விளக்கேற்றி சென்றுவிட்டார் அசோகமித்திரன்

This entry is part 8 of 14 in the series 26 மார்ச் 2017
 ami
கடைசியாக அவர் கலந்துக் கொண்ட இலக்கிய கூட்டம், விளக்கு விருது விழாவாகத்தான்  ( 25.02.2017) இருக்கும் என்று நினைக்கின்றேன். அன்று அவருடன் ஒரு சில நிமிடங்கள் பேசியது, என் நினைவில், மறக்கமுடியாத நிகழ்வாகத்தான் கருதுகின்றேன். அன்றே அவருக்கு அவரது உடலே ஒத்துழைக்காமல், முதுமையின் தள்ளாட்டாத்தில்தான் இருந்தார். அசோகமித்திரன், ஒரு நீண்ட வாழ்க்கையை வாழ்ந்து சென்றுவிட்டார்.அவரது ஐதாராபாத் வாழ்க்கையும், சென்னை வாழ்க்கையும் கொடுத்த
வாழ்க்கைப்பாடங்களே அவரது எழுத்துக்களாய் நம்மிடம் வாழ்கின்றது.
அவரது எழுத்துக்களைப்பற்றி, இனி ஒரு வாரமோ, மாதமோ பலர் பேசக்கூடும், எழுதவும் செய்வார்கள்.  நான் அவரது மனிதாபினத்தைப்பற்றியும், அவருக்குள் இருந்த   உலகப்பார்வையும் குறித்து ,எனக்கு கிடைத்துள்ள தகவல்களை வைத்து எழுகின்றேன்.
அவரது வாழ்க்கைப் பயணத்தில், ஒரு நீண்ட காலத்தை
( 25 வருடங்கள்) கணையாழியின் ஆசிரிய பீடத்தில் அமர்ந்தது.
அதில், அவரது பலதரப்பட்டக் கருத்துக்கள், அவரது வீசாலமான
இலக்கியப்பார்வையும், நீண்ட கால வாசிப்பின் தகவலும்,
ஆழ்ந்த சிந்தனையும் வெளிப்பட்டுள்ளது. ஒருமுறை பல்கலைக்
கழகங்கள் ஆண்டின் சிறந்த படைப்புக்களுக்கு வழங்கும்
விருதினைப் பற்றி, நையாண்டியாக ஒரு தகவல் கொடுத்தார்.
ஒரு பரிசினை, ஒரு படைப்புக்கென்று தாராமல்,
அவரது வாழ்நாள் சேவையை கணக்கில் கொண்டு
கொடுக்கலாம்” என்றார்.
மலையாள நவீன கலைஞரான கோவிந்தனின், “நோக்குக்குத்தி”( தீயவர் கண்படல் தவிர்க்கும் பொம்மை) திரைப்படத்தைப்பற்றி
அவரது கருத்துக்களை ” நவீன கலைஞர்கள் கூட , இன்று சாதி வெறியை மையமாக வைத்து, படம் எடுக்கின்றனர். அது, சமூகத்
தலைவர்களின் கடமை.  நவீன கலைஞகர்கள் ஒரு classical theme  மை எடுத்துக்கொண்டு, முயற்சி செய்கின்றனர். இதனை,
சார்த்தரும், காமுவூம் கூட அவர்களது, நாடகத்தில் செய்ததால் வநத விளைவா ? தெரியவில்லை.” என்றார்.
ஒருமுறை, மணிக்கொடியை பற்றியும், சாவி வார இதழையும்குறித்து எழுதும்போது, மணிக்கொடி எழுத்தாளர்கள், இன்னும்
சிலபேர் நம்மிடையே இருக்கின்றனர்.அதில், முக்கியமாக, க.நா.சு.,” எழுத்தாளன் “என்ற ஒரே அடையாளத்துடன் வாழ்ந்து வருபவர்.
உரத்த சுய பிரகடனம், சுய புகழ்ச்சி,லொளகீக பலன்களை எல்லாம் தாண் டி, இலக்கியும், எழுத்து என்று வாழ்ந்து வருகின்றார்.
இது, மணிக்கொடியின் பொன்விழா ஆண்டு ( 1983). அகடாமி, பீடங்கள், அகில இந்திய சங்கங்கள், இலக்கிய வட்டங்களுக்கெல்லாம் கொஞ்சம் சங்கடமான காலம். அவரகளின் கண்ணில், மணிக்கொடி படாமல் இருக்குமா? அவர்களுக்கு சோதனைக் காலம்தான்”என்று எழுதினார்.
ஒருமுறை, இலங்கைத்தமிழர்கள் படுகொலைக்குறித்து, மிகவும் மனம் நொந்து எழுதினார். இலங்கை தமிழர்கள், அடுத்தடுத்து கொலை செய்யப்படுவது, பிரிட்ஷார் காலத்தில் கூட இல்லாத, கொடுமையாக தெரிகின்றது. கற்காலத்துக்கே உரிய கோர சம்பவங்கள், இலங்கையில் நடந்து வருகின்றது. இதுபோல்தான், இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில், ஆர்மினியர்கள் ஆயிரக்கணக்கில்  கொல்லப்பட்டனர். நம்மவனில்லாதவன், என்ற உணர்வு, நாகரீகத்தை சார்ந்தது என்று  எண்ணவே, கூச்சமாக இருக்கின்றது. ஒரு ஜனநாயக அரசியல் அமைப்பைக் கொண்ட நாட்டில் கூட, இப்படிப்பட்ட  கொலைகள் நடப்பது, ஒரு இனத்தையே, அழிப்பது போன்றது.”
உலக அரங்கின் இலக்கிய நிகழ்வுகளையும் கூர்ந்து நோக்குபவர் அசோகமித்திரன், அவரது பார்வையில் ,”ஆல்பெர் காம்யூ, தற்கொலை செய்து கொள்ளவில்லை, ஒரு சாலை விபத்தில் ( 1960) இறந்தார். அப்போது அவருக்கு வயது 47. ( வானொலி நிகழ்ச்சிகள் இப்படிஒரு மரபை உண்டு பண்ணிவிட்டன, யாராவது, இறந்துவிட்டால், உடனே வயதை தெரிந்து விட வேண்டும்). 1950 – 60 களில், காம்யூவிற்கு ஒரு குரு ஸ்தானமே கொடுக்கப்பட்டது. ஆனால், இன்று காம்யூ பேஷனில்லை. வேறு பேஷன் குருக்கள் வந்துவிட்டார்கள். பொதுவாக, எழுத்தாளர்களுக்கு அளிக்ககூடிய  அத்தனை வெகுமானங்கள் , பரிசுகள் பெற்றவர் காம்யூ. முதிர்ந்த எழுத்தாளர்கள் பலர் இருக்க, நோபில் பரிசு வாங்கிய, காம்யூவிற்கு வயது, 44.
காம்யூவைப்பற்றி பேசும் போது, சார்த்தரும் நம், நினைவிற்கு வருகின்றார்.இருவருமே, சம காலத்தவர். இருவருமே, கதைகள்,
நாவல்கள், நாடகங்கள் எழுதியர்கள். சார்த்தரின் எழுத்துக்கள் தளம் விரிவானது, நகைச்சுவையும், கற்பனையும் கூடியது.
ஆனால், காம்யூவின் தீவிரத்தன்மை விஷேசமானது.ஆனால், காம்யூவிற்கு கொடுக்கப்பட்டு, சில ஆண்டுகளுக்கு பிறகே,
சார்த்தருக்கும், நோபில் வழங்கப்பட்டது. ஆனால், சார்த்தர், அதனை மறுத்துவிட்டார். எல்லா பரிசுகளைப்போலவும், நோபில் பரிசிலும், சில சேதாரங்கள் உண்டு ” என்று அ.மி.யின். சிந்தனை, கணையாழியில் வெளிப்பட்டது.
இதே நேரத்தில், ஆதிமூலத்தின், கோட்டு ஒவீயத்தைப்பற்றியும் எழுதினார். ஆதிமூலத்தின், புதிய முயற்சியை பாராட்டினார்.
ஒருமுறை, மணிக்கொடி எழுத்தாளர், பி.எஸ். ராமையா இழப்பு குறித்து, கணையாழியில் எழுதினார், ” மணிக்கொடிக்காலத்தின், இன்னொரு, ஸ்தூல அடையாளம் மறைந்துவிட்டது. மணிக்கொடிக்குழு, ஆங்கிலப்பட்டதாரிகளைக் கொண்டது.  அவர்கள், மத்தியில், ராமையா ,அந்த குழுவின் தலைமை பொறுப்பில் நின்று பணியாற்றியுள்ளார். மூன்று மாதங்கள், தொடர்ந்து அவர், நாடக வகுப்பு நடத்தியது, வரலாற்றில் குறிப்பிட வேண்டியது” என்றார்.
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகம் நடத்திய, நாடக நிகழ்வில், சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல் சம்பந்த முத்லியார் நிகழ்வுகளைப்பற்றி
சொல்லி சென்றுவிடாமல், இன்றைய அஸ்வகோஸ், ஞாநி போன்ற முற்போக்கு சிந்தனை கொண்ட நாடகக்காரர்களயும் அழைத்து,
நாடகம் குறித்து பேசியது, ஒரு ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்தும்  எனறு, பழமையும், புதுமை இணைப்பை, அசோகமித்திரன் பாராட்டினார்.
அசோகமித்திரனின் தொடர் வாசிப்பும், ஆழமான சமூகப்பார்வையும், அதனைக் கொண்டு, அவர் செய்யும் நையாண்டித்தனங்களும், அவரது தீவிர வாசகர்களுக்கு தெரியும். தமிழில் மட்டுமே எழுதாமல், ஆங்கில புலமையும் பெற்ற, ஒரு சில தமிழ் எழுத்தாளர்களில் , அவர், எழுத்தாளர்களின் எழுத்தாளர் என்று, 25 ஆண்டுகளுக்கு முன், கணையாழி  கூட்டத்தில், சுஜாதா சொன்னது உண்மைதான்.
…………………………………………………………………………………..
Series Navigationஉமர் கயாம் ஈரடிப் பாக்கள்தொடுவானம் 162. தேவதைகள் தரிசனம்
author

இரா. ஜெயானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *