‘ இன்னும் சில வீடுகள் ‘ தொகுப்பு 1995 – இல் முன்றில் வெளியீடாக வந்துள்ளது. இவரது கவிதைகள் எளியவை ; தகவல்தன்மை கொண்டவை. சில இடங்களில் வாக்கியங்களில் இடையில் முற்றுப்புள்ளி அமைந்துவிடுகிறது. இது கவிதையில் வடிவச் சிதைவை உண்டாக்கிவிடுகிறது.
முதல் கவிதை ‘ பேறு ‘ . இது கிராமியப் பாங்கு கொண்டது . கவிதையின் தொடக்கமே நன்றாக இருக்கிறது.
சமீபத்தில்
காதல் சுருக்கிட்ட கயிற்றில்
தொங்கினாளாம் ஒரு பெண்
— ‘ காதல் தோல்வியால் கயிற்றில் தொங்கினாள் ‘ என்ற வழக்கமான வெளிப்பாட்டை இவர் ‘ காதல்
சுருக்கு ‘ என்று கூறியது வித்தியாசமானது.கவனத்தை ஈர்க்கக் கூடியது. நாளடைவில் அவள் கன்னிசாமி
யாகிவிட்டாள்.
யாரோ அடித்த ஆணியில்
யாரோ
மாலையும் கொஞ்சம்
மயிரும் சுற்றி வைக்க
காதல் தோல்வி கண்டவள்
கன்னித் தெய்வமானாள்
— ‘ கன்னித் தெய்வம் ‘ என்ற சொற்றொடர் ஆன்மிகப் பார்வையாகவும் , மூடநம்பிக்கையாகவும்
சமுதாயத்தால் பார்க்கப்படுகிறது. எது சரியென்பது அவரவர் முடிவில் …
பழம் பறித்தால் பல்லிடுக்கில்
ரத்தம் வருமென்று
யாரும்
கிட்டே வரவில்லை
கன்னிப் பேய்க்கு
அணிலும் கிளியும்
நட்பாச்சு.
— எனக் கவிதை முடிகிறது. கவிதையில் தளர்வான சொற்கட்டு காணப்படுகிறது.
‘ ஜாடை ‘ என்றொரு கவிதை !
குழந்தை அம்மாவின் குரலில்
பேசுவதைப் போல் இருந்தது
அம்மாதான்
குழந்தையுடன் பேசிக்கொண்டிருந்தாள்
— இதை எப்படிப் புரிந்துகொள்வது ? குழந்தைக்கு அம்மாவின் குரல் அப்படியே அமைந்திருந்தது
என்பதை வித்தியாசமாகச் சொன்னதில் ஒரு செறிவு அமைந்துவிடுகிறது. ‘ விதை ஒன்று போட , சுரை
ஒன்று முளைக்குமா ? ‘ என்னும் பழமொழி தொனிக்கிறது.
‘ திரேஸயாவும் மரியமும் ‘ என்ற தலைப்பில் ஒரு மனவிசாரம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது நிச்சயம்
கவிதை இல்லை. தகழியின் சிறுகதை நாயகி திரேஸ்யா. மரியம் யார் ? [ ‘ எனக்குப் பாட்டுச் சொல்லிக் கொடுக்கும் மரியத்தின் தகப்பனை நான் நன்கறிவேன். ‘ என்ற தகவல் நமக்குக் கிடைக்கிறது ] எப்படி இருப்பாள் ? ‘ ஒடிசலாய் லட்சணமாயும் இருக்கிறவள் ‘ என்பதைத் தொடர்ந்து , கவிதை கீழ்க்கண்டவாறு முடிகிறது.
……….. எனக்குத் தெரிந்த
மரியத்துக்கு இந்த மார்ச் வந்தால் வயதுமுப்பத்து நான்கு முடிகிறது
— கவிதை முடிவில் தெரியும் தொனி சமூக அக்கறையாகவும் தெரிகிறது. மரியத்தின் பாலான ஈர்ப்பாகவும் தெரிகிறது.
‘ சாவைப் பற்றிச் சரியாகச் சொல்லும் ஒரு கவிதை ‘ …
சாவைப் பற்றின கவிதைகள்
சாவைப் போலவே மிக
அயர்ச்சியை உண்டு பண்ணிவிடுகின்றன
— என்று தொடங்குகிறது.சாவைப் பற்றிச் சரியாக உணர விரும்பினால் ” இரண்டு தடவை செத்துப் போ என்றானாம் ஒருவன். ‘ கவிதைதான் சாவோ ? ‘ என்ற கேள்வியோடு கவிதை முடிகிறது. கவிதை எத்தனை நபர்களைப் பாடாப்படுத்துகிறது ?
புத்தகத்தின் தலைப்புக் கவிதை ‘ இன்னும் சில வீடுகள் ‘ கிராமத்தில் சில வீடுகள் புதுப்பிக்கப்படுகின்றன . சில வீடுகள் புதுப்பிக்கப்படாமல் இருக்கின்றன. இதுவே இக்கவிதைக் கரு.
புதிய பிரதிபோட்ட பழைய படம் போல சில நாட்களுக்கு முன் புதுப்பிக்கப்பட்டன
ஊரில் சில வீடுகள்
— என்று கவிதை தொடங்குகிறது. முதியவர்கள் கிராமத்தின் மாற்றங்கள் குறித்த செய்திகளைப் புதிய
தலைமுறையினருக்குச் சொல்கிறார்கள்.
பா. வெங்கடேசன் கவிதைகள் எதிர் – கவிதைகள் வகை சார்ந்தவை எனலாம். அவை அழகியல் மறுத்து எளிமையுடன் பூச்சில்லாமல் வாழ்க்கையின் பரிமாணமத்தைப் பதிவு செய்துள்ளன; படித்துப் பார்க்கலாம்.
- பா. வெங்கடேசன் கவிதைகள் — சில குறிப்புகள் ‘ இன்னும் சில வீடுகள் ‘ தொகுப்பை முன் வைத்து …
- ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிதைகள்
- இலக்கியச்சோலை அழைப்பு
- கம்பன் கஞ்சனடி
- தொடுவானம் 179. காதல் என்பது இதுதானா?
- மாயாவதியின் ராஜினாமாவும் அரசியல் கணக்குகளும்
- பையன்கள் : சுப்ரபாரதிமணியன்
- பறப்பியல் பொறித்துவப் புரட்சி ! வானில் பறக்கும் தரைக் கார் “வாகனா” !
- கவிநுகர் பொழுது-17 ( மு.ஆனந்தனின், ‘யுகங்களின் புளிப்பு நாவுகள்’,நூலினை முன்வைத்து)
- ஹாங்காங் தமிழ் மலரின் ஜூலை 2017
- கவிநுகர் பொழுது-19 (கனலி விஜயலட்சுமியின் “பால்(ழ்) முரண் நூலினை முன் வைத்து)
- மொழிவது சுகம் 23 ஜூலை 2017
- கவிநுகர் பொழுது-18 (கு.நா.கவின்முருகு எழுதிய, ‘சுவரெழுத்து’, கவிதைத் தொகுப்பினை முன்வைத்து)
- இலக்கியச் சிந்தனை 2016 ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதைகள்
- சீனியர் ரிசோர்ஸ்