மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில் தீ விபத்து: தமிழக அரசின் கடமையும் தமிழ் ஹிந்துக்களின் பொறுப்பும்

author
1
0 minutes, 24 seconds Read
This entry is part 1 of 14 in the series 18 பெப்ருவரி 2018

 

 பி.ஆர்.ஹரன்

 

இம்மாதம் முதல் வெள்ளிக்கிழமை (02.02.2018) அன்று இரவு உணவு அருந்திவிட்டு உறங்கப்போவதற்கு முன்னால் தொலைக்காட்சிகளில் செய்திகள் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் பயங்கரமான அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். பழம்பெருமை வாய்ந்த மதுரை மீனக்ஷி அம்மன் கோவிலில் கிழக்கு வாசலுக்குள் இருக்கும் வீரவசந்தராய மண்டபம் (7000 சதுர அடி) மற்றும் ஆயிரங்கால் மண்டபம் அருகில் இருக்கும் கடைகளில் தீப்பிடித்து, தீ பரவியது. கிட்டத்தட்ட 35 கடைகள் அழிந்தன. நூற்றுக்கணக்கான புறாக்கள் சாம்பலாயின. வீரவசந்தராய மண்டபத்தின் மேற்கூரையின் ஒரு பகுதியும் கிரானைட் கல் உத்திரங்களும் கீழே விழுந்தன. ஒரு கிரானைட் கல்தூணும் விழுந்துள்ளது. சில சிற்பங்களும், ஒரு நந்தி விக்ரகமும் பாழாகியுள்ளன. தீயணைப்புப் படையினர் சுமார் மூன்று மணிநேரங்கள் போராடித் தீயை அணைத்துக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். (பத்திரிகைச் செய்திகள்)

 

தீ விபத்து குறித்து கோவிலுக்குச் சென்று ஆய்வு செய்த மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் அவர்கள், “வீரவசந்தராய மண்டபம் பாதிக்கப்பட்டாலும், அதன் அருகில் இருக்கும் ஆயிரங்கால் மண்டபத்திற்கு எந்தச் சேதமும் ஏற்படவில்லை. விபத்திற்கான காரணத்தைக் காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் ஆகியோர் விசாரிக்கின்றனர். போலீஸ் கமிஷனர், மகேஷ் குமார் அகர்வால் தலைமையில், பொதுப்பணித் துறை,  பொறியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு கோவில் கட்டிடத்தின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது. கோவிலுக்குள் உள்ள கடைகளை அகற்றுவது குறித்து, ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும்” என்றார். ஆலோசனைக்குழுவில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன், பொதுப்பணித் துறை கட்டட பராமரிப்பு செயற்பொறியாளர் சுரேஷ், கோவில் உதவி செயற்பொறியாளர் சுப்ரமணி, துணை கமிஷனர் சசிமோகன், ஆர்.டி.ஓ கார்த்திகேயன், தாசில்தார் பாலாஜி ஆகியோர் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் அவர்கள் உயர்மட்டக்குழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

 

 

கடைகளே பிரச்சனை

 

வீரவசந்தராய மண்டபத்தில் இருந்த கடைகள் ஒன்றிலிருந்து மின்கசிவு ஏற்பட்டதால் கிளம்பிய தீயே பரவியிருக்கலாம் என்கிற முதற்கட்ட தகவலும் கிடைத்தபடியால், கடைகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. கோவில் வளாகத்தில் உள்ள 115 கடைக்காரர்களுக்கும் கடைகளைக் காலி செய்யச் சொல்லி கோவில் இணை ஆணையர் நடராஜ் நோட்டிஸ் அனுப்பியுள்ளார்.

கோவிலுக்குள் கடைகள் பல இருப்பதாலும், அவை மின்சாரம் அதிக அளவில் பயன்படுத்துவதாலும், மண்டபங்களில் வெப்பம் அதிகமாகி அது கோவில் முழுவதும் பரவுகின்றது. இதனால் கருவறைகளில் பணிபுரியும் சிவாச்சாரியார்களுக்கு மிகவும் கஷ்டங்கள் ஏற்பட்டு அவர்களின் உடல் நலனும் பாதிப்படைகிறது. இதனால், கோவிலில் இருக்கும் கடைகளை அகற்ற வேண்டும் என்று பல அமைப்புகள் பல வருடங்களாகப் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. ஆயினும், அறநிலையத்துறை கோவில் கடைகளை அகற்ற எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்காமல் இருந்து வந்துள்ளது.

தற்போது தீ விபத்து ஏற்பட்டவுடன் கடைகளைக் காலி செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை பலம் பெற்றுள்ளது. மீண்டும் பல்வேறு அமைப்புகள் கடைகளை அப்புறப்படுத்தக் கோரியுள்ளன. ஆகவே, இணை ஆணையர் கடைக்காரர்களுக்குக் காலி செய்யச் சொல்லி நோட்டிஸ் அனுப்பியுள்ளார்.

மீனாட்சி அம்மன் கோவில் வியாபாரிகள் சங்கத் தலைவர் ராஜநாகுலு சங்கத்தினர் சார்பில் இணை ஆணையர் நோட்டிஸுக்குத் தடைகோரி உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். அம்மனுவில், “எங்கள் கடைகளில் பூஜை சாமான்களும் இந்து மதப் புத்தகங்களும் செயற்கை நகைகளும் விற்பனை செய்து வருகிறோம்; மாதாமாதம், அறநிலையத்துறைக்கு ரூ.2 லட்சம் வாடகை செலுத்தி வருகிறோம்; இவ்வாறு எங்களிடம் கூடுதல் வாடகை பெற்றுவரும் கோவில் நிர்வாகம் முறையாக நிர்வாகம் செய்வதில்லை; எங்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பு வசதிகளும் செய்து தருவதில்லை; ஒரு கடையிலிருந்து மின்கசிவு காரணத்தால் தீ ஏற்பட்டது. கடைக்காரர்கள் உடனடியாகச் செயல்பட்டதால் தீ அணைக்கப்பட்டது; விபத்து நடந்தபோது மின்கசிவு துண்டிக்கப்படவில்லை; மின் ஊழியர் யாரும் அப்போது பனியில் இல்லை; அவர் பணியில் இருந்திருந்தால் தீ பரவுவதைத் தடுத்திருக்கலாம். தீ பற்றிப் பரவியதற்குக் கோவில் நிர்வாகம் தான் காரணம்; ஆகவே, கோவில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பல்வேறு அமைப்புகள் போராடி வருகின்றன; எனவே, கோவில் கடைகளைக் காலி செய்யும் நடவடிக்கைகளுக்குத் தடை விதித்து, கடைகளைக் காலி செய்யக் கூடாது என்று உத்தரவிட வேண்டும்” என்று கோரிக்கை வைத்திருந்தார்.

வியாழக்கிழமை 8ம் தேதி வழக்கை விசாரித்த நீதிபதி பாரதிதாசன், கோயில் நிர்வாகம் நோட்டீஸ் வழங்கிய 115 கடைகளும் வெள்ளிக்கிழமை 9ம் தேதி பகல் 12 மணிக்குள் காலி செய்ய வேண்டும் என்றும், காலி செய்த பொருட்களை கோயில் நிர்வாகம் சொல்லும் இடத்தில் வைத்துவிட்டுப் பின்னர் அவற்றை அங்கிருந்து 3 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே, கன்னியாகுமரியைச் சேர்ந்த அப்துல் கலாம் ஆசாத் சுல்தான் என்கிற வழக்கறிஞர், “அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் 30 ஆயிரம் கோயில்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்தவை. பல கோயில்கள் பராமரிப்பின்றி சிதிலமடைந்துள்ளன. சமூக, பொருளாதார செயல்பாடுகளில் இந்து கோயில்களுக்கு முக்கிய பங்கு உண்டு. கோயில்களை முறையாகப் பராமரிக்காமல், வரலாறு, கலாச்சாரம் ஆகியவற்றைக் கருத்திக் கொள்ளாமல் கோயில் வளாகங்களை வணிக நோக்கில் பயன்படுத்த அறநிலையத்துறை அனுமதித்துள்ளது. முதல்நிலை கோயில்களில் காற்றோட்ட வசதியுடன் கட்டுமானம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஆகம விதிகளுக்குப் புறம்பாகக் குளிர்சாதனம் உட்பட பல்வேறு மின்சாதனங்களை பொருத்தியுள்ளனர். இவை தீ விபத்திற்கு வழிவகுக்கின்றன. மீனாட்சி அம்மன் கோயில் பழங்காலப் பாரம்பரியமிக்கது. இங்கு வரும் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் பிப்.,2 இரவில் அங்குள்ள கடைகளில் பற்றிய தீ பெரிய அளவில் பரவியுள்ளது. கோயில் கட்டுமான விதிகளைப் பின்பற்றாமல், வணிக நோக்கில் கோயில் வளாகம் பயன்படுத்தப்படுவதால் ஏற்பட்ட விபத்திற்கு முன்னுதாரணமாக இது உள்ளது. கோயில் வளாகங்களை வணிக நோக்கில் பயன்படுத்தும் வகையில் பழமையான கட்டுமானங்களை மாற்றியமைப்பது சட்ட விரோதமாகும்.
மாற்றியமைக்கப்பட்ட கட்டுமானங்களைப் பழைய நிலைக்கு கொண்டுவரும் வகையில், கோயில் உள் பகுதிக் கடைகளை மூட நடவடிக்கை எடுக்க அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் சத்தியநாராயணா, ஹேமலதா ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு, கோவில்களில் உள்ள பாதுகாப்பு மற்றும் தீ விபத்துகள் தடுப்பு ஏற்பாடுகள் குறித்து இம்மாதம் (ஃபிப்ரவரி) 27ம் தேதிக்குள் மனுக்கள் தாக்கல் செய்யுமாறு அறநிலையத்துறை ஆணையர் மற்றும் தீயணைப்புத்துறை இயக்குனர் ஆகியோருக்கு உத்தவவிட்டுள்ளது.

தொடரும் விபத்துகள் 

சமீபகாலமாக கோவில்களில் சரியான முறையான பராமரிப்பு இல்லாததால் தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.

 • கடந்த 2014ம் ஆண்டு அக்டோபர் மாதம் 8ம் தேதி காளையார் கோவில் சொர்ணகளீஸ்வரர் கோவில் கோபுரங்கள் கும்பாபிஷேகத்திற்காக சாரங்கள் கட்டப்பட்டு கூரைகள் வேயப்பட்டிருந்த நிலையில், ஜெயலலிதா சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட மகிழ்ச்சியைக் கொண்டாடிய அ.தி.மு.கவினர் பட்டாசுகள் கொளுத்தியதால் தீ விபத்து ஏற்பட்டது.

 • கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி அன்று, திருச்செந்தூர் முருகன் கோவிலில் வெளிப்பிராகார மண்டபம் ஒன்று இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்து போனார். இருவர் படுகாயம் அடைந்தனர். இது சினிமா தயாரிப்பாளரும் முருக பக்தருமான சாண்டோ சின்னப்ப தேவரால் 44 ஆண்டுகளுக்கு முன்புதான் கட்டப்பட்டது.

 

 • திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காட்டில் உள்ள வடாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இது காரைக்கால் அம்மையாருக்கு நடராஜன் பெருமான் காட்சி தந்த தலம். நடராஜப் பெருமானின் ஐந்து சபைகளில் இந்தத்தலம் ரத்தின சபை ஆகும். இங்கு உள்ள தல விருட்சமான அரச மரம் இம்மாதம் 7ம் தேதி இரவு பற்றி எரிந்துள்ளது.

 • வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள கங்கையம்மன் மற்றும் பொன்னியம்மன் கோவில்களுக்குச் சொந்தமான தேர்கள் இரண்டும் எரிக்கப்பட்டன.

 

 • தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த ஆதி கும்பேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி அன்று காஸ் சிலிண்டரின் ரப்பர் குழாய் நழுவியதால், காஸ் பற்றி எரிந்து தீ எற்பட்டது. கோவிலில் நடந்துவரும் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்கும் நடனக் கலைஞர்களுக்காக சமையல் செய்யும்போது இந்த விபத்து நடந்துள்ளது. தீ பரவுவதற்கு முன்னர் அணைக்கப்பட்டுள்ளது.

 

 

தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டிய விவரங்கள்

 

 

 • பண்டைய மன்னர்கள் (சேர, சோழ, பாண்டிய, பல்லவ, நாயக்க, மராட்டிய மன்னர்கள்) பிரம்மாண்டமான கோவில்களை எழுப்பி நமது ஆன்மிகப் பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் பாதுகாத்து வந்துள்ளனர். அவர்கள் எழுப்பிய கோவில்கள் நமது கலச்சாரச் சின்னங்களாக ஆயிரம் வருடங்களுக்கும் மேலாகத் திகழ்ந்து வருகின்றன.

 

 

 • சைவ, வைணவ ஆகமங்களில் வழிகாட்டப்பட்டுள்ள வகையிலே அம்மன்னர்கள் ஆலயங்களைக் கட்டியுள்ளனர். அவ்வாறு ஆகம விதிகளின்படி கோவில் கட்டியவர்கள், இயற்கையான காற்றோட்டமும் வெளிச்சமும் கிடைக்கின்றபடியாக வசதிகளைக் கணக்கிட்டுத் திட்டமிட்டுக் கட்டியுள்ளனர். அதே ஆகமங்களில் கூறப்பட்டுள்ளபடியே வழிபாடுகளும், பூஜைகளும், உற்சவங்களும், கும்பாபிஷேகங்களும் நடைபெறுகின்றன.

 

 

 • ஆனால் ஆலயங்கள் அரசுக் கட்டுப்பாட்டில் அறநிலையத்துறையின் கீழ் கொண்டுவரப்பட்ட பிறகு, நாளடைவில், அறநிலையத்துறையின் தலையீடு பெருகிவருகின்றது. கோவில்கள் வியாபாரத் தலங்களாக மாற்றப்படுகின்றன.

 

 

 • சிற்பக்கலைகளைப் பறைசாற்றவும், உபன்யாசங்கள், கதாகாலக்ஷேபங்கள் நடத்தவும், திருமுறைகள், திவ்யப்பிரபந்தங்கள் ஒதவும், நடனங்கள் நடத்தவும் கட்டப்பட்டுள்ள மண்டபங்களுக்குள் ஏராளமான கடைகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. மேலும் பக்தர்கள் நெருக்கடி இல்லாமல் வழிபடவும், கோவிலைச் சுற்றி வலம் (பிரதக்ஷணம்) வரவும் அமைக்கப்ப்ட்டுள்ள விசாலமான பிராகாரங்களிலும் கடைகள் அனுமதிக்கப்படுகின்றன.

 

 

 • அதோடு மட்டுமல்லாமல், கோவில் முழுவதும் அற்புதமான சிற்பங்களும், பல்வேறு வரலாற்றுக் குறிப்புகள் மற்றும் விவரங்கள் அடங்கிய கல்வெட்டுகளும் உள்ளன. அவற்றுக்குச் சேதங்கள் ஏற்படாதவாறு பராமரிக்கப்பட வேண்டியது அவசியம். கடைகளினாலும், மின் இணைப்புகள், குளிர் சாதன வசதிகள் செய்வதனாலும், அவைகள் பெரிதும் சிதைக்கப்படுகின்றன. தீ, வெள்ளம் போன்ற பாதிப்புகளாலும் அவை அழிகின்றன.

 

 

 • பிரசாதக் கடைகள் என்கிற பெயரில் ஒவ்வொரு பிராகாரத்திலும் தின்பண்டங்கள் விற்கப்படும் கடைகளும் அனுமதிக்கப்படுகின்றன. கோவில் மடப்பள்ளிகளில் தயாரிக்கப்பட்டுப் பூஜையின் போது நிவேதனம் செய்யப்படும் பண்டங்களே பிரசாதம் ஆகும். ஆனால் வெளியே தனியார் செய்து வந்து கோவில்களுக்குள் வைத்து விற்கப்படும் தின்பண்டங்கள் பிரசாதம் ஆகாது.

 

 

 • கோவிலுக்குள் கடைகள் பெருகிவிட்டதால், மின் இணைப்புகள் கொடுக்க வேண்டியுள்ளது. பிளாஸ்டிக் பொருட்கள் முதல் அனைத்து விதமான, எளிதாகத் தீப்பற்றக் கூடிய பொருட்களையும் கடைக்காரர்கள் வியாபாரம் செய்கின்றனர்.

 

 

 • கோவிலைச் சுற்றியுள்ள வீதிகளிலும் அளவுக்கு மீறிய ஆக்கிரமிப்புகள் உள்ளன. அசைவச் சிற்றுண்டிக்கடைகள் முதற்கொண்டு பலவிதமான வியாபார நிறுவனங்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளன. கோவில் கோபுரத்தை விட உயரமான கட்டிடங்கள் கட்டப்படக் கூடாது என்று சட்டம் உள்ளது. ஆனால், அந்தச் சட்டத்தை மீறி, கோபுரங்களை விட உயரமான கட்டிடங்கள் கோவில் அருகிலேயே கட்டப்பட்டுள்ளன.

 

 

 • கடந்த 2017ம் வருடம் அக்டோபர் மாதம் பெய்த மழையில் கிழக்குக் கோபுர வாசல் வழியாக மழை நீர் வெள்ளமென புகுந்து ஸ்வாமி சன்னிதிவரை எட்டியுள்ளது. அவ்வாறு மழைநீர் கோவிலுக்குள் புகுவதற்கு உள்ளேயும், வெளியேயும் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளே காரணம்.

 

 

 • கடந்த 2015ம் ஆண்டும் ஒருமுறை மின்னல் தாக்குதலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது மேற்கூரை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரியான இயற்கையின் தாக்குதல்களின் போது கடைகளுக்குத் தீ பற்றினால், தீ மேலும் வேகமாகப் பரவும் அபாயம் உள்ளது.

 

 

 • கோவில்களில் உள்ள கடைகளிலும் கோவிலைச் சுற்றியுள்ள வீதிகளிலும் மாற்று மதத்தவர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோவில் சொத்துக்களையும் மாற்று மதத்தவர்கள் அனுபவித்து வருகின்றனர். சொத்துக்களை அனுபவித்து வருபவர்கள் பல லட்சங்கள் வாடகை பாக்கியும் வைத்துள்ளனர். இது முற்றிலும் தவறானதாகும்.

 

 

 • ஆலயங்கள் நமது கலைகள், கலாசாரம், ஆன்மிகப் பாரம்பரியம், தெய்வீக இலக்கியங்கள், வழிபாட்டு முறைகள், உற்சவங்கள், திருவிழாக்கள், பசு மடங்கள், குளங்கள், தல விருக்ஷங்கள் ஆகியவற்றை மட்டுமே பாதுகாத்து வளர்க்கும் தலங்களாக இருக்க வேண்டும்.

 

 

 • நாட்டியாஞ்சலி போன்ற தொடர் நிகழ்ச்சிகளைக் கோவில் வளாகத்திற்குள் நடத்துவதும், அந்தக் கலைஞர்களுக்குள் கோவிலுக்குள்ளேயே உணவு சமைபதும் மிகவும் தவறான செயல்களாகும். மடப்பள்ளி என்கிற இடத்தை இறைவனின் நிவேதனத்துக்குப் பிரசாதம் சமைக்க மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

 

 

தமிழக அரசு உடனடியாக எடுக்க்க வேண்டிய நடவடிக்கைகள்

 

 

 • கோவில்கள் வழிபாட்டுத்தலங்கள்; வியாபாரத்தலங்கள் கிடையாது. ஆகவே கோவில்களுக்குள் இருக்கும் கடைகள் அனைத்தும் உடனடியாக அப்புறப்படுத்தப்பட வேண்டும். கோவில்களைச் சுற்றியுள்ள வீதிகளில் கோவிலுக்குச் சொந்தமான பகுதிகளில் மாற்று மதத்தவர் நடத்திவரும் கடைகளையும் அகற்ற வேண்டும்.

 

 

 • பிரசாத ஸ்டால்கள் என்கிற பெயரில் இருக்கும் தின்பண்டக் கடைகள் அனைத்தும் உடனடியாக அப்புறப்படுத்தப்பட வேண்டும். கோவில் மடப்பள்ளிகளில், தெய்வங்களின் நிவேதனத்துக்குத் தேவைப்படும் அளவு மட்டுமே பிரசாதங்கள் தயாரிக்கப்பட வேண்டும்.

 

 

 • கோவிலைச் சுற்றியுள்ள வீதிகளில் இருக்கும் ஆக்கிரமிப்புகள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட வேண்டும். கோவில் கோபுரங்களை விட உயரமாக கட்டப்பட்டிருக்கும் கட்டிடங்களின் உயரமும் குறைக்கப்பட வேண்டும். கோவிலைச் சுற்றியும் கோவிலுக்குள்ளும் இயற்கையான காற்றோட்டமும், வெளிச்சமும் நிலவுவதையும், மழைநீர் வடிகால் சீராக இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

 

 

 • கோவில் சொத்துக்களை அனுபவித்துக்கொண்டு, வாடகை தராமல் ஏமாற்றிக் கொண்டிருப்பவர்களிடம் இருந்து சொத்துக்களை மீட்க வேண்டும். அவர்களில் மாற்று மதத்தவர்களும் பலர் உள்ளனர். கோவில் சொத்துக்கள் மாற்று மதத்தவர்களுக்குக் கொடுக்கப்படக் கூடாது. அவர்களிடமிருந்து உடனடியாகக் கோவில் சொத்துக்கள் மீட்கப்பட வேண்டும்.

 

 

 • கோவில் பிராகாரங்களையும், கோவில் குளங்களையும், தல விருக்ஷங்களையும், கோ சாலைகளையும், யானைகளின் இடங்களையும் சுத்தமாகவும், காற்றோட்டமாகவும் பராமரிக்க வேண்டும்.

 

 

 • கோவில் வளாகத்திற்குள்ளோ, அதை ஒட்டியோ இருக்கும் கழிவறைகள், அறநிலையத்துறை அலுவலகங்கள் ஆகியவையும் உடனடியாக அகற்றப்பட வேண்டும். அறநிலையத்துறை அலுவலகங்களும் பொதுக் கழிப்பறைகளும் கோவில்களுக்கு வெளியே உள்ள வீதிகளில் இடம் பார்த்துக் கட்டிக்கொள்ள வேண்டும்; அல்லது வாடகைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

 

 

 • கோவில்கள் சம்பந்தப்பட்ட அனைத்துமே ஆகமங்களில் கூறப்பட்டுள்ள விதிகளின் படியே நடத்தப்பட வேண்டும். இதை அரசும் அறநிலையத்துறையும் உறுதி செய்ய வேண்டும்.

 

 

 • கோவில்களுக்கு வரும் பக்தர்கள் நிம்மதியாகவும், அமைதியாகவும் இறைவனை வழிபட்டுச் செல்லுமாறு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும்.

 

 

வழிபாட்டுத் தலங்கள் வரலாற்றைப் பறைசாற்றும் கலாச்சாரச் சின்னங்கள்

 

 

தமிழகத்தில் அறநிலையத்துறை நிர்வாகத்தின்கீழ் ஆயிரக்கணக்கான (36,000க்கும் மேலான) கோவில்கள் உள்ளன. இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் (Archaeological Survey of India) நிர்வாகத்தின்கீழும் சில கோவில்கள் உள்ளன. தனியார் வசம் உள்ள கோவில்களும் இருக்கின்றன. சிறப்பாக நடைபெற்று வரும் தனியார் வசம் உள்ள கோவில்களை அறநிலையத்துறை கைப்பற்றிய நிகழ்வுகளும் உண்டு.

 

இதில் கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், தனியார் வசம் உள்ள கோவில்களும், இந்திய தொல்லியல் ஆய்வகத்தின் கீழ் உள்ள கோவில்களும் சிறப்பாக பராமரிக்கப்படுகின்றன. தனியார் வசம் உள்ளக் கோவில்கள் ஆகம விதிகளின்படிக் கட்டப்படாவிட்டாலும், சுத்தமாகவும், நல்ல வசதிகளுடனும் பராமரிக்கப்படுகின்றன.

 

இந்தியத் தொல்லியல் ஆயவகத்தின் நிர்வாகத்தின்கீழ் உள்ள கோவில்கள் பழம்பெருமை வாய்ந்தவை. பல நூற்றாண்டுகள் முன்பு ஆகம விதிகளின்படிக் கட்டப்பட்டவை. அவைகள் அருமையாகப் பராமரிக்கப்பட்டு வருகின்றன. வரலாற்றுக் குறிப்புகள் கொண்ட கல்வெட்டுகளும் கலையம்சம் வாய்ந்த சிற்பங்களும் அற்புதமாகப் பராமரிக்கப்படுகின்றன. அதே சமயத்தில் அவற்றில் வழிபாடுகளும் எந்தவிதமான இடையூறும் இன்றி நடைபெற்று வருகின்றன. கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம், தஞ்சை பெரிய கோவில் ஆகியவையே சிறந்த உதாரணங்கள்.

 

இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் பராமரிப்பில் உள்ள கோவில்களுக்கு உள்ளே சுத்தத்தையும், அமைதியையும் காணலாம். ஆண்டவனை நினைத்தபடியே அமைதியாக விசாலமான பிராகாரங்களைச் சுற்றிப் பிரதக்ஷணம் வரலாம். கடைகள், வியாபாரச் சத்தங்கள், பிரசாதம் என்கிற பெயரில் தின்பண்டங்கள் தின்னும் அசுத்தச் செயல்கள் ஆகிய தொல்லைகள் இன்றி நிம்மதியாக வழிபடலாம். கோவில்களைச் சுற்றி இருக்கும் வீதிகளும் சுத்தமாக இருக்கும். வியாபாரத் தொந்தரவுகள் இன்றி பக்தர்கள் நிம்மதியாக வழிபாடு நடத்தக்கூடிய சூழ்நிலை நிலவும்.

 

அறநிலையத்துறையின் பராமரிப்பில் உள்ள கோவில்களையும் தமிழக அரசு, இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தைப் போன்று பராமரிக்கத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுத்த்தால், தற்போது வெறும் வியாபாரத் தலங்களாக அசுத்தமாகவும், அருவருக்கத்த்தக்க நிலையிலும் இருக்கும் அனைத்துக் கோவில்களும், வழிபாட்டுத் தலங்களாக சுத்தமாகவும், அமைதியாகவும் மாறும்.

 

இந்த நடவடிக்கைகளைப் போர்க்கால வேகத்தில் தமிழக அரசு எடுக்க வேண்டும். நீதி மன்றங்கள் அதைக் கவனத்தில் கொண்டே வழக்குகளில் உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டும். கோவில்களையும், சிற்பங்களையும், கல்வெட்டுக்களையும் முறையாகப் பரமாரிப்பதன் மூலம் தமிழகத்தின் தொன்மையான வரலாறு காப்பாற்றப்படும்.

 

 

தமிழ் இந்துக்களின் கடமை

 

 

 

கோவில்கள், கோவில் குளங்கள், ஸ்தல விருக்ஷங்கள், கோசாலைகள், கோவில் யானைகள், கோவில் குருக்கள்கள், மடங்கள், மடாதிபதிகள் ஆகியோரைக் காப்பது ஹிந்துக்களாகிய நமது கடமை.

 

அந்நாட்களில் அரசர்கள் நெறிதவறாமல் இந்தக் கடமையைச் செய்து கொண்டிருந்தார்கள். ஆனால், இன்றைய “மக்கள் ஆட்சி” நடக்கின்ற உலகில் அரசியல்வாதிகள் பாதுகாப்பில் ஈடுபடாமல் அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

சிற்பங்கள் அழிந்து கொண்டிருக்கின்றன. விக்ரஹங்களும் நகைகளும் கொள்ளை போய்க்கொண்டிருக்கின்றன. கோவில் பசுக்களையும், கோவில் யானைகளையும் சித்தரவதை செய்துகொண்டும், கொன்றுகொண்டும் இருக்கிறார்கள். மடங்களின் மீதும் மடாதிபதிகளின் மீதும் கடுமையான தாக்குதல்கள் நடத்துகிறார்கள். ஆலய வழிபாடுகளிலும், அர்ச்சகர்களின் செயல்பாடுகளிலும் ஆயிரம் இடையூறுகள் செய்து கொண்டிருக்கிறார்கள்.

 

அரசியல்வாதிகளின் அராஜகங்கள் கண்முன்னே நடந்து கொண்டிருக்கும்போதும், அதைக் கண்டுப் பொங்கி எழாமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதே அயோக்கியர்களுக்கு மீண்டும் மீண்டும் அரசாட்சி செய்ய வாய்ப்பு தந்து அவர்களின் அராஜகங்கள் தொடரச் செய்கிறோம்.

 

தெய்வங்களை அவமதிக்கின்றார்கள் அயோக்கியர்கள்; அவர்களுக்கு ஆதரவாக மேலும் பல அயோக்கியர்கள். ஆச்சாரியர்களையும் குருமார்களையும் அவமதிக்கின்றார்கள் மற்றும் பல அய்யோக்கியர்கள். கலாச்சாரச் சின்னங்களான ஆலயங்கள் அழிக்கப்படுகின்றன. ஆன்மிகப் பாரம்பரியம் அழிக்கப்படுகின்றது.

 

திராவிட இனவெறியர்களின் அதர்மம் மிகு ஆட்சியில் கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாகக் கோவில்களில் குடியிருக்கும் தெய்வங்கள் கொதிநிலையில் இருக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். கொதிநிலையில் இருக்கும் தெய்வங்கள் கோபக்கண்களைத் திறந்தால் நாடு தாங்காது.

 

மதுரையில் நடந்தது விபத்தா சதியா என்பது இனிதான் தெரியவரும். ஆனால், சதியே நடந்திருந்தாலும் விபத்து என்று கூறப்பட்டு விசாரணை முடிக்கப்படலாம். விசாரணையே நடத்தப்படாமலும் போகலாம்.

 

ஆனால், நம்மைப் பொறுத்தவரை அன்னை மீனாக்ஷியின் கோபக்கனலில் ஒரு துளியாகத்தான் இதை எடுத்துக்கொள்ள வேண்டும். அப்படி ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு நமது கடமைகளை உணர்ந்து செயல்பட்டால் நமக்கு நல்லது.

 

இல்லாவிட்டால், ஆன்மிகமும், கலாச்சாரமும், கலைகளும், ஜீவகாருண்யமும் செழித்து வளர்ந்த இந்தப் புண்ணிய பூமியான தமிழகம் சுடுகாடாகத்தான் மாறிப்போகும்.

 

“நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை” என்பதைப் பரிபூரணமாக நம்பும் நாம், அந்த நல்லார் ஒருவருக்குத் தீங்கு இழைக்கப்படுமானால், அந்தத் தீங்கு அனவரையும் தீண்டும் என்பதையும் நம்ப வேண்டும்.

 

ஆலயங்களையும், ஆவினங்களையும், அந்தணர்களையும், ஆன்மிகக் குருமார்களையும், ஆன்மிகத் தலங்களையும் காப்பதாக உறுதிகொள்வோம்.

 

 

கடமையைச் செய்வோம்; கடவுள் அருள் பெறுவோம்!

 

Series Navigationமறைந்துவரும் கடிதக்கலை!? காலமாற்றத்தில் பழையன கழிதலும் புதியன புகுதலும்
author

Similar Posts

Comments

 1. Avatar
  meenal says:

  ஹரி எழுதிய கருத்துகள் நன்று. சென்ற ஆண்டு நான் அக்கோவிலுக்குச் சென்ற போது சுவாமியைச்சுற்றி பிரகாரம் வர வழியில்லை. மக்கள் வெள்ளமாக வந்தாலும் கோவிலைச்சுற்றி வருதல் வழக்கம். கோவிலுக்குள் ஏ.சி என்று நவீன வசதிகள் இருக்கின்றன. அவை நன்கு பராமரிக்கப்பட வேண்டும், பொதுவாகவே கோவில்கள் பணம் சம்பாதிக்கும் இடமாக மாறிவருவது கண்கூடு. அக்காலத்தில் பொற்றாமரேக் குளத்தைச்சுற்றி அமைதியாக அமர்வது உண்டு. தேங்காய் பழக்கடைகள் பூக்கடைகள் இருப்பது அவசியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *