சுயாந்தன்
கவிதைகள் படித்து நீண்ட நாட்களாகிவிட்டது. கவிதைகள் எழுதிப் பல மாதங்கள் ஆகிவிட்டது. கவிதை எழுதுவதே தீண்டாமை போலப் பார்க்கப்படுகிறது என்பதால் கவிதை எழுதுவது பற்றி எனக்குள் இருந்த இயலுமை கொஞ்சம் கொஞ்சமாக நீர்த்துப் போய்விட்டது என்றே சொல்லுவேன். ஒரு காலத்தில் கவிதை எழுதிக்கொண்டிருந்த நான்கூடத் தீண்டாமையில் இருந்து மீண்டு வந்துவிட்டேன் என்று புழகாங்கிதமடைந்ததுண்டு. ஆனால் உண்மையில் தீண்டாமையை முற்றாக ஒழிக்க முடிவதில்லைத்தானே. வெறும் வார்த்தைகள்தானே. அதுபோலத்தான் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் மோசமான கவிதை எழுதும் கவிஞனையும் முற்றாக நீக்க முடிவதில்லை. நான் மோசமான கவிஞன் என்று எனக்கு ஒரு விமர்சனம் போட்டுப் பார்த்துவிட்டு நிரந்தரமாக விமர்சனத் துறையைத் தெரிவு செய்தேன். அதன் பிறகு கவிதைகள் வாசிப்பதைக் குறைத்துவிட்டுப் புனைகதைகள் மீதும் அல்புனைவுகள் மீதும் கவனஞ்செலுத்தினேன். ஆனால் முற்றிலுமாகக் கவிதைகள் வாசிப்பதை நிறுத்தவில்லை. ஜெ.பிரான்சிஸ் கிருபா, தேவதச்சன், ரமேஷ் பிரேம், சுகுமாரன், நகுலன், பிரமிள், எம்.யுவன் மற்றும் கே.சச்சிதானந்தன் முதலானோரின் கவிதைகளை இடையறாது வாசித்து வந்துள்ளேன். இந்தக் கவிதை வாசிப்பைத் திடீரென்று நிறுத்தியதும் மனக்கிலேசமும் மொழியுடன் தொடர்ந்து பயணிக்க முடியாத அந்நியத்தன்மையும் எனக்குள் ஏற்பட்டது. அதனை நிவர்த்தி செய்ய ஏதேச்சையாக போகன் சங்கர் கவிதைகள் எனக்கு அறிமுகமானது. மேற்குறித்த கவிஞர்களின் கவிதைகள் எனக்குள் உண்டாக்கும் உத்வேகத்தையும் மொழியுடனான நெருக்கத்தையும் ஆன்மீகத் தேடலையும் போகனின் கவிதைகள் எனக்குத் தந்தன. எப்போதும் நமக்குள் கவிதையை வைத்திருக்கவேண்டும். இல்லாது போனால் மொழியுடனான எந்தப் பாகத்துக்குள்ளும் எம்மால் ஆழமாகவும் ஆத்மார்த்தமாகவும் நுழைய முடியாது.
போகனின் கவிதைகளுடன் நான் நெருங்கிப் பயணிக்கிறேன். கேரளத்து வாசத்தைக் கவிதைகளில் கொண்டு சேர்ப்பது ஸ்வந்தமான ஒரு பிரணயத்தை எனக்குள் அளிக்கிறது. இந்தத் தொகுப்பைப் பற்றிய இந்தப் பதிவை ஒரு விமர்சனமாக நான் சொல்ல மாட்டேன். இது ஒரு அனுபவப் பகிர்வு. வாசிப்பு அனுபவம்.
“தடித்த கண்ணாடி போட்ட பூனை” என்ற இத்தொகுப்பிலுள்ள அனைத்துக் கவிதைகளும் தலைப்பிடாது எழுதப்பட்டுள்ளது. போகன் சங்கர் எழுதிய முக்கியமான கவிதைகளை இதில் வாசிக்க முடியும்.
00
“பாதி கேட்கப்பட்ட பிரார்த்தனை” என்று தொகுப்பிலுள்ள ஒரு கவிதை அமானுஷ்யமான விடயக்கூறுகளால் ஆனதென்று கூறுவேன். பொதுவாக நமது சமூகத்தின் பௌராணிக நம்பிக்கைகளை இன்னொரு கோணத்தில் வைத்துப் பார்க்கும் எழுத்துக்களைக் கண்டடைவது கடினம். ஒன்று பழமைவாதம் ஜொலிக்கும் அல்லது அழகியல் ரசனை மதிப்பீட்டுக்குள் உள்ளடங்காத வகையில் அவை தாழிறங்குகின்றன. ஆனால் போகனின் கவிதைகள் எம்மை ரசனைக்கும் புதுமைக்கும் கொண்டு செல்கிறது. ஒரு கதையை மொழிக்குள் அடக்கி எடுத்துப் போட்ட கவிதை.
பாதி முடிக்கப்படாத வீட்டை ஒருவர் வாங்க முனைகிறார். அந்த வீட்டைக் கட்டியவர் அயல்நாட்டில் இறந்து போகிறார். அவரது மனைவி கருவாக இருக்கிறார். இவர் அச்சத்தில் அவ்வீட்டை வாங்குவதைத் தவிர்க்கிறார். அந்த வீட்டில் சருகுகள் சிதறுவதை இரண்டு குழந்தைகள் ஓடி விளையாடுவது போன்ற அச்சத்தை அவருக்கு அளிக்கிறது. அந்த வீட்டின் பெயர் “இறை இந்த வீட்டைக் காக்கிறது” என்று அமைகிறது. அமானுஷ்ய உணர்வை நமக்குள் மிக எளிமையாக வெளிப்படுத்தும் கவிதை இது.
கவிதையில் வாழைமரம் என்பது ஒரு சந்ததிக்கான தொடர் குறியீடாகவே வருகிறது என்றும் கருதலாம்.
00
உடல் பற்றிய மதிப்பீடுகளை நாம் ஒவ்வொருவரும் எப்படி வைத்திருக்கின்றோம். உடலின் தேவைகளில் ஒன்றான புணர்தலை நாம் எப்படி அணுகுகிறோம். ஒரு பெண்ணைப் புணர்கையில் அருவருப்பான சம்பவங்களை நாம் நினைவு கூர்வோமா? இறந்த பிறகு நாம் கல்லறையிலிருந்து மீண்டு வந்து அவளின் சட்டையுடன் புணர்வோமா?. போகன் சங்கரின் கவிதைகளில் உடல் பற்றிய அநேகமான கருத்துக்கள் புணர்தலில் இருந்தெழுபவை. உடலைப் பற்றித் தெளிவான நிலைப்பாட்டை எடுக்கமுடியாத இளைஞனின் துர்ப்பாக்கியமான தெளிவின்மையால் உண்டானவை.
“உடல் என்பது எத்தனை நுணுக்கமான திருகுகளால் நிறுவப்பட்டது. எத்தனை எளிமையான விசைகளால் அழிந்து விடக்கூடியது என்று அறிந்தபின்பு
மறுக்கவும் துறக்கவும் தேர்ந்தெடுக்கவும் நான் யார்?”
00
“அழுகிய வாதாம் பருப்பு வாசனை…..” என்று தொடங்கும் நெடுங்கவிதையில் பண்டைய சேரநாட்டின் சொற்களை ஆங்காங்கே உபயோகித்துக் கவிதை எழுதப்பட்டுள்ளது.
உதாரணமாகக் குளிமுறி என்பது கேரள வழக்கில் குறிப்பது குளியல் அறையை.
“கேரளத்தின் மழை எங்களைத் துரத்தித் துரத்தி நனைத்துக் கொண்டிருக்கிறது” இந்த மழையை நெடுங்கவிதையின் கதை முடியும் வரும் இடம் முழுமைக்கும் அழகுபடுத்திக்கொண்டே போகன் செல்கிறார். வழக்கமான கதையைக் கொண்டு எழுதப்பட்ட வழக்கத்தை மீறிய கவிதை என்பது இக்கவிதை மீதான அபிப்பிராயம். கிறிஸ்த்தவ ஆன்மீக உட்செலுத்தல்கள் மிக அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.
“எழுந்தபோது சுவரில் ஒரு இரக்கமான நோக்குடன் ஒரு லத்தீன் முகம் கொண்ட ஏசு அவர் உதடு திறந்து என்னிடம் எதையோ சொல்ல விரும்புவது போலிருந்தது.”
ஒரு பெண்ணின் அறைக்குள் நுழையும் போது அங்கே ரமணர் சுவாமி, ராமா பரமஹம்ச யோகானந்தா முதலிய இந்திய ஆன்மிகவாதிகளின் புஸ்த்தகங்கள் சிதறிக்கிடக்கின்றன. ஆனால் இவரது எண்ணமும் வர்ணனையும் பூர்வ யேசு பற்றியதாக மாற்றமடைகிறது. இடையில்கூட குருபீடங்கள் மீது பலவீனம் இருப்பதாகக் கூறுகிறார். ஆனால் இறுதியில் அந்தப் பெண்ணின் நிர்வாணத்தைக் கண்டதும் ஏவாள் பற்றித் தனது ஆன்மீகத் தளத்தை மாற்றியமைக்கின்றார். ஒரு பெண்ணின் நிர்வாணம் எத்தகைய ஆன்மீகத் தளத்தையும் மிக இலகுவில் மாற்றிவிடக் கூடியது. அதனால்தான் ஏராளம் ஆன்மீகவாதிகள் பெண்களின் விடயத்தில் மிக இலகுவாக சர்ச்சைக்கு ஆளாகின்றனர். அதனை மிக அழகுணர்வுடன் நேரடித்தன்மை இல்லாமல் போகன் எழுதியுள்ளார். இதனை ஒவ்வொருவரும் தமக்குரிய அபிப்பிராய நோக்கில் வைத்துப் பார்க்கலாம்.
“பிரார்த்திக்கும் போது அவள் ஆடையெதுவும் அணிந்து கொள்ளவே இல்லை என்பதைக் கவனித்தேன்.
உண்மையில் அதுவே அந்தக் கணத்துக்குப் பொருத்தமான ஆடையாய் இருந்தது.”
மேலும் இந்த நெடுங்கவிதையை ரசனை அடிப்படையில் அணுகுவதே விமர்சகனுக்கும் கவிஞனுக்கும் மிகப்பெரிய பலமாக இருக்கும்.
இக்கவிதையின் தொடக்கத்தில் போகன் இப்படி எழுதுகிறார்;
‘அவள் கண்கள் கவிழ்த்து வைக்கப்பட்ட கோப்பைகள் போல மிதக்க’
அதே போலக் கவிதையின் முடிவான பகுதியில்,
‘நான் அவளது கோப்பைகள் நிமிரத் தொடங்குவதை இப்போது கவனித்தேன்’ என்று அமையும்.
ஒரு புனைகதையின் நுட்பம் இதில் மிக ஆழமாக வெளிப்படுகிறது. இக்கவிதைத்தொகுப்பை எழுதிய பிறகு போகன் சங்கர் “கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள்” என்ற கதைத் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார். அவைகூட மிக ரசனைத்தன்மையாக எழுதப்பட்டுள்ளன.
00
ஒருவனின் மனதுள் ஆழ வேரூன்றிய மனவக்கிரங்கள் யாராலும் நிரந்தரமாக அழிக்கப்பட முடியாத ஒன்றாகும். அதனை நம் அன்றாட நிகழ்வுகளின் சின்னஞ்சிறு சம்பவங்கள் தெளிவுபடுத்துகின்றன.
இதைத்தான் பாரதியார்
“கோலமும் பொய்களோ? அங்குக் குணங்களும் பொய்களோ” என்று சொல்லியிருப்பார். இதிலுள்ள குணங்கள் குறிப்பது மனிதனின் மன வக்கிரத்தைத்தான். மிக சூட்சுமமான அடுத்துக் கெடுக்கும் துர்க்குணத்தையாகும். இவை ஆழ்மனதில் Unconscious ஆக வேரூன்றியுள்ளது. இதை போகன் சங்கர் இப்படி எழுதியுள்ளார்.
“பிறகு அந்த இடத்தில்
வேறு யாரோ வந்து அமர்ந்தார்கள்
அவர்கள் தோளில்
ஒரு குருவி வந்து அமர்ந்தது
பிறகு அவர்கள் புன்னகைத்தார்கள்
அவர்கள் புன்னகையில் வயல் காற்று போல ஒரு ஈரம் இருந்தது.
அவர்கள் என்னை அழும் குழந்தையை அழைப்பது போல வா என்று பச்சை துளிர்க்கும் கைகளால் அழைத்தார்கள்.
நான் தவழ்ந்து தவழ்ந்து அவர்கள் அருகில் போனேன்.
போய் மடியில் ஏறிக்கொண்டு
முதல் வேலையாக அந்தக் குருவியின் கழுத்தை நெரித்தேன்”
எவ்வளவு பண்பட்டவராக இருந்தாலும் அவருள் இருக்கும் பண்பட்ட வக்கிரம் பற்றிய குறிப்பாக அந்தக் கவிதையை அணுகலாம். ” வா என்று பச்சை துளிர்க்கும் கைகளால் அழைத்தார்கள்” என்பதன் நொய்மையைக் கொண்டு “அந்தக் குருவியின் கழுத்தை நெரித்தேன்” என்பதிலுள்ள வக்கிரம் மனிதத்தின் பெரும்பான்மை சாரம்தான்.
00
நகுலனின் கவிதைகள் கொண்டுவரும் பிரபஞ்சம் ஒரு சூன்யம் என்ற கருத்தை மனித வாழ்வுடன் தீவிரமாகப் பிணைப்பதாக போகனின் கவிதைகள் அமைகின்றன.
“எனக்கு யாருமில்லை நான்கூட”
“யாருமில்லாத பிரதேசத்தில் என்ன நடந்துகொண்டிருக்கிறது
எல்லாம்”
போன்ற நகுலனின் கவிதைகள் ஒரு வெறுமையைப் பிரஸ்த்தாபிப்பவை. ஆனால் போகனின் கவிதைகள் பிரபஞ்சத்தையும் மனித வாழ்வையும் ஒன்றுக்குள் ஒன்றுடன் ஆழப் பிணைக்க முயல்பவை.
“நான் யார்
உனக்கு நான் யாருமில்லை.
தொலை வானில் தேயும் புள்ளி.
கடைசியாய் அணைக்கப்படும் விளக்கு”
விலகல் தன்மைகளை ஆரம்பத்தில் வெளிப்படுத்தினாலும் “அணைக்கப்படும் விளக்கு” என்பதிலுள்ள நெருக்கம் பிரபச்சத்துக்கும் மனித வாழ்க்கைக்குமானது. லௌகீக வாழ்க்கையின் பற்றுதலை ஆழமாகக் கூறுவது போகனின் வழி.
00
நவீன கவிதையை எப்படி அடையாளம் காண்பது. எல்லாமே ஒன்று போலத்தானே இருக்கிறது என்று சொல்வார்கள். இதனை வரையறுப்பதற்கு எந்த வகையான யுக்தியைப் பாவிப்பது என்று சிக்கலான கேள்வியை மிக ஆழமான விளக்கமாகச் சொல்லுமாறு கேட்பார்கள். ஆரம்பத்தில் புரிந்து கொள்வதிலும் புரிய வைப்பதிலும் சிக்கல்பாடுகள் இருக்கும். ஆனால் அவற்றுக்கான தெளிவை வாசிப்பின் மூலம்தான் உறுதிப்படுத்ணிக்கொள்ளவும் புரிந்து கொள்ளவும் முடியும். வெறுமனே ஒரு விளக்கம் மூலம் தெளிய வைக்க முடியாது. இதுவரை எமது பள்ளிப் பாடத்திட்டங்களில் வைக்கப்பட்டது புதுக்கவிதைகள்தான். இப்போதும் அதைத்தான் செய்கிறார்கள். அறக் கருத்துக்களை வெளிப்படையாகச் சொல்லும் மிக எளிய மொழியால் ஆனவையாக அவை இருக்கின்றன. அவற்றைச் சந்தம் கூட்டி மனப்பாடம் செய்வதற்கான வகையில் எழுதப்பட்டிருக்கும். ஆனால் நவீன கவிதைகள் கவிதை அமைப்பின் நுட்பங்கள் மீது எந்த நம்பிக்கையும் கொள்ளாமல் எழுதப்படுபவையாகத் தான் நான் கருதுகிறேன். போகன் சங்கரின் இந்தக் கவிதையை இதற்கு எடுத்துக்காட்டாக முன்வைக்கலாம்.
“வானவில்லின் மறுபுறம் மிதக்கும் நீலப் பறவைகள் போல நம் குழந்தைகள் இருக்கிறார்கள்.
ஆழக் குதிக்கும் ஆற்றில்
நாம் அவர்கள் தற்காலிகமாகத் தாவி நிற்கும் ஒரு பாறையெனவே நிற்கிறோம்.
நம்மிடமிருந்து உந்தி எழுந்து பறந்து உன்னைவிடவும் உன்னைவிடவும் அவர்கள் பிரபச்சத்தை இன்னும் கூர்மையாக அறிவார்கள்.
நீண்ட தூரம் பறப்பார்கள்.
பாறைகள் பறப்பதில்லை தான்
ஆனாலும் யார் கண்டது?
அவர்கள் நம்மையும் பறவையாக்கும் ஒரு சொல்லோடு என்றேனும் திரும்பி வருவார்கள்”
இந்தக் கவிதை மிகப்பெரிய நம்பிக்கை என்ற கருவை மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. “பறவையாக்கும் ஒரு சொல்” என்ற வரிகளில் நவீனத்துவம் கிளைகொள்கின்றது. நவீனம்- பழையது பற்றிய மேலதிக புரிதல்களை தாம் பெறுவதற்கு ஒன்றில் முற்றாக நவீனத்தை அறிந்திருக்க வேண்டும். அல்லது பகுதியளவேனும் பழமையைக் கடந்திருக்கவேண்டும். இங்கு போகன் சங்கரின் கவிதைகள் வேர்கொள்ளும் இடம் இதில்தான்.
00
சுயாந்தன்
- மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கலை இலக்கிய விழா
- போகன் சங்கரின் “கண்ணாடி போட்ட பூனைக்குட்டிகள்.”
- தமிழர் புத்தாண்டு சித்திரை முதலா ? தை திங்கள் முதலா ?
- அடியார்கள் போற்ற ஆடிர் ஊசல்
- சாமிக்கண்ணு திரைப்படச் சங்கம் – மே மாத திரையிடல் (திரையிடல் 3)
- உலகின் தலை சிறந்த சில ஓரினப்படங்கள் 3 -பேர்வெல் மை கான்குபைன்
- ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூடாது என்பதற்கான பத்து காரணங்கள்
- தொடுவானம் 219. தங்கையுடன் சிங்கப்பூர்
- புதிய கோட்பாடு ! பூர்வீகப் பூமியைத் தாக்கிய அதிவேக முரண்கோள்கள் பேரளவு நீர் வெள்ளம் கொட்டின.
- மருத்துவக் கட்டுரை – புற நரம்பு அழற்சி ( Peripheral Neuritis )
- அறுபது வயது ஆச்சு !
- கவிதைகள் 4
- மீட்சி
- ஹைக்கூ கவிதைகள்