‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
நான் பேசிக்கொண்டேயிருப்பேன்;
நீ கேட்டுக்கொண்டே யிருக்கவேண்டும்.
இப்படித்தான் உண்மையான சமத்துவம்பேணவேண்டும்.
இனியேனும் தெரிந்துகொள்.
உன் நாவை அறுத்துக்கொடுத்துவிடு
அன்பளிப்பாய்.
பண்பாளர் நான்.
கண்ணால் கண்டால்தானா?
கற்பனையில் கண்டுனது அண்டைவீட்டுப்பெண்ணை
அவிசாரியாக்கி
குரலெடுத்துக்கூவுவேன் உரக்க இன்னும் உரக்க
ஆமாம்சாமிகளாகவேண்டும் நீயும் அவள் கணவனும்.
உன் வழிகாட்டியை அத்தனை இழித்துப் பழிப்பேன் நான்;
கிழிகிழியென என் தலைவரைக் கிழிக்க எழுந்தாலோ
பிற்போக்குவாதி நீ –
யுனக்கிருப்பதோ பெருவியாதி.
என் முழக்கங்களுக்கெல்லாம் என்றும்
பக்கவாத்தியக்காரராக இருந்தால் பிழைத்துப்போவாய்.
எக்குத்தப்பாய் ஏதேனும் எதிர்க்கேள்வி கேட்டாலோ
இந்தா பட்டம் –’ ஒநாய்’
எகிறிப்போய்விடும் உன் டாப்பு
என்றுமே கிடையாது உனக்கு மாப்பு.
எதுகை மோனைக்காய் சொல்லவில்லை_
என்னிடமுண்டு
எல்லோரைப்பற்றியும் பலப்பல கோப்பு….
எனக்குத் தெரியும் _
இதிலுள்ள நான் நீயென்பதுனக்கு
நன்றாகவே தெரிந்தாலும்
நீயை நானாகவும் நானை நீயாகவும்
வசதியாய் இட்டுக்கட்டிக்கொண்டு
வழியேகுவாய்.
வட்டநாற்காலிப்பேரணியில் இவற்றை
உன் வரிகளாகச் சொல்லிக் கைத்தட்டல் பெறமாட்டா
யென்று என்ன நிச்சயம்?
வாராய் நீ வாராய் என வழிபார்த்திருக்கும் மேடைகள்….
சாடைமாடையாய் சகலரையும் சாடி யேச உனக்கு
சொல்லியா தரவேண்டும்?
மக்குப்ளாஸ்த்திரி யென்று என்னைத் தூற்றித் தூற்றியே
மேதாவியாக உன்னை உருவேற்றிக்கொண்டாயிற்று.
ஊதாரி நாதாரி என்று என்னைத் திட்டித்திட்டியே
பரோபகாரியாகிவிட்டாய்.
மிட்டா மிராசு நீ,
வெட்டிக்குக் குட்டிக்கரணம் போட்டுக்கொண்டிருப்பாய்
வேலைக்குச் சென்றால்தான்
எனக்கு ஒருவேளை சோறு.
ஜய்ஞ் – ஜக் ஜால்ரா போட
வேறு ஆளைப் பாரு.
————————–
- நாணம்
- பெற்றால்தான் தந்தையா
- கவிதைகள்
- பார்வையற்றோர் நன்னல அமைப்பு
- பேச்சுரிமை
- சர்வதேச தற்கொலை-எதிர்ப்பு தினம் – செப்டம்பர் 10 சொல்லவேண்டிய சில.
- ஆத்மாநாம் விருது
- எட்டு நாள் வாரத்தில் !
- தொடுவானம் 187. கடல் பிரயாணம்
- முரண்கோள் [Asteroid] ஃபிளாரென்ஸை இரு துணைக்கோள்கள் சுற்றுவதை ரேடார் குவித்தட்டு காட்டுகிறது.