உலகின் தலை சிறந்த சில ஓரின ஈர்ப்புப் படங்கள் 17 – தி க்ரையிங் கேம்

author
0 minutes, 2 seconds Read
This entry is part 6 of 7 in the series 5 ஆகஸ்ட் 2018

அழகர்சாமி சக்திவேல்

திரைப்பட விமர்சனம் –

எத்தனையோ திரைக்கதைகளின் கதைகளை, அந்தக் கதைகளின் திரைக் கதாசிரியர்கள் பிறருக்குச் சொல்லும்போதே, “இதெல்லாம் படமா எடுத்தா சரியா ஓடாது” என்று உடனடியாக நிராகரிக்கப்படுவதுண்டு. ஆனால் அதே திரைக்கதைகளை, படமாய் எடுத்த பிறகு, அவை மிகச்சிறந்த வெற்றிப் படங்களாக சக்கைப் போடு போட்டதும் உண்டு. எத்தனையோ திரைக்கதைகள், படம் எடுக்கப் பணமில்லாமல், காட்சிகள் சுருக்கப்பட்டு, குறைந்த முதலீட்டுப் படங்களாக போய்விடுவது உண்டு. ஆனால் அப்படி குறைந்த முதலீட்டில் படமாய் எடுத்த பிறகு, அவை வர்த்தகரீதியாக பெரும் பொருளை ஈட்டி விடுவதும் உண்டு. தி க்ரையிங் கேம் (The Crying Game) என்ற இந்தப்படமோ, மேலே சொன்ன இரண்டு சோதனைகளையும் எதிர்கொண்டு, அவைகளை உடைத்துத் தகர்த்து, வெற்றி நடை போட்ட ஒரு வெற்றிப்படம் என்ற சிறப்புப் பெற்றது ஆகும். ஒரு ஆக்சன் திரில்லர் படத்துக்குள் எத்தனை எத்தனை விஷயங்கள் சொல்லப்பட்டு இருக்கின்றன தெரியுமா! அந்த அத்தனை விசயங்களையும் நூறு நிமிடங்களில் சுருக்கிச் சொல்லி, அதே நேரத்தில் சுவாரஸ்யமும் குறையாமல் பார்த்துக் கொண்ட, இயக்குனரைப் பாராட்டாமல் என்ன செய்ய முடியும்?. படத்தில் இயக்குனர் சொல்ல வந்த விசயங்களில் மூன்று விசயங்களை இங்கே பார்ப்போம்.

உலகத்தின் எல்லா இடங்களிலுமே சிறுபான்மையினர் இருந்து கொண்டே இருக்கிறார்கள். அவர்கள், தங்கள் உரிமைகளுக்காக போராடிக்கொண்டும் இருக்கிறார்கள். இதுபோன்ற சிறுபான்மையினர் உருவாகுவதற்கு ஒரு முக்கியக் காரணமாய் இருப்பது மதம் ஆகும். இந்தியாவில், ஹிந்து முஸ்லிம் மதக் கலவரங்களை நாம் அறிந்திருக்கிறோம். ஈராக்கில், சன்னி முஸ்லீம்ககளும் ஷியா முஸ்லிம்களும் சண்டை போட்டுக் கொள்ளுகிறார்கள். இதுவும் நமக்குத் தெரியும். ஆனால், நம்மில் பலருக்குத் தெரியாத விசயம், கிறித்துவ மதத்தின் கத்தோலிக்கர்களும், இன்னொரு பிரிவான ப்ராட்டஸ்டன்ட் இனத்தவரும் போட்டுக் கொண்ட சண்டைகள்.  நீண்ட, நெடிய வரலாற்றைக் கொண்ட இந்தக் கிறித்துவ இனப்போர்களில், மாண்டவர்கள் ஏராளம். உருத்தெரியாமல் போன கிறித்துவத் தேவாலயங்கள் ஏராளம். ஆரம்பத்தில், கத்தோலிக்க மதம் மட்டுமே கிறித்துவ மதத்தில் இருந்தது என்றாலும், பதினாறாம் நூற்றாண்டில் வந்த, ஜெர்மனியின் மார்ட்டின் லூதர், பழமை வாய்ந்த கத்தோலிக்க மதத்தை எதிர்த்து, ப்ராட்டஸ்டன்ட் என்ற புதிய கிறித்துவப் பிரிவை தோற்றுவித்தார்.  புதிய ஏற்பாடு என்ற பைபிள் பிறந்தததே இவரால்தான். அதுவரை கத்தோலிக்கப் பிரிவை ஆதரித்து வந்த இங்கிலாந்து மன்னர்கள், ப்ராட்டஸ்டன்ட் பிரிவையும் ஆதரிக்க ஆரம்பித்தபோது கலவரங்கள் மூண்டன. இரண்டு பிரிவின் மதகுருமார்கள், மன்னர்களுக்குப் பின் நின்றுகொண்டு ஒருவரையொருவர் தாக்கிக்கொள்ள, பல இங்கிலாந்துப்போர்கள் உருவானது. கடைசியில், இங்கிலாந்து மக்களில் பெரும்பான்மையானோர், புதிதாய்த் தோன்றிய ப்ராட்டஸ்டன்ட் பிரிவுக்கு மாற்றப்பட்டனர். பக்கத்தில். இங்கிலாந்தின் கைவசம் இருந்த அயர்லாந்து நாடும், ப்ராட்டஸ்டன்ட் பிரிவிற்கு மாற்றப்பட்டது. இங்கிலாந்தை சொந்தமாகக் கொண்ட ப்ராட்டஸ்டன்ட்  பிரிவினருக்கு, வட அயர்லாந்தின் கத்தோலிக்க மக்கள் இடமிருந்து நிலங்கள் பிடுங்கப்பட்டு தானம் செய்யப்பட்டன. இதனால், வட அயர்லாந்தில், கத்தோலிக்கர் எண்ணிக்கை குறைந்து இங்கிலாந்து நாட்டைச் சொந்தமாகக் கொண்ட,  ப்ராட்டஸ்டன்ட்  மக்கள் அதிகமானார்கள். ஒரு காலக்கட்டத்தில் அயர்லாந்து மக்கள், தங்கள் சுதந்திரத்திற்காக போராடியபோது, இங்கிலாந்து அயர்லாந்துக்கு சுதந்திரம் கொடுத்தது. இருப்பினும், செழிப்புமிக்க வட அயர்லாந்துவை மட்டும், இங்கிலாந்து தன் கைவசம் வைத்துக்கொண்டது. விழித்துக் கொண்ட, சிறுபான்மையினரான வட அயர்லாந்து கத்தோலிக்கர்கள், தங்கள் உரிமைக்காக போராட, 1960-இல் கலவரம் உருவெடுத்தது. அயர்லாந்துக் குடியரசுப்படை என்ற கொரில்லாப் படையை, அயர்லாந்தின் கத்தோலிக்கரகள் தோற்றுவித்தனர். போராட்டத்தின் ஒருபகுதியாய், தங்கள் சொந்த வட அயர்லாந்திலும், தென் அயர்லாந்திலும், இங்கிலாந்திலும். அமெரிக்காவிலும் பல குண்டுவெடிப்புகள், கொலைகளை நிகழ்த்தினர் வடஅயர்லாந்து கொரில்லாப்படையினர்.. இதற்கென ஒரு கத்தோலிக்க இளைஞர் தற்கொலைப்படையும், வடஅயர்லாந்து போராளிகளால் உருவாக்கப்பட்டது. அந்தப்படையில் இருந்த ஒரு வாலிபனே, இந்தப்படத்தின் கதாநாயகன். அப்படி, இங்கிலாந்தில் நிகழ்த்தப்பட இருந்த ஒரு கொலைத்திட்டமே, இந்தத் திரைப்படத்தின் முக்கியக்கரு ஆகும்.

இரண்டாவதாய், இந்தப்படத்தின் இயக்குனர் சொல்லும் விஷயம் ஒரு சிக்கலான விஷயம். பல ஆண்களுக்கு, இன்னும் புரியாத விஷயம். ஆண்களின் அந்தரங்க ஆசைகள் ஒரு பெண்ணோடு மட்டுமே இருப்பதாய் நினைத்துகொண்டிருக்கும் வேளையில், “அப்படி இல்லை” என்பதை தெளிவாகச் சொல்லி இருக்கிறார் படத்தின் இயக்குனர். சில ஆண்களுக்கு பெண் என்பவள் மென்மையாய்ப் பேசி, மென்மையாய் நடந்து கொண்டால்தான் ஆசை வரும், சில ஆண்களுக்கு, பெண்ணின் சுபாவம் எப்படி இருந்தாலும் சரி.. அவளுக்கு பெண் உறுப்பு இருந்தாலேயே ஆசை வந்து விடும். சில ஆண்களுக்கு, பெண்ணுறுப்பு இல்லாவிட்டாலும் பரவாயில்லை..பெண்மையுடன் ஒரு ஆண் இருந்தாலும் போதும் அவன் மீது ஆசை வந்துவிடும். வேறு சில ஆண்களுக்கோ, பெண்ணின் மீதே ஆசை வராமல், ஆணின் மீது மட்டுமே ஆசை வரும். இத்தனை ஆண்களையும், இந்தப்படம் தெளிவாய்க்காட்ட ஆசைப்பட்டு இருப்பது, இந்தப்படத்தின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம் ஆகும். படத்தில் ஒரு காட்சி. தனது ஆசைக் காதலியை பாலியல் ரீதியாக கற்பழிக்க முயற்சி செய்யும் வில்லனை அடித்து நொறுக்கும் நாயகன், அதே ஆசைக் காதலியோடு உல்லாசமாய் இருக்க ஆசைப்படுகிறான். இப்போது, நாயகனும் காதலியும் படுக்கை அறைக்குச் செல்கிறார்கள். பல்வேறு முத்தங்களுக்குப் பிறகு, காதலி நிர்வாணமாகிறாள். தன் அன்புக்காதலியின் உடலின்,மேலிருந்து கீழே ஆசையுடன் தடவிக்கொண்டே வருகிறான் நாயகன். கேமாரவும் கீழ்நோக்கி நகர்கிறது. இப்போது கேமரா, அந்தப் பெண்ணின் ஆண் குறியைக் காட்டுகிறது. காதலியின் ஆண் குறியைப் பார்த்து அதிர்ச்சிக்குள்ளாகிறான் நாயகன். சரேலென்று பின்வாங்கும் கதாநாயகனைப் பார்த்து “உங்களுக்கு இது தெரியாதா” எனச் சிணுங்குகிறாள் காதலி. பதிலுக்கு வசனம் பேசாத நாயகன், பக்கத்தில் இருக்கும் வாஷ்பேஷினில் வாந்தி எடுக்கிறான். அறையை விட்டு வேகமாய் வெளியேறுகிறான். அடுத்த நாள், நாயகன் அதே திருநங்கைக் காதலியை நினைத்து ஏங்குகிற காட்சியை நாம் காண்கிறோம். இப்படிப்படம் போகிறது. திருநங்கைகளில் எல்லோரும், தங்கள் ஆண் குறியை அறுத்துக்கொள்வதில்லை. சில திருநங்கைகள், பெண் உடைகள் மட்டுமே அணிகிறார்கள்..தங்கள் ஆண் குறிகளை அறுத்துக் கொள்வதில்லை. இருந்தும், பல ஆண்களுக்கு, அந்தத் திருநங்கையின் பெண்மை பிடித்து இருக்கிறது என்பதே இந்தப் படம் சொல்லும் இன்னொரு விஷயம் ஆகும்.

மூன்றாவதாய், இயக்குனர் சொல்லும் விஷயம், ஒரு தத்துவம் சார்ந்தது. என்னதான் ஒருவன் மாறினாலும், அவன் கூடப்பிறந்த சில குணங்களை, அவனால் மாற்றிவிட முடியாது என்பது இயக்குனர் சொல்லவந்த இன்னொரு விஷயம் ஆகும். இந்தத் தத்துவத்தை, தனது கதாபாத்திரம் சொல்வதுபோல ஒரு கதையும் சொல்லி இருக்கிறார் இயக்குனர். ஒரு நதியைக் கடந்து போக முடியாத ஒரு தேள், தனது நண்பனான ஒரு தவளையிடம் உதவி கேட்கிறது. முதலில் தவளை தயங்குகிறது. இருப்பினும், உதவி செய்ய நினைக்கும் தவளை, ”தேளே…நதியில் நான் நீந்தும்போது என்னைக் கொட்டிவிடாதே..நீ கொட்டினால், பிறகு நாம் இருவரும் நீருக்குள் அமிழ்ந்து மாண்டுபோவோம்” என்று தேளிடம் சொல்ல, தேளோ, “பயப்படாதே..நான் உன்னைக் கொட்டமாட்டேன்” என்று சத்தியம் செய்கிறது. ஆனால் தவளை நீந்தும்போது, தவளையை, தனது விஷக்கொடுக்கால் கொட்டிவிடுகிறது தேள். தவளையும் தேளும் நீரில் மூழ்க ஆரம்பிக்குப்போது  “நான் இவ்வளவு சொல்லியும் என்னைக் கொட்டி விட்டாயே..இப்போது நீயும்தானே சாகப்போகிறாய்..ஏன் இப்படிச் செய்தாய்?” என தவளை தேளிடம் வினவ, “என்ன செய்வது..அது எனது இயற்கைகுணம்..என் கூடப்பிறந்த குணத்தை என்னால் மாற்ற முடியவில்லை” எனத் தேள் சொல்லி முடிக்கிறது. படத்தின் இரு முக்கியத் திருப்பங்களில் இந்தக்கதை சொல்லப்பட்டு இருக்கும் விதம் மிகவும் பாராட்டுக்குரியது. இனி படத்தின் கதையை அடுத்துப் பார்ப்போம்.

தி க்ரையிங் கேம் (The Crying Game) என்ற இந்தத் திரைப்படத்தின் கதையைத் தெரிந்துகொள்வதற்கு முன், இந்தப்படத்தில், கதாநாயகனின் காதலியாக நடித்த திரு ஜே டேவிட்சன் பற்றி இங்கு முதலில் குறிப்பிட்டாக வேண்டும். படத்தின் ஒரு கதாநாயகியாய் நடிக்க ஒரு திருநங்கை வேண்டும் என்ற முடிவோடு, படத்தின் திரைப்படக்குழு, பல மதுகூடங்களுக்குச் சென்று, பல திருநங்கைகளை சந்தித்தது. இருப்பினும், ஒரு திருநங்கையைக்கூட கதைக்கு ஏற்ற நாயகியாய் அவர்களால் தேர்வு செய்யமுடியாமல் போக, கடைசியில், படத்தின் உதவி இயக்குனரால் கண்டெடுக்கப்பட்ட ஆண் நடிகர் திரு ஜே டேவிட்சன்தான், இந்தப்படத்தில், திருநங்கை கதாநாயகியாக வந்து அசத்தியவர். இந்தப்படத்தின் மூலம் ஆஸ்கார் விருது முதற்கொண்டு பல உலக விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட திரு ஜே டேவிட்சன், அதற்கு முன்னால், நடித்த முன்அனுபவம் எதுவும் இல்லாதவர். ஒரு அழகிய பெண்ணைப் போன்ற இயற்கையான முகம் அமையப்பெற்ற ஜே டேவிட்சன் உடலும் பெண்ணைப் போலவே மிகவும் கவர்ச்சியானவை. அதனால்தான், படம் பார்க்கும் அனைவராலும், அந்த படுக்கையறை நிர்வாணக்காட்சி வரும் வரையிலும், ஜே டேவிட்சன் ஒரு அழகிய பெண்ணாகவே உணரப்படுகிறார். காந்தம் கலந்த பார்வை, வசீகரம் நிறைந்த பேச்சு, ஆண்களைச் சுண்டி இழுக்கும் அங்கங்கள், சோகம் ததும்பிய அழுகை என ஒவ்வொரு பரிமாணத்திலும், ஜே டேவிட்சன் ஒரு பெண்ணாகவே இந்தப்படத்தில் வாழ்ந்து காட்டிஇருக்கிறார் என்பது நூற்றுக்கு நூறு சரியானது. புகழை விரும்பாத, தனிமை விரும்பியான திரு ஜே டேவிட்சன் இந்தப்படத்திற்கு பிறகு, அதிகப்படங்களை ஒத்துக்கொள்ள மறுத்து, மாடலிங் தொழிலுக்குச் சென்று அங்கேயும் சக்கைப்போடு போட்டு, பெரும்பொருள் ஈட்டியவர். ஆண் மீது ஆசை கொண்ட ஆணான ஜே டேவிட்சன், ஒரு போதும் பெண்ணாய் மாற விரும்பியது இல்லை என்பது, இங்கே குறிப்பிடவேண்டிய ஒரு விசயம் ஆகும்.

படத்தின் கதைக்கு வருவோம். இங்கிலாந்து நாட்டின் ராணுவ வீரரான ஜோடி என்பவனை, ஒரு பொருட்காட்சியில் சந்திக்கிறாள், வட அயர்லாந்தின், கொரில்லாப் பெண் போராளி ஜீட். தனிமையில் இருக்கும் ராணுவ வீரன் ஜோடியை மயக்கும் நாயகி ஜுட்டும் அவளது சகாக்களும், இங்கிலாந்து வீரன் ஜோடியை, காட்டுக்குள் கடத்திக்கொண்டுபோய், பிணைக்கைதியாய் வைக்கிறார்கள். வீரன் ஜோடியைக் கொண்டு, இங்கிலாந்தை மிரட்டுகிறார்கள் வட அயர்லாந்துப் போராளிகள்.. வீரன் ஜோடிக்கு பாதுகாவலாய் கதாநாயகன் பெர்கஸ் நியமிக்கப்படுகிறான். இயற்கையிலேயே கருணை உள்ளம் கொண்ட கதாநாயகன் பெர்கஸ், வீரன் ஜோடியிடம் இரக்கம் காட்டுகிறான். அவன் கருணை உள்ளத்தைப் பாராட்டும் வீரன் ஜோடி, பெர்கஸ்ஸிடம் நான் முதல் பாகத்தில் சொன்ன தேள்-தவளைக் கதையைச் சொல்லுகிறான். இன்னும் மனம் இறங்குகிறான் பெர்கஸ். நாயகன் பெர்கஸ்ஸிடம், தனது காதலி தில்லின் புகைப்படத்தைக் காட்டும் வீரன் ஜோடி, “நான் இறந்துவிட்டால், எனது காதலி தில்லை நீங்கள்தான் பாதுகாக்கவேண்டும்” என்று உறுதிமொழி வாங்கிக்கொள்கிறான் ஜோடி. தான் சுட்டுக்கொல்லப்படப் போவதைத் தெரிந்து கொள்ளும் வீரன் ஜோடி, தப்பி ஓடுகிறான். ஓடிக்கொண்டிருக்கும் போதே, இங்கிலாந்து ராணுவ வண்டியில் அடிபட்டு பரிதாபமாய் உயிர் இழக்கிறான். இங்கிலாந்து ராணுவம், அயர்லாந்துப் போராளிகளைச் சுற்றி வளைக்க, மாட்டிக்கொள்ளும் பெர்கஸ், தப்பி ஓடி, இங்கிலாந்துக்குள் தஞ்சம் புகுகிறான். இங்கிலாந்தில், கட்டிடத் தொழிலாளியாய் மாறும் பெர்கஸ், இறந்துபோன வீரன் ஜோடியின் காதலியை ஒரு அழகு நிலையத்தில் சந்திக்கிறான். நாயகி தில்லின் பிரமிக்கவைக்கும் பெண் அழகில் மயங்கும் பெர்கஸ், அவளைப் பின் தொடருகிறான். அழகி தில், பெர்கஸ்ஸின் காதலியாகி விடுகிறாள். அழகி தில்லிற்கு பாலியல் தொந்தரவு கொடுக்கும் வில்லனை அடித்து உதைத்துத் துரத்தி, தில்லின் மனம் கவர்கிறான் பெர்கஸ். நாயகி தில்லின் முன்னாள்க் காதலன் ஜோடி, பிணைக்கைதியாகி இறந்துபோன கதையை பெர்கஸ் நாயகி தில்லிடம் சொல்ல, மனம் வேதனைப்படுகிறாள் அழகி தில். ஒரு முறை, அழகி தில் மீது படுக்கை அறையில் ஆசைப்படும் பெர்கஸ் அவளோடு உடல் உறவு கொள்ள ஆசைப்படுகிறான். அவன் முன்னால், அழகி தில் நிர்வாணமாய் நிற்கும் போதுதான், தில் ஒரு திருநங்கை எனத்தெரிந்து கொள்கிறான் நாயகன் பெர்கஸ். அதற்குப்பின், தில்லை விட்டுப் பிரியும் பெர்கஸ், தில்லின் அழகை மறக்கமுடியாமல் போக, மறுபடியும் தில்லை நாடிவருகிறான் பெர்கஸ். ஊடலுக்குப்பின் ஒன்று சேர்கிறாள் அழகி தில். இருப்பினும், படத்தின் இன்னொரு கதாநாயகியான அயர்லாந்துப் பெண் போராளி ஜீட், பெர்கஸ் இடத்திற்கு வருகிறாள். இங்கிலாந்து நாட்டின் நீதிபதியைக் கொல்ல போராளிகள் இருவரும் திட்டம் தீட்டுகிறார்கள். பார்த்துக்கொண்டு இருக்கும் அழகி தில், பெர்கஸ் உடன் மறுபடியும் சண்டை போடுகிறாள். தில்லின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு அழகி தில்லின் தலைமுடியை வெட்டி, ஆண் உடை உடுத்தச் சொல்லி, தில்லை ஆணாக மாற்றுகிறான் நாயகன் பெர்கஸ். பாரில் நன்கு குடித்துவிட்டு வரும் அழகி தில்லை, பத்திரமாய் வீடு கொண்டு சேர்க்கிறான் பெர்கஸ். இருப்பினும், அவனை, தனது முன்னாள் காதலன் ஜோடியைக் கொன்ற காரணத்துக்காய் படுக்கையில் கட்டிப்போடுகிறாள் தில். எங்கேயும் நகரமுடியாத பெர்கஸ்  இல்லாது, நீதிபதியைக் கொல்லும் அயர்லாந்துப் போராளிகளின் திட்டம் படுதோல்வி அடைகிறது. கோபம் கொல்லும் நாயகி ஜீட், பெர்கஸ்ஸிடம் வருகிறாள். பெண் போராளி ஜீட்டைப் பார்க்கும் அழகி தில், தன் முன்னால் காதலன் ஜோடியை மயக்கிக் கொன்றவள் ஜீட் என்ற ஆத்திரத்தில், அவளைக் கொலை செய்கிறாள. அதிர்ச்சிக்குள்ளகிறான் பார்த்துக்கொண்டு இருக்கும் நாயகன் பெர்கஸ்.கட்டிய கட்டுக்களை அவிழ்த்துக்கொண்டு எழும் நாயகன் பெர்கஸ், அழகி தில்லை இன்னொரு இடத்தில் கொண்டு போய் சேர்க்கிறான். தில் செய்த கொலையை, தான் செய்த கொலையாய் ஏற்றுக்கொண்டு சிறை செல்கிறான் பெர்கஸ். கொஞ்சநாள கழித்து, அழகி தில், சிறைக்குச் சென்று பெர்கஸ்ஸினைச் சந்திக்கிறாள். தான் அவனுக்கு கெடுதல் செய்தபோதும், தன்னை ஏன் அவன் காப்பாற்றவேண்டும் என்று உருக்கமாய் வேண்டுகிறாள் அழகி தில். “என் இயற்கை குணத்தை மாற்ற முடியாது” எனச் சொல்லும் நாயகன் பெர்கஸ், முன்னர் வீரன் ஜோடி சொன்ன அதே தேள்-தவளைக் கதையை அழகி தில்லிடம் சொல்கிறான் படம் அத்தோடு முடிகிறது.

1992இல் எடுக்கப்பட்ட இந்தப்படம், உலகின் பல்வேறு விருதுகளைப் பெற்ற படம் ஆகும். இந்தப்படத்திற்கு முன்னர், பல படங்களை எடுத்துத் தோல்வி கண்ட இந்தப்படத்தின் இயக்குனர் திரு நீல் ஜோர்டான், இந்தப்படத்தின் மூலம், சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கார் விருது வென்றார். படம் எடுக்க, போதிய பணம் இல்லாமல் திணறிய இந்தப்படத்தின் தயாரிப்பாளருக்கு இந்தப்படம் பெரும் பொருளை ஈட்டுத்தந்தது. பெரும் புகழ் பெற்ற, வரலாற்றுச் சிறப்பு மிக்க பிரிட்டிஷ் திரைப்படப் பள்ளி, மறக்கமுடியாத புகழ் பெற்ற திரைப்படங்களில் ஒரு படமாக, தி க்ரையிங் கேம் படத்தை தேர்ந்து எடுத்து இருப்பது, இந்தப்படத்தின் இன்னொரு சிறப்பு ஆகும். படத்தில் பல பாடல்கள் இடம் பெற்று இருந்தாலும், அழகி தில் மேடையில் பாடகியாய் வந்து பாடும் “தி க்ரையிங் கேம்” என்ற பாட்டு, காதுக்கு மிகவும் இனிமையான பாட்டு ஆகும். புகழ்பெற்ற ஓரினத்திரைப்படங்களில், தி க்ரையிங் கேம் என்ற இந்தப்படமும் இடம் பெறும் என்பதில் எனக்கு எந்தவித ஐயமும் இல்லை.

அழகர்சாமி சக்திவேல்

Series Navigationஉலகின் தலை சிறந்த சில ஓரின ஈர்ப்புப் படங்கள் 16 -ஓரின ஈர்ப்பு மாற்றம் குறித்த இரு படங்கள் (Conversion theraphy)கலைஞர் மு கருணாநிதி –
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *