரங்குன்றம்
”முருகா! மலைபோலே கனைத்து வரும் எருமைக்கடா மீது கறுத்த நிறமுடைய, கோபத்தோடு வரும் எம தூதர்கள் பாசக் கயிறொடு வரும்போது நினைவு தப்பி நான் அலறும் வேளை ஒரு நொடிப்போதில் என் பயம் அகலும் படி மயிலில் வர வேண்டும்
மலைபோலே
கனைத்தெழு பகடது பிடர் மிசை வரு
கறுத்த வெஞ்சின மறலி தன் உழையினர்
கதித்தடர்ந்தெறி கயிறடு கதை கொடு பொறுபோதே
கறுத்து நைந்தலமுறு பொழுது அளவைகொள்
கணத்தில் என்பயமற மயில் முதுகினில் வருவாயே
என்று வேண்டுகிறார்.
திருச்செந்தூர்
திருச்சீரலைவாய் என்றும் வழங்கப் படும் திருச்செந்தூர் வந்து முருகனிடம் முருகா! என்
அறிவழிந்து மயக்கம் வந்து பேச்சும் அற்று கண்கள் சுழல உடல்சூடு அவிந்து, மலஜலம் பெருகும் இறுதி நேரத்தில் என்னை விட்டு அகலாமல் என் அருகில்
இருக்கும் என் அன்னையும் என் மனைவியும் அழ, உறவினர்களும் கதற நெருப்புப் போன்ற எமன் என்னை இழுக்கும் போது, ஐம்புலன்களும் உணர்
விழந்து போக, என் இருவினைகளும் ஒழிய உன் திருவடியில் சேர அருள்வாய்
அறிவழிய மயல்பெருக உரையுமற விழிசுழல
அனலவிய மலமொழுக அகலாதே
அனை மனை அருகிலுற வெருவியழ உறவும் அழ
அழலின் நிகர் மறலி எனை அழையாதே
செறியும் இருவினை கரண மருவு புலன் ஒழிய
உயர் திருவடியில் அணுக வரம் அருள்வாயே
என்று அவன் அருளை வேண்டுகிறார்
பழனி
ஒரு பழத்திற்காக போராட்டம் நிகழ்த்திய பழனியப்பனைத் தரிசித்த அருணகிரி தன் கவலையை அவரிடம் பகிர்ந்து கொள்கிறார். பழனிப் பதி வாழ் பாலகுமாரா! கன்னங்கரேலென்ற பெரிய எருமைக்கடாவில் கொடிய திரிசூலத்தோடும் பாசக் கயிறோடும் எமன் வரும் போது நரிகளும் அக்கினி யும் என்னை நெருங்காமல் அறிவார்ந்த உன்னுடைய திருவடிகளைத் தந்து ஆட்கொள்ள வேண்டும்
கரிய பெரிய எருமை கடவு
கடிய கொடிய திரிசூலன்
கறுவியிறுகு கயிறொடு உயிர்கள்
கழிய முடுகி யெழுகாலம்
திரியு நரியும் எரியும் உரிமை
தெரிய விரவி அணுகாதே
செறிவும் அறிவும் உறவும் அனைய
திகழும் அடிகள் தர வேணும்
என்று திருவடிகளில் சரண் புகுகிறார்
திருத்தணிகை
சினம் தணிந்து தணிகையில் வீற்றிருக்கும் பெருமானிடம் வந்து முறையிடுகிறார். தணிகை வளர் சரவண பவனே! யம தூதர்கள் என்னை இழுத்துச் செல்லும் முன்பு நான் முக்தி அடையும்படி நீ உன் ஒளிமயமான பாதகமலங்களைத் தரவேண்டும்
முட்ட வோட்டி மிக வெட்டு மோட்டெருமை
முட்டர் பூட்டியெனை அழையாமுன்
முத்தி வீட்டணுக முத்தராக
சுருதிக்கு ராக்கொளிரு கழல் தாராய்
என்று இறைஞ்சுகிறார்.
திருஅண்ணாமலை
[திரு அருணை] திருவண்ணாமலை கோபுரத்திலிருந்து குதித்து அருணகிரியார் உயிர்விட முயன்ற போது முருகன் அவரைத் தடுத்தாட் கொண்டான். முத்தைத்தரு பத்தித் திருநகை” என அடி எடுத்துக் கொடுத்தான். அந்த முருகனிடம் தனது கலக்கத்தை எடுத்துரைக்கிறார்
முருகா! பெற்றெடுத்த தாய், மகனே என்றும் புதல்வர்கள் அப்பா அப்பா என்றும் கதற, பாடையின் தலைமாட்டில் நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் அழ, பறைகள் கொட்ட எமன் பாசக்கயிற்றை வீசி என் உயிரைக் கவரும் போது என்னை ஆதரித்துக் காக்க வேணும் என்று முன்னதாகவே விண்ணப்பம் செய்து கொள்கிறார்.
மாது கருது புத்ரா என புதல்வர் அப்பா எனக்
கதறிடப் பாடையில் தலைமீதே
பயில் குலத்தார் அழப் பழைய நட்பார் அழப்
பறைகள் கொட்டாவரச் சமனாரும்
பரிய கைப்பாசம் விட்டு எறியும் அப்போதெனைப்
பரிகரித்தாவியைத் தரவேணும்
என்று மரணகாலத்தில் நிகழும் நிகழ்ச்சிகள் குறித்த
தன் அச்சத்தையும் கவலையையும் வெளிப்படுத்து கிறார்.
திருச்செங்கோடு
அருணகிரிநாதருக்கு மிகவும் பிரியமான இடம் திருச்செங்கோடு. இத்தலம் நாகாசலம்
என்றும் அழைக்கப் படுகிறது. நாகாசலவேலவனே! என் உற்றமும் சுற்றமும் கூடி அழும்பொழுது என் னைக் காக்க வேணும். நமனார் கலகம் செய்யும் பொழுது என்னைக் காத்து உன் சரணாரவிந்தங் களிலே சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இப்படியெல்லாம் எமனுக்கும் எமவாதனைக்கும் அஞ்சிய அருணகிரியார் கந்தனு டைய அனுபூதியில் திளைக்க ஆரம்பித்தபின் முருகன் துணை இருப்பான் என்ற நம்பிக்கை பெறுகிறார். கொஞ்சம் தைரியமடைகிறார். அச்சமும் கலக்கமும் குறையைக் குறைய தன்னம்பிக்கு அதிகரிக்கிறது. முருக பக்தரான தனக்கு அவனுடைய வேலும் மயி லும் துணை செய்யும் என்ற உணர்வு தோன்றுகிறது.
மார்க்கண்டேயன்.
நாவரசர் தனது 16வது வயதில் மரணம் ஏற்படப் போகிறது என்பதை அறிந்ததும் மார்க்கண்டேயன் சிவபெருமானைத் தஞ்சம் அடைந் ததால் பெருமான் மார்க்கண்டேயனுக்காகக் கால னையே உதைத்து மார்க்கண்டேயனைக் காத்த வர லாறு இவரைக் கவர்ந்திருக்க வேண்டும்
நாவரசர் “நாமார்க்கும் குடியல் லோம் நமனை அஞ்சோம் நரகத்தில் இடர்ப்படோம்
என்று பாடியதை இவர் வேத வாக்காக எடுத்துக் கொண்டாரோ?
தன்னம்பிக்கை பெறுதல்
முருகனுடைய திருவடியும் சிலம்பும் சதங்கையும், தண்டையும், ஆறுமுகங்களும் பன்னிரு தோள்களும் கடப்ப மாலையும் இவர் நினைவை விட்டு நீங்காமல் இருந்தன. திருவடிகள் இரண்டு, சிலம்புகள் இரண்டு. சதங்கைகள் இரண்டு, தண்டைகள் இரண்டு, முகங்கள் ஆறு, தோள்கள் பன்னிரண்டு, கடப்ப மாலை ஆக மொத்தம் 27 பொருட் களும் சேர்ந்து இருப்பதால் 27 நக்ஷத்திரங்களும் என்னை என்ன செய்ய முடியும்? என் இரு வினை களும் தான் என்னை அசைக்க முடியுமா? ஏன் கொடிய எமனும் என்னை நெருங்க முடியுமா என்று தெளிவு பெறுகிறார். அதனால்,
நாள் என் செயும்? வினை தான் என் செயும்?
எனை நாடி வந்த
கோள் என் செயும்? கொடுங்கூற்று என் செயும்?
குமரேசர் இரு
தாளும், சிலம்பும், சதங்கையும், தண்டையும்
சண்முகமும்
தோளும் கடம்பமும் எனக்கு முன்னே வந்து
தோன்றிடினே
[கந்தர் அலங்காரம் 38]
என்று நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார். மேலும்
வேலும் மயிலும். சேவல் கொடியும் தனக்குக் காலை யும் மாலையும் எப்பொழுதும் முன்னே வந்து உதவி செய்யும் என்பதை
ஓலையும், தூதரும் கண்டு திண்டாடல்
ஒழித்தெனக்குக்
காலையும் மாலையும் முன்னிற்குமே
கந்தவேள் மருங்கில்
சேலையும், கட்டிய சீராவும் கையில்
சிவந்த செச்சை
மாலையும், சேவல் பதாகையும் தோகையும்
வாகையுமே [க. அ 27]
என்று பெருமிதத்தோடு பேசுகிறார்.
சவால் விடும் அருணகிரி
இப்படி படிப்படியாக நம்பிக்கையும் ஊக்கமும் பெற்ற அருணகிரியார் மன வலிமை பெற்று ஒரு கட்டத்தில்
மரணப்ரமாதம் நமக்கிலையாம் என்றும்
வாய்த்த துணை
கிரணக் கலாபியும் வேலுமுண்டே
என்று தெளிவடைகிறார். வேலும் மயிலும் சீராவும்
துணையிருக்கும் தைரியத்தில் அந்த யமனையே
சண்டைக்கிழுக்கிறார்! சவால் விடுகிறார்! அவர் எப்படிப் பேசுகிறார் என்று பார்ப்போமா?
பட்டிக் கடாவில் வரும் அந்தகா உனைப் பாரறிய
வெட்டிப் புறங்கண்டலாது விடேன்
என்றும்
தண்டாயுதமும் திரிசூலமும் விழத் தாக்கி உன்னை
திண்டாட வெட்டி விழ விடுவேன்
ஏன் தெரியுமா?
தொண்டாகிய என் அவிரோதச்
சுடர்வடிவாள்
கண்டாயடா அந்தகா! வந்து பார்
சற்று என் கைக்கெட்டவே
என்று சவால் விட்டு மிரட்டுகிறார். சக்தி வாள் என் கையில் இருப்பதால் “கட்டிப் புறப்படடா” என்று அவ சரப் படுத்துகிறார். இன்னும் தாமதம் செய்ய வேண் டாம் என்று எச்சரிக்கிறார் ஞானச் சுடர்வாள் கையில் இருக்கும் தைரியம் அவரை இப்படிப் பேச வைக்கிறது.
முன்பு ஓலையும் தூதரும் கண்டு திண்டாடியவர்
ஞான தபோதனர்க்கு இங்கு எமராசன் விட்ட
கடையேடு வந்து இனி என் செய்யுமே?
என்று தெளிந்து வினா எழுப்புகிறார்
அருணகிரியைப்போல் பாரதியும் இந்த ஞானச் சுடர்வாள் இருந்த தைரியத் தால் தனது பாடலில்
காலா! உனை நான் சிறு புல்லென
மதிக்கிறேன் என்றன்
காலருகே வாடா! சற்றே உனை
மிதிக்கிறேன் [காலா]
மார்க்கண்டன் தனது ஆவி கவரப்போய்
நீ பட்ட பாட்டினை அறிகுவேன்—-இங்கு
நாலாயிரம் காதம் விட்டகல்! உனை
விதிக்கிறேன்
என்று பாடியிருக்கிறாரோ?
===========================================================
- கல்யாணராமன் – விளக்கு விருது .( 25.02.2017)
- இலக்கிய சொல்லாடல்கள் : 1அவான் – கார்ட் (Avant-Garde)
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! சூரியக் கோள்கள் உண்டாகத் தானாக உருவாகும் பிண்டத் தூசித் திரட்டுகள்
- மெல்பனில் அனைத்துலக பெண்கள் தின விழா ( 11-03-2017)
- உமர் கயாம் ஈரடிப் பாக்கள்
- வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! -2
- கவியெழுதி வடியும்
- கிழத்தி கூற்றுப் பத்து
- தொடுவானம் 160. பட்டமளிப்பு விழா
- அட கல்யாணமே !
- குடைவிரித்தல்
- அருணகிரிநாதரும் அந்தகனும்
- சுவடுகள்
- திரு.க.பூரணச்சந்திரன் அவர்களுக்கு 2016 ஆண்டு மொழி பெயர்ப்பாளருக்கான சாகித்ய அகாதெமி