வாட்ஸ் அப் வாழ்வியல்…!

author
0 minutes, 0 seconds Read
This entry is part 9 of 11 in the series 26 நவம்பர் 2017

whatsapp-1818551_1280

குமரன்

ஒரு சமூகம் முன்னெடுத்துச் செல்லும் செயல்பாடுகளின் பரிமாணங்கள் சார்ந்தே அச்சமூகத்தின் தற்கால வாழ்வியல் செறிவு நிர்ணயம் செய்யப்படுகின்றன. உலகமெங்கும் உலாவும் வாட்ஸ் அப் சில ஆண்டுகளாய் ந‌ம் கையிலும் சிக்கியிருக்கிறது. “வசப்பட்டிருக்கிறது” என்று சொல்ல ஆசை தான். ஆனால் குரங்கு கையில் பூமாலை வசப்பட்டிருக்கிறது என்று சொன்னால் அது சொற்குற்றமும் பொருட்குற்றமும் சேர்ந்ததாகி விடாதா?

இதை வைத்துக் கொண்டு என்னவெல்லாம் செய்கிறோம் நாம்? யாரேனும் ந‌ம் வாட்ஸ அப் செயல்பாடுகளை பார்த்து மேலோட்டமாக முடிவெடுப்பார்களாயின், தமிழர்கள் அனைவரும் புத்தர்களோ…தெய்வத்தை ஒத்த மேன்மை பொருந்திய சித்தர்களோ என்று சிலாகித்து விடக் கூடும். காலை வணக்கம் துவங்கி, வாழ்வில் உய்வதற்குரிய உயர் சிந்தாந்தங்களும் சிந்தனைகளும் “குழு”க்கள் யாவிலும் வந்து விழுந்து கொண்டே இருக்கின்றன. இதில் நூறில் ஒரு பங்கை, அதை ஃபார்வோர்டு செய்தவரும் அந்த குழுவில் உள்ளோரும் உண்மையிலேயெ மனமொழுக‌ கடைப்பிடிப்பாராயின் நாமும் நாடும் இருக்க வேண்டிய நிலையே வேறு.

இந்த தத்துவ சிகாமணிகள் ஒரு வகை என்றால், அலர்ட் ஆறுமுகங்கள் அபாயங்களை தவிர்ப்பது குறித்து தமிழ் கூறும் நல்லுலகத்திற்காக 24மணி நேரமும் உழைத்துக் கொண்டே இருக்கிறார்கள். மத்திய பிரதேசத்து டாக்டர் டோக்வாலா டீக்னாலா என்று ஏதோ ஒரு பெயரில், சமூக வாஞ்சையோடு ஒரு குளிபானத்தையும் வாசனை மிட்டாயையும் சேர்த்து சாப்பிடக்கூடாது என்று சொல்வதாக வரும் சுற்றறிக்கைகள் ஒரு வகை. ஆனால், ஏதேனும் ஒரு பாட்டில் பானத்தை உறிஞ்சிக் கொண்டே இதை படிப்பதிலும் மேலும் பரப்புவதிலும் உள்ள சுகம் இருக்கிறதே… அதில் அடங்கியிருக்கிறது நம் “அறம்”.

அமேசான் காட்டில் வளரும் அபூர்வ நண்டு, உலகத்திலேயே நீளமான நூல்கண்டு, குழுவில் இருக்கும் ஒவ்வொருவரின் பிறந்த நாளுக்கும் பூச்செண்டு என வரிசை கட்டி வரும் புகைப்படங்கள் நாம் சற்று அசந்தால் போனின் உறைவிடத் திறன் முழுவதையும் உண்டு தீர்த்து விடும். என்ன சார் இதெல்லாம் நல்ல பகிர்தல்கள் தானே என்கிறீர்களா? இதிலிருக்கும் சிக்கலே, இவையனைத்தும் நம்மிடம் தங்காமல் வாந்தி பேதி போல் வந்த நொடியில் நீர்த்து விடும் அளவு செயற்கை தன்மையுடைய பகிர்தல் என்பது தான். இத்தகைய அராஜகங்களின் உச்சம் “RIP” என்ற சொல்லாக்கம். ஒருவருடைய துக்கத்தின் போது பக்கம் நிற்பது எப்படி என்பதையே இன்றைய மற்றும் வரும் தலைமுறைகளிடமிருந்து முற்றிலும் அழிக்க வல்ல மூன்றெழுத்தை உருவாக்கி மனிதத்திலிருந்து தப்பித்துக் கொள்ளும் மகத்தான வழியை கண்டிபிடித்துள்ளோம் நாம். இதில் இன்னும் சில சிறப்பம்சங்கள் உண்டு. ஒருவருக்கு “RIP” தெரிவித்த அடுத்த நிமிடமே, மற்றொரு குழுவில் அதே நபர் ஏதேனும் “குஷாலான” செய்தி போடுவதுமுண்டு. எப்பேர்பட்ட முதிர்ச்சியும் ஞானமும் அடைந்தவர்களாக இருந்தால், நம்மால் ஒரு நொடி ஒருவரின் துக்கத்தில் பங்கெடுத்து அடுத்த நொடி மகிழ்ச்சியை நினைக்க இயலும்…! ஆஹா…! ஜே கிருஷ்ணமூர்த்தியை விட மனச்சலனங்களை  “விரைவில் கடக்கும்” ஆற்றலை வாட்ஸ் அப் நமக்கு தந்திருக்கிறது இல்லையா?  அதுவும் உட்கார்ந்த இடத்திலிருந்தே, உள்ளப் பயிற்சி ஏதுமின்றி!

அனைத்து வகை செய்திகளுக்கும் பதில் அளிக்கா விட்டால் வாட்ஸ் அப்பிலிருந்து என்ன பயன்? குறைந்த பட்சம் நம் மனச்சலனங்களை பதிவு செய்ய வேண்டுமே…அதற்கெனவே சில புண்ணியவான்கள் தயவில் ஏராளமான “எமோஜிக்கள்” உலா வருகின்றன. கைதட்டுவது, கண்ணீர்விடுவது, மென்சிரிப்பு, வன்சிரிப்பு, முறைப்பு, திகைப்பு என்று மொட்டவிழும் பூ போல முன்னர் நிகழ்ந்த உணர்வெல்லாம் இப்போது “இந்தா எடுத்துக்கோ” ஸ்டைலில் வாரி இறைக்கபட உதவியாக இருக்கிறது இந்த எமோஜிக்கள் (குறிப்பு: கண்ணீர் சிந்தும்  எமோஜியை அநேகமாக ஒரு மதுரைகாரர் அல்லது மதுரையை சுற்றியவர் உருவாக்கியிருக்ககூடும். அங்குதான் “வருந்துகிறோம்” போஸ்டர்களில் கண்ணீர் சிந்தும் கண்கள் வரையறை இல்லாமல் தெருக்களெங்கும் தெரியும்). மேம்போக்காய் போடப்படும் எமோஜிக்களை கண்டுபிடித்து “இவர் சும்மா போடுகிறார்” என்பதையும் சேர்த்து காட்டும் எமோஜி ஒன்றை எவரேனும் கண்டுபிடித்தல் நன்று.

ஒரு உரையாடலுக்கோ, தொடர்புக்கோ உரிய எந்தவொரு “நீள அகலங்கள்” பற்றிய கவலையும் யாருக்கும் கிடையாது. விட்டால் ஒரு ராமாயண உரையையோ சிலப்பதிகார பதவுரையையோ ஒரே மெசேஜில் “ஏற்றி” விடுவார்களோ என்று பயமாக இருக்கிறது. அப்படியே ஏற்றினாலும் நமக்கென்ன? பத்தாவது நிமிடமே அதற்கும் “கைதட்டல்” அல்லது “கும்பிடு” போட்டு விடலாம். பத்து நிமிடத்தில் படித்து உள்வாங்கி விட்டீர்களா என்று யார் கேட்கப் போகிறார்கள்? அப்படி கேட்டுவிட்டு அவரின் முகத்தில் எப்படி முழிக்க முடியும் என்று யோசிக்காத “பக்குவம்” இல்லாதவர்களா நாம்? இது போக “படித்ததில் ரசித்தது”, “பார்த்ததில் பிடித்தது”, “புசித்ததில் ருசித்தது”, “நெஞ்சம் விம்மியது”, “தொண்டை கம்மியது” கேட்டகரிக்களில் வரும் செய்திகள் இன்னொரு புறம்.
“பெற்றோர் மற்றும் உற்றோர் உறவுகளை பேணுவது எதற்கு, எப்படி” போன்ற உட்டாலக்கடிகள் அடிக்கடி தென்படும். இதை பரப்புவதற்கு முன், நாம் எந்த லட்சணத்தில் இந்த உறவுகளை வைத்திருக்கிறோம் என்று சுயபரிசோதனை செய்து கொள்வது உத்தமம். அதைவிட முக்கியம் இதை நமக்கு அனுப்பியவரின் லட்சணத்தை அறிதல். அவரிடமிருந்து நம்மையும், நம்மிடமிருந்து பிறரையும் காப்பாற்ற இது உதவும். அடடே…! மனித உறவுகளை மட்டும் பேணும் குறுகிய மனம் கொண்ட இனமா நாம்? தாவர ஜங்கமங்கள் அனைத்தும் தழைத்தோங்க விழைவதையே உயிர்மூச்சென கொண்டவர்களாயிற்றே நாம்…எனவே தான் புலி பூனைக்குட்டிக்கு பால் கொடுத்தல், உள்ளங்கையில் உட்கார்ந்திருக்கும் குருவி, இசை கேட்டு மயங்கும் இலை என்று சகட்டு மேனிக்கு “இத்தனை நல்லவனாயா நீ” என்று பார்ப்போர் புல்லரிக்கும் வண்ணம் ஃபார்வார்டுகள் பறக்கின்றன…சாலையில் சாகக்கிடக்கும் ஒருவனுக்கு தண்ணீர் தர நேரமில்லாதது போல் விரையும், சிக்னல்களில் நம்மை நோக்கி வரும் சீக்குண்டவரை பார்த்ததும் உலகத்தை புரட்டிப் போடும் சிந்தனையில் லயித்தது போல் முகத்தை வேறு பக்கம் நிலைநிறுத்தி, வக்கற்ற வாழ்க்கை வாழும் நமக்கு, இதெல்லாம் எதற்கு?

இவையெல்லாம் போக, பெண்மையின் பெருமை, சூழலியல் அக்கறை, பழந்தமிழரின் ஆற்றல், அறிவு, இத்யாதி என்று நாம் புகுந்து விளையாடாத பகுதிகளே இல்லை. காசா பணமா, உடல் உழைப்பா, மன உழைப்பா? எங்கிருந்தோ வருவதை எவருக்கோ வீசுவதில் எமக்கென்ன நஷ்டம்?

கடவுளையும் விட்டு வைக்கவில்லை நாம். முப்பதாண்டுகளுக்கு முன்பு வரை, “இதை பத்து பேருக்கு பிரதி எடுத்து அனுப்பாவிடில் நாளை காலை உனக்கு நாலு தலை இருக்கும்” என்ற ரீதியில் வரும் கடவுளர்கள் பெயர் தாங்கிய போஸ்ட் கார்டு மிரட்டல்களின் ஹைடெக் வடிவமாக பத்தே நிமிடத்தில் ஷேர் செய்து அனுக்கிரகம் பெற‌ வழி சொல்கிறார்கள். தூணிலும் துரும்பிலும் இருப்பவருக்கு இத்தனை விரைவாக நம்மை ஆசிர்வதிப்பதில் “பேண்டுவித்” சிக்கல்கள் இருக்காது என்று நம்புவோமாக.

இத்தனை தமாஷ்களுக்கும் மகுடம் போன்றதொன்று உண்டு. “குரூப்”பின் தலைவர், எதையெதையெல்லாம் செய்யக் கூடாது என்று ஒரு மடல் வரைவார்.”அலசி ஆராய்தல்” துவங்கி, காலை வணக்கம் போன்ற ஒன்றுக்கும் உதவாத மெசேஜெல்லாம் அனுப்பக் கூடாது போன்றவற்றை குறிப்பிடுவார். பின் அவரே அதை மீறுவார். தலைவன் முதலில் மீறினால் தானே மற்றவர்கள் மீற உதவியாக இருக்கும்?

“யோவ் என்னையா சொல்லிட்டே போற…உன் யோக்கியதை என்ன” என்று கேட்கிறீர்களா? நானும் நீங்களும் வேறு வேறா என்ன? இருப்பினும், கீழ்கண்ட முக்கிய விதிகளை எனக்கு நானே கடைபிடிக்க முயன்று கொண்டிருக்கிறேன். நீங்களும் செய்து பார்க்கலாம்.

1. “மூலம்” தெரியாத எதையும் பரப்பக் கூடாது.
2. தான் கடைபிடிக்காத, கடைபிடிக்க இயலாத எதையும் பரப்பக் கூடாது.
3. முடிந்த வரையில் சுயத்தில் உதித்த கருத்தை பதிவிட வேண்டும்.
4. குரூப்பின் பயனும் அதில் நாம் நுழைவதால் நமக்குள்ள பயனும் நம்மால் பிறர் பெறும் பயனும் பற்றிய தெளிவு இல்லையென்றால் அதிலிருந்து வெளியேறி விட வேண்டும்.
5. இவற்றையெல்லாம் செய்ய முடியா விட்டால், வடிவேலு முகவாயையும் ஆசன வாயையும் பொத்திக் கொண்டு வாலை சுருட்டிக் கொண்டு இருப்பது போல் ஒரு சைகை செய்வாரே அப்படி “சும்மா” இருந்து விடுவது.

இவற்றினால் ஆச்சரியமிக்க விளைவு உண்டு என்று நம்புகிறேன் ‍ அதாவது, மெல்ல மெல்ல பங்குபெறுதல் குறைந்து வாட்ஸ் அப் விட்டே விலகி யதார்த்த உலகில் அதிக நேரம் சஞ்சரிக்கும் வாய்ப்பு கிட்டும்.

அப்படின்னா வாட்ஸ் அப் வேஸ்டா என்றால், இல்லை. சாதனத்திலோ நுட்பத்திலோ அது ஒரு அற்புதம். நாம் பயன்படுத்தும் விதத்தில் பொறுப்பின்மையும் போலித்தனமும் நிறைந்திருக்கிறது. நம்மிடம் ஒரு யானை இருக்கிறது. மன யானை. அதனோடு நாம் வாழ்வில் பயணிக்கிறோம். ஆனால் கையில் இருக்கும் அங்குசத்தால் யானையை வழிநடத்துவதை விட்டுவிட்டு பக்கத்தில் இருப்பவரின் காதைக் குத்தினால் நம்முடைய “யானை”க்கும் அவருடைய “யானை”க்கும் ஏதேனும் பயன் உண்டோ?

Series Navigationகவிதைமொழிவது சுகம் 25 நவம்பர் 2017 : அ. பொறுமைக் கல் -அதிக் ரஹ்மி ஆ. என் கடன் உயிரை வதைப்பதே !
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *