பிரான்சு நிஜமும் நிழலும் – II (கலை, இலக்கியம்) பதினேழாம் நூற்றாண்டு

This entry is part 2 of 18 in the series 23 ஏப்ரல் 2017

L’honnête homme

பிரெஞ்சு ஓவியத்துறையும், இலக்கியங்கள் குறிப்பாக நாடகத்துறை புகழின் உச்சத்தில் இருந்த காலம் பதினேழாம் நூற்றாண்டு. தத்துவ உலகெங்கும்  கொண்டாடப்படுகிற ரெனெ தெக்கார்த்(René Descartes) , நாடகவியலாளர்களும் படைப்பாளியுமாகப் புகழ்பெற்ற பியர்கொர்னெய் (Pierre Corneille) ழான் ரசீன் (Jean Racine) மொலியேர்(Molière) ஆகியோரும் ; லெ நேன் சகோதர ர்கள் (Frères Le Nain), ழார்ழ் துமெனில் (Georges Dumensil de la Tour ), நிக்கொலா பூஸ்ஸன் (Nicolas Poussin)  போன்ற ஓவியர்களும் இந்த நூற்றாண்டில் முக்கியமானவர்கள்.  பதினைந்தாம் நூற்றாண்டு   இத்தாலியைப் போலவே  பதினேழாம் நூற்றாண்டில் பிரெஞ்சு படைப்புலகமும், அரசியலும் ஐரோப்பிய சரித்திரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தின.  லிபெர்த்தினிஸம்(Libertinisme), ழான் செனிஸம் (Le Jansénisme), கிளாஸ்ஸிஸம் (Le Classicisme) ஆகிய மூன்று இயக்கங்களினாலும் இந்நூற்றாண்டு பெயர் பெற்றது. இது தவிர பிரெஞ்சு அரசியலில் பதின்மூன்றாம் லூயி, பதினான்காம் லூயி ; சமய குருக்களான கார்டினல் ரிஷ்லியெ, கார்டினல் மஸாரின் ஆகியோரின் தாக்கத்தையும் கொண்ட து. முதலாவது கார்டினல் ரிஷ்லியெ(Richelieu) என்பவர்தான் பிரெஞ்சு அகாதமியை (1634) ஏற்படுத்தியவர். முதல் அகராதி,  பிரெஞ்சு மொழிக்கென உருவானதும் இக்காலக் கட்டத்தில்தான்,ஆண்டு 1690, உருவாக்கியவர் அந்த்துவான் ஃயூர்த்தியெர் (Antoine Furtière) என்ற மொழியறிஞர்.

பதினேழாம் நூற்றாண்டும் பிரெஞ்சு அரசியலும் :

சுதந்திரம் பெற்றத் தொடக்கத்தில் இந்தியா எப்படி சிதறுண்டிருந்ததோ, அப்படியான நிலையில்தான் பிரான்சு நாடும் இருந்தது. இன்றிருக்கும் எல்லைப் பரப்பைக் கொண்ட நாடாக அன்று இல்லை. அதற்குப் பல காரணங்கள். அன்றைக்குங்கூட பிரான்சுநாட்டின் பூர்வீகமக்களென குறிப்பிட்ட இனத்தவரைச் சுட்டுவது கடினம். கிழக்கு ஐரோப்பிய குடிகள், ரொமானியர்கள், ஹன்ஸ் என்கிற நோர்டிக் இனத்தவர்  இப்படி பல இனத்தவர்களும் கலந்து உருவானவர்களே பிரெஞ்சு மக்கள். இவர்களுடன் இன்று கணிசமாக நேற்றைய காலனி மக்களும் ஆசிய, ஆப்ரிக்க நாடுகளிலிருந்து அகதிகளாக வந்தவர்களும் சேர்ந்து கொண்டுள்ளனர். உண்மை இப்படியாக இருக்கையில் அதிபர் வேட்பாளராக இருக்கிற வலது சாரி பெண்மணி  வருங்காலத்தில் பிரெஞ்சுக் குடியுரிமையைப் பெற  பிரெஞ்சு மண்ணில் பிறந்தால் மட்டும்போதாது ஐரோப்பிய வம்சாவளியினராகவும் இருக்க வேண்டுமென்ற என்ற கருத்தை முப்ன்மொழிந்திருக்கிறார்.  வருங்காலத்தில் எதுவும் நடக்கலாம் என்றாலும் அசலான பிரெஞ்சு மக்களை அடையாளப்படுத்துவது எளிதானதல்ல.

பதினேழாம் நூற்றாண்டு பிரான்சு,  சமயப்போரினால் பாதித்த நாடு, இரண்டு லட்சத்திற்கும் குறைவான  மக்கள். போக்குவரத்து, தகவல் தொடர்புகளை அறிந்திராத வாழ்க்கை ; நகரங்களைக் காட்டிலும் கிராமப்புறங்கள் அதிகம். ஆகவே இவைகளெல்லாம் மனிதர் சிந்தனையில் எதிரொலிக்கவே  செய்தன. ஒரு நூற்றாண்டு சமயப்போர் தணிந்திருந்த போதிலும் புரொட்டஸ்டண்ட் மற்று கத்தோலிக்க மத த்தினரிடையே பெரும் பிளவை உண்டாக்கியிருந்தது. இத்தகைய சூழலில் பிரெஞ்சு மக்கள் புணர்வாழ்விற்கு ஏங்கினார்கள். அரசு நிர்வாகத்தின் கட்டமைப்பு குலைந்திருந்த நிலையில் சீரமைக்க வேண்டியிருந்தது. நான்காம் ஹாரி (1553-1616) என்ற பிரெஞ்சு மன்ன ன் சமயப்போரினால் மிகவும் பாதித்திருந்த புரொட்டஸ்டண்ட் மக்களை சமாதாப் படுத்தவேண்டி அவர்களுக்கு உத்தரவாதம் அளிக்கின்ற வகையில் ஒரு பிரேரணையில் கையொப்பமிட்டான். அதற்கு நாந்த் பிரேரணை (l’Edit de Nantes) என்று பெயர். கத்தோலிக்க மத தீவிர வாதிகளாற் பாதிக்கபட்ட புரொட்டஸ்டண்ட்டுகள் பாதுகாப்பான உறைவிடங்களை அமைத்துக்கொள்ள்வோ, ஆயுதபல்த்தை அதிகரித்துக்கொள்ளவோ, சுதந்திரமாக தங்கள் சமயவழிபாட்டினைத் தொடர்வதற்கோ எவ்வித தடையுமில்லை என்று அதில் அரசு உறுதி அளித்திருந்தது. புரொட்டஸ்டண்ட் மக்களுக்கு மட்டுமன்றி பிற மக்களுக்கும் சுதந்திரமான சிந்தனைக்கு, இதொரு வகையில் வழி வகுத்த து எனலாம். இதன் காரணமாகவே கத்தோலிக்க தீரவாதிகள் நான்காம் ஹாரி மன்னனைக் கொலை செய்கிறார்கள். இவரது கொலைக்குப்பிறகு அவரது ஒன்பது வயது மகன் பதின்மூன்றாம் லூயி  பட்டத்திற்கு வருகிறான். இந்நிலையில் உண்மையான நிர்வாகப்பொறுப்பை அவர் தாயார் மரி தெ மெடிஸி, ஆலோசகர்கள் உதவியுடன் நடந்த்துகிறார். எனினும் நிர்வாகத்தில் தொடர்ந்து குழப்பங்கள், ஒரு கட்டத்தில் தாய்க்கும் மகனுக்குமே பகை ஏற்படுகிறது. நிர்வாகம் முழுமையாகத் தன் தாயின் கைக்குப் போனதை  விரும்பாத அரசன் தாய்க்கு அனுசரணையாக இருந்த கோன்சினி(le conte Concini) பிரபுவைக் கொல்வதோடு, நிர்வாகர்த்திலிருந்து தாயையும் ஒதுக்கிவைக்கிறான்.  அதன் பின்னர் உருவான அரசியல் சிக்கலைத் தீர்த்துவைத்ததில் கார்டினல் ரிஷ்லியெவிற்குப் பெரும்பங்குண்டு.  பதின்மூன்றாம் லூயி மன்னன் இறந்து பதினான்காம் லூயி பட்டத்திற்கு வந்த போது அவருக்கும் வயதென்னவோ ஐந்துக்கும் குறைவுதான். திரும்பவும் ஆட்சி நிர்வாகம் இறந்த மன்னனின்  மனைவியான ஆன் என்பவளிடம் போகிறது. ஆன் ஆதரவுபெற்ற ழூல் மஸாரன்(Jules Mazarin) அதிகாரம் கொடிகட்டிப்பறக்கிறது. நிர்வாகம் தள்ளாடுகிறது, மக்கள் வரிச்சுமையால் அல்ல்படுகின்றனர். ழூல் மசாரன் ஊழலுக்குப் பெயர்போனா ஆசாமி, இவரைப்பற்றிக் கூற சுவாரஸ்யமான விடயங்கள் நிறைய இருக்கின்றன. நாட்டுமக்களைப்போல்வே   பதினான்காம் லூயியும் சுதந்திரத்திற்கும்  முற்றுமுதலான அதிகாரத்திற்கும் விழைகிறான்.

நேர்மையான மனிதன் :

பதினேழாம் நூற்றாண்டு  மேல் தட்டுமக்களின், பெண்களின் அபிமானம் பெற்ற , கலை இலக்கியத்தின் மையப்பொருளாக இருந்த சொல் « நேர்மையான மனிதன் »  பதினான்காம் லூயி காலத்தில் அரசு நிர்வாகத்தில் பொறுப்பிலிருந்துகொண்டு ஏராளாமாக சம்பாதித்து,   மக்களின் வெறுப்பைக் கணிசமாகப் பெற்றிருந்த  கார்டினல் மஸாரன் கூட,  நேர்மையான மனிதன் என்ற சொல்லை மக்கள்  அதிகம் நேசிக்கக் காரணமாக இருக்கலாம். சமயப்போர் நேரிடையாகவும், மறை முகமாகவும் மக்களைப் பாதித்திருந்தது. ஆண்கள் சமயம், அரசியல் என்று ஏதாவதொரு காரணத்தை முன்னிட்டுச் சண்டையிட்டுக்கொண்டிருக்க, பெண்கள் படைப்பிலக்கியங்களில் ஆர்வம் செலுத்தினார்கள்.  நேர்மையான மனிதன் என்பவன் பெண்களின் அபிமானத்தைப் பெறவேண்டும் ; உழைப்பைக்காட்டிலும் பிறரை மகிழ்விக்கக் கூடியவனாக  இருப்பது ;  மரபுகளை, ஒழுங்குகளை, சமயத்தை துச்சமாக மதிப்பது ; நாத்திக சிந்தனை, நெறிமீறல் ஆகியவை முக்கியத்துவம் பெறுகின்றன. இத்தகைய சூழலில் தான் நொர்மாந்தி பகுதியைச் சேர்ந்த ஹர்க்கூர் (Harcourt) பிரபுவின் அவையைச் சேர்ந்த   நிக்கொலா ஃபொரெ (Nicolas Foret) என்பவர் « நேர்மையான மனிதன் அல்லது சபையை மகிழ்விக்கும் கலை » (L’honnête homme ou l’art de plaire à la cour) என்றொரு நூலை சூழலுக்கேற்பப் படைத்தார், பெண்கள் அபிமானத்திற்குரிய இலட்சிய மனிதனுக்கென சில  இலக்கணங்களையும் அதில் சிபாரிசு செய்தார். ஆக மொத்தத்தில் பதினேழாம் நூற்றாண்டு பிரான்சு நாடு நேர்மையான மனிதனுக்கென்று சில இலக்கணங்களை வகுத்திருந்தது : அவன் சகலகலாவல்லவன், ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் அறிந்தவன். பிரபுக்கள் கூட்டத்தைச் சேர்ந்தவன் ,மேல்தட்டுமக்களுக்கு உரிய பண்புகளைத் தவறாமற் பெற்றவன். அவன் இருக்குமிடம், புழங்குமிடம் ஒளியூட்டப்பட்டது, பிரகாசிக்கும் தன்மையது. அவனுடைய நளினமான பாவங்களும் நேர்த்தியான உடையும், சுவைநயமிக்க பேச்சும், நுட்பமான செயல்களும்  பிறர் கவனத்தைப் பெறுபவை. ஆக மொத்த த்தில்  ஒரு கூட்டத்தில் அல்லது பலரும் கூடியிருக்கிற சபையில் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ள விழைப்பவன். தன்னலத்திலும் பிறர் நலத்திலும்சேர்ந்தாற்போல அக்கறை செலுத்தும் மனிதன்.

(தொடரும்)

Series Navigationவேண்டாமே அதுஅனுமன் மகாபாரதம் – 1
author

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *