அன்னாய்ப் பத்து 2

This entry is part 2 of 6 in the series 2 செப்டம்பர் 2018

இப்பகுதியின் பாடல்கள் எல்லாம் ‘அன்னாய்’ என்னும் விளிச்சொல்லோடு முடிவதால் இப்பகுதி அன்னாய்ப் பத்து எனப் பெயர் பெறுகிறது.
=====================================================================================
அன்னாய்ப் பத்து—1
“நெய்யொடு மயக்கிய உழுந்துநூற் றன்ன
வயலையஞ் சிலம்பின் தலையது
செயலையம் பகைத்தழை வாடும் அன்னாய்!
[மயக்கிய=கலந்து பிசைந்த; நூற்றன்ன=நூல் திரித்தல் போல் கையால் திரித்தல்; சிலம்பு=மலை; தலையது=உச்சியில்; வயலை=வயலைக் கொடி; செயலை=அசோகம்; தழை=தழையாடை]
அவன் அவளை ஒரே ஒரு தடவை சந்திச்சான். அப்பறம் பாக்கவே முடியல; தோழி மூலமா அவளப் பாக்க நெனக்கறான். அதால அவளோடத் தோழிகிட்ட ஒரு தழையாடை குடுத்து அவகிட்டபோயிக் குடுக்கச் சொல்றான். தோழி போயி அவகிட்டச் சொல்லும்போது அவ வெக்கப்பட்டுக் கிட்டு சும்மா நிக்கறா; தழையாடை சீக்கிரம் வாடிப் போகும்; அதால சீக்கிரம் ஏத்துக்கன்னு தோழி சொல்ற பாட்டு இது.
“அன்னையே! நெய்யில உளுந்து மாவைப் பிசைஞ்சு கையால திரிச்ச நூலைப் போல இந்த வயலைக் கொடி மலை உச்சியில இருக்கு; அங்க இருக்கற அசோக மரத்தோட தழையை எடுத்து செஞ்ச ஆடை இது; சீக்கிரம் வாடிடும்; அதால நீ ஏத்துக்க” இதுதான் பாடலோட பொருளாம்
===============================================================================
அன்னாய்ப் பத்து—2
சாத்த மரத்த பூழில் எழுபுகை
கூட்டுவிரை கமழும் நாடன்
அறவற்கு எவனோ நாம்அகல்வு? அன்னாய்!
[சாத்த=சந்தனம்; பூழில்=அகில்; விரை=மணம்; அறவன்=அறம் கொண்டு வாழ்பவன்; அகல்வு=நீங்குவது]
அவளைப் பொண்ணு கேட்டு அவனுக்காக சிலரு போயிக் கேக்கறாங்க; ஆனா அவ ஊட்ல மறுத்துடறாங்க; அப்ப தோழி செவிலித்தாய்கிட்டப் போயி அவங்கள ஒத்துக்கச் சொல்லி சொல்ற பாட்டு இது.
”அன்னையே! சந்தன மரக்காட்ல கொறவங்க அகிலையும் சேத்து எரிக்கறாங்க. அந்த வாசனையான் புகை பரவற மலைநாட்டைச் சேந்தவன் அவன். அவன் நல்லவன்; பண்பெல்லாம் உள்ளவன். அவன ஏன்மறுக்கறாங்க?
====================================================================================
அன்னாய்ப் பத்து—3
நறுவடி மாஅத்து மூக்குஇறுபு உதிர்ந்த
ஈர்ந்தண் பெருவடுப் பாலையில் குறவர்
உறைவீழ் ஆவியின் தொகுக்கும் சாரல்
மீமிசை நல்நாட் டவர்வரின்
யானுயிர் வாழ்தல் கூடும் அன்னாய்!
[நறுவடி=மணமான வடுக்கள்; மாஅத்து=மாமரம்; மூக்கு=காம்பு; ஈர்ந்த=ஈரமான மிகக்குளிர்ந்த; உறை=மழை; ஆலி=ஆலங்கட்டி; மீமிசை=மிக உயர்ந்த உச்சி]
அவன் வந்து அவளைக் கல்யாணம் செஞ்சுக்கப்போறான்னு தோழி அவன்கிட்டப் பேசித் தெரிஞ்சிக்கிட்டா. அத அவகிட்டசொல்றா. அப்ப அவ சொல்ற பாட்டு இது.
“அன்னையே! மாமரத்திலிருந்து வாசனையான வடு எல்லாம் கீழே உழுந்தா அதையெல்லாம் மழை பேயறச்சே உழுற ஆலங்கட்டியை எடுத்துச் சேத்து வைக்கறாப் போல கொறவங்க சேத்து வைக்கற மலை நாட்டைச் சேந்தவன் தாண்டி அவன். அவன் கல்யாணம் செஞ்சிக்கறேன்னு வந்துட்டா நானும் உயிரோடு இருப்பேன்”
===============================================================================அன்னாய்ப் பத்து—4
சாரல் பலவின் கொழுந்துணர் நறும்பழம்
இருங்கடல் விடர்அளை வீழ்ந்தென, வெற்பில்
பெருந்தேன் இறாஅல் சிதறும் நாடன்,
பேரமர் மழைக்கண் கவிழத்,தன்
சீருடை நல்நாட்டுச் செல்லும் அன்னாய்!
[சாரல்=மலைச்சாரல்; துணர்=கொத்து; விடர்அளை=வெடிப்புடைய பொந்து; இறாஅல்=தேன் கூடு; சிதறும்=சிதைக்கும்; கவிழ=கலங்க;
அவன், இனிமே கொஞ்ச நாளைக்கு என்னால வர முடியாது; நீதான் அவளுக்கு ஆறுதலா இருக்கணும்னு தோழிகிட்டச் சொல்றான். அதத் தோழி அவகிட்டப் போய்சொல்லும்போது அவ எப்படி ஆகறான்னு பாக்கறதுக்கு அவன் வந்து மறைவா நிக்கறான். அப்ப அவனும் கேக்கற மாதிரி தோழி சொல்ற பாட்டு இது.
”அன்னாய்! மலைசாரல்ல பலாமரத்தில இருக்கற கொத்துலேந்து ஒரு வாசனையான பழம் மரப்பொந்துல இருக்கற தேனடையைச் சிதைச்சுக்கிட்டு விழுந்துச்சு; அதை இன்னும் தித்திக்கச் செய்ய தேன் அடையைக் கீறித் தேனையும் எடுக்கற நாட்டைச் சேந்தவனான அவன் நம்ம விட்டுட்டு இன்னும் சிறப்பான நல்ல நாட்டுக்குச் செல்வானாம்”
பலாப்பழம் தேனடையைச் சிதைச்சதுபோல அவன் நம்மகிட்ட வந்தாலும் இன்மையைச் சிதைச்சு அழகைக் கெடுத்துத் துன்பமே குடுத்தான்றது மறைபொருளாம்.
=====================================================================================
அன்னாய்ப் பத்து—5
கட்டளை அன்ன மணிநிறத் தும்பி,
இட்டிய குயின்ற துளைவயின் செலீஇயர்,
தட்டைத் தண்ணுமைப் பின்னர் இயவர்
தீங்குழல் ஆம்பலின், இனிய இமிரும்
புதல்மலர் மாலையும் பிரிவோர்
அதனினும் கொடிய செய்குவர் அன்னாய்!
[கட்டளை=பொன் உறைக்கும் கல்; இட்டிய=குறுகிய; குயின்ற=செய்யப்பட்ட; தட்டை, தண்ணுமை ஆகியன இசைக்கருவிகள்; புதல்=புதர்; இயவர்=பக்கவாத்தியம்]
இனிமே பகல்ல வராதே; ராத்திரியில வான்னு அவ அவன்கிட்ட சொல்லிடறா; அவனும் சரின்னு போறான். அப்ப அவ தோழிகிட்ட அவனும் கேக்கற மாதிரி சொல்ற பாட்டு இது.
”அன்னாய்! பொன்னை ஒறச்சுப் பாக்கற கல்லைப் போல கருப்பா நீலமா இருக்கற வண்டு சின்ன வழியில போகச்சே தட்டை, தண்ணுமைன்ற இசைக்கருவியோட ஒலிக்கற ஆம்பல் குழலைவிட இனிமையா ஒலிக்கும். புதர்ல இருக்கற முல்லைப் பூவெல்லாம் மாலைக் காலத்துலப் பூக்கும். அப்ப பிரிஞ்சு போற அவன் அந்த மாலைக் காலத்தவிட நமக்குத் துன்பம் தரான்”
நான்தான் சொல்லிட்டேன்னா அவனும் போறான் பாருன்னு அவ நெனக்கற மாதிரி இருக்கு இந்தப் பாட்டு.
===================================================================================
அன்னாய்ப் பத்து—6
குறுங்கை இரும்புலிக் கோள்வல் ஏற்றை
நெடும்புதல் கானத்து மடப்பிடி ஈன்ற
நடுங்குநடைக் குழவி கொளீஇய, பலவின்
பழந்தூங்கு கொழுநிழல் ஒளிக்கும் நாடற்குக்
கொய்திடு தளிரின் வாடிநின்
மெய்பிறி தாதல் எவன்கொல்? அன்னாய்!
[குறுங்கை=குட்டையான முன்னங்கால்கள்; இரும்புலி=பெரிய புலி; கோள்வல்=கொள்ளுதலிலே வல்ல; ஏற்றை=ஆண்; புதல்=புதர்; மடப்பிடி=மடமை வாய்ந்த பெண் யானை; தூங்கும்=தொங்கும்; ஒளிக்கும்=பதுங்கி இருக்கும்; கொய்திடு தளிர்=கொய்து தரையில் இடப்பட்ட தளிர்]
அவன் என்னென்னமோ சொல்லிக் கல்யாணத்தைத் தள்ளிப் போட்டுக்கிட்டே போறான். அவளால அவனை வெறுக்கவும் முடியல; அவனும் வந்து நிக்கச்சே அவனும் கேக்கற மாதிரி தோழி சொல்ற பாட்டு இது.
”அன்னையே! பிற வெலங்கை எல்லாம் புடிச்சுக் கொண்டு போறதில தெறமையான ஆண் புலியானது, புதரெல்லாம் இருக்கற காட்ல பெண்யானை போட்ட குட்டியைப் புடிச்சுத் தின்றதுக்காக நெழல்ல ஒளிஞ்சிருக்கும். அப்படிப்பட்ட நாட்டைச் சேந்தவன் அவன். நீ அவனுக்காகப் பறிச்சுப் போட்ட இளந்தளிர் போல இருக்கற ஒன் ஒடம்பை ஏன் வாட்டமா செய்யறே?
புலி எப்படியும் குட்டியைப் புடிச்சிடும். அது போல அவன் தன் இச்சையைத் தீத்துக்கறதுக்கு என்ன வேணா செய்வான்றது மறை பொருளாம்.
=====================================================================================
அன்னாய்ப் பத்து—7
பெருவரை வேங்கைப் பொருள்வரை நறுவீ
மான்இனப் பெருங்கிளை மேயல் ஆகும்
கானக நாடன் வரவும், இவள்
மேனி பசப்பது எவன்கொல்? அன்னாய்!
[வரை=மலை; வீ=மலர்; மேயல்=மேய்தல்; ஆரும்=உண்ணும்]
கல்யாணத்துக்காகப் பொருள் சேக்கப் போன அவன் பொருள் சம்பாதிச்சுட்டு ஊருக்குத் திரும்பிட்டான். அதைத் தெரிஞ்சிக்கிட்ட அவ தோழி அவகிட்ட சொல்ற பாட்டு இது.
”அன்னையே! அவனோட நாட்ல இருக்கற காட்ல பெரிய மலையிருக்கு; அந்த மலையில வேங்கை மரமிருக்கு; அந்த மரத்தோட பொன் நெறமான வாசனையுள்ள பூக்களை மானெல்லாம் கூட்டமா வந்து மேயும். அப்படிப்பட்ட நாட்டைச் சேந்தவன் அவன். அவன்தான் வந்துட்டானே? அப்பறம் ஏன் ஒன் ஒடம்பு பசலை பூக்குது?
=====================================================================================அன்னாய்ப் பத்து—8
நுண்ணேர் புருவத்த கண்ணும் ஆடும்;
மயிர்வார் முன்கை வளையும் செறூஉம்;
களிறுகோள் பிழைத்த கதஞ்சிறந்து எழுபுவி
எழுதரு மழையின் குழுமும்
பெருங்கல் நாடன் வருங்கொல்? அன்னாய்!
[ஏர்=அழகு; ஆடும்=துடிக்கும்; செறூஉம்=இறுகும்; பிழைத்த=தவறவிட்ட; கதம்=சினம்; மழை=மேகம்; குழுமும்=முழங்கும்]
அவனுக்காக, அவளப் பொண்ணு கேட்டு வந்தவங்ககிட்ட அவ ஊட்ல மறுத்திடறாங்க; அப்ப வேதனைப்படறா; அப்ப தோழி நல்ல சகுனம் தெரியுதுன்னு சொல்ற பாட்டு இது.
” அன்னையே! அழகா இருக்கற என் கண்ணு துடிக்குது; மயிர் ஒழுங்கா அமைஞ்சிருக்கற என் முன்னங்கை வளையல் எல்லாம் நெகிழுதடி; தான் துரத்திய யானை தப்பிச்சிக்கிட்டு போனதால ஆண் புலி ரொம்பக் கோபமா மானத்துல இருக்கற மேகத்தைப் போல முழங்கற நாட்டைச் சேந்தவன் ஒன்னைக் கல்யாணம் செய்ய வருவாண்டி”
===================================================================================
அன்னாய்ப் பத்து—9
கருங்கால் வேங்கை மாத்தகட்டு ஒள்வீ
இருங்கயல் வியல்அறை வரிப்பத் தாஅம்
நம்மலை நாடன் பிரிந்தென
ஒள்நுதல் பசப்பது எவன்கொல்? அன்னாய்!
[கருங்கால்=கரிய அடிப்பகுதி; மாத்தகட்டு ஒள்வீ=பெரிய ஒள்ளிய இதழ்கள் உள்ள பூ; வியலறை=அகன்ற பெரிய மலை; வரிப்ப=அழகுண்டாகச் செய்ய; தாஅம்=பரவும்]
அவன் கல்யாணத்துக்காகப் பொருள் தேடப் போயிட்டான்; ஆனா அவன் வந்து பேசிப் பழகினதெல்லாம் அவளுக்கு நெனவில வந்து வாட்டுது. அப்ப தோழி சொல்ற பாட்டு இது]
”அன்னையே! கருப்பா அடி மரம் உள்ள வேங்கை மரத்தோட நல்லா வெளிச்சம் தர மாதிரி இருக்கற பூவெல்லாம், அந்தப் பெரிய மலையின் பக்கமெல்லாம் விழுந்து கெடக்கும். அப்படிப்பட்ட மலையை உடைய அவன் ஒன்னைப் பிரிஞ்சு போயிட்டான்; ஒடனே ஒன் நெத்தி ஏண்டி பசலை பூத்துட்டுதே”
அன்னாய்ப் பத்து-10
அலங்குமழை பொழிந்த அகன்கண் அருவி
ஆடுகழை அடுக்கத்து இழிதரும் நாடன்
பெருவரை அன்ன திருவிறல் வியன்மார்பு
முயங்காது கழிந்த நாளிவள்
மயங்கிதழ் மழைக்கண் கலிழு அன்னாய்!
[அலங்கு=அசைகின்ற; கழி=மூங்கில்; அடுக்கம்=பக்கமலை; வரை=மலை; விறல்=வெற்றி; வியன்=அகன்ற; முயங்குதல்=இணைதல்; மயங்கித=ஒன்று கலந்த ஈரிதழ்; இழிதரு=விழுதல்]
வெளியாளுங்க வந்து அவளப் பொண்ணு கேக்கறாங்க. அப்ப தோழி அவளோட அப்பா அம்மா ஒத்துக்கிடுவாங்களோன்னு கவலைப்படறா. அதால செவிலிகிட்டப் போயி சொல்ற பாட்டு இது.
”அன்னையே! அவனோட மலையில அசையற மேகம் மழை பெய்யறதால அருவி விழுது. பெரிய மலை போல அழகா இருக்கற அவன் மாரைத் தழுவாத நாள்ல இவளோட அழகான பூப்போல இருக்கற கண்ணெல்லாம் கண்ணீரைக் கொட்டும்”.
ஒரு நாளு தழுவாட்டாலே அவ கலங்கிப் போயி அழுதிடுவா. அதால அவள அவனுக்கே கல்யாணம் செஞ்சு வைக்கணும்னு மறைவா சொல்றா.
====================================================================================

Series Navigationலதா ராமகிருஷ்ணன் கவிதைகள்தொடுவானம் 238. மினி தேர்தல்
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *