புலர்ந்தும் புலராத சுதந்திரம்

This entry is part 4 of 6 in the series 19 ஆகஸ்ட் 2018

நள்ளிரவில் பெற்ற சுதந்திரம்

இன்னும் கண் விழிக்க

கீழ்வானம் சிவக்க வில்லை !

முடிய வில்லை இருளாட்சி !

குடிவாழ்வைப் பொருளாட்சி ஆக்கும்

பூதப் பண முதலைகள்

மடிக்குள் வெடி மறைத்து

நடக்குது மதப்போர் !

ஏர் முனைகள் வளைக்கப் பட்டு

வாள் முனைகள் ஆயின !

கார்மேகம் இப்போ தெல்லாம்

கரியமிலம் பொழிகிறது !

பாரதப் பண்பாடுகள் யாவும்

நாராய்க் கிழிந்து,

வேர்கள்

கீழ்நோக்கிப் போகாது

மேல் நோக்கி முளைக்கும் !

எழுத்தாணிகள் ஆடை நீக்கி

ஒழுக்கம் தவறிக்

குத்தூசி களாய்க் கோலமிடும் !

பத்திர காளியின் கைச் சூலாயுதம்

பக்தரின் கைவசம் மாறும் !

பல்கலைக் கழகம் வணிகச் சந்தையாய்

பண வேட்டை ஆடும்.

தப்பாமல் வேலை கிடைக்கும்

கப்பம் ஒரு லட்சம் !

கீழ்ஜாதி பட்டம், பதவி பெறினும்

மேல்ஜாதி ஆகவில்லை !

மேல் ஜாதி பட்டம் பதவி யின்றி

தாழ்வு நிலை பெற்றார் !

கணினிப் பொறி வணிகங்கள்

கணக்கற்றுப் பெருகி

பணக்காரர் ஏழையர் வேற்று மைகள்

பன்மடங்கு ஏறிப் போச்சு !

நடிப்புக்கு செல்வாக் குள்ள

நாட்டினிலே

படிப்புக்கு மதிப்பில்லை !

பணப் பட்டம் ஆனது மருத்துவம் !

உயிர்களுக் கில்லை மதிப்பு !

உன்னைப் பெற்ற அன்னையோ

உடன் பிறந்த தங்கையோ

விடுதலை நாட்டில் தனியாக

நடந்து செல்ல முடியாது !

கருவிலே உருவாகும்

பெண் சிசுவுக்கு உடனே

மரண தண்டனை பிறக்கும் முன்பே !

பாரத மணிக்கொடி

நார் நாராய்க் கிழிந்து பறக்குது !

புலர்ந்தும் புலராத சுதந்திரம்

அத்தமிக்கும் !

குடியாட்சியைத் தைப்பதா ?

முடிப்பதா ?

+++++++++++++

Series Navigationஉலகின் தலை சிறந்த சில ஓரின ஈர்ப்புப் படங்கள் 19 -எவர்லாஸ்டிங் சீக்ரெட் ஃபேமிலிமருத்துவக் கட்டுரை – தொடர் மூக்கு அழற்சி ( Chronic Rhinitis )
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *