62 பக்கங்களில் ‘ பனிக்குடம் ‘ வெளியீடாக 2007 – இல் வெளிவந்த புத்தகம் எழுத்தாளர் தமிழ்நதி
எழுதிய முதல் கவிதைத் தொகுப்பு ‘ சூரியன் தனித்தலையும் பகல் ‘ ! தமிழ்நதி தன் முன்னுரையில் ,
” கவிதை மிகப் பெரிய ஆசுவாசத்தையும் அவஸ்தையையும் ஒருசேரத் தருகிறது. ஓடும் நதியில் திளைக்கும் சுகத்தையும் எரியும் நெருப்பின் தகிப்பையும் எழுதும் போதெல்லாம் உணர முடிகிறது. ”
என்கிறார். உண்மைதான்.
முதல் கவிதை ‘ இருப்பற்று அலையும் துயர் ‘ , போர்க் கொடுமையால் வீட்டைக் காலி செய்துவிட்டுப் புலம் பெயரும் துயரத்தைப் பேசுகிறது.
நேற்றிரவு குண்டு தின்றது
மதில் விளக்கு அதிர்ந்து சொரிந்தது
சூரியன் தனித்தலையும் இன்றைய பகலில்
குழந்தைக்குப் பாலுணவு தீர்ந்தது
பச்சைக் கவச வாகனங்களிலிருந்து நீளும்
முகமற்ற சுடுகலன்கள் வீதியை ஆள
வெறிச்சிடுகிறது ஊர்
— என்று தொடங்கும் கவிதை மனத்துயரத்தை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது.
இந்தச் செங்கல்லுள் என் இரத்தம் ஓடுகிறது
என்ற வரியில் ‘ என்னையே இழந்து இங்கிருந்து விலகுகிறேன் ‘ என்ற கருத்தை வலியுறுத்தப்படுகிறது.
— வீட்டின் கிணற்றையும் மல்லிகைக் கொடியையும் பிரிய மனமில்லை.
கிணற்றில் பீறிட்ட முதல் ஊற்று
இளநீரின் சுவையொத்திருந்தது
— என்கிறார்.
இருப்பைச் சிறு பெட்டிக்குள் அடக்குகிறேன்
சிரிப்பை அறைக்குள் வைத்துப் பூட்டுகிறேன்
— கடைசி வரியின் தாக்கம் கடுமையாக இருக்கிறது. மனிதனின் முக்கிய அடையாளமான சிரிப்பை
அறைக்குள் வைத்துப் பூட்டுகிறார். மண் பாசம் இந்த வரியில் உச்சம் தொடுகிறது.
வீடு , வேம்பு , காற்று மற்றும் பூனைக்குட்டிகளைப் பிரிய மனமில்லை.
சொற்களற்றுப் புலம்புமிந்த வீட்டை
வேம்பை
அது அள்ளியெறியும் காற்றை
காலுரசும் என்
பட்டுப் பூனைக்குட்டிகளை
— என்று கவிதை முடிகிறது. வேப்பமரம் தொடர்ந்து வீசும் காற்றை , ‘ அள்ளியெறியும் காற்று ‘ என்கிறார். எதிர்பாராத கவித்துவம் தெறிக்கிறது.
‘ சிறகுதிர்க்கும் தேவதைகள் ‘ ஒரு காதல் கவிதை ! வித்தியாசமான , காத்திரமான வெளிப்பாட்டில்
நல்ல கட்டமைப்பு அமைந்துள்ளது. காதலர்களால் சந்திக்க முடியவில்லை. தொலைபேசி வழியாகத்தான்
பேச முடிகிறது. தனிமைத்துயர் இலக்கிய நயங்களுடன் பதிவாகியுள்ளது.
ஒவ்வொரு தடவை அழைக்கும்போதும்
வேலைச் சிலுவையில் அறையப்பட்ட
உன் உள்ளங்கைக் குருதியைப்
பருகத் தருகிறாய்
— என்பது கவிதையின் தொடக்கம். புதிய படிமம். அதில் துயரம் தேங்கி நிற்கிறது. தனிமைத் துயரை
அடுத்த மூன்று வரிகள் படிமம் வழியாக முன் வைக்கின்றன.
காதலும் காமமும்
போர் தொடுக்கும் பெருவெளியில்
நிராயுதபாணியாக நிறுத்தப்பட்டவள்
— பிரிவுக் காலத்தைப் ‘ பெருவெளி ‘ என்று உருவகப்படுத்துவது அழகான வெளிப்பாடு.
தனிமையின் கல்லுரசிப்
பொறி பறக்கும் சொற்களால்
கிழித்துக் கொள்கிறேன் நம் காதலை
— என்ற வரிகள் , ஆழ்ந்த சிந்தனையால் நல்ல அழுத்தம் பெறுகிறது.
ஆணிகள் இறுக அடிக்கடி இறப்பதாய்ச்
சொல்லிக் கொண்டே
தொலைபேசியை உயிர்ப்பிக்கிறாய்
அந்த நாளைச் சவப்பெட்டிக்குள்
வைத்து மூடி எழுந்திருக்கிறேன்
— அடுத்து , கவிதையின் முத்தாய்ப்பு கவிதைத் தலைப்பை மையப்படுத்தி முடிகிறது.
காத்திருந்தே கழியும் இரவுகளின் முடிவில்
தேவதைகள் சிறகுதிர்த்துப்
பேயுருக் கொள்ளல் பற்றி
நேரமிருக்கும் யாரிடமாவது பேச வேண்டும்
— ஒரு நல்ல கவிதையைப் படித்து ரசித்த மன நிறைவைத் தருகிறது. பிற காதல் கவிதைகளிலிருந்து
தனித்து நிற்கும் இக்கவிதை கவிஞரின் மொழி ஆளுமையை நன்கு தெளிவுபடுத்துகிறது.
‘ ஆண்மை ‘ என்ற தலைப்பில் ஒரு கவிதை… ஒரு பெண்ணிடம் முறைகேடாக நடந்துகொண்ட ஒருவனை அவள் எவ்வாறு எதிர்கொண்டாள் என்பது பற்றிப் பேசுகிறது.
ஊரே மெல்லுறக்கம் கொள்ளும் பின் மதிய நேரம்
தெரு முடக்கில் நீட்டிக்கொண்டிருந்தது
— என்ற தொடக்கம் சரியாகப் பொருள் கொள்ள முடியாமல் இடறுகிறது.
‘ சாத்தானின் கேள்வி ‘ என்றொரு கவிதை. மெல்லிய , பூடகமான வெளிப்பாட்டில் ஓர் அழுத்தத்தை
உருவாக்கும் இடங்களை இக்கவிதையில் ரசிக்கலாம்.
ஒரு பௌர்ணமி நாளில்
நீர்ப்பரப்பில் நிலவொளிபோல
மெல்லப் படர்ந்ததுவுன் நேசம்
— என்று நயமாகத் தொடங்குகிறது.
ஞாபகத்தின் தெருக்களில்
நாடோடியாய் அலையுமென்னை
நிகழில் நிலைக்கவென்று அழைத்தாய்
நான் உன் கண்ணாடியும் என்றாய்
பாதரசம் மெல்ல மெல்லக் கரைகிறது கவனி
— அழகான படிமத்துடன் இப்பத்தி தொடங்குகிறது. கடைசி வரி ‘ இனியும் தாமதிக்கலாகாது ‘ என்பதைச் சூசமாக வெளிப்படுத்துகிறது. பெண்களுடன் பழகியபின் விலகிவிடும் ஒருவனை ,
இந்தக் கதை முடியுமிடம்
இதழிலும் மார்பிலுமா ?
— என்று சாத்தான் கேட்பதாகக் கவிதை முடிகிறது. கவிதை ஆக்கத்தில் ஒவ்வொரு சொல்லையும்
கவனமாகப் பயன்படுத்துவது நல்ல கவியாளுமை !
‘ நீரின் அணைப்பு ‘ என்ற கவிதையில் காணப்படும் இறுக்கம் சற்றே தளர்த்தப்படலாம். தண்ணீரில்
ஒரு பெண் தற்கொலை செய்துகொள்ள விரும்புகிறாள். இதை முன்வைத்து ஒருவர் பேசும் குரல்
இக்கவிதையில் கேட்கிறது.
உப்பிப் பெருத்து
நாளை கரையொதுங்கும் அவளுடம்பு
வாழ்ந்த வாழ்வைவிட நாற்றமில்லை என்றோ
சூலம் ஏந்தி கரையேற்ற வரவில்லை
— என்று கவிதை முடிகிறது. பார்த்துப் பார்த்துச் செதுக்கிய சிலைபோல இக்கவிதை நேர்த்தியாக
அமைந்துள்ளது.
‘ இசை கலந்த தண்ணீர் ‘ , ‘ இலைச்செறிவு விலக்கி / வானம் பார்த்தல் ‘ , ‘ தனிமையின் பயம் தணிக்கத் / தனக்குத் தானே பேசியபடி ‘ என்றெல்லாம் சிந்திக்கிறார் தமிழ்நதி . பல நல்ல கவிதைகளைக் கொண்டது இத்தொகுப்பு ! படித்து மகிழலாம்.
- அசோகமித்திரன் நினைவுகள் தமிழ் நாவல் நூற்றாண்டு ஆய்வரங்கிற்காக இலங்கை வந்திருக்கும் படைப்பாளி.
- அசோகமித்திரன் – கோட்டோவியம் – ஒரு அஞ்சலி
- சூரிய குடும்பத்தில் முன்பு விலக்கப்பட்ட புறக்கோள் புளுடோ மீண்டும் ஒன்பதாம் கோள் தகுதி பெறுகிறது
- உயிரோட்டம்
- வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! – 5
- புஜ்ஜிம்மா…….
- உமர் கயாம் ஈரடிப் பாக்கள்
- விளக்கேற்றி சென்றுவிட்டார் அசோகமித்திரன்
- தொடுவானம் 162. தேவதைகள் தரிசனம்
- தமிழ்நதி கவிதைகள் — ஒரு பார்வை ‘ சூரியன் தனித்தலையும் பகல் ‘ தொகுப்பை முன் வைத்து …
- ஒரு குழந்தையின் குதூகலத்தோடு : கோலாலம்பூர் ஞான சைமனின் பயண அனுபவங்கள்
- சமையல்காரி
- பிரான்சு நிஜமும் நிழலும் – II (கலை, இலக்கியம்) – இடைக்காலம் தொடர்ச்சி
- அம்பலம்