மரபிலக்கணங்களில் பெயர்கள்

author
0 minutes, 5 seconds Read
This entry is part 14 of 15 in the series 21 மே 2017

செ.தமிழ்ச்செல்வம்

முனைவர்ப் பட்ட ஆய்வாளர்

மொழியியல் துறை

தமிழ்ப் பல்கலைக்கழகம்

தஞ்சாவூர்- 613 005.

 

முன்னுரை

ஒரு மொழியமைப்பில் பெயர்ச்சொல்லின் பங்கு இன்றியமையாதது. இப்பெயர்சொற்கள் காலந்தோறும் வடிவ நிலையிலும் பொருண்மை நிலையிலும் மாற்றம் அடைந்து கொண்டே வருகின்றது. இவ்வாறு மாற்றம் அடைந்துள்ளது’ என்று கூறுவதற்கு ஒரு மரபிலக்கண ஒப்பீடு அவசியம். இவ்வாறு மரபிலக்கணங்களில் உயர்திணை மற்றும் அஃறிணைப் பெயர்கள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை ஒரு தொகுப்பாக எடுத்துக்கூற முயல்வதுதான் இக்கட்டுரையின் நோக்கம்.

 

சொற்கள்

ஓர் எழுத்து தனித்து நின்றோ ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துகள் சேர்ந்து நின்றோ பொருள் தந்தால் அது சொல் எனப்படும். தமிழில் ‘மொழி’, ‘கிளவி’, ‘சொல்’, ‘பதம்’ ஆகியவை சொல்லைக் குறிக்கும் வேறு சொற்கள் ஆகும். சொல்லுக்கு வடிவம் உண்டு. சொல் பொருளைக் குறிப்பது. கட்டுக்கோப்பு உடையது. சொல் அடிச்சொல்லையும் ஒட்டுகளையும் கொண்டது. சொற்களைக் கொண்டு தொடர் எனப்படும் வாக்கியம் அமைக்கலாம். ஒரு சொல்லின் பொருள் அவை பயன்படுத்தப்படும் இடத்தை ஒட்டி அமையும். நான், நீ, அவன் என்பவை இடத்தை ஒட்டிப் பொருள் தருகின்றன.

சொற்கள் வகைப்பாடு

சொற்களை நான்கு வகைகளாகத் தொல்காப்பியம் குறிப்பிடும். அவை பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என்பன. ஒன்றின் பெயரைக் குறிப்பது பெயர்ச்சொல் ஆகும். கந்தன், ஊர், கண் என்பவை பெயர்ச்சொற்கள். பெயர்ச்சொற்கள் வேற்றுமை உருபேற்று வரும். இவை கால ஒட்டுகளை ஏற்கும் வினைச் சொற்களிடம் இருந்து வேறுபடும். இக்கால இலக்கணத்தில் பெயரடைகள், வினையடைகள் என்று குறிப்பிடப்படும் சொற்கள் யாவும் பெயர்களிலிருந்தும் வினைகளிலிருந்தும் ஆக்கப்பட்டவையாகும்.

சொற்களை உணர்வு நிலையில் இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்று பகுக்கும் முறை தமிழ் இலக்கணங்களில் உள்ளது. தமிழகத்தில் இயல்பாக வழங்கும் சொல் இயற்சொல் ஆகும். நிலம், நீர், தீ, காற்று, சோறு, கூழ், பால், தயிர், கமுகு என்பவை எல்லாம் இயற்சொற்களாகும். சொல் முழுவதுமே மாறி ஒலித்தாலும் ஓர் எழுத்து மாறி ஒலித்தாலும் அது திரிசொல்தான். திரிதல் என்றால் ‘மாறி அமைதல்’ என்று பொருள் தரும். திரிசொல்லை இரண்டு வகையாகத் தொல்காப்பியம் பகுக்கிறது. ஒரு பொருளைப் பற்றி வரும் பல சொல், பல பொருளைக் குறிக்கும் ஒரு சொல் என்பனவே அவை. மலை என்ற ஒரு பொருளைக் குறிப்பிட வெற்பு, விலங்கல், விண்டு என்று பல சொற்கள் வருவதும் எகினம் என்ற ஒரே சொல் அன்னம், கவரிமான், நாய் என்று பல பொருளைக் குறிப்பதும் இந்த இருவகைத் திரிசொல்லுக்கும் சான்று ஆகும்.

வடசொல் என்பது சம்ஸ்கிருத மொழிச் சொல்லைக் குறிக்கும். அதை அம்மொழி எழுத்தால் எழுதாமல்  தமிழ், வடமொழி என்னும் இரண்டுக்கும் பொதுவான எழுத்தால் எழுதுவது வடசொல்.

தமிழ்ச் சொல்       வடசொல்
கடல் வாரி
மலை மேரு

நாளடைவில் ‘கடல்’ என்ற தமிழ்ச் சொல்லும், ‘வாரி’ என்ற வடசொல்லும் கடலைக் குறிக்கப் பயன்படுவதாயின. தொல்காப்பியச் சொல் அதிகாரத்தில் இத்தகு பகுப்பு உள்ளது.

பெயர்ச்சொல்

வேற்றுமை உருபுகளை ஏற்கும் அனைத்து சொற்களும் பெயர்சொற்களாகும். இது வேற்றுமை உருபுகளுக்காகவும் பன்மை எண்ணிற்காகவும் திரிபுறும் என்ற நிலையில் சொல்வகைப்பாட்டின் முக்கிய வகைப்பாடாக அமையும்.  மரபிலக்கணத்தார் எட்டு வேற்றுமைகளைக் காரண காரிய முறையில் வரிசைபடுத்தி எண்ணுமுறையாலும் உருபுகளின் பெயராலும் பொருள் வகையாலும் பெயர் கொடுத்துள்ளனர். அம்முறை பின்வருமாறு அமையும்:

வேற்றுமை உருபு பொருள்
முதல் வேற்றுமை அப்பெயரே உருபு எழுவாய் (கருத்தா)
இரண்டாம் வேற்றுமை செயப்படுபொருள்
மூன்றாம் வேற்றுமை ஒரு,ஆல்,இன் கருவி, காரணம், ஏதுபொருள்
நான்காம் வேற்றுமை கு கொள்ளுதல், ஏற்றல்
ஐந்தாம் வேற்றுமை இன் எல்லை, நீக்கம்
ஆறாம் வேற்றுமை அது (அ) உடைமை, கிழமை
எழாம் வேற்றுமை கண் இடம்
எட்டாம் வேற்றுமை வடிவு திரிதல் விளி-படர்க்கை, முன்னிலையாதல்

 

 

 

 

உயர்திணைப் பெயர்கள்

மரபிலக்கணங்களின் படி உயர் திணை ஆடூஉ அறிசொல் (ஆண்பால்), மகடூஉ அறிசொல் (பெண்பால்),  பல்லோர் அறிசொல் (பலர்பால்) என முப்பாலாக வரும். அவை அன், ஆன், அள், ஆள், , அர், ஆர் என்னும்  விகுதிகளால் மேற் கூறப்பட்ட பெயர் பகுதிகளோடும் சுட்டு வினா ஒப்புருபுகளோடும் கூடித் திரிபின்றி வரும் போது உயர்திணைப் பெயர்கள் ஆகும்.

மேற்கூறப்பட்ட பகுதிகளின் அடிப்படையில் தொல்காப்பியம் உயர்திணைப் பெயர்களைப் பின்வருமாறு வகைப் படுத்துகின்றது.

அவன், இவன்,உவன், அவள், இவள், உவள், அவர், இவர், உவர் எனச் சுட்டுப் பெயராகவும் யான், யாம், நாம் எனத் தன்மைப் பெயராகவும் யாவன், யாவள், யாவர் என வினாப் பெயராகவும் அன்னன், அன்னள், அன்னார், இன்னன், இன்னள், இன்னார் என ஒப்புப் பெயராகவும் ஆண்மகன், பெண்மகள், பெண்டாட்டி, திருவாட்டி, நம்பி, நங்கை, மகள், மக்கள், மாந்தர், அடூஉ, மகடூ, பெண்மகள், எல்லோரும், எல்லீரும் எனப் பொருட் பெயர்களாகவும் முல்லையான், குறிஞ்சியான், நாடன், ஊரன், சேர்ப்பன், சோழன், சேரன், பாண்டியன், பாணன், பாணத்தி, செவிலி, விறலி, பார்ப்பனி, பார்ப்பனன், அவையத்தார், மன்றத்தார் எனத் திணை பற்றியும்  சாதிபற்றியும் இடம்பற்றியும் வரும் பெயர்களாகவும் உண்டவன், தின்றவன், கொல்லன், கூத்தன் எனத் தொழில் பற்றிய பெயராகவும் இனியன், நெடியன், தாயர், தந்தையர், குருடர், செவிடர், வெட்சியர், கரந்தையர், இருவர், மூவர், பதின்மர், நூறுவர் என வருவன உயர்திணைப் பெயர்களாகும். இவற்றைச் தொல்காப்பியம் நூற்பா சொல்.159 விளக்கிக் கூறுகின்றது.

அடுத்துத் தொல்காப்பியர் பல்வேறு நிலைகளில் வரும் உயர்திணைப் பெயர்களைத் நூற்பா சொல். 162-இல் தொகுத்துக் கூறுகின்றார்.

வ எண் வகை எடுத்துக்காட்டுகள்
1 நிலப் பெயர்கள் குறிஞ்சியான், முல்லையான், மருதத்தான், பாலையான், நெய்தலான், ஊரான், நாடான், மதுரையான், கோவூரான், பாக்கத்தான், பட்டிணத்தான், வஞ்சிநாடன், சோழநாடன், பாண்டிநாடன்

இவ்வாறு ஏனைய பெண்பால் பலர்பால் விகுதிகளோடும் ஏற்குமாறு வரும்.

2 குழுவின் பெயர்கள் அவையத்தார், மன்றத்தார், ஆயத்தார், கழகத்தார், அத்தி கோசத்தார்

இவ்வாறு கழகத்தான், அத்திகோசத்தான் என்ற ஒருமைப் பாலிலும் வரும்.

3 வினைப் பெயர்கள் உண்டான், தின்றான், கற்றான், உண்டவன், தின்றவன், கற்றவன், கொல்லன், கூத்தன், ஓதுவன்,. இவ்வாறு பெண்பால் விகுதியோடும் பலர்பால் விகுதியோடும் பொருந்துமாறு வரும்.
4 உடைப் பெயர்கள் குட்டுவன் (குட்ட நாட்டையுடையவன்), குழையன் (குழையை அணிந்தவன்), வேலன் (வேற்படையை உடையவன்). இவ்வாறு ஏனைய பாற் பெயர்களிலும் பொருந்துமாறு வரும்.
5 பண்புகொள் பெயர்கள் கரியன், செய்யன், கூனன், நெடியன், குறளன், குரியன், தீயன், அன்பன், நல்லன், மாயன், மெய்யன், பொய்யன். இவ்வாறு பிற பாற் பெயர்களிலும் பொருந்துமாறு வரும்.
6 பல்லோர் குறித்த முறைநிலைப் பெயர்கள் தாயர், தந்தையர், தாய்மார், தந்தைமார், அண்ணன்மார், தம்பிமார், தங்கைமார், தம்பியர், பெயரர்
7 பல்லோர் குறித்த சினைநிலைப் பெயர்கள் குருடர், செவிடர், முடவர், வாயினர், கையினர்
8 பல்லோர் குறித்த திணைநிலைப் பெயர்கள் முல்லையார், குறிஞ்சியார், பாலையார், கைக்கிளையினர், பெருந்திணையினர்,வெட்சியார், காஞ்சியார், வாகையார்
9 கூடிவரு வழக்கில் ஆடியர் பெயர்கள் மணலைக் கயிறாகத் திரிப்பவன், கடலைக் கையால் முகப்பவன், மலையை உகிராற் பிளப்பவன், யானையைக் கையால் மறைப்பவன்
10 இன்றிவர் என்னும் எண்ணுப் பெயர்கள் ஏனதி, காவிதி, அரசர், அமைச்சர், தூதுவர், வாயிலோர், அடியார், எவர், தமர், பிறர், பிறள், மற்றையான், மற்றையாள், மற்றையார், மற்றையவர்

 

நன்னூலாரும் பெயர்களை உயர்திணை ஆண்பாற் பெயர்கள், உயர்திணைப் பெண்பாற் பெயர்கள் பலர்பால் பெயர்கள் எனப் பகுப்பார். இவர் பகுப்பு தொல்காப்பியத்திலிருந்து சிறிது வேறுபடும்.

அஃறிணைப் பெயர்கள்

தொல்காப்பியர் அது, இது, உது, அஃது, இஃது, உஃது என்ற ஆறு ஒருமை சுட்டுப் பெயர்களையும் அவை, இவை, உவை அவ்இவ், உவ் என்ற ஆறு பன்மை சுட்டுப் பெயர்களையும் யாது, யாவை என்ற மூன்று வினாப் பெயர்களையும் கூறிவிட்டு பின்வரும் பெயர்களையும் அஃறிணைப் பெயர்களாகப் பட்டியலிடுகின்றார்.

வ எண் வகை எடுத்துக்காட்டுகள்
1 முதல் வகை பல்ல, பல, சில, உள்ள, இல்ல
2 வினைப் பெயர்க் கிளவி வருவது, செல்வது, வருபவை, செல்பவை, உண்பது, உண்டன, மண்வெட்டி, கோடரி, இடிதாங்கி,சேர்ந்தாரைக் கொல்லி
3 பண்புகொள் கிளவி வண்ணம், வடிவு, அளவு,சுவை,குணம் பற்றியவை: கரிது, வெளியது, கரியவை, வெளியவை, கரியன, வெளியன, குறியது, நெடியது, குறியவை, நெடியவை, பெரிது, சிறிது, பெரியவை, சிறியவை, தீயது, தீயவை, இனியது,இனியவை, நல்லது, நல்லவை
4 எண்ணுக்குறிப் பெயர்கள் ஒன்று, இரண்டு, ஐந்து
5 ஒப்பினமாகிய பெயர்கள் அன்னது, அன்னவை, ஒத்தது, ஒத்தவை, போல்வது, போல்பவை
6 கள்’ளொடு சிவணும் பெயர் பல-அறி சொல்லாக வரும். ஆ, நாய், குதிரை, கழுதை, தெங்கு, பலா, மலை, கடல் – தொடக்கத்தன.

இனத்தைக் குறிக்கும் இவை ஒருமைக்கும், பன்மைக்கும் பொதுவானவை. தொல்காப்பியல் இவற்றை ‘இயற்பெயர்’ என்று குறிப்பிடுகிறார்.உரையாசிரியர் இளம்பூரணர் இவற்றைச் ‘சாதிப்பெயர்’ என்று குறிப்பிடுகிறார்.

  பல-அறி சொல் ஆக்கள், குதிரைகள், மலைகள்
  அன்ன பிற பிறிது, பிற, மற்றையது, மற்றையவை, பல்லவை, சில்லவை, உள்ளது, இல்லது, உள்ளன, இல்லன –என்னும் தொடக்கத்தன

 

 

முடிவுரை

மேலே தொகுத்துத் தரப்பட்டுள்ள பெரும்பாலான பெயர்கள் தற்காலத் தமிழில் பயன்பாட்டில் இல்லை. உயர்திணை மற்றும் அஃறிணை என்று தெளிவாகப் பிரித்துக் கொடுத்திருந்தாலும் சில பேச்சு வழக்குகளில் உயர்திணைக்கு அஃறிணை ஒட்டுக்கள் தற்காலத்தமிழில் பயன்படுத்தப்படுகின்றன. இதனை வழு என்பர். மேலும் இந்த மரபிலக்கணப் பெயர்கள் தற்காலப் பெயர்களுடன் ஒப்பிட்டுக் காணக்கூடிய ஒரு தரவாகவும் அமைகின்றது.

நோக்கீட்டு நூல்கள்

  1. தொல்காப்பியம்: சொல்லதிகாரம்: இளம்பூரணார் உரை (பதிப்பு 1973), சைவசித்தாந்த நூற்கழகம், சென்னை,.
  2. இராசேந்திரன், ச. தமிழில் சொல்லாக்கம். மொழியியல். 13, 14: 163-192.

 

Series Navigationமகாசிவராத்திரியும் சில தேநீர்க் கோப்பைகளும்வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! 13
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *