வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! (ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்) 18.

This entry is part 1 of 13 in the series 25 ஜூன் 2017

 

     மிகுந்த பரபரப்புடனும் கொந்தளிப்புடனும் கிஷன் தாஸ் மீரா பாய் கண்ணாடித் தொழிற்சாலையில் மேலாளர் சேகரின் அறைக்குள் நுழைகிறார். அவரைக் கண்ட கணமே சேகர் எழுந்து நிற்கிறார்.

“குட் மார்னிங், சர்!” என்று சொல்லும் சேகரை நோக்கிப் பதிலுக்குத் தலை கூட அசைக்காமல், “தொலைபேசியில் நீங்கள் பதற்றத்துடன் பேசிய தினுசில் இன்று குட் மார்னிங் இல்லை, பேட் மார்னிங் என்றுதான் தோன்றுகிறது. என்ன நடந்தது? சொல்லுங்கள்!” எனும் கிஷன் தாஸ் பொத்தென்று நாற்காலியில் அமர்கிறார்.

நடந்தவை யாவற்றையும் சேகர் நின்றபடியே அவருக்கு விவரிக்கிறார்.

“சர்! ஆறு நாள்களுக்கு முன்னால் உங்கள் மகன் மிஸ்டர் பிரகாஷின் தோழியர் என்று சொல்லிக்கொண்டு இரண்டு பெண்கள் இங்கே வந்தார்கள். அவர் உங்கள் மகனின் முகவரி அட்டையைக் காட்டியதால் நான் அவர்களை உள்ளே விட்டேன். அந்த அட்டையின் பின்  புறத்தில் அவர்களுக்கு நம் தொழிற்சாலையைச் சுற்றிக் காட்டும்படியும் அவர்கள் கேட்கும் உதவியைச் செயும்படியும் தட்டெழுதப்பட்டிருந்தது. …”

கிஷன் தாசின் விழிகள் விரிகின்றன: “சுமதி, சுந்தரி என்னும் இரண்டு பெண்கள்தானே?”

“ஆமாம், சர். அவர்களில் ஒரு பெண் உங்கள் மகனின் வருங்கால மனைவியா, சர்?”

“தேவை யில்லாத கேள்விகள் எல்லாம் கேட்டுக் கொண்டிருக்காமல், விஷயத்துக்கு வாருங்கள் முதலில்!”

“அவர்கள் இங்கு வேலையில் உள்ள பிள்ளைகளில் ஒருவனைத் தனியாய்ப் பார்த்துப் பேசியிருக்கிறார்கள்.  பீமண்ணா எனும் அந்தப் பையனை இரண்டு ஆண்டுகளுக்கு முன் நம் பத்ரிநாத் கொண்டுவந்து விட்டான். அவனுக்கு ஆங்கிலம் நன்கு தெரியும். அவர்களில் ஒரு பெண் இங்கேயே பிரதமரின் பெயருக்கு ஒரு புகாரைத் தட்டெழுதி அதில் அவன் கையெழுத்தை வாங்கி எடுத்துக்கொண்டு போயிருக்கிறார் என்று நினைக்கிறேன்….”

ஆத்திரமாய், “என்னது! நினைக்கிறேனா! அவர்கள் அதைச் செய்து முடிக்கும் வரையில் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? முன்பின் அறிமுகம் இல்லாத வெளியாள்கள் எவரையும் உள்ளே விட வேண்டாம் என்று எத்தனை முறை தலைதலையாய் அடித்துக்கொண்டிருக்கிறேன்? தொழிற்சாலை முழுதிலும் அவர்களை அலைய விட்டிருக்கிறீர்களே? முட்டாள்! சரி. இப்போது என்னை அவசரமாக வரச்சொன்னது எதற்காக?… அந்தப் பையனின் பெயர் என்னவென்று சொன்னீர்க்ள்? பீமண்ணா என்றுதானே”

“ஆமாம், சர். அவனது சொந்த ஊர் ஹைதராபாத். … இன்று காலை நான் மேற்பார்வை செய்யப் போன போது, அவன் கேலியாய் என்னைப் பார்த்துப் புன்னகையும் செய்ததை நான் கவனித்துவிட்டேன். பொதுவாக, அவன் அமைதியாக இருக்கும் சாதுப் பையன். எனவே, அவனது புன்னகையும் கேலிப் பார்வையும் எனக்கு மர்மம் எதையோ அடக்கியதாய்த் தோன்றின. அந்தப் புன்சிரிப்புக்குக் காரணம் கேட்டதும் தான் சிரிக்கவே இல்லை என்று அவன் சாதித்தான். இரண்டு அடி கொடுத்துவிட்டு வெளியேறினேன். எனினும் எனக்குச் சந்தேகமாக இருந்ததால் அந்தக் கூடத்துக்கு வெளியே ஜன்னல் பக்கம் மறைந்து நின்று கவனித்தேன். அவனும் அவன் பக்கத்துப் பையன் அருண் என்பவனும் அன்று வந்த இரண்டு பெண்கள் எப்போது தங்களை விடுவிக்க ஏற்பாடு செய்வார்கள் என்று கேட்டுப் பேசிக்கொண்டார்கள். பின்னர் உள்ளே போய் நான் மறுபடியும் அடித்தேன். பீமண்ணா சொல்ல மறுத்தான். ஆனால் நான் பயமுறுத்தித் தடியை ஓங்கியதும் அருண் எல்லாவற்றையும் உளறிவிட்டான். அந்தப் பெண்கள் நம் பிரதமருக்குப் புகார் எழுதி அதில் பீமண்ணாவின் கையெழுத்தைப் பெற்றுக்கொண்டு போயிருக்கிறார்கள்….”

“அட, கடவுளே! ஆனால், புகாரில் என்ன எழுதியிருந்தது என்பதை அவன் சொன்னானா?’

“அவன் அதன் ஒரு சொல்லைக்கூடச் சொல்ல மறுத்தான். மறுபடியும் அடித்து நொறுக்கி அவனைச் சொல்ல வைத்தேன்…. எனினும் அந்தப் புகார் இங்கேதான் தட்டெழுதப் பட்டது என்பதால் அவர்கள் பயன்படுத்திவிட்டு மேஜை மீது விட்டுச் சென்றிருந்த கரித்தாள்கைளை வெயில் படும்படி உயர்த்திப் பிடித்து அதன் வாசகத்தைப் படித்து அதற்கு ஒரு நகலும் எடுத்துவைத்து விட்டேன். புதிய கரித்தாள்கள் ஆனதால் அவற்றில் அது தெளிவாக அச்சாகி யிருந்தது, சர் இதோ, இதுதான், சர்!” – சேகர் தம் மேஜை இழுப்பறையிலிருந்து அதை எடுத்து அவரிடம் தருகிறார்.

“ஆண்டவனே! ஆண்டவனே! நான் பொதுத் தேர்தலில் நிற்கத் தீர்மானித்திருக்கும் நேரத்தில் போய் இப்படி நேர்ந்திருக்கிறதே!  … சரி. நீங்கள் போகலாம். நான் கொஞசம் தனியாக இருக்க வேண்டும்….”

அறைக்கதவைச் சாத்தி விட்டு, சேகர் வெளியே போகிறார்.  புகாரின் நகலைப் படித்துப் பார்ப்பதற்கு முன்னால், அவர் பிரகாஷைத் தொலைபேசியில் அழைக்கிறார்:

“பிரகாஷ்! அந்தப் பெண்ணை நான் போக்கிரிப் பெண் என்று சொன்னபோது உனக்கு மூக்குக்கு மேல் கோபம் பொத்துக்கொண்டு வந்ததே! அந்தப் பிசாசுப் பெண் இப்போது என்ன வேலை செய்திருக்கிறாள், தெரியுமா?”

திகைப்பை வெளிப்படுத்தும் குரலில், “என்ன அப்பா செய்திருக்கிறாள்?” என்று பிரகாஷ் வினவுகிறான்.

“உனக்குத் தெரியாதா? உண்மையாகவேயா?”

“உண்மையில் எனக்கு ஒன்றுமே தெரியாது, அப்பா. சத்தியமாக!…என்னப்பா செய்திருக்கிறாள்?”

“ஐந்தாறு நாள்களுக்கு முன்னால், அவள் தன் தோழி சுந்தரியுடன் ஜெய்ப்பூரில் உள்ள நம் கண்ணாடித் தொழிற்சாலைக்கு வந்திருக்கிறாள். அந்த மேலாளர் முட்டாள் சேகரின் குருட்டுக் கண் முன்னாலேயெ உட்கார்ந்து எனக்கு எதிராகப் பிரதமருக்குப் புகாரைத் தட்டெழுதியிருக்கிறாள்! உன் முகவரி அட்டையை அவள் சேகரிடம் காட்டியிருக்கிறாள். அதன் பின் புறத்தில் அவர்களை அனுமதித்துச் சுற்றிக்காட்டும்படியும் அவர்கள் கேட்கும் உதவியைச் செய்யும்படியும் தட்டெழுத்துக் குறிப்பு இருந்ததாம். அதைப் பார்த்ததும் அந்த மடையன் அவர்களை உள்ளே விட்டிருந்திருக்கிறான்!”

”அய்யய்யோ!”

”நடிக்கிறாயா, பிரகாஷ்?”

“அப்பா! நீங்கள்தான் என்னைக் காட்டிலும்  மிகச் சிறந்த நடிப்புத்திறன் கொண்டவர்.  நானில்லை!”

“சரி, சரி. இப்போது அது பற்றி நாம் வாக்குவாதம் செய்ய வேண்டாம். இந்தக் கணமே அந்தப் பிசாசுடன் நீ பேசு. அந்தப் புகாரை அவள் பிரதமருக்கு இன்னும் அனுப்பாமல் தன்னிடமே வைத்திருந்தால், அதை அனுப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள். ஆனால், ஏற்கெனவே அனுப்பிவிட்டிருந்தால், என்ன தேதியில், யார் பெயருக்கு அதை அனுப்பினாள் என்பதைக் கேட்டுத் தெரிந்துகொள். தெரிந்ததும் தில்லியில் உள்ள பிரதமரின் தனிச் செயலரோடு உடனே பேசி நான் அதைப் பிரதமர் பார்வைக்குப் போகாமல் அமுக்கிவிடுவேன். அதற்குத்தான்!  இப்போதே கூட அவரோடு என்னால் பேச முடியும்தான்.  ஆனால், இனிமேல்தான் அவள் அதை அனுப்புவதற்கு இருந்தாள் என்றால், எங்களப்பன் குதிருக்குள் இல்லை என்கிற கதையாகி விடுமே என்று பார்க்கிறேன். அதனால்தான்!… அந்தப் பிசாசோடு பேசிவிட்டு அவள் என்ன சொன்னாள் என்பதை எனக்கு உடனே சொல்லு. அவளுடைய அலுவலகத்தோடோ, அல்லது வீட்டுடனோ உடனே தொடர்பு கொள். இது மிக, மிக அவசரம்.”

“ஆகட்டும், அப்பா. இதோ! இப்போதே பேசுகிறேன்!”

கிஷன் தாஸ் ஓர் உறுமலுடன் தொடர்பைத் துண்டிக்கிறார்.

*********

… சுமதியின் வீட்டுத் தொலை பேசியில் மணி அடிக்கிறது. அப்போது அங்கு இருக்கும் சுந்தரி, ஒலி வாங்கியை எடுத்துப் பேசுகிறாள். ”ஹாய், பிரகாஷ்! எப்படி இருக்கிறாய்?” என்கிறாள்.

பிரகாஷ் பதில் சொல்லாமல், “சுமதியிடம் ஒலிவாங்கியைக் கொடு!” என்கிறான் கடுமையான குரலில்.

சுந்தரி அப்படியே செய்கிறாள்.

“ஹல்லோ, பிரகாஷ்! நான் சுமதி பேசுகிறேன். எப்படி இருக்கிறாய்?”

“அங்கே உன் அம்மாவும் அப்பாவும் இருக்கிறார்களா?”

“இல்லை. உறவினர் ஒருவர் வீட்டுக் கல்யாணத்துக்காக இருவரும் பக்கத்து ஊருக்குப் போயிருக்கிறார்கள். அதனால் அவர்களோடு உன்னால் இப்போது பேச முடியாது!”

“ஒரு சிக்கலான விஷயம் பற்றி நான் உன்னோடுதான் பேச வேண்டியிருக்கிறது. உன் பெற்றோருக்கெல்லாம் அது தெரிய வேண்டாம் என்று நினைக்கிறேன்… அதுதான்   ‘அவர்கள் இருக்கிறார்களா’ என்று கேட்டேன்… சுமதி! எங்கள் குடும்பத்துக்கு அவப்பெயரைத் தேடி வைப்பது என்று நீ ஏதேனும் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறாயா?…”

“அமைதி! அமைதி! யாரும் வேறு யாருக்கும் அவப்பெயரைத் தேடி வைக்க முடியாது, பிரகாஷ்! உங்கள் குடும்பத்துக்கு ஏற்கெனவே நற்பெயர் இல்லை யென்றால் அதற்கு நான் என்ன செய்வது?”

“சுமதி! ஜெய்ப்பூரில் உள்ள எங்கள் தொழிற்சாலைக்குப் போவதற்கு முன்னால் நீ என்னை ஒரு வார்த்தை கேட்டிருந்திருக்கலாம்!”

“உன்னிடம் கேட்பதா! நான் கேட்டதும் உன் மோசக்கார அப்பா அங்கு செய்திருக்கும் – செய்து வரும் – அக்கிரமங்களை எல்லாம் பட்டியல் இட்டுச் சொல்லிவிடுவாயாக்கும்! …”

“சுமதி! உன்னைப் பற்றி நீ என்ன நினைத்துக்கொண்டிருக்கிறாய்? என் அப்பாவையும் என்னையும் பற்றியும்தான் நீ என்ன நினைக்கிறாயாம்?”

“பிரகாஷ்! சாந்தம், சாந்தம்! தப்பை வைத்துக்கொண்டு உனக்கு இவ்வளவு எரிசசல் ஆகாது! உன் முதல் கேள்விக்கு என் பதில் – நான் நாணயமான ஒரு பத்திரிகை நிருபர் என்று என்னைப் பற்றி நினைத்துக்கொண்டிருக்கிறேன். ஆயிரக்கணக்கில் நன்கொடைகள் கொடுப்பதன் மூலம் தன் நிழலான சமுதாய விரோதச் செயல்களை மூடி மறைக்கும் பெரிய மனித வேஷதாரிகளை வெளிச்சம் போட்டு உலகுக்குக் காட்டி அவர்களைத் தண்டிப்பதே என்னைப் போன்றவர்களின் நோக்கம். அடுத்த கேள்விக்கு என் பதில்: உன் அப்பாவைப் பற்றிய என் கணிப்பு – சட்டத்துக்குப் புறம்பாகக் குறைவான சம்பளத்தில் சின்னஞ் சிறுவர்களைப் பணிகளில் அமர்த்தி அவர்களிடம் நிறைய வேலை வாங்கிப் பணம் சேர்த்து  – ஆனால் பெரிய நன்கொடைகள் அளிப்பதன் மூலம் நல்ல பெயர் வாங்கிக்கொண்டிருக்கும் ஒரு போலியான சமுதாய நலவாதி! உன்னைப் பற்றிய என் கணிப்பு – அத்தகைய மனிதரான தன் அப்பாவைப் பாதுகாப்பதற்காகத் தன் வருங்கால மனைவி அவரைப்  பற்றி எழுதுவதற்கு முன்னால் தன்னை ஒரு வார்த்தை கேட்கவேண்டும் என்று எதிர்பார்க்கும் அவருடைய கூட்டாளி! குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிராக நடந்து வரும் தன் அப்பாவின் சொத்துகளுக்காக அவர் செய்யும் தப்புகளைக் கண்டும் காணாதிருக்கும் அவருடைய ஒரே மகன்!….”

“சுமதி! சுமதி! அவருடைய சொத்து-சுகங்களின் மேல் சத்தியமாய் எனக்குக் கடுகளவும் நாட்டம் இல்லை. இந்த விஷயத்தில் உனக்கு என் மேல் நம்பிக்கை ஏற்படுத்துவது எப்படி என்று எனக்குத் தெரியவில்லை, சுமதி! உன்னை நான் மணந்துகொண்டால் தம் சொத்திலிருந்து ஒரு காசு கூட உனக்குத் தரமாட்டேன் என்று அவர் சமீபத்தில் என்னிடம் நிபந்தனை போட்டார். சுமதி போன்ற ஒரு மாணிக்கத்துக்கு முன்னால் இந்த உலகத்தில் உங்கள் சொத்து ஒன்றுமே இல்லை என்று நான் பதில் சொன்னேன். அது உனக்குத் தெரியுமா, சுமதி? எத்தகைய இதயமற்ற பெண் நீ!”

“நானா? இதயமற்ற பெண்ணா! பேஷ், பேஷ்! இதயம் உள்ள நிலை என்பது என்ன, பிரகாஷ்! சொல்லு. நானும் தெரிந்து கொள்ளுகிறேன்.”

“எத்தகைய முட்டாள்தனமான கேள்வி இது”

“இதயமற்று இருப்பதை விடவும், முட்டாளாக இருப்பது மேல், பிரகாஷ்!”

“என்ன!  யா…யா…யரைக் குறிப்பிடுகிறாய்? என் அப்பாவைத்தானே?”

“உன்னையும் சேர்த்துத்தான் சொல்லுகிறேன், பிரகாஷ்!”

“நானா! இதயமற்றவனா! என்ன பிதற்றல் இது?”

“சிறுவர்களின் அநாதைத்தனத்தை ஆதாயப்படுத்திப் பணம் பண்ணிக்கொண்டிருக்கும் இதயமற்ற ஒரு தகப்பனைக் காப்பாற்றப் பார்ப்பவரைப் பின் என்ன சொல்லி அழைப்பது, பிரகாஷ்? அவர்களுக்கு உண்ண உணவும், உடுக்க உடையும், உறைவிடமும் தந்து அவர்களைப் படிக்கவும் வைக்கலாமே உன் அப்பாவைப் போன்ற பெரும் செல்வந்தர்? பதினான்கு மணி நேர வேலையும், பலவீனமாகத் தென்படும் சிறுவர்களின் உடல்நிலையும் உன் அப்பாவுக்குப் பெருமை சேர்ப்பதாக இல்லை, பிரகாஷ்!”

உரிய பதிலை அளிக்க முடியாததால் பிரகாஷ் பேசாமல் இருக்கிறான்.

“என்ன, பிரகாஷ், பதிலையே காணோம்? போட்டிக்கான என் கட்டுரை குழந்தைத் தொழிலாளர் பிரச்சினை பற்றியது என்று நான் சொன்ன போது அதில் நீ துளியும் ஆர்வம் காட்டாமல் பேச்சை மாற்றியது ஏன் என்பது பின்னர்தான் எனக்குப் புரிந்தது. நான் நாளிதழில் எழுதிய கட்டுரை வந்து சேர்ந்ததாய்க் கூட நீ சொல்லவில்லை. ஆனால், உன் அப்பா பற்றிய குற்ற உணர்வு உனக்கு இருந்ததால்தான் அது பற்றிய பேச்சை நீ தவிர்த்தாய் என்பதில் எனக்கு மகிழ்ச்சிதான்!”

“ஆக மொத்தம், என்னை ஒரு சமுதாய விரோதி என்பதாய் நீ மதிப்பிட்டிருக்கிறாய்!”

“என் வாயில் வார்த்தைகளைத் திணிக்காதே, பிரகாஷ்! உன்னைப்பற்றிய சுய-அலசலில் ஈடுபட்டு ஒரு நேர்மையான முடிவுக்கு நீ வரவேண்டும், பிரகாஷ்! எல்லாவற்றையும் நீ மறு பரிசீலனை செய்வது நல்லது!”

“மறு பரிசீலனை என்று நீ எதைக் குறிப்பிட்டுப் பேசுகிறாய், சுமதி?”

“நான் எதைக் குறிப்பிட்டுப் பேசுகிறேன் என்பது உனக்கே தெரியும், பிரகாஷ்!”

“நீ மிகவும் வாதாடுகிறாய், சுமதி. நம் இல்வாழ்வுக்கு இது உகந்ததாக இருக்காது!”

“அப்படியானால், நாம் இல்வாழ்வில் ஈடுபடத்தான் போகிறோமா?”

“பின் என்ன? நம் திருமணத்க்துக்கு எதுவும் குறுக்கே வருவதை நான் அனுமதிக்க மாட்டேன், சுமதி. அவருடைய தொழில் பங்காளியாக நான் இருக்கப் போவதில்லை என்று என் அப்பாவிடம் ஏற்கெனவே நான் சொல்லியாகி விட்டது.  உன்னைத் திருப்கிப்படுத்த நான் இன்னும் என்ன செய்யவேண்டும், சுமதி?”

“என்னை ஒன்றும் நீ திருப்திப்படுத்த வேண்டியதில்லை, பிரகாஷ்! நீ உன் மனச்சாட்சியைத் திருப்திப்படுத்தினாலே போதுமானது! …”

“ஆமாம், சுமதி! எனக்கும் மனச்சாட்சி என்பதாய் ஒன்று இருக்கவே செய்கிறது. என் இனிய, அன்பான, சுமதி என்னும் பெண்ணைச் சந்திக்கிற நேரம் வரையில் அது உறங்கிக்கொண்டு இருந்தது. குழந்தைத் தொழிலாளர் பற்றிய பிரக்ஞையே அது வரையில் எனக்கு இருந்ததே இல்லை. ஒரு கணம் கூட அது பற்றி நான் எண்ணியும் பார்த்தது கிடையாது. அவள் என் மீது செலுத்தத் தொடங்கியுள்ள ஆதிக்கத்தின் பின்னர்தான் எனக்காகத் தம் இள வயதிலேயே மறுமணத்தைத் தியாக உணர்வுடன் துறந்த – என் மீது உயிரையே வைத்திருக்கும் – அப்பாவிட மிருந்தே விலக என் மனத்தைக் கல்லாக்கிக்கொண்டு நான் தீர்மானித்துள்ளேன். …” – இவ்வாறு சொல்லுகையில் பிரகாஷின் குரல் அவனால் மேற்கொண்டு பேச முடியாத அளவுக்கு உடைந்து தழுதழுக்கிறது.

“உனக்காக நான் பெரிதும் அனுதாபப்படுகிறேன், பிரகாஷ்! உன் உணர்ச்சிகளும் எனக்குப் புரியவே செய்கின்றன…. ஆனால், நீ எதற்காக இப்போது என்னைக் கூப்பிட்டாய் என்பதை வெளிபடையாக இன்னும் நீ சொல்லவில்லையே!”

“இது வரையில் அந்தப் புகாரை நீ உன்னிடம் வைத்துக் கொண்டிருந்தால், அதைப் பிரதமருக்கு அனுப்ப வேண்டாம் என்று சொல்லுவதற்காகத்தான். நீ அவரை நேரில் சந்தித்துக் கொடுப்பதாய் இருக்கிறாய் என்றே நான் ஊகிக்கிறேன். சரிதானா?”

“சரிதான். ஆனால், இப்போதுதானே உனக்கும் மனச்சாட்சி என்பதாய் ஒன்று இருப்பதாய்ச் சொன்னாய்? அப்படி இருக்கும் போது, அதைக் கொடுக்கவேண்டாம் என்று சொல்லுகிறாயே!”

“ஏனெனில், என் அப்பாவைச் சரியான பாதைக்குத் திருப்பி விட முடியும் என்னும் நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதனால்தான்!”

“எனினும் அவர் புரிந்து முடித்துள்ள தீமைகளை மாற்ற முடியாதே! நடந்தது நடந்ததுதானே, பிரகாஷ்?”

“அதற்கும் நல்ல வழிகள் உள்ளன, சுமதி. இப்போதைக்கு அதை ஒத்திப்போடு. என் அப்பாவின் சிறு வயது வாழ்க்கையின் அவலங்கள் பற்றி அண்மையில் தான் தெரிந்து கொண்டேன். அவற்றை உனக்கும் சொல்ல விரும்புகிறேன்.  நீ ஏற்காத அவருடைய செயல்பாடுகளுக்கு அவருக்கென்று சில நியாயங்கள் உள்ளன.  ஆனால் என் அப்பாவின் நடவடிக்கைகளை நான் நியாயப்படுத்துவதாக மட்டும் எண்ணிவிடாதே! இல்லவே இல்லை! … அவரது வாழ்க்கை பற்றி விரைவில் உனக்குச் சொல்லுவேன். இப்போது சொல்லு, சுமதி. எனது கோரிக்கையை மறு பரிசீலனை செய்வதாய் இருக்கிறாய்தானே?”

“சரி, பிரகாஷ்! அப்படியே ஆகட்டும். அந்தப் புகார் இப்போதைக்கு நிலுவையில் இருக்கட்டும்.”

“மிக்க நன்றி, சுமதி, மிக்க நன்றி! அது சரி, ஜெய்ப்பூரில் அப்பாவுக்கு ஒரு கண்ணாடித் தொழிற்சாலை இருப்பது பற்றி உனக்கு எப்படித் தெரிய வந்தது?”

“அதையெல்லாம் நான் வெளியே சொல்லக் கூடாது, பிரகாஷ்! அது ஒரு நிருபரின் தொழில்நெறி. உங்கள் தொழிற்சாலையின் ஊழியர் ஒருவர் தம் பெயரை வெளியிடாமல் எங்கள் நாளிதழுக்கு ஒரு மொட்டைக் கடிதம் எழுதியிருந்தார். அதன் அடிப்படையில்தான் நான் சுந்தரியைத் துணைக்கு அழைத்துக்கொண்டு அங்கே போனேன். இதை உன் அப்பாவிடம் நீ சொல்ல மாட்டாய் என்று நம்புகிறேன். ஏனெனில் அந்த மொட்டைப் புகாரை அனுப்பியது யார் என்பதைக் கொடூரமான வழிமுறைகள் மூலம் கண்டுபிடிக்க அவர் முயலக்கூடும்! இல்லையா? அதனால்தான்!”

“சரி. நான் சொல்ல மாட்டேன் – சத்தியமாக! மீண்டும் உனக்கு நன்றி, சுமதி. கூடிய விரைவில் நான் உன்னோடு பேசுவேன்….”

சுமதி ஒலிவாங்கியை வைத்த சில கணங்களுள் மீண்டும் அது ஒலிக்கிறது.

எடுத்துப் பேசும் சுமதி, ஒலிவாங்கியை வைத்த பின், “சுந்தரி! ஒரு மருத்துவ மனையிலிருந்து வந்த அழைப்பு அது. நான் அங்கு உடனே போக வேண்டியிருக்கிறது.  வா, கிளம்பலாம்.  போகும் வழியில் நான் விவரம் சொல்லுகிறேன்….” என்று கூறிவிட்டு எழுந்து நிற்கிறாள்.

சுந்தரியும் திகைப்புடன் எழுகிறாள். இருவரும் புறப்படத் தயாராகிறார்கள். பின்னர் படியிறங்கி ஓர் ஆட்டோ பிடித்து அந்த மருத்துவ மனைக்கு விரைகிறார்கள்.

jothigirija@live.com

 

Series Navigationசூரிய குடும்பத்தில் புளுடோவுக்கு அப்பால் பூமி வடிவில் பத்தாவது கோள் ஒன்று ஒளிந்திருப்பது உறுதி செய்யப்படுகிறது
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *