தற்காலத் தமிழ்ப் பெயர்ச் சொற்கள்

author
3
0 minutes, 2 seconds Read
This entry is part 9 of 18 in the series 23 ஏப்ரல் 2017

20150908_111425

செ.தமிழ்ச்செல்வம்

முனைவர்ப் பட்ட ஆய்வாளர்

மொழியியல் துறை

தமிழ்ப் பல்கலைக்கழகம்

தஞ்சாவூர்- 613 005

 

முன்னுரை

                    மொழி காலந்தோறும் மாறும் இயல்புடையது. இதன் அடிப்படையில் மொழி இலக்கணமும் மாற்றி அமைக்கப்பட வேண்டியது இயல்பே. இவ்விலக்கண அமைப்பில் பெயர்ச்சொல் முக்கிய இடத்தை வகிக்கிறது. எந்த ஒரு வாக்கியத்திலும் பெயர்ச்சொல்லின் பங்கு இன்றியமையாததாக உள்ளதை உணரமுடிகிறது. இப்பெயர்ச்சொல் தற்கால தமிழ் மொழியில் எவ்வாறு வடிவ நிலையிலும் பொருண்மை நிலையிலும் மாறுபடுகிறது என்பதை குறிப்பிட்ட பெயர்ச்சொற்களை தரவாக எடுத்துக்கொண்டு கண்டறிய முயல்வது இக்கட்டுரையின் நோக்கம்.

 

பெயர்ச்சொல்

வேற்றுமை உருபுகளை ஏற்கும் அனைத்து சொற்களும் பெயர்ச்சொற்களாகும். சொல்வகை நான்கில் முதலாவதாகப் பெயர்ச் சொல்லை மரபிலக்கணங்கள் குறிப்பிடுகின்றன.  பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில், சுட்டு, வினா, என்ற அடிப்படையிலும் உறவு, உடைமை, எண், சாதி அடிப்படையிலும் அமைகின்றன. இது இடுபெயராகவும் மூவிடங்களுள் ஒன்றிற்கு உரியதாகவும், பாலிடங்காட்டும் விகுதிகளைப் பெற்றும் பெறாதும் உயர்திணைக்குரியவனவாகவோ, அஃறிணைக்குரியனவாகவோ, அவ்விரு திணைக்கும் பொதுவாகவோ வரும். ஓரெழுத்து ஒரு மொழியாகவும் அமைகின்றன என மரபிலக்கணங்கள் அடிப்படையில் பெயர்சொல்லிற்கு விளக்கம் தரலாம்.

காலம் காட்டும் பெயர்ச்சொற்கள்.

 

‘‘………………………

நினையுங் காலை காலமொடு தோன்றும்’’

(தொல்.சொல்.வினையியல் 1)

என்ற வினைச்சொல் சூத்திரத்தின் இவ்வடி சில இடங்களில் பெயர்ச் சொல்லிற்கு ஏற்புடையதாக அமைகிறது. அவ்வகையில் வினையாலணையும் பெயரும் தொழிற்பெயர்களில் சிலவும் காணமுடிகிறது.

வினையாலணையும் பெயர்:

ஒரு வினையின் பெயரெச்ச வடிவிலிருந்து உருவாக்கப்படுகின்ற பெயர் வினையாலணையும் பெயர் ஆகும். இது செயல் செய்பவரைக்குறிக்கும். இதை பின்வருமாறு சூத்திரப்படுத்தலாம்.

(பெயரெச்சம்  + அகரச்சுட்டு = வினையாலணையும் பெயர்)

எ.கா.                   

சொல்லுற  + அவன்      = சொல்லுறவன்

சொன்ன    + அவன்      = சொன்னவன்

சொல்லுப  + அவன்      = சொல்லுபவன்

மேற்கண்ட எடுத்துக்காட்டுக்களில் ‘‘சொல்லுறவன்’’ என்ற வினையாலணையும் பெயர் நிகழ்காலத்தையும் ‘‘சொன்னவன்’’ என்ற வினையாலணையும் பெயர் இறந்த காலத்தையும் ‘‘சொல்லுபவன்’’ என்ற வினையாலணையும் பெயர் எதிர்காலத்தையும் காட்டுகின்றது. எனவே வினையாலணையும் பெயர் காலம் காட்டுகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.

 

தொழிற்பெயர்

ஒன்றன் தொழிலைக்குறிக்கும் பெயர் தொழிற்பெயர் ஆகும். இது வினையடியுடன் சில பின்னொட்டுக்களைச் சேர்த்து உருவாக்கப்படுகிறது.

எ.கா.

‘‘நீங்கள் சொன்னதை நான் கேட்டேன்’’

‘‘நீங்கள் சொல்கின்றதை நான் கேட்கிறேன்’’

‘‘நீங்கள் சொல்வதை நான் கேட்பேன்’’

மேற்காணும் எடுத்துக்காட்டுகளில் ‘‘சொன்னதை’’ என்ற சொல் இறந்த காலத்தையும்‘‘சொல்கின்றதை’’ என்ற சொல் நிகழ்காலத்தையும் ‘‘சொல்வதை’’ என்ற சொல் எதிர்காலத்தையும் குறிக்கின்றது. இவ்வாறு சில பெயர்ச்சொற்களும் காலத்தைக் காட்டுகின்றன என்பதை அறிய முடிகிறது.

வடிவ மாற்றம்

வடிவ நிலையிலும் சில பெயர்ச்சொற்கள் மாற்றம் அடைந்துள்ளதைக் கீழ்காணும் எடுத்துக்காட்டு வழி காணலாம்.

உண்டான்    >      உண்டனன்    >    உண்டவன்

உண்டாள்    >      உண்டனள்    >     உண்டவள்

‘‘உண்டான்’’ என்ற சொல் ‘‘உண்டனன்’’ என்று வழக்கில் இருந்தும் தற்காலத் தமிழில் ‘‘உண்டவன்’’ என்றும் வழக்கில் உள்ளது. ‘‘உண்டாள்’’ என்ற சொல் ‘‘உண்டனள்’’ என்று வழக்கில் இருந்தும் தற்காலத் தமிழில் ‘‘உண்டவள்’’ என்று வழக்கில் உள்ளது. இது போன்று பொருண்மை மாறாமல் அவ்வடிவம் மட்டும் மாற்றம் அடைந்துள்ளதனை காணமுடிகிறது.

 

பொருண்மை மாற்றம்

ஒரு சொல்லின் வடிவம் மாறாமல் பொருள் மட்டும் மாறியுள்ளதைக் கூறுவது பொருண்மை மாற்றம் ஆகும். மேலே கொடுக்கப்பட்டுள்ள ‘‘உண்டான்’’ என்ற சொல் தற்காலத்தில் அது ஒரு வினைமுற்றாக ‘‘சாப்பிட்டான்’’ என்ற பொருளில் வருவதை அறியமுடிகிறது. சங்கத்தமிழிலும் இதேப் பொருளைக் குறித்தாலும் அச்சொல் தற்போது ‘‘சாப்பிட்டான்’’ என்ற பொருளில் ஒரு வினைமுற்றாக வருகிறதே தவிர வினையாலணையும் பெயராக வருவதில்லை. இவ்வாறு இலக்கண அமைப்பிலும் பெயர்ச்சொற்கள் மாற்றத்தை வெளிப்படுத்தி நிற்கின்றன. சில நேரங்களில் இலக்கண மாற்றங்கள் அடையாமலும் தற்போதும் வழக்கில் உள்ளன.

எ.கா.

இன்னா செய்தாரை ஒருத்தல் அவர்நாணம்

நன்னயம் செய்து விடல்.

(குறள்.அறம் 314)

மேற்குறிப்பிட்ட ‘‘செய்தாரை’’ என்ற சொல் செய்தவரை என்று வினையாலணையும் பெயராக விளங்குகின்றது. அது போல் தற்காலத்தில் ‘‘வந்தாரை வாழவைக்கும் தமிழகம்’’ என்று கூறும்போது இலக்கண அமைப்பில் வேறுபாடு இல்லை எனவும் உணரமுடிகிறது. ‘‘நாற்றம்’’ என்ற சொல் சங்கத் தமிழில் ‘‘நறுமணம்’’ என்ற பொருளில் விளங்கியது. தற்போது அது ‘‘துர்நாற்றம்’’ என்ற பொருளில் விளங்குவதை அறிய முடிகிறது. இவ்வாறு தமிழ்ப் பெயர்ச்சொற்கள் வடிவ நிலையிலும் பொருண்மை நிலையிலும் இலக்கண அமைப்பு நிலையிலும் மாற்றம் அடைந்துள்ளதனை அறிய முடிகிறது.

சுட்டுப்பெயர்

‘‘அ இ உ அம்மூன்றும் சுட்டே’’

(தொல்.எழுத்து.நூன்மரபு 31)

எ.கா.

அவன்

இவன்

உவன்

மேற்கூறிய எடுத்துக்காட்டுக்களில் ‘‘அவன்’’ என்ற சொல் தூரத்தில் இருப்பவனையும் ‘‘இவன்’’ என்ற சொல் அருகில் இருப்பவனையும் ‘‘உவன்’’ என்ற சொல் இருவருக்கும் மத்தியில் இருப்பவனையும் சங்க காலத்தில் குறித்தது. ஆனால் ‘‘உவன்’’ என்ற சொல் தற்கால வழக்கில் இல்லாததை அறிய முடிகிறது. ஆனால் இது இலங்கைத் தமிழில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 ‘‘கள்’’ என்னும் பன்மைப் பின்னொட்டு

‘‘கள்ளொடு சிவணும் அவ் இயற் பெயரே

கொள் வழி உடைய, பல அறி சொற்கே’’.                   (தொல்.சொல்.பெயரியல் 15)

மேற்கண்ட நூற்பா வழி ‘‘கள்’’ என்னும் பன்மை பின்னொட்டு பழந்தமிழில் அஃறிணைக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது மாணவிகள், மருத்துவர்கள் என்று உயர்திணைக்கும் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு பல நிலைகளில் மொழியில் பெயர்ச்சொல்லும் அதனைச் சார்ந்த ஒட்டுக்களும் மாறி வருவதைக் காணமுடிகிறது.

 

வேற்றுமை உருபுகள்  

‘‘அவைதாம்,

பெயர், ஐ, ஒடு, கு,

இன், அது, கண், விளி, என்னும் ஈற்ற’’.

(தொல்.சொல்.வேற்றுமையியல் 3)

மேற்கண்ட நூற்பா வாயிலாக வேற்றுமை உருபுகள் எட்டு என்கிறார் தொல்காப்பியர். இவ்வேற்றுமை உருபுகள் சங்க காலத் தமிழிலிருந்து தற்காலத் தமிழில் எவ்வாறு மாற்றம் அடைந்துள்ளன என்பதைக் சில எடுத்துக்காட்டுகளுடன் கீழ்காணலாம்.

 

‘‘கண்ணன் வந்தான்’’.

‘‘அவனைக் கண்டேன்’’.

‘‘அரசனோடு சேவகன் வந்தான்’’.

‘‘கத்தியால் குத்தினேன்’’.

‘‘அவனுக்குக் கொடுத்தேன்’’.

‘‘அது எனது புத்தகம்’’.

‘‘அது என் அப்பாவின் புத்தகம்’’.

‘‘அது என்னுடைய புத்தகம்’’.

இன் என்னும் வேற்றுமை ‘‘போல’’ என்ற பொருளில் சங்க காலத்தில் இடம் பெற்றுள்ளது.

எ.கா.

‘‘வேங்கையின் மைந்தன்’’.

‘‘புலியைப் போன்ற அரசன்’’ என்பது பொருளில் வருகிறதே தவிர உடைமைப் பொருளில் வரவில்லை. ஆனால் தற்காலத்தில் அது உடைமைப்பொருளில் இடம்பெறுவதைக் காணமுடிகிறது.

எ.கா.

‘‘அது என் அப்பாவின் புத்தகம்’’.

‘‘என் தம்பியின் திருமணத்திற்கு நீ வரவேண்டும்’’.

இவ்வாறு பெயர்ச்சொல் மட்டுமல்லாது பெயரைச் சார்ந்துள்ள வேற்றுமை உருபுகளும் மாற்றம் அடைந்துள்ளன என்பதை அறிய முடிகிறது.

முடிவுரை

சில பெயர்ச்சொற்கள் வழக்கிழந்துள்ளன. சில பெர்ச்சொற்கள் பொருண்மை மாற்றமும் இலக்கண மாற்றமும் வடிவ மாற்றமும் அடைந்துள்ளன. இவ்வாறு காலந்தோறும் பெயர்ச்சொற்களும் அதனைச் சார்ந்துள்ள வேற்றுமை உருபுகளும் ஒட்டுக்களும் மாற்றம் அடைவதால் அந்தந்த காலத்திற்கும் மாற்றத்திற்கும் தகுந்தார்போல் இலக்கணம் மாற்றி அமைக்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

பார்வை நூல்கள்

 1. கருணாகரன், கி. & ஜெயா, வ. 1997. மொழியியல். சிதம்பரம்: மெய்யப்பன்

பதிப்பகம். முதல் பதிப்பு.

 1. 2. அறவாணன், க.ப & தாயம்மாள் அறவாணன். 1975. தொல்காப்பியக் களஞ்சியம். சென்னை: பாரிநிலையம். முதல் பதிப்ப
 2. பாலகுமார், மு. 2014. மொழியின் பொதுமைக் கூறுகள் கருத்தியல் விளக்கம். இந்தி மொழிகளின் நடுவன் நிறவனம். முதல் பதிப்பு.
 3. ………. 2009. திருக்குறள். சாமி சிதம்பரனார் கருத்துரை. சென்னை: கொற்றவை நிலையம்.தி நகர்.

 

Series Navigationவள்ளுவர் சொல்லும் காமசூத்திரம் (11) அதிகாரம் 119: பசப்புறு பருவரல்வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! (ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்) 9.
author

Similar Posts

3 Comments

 1. Avatar
  கோ. மன்றவாணன் says:

  இலக்கணம் குறித்த கட்டுரையில் ஏராளமான எழுத்துப்பிழைகள் உள்ளன. ஒருமை-பன்மை மயக்கம் போன்ற இலக்கணப் பிழைகள் உள்ளன.

  “சொல்கின்றதை” என்ற சொல் நிகழ்காலத்தைக் குறிப்பதாகச் சொல்லும் போது, “சொல்வதை” என்ற சொல்லும் நிகழ்காலத்தைக் குறிப்பதாகவே தெரிகிறது. சொல்லப்போவதை என்ற சொல் எதிர்காலத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இதை நான் உறுதிபடச் சொல்லவில்லை. ஐயத்தைத்தான் எழுப்புகிறேன். ஆசிரியரிடத்தில் அதற்குத் தகுந்த விளக்கம் இருக்கலாம்.

  “இன்” என்ற வேற்றுமை உருபு, போல என்ற பொருளிலும் வரும் என்கிறார். வேங்கையின் மைந்தன் என்ற எடுத்துக்காட்டையும் குறிப்பிட்டுள்ளார். “அவன் அப்பா புலி” என்று பேசுவதைக் கேட்கலாம். அப்படியானால் அப்பாவே வேங்கை. அவரின் மகன் வேங்கையின் மைந்தன் ஆகலாமே!இங்கே “போல” என்பது இல்லாமல் போய்விடுகிறதே!உடைமைப்பொருளில் ஆளப்படுவதாக ஆகிவிடுகிறதே. பல அரசியல்வாதிகளின் பிள்ளைகள் அரசியலுக்கு வந்துள்ளனர். அந்த வாரிசுகளைத்தாம் வேங்கையின் மைந்தர்களாக அழைக்கின்றனர். புதியதாக வந்த அரசியல்வாதியை யாரும் வேங்கையின் மைந்தன் என்று சொல்வதில்லை.

  ஒருவரை, வேறொருவராய்… வேறொன்றாய்ப் பாவிக்கும்போது போல, ஒப்ப. அன்ன போன்ற சொற்கள் தேவையில்லாமல் போய்விடுகின்றன.

  மண்ணின் மைந்தன் என்றும் சொல்கிறோமே… அப்படியானால் ஆசிரியரின் பார்வையில் மண்போன்ற மைந்தர்களா?

  கால வளர்ச்சிக்கு எற்ப இலக்கணம் மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்பதில் எனக்குக் கருத்து மாறுபாடு இல்லை. எனினும் நாம் செய்யும் இலக்கணத் தவறுகளை எல்லாம் அப்படியே இலக்கணச் சரிகளாக ஆக்கக் கூடாது. ஒழிபியல் என்பதே தவறுக்குத் துணைபோன செயல்தான்.

  தற்காலத்தில் இலக்கணத் தவறுகள் இருந்தால் அவற்றைத் திருத்திக்கொள்ள நாம் முயல வேண்டும். அறியாமையால் செய்கின்ற எதையும் அப்படியே ஏற்றுக்கொள்ளக் கூடாது. அறிந்தவர்கள் காரண காரியத்தோடு ஒன்றை மாற்றி அமைக்கும்போது சீர்தூக்கிப் பார்த்து ஏற்றுக்கொள்ளலாம்.

  இருக்கும் இலக்கணத்துக்கு இன்னும் மெருகு சேர்க்கவும்- புது நுட்பங்களைக் கண்டறிந்து மொழிவளர்ச்சிக்குத் துணைசெய்யவும்தாம் இலக்கண வளர்ச்சிப்போக்கு இருக்க வேண்டும். புதுமுறை ஒழிபியல் வேண்டியதில்லை.

  இது எதிர்வினை அல்ல. இவையாவும் ஐயங்களே. தகுந்த விளக்கங்கள் இருக்கக் கூடும். அவற்றை அறியவே இதை எழுதினேன்.

  அன்புடன்
  கோ. மன்றவாணன்

 2. Avatar
  வளவ். துரையன் says:

  மன்றவாணன் கருத்துகல் மிகச்சரியே ‘இன்’ என்பது போல என வராது

 3. Avatar
  வளவ். துரையன் says:

  மன்றவாணன் கருத்துகளுக்கு நானும் உடன்படுகிறேன். ‘இன்’ என்னும் உருபு ‘போல’ என்னும் பொருளில் வராது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *