எருமைப் பத்து

This entry is part 2 of 19 in the series 28 மே 2017

பாச்சுடர் வளவ. துரையன், ஆசிரியர் “சங்கு” இலக்கிய இதழ்

ஐங்குறுநூற்றின் இந்தப்பகுதியில் வரும் பத்துப் பாடல்களிலும் எருமை வருவதால் இப்பெயர் பெற்றது எனலாம். எருமை மருத நிலத்திற்கு உரிய விலங்காகும். எருமையின் செயல்களெல்லாம் அந்நில மாந்தர்களின் செயல்களுக்கு உவமையாகக் கூறப்படுகின்றன. ஓரம்போகியார் நாள்தோறும் தாம் கண்டு இன்புற்ற காட்சிகளை இப்பாடல்களில் நன்கு புலப்படுத்தி உள்ளார்.

எருமைப் பத்து–1
நெறிமருப்[பு] எருமை நீல விரும்போத்து
வெறிமலர்ப் பொய்கை ஆம்பல் மயக்கும்
கழனி ஊரன் மகள்இவள்
பழன வெதிரின் கொடிப்பிணை யலளே
[நெறித்தல்=வளைதல்; மருப்பு=கொம்பு; போத்து= எருமைக் கடா; வெறி=மணம்; மயக்கும்=சிதைத்து அழிக்கும்; வெதிர்=கரும்பு; கொடிப் பிணையல்=பிணைத்துக் கொடி போலக் கட்டிய மாலை]

அவன் வந்து அவளைப் பாத்தான்; அவனுக்கு அவ மேல ஆசை வந்திடுச்சு; ஆனா அவ அவனைக் கண்டுக்கவே இல்ல; அதால அவனுக்கு வருத்தம் வந்துடுச்சு; சரி, அவ தோழியைப் பாத்து தன் நெலமயைச் சொல்லி ”எப்படியாவது எங்களச் சேத்து வை”ன்னு சொன்னான்; ஆனா அவளோ, ”இன்னும் அவ காதலிக்கற பருவத்துக்கே வரல; அவ்ளோ சின்னப் பொண்ணு”ன்னு சொல்றா; அதைத்தான் இந்தப்பாட்டுல சொல்றா.

“பெரிய கடாவான அந்த எருமைக்கு பெரிசா நல்லா வளைஞ்ச கொம்பு இருக்கு; அது நல்ல வாசனை உள்ள பூவெல்லாம் இருக்கற ஒரு குளத்துக்குப் போவுது; அங்க இருக்கற ஆம்பலை எல்லாம் சிதைச்சுப் போடுது; அப்படிப்பட்ட கழனியெல்லாம் வச்சிருக்கறவனோட மக இவ; வயல்ல கரும்பெல்லாம் பூத்திருக்கு; வாசனையே இல்லாத அந்தப் பூவைப் பறிச்சுக் கட்டின மாலையைதான் இவ போட்டிருக்கா”

இதான் பாட்டோட பொருளு; ஆனா வாசனையே இல்லாத பூமாலய வச்சிருக்கற அளவுக்கு அவ ஒண்ணும் தெரியாத பொண்ணு; அவளை வீணா சுத்தாதன்னு மறைவா சொல்றா: அப்பறம் எருமை தான் குளிச்சா போதும்னுதான் நெனக்கும்; ஆம்பல் அழியுதேன்னு கவலைப் படாது; அதுபோல அவளோட அப்பா மத்தவங்களுக்கு ஏற்படற துன்பம் பத்திக் கவலைப் படவே மாட்டாங்க அதால அவருக்கு நீ இப்படி வர்றது தெரிஞ்சா ஒனக்குத் தொல்லை தருவாங்கன்னு மறைவா சொல்லிக் காட்டறா.
இந்தப்பாட்டை அவனை விலகிப்போன்னு சொல்றதால குறிஞ்சித்திணையிலதான் சேக்கணும்; ஆனா எருமைன்ற கருப்பொருள் வர்றதால இதை ‘திணை மயக்கம்’னு மருதத்தில் சேத்து வச்சிருக்காங்க.
எருமைப்பத்து—2
கருங்கோட்[டு] எருமைச் செங்கண் புனிற்றாக்
காதற் குழவிக்கு ஊறுமுலை மடுக்கும்
நுந்தை நும்மூர் வருதும்
ஒந்தொடி மடந்தை! நின்னையாம் பெறினே

[கருங்கோடு=கரிய கொம்பு; செங்கண் புனிற்றா=சிவந்த கண்களை உடைய தாய் எருமை; மடுக்கும்=உண்பிக்கும்; பெரின்=பெற்றனமானால்;]

ஒன் சொந்தக் காரங்க யாரும் இன்னும் வந்து அவளைக் கேக்காததுதான் அவளை ஒனக்குக் கல்யாணம் செஞ்சு தராததற்குக் காரணமாம்னு தோழி அவங்கிட்ட சொல்றா; அப்ப அவன் தலைவிகிட்ட சொல்ற பதில்தான் இந்தப் பாட்டு.

”கருப்பான கொம்புங்க இருக்கற ஒரு எருமை மாடு கன்னு போட்டு இருக்குது; அது கண்ணெல்லாம் செவப்பா இருக்குது. அந்த மாடு அதோட கன்னுக்குட்டிக்குப் பாலு கொடுக்கற ஊர்லதான் ஒன் அப்பா இருக்காரு; அழகான நல்லா ஒளி இருக்கற நகையெல்லாம் போட்டு இருக்கற பெண்ணே! ஒன்னைக் கல்யாணம் கட்டிக்கிறதுக்காக கேக்கறதுக்கு நானே சீக்கிரம் வருவேன்”
அவளோட சொந்தக்காரங்க பொண்னு கொடுக்க மறுத்தாலும் அவ அம்மா பொண்னு மேல இருக்கற ஆசையால அவ விருப்பத்தை நிறைவேத்துவாளாம். அதை மறைவாச் சொல்றதுதான் தாய் எருமை அதோடக் கன்னுக்குட்டிக்கு பாலு குடுக்கறதைச் சொல்றதும்னு வச்சுக்கலாம்.

எருமைப்பத்து—3
எருமைநல் ஏற்றினம் மேயல் அருந்தென
பசுமோ ரோடமோ[டு ஆம்பல் ஒல்லா
செய்த வினையை மன்ற பல்பொழில்
தாதுண் வெறுக்கைய வாகி,இவள்
போதவிழ் முச்சி ஊதும் வண்டே

[மேயல் அருந்தென=மேய்ந்து அருந்தி விட்டதாக; பசுமோரோடம்=பசிய செங்கருங்காலி; வெறுக்கைய=வெறுத்தனவாக; போதவிழ்முச்சி=இதழ் விரிந்த மலரணிந்த கூந்தல்]

அவன் வந்து களவு முறைப்படி அவளைக் கலந்துட்டான். அதால அவ ஒடம்புல ஒரு விதமான நல்ல வாசனை வருது; அதை மொய்க்க நெறைய வண்டெல்லாம் வருது; அதைப் பாத்துச் செவிலித்தாய் சந்தேகப்படறா; தோழிகிட்ட என்னா நடந்ததுன்னு கேக்கறா; அப்ப தோழி பதில் சொல்ற பாட்டுதான் இது. இதை அவனும் கேக்கறான்.

தோழி சொல்றா “வண்டெல்லாம் என்னா செய்யுது? பல சோலையில போயி அங்க இருக்கற பூவுல இருக்கற தேனைக் குடிக்கறதுக்குப் புடிக்காம புதுப் பூவை வச்சிருக்கற இவ தலையை வந்து வண்டெல்லாம் வந்து மொய்க்குதுங்க. தவிர எருமை போயி பசுமையான செங்கருங்காலிப் பூவையும், ஆம்பலயும் மேஞ்சுட்டதால வண்டெல்லாம் இங்க வண்டு இவளை மொய்க்குதுங்க”

செவிலித்தாய்க்கு எப்ப சந்தேகம் வந்துடுச்சோ அப்ப இவளுக்குக் காவல் அதிகமாயிடும். இனிமே தனியா சந்திக்க முடியாது. அதால நீ சீக்கிரம் வந்து இவளைக் கட்டிக்கணும்னு அவனுக்கு சொல்ற மாதிரியும் இருக்கு.
எருமைப்பத்து—4
மள்ளர் அன்ன தடங்கோட்டு எருமை
மகளிர் அன்ன துணையோடு வதியும்
நிழன்முதிர் இலஞ்சிப் பழனத் ததுவே
கழனித் தாமரை மலரும்
கவின்பெறு சுடர்நுதல் தந்தை ஊரே
[மள்லர்=போர் மறவர்; தடம் கோடு=பெரிய கொம்பு; இலஞ்சி=நீர்நிலை; பழனம்=ஊற்ப்பொது நிலம்; கவின்=அழகு;

அவன் பிரிஞ்சு போயிருந்தான்; இப்ப திரும்பி வர்றான்; அப்படி தேருல வரும்போது அவனோட தேரை ஓட்டறவன் கிட்ட அவன் சொல்றதுதான் இந்தப் பாட்டு.

அவளோட ஊரைப் பத்தி அவன் சொல்றான்; அதுக்கு மொதல்ல அவளோட அழகையும் சொல்றான்; அவளோட நெத்தி அழகாய் ஒளி வீசுமாம்; அப்படிப்பட்ட அவளோட அப்பாவுடைய கழனியிலத் தாமரை நெறய மலர்ந்திருக்கும்; சண்டை போடற மள்ளருன்ற வீர்ரைப் போல பெரிய கொம்பெல்லாம் இருக்கற எருமைக்கடா, எப்படி அந்த மள்ளருங்க அவங்க மனைவியோட தங்கி இருப்பாங்களோ அதேபோல எருமைகள் அதுங்களோட துணையோட தங்கியிருக்கும் நிழல் கூடத் தண்ணியும் இருக்கற ஊர்ப்பொது இடமும் இருக்கற ஊர்தான் அது.

எருமை அதோட துணையோட இருக்கறது, மள்ளருங்க வங்க துணைவியுடன் இருக்கறது எல்லாம் அவன் அவனோட அவளுடன் இருக்கறதை நெனவில கொண்டு சொல்றாதுதானாம். நிழல் இருக்கற பொது எடம்னு சொல்றது அவன் அவளுடன் முன்ன வந்து கூடின எடத்தைச் சொல்ற மாதிரிதானாம். தாமரை பூத்திருக்கறதை ஏன் சொல்றான்னா சீக்கிரம் அவன் வந்து அவளைக் கட்டிக்கிட்டா எல்லாரும் மகிழ்ச்சி அடைவாங்கன்னு காட்டறதுக்குதானாம்.
எருமைப்பத்து—5
கருங்கோட்[டு] எருமை கயிறுபரிந் தசைஇ,
நெடுங்கதிர் நெல்லின் நாள்மேயல் ஆரும்
புனன்முற் றூரன் பகலும்
படர்மலி அருநோய் செய்தனன் எமக்கே
[பரிந்தசைஇ=அறுத்துச் சென்று; நாள்மேயல்=அற்றை நாளுக்கு உண்ணற்கான உணவு;முற்றுதல்=சூழ்ந்திருத்தல்; படர் மலி நோய்=படர்ந்து பெருகும் நோய்]

கட்டியவளை உட்டுட்டு வேற ஒருத்தி ஊட்டுக்குப் போயிட்டவன் அப்பப்ப சோறு தின்றதுக்காவது கட்டினவ இருக்கற தன் சொந்த ஊட்டுக்கு வந்திட்டு இருந்தான். அவனைப் பாக்கறதிலியே கட்டிக்கிட்ட அவ மனசுக்குக் கொஞ்சம் நிம்மதியா இருந்தா; ஆனா அதுவும் நின்னு போயி அவன் அங்கியே தங்கிட்டான்; அந்தக் கொஞ்ச நிம்மதியும் அவளுக்குக் கிடைக்கலே; கொஞ்ச நாள் கழிச்சு அவன் இங்க வரப் போறதா வேலைக்காரங்க வந்து சொன்னாங்க; அப்ப அவ சொல்ற பாட்டு இது.

கருப்பான கொம்புங்க கொண்டுள்ள ஒரு எருமை இருக்கு; அது அதைக் கட்டி இருக்கற கயிற்ரை அறுத்துக்கிச்சு; நேரா போயி நல்லா வெளைஞ்சு இருக்கற நெல்லு கதிரை எல்லாம் அன்னிக்குத் தேவையான உணவா தின்னுடுச்சு; அப்படிப்பட்ட நல்ல வளமா இருக்கற ஊரைச் சேந்தவன் அவன்; அவன் இப்பப் பகல்லியும் எனக்கு அதிகமா படர்ந்துகிட்டே போற நோயைச் செய்தானே!

எருமை கட்டை அறுத்துகிட்டுப் போயி நேல்லு கதிரைத் தின்றது அவன் கட்டினவளை உட்டுட்டு வேற ஒருத்திக்கிட்ட போனான்னு மறைவா சொல்லுது; ஒழவருங்க கோபத்துக்கும் வெறுப்புக்கும் கவலைப்படாம எருமை போயித் தின்னுது; அதேபோல அவனும் ஊராருங்க என்ன சொன்னாலும் கவலைப் படாம வேற ஒருத்தி ஊட்டுக்குப் போயிட்டானாம். ராத்திரியிலதான் அவனைப் பிரிஞ்சு துன்பப்படறேன்; இப்ப அவன் வராததாலே அக்கம்பக்கம் இருக்கறவங்களைப் பகல்லியும் பேச வச்சுத் துன்பம் உண்டாக்கிட்டான்னு அவ சொல்றா.
எருமைப் பத்து—6
அணிநடை எருமை ஆடிய அள்ளல்
மணிநிற நெய்தல் ஆம்பலொடு கலிக்கும்
கழனி ஊரன் மகள்; இவள்
பழன ஊரன் பாயலின் துணையே!
[அணிநடை=அசைந்து அசைந்து நடக்கும் நடை; ஆடிய அள்ளல்=உழக்கிய சேறு; கலிக்கும்=வளர்ந்திருக்கும்; பாயல்=படுக்கை;

அவன் கட்டினவள உட்டுட்டு வேற பலரோடயும் சேர்ந்து இருந்தான்; கட்டிக்கிட்ட அவளோ ரொம்ப மனசு ஒடைஞ்சு போயிட்டா; ஊர்லயும் எல்லாரும் கண்டபடிப் பேச ஆரம்பிச்சுட்டாங்களாம்; அப்ப அவன் திடீர்னு வீட்டுக்கு வந்தான்; கட்டிக்கிட்டவளும் தன்னோட வேதனையை மறந்து அவனோட கூடிக் கலந்துட்டா; இன்பம் தந்தா: அந்த ஊட்டு வேலைக்காரங்களெல்லாம் அவளைப் பாத்து “பாருங்க எல்லாரும்; தன் வேதனையை மறந்து அவனையும் மன்னிச்சு படுத்து இனபம் குடுத்தாளே! இவதானே நல்ல பெருமை உள்ள பொண்ணுன்னு பாராட்டற பாட்டு இது;

”அழகா அசைஞ்சு அசைஞ்சு நடக்கற எருமை வருது; அது போயி சேத்தை எல்லாம் கலக்குது; அந்த சேத்துல நெய்தலோட ஆம்பலும் வளர்ற கழனி எல்லாம் இருக்கற ஒரு பெரிய தலைவரோட பொண்ணு இவ; துன்பத்தை எல்லாம் மறந்து அவனுக்குப் பாயில இனிமையான துணையா இருந்தாளே”

எருமை சேத்தைப் போயிக் கலக்குது; அதுங்க வளர்ற சேத்தைக் கலக்குதேன்னு எருமை மேல ஆத்திரப்படாம அதுக்கே ஆம்பலும் நெய்தலும் உணவாகுது; அது எதைக்காட்டுதுன்னு பாத்தா அவ தனக்குத் துன்பம் குடுத்தானேன்னு நெனக்காம அவனுக்கு இன்பம் குடுததை மறைவா சொல்லிக் காட்டுது.

அவன் ஊரில இருக்கறப் பொது நிலம்போல எல்லாருக்கும் போயி இன்பம் குடுத்தான்; அவளோ தன் கழனியை உரிமையாக் காத்துப் பயிர் வளக்கறவனோட பொண்ணு; அதாலதான் வந்தவன் தனக்கே உரிமையானவன்னுதான் இன்பம் குடுத்தாளாம்.
எருமைப் பத்து—7
பகன்றை வான்மலர் மிடைந்த கோட்டைக்
கருந்தாள் எருமைக் கன்று வெரூஉம்
பொய்கை ஊரன் மகளிவள்
பொய்கை ஊரன் நறுந்தண் ணியளே!
[பகன்றை=ஒருவகைக்கொடி; வான்மலர்=வெண்ணிறப் பூ; வெரூஉம்=அஞ்சும்; பொய்கைப் பூ=பொய்கையில் பூக்கும் ஆம்பல் பூ; தண்ணியல்=குளிர்ச்சியானவள்]

அவன் எந்தத் தப்பும் செய்யல; யார்கிட்டயும் போகல; ஆனா அவன் யாரோடயோ தொடர்பு வச்சிக்கிட்டிருக்கான்னு அவனைக் கட்டினவ நெனக்கறா; அதால கோச்சுக்கிறா; அவன் பாவம்; அவளுக்கு எல்லாச் சமாதானமும் சொல்லி, நல்லா நெறய அவகிட்ட அன்பு காட்டி, அவ சந்தேகத்தைத் தீர்த்து அவகிட்ட கூடி மகிழ்ந்தான்; எல்லாம் முடிஞ்ச பின்னாடி அவன் தனக்குள்ளே சொல்லிக்கிற பாட்டு இது.

”பகன்றைன்னு ஒரு கொடி இருக்குது; அந்தக் கொடி வெள்ளையா பூ பூக்கும்; அந்த வெள்ளைப் பூவைக் கொம்பில சுத்திக்கிட்டு தாய் எருமை வருது; அதைப் பாத்த அதோட கன்னுக்குட்டி பயப்படுது. அப்படிப்பட்ட கொளம் எல்லாம் இருக்கற ஊருக்குத் தலைவனா இருக்கறவனின் பொண்ணு இவ; அத்தோட இவ அந்தக் கொளத்துல பூக்கற ஆம்பல் பூவை விடவே ரொம்பவும் குளிர்ச்சியானவளும் கூட” இதான் பாட்டோட பொருளாம்.

அந்த எருமை இத மாதிரி பகன்றைக்கொடியைச் சுத்திக்கிட்டு வர்றதை அகநானூறில “குரூஉக் கொடிப் பகன்றை சூடி மூதூர்ப் போர்ச்செறி மள்ளரிற் புகுதரும்” னு பாக்கலாம்;

தன் அம்மாகிட்ட இருந்த பகன்றைக் கொடியைப் பாத்து அதை யாரோன்னு நெனச்சு கன்னுக்குட்டி பயந்தாப் போல அவ அவனோட மாரில இருந்த மாலையைப் பாத்து அதை வேற யாரோ போட்டாங்கன்னு நெனச்சு பயந்தாங்கிறது மறைபொருளாம். ஆனா கன்னு பயந்தாலும் தாய் எருமை அதுகிட்டப் போயி அதுக்கு இன்பமா பாலு கொடுத்ததே, அதே மாதிரி அவளும் அவனைப் பாத்துத் தப்பா நெனச்சாலும் பின்னாடி அவனுக்கு இன்பம் குடுத்தாளாம். ஏன் கடைசியில் கொளத்துல இருக்கற ஆம்பல் பூவைச் சொல்றாங்கன்னா அது கொளம் வத்திப் போச்சுன்னா அழிஞ்சுபோயிடும். அதேபோல அவளும் அவனைப் பிரிஞ்சா அழகு குளிர்ச்சி எல்லாம் கெட்டுப் போயிடுவாளாம்
எருமைப் பத்து—8
தண்புன லாடும் தடங்கோட் டெருமை
திண்பிணி அம்பியின் தோன்றும் ஊர
ஒண்தொடி மடமகள் இவளினும்
நுந்தையும் ஞாயும் கடியரோ நின்னே
[அம்பி=படகு; மடமகள்=மடப்பம் பொருந்திய தலைவி]

இது வந்து அவளோட தோழி அவங்கிட்ட சொல்ற பாட்டு; அவன் வேற பலரோடு போயி சேந்துக்கிட்டான்; அங்கியே இருக்கான். அவளோ அதால கொஞ்சம் கோபத்தோட இருக்கா; இதைத் தெரிஞ்சுக்கிட்ட அவன் அவகிட்ட தன் தோழருங்களை எல்லாம் அனுப்பிச் சமாதானம் சொல்லச் செய்யறான்; ஆனா அவளோ கோபமாப் பேசி அவங்கள எல்லாம் திருப்பி அனுப்பி விடறா; அவன் இதெல்லாத்தையும் அவ தோழிகிட்ட வந்து சொல்றான்; அப்ப தோழி சொல்றா.

”ஒன் ஊர்ல குளிர்ச்சியான கொளத்துல பெரிய கொம்பு வச்சிருக்கற எருமை குளிச்சுக்கிட்டு இருக்கும். அப்ப அது மேல சின்னப் பசங்களெல்லாம் ஏறி வருவாங்க. அந்த எருமை பாக்கறதுக்குத் தண்ணி மேல வர்ற படகு போலத் தெரியும்; அப்படிப்பட்ட ஊரைச் சேந்தவன் நீ; ஒங்கிட்ட ஒரு கொறை இருந்தா அதுக்காக ஒன்னைக் குத்தம் சொல்லிப் பேசறதுல ஒன் அப்பா அம்மாவை விட இவக் கொடுமையானவளா?”

படகு எப்பவும் தன் மேல ஏறின எல்லாரையும் கரையில சேர்க்கும்; அதுதான் அதுக்குத் தொழில்; எருமை அதுக்கு மெல ஏரி இருக்கற சின்னப் பசங்களைப் பத்திக் கவலைப் படாம இன்பமா குளிச்சுக்கிட்டே இருக்கும்; அதுபோல அவனும் கட்டிக்கிட்டவளைப் பத்திக் கவலை இல்லாம அங்க வேற பொண்ணுங்களோட இருக்கான் என்பது மறைவான சொல்லாகும்.
எருமைப் பத்து—9
பழனப் பாகல் முயிறுமூசு குடம்பை
கழனி எருமை கதிரொடு மயக்கும்
பூக்கஞல் ஊரன்மகள், இவள்
நோய்க்கு மருந்தாகிய பணைத் தோளே
[முயிறு=ஒரு வகை எறும்பு; மூசுகுடம்பை=மொய்த்தபடியிருக்கும் கூடு; பூக்கஞல்=பூக்கள் நிறைந்த]

அவன் இவளை விட்டுப் பிரிஞ்சு போயிட்டான்; அவன் கொடுமையைச் சொல்லி தோழி அவன் மேல கோவமா இருக்கா; அவன் ஒறவே வேண்டாம்னு எல்லாம் வெலக்கறாங்க; அப்ப அவன் வரான்; அவளோ அவனை வரவேற்கறா; அவன் எப்படிஎப்படி விரும்பறானோ அப்படியெல்லாம் நடந்துக்கறா. அப்ப அவன் சொல்ற பாட்டு இது:

”வயல்ல பாகல் இலை நெறைய இருக்குது; அந்த இலைங்கள ஒண்ணோட ஒண்ணு சேத்துப் பிணைத்து இருக்கற கூடுகளை எறும்பு மொய்க்குதுங்க; அந்தக் கூட்டோட அங்க இருக்கற நெல்லுக் கதிரையெல்லாம் எருமையானது சேத்துச் சிதைக்குது; பூக்கள் அங்க நெறைய இருக்குது. அப்படிப்பட்ட ஊரைச் சேந்தவனோட பொண்ணு இவ; அத்தோட எனக்கு வந்திருக்கற நோயிக்கு மருந்தாயிருந்து அந்த நோயைத் தீர்த்த பருத்த தோள்களும் இவளுக்கு இருக்கு”

திருவள்ளுவர், “பிணிக்கு மருந்து பிறமன் ஆயிழை
தன்னோய்க்குத் தானே மருந்து” என்ற குறல்தான் இங்கே மனசுக்கு வருது. “பழனப் பாகல் முயிறுமூசு குடம்பை கழனி நாரை உறைத்தலின், செந்நெல், விரவு வெள்ளரிசியின் தாஅம் ஊரன்” என்று அகநானூறுல [255] வருது;

எருமை சிதைக்கற மாதிரி கட்டினவளோட குடும்பத்தைச் சிதைச்சான்; ஆனா அவளோட நோயிக்கு அவளே மருந்தானான்றதுதான் முக்கியம்
எருமைப் பத்து—10
புனலாடு மகளிர் இட்ட ஒள்ளிழை
மணலாடு சிமையத்[து] எருமை கிளைக்கும்
யாணர் ஊரன்மகள் இவள்
பாணர் நரம்பினும் இன்கிள வியளே
ஒள்ளிழை=ஒள்ளிய அணிகலன்கள்; சிமையம்=உச்சி; கிளவி=பேச்சு]

அவன் இப்ப அங்க கட்டிக்கிட்டவ வீட்டுக்கு வரான்; அப்ப தோழி சொல்றா;
“பொண்ணுங்க எல்லாம் தண்ணித் துறையில் குளிக்கச்ச அவங்களோட நகையெல்லாம் கழட்டி மணல் மேட்டு உச்சியில வைப்பாங்க; அந்த நகையெல்லாம் காத்தாலயோ இல்ல, ஏதோ காரணத்தாலயோ மணல் மூடி மறச்சிடும்; அதான் “மணலாடு சிமையம்” அதாவது மணலால் உண்டான மேடு; அந்த மேட்டை எருமையானது போயிக் கொம்பாலயும், குளம்பாலயும் குத்திக் கிளறி வெளியில கொண்டு வரும்; அப்படிப்பட்ட ஊரைச் சேந்தவனின் மக இவ; பாணருங்க வாசிக்கற யாழோட நரம்பை விட இனிமையா இருக்கும் அவ பேச்சு”

பொண்ணுங்க நகை மறைஞ்ச ஒடனெ கொஞ்ச நாளு கவலையா இருப்பாங்க; அப்பறம் நகை கிடைச்ச ஒடனே மகிழ்ச்சியாயிடுவாங்க; அதேபோல அவனைப் பிரிஞ்சு கொஞ்ச காலம் துன்பமா இருந்தா அவ; இப்ப அவன் வந்த ஒடனெ மகிழ்ச்சியாயிட்டாளாம்.
இத்துடன் ஓரம்போகியாரின் மருதத்திணைப் பாடல்கள் முற்றுப் பெறுகிறது.
========================================================================

Series Navigation14 வேண்டாம் அந்த முரட்டுப் பெண்!தேடாத தருணங்களில்
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *