உலகின் தலை சிறந்த சில ஓரினப்படங்கள் 1 – மார்கரிட்டா வித் ஸ்ட்ரா

author
0 minutes, 4 seconds Read
This entry is part 16 of 19 in the series 15 ஏப்ரல் 2018

அழகர்சாமி சக்திவேல்

 

நடிகை ரேவதி அம்மாவாக நடித்த, ஒரு உலகப்புகழ் பெற்ற ஹிந்தி திரைப்படம், தமிழகத்துக்குள் திரையிடப்பட்டதா என்பதே எனக்குத் தெரியவில்லை. பாண்டிச்சேரியில் பிறந்த நடிகை கல்கி கோச்சின், இந்தத் திரைப்படத்துக்காய், இந்திய தேசிய விருது பெற்று இருக்கிறார். சென்னையில் பிறந்த இசை அமைப்பாளர் மிக்கி மேக்லேரி,  இந்தப் படத்துக்காய், ஆசியாவின் சிறந்த இசை அமைப்பாளர் என்ற விருது பெற்று இருக்கிறார்.. இதற்கும் மேலே ஒரு படி போய்,  இந்தத் திரைப்படம், பல்வேறு உலக விருதுகளையும் வென்றுள்ளது.. இருப்பினும்,  இந்தப்படம் குறித்து, தமிழ்த்திரைப்பட உலகம் பேசாமல் இருப்பதற்க்கு காரணம் ஒன்றுதான். அரசியல், ஏழ்மை, சாதி, ஊனம் போன்ற பெரும்பானமை மக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைத் தாண்டி சிந்திக்கத் தெரியாத தமிழ்த் திரைப்பட உலகம்,  ஓரினச்சேர்க்கையை இன்று வரை எள்ளி நகையாடிக் கொண்டிருக்கிறது என்பதே அந்த முக்கியக்காரணம் என்பதை இங்கே நாம் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். ஓரிரு படங்களைத் தவிர, திருநங்கைகள் என்பது ஒரு நகைச்சுவையாகவும் கேலிப்பொருளாகவும் காட்டப்படும் அவலம் தமிழ்த்திரைப்பட உலகில்,  இன்றுவரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. திருநங்கைகளுக்கு இந்த கதி என்றால்,  ஆணோடு ஆண் அல்லது பெண்ணோடு பெண் உறவுகொள்ளும் ஓரினச்சேர்க்கையாளர்கள் குறித்து, “பேசுவதே அவமானம்”  என்ற சிந்தனையோடுதான்,  தமிழ்த்திரைப்பட உலகம் இருக்கிறது என்பது வேதனைப்படத் தக்கது. தமிழ்த்திரைப்பட உலகம், ஓரினச்சேர்க்கையாளர்களை குறித்து இதுவரை ஒரு நல்ல படம் கூட எடுக்கவில்லை என்பது கண்கூடு. விழியிழந்த ஒருத்தியை, “ஐயோ பாவம் குருடி” என்று பரிதாபப்படுவது தமிழ் மக்களின் இயல்பு. ஆனால் அந்த விழியிழந்த ஒருத்தி, ஒரு லெஸ்பியன் என்ற பெண்-பெண் உறவு விரும்பி என்று ஒரு திரைப்படம் சொன்னால், “குருடிக்கு திமிரைப்பாரேன்” என்றுதான் தமிழ்உலகம் இன்றுவரை நினைக்குமே தவிர, அவள் ஆசையில் உள்ள நியாயம் குறித்து அது ஒரு போதும் யோசிப்பதில்லை. பகுத்தறிவு பகுத்தறிவு என்று பேசும் தமிழர்களில் பலர், ஓரினச்சேர்க்கை விசயத்தில் மட்டும், பழமைவாதிகளாய் இருப்பது கொடுமையிலும் கொடுமை. இந்தப்படத்தின் கதை, இந்தியத் தலைநகர் தில்லியில் படிக்கும் ஒரு கல்லூரி மாணவியின் கதை என்பதால்,  இந்தியக் கல்விக்கூடங்களில் இன்றைய ஓரினச்சேர்க்கையின் நிலை குறித்து கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.

பெண் தன்மையுடைய ஆண்கள், இன்று வரை இந்தியக் கல்விக்கூடங்களில் அவமானப்படவே செய்கிறார்கள். பெண்ணின் மீது ஆசைப்படும், இந்தியப் பெண் மாணவிகளுக்கும் இதே நிலைதான். எத்தனையோ இந்திய ஓரினச்சேர்க்கை மாணவர்கள்,  இந்த அவமானங்களைத் தாங்க முடியாமல், தங்கள் பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்தி விடுகிறார்கள். சிலர் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளுகிறார்கள். இன்னும் பலரோ, வெளியில் தெரிந்தால் அவமானம் என்ற எண்ணத்தில், உள்ளுக்குள்ளேயே பூட்டி வைத்து, புழுங்கிப் புழுங்கி மனநோய்க்கு உள்ளாகிறார்கள். வேறு சிலரோ, போதைமருந்துக்கு அடிமையாகிறார்கள். இதை கவனித்துக் கொண்டிருந்த இந்திய சுகாதாரத்துறை, 2017-இல், சாத்தியா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. “பருவ வயதில் வரும் ஓரினச்சேர்க்கை உணர்வு இயற்கையானதே” என்று சொல்லிய இந்திய சுகாதாரத்துறை, தனது திட்டத்தை கல்விக்கூடங்களுக்கு கொண்டு செல்ல “சாத்தியா கையேடு” என்ற ஒன்றை உருவாக்கி அதை, சமூக சேவகர்கள் மூலம் பள்ளி மற்றும் கல்லூரிகளில் அறிமுகப்படுத்திக் கொண்டு இருக்கிறது. பிஜேபி அரசாங்கத்தை, இந்த விசயத்திற்காய் நான் மனதாரப் பாராட்டுகிறேன். அண்மையில், ஆதார் குறித்த நீதிமன்ற வழக்கில், தனி மனித உரிமை குறித்து விளக்கம் தந்த இந்திய நீதித்துறை, “ஓரினச்சேர்க்கையும் ஒரு தனிமனித உரிமையே” என்று சொல்லியிருப்பது மகிழ்ச்சிக்குரியது என்றாலும், அது பல இந்தியர்களின் கவனத்திற்குச் செல்லவே இல்லை என்பது வருத்தத்திற்குரியது. மார்கரிட்டா வித் ஸ்ட்ரா என்ற இந்தத் திரைப்படம், டெல்லியில் உள்ள ஒரு ஊனமுற்றோர் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஓரினப்படம் ஆகும்.

இந்தப்படம் எடுக்கத் தூண்டுகோலாய் இருந்த நிகழ்ச்சி குறித்து, இந்தப்படத்தின் பெண் இயக்குனர் திருமதி சோனாலி போஸ் பின்வருமாறு கூறுகிறார். “எனது நெருங்கிய உறவினர்தான் மாலினி. மாலினி ஒரு பெருமூளை வாத நோயினால் ஊனமானவர். அவரால் நடக்க முடியாது. கை, கால்களை சரிவர அசைக்கமுடியாது. அவரது வாய் குளறிக் குளறிப் பேசும். மாலினி என்னைப் பார்க்க வரும் சில நேரங்களில், நானும் அவளும் மதுக்கூடம் செல்வதுண்டு. சக்கர நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு, கைகளை சரிவர அசைக்கமுடியாத காரணத்தால், மார்கரிட்டா என்ற ஒருவகை மதுவை, அவள் ஒரு ஸ்ட்ரா போட்டு உறிஞ்சுவதைப் பார்த்து வியந்த ஒரு கூட்டம், அந்த மதுக்கூடத்துக்குள் இருந்தது. மாலினியின் பிறந்த நாள் மிக அருகில் இருந்ததால், “மாலினி…உன் பிறந்தநாள் வரப் போகிறது..உனக்குப் பரிசாக என்ன வேண்டும்?” என்று நான் கேட்ட போது, “எனக்கு பிறந்தநாள் பரிசாக உங்களிடம் இருந்து செக்ஸ் வேண்டும்” என்று மாலினி சொன்னாள். வாய்குளறிப் பேசிய மாலினியின் வார்த்தைகளை புரிந்துகொள்ளவே எனக்குக் கொஞ்சம் நேரம் பிடித்தது. லெஸ்பியன் என்ற பெண்-பெண் உறவில் ஆர்வம் இல்லாத நான், எதையோ சொல்லி, அந்த நேரத்தில் சமாளித்தேன். ஆனால், ஒரு ஊனமான பெண்ணின், அந்த நியாயமான ஆசைகள் எனது மனதை அரித்துக்கொண்டே இருந்தது. மாலினியைப் போன்ற லெஸ்பியன் பெண்களின் மனது, இந்த உலகத்திற்குத் தெரியவேண்டும் என்ற என் எண்ணமே, மார்கரிட்டா வித் ஸ்ட்ரா என்ற இந்தத் திரைப்படம் எடுக்க எனக்குத் தூண்டுகோலாக இருந்தது. இந்தப்படம் லண்டனில் திரையிடப்பட்ட போது மாலினியும் அங்கு வந்து இருந்தாள். இந்தப்படத்தை, மாலினிக்கு பரிசாகக் கொடுப்பதில் நான் மிகவும் சந்தோசம் அடைந்தேன்.” எனப் பேசிய திருமதி சோனாலியின் நல்ல இதயத்தை நாம் இங்கே மனதாரப் பாராட்டி ஆகவேண்டும். ஒரு நல்ல இலக்கியவாதியும், பல்வேறு நாவல்களையும் எழுதிய இயக்குனர் சோனாலி,  இந்தப்படத்திற்கு முன்னால் இயக்கிய அம்மு என்ற திரைப்படத்திற்காய்,  இந்திய தேசிய விருது பெற்றவர். அப்பேர்பட்ட சமூக சிந்தனாவாதியின் கைவண்ணத்தில் உருவான இந்த ஓரினத் திரைப்படம்,  உலகத்தின் தலைசிறந்த பல ஓரினப்படங்களில் இருந்து தனித்து நிற்கும் சிறப்பு பெற்று உள்ளது என்பது கண்கூடு.

இனி படத்தின் கதையை, அடுத்துப் பார்ப்போம்.

ஒருவர் தனது இன அடையாளம் (Gender identity) குறித்து தெரிந்து கொள்ள எப்படிப் போராடுகிறார் என்பதை விளக்கும் படமே மார்கரிட்டா வித் ஸ்ட்ரா. டீன் ஏஜ் என்ற பதின்ம வயதுப் பிள்ளைகளில் பலர் இந்தப் போராட்டத்துக்கு உள்ளாகிறார்கள். அப்படிப்பட்ட பிள்ளைகளின் பெற்றோர்களோ,  தங்கள் பிள்ளைகளை எப்படி வழிநடத்துவது எனத் தெரியாது விழி பிதுங்குகிறார்கள். அப்படி தங்கள் இன அடையாளம் தெரிந்து கொள்ளப் போராடும் மனிதர்களில் ஊனமுற்றவர்களும் இருக்கிறார்கள் என்று சொல்ல வருவதே இந்தப்படம் ஆகும். ஒரு மூளைப் பெருவாதம் வந்த ஒரு பெண்ணுக்கும் இன்னொரு விழியிழந்த பெண்ணுக்கும் நடக்கும் காதல் கதையே இந்தப் படத்தின் கரு. இனி கதை களத்துக்குள் நாம் நேரடியாகப் போவோம்.

லைலா ஒரு பெருமூளை வாதத்தால் (Cerebral Palsy) பாதிக்கப்பட்ட அழகிய நாகரிக யுவதி. கைகளும் கால்களும் சரிவர இயங்காது போனாலும், நல்ல சிந்தனையும் அறிவானவளும் தைரியமும் கொண்டவளாய் வளரும் லைலா இந்தியத் தலைநகர் தில்லியில் உள்ள ஒரு கல்லூரியில் சேர்கிறாள். இசையில் அதிக ஈடுபாடு உள்ள லைலா, பாடல்களுக்கு மெட்டு அமைப்பதில் மிகவும் வல்லவள் என்பதால், கல்லூரி இசைக்குழுவில் அவளுக்கு இடம் கிடைக்கிறது. லைலா இருக்கும் குழுவுக்கு, கல்லூரி இசைப்போட்டியில் முதல் பரிசு கிடைக்கிறது. இருப்பினும், “லைலா ஒரு ஊனமுற்ற பெண் என்பதால் இந்தப் பரிசு லைலா குழுவுக்குப் போகிறது” என்று போட்டி நடத்திய கல்லூரி முதல்வர் பேச, கோபத்துக்கு உள்ளாகிறாள் லைலா. லைலாவின் கோபத்தைத் தணிக்க வரும் அவளது குழுத் தலைவனோடு, லைலாவிற்கு காதல் வருகிறது. தனது ஆசையைச் சொல்லும் லைலாவை அந்தக் குழுத்தலைவன் நிராகரிக்க, மன உளைச்சலுக்கு உள்ளாகிறாள் லைலா. தனது அம்மாவிடம் மனம் வெதும்பி அழும் லைலாவை அம்மா தேற்றுகிறாள். அதன் பிறகு கல்லூரி செல்ல மறுக்கும் லைலாவுக்கு அமெரிக்காவில் படிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்கிறது. பல்கலைக்கழகத்தில் படிக்கச் செல்லும் லைலா, ஒரு நாள், ரோட்டில் நடக்கும் ஒரு இன உரிமைப் போராட்டக் கூட்டத்தில் மாட்டிக்கொள்ள நேரிடுகிறது. அந்தப் போராட்டத்தில் ஒருத்தியான காணும் என்பவளோடு லைலா நட்பு கொள்கிறாள். விழியிழந்த, அழகிய யுவதியான காணும், பாகிஸ்தான் ஆணுக்கும், பங்களாதேசி பெண்ணுக்கும் பிறந்தவள். லைலாவுக்கும், காணுமுக்கும் ஏற்படும் நெருங்கிய நட்பு,  ஓரின உடல் உறவில் போய் முடிகிறது. சந்தோசமாகப் போகும் லைலாவின் வாழ்க்கையில் மறுபடியும் ஒரு சோதனை வருகிறது. லைலா ஒரு ஊனமுற்றவள் என்பதால், அவளுக்கு எழுத்து விசயத்தில் உதவ ஜாரிட் என்ற வெள்ளைகார வாலிபன் முன் வருகிறான். நல்ல நட்போடு பழகும் ஜாரிட், லைலாவை ஒரு முறை நிர்வாணமாய்ப் பார்க்க நேரிடுகிறது. மனம் தடுமாறும் ஜாரிட்,  லைலாவுடன் உடல் உறவு கொள்கிறான். உணர்ச்சி வசப்படும் லைலாவும் அதற்கு உடன்படுகிறாள். ஜாரிட்டுடன், எதேச்சையாக நடந்து போன அந்த விஷயத்தை தனது ஓரினநண்பி காணுமிடம் இருந்து மறைத்து விடுகிறாள் லைலா. தனது பெண்ணின் லெஸ்பியன் வாழ்க்கை அறியாத லைலாவின் அம்மா,  லைலாவையும் காணுமுவையும் இந்தியாவிற்குக் கூட்டி வருகிறாள்.

காணுமிடம்,  மிக மிக நெருங்கிப் பழகும் லைலாவை, அவள் அம்மா பார்த்துக்கொண்டு இருக்க, ஒரு நாள் லைலா தனது அம்மாவிடம் உண்மையைச் சொல்லவேண்டியதாகிறது. “நான் ஒரு ஈரினச்ச்சேர்க்கையாளர் (ஆணோடும், பெண்ணோடும் இனக்கவர்ச்சி கொண்ட Bisexual) அம்மா” என்று சொல்லும் லைலாவை கடிந்து கொள்கிறாள் அம்மா. தன்னைக் காதலிக்கும் காணுமிடமும்,  தான் ஜாரிட்டுடன் முன்னர் கொண்ட உடல் உறவு குறித்து மனம் திறந்து பேசுகிறாள் லைலா. லைலா ஒரு ஈரின விரும்பி (Bisexual) என்பதை அறிந்து, கடுமையான கோபம் கொள்ளும் காணும், லைலாவை விட்டுப் பிரிகிறாள். லைலா மனம் நொந்து போகிறாள். இதற்கிடையில், லைலாவின் அம்மாவிற்கு, கான்சர் இருப்பது லைலாவிற்கு தெரிய வருகிறது. அம்மாவிற்கு மருத்துமனையில் உதவியாய் இருக்கும் லைலாவிடம் அம்மா மனமுருகிப் பேசுகிறாள். லைலாவின் செக்ஸ் விருப்பம் எதுவாய் இருந்தாலும், அது தனக்கு சம்மதம் என்று சொல்லும் லைலாவின் அம்மா கடைசியில் இறந்து போகிறாள். கதறி அழும் லைலா,  அம்மாவிற்கும் தனக்கும் இருந்த பாசம் குறித்து, தனது அம்மாவின் இறுதி ஊர்வலத்திற்கு முன்னர், ஒரு ஒலிநாடா மூலம் எடுத்துரைக்கிறாள். அம்மா இல்லாத தனிமையான உலகத்துக்குள் இப்போது லைலா பயணிக்க நேரிடுகிறது. படத்தின் இறுதிக்காட்சியில், லைலாவை சினிமா பார்க்கக் கூப்பிடுகிறாள் அவளது இன்னொரு தோழி. “இல்லை நான் டேட்டிங் போகிறேன்” என்று கூறுகிறாள் லைலா. தந்தையுடன் மட்டும் பூங்கா செல்லும் லைலா, அங்கு உள்ள ஒரு மதுக்கூடத்தில், “மார்கரிட்டா வித் எ ஸ்ட்ரா” என்று தனக்கு மிகவும் பிடித்த மதுவைக் குடித்து மகிழ்கிறாள்.. லைலா,  இனி யாரோடும் சேராமல், தனிமையில், தன்னம்பிக்கையோடு வாழ முடிவு செய்வதோடு படம் முடிகிறது. ஏதோ நான் ஒரு மேற்கத்திய கதை சொல்லுவதாய், படிப்பவர்கள் எண்ண வேண்டாம். அப்படி நீங்கள் எண்ணினால், இந்தியாவின் இன்றைய பெண்களின் முன்னேற்றம் குறித்து நீங்கள் அறிந்து வைத்து இருக்கவில்லை என்பதுதான் உண்மை. ஆணுக்குப் பெண் சமம் என்ற இந்தக்காலத்தில் இவை சகஜம் என்ற மனப்பான்மையை இந்தியர்களாகிய நாமும் வளர்த்துக்கொள்ளவேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம் என்பதே நிதர்சனம்.

படத்தில், வழக்கம்போல் ரேவதியின் சூப்பர் அம்மா நடிப்பை நாம் காண்கிறோம். ஊனமுற்ற தனது மகளை தன்னம்பிக்கை கொண்ட ஒரு நவநாகரிக யுவதியாய் வளர்ப்பதாகட்டும்,  தனது மகள் ஒரு லெஸ்பியன் வாழ்க்கை வாழ்கிறாள் என்பதை நினைத்து மனம் குமுறுவதாகட்டும். கடைசியில் தனக்கு உள்ள கான்சர் வியாதி குறித்து அழுவதாகட்டும். ரேவதியின் நடிப்பு ஒண்ணாம் தரமாய் இருக்கிறது. கூடவே, அதற்கு ஈடு கொடுத்து ஊனமுற்ற மகளாக நடிக்கும் நடிகை கல்கியையும் நாம் பாராட்டாமல் இருந்து விட முடியாது. படத்தில் என்னை கவர்ந்த இரு காட்சிகளை இங்கே நான் குறிப்பிட்டாக வேண்டும். ஊனமுற்ற நிலையில், கல்லூரிக்கு வரும் லைலாவை சக்கர நாற்காலியில் வைத்து மேல் மாடிக்கு கொண்டு செல்ல வேண்டும். கல்லூரி சிப்பந்திகள் லைலாவை லிப்டில் ஏற்ற சிரமப்படுகிறார்கள். அந்தக்காட்சியில், ஊனமுற்ற கைகளையும் கால்களையும் வைத்துக்கொண்டு லைலா பார்க்கும் பார்வை.. “இவ்வளவு இயற்கையாய் நடிக்க நடிகை கல்கி எவ்வளவு சிரமப்பட்டு இருப்பார்?” என்று நம்மை ஆச்சரியப்பட வைத்து விடுகிறது. இந்த அனாயாசமான நடிப்புக்காகவே நடிகை கல்கிக்கு தேசிய விருது கிடைத்து இருக்கிறது என்பது தெள்ளத்தெளிவு. இன்னொரு காட்சியில்,  தனது நண்பன் ஜாரிட்டுடன் இருக்கும் லைலாவிற்கு மூத்திரம் முட்டுகிறது. “நான் கழிவறை செல்ல வேண்டும்” என்று சொல்லும் லைலாவை கழிவறைக்குத் தூக்கிச் செல்கிறான் ஜாரிட். அவளது ஜட்டியைக் கழற்ற உதவும் ஜாரிட்டுகிற்கு, லைலாவின் பிறப்புறுப்பை பார்க்க நேரிடுகிறது. உணர்ச்சிவசப்படும் வெள்ளைக்கார ஜாரிட் லைலாவுடன் உடலுறவு கொள்ளும் அந்த நிர்வாணக் காட்சி… ஒரு இக்கட்டான விஷயத்தை,  இவ்வளவு நேர்த்தியாகச் சொன்ன இயக்குனருக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுக்கள். படம் இந்தியசூழலுக்கும், அமெரிக்க சூழலுக்கும், மாறி மாறிப் போவதற்கு ஏற்ப,  இசையமைத்து இருக்கும் திருவாளர் மிக்கியை இங்கே நாம் குறிப்பிட்டாக வேண்டும். படத்தின் நான்கு பாடல்களும் அற்புதமான பாடல்கள். முக்கியமாய் அந்த “ஓ பரதேசி சையா” என்ற பாடல் எனக்குப்பிடித்த பாடல். ஏ ஆர் ரகுமானோடு இணைந்து பணியாற்றி இருக்கும் மிக்கிக்கு,  இந்தபடத்திற்கு ஆசியவிருது கொடுத்தது சாலப் பொருத்தமானது.

ஒரு ஓரினச்சேர்க்கை (homosexual) செய்பவரின் மன உளைச்சலை விட, ஈரினச்சேர்க்கை செய்யும் (bisexual) மனிதரின் மன உளைச்சல், இரண்டு மடங்காய் இருக்கும் என்பதை இந்தப்படம் பார்ப்பவர்கள் அறிந்து கொள்ளலாம். இன்றைய இந்தியாவில், நிறைய ஈரினச்சேர்க்கையாளர்கள் (bisexual)  ஆணிடமும் பெண்ணிடமும் இனக்கவர்ச்சி கொண்டு மிகவும் மனஉளைச்சலோடு வாழ்கிறார்கள் என்பது ஒரு உண்மையான விஷயம். இது போன்ற விஷயத்தை மையமாக வைத்து, பல உலகச்சிறப்பு பெற்ற படங்கள் எடுக்கப்பட்ட போதும், இரு ஊனமுற்ற லெஸ்பியன்களின் காதல்கதை என்ற விசயத்தில், இந்தப்படம் தனித்துவம் பெறுகிறது.

அழகர்சாமி சக்திவேல்

 

 

Series Navigationகவிஞர் கி பி அரவிந்தன் நினைவு இலக்கியப்பரிசு முடிவுகள்கடலூர் முதல் காசி வரை
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *