வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! – 3

This entry is part 3 of 12 in the series 12 மார்ச் 2017

(ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்)

 

3.

      காப்பி குடித்துக்கொண்டிருக்கும் கிஷன் தாஸ் காலடியோசை கேட்டுத் தலை உயர்த்திப் பார்க்கிறார். பிரகாஷ் குறும்புச் சிரிப்புடன் கூடத்தில் நுழைந்துகொண்டிருக்கிறான். கிஷன் தாஸ் காப்பிக்கோப்பையை வைத்துவிட்டுத் தம்மையும் அறியாமல் வியப்பில் விழிகள் விரிய எழுந்து நிற்கிறார்.

“ஹேய்! என்ன இது? நாளைக்கு வரப்போவதாய்த் தொலைபேசியில் சொன்னாயே? இன்றைக்கே வந்து நிற்கிறாய்!  உன் பயணத்திட்டத்தில் திடீர் மாற்றம் ஏதேனும் ஏற்பட்டுவிட்டதா? நீ அதைப் பற்றித் தொலைபேசியில் சொல்லியிருந்திருக்கலாமே? நான் விமான நிலையத்துக்கு வந்திருப்பேன், அல்லவா?”

தன் பெட்டி, பைகளைத் தரையில் வைக்கும் பிரகாஷ், “பயணத்திட்டத்தில் மாற்றம் ஏதும் இல்லை, அப்பா. நான் வரவேண்டிய நாள் இன்றுதான். நாளை என்று உங்களிடம் பொய் சொன்னேன். அநாவசியமாய் அதிகாலையில் எழுந்து  விமானநிலையத்துக்குப் புறப்பட்டு வர அலட்டிக்கொள்ளுவீர்களே என்பதற்காகத்தான் அப்படிச் சொன்னேன்,” என்றவாறு அவருக்கு அருகில் அமர்ந்துகொள்ளுகிறான்.

சமையலறையிலிருந்து எட்டிப் பார்க்கும் நகுல் பிரகாஷை நோக்கிக் கையசைத்துச் சிரிக்கிறார்.

“நீ செய்தது சரியில்லை. ஓர் அயல் நாட்டுக்குச் சென்றிருக்கிறாய். அங்கே இரண்டு வாரங்கள் போல் இருந்துவிட்டு வருகிறாய். உன்னை வரவேற்க விமான நிலையத்துக்கு வரவேண்டும் என்று எனக்குத் தோன்றாதா?”

பிரகாஷ் பதில் சொல்லாமல் புன்னகையுடன் அமர்ந்திருக்கிறான். நகுல் காப்பி கொண்டுவந்து பிரகாஷிடம் தருகிறான். அவன் அதைப் பருகத் தொடங்குகிறான்.

“அமெரிக்கப் பயணம் எப்படி இருந்தது, சின்னய்யா?”

“பிரமாதம், நகுல், பிரமாதம்! எல்லா விவரமும் அப்புறம் சொல்லுகிறேன்!”

“எல்லாவற்றையும், ஒன்று விடாமல், சொல்ல வேண்டும், தெரிந்ததா?” – இப்படிச் சொல்லிவிட்டு நகுல் தன் முகம் திருப்பிக் கிஷன் தாஸ் அறியாத முறையில் பிரகாஷை நோக்கிக் குறும்பாய்ப் புன்னகை செய்கிறான்.

பிரகாஷை அவனது விஷமச் சிரிப்புத் தூக்கிவாரிப் போடுகிறது. எனினும் சமாளித்துக்கொண்டு புன்னகை புரிகிறான்.

“ஆகட்டும், நகுல். நிறைய புகைப்படங்கள் கொண்டுவந்திருக்கிறேன். அமெரிக்காவில் நான் எடுத்தவை. அப்புறம் உங்களுக்குக் காட்டுகிறேன்.”

“நன்றி, சின்னய்யா.”

பின்னர் நகுல் தன் வேலைகளைக் கவனிக்கச் சமையலறைக்குள் நுழைகிறார்.

 

“நீ பத்திரமாய் வந்து சேர்ந்தது பற்றி எனக்கு ரொம்பவே நிம்மதி, பிரகாஷ்! அங்கே கலிஃபோர்னியாவில் நிலநடுக்கம் என்று செய்தித் தாளில் படித்த போது கொஞ்சம் கவலையாகத்தான் இருந்தது…”

“அது மிகச் சிறிய நில நடுக்கம், அப்பா. அப்போது நாங்கள் டெக்சாஸில் இருந்தோம்.”

“உங்கள் சுற்றுலா  எப்படி இருந்தது?”

“மிக, மிகப் பிரமாதம், அப்பா! என்ன ஒரு துப்புரவான நாடு அமெரிக்காதான்!”

“அங்கே முக்கியமான இடங்களையெல்லாம் சுற்றிக் காட்டினார்களா?”

“ஓ! அதற்கும்தானே எங்களை அழைத்திருந்தார்கள்? நாங்கள் கிளம்புவதற்கு முன் தினம் ஒரு விழாவுக்கு ஏற்பாடு செய்து அமெரிக்கப் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் மூலம் எங்களுக்குப் பரிசுக்கான காசோலைகளை வழங்கினார்கள் அமெரிக்க தூதரகத்தினர்.”

“ஆணாதிக்கம் என்கிற தலைப்பில் நீ உன் கட்டுரையை

எழுதியிருந்ததாய்ச் சொன்னாய்.”

“ஆமாம்.”

“பெண்கள் ஆண்களால் கொடுமைப்படுத்தப் படுகிறார்கள் என்று நீ உண்மையாகவே நினைக்கிறாயா?”

“என்ன கேள்வி கேட்கிறீர்கள், அப்பா? நீங்கள் இப்படிக் கேட்பது எனக்கு அதிர்ச்சி யளிக்கிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, கானடா போன்ற மேல்நாடுகளிலும் கூடக் குடிகாரக் கணவர்கள் தங்கள் மனைவியரை அடித்துத் துன்புறுத்தும் கொடுமை பெருமளவில் நிலவுகிறது. அது பற்றிய நூல் ஒன்றை நான் எடுத்து வந்திருக்கிறேன். அதைப் படித்துப் பாருங்கள். ஆணாதிக்கத்தின் விளைவாக உலகம் முழுவதிலும் பெண்கள் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இக்கொடுமைகள் நாட்டுக்கு நாடு அளவிலும் பாணிகளிலும் வேறுபடக்கூடும். ஆனால் கொடுமைப்படுத்தப் படுகிறார்கள் என்பது மட்டும் உண்மை. நீங்கள் செய்தித்தாள்களைப் படிப்பதில்லையா? தொழில், வணிகம் தொடர்புள்ள சேதிகளை மட்டுமே நீங்கள் வாசிக்கிறீர்கள் என்று நான் நினைக்கிறேன். சரிதானே?”

கிஷன் தாஸ் சிரித்து மழுப்பிவிட்டு, “அந்த இரண்டு பெண்களும் எதைப் பற்றி எழுதினார்களா?””

ஒரு சில நொடிகளுக்குப் பிறகு, பிரகாஷ், “…. எ..எ…எனக்குத் தெரியாது,” என்கிறான்.

வியப்புடன் விழித்து அவனை நோக்கும் அவர், “என்ன! தெரியாதா! அது பற்றி நீங்கள் மூவரும் பேசிக்கொள்ளவே இல்லையா?” என்று வினவுகிறார்.

“இல்லை.  எங்கள் கட்டுரைகளின் தலைப்புகள் பற்றி நாங்கள் விவாதிக்கவில்லை!”

”விந்தையாக இருக்கிறதே!”

“இதில் என்ன விந்தை இருக்கிறதாம்? சுற்றிப் பார்ப்பதற்காகவே நாங்கள் விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தோம். அப்போதெல்லாம் நாங்கள் பல்வேறு விஷயங்களைப் பற்றி உரையாடினோம்தான். ஆனால் தேர்வு எழுதிவிட்டு வெளியே வரும் பள்ளி மாணவ மணாவிகளைப் போல், ‘நீ என்ன எழுதினாய்? நான் என்ன என்ன எழுதினேன்? எப்படி எழுதினோம்’ என்பது பற்றி யெல்லாம் நாங்கள் விவாதிக்கவில்லை.”

“ஆனால் உன் பதில் எனக்கு வேடிக்கையாகத்தான் இருக்கிறது, பிரகாஷ்!”

பிரகாஷ், சற்றே எரிச்சலுற்ற தொனியில், இரைந்த குரலில், “நானும் கேட்கவில்லை. அவர்களும் கேட்கவில்லை. அவ்வளவுதான். விடுங்கள்!” என்கிறான்,

அவனது எரிச்சலால் மேலும் வியப்புறும் கிஷன் தாஸ், “இந்த அற்ப விஷயத்துக்கு உனக்கேன் இவ்வளவு எரிச்சல் வருகிறது?” என்கிறார்.

சட்டென்று நிதானப்படுத்திக் கொண்டவனாய், பிரகாஷ், “இல்லை, அப்பா! எரிச்சல் ஒன்றும் இல்லை…. அதிருக்கட்டும். இந்த இரண்டு வார இடைவெளியில் வேறு ஏதேனும் விசேஷங்கள் உண்டா?” என்று கேட்கிறான்.

அவனது கேள்வியால் உற்சாகம் அடைந்தவராய்க் கண் சிமிட்டும் கிஷன் தாஸ், “இருக்கிறது, பிரகாஷ்! நான் சென்ற வாரம் ஒரு மிக முக்கியமான முடிவு எடுத்திருக்கிறேன்,” என்கிறார்.

“என்ன அது? நான் உங்களோடு அடிக்கடி பேசினேனே? அப்போதெல்லாம் நீங்கள் அது பற்றிச் சொல்லவே இல்லையே?”

“நீ இந்தியாவுக்குத் திரும்பி வந்த பிறகு சொல்லிக் கொள்ளலாம் என்று இருந்தேன்.”

”உங்கள் தொழிலை மேலும் அபிவிருத்தி செய்துகொள்ளுவது பற்றிய திட்டம் ஏதாவதா?”

“நீ நினைப்பது ஓரளவுக்குச் சரிதான்.  நான் எடுத்துள்ள முடிவால் நம் தொழில் முன்னேற்றமடையும் என்பது உண்மைதான்.  ஆனால் நான் செய்துள்ளது என்ன முடிவு என்பதை உன்னால் ஊகிக்க முடியாது, பிரகாஷ்!”

“புதிர் போடுவது போல் பேசாதீர்கள், அப்பா! அப்படி என்ன முடிவு எடுத்தீர்களாம்?

“உன்னைப் பற்றிய முடிவு, பிரகாஷ்! … எனது தொழில் போட்டியாளராய் இருந்து பல வழிகளிலும் எனக்குத் தொல்லை கொடுத்துவரும் ஒரு தொழிலதிபரை மடக்கிப் போட அது பெரும் அளவுக்கு உதவும்! எனது போட்டியாளனாக இருக்கும் அந்த ஆளை வென்று அடக்க அது ஒன்றுதான் வழி!”

“தலையும் புரியாமல், வாலும் புரியாமல் இதென்ன புதிர்ப் பேச்சு? புரியும்படியாய்ச் சொல்லுங்கள், அப்பா!”

“உன் கல்யாணத்தைப் பற்றியதுதான்!”

திடுக்கிடும் பிரகாஷ், “என்னது! என் கல்யாணத்தைப் பற்றியதா?” என்கிறான்.

“ஆமாம், ஆமாம்!’ என்னும் கிஷன் தாஸ் மகிழ்ச்சி பொங்கச் சிரிக்கிறார். மகனை அன்பு ததும்பப் பார்க்கிறார்.

முகத்தை முனைப்பாக வைத்துக்கொள்ளும் பிரகாஷ், “என்ன முடிவு செய்தீர்கள்?” என்று கேட்கிறான்.

நகுல் சிற்றுண்டித் தட்டுகளைக் கொண்டுவந்து மேஜை மேல் வைத்துவிட்டு நகர்கிறார்.

“எனது தொழில் போட்டியாளன் அந்த யோகேஷின் மகளை உனக்கு மணமுடித்து வைக்கும் முடிவுதான். அந்தப் பெண்ணை நீ மணந்துகொண்டால், அந்த ஆள் எனக்குத் தொல்லை கொடுப்பதை நிறுத்திக்கொள்ளுவான். அவனுக்கு அதில் ஆர்வம் இருக்கிறதா என்பதைக் கண்டுபிடிக்க நான் ரகசிய ஒற்றர்களை அனுப்பிப் பார்த்தேன். நம்மோடு சம்பந்தம் செய்துகொள்ளுவதில் தனக்கு இணக்கம்தான் என்றும் ஆனால் நான் அதை விரும்ப மாட்டேன் என்றும் அவன் சொன்னானாம்….”

வாயருகே கொண்டு சென்ற சிறு கரண்டியை நிறுத்தியபடி, சட்டென்று உயர்ந்து விடும் குரலில், “அவருக்கு விருப்பம் என்பதைக் கண்டறிந்ததோடு நிறுத்திக்கொண்டீர்கள்தானே? மேற்கொண்டு அந்த ஆளுடன் அது பற்றிப் பேச்சுவார்த்தை எதுவும் செய்யவில்லையே?” என்கிறான்.

பிரகாஷின் திடீர்க் குரல் உச்சத்தால் அதிர்ந்துபோகும் கிஷன் தாஸ், “நீ என் முடிவால் எரிச்சல் அடைந்திருக்கிறாய் என்று தோன்றுகிறது!” என்கிறார்.

“என் கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லவில்லை! அந்த யோகேஷோடு அது பற்றிப் பேசினீர்களா என்று கேட்டேனே!” – பிரகாஷ் தனது கேள்வியை மேலும் உயர்ந்த குரலில் அழுத்தந் திருத்தமாய் உச்சரிக்கிறான்.

“முதலில் நாம் சிற்றுண்டியைச் சாப்பிட்டு முடிக்கலாம். சாப்பிடும் போது சூடான வாக்குவாதம் வேண்டாமே!”

“ஆக? நமக்குள் சூடான வாக்குவாதம் கிளம்பும் என்று சரியாகவே ஊகித்துவிட்டீர்கள்!”

குரலில் குழைவைத் தோற்றுவித்துக்கொள்ளும் கிஷன் தாஸ், “பிரகாஷ்! பிரகாஷ்! நான் எதுவும் ஊகிக்கவில்லை. உன் குரலில் தெறித்த எரிச்சலை வைத்து அப்படிச் சொன்னேன்.  உருளைக் கிழங்குக் கறி மிகவும் முறுமுறுப்பாய் இருக்கிறது. இன்னும் கொஞ்சம்  போட்டுக்கொள்! உனக்கு ரொம்பப் பிடிக்குமே!” என்றவாறு கரண்டியில் அதை எடுத்து அவனது தட்டில் பரிமாற முற்படுகிறார்.

பிரகாஷ் அவரது கையைப் பிடித்து மறிக்கிறான். “எனக்கு என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது என்பதை நீங்கள் ஒன்றும் சொல்லத் தேவை யில்லை! எனக்குப் பிடித்ததை நானே எடுத்துக்கொள்ளுவேன்!”

“மன்னித்துக்கொள், பிரகாஷ்!” என்று உடைந்து போகும் குரலில் சொல்லும் கிஷன் தாஸ் கையை இழுத்துக்கொள்ளுகிறார்.

பிரகாஷும் தன் குரலைத் தணித்துக்கொண்டு, “சாரி, அப்பா! முதலில் சாப்பிட்டு முடிப்போம்!” என்கிறான்.

அதன் பின் இருவரும் ஒன்றும் பேசாமல் சாப்பிட்டு முடிக்கிறார்கள். கரண்டிகள் தட்டுகளில் உராயும் ஓசையும், சுவர்க் கடிகாரத்தின் டிக்-டிக் ஓசையும் மட்டுமே அங்கே நிலவுகின்றன. சாப்பிட்டு முடித்து, மீண்டும் கொஞ்சம் காப்பியை இருவரும் மவுனமாய்க் குடிக்கிறார்கள்.

முதலில் இருக்கை விட்டு எழும் கிஷன் தாஸ், “நாம் இங்கே பேச வேண்டாம், பிரகாஷ்! என் அறைக்குப் போகலாம்!” என்கிறார்.

ஒன்றும் சொல்லாமல் எழும் பிரகாஷ் அவரைப் பின்தொடர்கிறான். இருவரும் கிஷன் தாசின் படுக்கை யறைக்குச் செல்லுகிறார்கள். கிஷன் தாஸ் தம் படுக்கையில் அமர, பிரகாஷ் ஒரு நாற்காலியில் அமர்கிறான். கிஷன் தாஸ் அறைக் கதவைச் சாத்தச் சொல்லுகிறார். அவன் எழுந்து கதவைச் சாத்துகிறான்.

எனினும், “கதவை ஏன் மூடச் சொல்லுகிறீர்கள், அப்பா?” என்கிறான்.

“நாம் குரலை உயர்த்திப்     பேசுவதை வேலைக்காரர்கள் நாம் சண்டை போடுவதாக எண்ணிவிடப் போகிறார்களே என்பதற்காகத்தான்!.”

“அப்படியானால் நாம் குரலை உயர்த்திப் பேசப் போகிறோம்! சாப்பிடும் போது வாக்குவாதம் வேண்டாம் என்று ஏற்கெனவே சொன்னீர்கள். நாம் வாக்குவாதம் செய்யப் போகிறோம் என்று எது உங்களை நினைக்க வைக்கிறது?”

“என் முடிவைப் பற்றி நான் தெரிவித்த போது நீ உன் குரலை உயர்த்தினாயல்லவா! அதுதான் என்னை அப்படி நினைக்க வைக்கிறது!”

“என் தனிப்பட்ட விஷயத்தில் தலையிடும் உங்களது சர்வாதிகாரப் போக்குதான் என்னை அப்படிக் கத்த வைக்கிறது என்பது கூடவா உங்களுக்குப் புரியவில்லை?”

“பிரகாஷ்! சர்வாதிகாரப் போக்கு என்றெல்லாம் பேசாதே. நானென்ன உன் திருமண நாளைக் குறித்து விட்டேனா? நீ முதலில் அந்தப் பெண்ணைச் சந்திக்க நான் ஏற்பாடு செய்ய மாட்டேனா என்ன? நானென்ன அப்படி ஒரு எதேச்சாதிகாரியா?”

“நான் என்ன கண்டேன்? இனிமேல்தான் நான் உங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்!”

கிஷன் தாஸ் அன்பு ததும்பும் பார்வையைப் பிரகாஷின் மீது செலுத்துகிறார்.: “பிரகாஷ்! அந்த யோகேஷ் பல வழிகளிலும் எனக்குத் தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கிறான். நான் பங்கு கொள்ளும் சமுதாய நடவடிக்கைகளில் கூட அவன் எப்படியோ மூக்கை நுழைத்துவிடுகிறான். நான் ஒரு பொருளை உற்பத்தி செய்யவோ, இறக்குமதி செய்யவோ முடிவுசெய்தால், அதை எப்படியோ முன்கூட்டியே மோப்பம் பிடித்து முந்திக்கொண்டுவிடுகிறான். அவன் மகள் என் மருமகள் ஆகிவிட்டால் அவனது விரோத மனப்பான்மை மிகவும் குறைந்து விடும். ஏன்? அறவே நின்று விடவும் வாய்ப்பு இருக்கிறது. நமது தொழில் வளத்தை அவனது போட்டியும் பொறாமையும் இல்லாமல் நாம் மேம்படுத்திக்கொள்ளலாம்!”

“நம் தொழில்வளத்தை நாம் ஏன் பெருக்கிக்கொண்டே இருக்க வேண்டுமாம்?”

முகத்தில் முழு வியப்புக் காட்டி, “என்ன கேள்வி கேட்கிறாய் நீ? நீ அறிவோடுதான் பேசுகிறாயா? இதற்குப் பதில் சொல்ல நான் வார்த்தைகளைத் தேடுகிறேன், பிரகாஷ்! ஒரு தொழில் அதிபரின் வேலையே அதுதானே! கடவுளே? இவனுக்கு என்ன ஆயிற்று இப்படி மூளைகெட்டுப் போய்ப் பேச?” என்று கிஷன் தாஸ் பற்களைக் கடித்தபடி சினத்துடன் புலம்புகிறார். சினத்தை அடக்கும் முயற்சியில் அவரது தாடைச் சதைகள் அதிர்கின்றன.

“முதலில் அறிவோடுதான் பேசுகிறாயா என்றீர்கள். அடுத்து எனக்கு மூளை கெட்டுவிட்டது என்கிறீர்கள்.  அப்படியே இருக்கட்டும். ஆனால், தொழிலை விஸ்தரிப்பதற்கும் ஓர் அளவு வேண்டாமா?”

“என்ன உளறல் இது! தொழிலின் அபிவிருத்தியால் நாட்டில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என்பதும் இந்தியாவின் அந்நியச் செலாவணியின் இருப்பு மிகும் என்பதும் உனக்குத் தெரியாதா? நீ ஒரு முட்டாளா?”

“பேராசைக்காரனாக இருப்பதை விடவும் முட்டாளாக இருப்பது மேலானது!”

“பிரகாஷ்! என்ன ஆயிற்று உனக்கு? அமெரிக்கப் பயணம் உன்னை மாற்றி யுள்ளதாய்த் தோன்றுகிறது.”

“அமெரிக்காவும் இல்லை, ஆஃப்ரிக்காவும் இல்லை. உங்கள் தொழிலை மேம்படுத்திக்கொள்ளுவதற்காக என்னை ஏன் பலிகடா வாக்குகிறீர்கள்?”

சினத்தைக் கட்டுப்படுத்திக்கொள்ளும் கிஷன் தாஸ், “பிரகாஷ்! நான் அது பற்றிப் பேச அந்த யோகேஷை இன்னும் சந்திக்கவே இல்லை. அந்த ஆளுக்கும் நமது சம்பந்தத்தில் ஆர்வம் இருப்பதை மட்டுமே மோப்பர்கள் மூலம் தெரிந்துகொண்டேன்.  காரணம் மட்டும் இருவருக்கும் ஒன்றேதான். வேறு பேச்சு-வார்த்தை எதுவும் நடக்கவில்லை. அப்படி இருக்கும் போது நீ ஆகாசத்துக்கும் பூமிக்குமாய்க் குதிக்க வேண்டாம்!  அந்தப் பெண்ணைப் பார்த்துவிட்டு நீ தீர்மானித்                                                                                                                                                                                                                               தால் போதும். என்ன அழகு தெரியுமா அவள்? ஒரு கூட்டத்தில் அவளை நான் பார்க்க வாய்த்தது. உனக்கேற்ற நல்ல உயரம். கச்சிதமாகவும் மூக்கும் விழியுமாகவும் நல்ல நிறத்துடன் இருக்கிறாள். எந்த புத்திசாலியும் அவளை மறுதலிக்க முடியாதாக்கும்!” என்றார் நீளமாக.

கசப்புடன் சிரிக்கும் பிரகாஷ், “சற்று முன் என்னைத்தான் முட்டாள் என்று சொல்லிவிட்டீர்களே!” என்கிறான்.

குரலை மென்மையாக்கிக்கொண்டு, “சாரி, பிரகாஷ்! மன்னித்துக்கொள். எதற்கும் நீ முதலில் அந்தப் பெண்ணைப் பார். அதன் பின் முடியும் அல்லது முடியாது என்று சொல்லு.  அடிபிடி கட்டாயம் எதுவும் இல்லை, பிரகாஷ்! சின்னச் சின்ன விஷயங்களில் கூட நான் உனக்கு முழுமையான சுதந்திரம் கொடுத்திருக்கும் போது, இவ்வளவு பெரிய உன் தனிப்பட்ட விஷயத்தில் நான் குறுக்கிடுவேனா?” என்கிறார் கிஷன் தாஸ்.

கேலியாய்ப் புன்னகை புரியும் பிரகாஷ், “சில அப்பாக்கள் ரொம்பவும் தந்திரசாலிகள். சிறு விஷயங்களில் பிள்ளைகளுக்குச் சுதந்திரம் கொடுத்துவிட்டுக் கல்யாணம் போன்ற பெரிய விஷயங்களில் அவர்களை அடக்கியாளப் பார்ப்பார்கள்! உங்களது திட்டத்துக்கு ஒப்புக்கொண்டு நான் தலை யாட்டுவேன் என்று நீங்கள் நினைப்பதாய்த் தெரிகிறது. அதனால்தான்,  நான் மாட்டேன் என்று சொன்னால் அதை எதிர்க்க மாட்டேன் என்று சொல்லுகிறீர்கள்!” என்கிறான் இடக்காக.

.பதிலுக்குப் புன்னகை புரியும் கிஷன் தாஸ், “நீ சொல்லுவது சரிதான். அவள் அத்தகைய அழகியாக்கும்!” என்கிறார் நம்பிக்கையுடன்.

தன் கேலிப் புன்சிரிப்பை அகற்றிக்கொள்ளாமல், “ஆக, நான் யெஸ் என்று சொல்லுவேன் என்பதுதான் உங்கள் எண்ணம். முடியாது, அப்பா! எனது பதில் திட்டவட்டமான நோ தான்!”

“அந்தப் பெண்ணைப் பார்க்காமலே எப்படி இப்படி ஒரு பதிலைச் சொல்லுவாய் நீ?” என்று எரிச்சலுடன் கிஷன் தாஸ் வினவுகிறார்.

“அந்தப் பெண்ணை நான் பார்க்காத நிலையிலும் யெஸ் என்று சொல்லுவேன் நீங்கள் எப்படி சர்வ நிச்சயமாய் நினைக்கிறீர்களோ, அதே போலத்தான்!” என்று பிரகாஷ் பதில் சொல்லுகிறான். அவன் குரலில் இருந்த கிண்டல் போய்விட்டிருந்தாலும், அதில் ஓர் அழுத்தம் ததும்புகிறது.

“உனக்கு ஏன் இப்படி  ஓர் அழிச்சாட்டியம்?”

“இந்த உங்கள் கேள்வி நியாயமான ஒரு கேள்வி!… ஏனெனில் நான் ஒரு பெண்ணை நேசிக்கிறேன்….” – இவ்வாறு சொல்லும் போது பிரகாஷின் முகம் சிவந்து போகிறது. அவன் தலையைக் குனிந்துகொண்டு கிஷன் தாசை நேரடியாய்ப் பார்ப்பதைத் தவிர்க்கிறான்.

ஆனால் கிஷன் தாஸ் மிகுந்த அதிர்ச்சியுடனும் ஒரு நம்பாமையுடனும் அவனை நோக்குகிறார்.  சில கணங்களுக்கு அவருக்கு வாயே எழவில்லை.

       jothigirija@live.com

Series Navigationவேண்டா விடுதலைஅரிய செய்திகளின் சுரங்கம் [“ராஜ்ஜா” எழுதிய “புத்தி ஜீவிகளும் தீனிப்பண்டரங்களும்” நூலை முன்வைத்து]
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *