நந்தினி

author
0 minutes, 1 second Read
This entry is part 7 of 11 in the series 3 டிசம்பர் 2017

அருணா சுப்ரமணியன்
புல்லின் மேல் படுத்துறங்கும் மின்னும் பனித்துளிகளை ரசித்தவாறு ஷீலாவின் வருகைக்காக கல்லூரி வாசலில் காத்துக்கொண்டிருந்தாள் நந்தினி. ஷீலா அவளின் உயிர் தோழி. பத்து வருடங்களுக்கும் மேலான நட்பு. ஆறாம் வகுப்பிலிருந்து ஒன்றாகப் படித்தனர். விடுமுறை நாட்களிலும் யாரவது ஒருவர் வீட்டில் சந்தித்து அரட்டை ஆட்டம் என இருப்பார்கள். நந்தினியின் பெற்றோர்கள் வெளியூர் செல்லும் நேரங்களில் ஷீலாவை இரவில் துணைக்கு அழைத்துக்கொள்வாள். அப்படியான இரவுகளில் இருவரும் விடிய விடிய கதை பேசிக்கொண்டிருப்பர்கள். இருவருக்கும் இடையில் எந்த ரகசியமும் இல்லாமல் பழகி வந்தனர். படிப்பில் இருவருமே கெட்டி என்பதால் இவர்கள் பெற்றோர்களும் இவர்களை ஒன்றும் சொல்வதில்லை. இதோ, இருவரும் கல்லூரியில் இறுதி கட்டத் தேர்வுகளை எழுதி முடித்து விரைவில் பொறியாளர் பட்டம் பெற இருக்கிறார்கள். கல்லூரி வளாகத்தில் நடைபெறும் ஒரு பன்னாட்டு நிறுவன நேர்காணலில் கலந்து கொள்வதற்காக இன்று கல்லூரி வந்துள்ளனர். இந்நாள் வரை ஒன்றாக இருந்த இருவரும் இனி வரும் காலங்களில் தொடர்ந்து ஒன்றாக இருக்க முடியுமா? வாழ்க்கை என்ன திருப்பங்ளை தங்களுக்கு தரவிருக்கிறது என்று நந்தினி யோசனையில் இருந்த பொழுது, ஷீலா அவள் அருகில் வந்து இறுக அணைத்து கொண்டாள். “நந்து!! எனக்கு வேலை கிடைத்துவிட்டது. விரைவில் நான் பெங்களூரு சென்று விடுவேன். என் கல்விக்கடன் அனைத்தும் விரைவில் அடைக்கலாம். என் குடும்பம் சற்றே நிம்மதியாக இருக்கும். நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்.” என்று ஷீலா மிக உற்சாகமாக கூறினாள்.
“வாழ்த்துக்கள் ஷீலா! ரொம்ப சந்தோஷமான விஷயம் இது.” நந்தினியின் வாழ்த்து உதட்டளவில் தான் என்பதை கண்டுகொண்டாள் ஷீலா. அவள் எதையோ நினைத்து வருந்துவதை உணர்ந்த ஷீலா, “நந்து!! என்னாச்சு உனக்கு? என்னிடம் நீ எதுவாக இருந்தாலும் சொல்லலாம். எதை நினைத்து கவலைப்படுற?” நந்தினி பெருமூச்சுடன், “ஒன்றுமில்லை ஷீலா! நான் தீபக் பற்றி தான் யோசித்துக்கொண்டிருந்தேன். அவன் இரு மாதங்களில் வேலை நிமித்தமாக சிங்கப்பூர் செல்ல இருக்கிறான். வீட்டிற்கு எங்கள் விசயம் தெரிந்து என் அம்மா என்னிடம் கண்டிப்பாக இருக்கிறார். இன்று கல்லூரி வரவே நான் படாத பாடு பட வேண்டியிருந்தது.” ஷீலா தீபக்-நந்தினி காதல் கதையை அறிந்தவள் தான். தீபக் அவர்கள் கல்லூரியில் படித்த சீனியர், தற்பொழுது சென்னையில் ஐ.டி நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறான். ஷீலா கல்லூரி பருவத்திலேயே வாழ்க்கையை தேர்வு செய்வது சரியல்ல என்ற எண்ணம் கொண்டவள். இதனை தன் தோழிக்கும் வாய்ப்பு கிடைக்கும் தருணங்களில் சொல்ல தவறியதில்லை. “நந்து! நீ என் பேச்சை சற்று கேள். பக்குவமற்ற இவ்வயதில் இந்த முடிவை எடுப்பது சரியா? நீ தவறு செய்வதிலிருந்து உன் பெற்றோர்கள் உன்னை பாதுகாக்க நினைக்கலாம் தானே? தீபக் நீ நினைப்பது போல் அல்லாமல் இருந்தால் உன் எதிர்காலம் என்னாவது?”
நந்தினி சிறிது நேரம் அமைதியாக யோசித்துக்கொண்டிருந்தாள். பிறகு, ” ஷீலா! நானும் இதைத்தான் நேற்று இரவிலிருந்து யோசித்துக்கொண்டிருக்கிறேன். ஆனால், தீபக்கிடம் எப்படி சொல்வது என்று கவலையாக இருக்கிறது. அவன் இதை எப்படி எடுத்துக்கொள்வான் என்று தெரியவில்லை. எனக்காக நீ அவனிடம் பேசுகிறாயா? என்னை தொந்தரவு செய்யாமல் இருக்க சொல்கிறாயா? நானும் உன்னைப் போல வேலைக்கு முயற்சி செய்யனும்.” ஷீலா அவளுக்கு ஆறுதல் கூறி, தீபக்குடன் பேசுவதாக ஒத்துக்கொண்டாள். “ரொம்ப நன்றி! எனக்கு இப்பொழுது தான் கொஞ்சம் ஆறுதலாக இருக்கு. உன்னை தோழியாகப் பெற்றது என் அதிர்ஷ்டம்”
———————————
ஒரு மாதம் கடந்தது. ஷீலா தன் புதிய வேலையில் சேர தயாரானாள். தன் வாழ்வின் அடுத்த அத்தியாயத்தை ஆவலுடன் எதிர்நோக்கினாள். பெங்களூரு செல்லும் பேருந்தில் ஆயிரம் கனவுகளுடன் ஏறினாள். நந்தினியும் அவளுடன் விரைவில் சேர்ந்து கொள்வாள் என்பது கூடுதல் சந்தோஷம். பெங்களூருக்கு கிளம்பும் முன் அவள் வீட்டிற்கு சென்றிருந்தாள் ஷீலா. அவள் அம்மா நந்தினியும் அவளுடன் வந்து தங்கி வேலை தேட உதவுமாறு கேட்டார். ஷீலாவும் உடனே ஒப்புக்கொண்டாள். நந்தினியின் மனமாற்றம் மற்றும் அவள் வீட்டில் அதனால் உண்டான இலகுத்தன்மை அவளுக்கு சந்தோஷம் தந்தது.
தீபக்குடன் அவள் பேச சிறிது சங்கடப்பட்டாள். இருந்தும் நந்தினியின் நலன் கருதி அவனிடம் பேசினாள். தீபக் நந்தினியின் முடிவை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. அவளை மறக்க முடியாது என்றே கூறி வந்தான். ஷீலாவிற்கு என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த பொழுது திடீரென தீபக் நந்தினியை இனி தொந்தரவு செய்ய மாட்டேன் என ஒப்புக்கொண்டான். இன்று வரை தீபக் ஒத்துக்கொண்டதன் காரணம் என்னவென்று ஷீலாவிற்கு தெரியவில்லை. அந்த வகையில் நந்தினியின் மனமாற்றத்தையே அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால், அவளின் மனமாற்றத்தால் நந்தினியின் தாய் அவளுடன் இலகுவாகப் பழகுவதிலும் அவள் மேல் நம்பிக்கை கொண்டு பெங்களூரு அனுப்பவிருப்பதும் அவளை இவ்விஷயத்தை மேலும் ஆராய விடவில்லை. அவளுக்கு தன் தோழியும் அவள் குடும்பமும் சந்தோஷமாக இருப்பதே போதுமானதாக இருந்தது.
ஷீலா தன் பெங்களூரு வாழ்க்கையை எதிர்கொள்ளத் தயாரானாள். அவள் அப்பா முதல் நாள் உடன் வந்து அலுவலகம் அருகேயே விடுதியில் சேர்த்து தேவையானவற்றை வாங்கித்தந்து சென்றார். ஊரில் அவள் அம்மா அப்பாவுடன் இருந்த வீட்டைப் போன்றது தான் இந்த விடுதியும். ஆனால், இங்கு அவளையும் சேர்த்து மொத்தம் பதினைந்து பெண்கள். இரு தளங்களை கொண்ட வீடு. மேல் தளத்தில் இரு அறைகள் மற்றும் பொதுக்கூடம். ஓர் அறையிலும் கூடத்திலும் எழு பேர். ஒவ்வொருவருக்கும் ஒரு ஸ்டீல் கட்டில் மெத்தையுடன் மற்றும் பொருட்கள் வைத்துக்கொள்ள சின்ன அல்மிரா. மீதமுள்ள அறையில் ஒரெ ஒரு பெண் மட்டும். கீழ் தளத்தில் ஒரு அறை மற்றும் கூடம். அறையில் இருவர். கூடத்தில் ஒரு மரத்தடுப்பு வைத்து அதனுள் இருவர், மிஞ்சியிருக்கும் இடத்தில் நால்வர் இருக்கலாம். வசதிக்குத் தகுந்தார் போல வாடகையும். வீட்டின் உரிமையாளரின் அம்மாவும் கீழ்தளத்து கூடத்தில். பூஜையறை பக்கத்தில் அவரது கட்டில். அருகிலேயே ஒரு சின்ன டி.வி. இதுவே அவரது உலகம். காலையில் எழுந்து பால் காய்ச்சி வைத்துவிட்டு கட்டிலில் அமர்ந்து புத்தகம் படிக்க தொடங்கிடுவார். அடுத்த தெருவில் தங்கியிருக்கும் அவரது பெண் காலை மற்றும் மதிய உணவை கொண்டு வந்து தருவார். வீட்டை பராமரிக்க வேலையாள் மதியம் வந்து செல்வார். பகல் பொழுதில் அம்மாவுடன் இருக்கும் உரிமையாளர் இரவுக்கான உணவை தயார் செய்துவைத்து அவர் வீட்டிற்கு சென்றிடுவார். இது மாதிரியான விடுதிகள் பெங்களூருவில் அதிகம். குறைந்த முதலீட்டில் நல்ல வருமானம். வெளியூர்களிலிருந்து இங்கு வேலைக்காக வரும் பெண்கள் தங்க இடம் தேவை. இதனை இங்குள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
ஷீலாவிற்கு இந்த சூழல் புதிது. அவளுக்கு விடுதியில் தங்கி பழக்கம் இல்லை. தன்னை இந்த சூழலுக்குள் பொருத்திக் கொள்வதில் அவளின் நேரம் கழிந்தது. காலையில் எழுந்து அருகில் உள்ள பூங்காவில் அரை மணிநேர நடையுடன் நாளை தொடங்குவாள். ஒன்பது மணிக்கெல்லாம் அலுவலகத்தில் இருப்பாள். வேலையில் நாள் முழுவதும் தன்னை ஈடுபடுத்தி கொள்வாள், நல்ல நண்பர்கள் அமைத்துக் கொண்டாள் . அருகில் உள்ள நூலகத்தில் உறுப்பினராகி கிடைத்த நேரங்களை புத்தகங்களில் செலவிட்டாள். நகர வாழ்க்கைக்கு அவள் நினைத்ததைக் காட்டிலும் விரைவாகவே தன்னை பழக்கிக்கொண்டாள்.
—————————————-
சில வாரங்கள் உருண்டோடின. ஓர் இனிய ஞாயிறு காலை. ஷீலா மெஜஸ்டிக் ரயில்வே ஸ்டேஷனில் நந்தினிக்காக காத்திருந்தாள். நடைமேடையில் அமர்ந்து ரயிலில் வந்திறங்கும் மனிதர்களை பார்த்துகொண்டிருந்தாள். ஒவ்வொரு நாளும் இந்த நகரத்திற்கு வேலை தேடி வந்து சேரும் இளைஞர்கள் அதிகரித்து கொண்டிருக்கிறது. இதில் எத்தனை பேருக்கு இங்கு வெற்றி கிடைக்கிறது. அத்தனை பேருக்கும் வேலைவாய்ப்பு கிடைப்பது சாத்தியமா? பொறியியல் படித்தும் தகுந்த வேலையின்றி எவ்வளவு பட்டதாரிகள். இதற்கு என்ன காரணம்? தொலைநோக்கு பார்வையின்றி பணம் சம்பாரிக்கும் தொழிலாக்கி தேவைக்கு அதிகமாக கட்டப்பட்ட கல்லூரிகளா? பொறியியல், மருத்துவம் என்ற இரு பந்தயக் குதிரைகளில் மட்டும் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் மாயமோகமா? விவசாய நிலங்களை வீட்டு மனைக்களாக்கி கிடைக்கும் பலன் என்ன? விரைவில் பணம் சம்பாரிக்க நம் வாழ்வாதரங்களை அழித்துக்கொண்டிருக்கிறோம். பொருண்மை உலகில் மனிதன் எவ்வளவு சுயநலத்துடன் சுழல்கிறான்?
நந்தினியை சுமந்து வரும் ரயில் இதோ வந்து சேர்ந்தது. ஷீலா தன் தோழியை காண ஆவலுடன் இருந்தாள். அவளுடன் சென்று பார்க்க வேண்டிய இடங்களை மனதில் குறித்துக்கொண்டாள். நந்தினியை கண்டதும் அவள் எல்லையற்ற இன்பத்தை உணர்ந்தாள். விடுதிக்கு வரும் வழியெங்கும் தன் அனுபவங்களை ஆவலுடன் பகிர்ந்துகொண்டாள். அறைக்கு வந்தவுடன் நந்தினியின் பெற்றோரர்களுக்கு தகவல் சொல்லிவிட்டு நந்தினி குளிக்கச் சென்றாள். காலை உணவு முடித்து இருவரும் அன்றைய நாள் முழுதும் அரட்டைகளிலும் ஊர்ச்சுற்றி பார்ப்பதிலும் செலவழித்தனர் .
மறுநாள் காலை ஷீலா வேலைக்கு செல்ல தயாரானாள். நந்தினி தூங்கி கொண்டிருந்தாள். பயணக் களைப்பில் நன்றாக தூங்கி எழட்டும் என்று அவளை எழுப்பாமல் அலுவலகம் விரைந்தாள். நாள் முழுவதும் வேலைப்பளுவில் அவளால் நந்தினியுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை. மாலை சற்று தாமதமாகத் தான் அறைக்குச் சென்றாள் . இரவு உணவை வெளியில் சென்று சாப்பிட்டு அவளுடன் சிறிது நேரம் செலவழிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டே விடுதி வந்தடைந்தாள். ஆனால் , நந்தினி அறையில் இல்லை. எங்கு போய் இருப்பாள்? பக்கத்தில் எங்கேனும் சென்றிருக்கலாம் என்றே நினைத்தாள். அவள் முகம் கை கால் கழுவி உடை மாற்றி வந்தாள். அரை மணி நேரம் சென்ற பிறகும் நந்தினி வரவில்லை என்றதும் அவள் அலைபேசியில் அழைத்தாள். ஆனால், நந்தினி அவள் அழைப்பை ஏற்கவில்லை. பல முறை முயன்றும் பலனில்லை. அப்பொழுது தான் நந்தினி கொண்டு வந்த பையும் அறையில் இல்லை என்பதை உணர்ந்து துணுக்குற்றாள். என்ன நிகழ்ந்தது என்று புரிபடவில்லை. அதே சமயம், அவளது அலைபேசிக்கு நந்தினியிடம் இருந்து ஒரு குறுந்தகவல் வந்தது.
“டியர் ஷீலா! நான் தீபக்குடன் சிங்கப்பூர் செல்லும் விமானம் ஏறத் தயாராக உள்ளேன். நான் உன்னிடம் சிலவற்றை மறைக்க வேண்டிய சூழல். காலப்போக்கில் நீ என்னை புரிந்து கொள்வாய் என நம்புகிறேன். டேக் கேர். பை!”
-அருணா சுப்ரமணியன்

Series Navigationஉறவு என்றொரு சொல்……துவக்கமும், முடிவும் இல்லாத பிரபஞ்சமே பெருவெடிப்பின்றி தோன்றியுள்ளது.
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *