நாகரத்தினம் கிருஷ்ணா
அ. இலக்கிய சொல்லாடல்கள் ஆ. சத்தியானந்தன் சிறுகதை இ. கமலஹாசன் குரல்
அ. இலக்கிய சொல்லாடல்கள் : கலைத்துவ எழுத்து (Belles-lettres)
பதினேழாம் நூற்றாண்டிலேயே ‘கலைத்துவ எழுத்தின்’ வருகை உணரப்படுகிறது. எனினும் அதற்குச் சரியானச் சொல்லாடலைப் பிரெஞ்சு இலக்கிய உலகம் உபயோகிக்கத் தொடங்கியது பதினெட்டாம் நூற்றாண்டின் மத்தியில். அக்காலக் கட்ட த்தில் சமயபோதனைகள், பைபிள், சமய வரலாறு ஆகியன மறை எழுத்து (Lettres-saintes) என்றும், இதனைத் தவிர கல்விமான்கள் எழுத்து(Lettres savantes), நல்ல எழுத்து (Bonnes lettres என்றெல்லாம் எழுத்துக்களை வகைப்படுத்தி அழைத்துவந்தார்கள். இந்நிலையில் , வரலாறு , கவிதை நாடகம் ஆகியவற்றை, பிறவற்றிலிருந்து வேறு படுத்தி அழகியலோடு இணைத்து கலையாகப் பார்க்கத்தொடங்கினர், கலைத்துவ எழுத்தென்ற பெயரையும் பெற்றது. மானுடவாத த்துடன் (l’humanisme) இணைந்து கலைத்துவ எழுத்துக்கள் பண்டைய கிரேக்கம் மற்றும் இலத்தீன் மொழி படைப்புகளை சாமானியர்களும் புரிந்துகொள்ள உதவியுள்ளன. பைபிள் கூட எளிமையாக மொழிபெயர்க்கப்பட்டது. பதினெட்டாம் நூற்றாண்டில் பிரெஞ்சு அரசரின் சொந்த நூலகத்தில் இவ்வகை நூல்கள்(கலைத்துவ நூல்கள்) இருந்தனவென்று, அரசவை நூலகத்தின் பட்டியல் தெரிவிக்கிறது. ‘கலைத்துவ எழுத்துவ’ எனக்கூறி எழுத்தை வெகுசனப் புரிதலுக்கு உட்படுத்துவது குறித்த விமர்சனங்களும் எழுந்தன. 1680ல் வெளிவந்த பியர் ரிஷ்லெ (Pierre Richelet ) என்பவரின் பிரெஞ்சு அகராதி « கலைத்துவ எழுத்தின் அறிவியல், இலக்கியம் » என இக்கலைத்துவ எழுத்திற்கு விளக்கம் தந்தது. பின்னாளில் இலக்கியம் என்பதே ‘கலைத்துவ எழுத்து’ என்றாயிற்று. இக்கட்ட த்தில் வரலாறு கலைத்துவ எழுத்திலிருந்து வெளியேற்றப்பட அவ்விட த்தை ‘roman’ எனும் புதினவகைகள் ஆக்ரமிக்கின்றன, அவற்றைத் தொடர்ந்து, கட்டுரைகளும் இப்பிரிவுக்குள் வந்து சேர்ந்தன. தவிர பதினெட்டாம் நூற்றாண்டுவரை இலக்கியம் மட்டுமின்றி, இலக்கியம் பற்றிய திறனாய்வுகளும் கலைத்துவ எழுத்தாகக் கருதப்பட்டன. இன்று, குறிப்பாக பத்தொன்பதாம் நூற்றாண்டுக்குப் பின்பு ‘கலைத்துவ எழுத்து’ என்பது அதன் பெயருக்கேற்ப அழகியல் கூறுகளுடன், அநீதியுடன் முரண்படுவது, வாசகனின் உணர்வைத்தூண்டுவது, அவன் கற்பனைக்கும் சிந்தனைக்கும் தளம் அமைத்துக் கொடுப்பது…முதலான நெறிகளையும் தனக்கென உரிமையாக்கிக் கொண்டுள்ளது. ஆனால் இன்று இலக்கியமென வெளிவருவதனைத்துமே கலைத்துவ எழுத்தா ? என்ற கேள்வியும் எழுகிறது.
ஆ. வாசித்ததில் பிடித்தது : மார்ச் மாத காலச்சுவடு இதழில் வெளிவந்த சத்யானந்தன் என்பவரின் தடாங்கம் சிறுகதைக்குறித்து
தடாங்கம் சிறுகதையை வாசித்தபின்புதான், இம்முறை இலக்கிய சொல்லாடல்கள் வரிசையில் கலைத்துவ எழுத்து (Belles -Lettres) என்ற சொல்லை தேர்வு செய்தேன். ஆனால் கதையாசிரியர் நாட்டியம் என்ற கலையை, கதையின் மையப் பொருளாகக் கையாண்டுள்ளார் என்பதால் அல்ல. எனினும் கதையில் இடம்பெரும் இருவகைப்பெண்களுக்குமே நாட்டியம் ஆதாரமாக இருக்கிறது என்பதும் உண்மை. மறுமலர்ச்சிகால கலைத்துவ எழுத்தின் பூர்வாங்கம் என்ன ? இன்றைய தேதியில் அதனை எப்படி பார்க்கவேண்டும் என்பதை அச்சொல்குறித்த விளக்கத்தில் தெளிவுபடுத்தியிருந்தேன். அவ்விளக்கத்தோடு ஒர் அசலான கலாரசிகராக நாட்டியத்தை ரசிப்பதுபோல இச்சிறுகதைக்குள் இருக்கும் கலைத்துவ குறிப்புகளை மொழியால் பிரதிப்படுத்தி விளங்கிக்கொள்ளக் கூடுமெனில் கதையாசியரின் நட்டுவாங்கத் திறமையை விளங்கிக் கொள்வோம். ஆகுபெயர், உருவகம், படிமம் என்றெல்லாம் தேடிப்பார்த்து வாசிக்கும் வாசகரும்விரும்பும் கதை அதேவேளை, எழுத்தென்பது அனைவருக்கும் போய்ச்சேரவேண்டும் எனக்கருதும் மானுடவியல் அபிமானிகளும் விரும்பக்கூடியக் கதை. எல்லோராலும் விரும்படுவதென்பது வேறு, நவீன இலக்கியத்தின் எதிர்பார்ப்பை எளிமையாக நிறைவேற்றுவதென்பது வேறு. ஒரு கலைஞன் தனக்காகவும் படைக்கிறான், ரசிகனுக்காகவும் படைக்கிறான், இருதரப்பினரையும் திருப்தி செய்வ துதான் நல்ல படைப்பாக இருக்க முடியும். இறுவேறு உலகம், இருவேறு காலங்கள், இருவகையான கதைமாந்தர்கள் ஆனாலும் மெலிதான ஓரிழை இம்மூன்றையும் ஒன்றிணைத்து, குறியீடுகளைப் புள்ளிகளாக க் கொண்டு தீட்டிய கதை. நம்மில் பலருக்கும் ஹெமிங்வே கனவு இருக்கிறது. வண்னதாசன், வண்ண நிலவன் ஆகும் ஆசைகள் இருக்கின்றன. ஒரு ஹெமிங்வே தான் ஒரு வண்ணதாசன் தான் உருவாக முடியும். சுந்தராமசாமியும், ஜெயகாந்தனும் தனித்தன்மையை பெற்றிருந்தார்கள், ஜெயித்தார்கள். சத்தியானந் தன் எழுத்தில் நவீனம் இருக்கிறது, கலைத்துவம் இருக்கிறது, தனித்துவமும் இருக்கிறது.
இ. கமலஹாசன் குரல்
அண்மை காலத்தில் கமலஹாசன் குரல் அடிக்கடி ஒலிக்கிறது. அவர் ஒரு பேட்டியில் இப்போதுமட்டுமில்லை எப்போதும் எனது கருத்துக்களைக் கூறி வந்திருக்கிறேன் என்கிறார். இருக்கலாம். இருந்தும் தற்போதுதான் அவர் அதிகம் வாய்திறப்பதுபோல தெரிகிறது. ஒரு வேளை, கடந்த காலத்தினும் பார்க்க ஊடகங்கள் , சமூக வலைத் தளங்கள் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் காரணமாக இருக்கலாம். காரணம் எதுவாக இருப்பினும் கமலஹாசன் குரல் வரவேற்க க் கூடிய குரல். எதற்கு வம்பு என்று ரஜனிபோலவோ (சூடு பட்ட பூனை ?) பிற நடிகர்கள்போலவோ, படைப்புலக வீரர்களைப் போலவோ (பிழைக்கத் தெரியாத ஆசாமிகளை விடுங்கள்) இருந்திருக்கலாம். டி. ராஜேந்தர் போல உளறிக்கொட்டாமல் உருப்படியான விடயங்களைப் பேசுகிறார். புரட்சிக் குரல் அல்லவென்றாலும் கலகக் குரல். நாடறிந்த மனிதர் என்பதால் எளிதாய் பெருவாரியான மக்களை அடையும்குரல். ஆளும் கட்சினர்மீது இவருக்குக் கோபமிருக்கிறது என்கிறார்கள், பாதிக்கப்பட்டவர் என்கிறார்கள். ஏன் பாதிக்கப்பட்டார் ? எதற்கேனும் மறுப்பு தெரிவித்திருப்பார், என்னால் முடியாது என்றிருப்பார், பணிந்திருக்கமாட்டார், எனவே பாதிக்கப்படுவது இயற்கை. ஆக மொ த்த த்தில் அவருக்குத் தமது உரிமை குறித்த பிரக்ஞை இருந்திருக்கிறது, நமக்கேன் வம்பு என்றிருக்கிற மனிதரில்லை என்பது தெளிவு. எல்லாமனிதர்களிடமும் சுய நலமிருக்கிறது, யாரிடமில்லை ? சந்தை உலகில் தியாகத்தைக் கூட சந்தைப் படுத்த முடிந்தவனே தியாகி என அங்கீகரிக்கப்படுகிறான். வணிகச் சூத்திரத்தின் படி வெகுசன ரசிகர்களைத் திருப்திபடுத்தவென்று நான்கு படங்கள் எடுத்தாலும், ஓர் அசலானக் கலைஞனுக்கு காலம் நினைவில் நிறுத்தக்கூடிய வேரு அடையாளங்கள் தேவை என்பதை உணர்ந்து, புதிய முயற்சிகளில், இறங்குகின்ற மனிதர், அபாயங்களைச் சந்திக்கிற மனிதர் ; இப்படிக் கலகக் குரல் எழுப்புவது அதிசயமில்லை.
இதுபோன்ற குரல்கள், வெறும் ஊடங்களில் வலம்வந்தால் மட்டும்போதாது, பலன்களைத் தருகிற கலக க் குரல்களாக நண்பர்களின் பேச்சில், தேநீர் கடைகளில். திண்ணைகளில் தமிழ்நாடெங்கும் ஒலிக்க வேண்டும். உலகில் வேறெங்கும் குற்றவாளிகளை முன்னிருத்தி ஓட்டுக் கேட்கும் துணிச்சல் வருமா ? தமிழர்களை மொத்தபேரையும் திருடர்களாக, குற்றவாளிகளாகச் சித்தரிக்கிற அவலம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. யார் வேண்டுமானாலும் ஜெயிக்கட்டும். ஆனால் தினகரன் டெபாசிட்டையும் இழக்கவேண்டும் என்பதுதான் நமது பேராசை. இன்றைக்குத் தமிழர் மானம் ஆர். கே நகர் வாக்காளரை நம்பி உள்ளது, ஆனால் அது விலைக்கும் உரியது என்பதால் அச்சங்கள் நிறைய.
- வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! – 4
- வெள்ளி விழா கண்ட தமிழ் திரைப்படங்கள்
- பிரியும் penனே
- ஒகோனியாகும் ஆகும் ஆபத்து தஞ்சைக்கு….நூல் விமர்சனம்
- கவிதைகள்
- ஐஸ் குச்சி அடுப்பு
- உமர் கயாம் ஈரடிப் பாக்கள்
- மொழிவது சுகம் மார்ச் 18 2017 அ. இலக்கிய சொல்லாடல்கள் ஆ. சத்தியானந்தன் சிறுகதை இ. கமலஹாசன் குரல்
- பன்முகநோக்கில் பண்டைத் தமிழ்ப்பண்பாடு என்னும் பொருண்மையிலான தேசியக்கருத்தரங்கில்
- பாரத-ரஷ்யக் கூட்டுறவில் ஒலிவேகம் மிஞ்சிய தொலைநீட்சிப் பிரம்மாசுரத் தாக்குகணைச் சோதிப்பு
- ஏக்கங்கள்
- பகைவரை நடுங்க வைக்கும் பாரதத்தின் பத்து வகைப் படைத்திற ஆயுதங்கள்
- மறையும் மரபுத் தொழில்
- கடற்கரய் கவிதைகள் — ஒரு பார்வை ‘ கண்ணாடிக் கிணறு ‘ தொகுப்பை முன் வைத்து…
- வெலிகம ரிம்ஸா முஹம்மதின் ‘எரிந்த சிறகுகள்’ நூல் வெளியீட்டு விழா
- சர்க்கஸ்
- THE QUIET LIFE அமைதியான வாழ்க்கை (அ .போப் )