பொன்மான் மாரீசன்

author
1
0 minutes, 0 seconds Read
This entry is part 18 of 22 in the series 1 ஏப்ரல் 2018

மீனாட்சி சுந்தரமூர்த்தி

சூர்ப்பநகை தூண்டி விட்ட முறை தவறிய ஆசையால் அல்லலுற்ற இராவணன் தனது மாமன் மாரீசனின் இருப்பிடம் வருகிறான்.அவன் வரக் கண்ட மாரீசன் இந்த நேரத்தில் இவன் ஏன் வந்தான் எனக் கலக்கமுற்று அதனைக் காட்டாமல் வரவேற்கிறான்.சிறந்த சிவபக்தனாகி எண்ணற்ற வரங்களைப் பெற்றவன் தன்னை நாடி வந்த காரணம் என்னவென வினவுகிறான்.

இராவணன் என் உயிரைத் தாங்க முடியாது தாங்கிக் கொண்டிருக்கிறேன் தேவர்களும் நம்மைக் கண்டு எள்ளி நகையாடும்படி பழி நேர்ந்து விட்டது.மனிதர்கள் வலிமை
பெற்று விட்டனர்.தம் கை வாளால் உன் மருகியின் மூக்கினை அரிந்து உன் குலத்திற்கும்,என் குலத்திற்கும் தீராத பழியை உண்டாக்கி விட்டனர்.இதனால் வெகுண்டு
எதிர்த்த என் தம்பியரும் உனது மருகர்களுமான கரதூடணரையும் மாய்த்து விட்டனர்.ஆனால் நீயோ இதையெல்லாம் நினையாது கவலையற்று தவம் செய்து
கொண்டிருக்கிறாய்.இம்மாபெரும் பழியைத் துடைக்க எண்ணுகிறேன் ஆனால் என் வலிமைக்கு நிகராகாத அவர்களோடு போரிட நான் விரும்ப வில்லை,அவர்களோடு
இருக்கும் பவளச் செவ்வாய் வஞ்சியைக் உன் உதவியால் கவர்ந்து பழி தீர்க்க வந்தேன் என்றான்.எரிகின்ற நெருப்பிலே அரக்கைக் காய்ச்சி அதைக் காதிலே ஊற்றியது போன்ற சொற்களைக் கூறுபவன் முன் சீச்சீ எனச் செவிகளைப் பொத்தி முன் கொண்ட அச்சம் நீங்கி சினத்தோடு அறம் பேசலுற்றான் மாரீசன்.

`மன்னா நீநின் வாழ்வை முடித்தாய் மதியற்றாய்

உன்னால் அன்றுஈது ஊழ்வினை என்றே உணர்கின்றேன்

இன்னாவேனும் யானீது உரைப்பென்`என்று அதாவது இதோடு உன் வாழ்வு முடியப் போகிறது,அதனால்தான் அறிவும் இழந்தாய்,நான் இப்போது கூறப்போவது உனக்கு

இனிமையாய் இராது என்றாலும் உன் நன்மை கருதி சொல்வதைக் கேள் .

அற்ற கரத்தோடு உன்தலை நீயே அனல்முன்னில்

பற்றினை உய்த்தாய் பற்பல காலம் பசிகூர

உற்று உயிர்உள்ளே தேய உலந்தாய் பினையன்றோ

பெற்றனை செல்வம் பின்அது இகழ்ந்தால் பெறலாமோ`

பலப்பல காலம் பசிதாகம் மறந்து உன் தலைகளைக் கொய்து வேள்வியில் இட்டு நீ செய்த தவத்தால் பெற்ற

பேறுகளை இழந்தால் மீண்டும் பெற முடியுமா, அற வழியில் பெற்ற செல்வத்தை அறமற்ற செயலால் இழப்பாயோ`

தம்மிடம் அன்பு கொண்டோரின் நாட்டினைக் கவர்ந்தவர்கள்,அறமற்ற முறையில் குடி மக்களிடம் வரி வசூலிப்பவர், மற்றொருவன் தன்மனை வாழும்

தாரம் கொண்டோர் என்றிவர் தம்மை தருமம்தான்

ஈரும் கண்டாய் கண்டகர் உய்ந்தார் எவர்ஐயா`

விண்ணவர் கோமான் இந்திரன் அகலிகை பாலுற்ற வேட்கையால் கொடுஞ்சாபம் பெற்றான்.இந்திரனைப் போல் பிறர் மனையாளை விரும்பிய எத்தனையோ பேர் இழிநிலை அடைந்தனர்.திருமகளைப் போன்ற அழகு மங்கையர் உனக்காகக் காத்திருக்க செயலின் விளைவறியாதவர்களைப் போல் பேசுகிறாய்,

`என்பில் அதனை வெயில்போலக் காயுமே

அன்பில் அதனை அறம்.` எனும் வள்ளுவன் வாக்கு இங்கு நினைவு கூறத் தக்கது.மேலும் சொல்வான்,அப்படியே நீ திட்டமிட்டபடி செய்ய முயன்றாலும் உனக்கு உண்டாகப் போவது பழியும் பாவமும்தான் இன்பமல்ல.அதோடு உலகமனைத்தும் படைத்தவனான இராமன் உன் பெருமை, கூட்டமனைத்தையும், சான்றோரின் சாபம் போல் தப்பாமல் தாக்கும் அம்புகளால் அழித்து விடுவான்.கரதூடணர்களைத் தேரோடு அழித்தவன்,பெருவலி பெற்ற விராடனை அழித்தவன்,என் தம்பி சுபாகுவையும் தாய் தாடகையையும் வதம் செய்தவன் இராமன்,அவன் அருகினில் எப்போதும் இருக்கும் இலக்குவனிடம் என் வீரம் அழிந்ததை இப்போது நினைத்தாலும் நெஞ்சம் நடுங்கும்.ஆகையால் நீ நினைந்த

இழிசெயலை விடுத்து நலமோடு வாழ்வாய் என்றான் மாரீசன்.இது கேட்ட இராவணன்,நீ சிறிதும் அஞ்சாமல் கங்கை முடி சூடிய சிவனின் கயிலை பெயர்த்தெடுத்த என் தோள்வலியழியும் என்றாய்(இராவணனைப் பற்றி ஒவ்வொரு பதிகத்திலும் எட்டாவது பாடலில் சொல்லுவார் சம்பந்தர். `மலைமல்கு தோளன் வலிகெட ஊன்றி`),தோண்டப் பட்ட மலைகளைப் போல் தோன்றும் என் தங்கையின் முகமும் நினைந்திலை.

பரவாயில்லை நீ கூறியவற்றைப் பொறுத்துக் கொண்டேன்

என்றான்.மாரீசன் மேலும் சொல்லுவான். நீ எடுத்த மேரு மலையை(திரிபுரமெரிக்க வில்லானது)சனகன் சொல்ல எடுத்து நாணேற்றும் முன்னமே முறிந்து போனது இராமன் கையில், இதை நீ அறிவாயா? நீ அபகரிக்க நினைக்கும் சீதை ஒரு பேதைப் பெண் வடிவமென நினைத்தாய் இல்லை அது அரக்கர்கள் செய்த பாவத்தின் முழு வடிவம்.

இச்செயலால் உன் உறவுகளோடு நீயும் தப்பாது அழிவாயே என எண்ணி என் மனம் பறை போல் அடித்து துயர் உறுகிறது. நஞ்சு இதுவென அறியாமல் அருந்துவோரை தடுக்காமல் நல்லது எனச் சொல்ல இயலுமோ?மூன்று உலகங்களையும் ஒரு மாத்திரைப் பொழுதில் அழிக்க வல்லவையும்,தெய்வத் தன்மை பொருந்தியவையும், விசுவாமித்திரன் கொடுத்தவையுமான எண்ணற்ற ஆயுதங்கள் மிக உக்கிரமாக இராமனின் ஆணையை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன.உனது மரபில் மூத்தவன் என்பதனாலும்,உன் மாமன் என்பதனாலும் இவற்றைக் கூறுகிறேன்.இந்த இழி செயலை விட்டு விடு என்றான் மாரீசன். இராவணன்,`உன் தாயைக் கொன்றவனுக்கு அஞ்சி இங்கு ஒளிந்து வாழ்கிறாய் உனையும் ஆண்மகன் எனத் தகுமோ` திசையானைகள் அஞ்சி ஒளிய தேவர்களை வென்ற என்னை தசரதன் புத்திரர் வெல்வர் என்கிறாய்.

`ஏவல் செய்கிற்றி எனது ஆணைவழி எண்ணிக்

காவல்செய் அமைச்சர் கடன் நீ கடவது அன்றே.`அதாவது

நீ அமைச்சரைப் போல் அறவுரை சொல்லக் கூடாது,என் கட்டளைப்படி நடப்பதே உன் வேலை ,நீ மறுத்தால் என் வாளால் உனைத் தண்டித்து நான் நினைத்ததைச் செய்வேன்,நீ பிழைக்க விரும்பினால் நான் விரும்பாத அறிவுரை சொல்வதை விட்டு விடு என்றான் இராவணன்.

மாரீசன் அழிவுக் காலம் வரும் போது நன்மை புலப்படாது போலும் என எண்ணி உருக்கிய செம்பில் உள்ள நீர் போல முதலில் கொதித்துப் பின் அடங்கி நான் என் மரணத்திற்காக வருந்தவில்லை உன் நன்மைக்காகவே உரைத்தேன்,என்ன செய்ய வேண்டும் என்றான்.

கோபம் தணிந்து எழுந்து மாமனைத் தழுவிக் கொண்ட இராவணன்,`சீதையை அடையாமல் மன்மதனின் அம்பால்

இறப்பதை விட,`

………..இராமன் அம்பால் பொன்றலே புகழ்உண்டன்றோ

தென்றலைப் பகை செய்த சீதையைத் தருதியென்றான்.`

கரதூடணர் முடிவு கண்டும் நீ இப்படி வினவலாகுமோ என்று மாரீசன் கேட்க, வஞ்சனையால் கவர்க, என்றான்

இராவணன்.இதைக் கேட்ட மாரீசன் உன் பெருமைக்கு இது தகுமா இராமனின் மனைவியை நின் வலிமையினால் அல்லாது வஞ்சனையால் கவர்வது இழிவாகாதோ என்றான்.இந்த மானிடரை வெல்லச் சேனை தேவையில்லை,என் வாளே போதும்.ஆனால் தன்னுடன் உள்ள இராமனும் இலக்குவனும் இறந்து போனால் சீதையும் இறந்து விடுவாள், அதனால் மாயையால் கவர்வேம் என்றான்.எப்படி என்றான் மாரீசன் நீஅழகியப்

பொன் மானாய்ச் சென்று சீதையை மயங்கச் செய் என்றான் இராவணன்.`தேவியைத் தீண்டா முன்னம் இவன் தலை சரத்தில் சிந்திப் போம்`

எனவுணர்ந்த மாரீசன்,தன் சுற்றம் அழிவது நினைத்து கண்களில் நீர்ப் பெருக்கினான்,இராமலக்குவரை நினைந்து அஞ்சுவான்,தானிருந்த பள்ளத்து நீரில் நஞ்சு

கலந்திடத் துயருற்ற மீனைப் போலானான்.

பொன் மானின் உருவம் கொண்டு நன் மானாம் சீதையின் முன் போனான்.கலைமான் முதலான அத்துணை மான்களும் இதனழகில் மயங்கி அருகு வந்தனவாம்,விலை மாதரை நாடுதல் போல்,

வைதேகி மலர்பறிக்க பர்ணசாலை விட்டு வெளியில் வந்தாள்.

இதற்கு முன்னர் எவரும் அடையாத துன்பத்தை அடையப் போகும் சீதை,விதிவலியால் தீங்கு நேரவிருப்போர் கனவில் தாம் இதுகாறும் கண்டிராததோர் விநோத உருவத்தினைக் கண்டது போல் மாயமானைக் கண்டாள்.இது மட்டும் இல்லை,இராவணனின் ஆயுள் முடிவதனாலும் அந்நாளில் அறம் தழைக்கப் போவதாலும் பொய்மானை விரும்பினள் சீதை.அதனைப் பற்றித்தருக என்பென் எனப் பதையா வெற்றிச்சிலை வீரனை மேவினள்`

.

இராமனை அணுகி,ஆணிப் பொன்னால் உடலமைந்து, கால்களும் செவிகளும் மாணிக்கமாகி தூரத்தில் இருந்தும்

ஒளி வீசும் மான் ஒன்று கண்டேன்`எனக் கை குவித்து நின்றாள்.அதாவது அது வேண்டும் என்பதைச் சொல்லாமல் உணர்த்தி நின்றாள்.இப்படியொரு மான் இயற்கை இல்லை எனவுணராது அதைக் காண விரும்பினன்.அவ்வளவில் இலக்குவன்,

`காயம் கனகம்,மணிகால் செவிவால்

பாயும் உருவொடு இதுபண் பலவால்

மாயம் எனலன்றி மனக் கொளவே

ஏயும்` என்பான்.இராமனும்.

`நில்லா உலகின் நிலை,நேர்மையினால்

வல்லாரும் உணர்ந்திலர்; மன்னுயிர்தாம்

பல் லாயிரம் கோடி பரந்துளதால்

இல்லாதன இல்லை இளங் குமரா` என்றான். மேலும் பொன்னாலான அன்னங்கள் ஏழு இருந்ததை நீ கேட்டதிலையோ என்றான்.(மான சரோவரின் யோக நிஷ்டை செயப் புகுந்த பரத்துவாஜ புத்திரர் எழுவர் ஒழுக்கம் தவறியதால் இறந்தனர்.பின் குருக்ஷத்திரத்தில் கௌசிக புநத்திரராகி கார்க்கி முனிவரின் சீடராயினர் அங்கு அவரின் காமதேனுப் பசுவைக் கொன்று புசித்தனர், இருப்பினும் முன்னோர்க்குரிய பித்ரு கடனைத் தவறாது செய்தமையால் வேடராய்,விலங்குகளாய்,சக்கரவாகப் பறவையாய்,தங்க அன்னங்களாகப் பிறவிகள் எடுத்து முடிவில் முக்தியும் பெற்றனர்.)இவ்வாறு பேசிக் கொண்டே

இருந்தால் அம்மான் காட்டு வழிகளில் எங்கே சென்று மறையுமோ என வருந்தினாள் வைதேகி.அவ்வளவில் அவள் கருத்துணர்ந்து வா மானைக் காண்போம் என்று புறப்பட்டான் இராகவன்.இளவலும் வேறு வழியின்றி பின் தொடர்ந்தான்.தவறாத விதியாய் மான் எதிரில் வந்து நின்றது.தேவர்களின் புண்ணியம் கைகூடலால் இராமன் மாயமென அறியாதவன் போல் தம்பி,இதற்கு எதுவும் ஈடாகாதே பற்கள் முத்துகள்,புல் தீண்டும் நா மின்னல்,மேனி செம்பொன்,புள்ளிகளோ வெள்ளி. ஊர்வன பறப்பன என அனைத்தும் இதனழகில் மயங்கி நெருப்பில் வீழும் விட்டில் பூச்சிகள் போல் இதைச் சூழ்வது காண் என்றான்.

இலக்குவன் அண்ணா இது பொன்மானாக இருப்பதனால் நமக்கென்ன நாம் போவோம் என்கிறான்.சீதை ஐயனே!

விரைந்து பற்றிக் கொடுத்தால் நலம்,நமக்கு வனவாசம்

முடியப் போகிறது,அயோத்தி அரண்மனையில் விளையாடத் தகுந்தது என்றாள்.இலக்குவன் அண்ணா இது இயற்கையில் வந்தது அல்ல,வஞ்சனை அரக்கரின் மாயமென்பதை இறுதியில் அறிவாய் என்றான். இராமனும் மாயமானாயின் மாய்த்து நாம் அரக்கரை ஒழித்த கடமை செய்வோம்.இல்லையெனின் பிடித்துக் கொண்டு வருவோம் என்றான்.இலக்குவன் மேலும் சொல்லுவான் இதனை ஏவியவர் யாரெனவும் அவர் காரணமும் தெரியவில்லை.அதோடு பெரியோர் விலக்கிய வேட்டை நமக்கு வேண்டாம் என்கிறான்.அரக்கர் பலரென்றும், அவரின் மாய தந்திரமென்றும் கூறி அரக்கரைப் பூண்டோடு அழிக்க நாம் கொண்ட விரதம் கைவிடல் இகழ்ச்சி ஆகாதோ என்றான்.இளவலும் நீ சொல்வது சரியே ஏதாயினும் நான் சென்று வருவேன் என்கிறான். அவ்வளவில் சீதை,நாயக நீயே பற்றி நல்கலை போலும்` என்று கண்ணில் நீர் திரள சினந்து சென்றாள்.

இராமனும் இளையவனை மனைவிக்குக் காவலாக்கி, `வேல்நகு சரமும் வில்லும் வாங்கினான் விரையலுற்றான்.`

கோப்பெருந் தேவியின் ஊடல் பாண்டியனுக்கும் கண்ணகிக்கும் கேடு விளைத்தது,சீதையின் ஊடல் இராமனுக்கும் அவளுக்கும் அவலம் தந்தது.இலக்குவன்

`முன்னமும் மகவாய் வந்த மூவரில் ஒருவன் போனான்

அன்ன மாரீசன் என்றே அயிர்த்தனன்` என்றான். விசுவாமித்திரரின் வேள்வியில் வந்த அரக்கரில் ஒருவன் தப்பிப் போனான் அவன் மாரீசன் அவனே என எண்ணுகிறேன் சிநதிப்பாய் எனச் சொல்லி சீதை புகுந்த பர்ணசாலையின் வாயிலில் நின்று காவல் புரிந்தனன்.

தம்பியின் எச்சரிக்கையை மனம் கொளாது சீதையின் கோபம் நினைந்து முறுவல் பூத்திட மானைத் தொடர்ந்தான். மான் மெல்ல நடந்தது அஞ்சி வெறித்தது, செவிகளை விரைத்து கால் குளம்புகளை மார்போடு ஒடுக்கி வானில் தாவியது.வாயு வேகம்,மனோ வேகம் இரண்டையும் விஞ்சியது.வாமனனாகி இரண்டடியால் உலகம் அளந்தவனை காடெலாம் சுற்ற வைத்தது.

`குன்றிடை இவறும் மேகக் குழுவிடைக் குதிக்கும்;கூடச்

சென்றிடின்,அகலும்;தாழின் தீண்டலாம் தகைமைத்தாகும்

நின்றதே போல நீங்கும்,நிதிவழி நேயம் நீட்டும்

மன்றலம் கோதை மாதர் மனமெனப் போயிற்றம்மா`

சாதாரண மான் என்றால் இயல்புக்கு மாறாக, இப்படிச் செயல்பட முடியாது இது மாய மான்தான் இதனை முன்னரே சொன்னான் இளவல்.நானும் இதை எண்ணியிருந்தால் இத்தனை வருத்தம் இல்லை,இனி இதனைப் பற்றும் முயற்சி வேண்டியதில்லை,எனத் துணிந்தான் இராகவன் `பற்றுவான் இனிஅல்லன்,பகழியால் செற்று வானில் செலுத்தலுற்றான்` என அறிந்து வானில் உயர்ந்து பறந்தான் மாரீசன்.அக்கணத்திலேயே இராமன் மாலவன் சக்கராயுதம் நிகர்த்த,

`செக்கர் மேனிப் பகழி செலுத்தினான்

புக்க தேயம் புக்கு இன்னுயிர் போக்கு எனா `

தப்ப முயன்றவனைத் தாக்க இராமபாணம் ஏவப் பெற்றது.

மாரீசனின் மார்பினில் நெட்டிலைச் சரம் பாய்ந்ததும் இராமனின் குரலில் திக்கெட்டும் கேட்க சீதே லக்ஷ்மணா என அபயக் குரல் கொடுத்து குன்றென வீழ்ந்தான்.

இராமனும் தம்பி வல்லவன், முன்னரே உய்த்துணர்ந்தான் என நினைந்து வீழ்ந்தவனை உற்று நோக்கி அன்று வேள்வி

போக்க வந்த மாரீசனே எனத் தெளிந்தான்.அதோடு இவன்

மாய்வதே நோக்கமாக வந்தவனில்லை,வேறு ஏதோ சூழ்ச்சி உள்ளது,இவன் என் குரலில் அழைத்தமைக்கு காரணம் உண்டு,இதனைக் கேட்டு சீதைப் பதறுவாளே, என எண்ணினான் இராமன்.

அயோத்தியா காண்டத்தில் எப்படி கைகேயி காப்பிய வளர்ச்சிக்குத் திருப்பு முனையாகிறாளோ அதைப்போல மாரீசன் காப்பியத்தின் உச்சகட்ட சிக்கலுக்கு வழி வகுத்தவனாகிறான் .இராமன் எய்த அம்பு இலக்கை அழிக்காமல் மீள்வது இல்லை. விசுவாமித்திரரின் வேள்வி காத்த இராமனிடமிருந்து தப்பிய அரக்கன் இவன் ஒருவனே.

தப்புகிறான் ஏன்? அவதார நோக்கம் ஈடேற. இது தெரிந்தே தெரியாதது போல் பரம்பொருளான இராமபிரான் தப்பிக்கச் செய்ததாகும்.அதனால் இராம காவியத்தில் மாரீசனாகிய பொன்மான் விலை மதிப்பற்றதாம்

Series Navigationஇயற்கையை நேசிநெஞ்சுக்குள் எட்டிப் பார் ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்
author

Similar Posts

Comments

  1. Avatar
    valavaduraiyan says:

    கட்டுரை சிறப்பாக உள்ளது.தேவையான பாடல்களும் விளக்கங்களும் உள்ளன. உவமைகளைச் சற்று விளக்கியிருக்கலாம். அன்பிலதனை எனத் தொடங்கும் குறள் கட்டுரையின் அந்த இடத்தில் ஒட்டாமல் தனித்து நிற்கிறதே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *