மறையும் மரபுத் தொழில்

author
0 minutes, 1 second Read
This entry is part 13 of 17 in the series 19 மார்ச் 2017

ல ச பார்த்திபன்

(அழிவின் விளிம்பில் இருக்கும் கைத்தறி நெசவுத் துறையில் தொழில் செய்து கொண்டிருக்கும் பல தொழிலாளர்களிடம் மேற்கொண்ட நேர்காணல் மூலம் பெறப்பட்ட தகவலை தொகுப்பாக இணைத்து இக்கட்டுரையில் பகிர்கிறேன்).

நெசவாளி – 1:
இவரது பெயர் முனியப்பன். வயது 54. இவர் சேலம் மாவட்டத்தை சார்ந்தவர்.கடந்த 42 வருடங்களாக அதாவது தன்னுடைய 12வது வயதிலிருந்து கைத்தறி நெசவுத் தொழிலை செய்து கொண்டு வருகிறார். தன் மனைவியும் மக்களும் தான், என்னுடைய முதுகெலும்பு என தன் குடும்பத்தை பற்றி மிக அருமையாக வர்ணிக்கிறார். இவருடைய தொழில் அனுபவங்களையும், கருத்துக்களையும் கேள்விகள் மூலம் பார்ப்போம்.
> 1. கைத்தறி நெசவுத் தொழிலை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்?
> எனக்கு 9 வயது ஆகும் போதே பள்ளி கல்வியை பயிலும் வாய்ப்பை நிறுத்தி விட்டனர் என் பெற்றோர். காரணமோ, அனைவரும் அறிந்த தேசிய பிரச்சணைகளில் ஒன்றான வறுமை தான். அது மட்டுமின்றி நானும் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற சூழலுக்கு உள்ளானேன். அப்போது தான் என் தந்தையார் செய்த குலத்தொழிலான கைத்தறி நெசவை தேர்ந்தெடுந்தேன்.
2. இந்த தொழிலால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
நன்மைகள் என்று கேட்டால் மிகையாக எல்லாம் கூற இயலாது. நடுத்தரமாக கடனின்றி எனது குடும்பத்தை மாதந்தோறும் மகிழ்வாக கொண்டு செல்ல முடிகிறது அவ்வளவு தான்.
3. இன்றைய பொருளாதார நிலைமையை உங்கள் தொழில் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு சமாளிக்க முடிகிறதா?
நிச்சயம் முடிகிறது. தடையின்றி தொழில் செய்து கொண்டே இருந்தால் கண்டிப்பாக சமாளிக்க முடியும். இன்னொரு விசயமும் இதை சார்ந்துள்ளது. கிடைக்கும் வருமானம் என்பது கைத்தறி பட்டு ரகங்களை பொருத்தே அமைகிறது. ஏனென்றால் உயர் ரக பட்டாக இருந்தால் தான் சற்று கூடுதல் வருமனம் கிடைக்கும்.
4. உங்கள் தொழிலில் நீங்கள் முன்னேற்றம் அடைந்துள்ளீர்களா?
இல்லை. இன்னும்

நடுநிலையாக தான் வாழ்க்கை தரம் உள்ளது. காரணங்கள் நிறைய உள்ளது. அவற்றில் மிக முக்கியமான ஒன்று தான் ஊதிய உயர்வு. இந்த தொழிலில் ஊதிய உயர்வு என்பது மிகவும் அரிதான செயலாக மாறிவிட்டது. பல வருடங்களாக ஒரே மாதிரியான ஊதிய முறையை தான் பெறுகிறோம்.
5. உங்களுக்கு பின்னர் இத்தொழில் தொடருமா உங்களின் மகன்/மகள் வாயிலாக?
இது என் மகன்/மகள் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை முடிவை சம்மந்தப்பட்டது. அவர்கள் பட்டம் பயின்றுள்ளனர். எனவே அதற்கேற்ற வேலையை தான் தேர்ந்தெடுப்பார்கள். நிச்சயமாக எனக்கு பின்னர் இந்த தொழில் என் மகன்/மகள் மூலமாக தொடராது.
6. கைத்தறி நெசவுத் தொழில் நலிவடைந்து கொண்டே வருவதற்கு முக்கிய காரணம் என்ன?
எல்லோரும் ஆடம்பர வாழ்வை எதிர்நோக்கி பயணிப்பது. அளவுக்கு அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என எண்ணுவது இப்படி பல காரணங்களால் கைத்தறி நெசவு தொழில் நலிவடைகிறது. ஏனென்றால் கைத்தறி நெசவு

ஆடம்பர வாழ்வுக்கு ஏற்றதல்ல. நடுத்தரமாக தான் வாழ்க்கையை கொண்டு செல்ல முடியும். ஆதலால் அதிக ஊதியம் தரும் தொழிலை நோக்கி அனைவரும் பயணிக்க தொடங்கி விட்டனர்.
7.விசைத்தறி மற்றும் தானியியங்கி தறிகள் மூலம் அதிக லாபம் கிடைக்கிறதே அதை ஏன் தேர்ந்தெடுக்கவில்லை?
அதிக முதலீடு தேவை என்பதால் அதை தேர்ந்தெடுக்க வில்லை. வங்கியில் கடன் வாங்கி முதலீடு செய்யலாம் என்றால், வங்கியோ சொந்த வீடு, சொந்த நிலம், அல்லது சொந்தமாக எதாவது வைத்திருந்தால் அதை ஆவணமாக காண்பிக்க சொல்கின்றனர். நான் விடும் மூச்சுக்காற்று கூட சொந்தமில்லை என வங்கிகளுக்கு தெரியவில்லை போலும்.பாவம் வங்கி மட்டும் என்ன செய்யும்.
8. அரசாங்கத்தின் நலத்திட்டங்கள் உங்களை முழுமையாக வந்தடைகிறதா?
வந்தடைகிறது. உதாரணம்

(மின்சார கட்டண சலுகையாக மாதந்தோறும் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக அரசு அளிக்கிறது)
9. இந்த தொழிலால் தாங்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சணைகள் என்னென்ன?
மிகப்பெரிய பிரச்சணையாக ஒன்று உள்ளது. அதுவே திருமண தடை ஆகும். எனக்கல்ல. என்னை போன்ற நெசவாளர்களின் மகன்கள் பெரும்பாலும் நெசவுத்தொழிலையே செய்து வருகின்றனர். அவர்களுக்கு தான் இந்த திருமண தடை ஏற்படுகிறது. ஏனென்றால், நெசவுத்தொழில் செய்யும் இளைஞர்களை திருமணம் செய்ய பெண்கள் பெரும்பாலும் யோசிக்கின்றனர் என்பதை விட மறுத்து வருகின்றனர் என வெளிப்படையாக கூறலாம். இன்றைய கால கட்டத்தில் நெசவு தொழில் செய்யும் ஒரு நெசவாளி, தன் மகளை ஒரு நெசவாளியின் மகனுக்கு மணமுடிக்க மிகவும் தயங்குகின்றனர். இதை போன்ற காரணங்களால் நெசவுத்தொழில் செய்யும் பல ஆயிரம் இளைஞர்களுக்கு இன்னும் திருமணம் ஆகாமல் 30 வயதை கடந்தும் மனதில் வெறுமையோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இதற்கு எப்போது முடிவு பிறக்கும் என்று தெரியவில்லை.
10. உங்கள் 42 வருட தொழில் அனுபவத்தின் வாயிலாக இனி வரும் இளம் தலைமுறைக்கு தாங்கள் சொல்ல கூடிய கருத்து(அ) அறிவுரை?
கல்வியறிவு முக்கியம். அதைப்போலவே

கைத்தொழிலை கற்று கொள்ளுங்கள். வருங்காலத்தில் கைத்தறி நெசவு தொழில் செய்வோர் விழுக்காடு மிகவும் குறையும். ஆகையால், நெசவுத்தொழிலை தேர்ந்தெடுக்கும் இளைஞர்களுக்கு ஓர் வேண்டுகோள். கைத்தறியை விட விசைத்தறியை நோக்கி பயணம் செய்யுங்கள். உங்களின் வருமானத்திற்கேற்றவாறு குடும்பத்தை நடத்த வழிவகை செய்து கொண்டு மனநிறைவோடு வாழுங்கள்.
“மனித இனத்தின் மானத்தை காக்கும் ஆடையை நெய்யும் நெசவாளிகளுக்கு, என் சிரம் தாழ்ந்த நன்றிகள்”

lsparthiban.lsp92@gmail.com

Series Navigationபகைவரை நடுங்க வைக்கும் பாரதத்தின் பத்து வகைப் படைத்திற ஆயுதங்கள்கடற்கரய் கவிதைகள் — ஒரு பார்வை ‘ கண்ணாடிக் கிணறு ‘ தொகுப்பை முன் வைத்து…
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *