பாட்டியின் சுருக்குப் பையும், பழைய செல்லாக் காசுகளும்…!

This entry is part 4 of 11 in the series 11 ஜூன் 2017

 

ஆ.மகராஜன், திருச்சி

பொங்கலுக்காகப் பரணில் கிடந்த 
பழைய பொருட்களை 
ஒதுங்கவைத்துக் கொண்டிருந்தபோது
துருப்பிடித்த ஒரு
பழைய டிரங்க் பெட்டிக்குள் அந்த
சுருக்குப்பை கிடைத்தது…

அப்பொழுது யாரும் அக்கறையோடு 

கண்டு கொள்ளாத,
பாட்டி கடைசி வரை தன் இடுப்பிலேயே
வெள்ளைப் புடவைக்குள் சொருகிப்
பாதுகாத்து வைத்திருந்த பை அது…

 

இறுகிப்போயிருந்த சுருக்குக் கயிற்றைப்
பிரயத்தனப்பட்டு இழுத்துத் திறந்ததும்,
உள்ளே பல்லாண்டுகளாய்
அடைபட்டுக் கிடந்த எராளமான 
செல்லாக் காசுகள்
கலகலவென தரை முழுக்கச் சிதறி
உருண்டோடின…

 

நடுவில் ஓட்டையோடு செம்பினாலான
அணா காசுகள் நிறைய…

தவிரவும் 
சிறிய சதுர ஒரு பைசா, ஐந்து பைசாக்கள்,
விளிம்பில் அழகான வளைவுகளோடு
இரண்டு, மூன்று, பத்து, காசுகள்..
கருப்பாய் அழுக்குப் படிந்து,
சுரண்டினால் உள்ளே மஞ்சள் நிறத்தில்
மறைந்திருக்கும் தாமரை 
மலரோடு பித்தளை இருபது பைசாக்கள் ..

எல்லாமே இன்று செல்லாக் காசென்றாலும்,
இவைகளும்,
ஏதோ ஒரு காலக் கட்டத்தில்,
மதிப்போடுதான் இருந்திருக்கும்….

 

பாட்டி எனக்காகக் கூட
அவற்றை அக்கறையோடு 
சேமித்துப் பாசமாய் பாதுகாத்திருக்கலாம்..

 

இருந்த வரையில் யாரும்,
கண்டு கொள்ளவேயில்லை..
படுக்கையிலிருந்த பாட்டியைப் போலவே
அவரது இடுப்பில் செருகியிருந்த இந்த 

சுருக்குப் பையையும்..!

 

சிதறி ஓடியவைகளையெல்லாம் பொறுக்கி
உள்ளே போட்டு
,
மீண்டும் சுருக்குக் கயிற்றை இழுத்து
 
மூடிய போது,
ஏனோ ரொம்ப கனமாய் இருந்தது
மனமும்
,
பாட்டியின் அந்த பழைய சுருக்குப்பையும்..!

  – ஆ.மகராஜன், திருச்சி.

               ********

Series Navigationஒரு தவறான வாயில் வழியாக …கல்வி நிலையங்களும் விளம்பர (குறும்)படங்களும்

1 Comment

  1. Avatar Haseena Begam

    மதிப்புமிக்கவையாக இருந்து செல்லாமல் போனவை காசு மட்டுமல்ல என்பதை உணா்த்தும் படைப்பு அருமை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *