மகாகவியின் மந்திரம் – பொய் அகல்

author
0 minutes, 5 seconds Read
This entry is part 1 of 9 in the series 16 செப்டம்பர் 2018

முருகானந்தம், நியூ ஜெர்சி


மகாகவி பாரதி (1882-1921) ஓர் தேச பக்தர், தெய்வ பக்தர், ஒப்பற்ற கவிஞர். எல்லாவற்றிற்கும் மேலாகத் தீர்க்க சிந்தனையாளர். கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என்ற மூன்று காலத்தையும் தனது ஞானப் பார்வையால் நோக்கியவர். இப்பார்வையைத் தமிழ் மொழியின் மேம்பாட்டிற்கும், இந்திய மேம்பாட்டிற்கும், மனித மேம்பாட்டிற்கும் பயன்படுத்தியவர். தேசத்தை அந்நியனிடமிருந்து மீட்பதெப்படி என்பதை அறிவு பூர்வமாக சிந்தித்தார். இச்சிந்தனைகள், எழுச்சிமிக்க கவிதைகளாய் உருவெடுத்தன. தமிழ் மொழியைப் பண்டிதர்களிடமிருந்து மீட்பதெப்படி என்பதையும் அறிவு பூர்வமாக சிந்தித்தார். இச்சிந்தனையின் விளைவு தமிழ் மொழியின் புதிய சகாப்தம். எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக்கூடிய சந்தம், பொதுஜனங்கள் விரும்பும் மெட்டுக்கள் கூடிய அவரது கவிதைகள் தமிழ் மொழிக்குப் புத்துயிர் கொடுத்தன. தெய்வ பக்தியை அவர் பாரம்பரிய முறையில் பார்த்து நமது புராணங்களையும், இதிகாசங்களையும் மக்கள் அனுபவிக்கக் கலைகளாய்க் கவிதைகளாய் யாத்துத் தந்தார். சிந்தனையாளர் என்ற முறையில் மதத்தை அணுகி நம் வேதாந்தத்தையும், சித்தாந்தத்தையும் தனது கவிதைகளில் உலவ விட்டார். இந்து மதத்தின் பெருமையோடு மட்டும் நிற்காமல், எம்மதமும் சம்மதம் என்ற சகோதர மனப்பான்மையில் கிறித்தவ, முகமதிய மற்றும் யூத மதங்களின் புகழ் பாடினார். மதம் என்பது மனிதனின் தேவையென்பதை அவர் பாடல்கள் சொல்லாமல் சொல்லின. இவ்வளவு அசாதரண சாதனைகளை முப்பொத்தொன்பது வயதுக்குள் செய்து முடித்தார் பாரதி.
தேச மேம்பாட்டையும், மொழி மேம்பாட்டையும், மத மேம்பாட்டையும் சிந்தித்த பாரதியின் உள்ளம் தனிமனித மேம்பாட்டையும் சிந்தித்தது. தனிமனிதனின் நன்னடத்தை மொழிக்கும், சமூகத்திற்கும், நாட்டிற்கும் நல்லது பயக்கும் என்று எண்ணி சில நடத்தைகளைத் திரும்பத் திரும்ப மந்திரம் போல், வெவ்வேறு சூழ்நிலைகளில் ஞாபகப்படுத்துகிறார். அவற்றில் ஒன்று பொய் அகற்றல். இதற்கு ஒரு சில எடுத்துக்காட்டுக்கள்-
பாரதியார் பாப்பாவிற்கு முதன் முதலில் சொல்லும் அறிவுரையே பொய் சொல்லக்கூடாது என்பது தான்.
பொய்சொல்லக் கூடாது பாப்பா-என்றும்
புறஞ்சொல்ல லாகாது பாப்பா
தெய்வம் நமக்குத்துணை பாப்பா- ஒரு
தீங்குவர மாட்டாது பாப்பா
உயிர் களிடத்தில் அன்பு வேணும்-தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்
வயிர முடைய நெஞ்சு வேணும்-இது
வாழும் முறைமையடி பாப்பா!
என்று பாப்பாவிற்கு பொய் அகற்றலை வாழும் முறைமையில் ஒன்றாய் அறிமுகம் செய்கிறார். மேலும் புதிய ஆத்திச்சூடியில் பிள்ளைகளுக்கு,
பொய்மையை இகழ்
என்று கூறுகிறார். பொய்யைத் தவிர்க்கவேண்டும் என்று தனிமனிதனின் நன்னடத்தைக்காகப் பாரம்பரியத் தமிழ் நீதி நூல்கள் அறிவுறுத்துவதை நன்கறிந்தவர் பாரதி. இதையே இவர் பால பாடமாய்க் குழந்தைகளுக்குப் போதிக்கின்றார்.
“சுப்பிரமணிய பாரதி” நான் தயாரித்து, அம்ஷன் குமார் இயக்கத்தில் 1998-இல் வெளியான டாக்குமெண்டரி. இதில் பெரியவர் கல்யாண சுந்தரம், தான் பாரதியோடு நேரில் பழகிய நாட்களை நினைவு கூறுகிறார். செல்லம்மாள் பாரதி ஊரான கடையத்தில், பாரதி தஞ்சம் புகுந்த காலம். ராஜவிரோதியாகவும், தீவிரவாதியாகவும், பித்துக்குளியாகவும் கருதப்பட்டு ஊராரால் புறக்கணிக்கப்பட்ட காலம். கல்யாணி அம்மன் கோவிலுக்குப்பின் பகுதியில் உள்ள குன்றுப் பகுதியில், சிறுவன் கல்யாணசுந்தரம் மற்றும் சில சிறுவர்களுடன் பாரதியார் திரிந்த காலம். ஒரு நாள் அவர் குன்றில் அமர்ந்து போஸ்ட் கார்டில் யாருக்கோ கடிதம் எழுதிக்கொண்டிருந்தார்.அப்பொழுது அவர் தரையில் வைத்திருந்த புதிய கார்டுகள் பலவற்றை ராமையா என்ற ஒரு சிறுவன் திருடி தன் மடியில் ஒளித்து வைத்தான். கார்டுகளைக் காணாத பாரதி சிறுவர்களைக் கூப்பிட்டு, யாராவது நான் இங்கு வைத்திருந்த கார்டுகளை எடுத்தீர்களா, பார்த்தீர்களா என்று கேட்க, ஒவ்வொருவரும் இல்லை, இல்லை, பார்க்கவே இல்லை என்று சொன்னர்கள். ஒரு சிறுவன் மட்டும் ஒரு மாதிரி விழித்தான். பாரதியார் அவன் மடி கனத்திருப்பதைக் கண்டு வேஷ்டியை அவுடா என்று சொல்லவும் அவன் அவிழ்க்க, பொல பொல என்று கார்டுகள் தரையில் விழுந்ததன. உடனே பாரதியார் அவன் கன்னத்தில் பளாரென ஓர் அறை விட்டார். அவனும் தான் தெரியாது செய்துவிட்டேன், தெரியாது செய்து விட்டேன் என்று சொல்லி அழுதான். பாரதியார் அவனைக் கையெடுத்துக் கும்பிட்டு, “பொய் சொல்லாதே. அதனால் தான் அடித்தேன். நீயே திருடிவிட்டு, மற்றவனையும் திருடனாக்க முயன்றிருக்கிறாய். பொய் சொல்லக்கூடாது. பொய் சொல்லத் தைரியம் வேண்டியதில்லை. உண்மை சொல்லத்தான் தைரியம் வேண்டும். இனி மேல் பொய் சொல்லாதே. சரி போய் விளையாடு” என்று சொன்னதை அமரர் கல்யாண சுந்தரம் நினைவு கூர்ந்துள்ளார். இச்சம்பவம் பாரதியார் பொய்சொல்லக்கூடாது, இது வாழும் முறை என்று எழுதியதோடு நிற்கவில்லை. நடைமுறையிலும் வலியுறுத்தினார் என்பதைக் காட்டுகிறது.
கண்ணன் துதி என்ற பக்திப் பாடலில் பாரதி பொய்யருக்குத் தீங்கு வருவது உறுதி என்று எச்சரிக்கின்றார்.
காயிலே புளிப்பதென்னே கண்ண பெருமானே
கனியிலே இனிப்பதென்ன கண்ண பெருமானே
போற்றினோரைக் காப்பதென்ன கண்ண பெருமானே-நீ
பொய்யர் தம்மை மாய்ப்பதென்ன கண்ண பெருமானே
இப்பாடல் தெய்வ பக்தி சம்பந்தப்பட்டது. உண்மையைப் போற்றினோரைக் கண்ணன் காப்பதாகவும், பொய்யரை மாய்ப்பதாகவும் சொல்வதற்கு ஓர் உள்ளர்த்தம் உள்ளது என்று நினைக்கிறேன். இங்கு பொய் என்று குறிப்பிடுவது அறிவிற்குப் பொருந்தாத பழங்குப்பைகளை. பாரதி வாழ்வில் குள்ளச் சாமி என்றொரு அழுக்குச் சாமியாரைச் சந்தித்த நிகழ்ச்சி ஒன்று உண்டு. சாமியார் அழுக்கு மூட்டை ஒன்றைச் சுமந்துகொண்டு வந்தார். ஏன் என்று கேட்டதற்கு, “நான் அழுக்கை வெளியில் சுமக்கிறேன், நீங்களெல்லாம் பழங்குப்பைகளை, பழம்பொய்களை உள்ளே சுமக்கிறீர்கள்” என்று கூறியதாய்ப் பாரதி அவரை மெச்சி தனது சுயசரிதையில் எழுதியுள்ளார்.
பாரதியார் உவமைகளைக் கையாளும் விதம் அவர் மகாகவி என்பதைச் சட்டெனக் காட்டும். பாஞ்சாலி சபதம் அவர் எழுதிய குறுங்காவியம். பாரத மாதாவைப் பாஞ்சாலியாய் உருவகித்து அவளது விடுதலையை மகாபாரதத்தோடு ஒப்பிட்டு எழுதியது தமிழ் இதுவரை காணாத அற்புதம். இவ்வற்புதக் காவியத்தில் ஒரு உச்ச கட்டம். திரௌபதியின் சேலையை மூர்க்கன் துச்சாதனன் துகிலுரிகிறான். அப்பொழுது கண்ணபிரானருளால் சேலை வளர்ந்தது. இழுக்க இழுக்கச் சேலை எல்லையில்லாமல் வளர்ந்தது. இவ்வெல்லையின்மைக்கு மகாகவி தரும் உவமையில் பாரதி பொய்மையைச் சாடுவது அவர் அதற்கு கொடுத்த முக்கியத்துவத்தைக் காட்டுவதாகும்.
பொய்யர் தந்துயரினைப்போல்- நல்ல
புண்ணிய வாணர்தம் புகழினைப்போல்
தையலர் கருணையைப் போல்
சலசலத் தெறிந்திடும்அலைகளைப் போல்
பெண்ணொளி வாழ்த்திடு வார்-அந்த
பெருமக்கள் செல்வத்திற் பெருகுதல் போல்
கண்ண பிரானரு ளால்-தம்பி
கழற்றிடக் கழற்றிடத் துணிபுதி தாய்
வண்ணப் பொற்சேலைகளாம்-அவை
வளர்ந்தன வளர்ந்தன வளர்ந்தனவே
என்ற வரிகளில் பொய்யருக்குத் துயரம் எல்லையில்லாமல் வரும் என்கிறார் பாரதியார். இங்கு பொய் என்பது சமூக சம்பந்தமுடையது. பெண் விடுலை பற்றியது. அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதெற்கு என்று பொய்யான கதைகளைப் பரப்பும் பொய்யர்களுக்குத் துயர் எல்லையில்லாமல் வரவேண்டும் என்று தன் கோபத்தை வெளிக்காட்டுகிறார். பெண்ணுக்கு அறிவொளி தேவை என்று முயற்சி செய்யும் பெரியோர்க்கு புகழும், செல்வமும் எல்லையில்லாமல் வளரவேண்டும் என்று வாழ்த்துகிறார். மகாகவியின் வானளவுயர்ந்த உள்ளம் இந்த வரிகளில் தெரிகிறது.
பாரதியின் ஞானப்பார்வை பாரதத்தின் மீது விழும்போது, எதை விரட்ட வேண்டும், எதைக் கொள்ள வேண்டுமென்பதைத் தெளிவாகச் சொல்லியிருக்கின்றார். போகின்ற பாரதத்தை போ போ என்று விரட்டும் பாரதி அப்பாடலில் பொய்யை மெய்யாகவும், மெய்யைப் பொய்யாகவும் கருதும் பேதைமையை விரட்டுகிறார்-
சென்று போன பொய்யெலாம் மெய்யாகச்
சிந்தை கொண்டுபோற்றுவாய் போபோபோ
வென்று நிற்கு மெய்யெலாம் பொய்யாக
விழிம யங்கி நோக்குவாய் போபோபோ
அதே சமயம் வருகின்ற பாரதத்தை வா வா என்று வரவேற்கும் பாரதி மெய்மை கொண்ட நூல்களைப் போற்றி, பொய்மை கூறும் நூல்களைத் தூற்றுவாய் என்கிறார். அதிலும் பொய் கூறக் கூசுவாய் என்று சொல்லாமல் அஞ்சுவாய் என்று அழுத்திச் சொல்கிறார்.
மெய்மை கொண்ட நூலையே- அன்போடு
வேத மென்று போற்றுவாய் வாவாவா
பொய்மை கூற லஞ்சுவாய் வாவாவா
பொய்மை நூல்க ளெற்றுவாய் வாவாவா
போகின்ற பாரதத்தைச் சபித்தும், வருகின்ற பாரதத்தை வாழ்த்தியும் பாடிய தேசீய கீதத்தில் சிந்தனையாளர் பாரதி பொய்யாகக் கருதுவது விஞ்ஞானத்திற்குப் புறம்பானவற்றையென்றும், மெய்யெனக் கொள்வது பொது அறிவுக்கு ஒத்து வருவதையென்றும் நினைக்கிறேன். நவ பாரதத்தை நல்ல பாரதமாக்கி, நல்ல பாரதத்தை நவீன பாரதமாக்கும் சிந்தனைகள்.
பாரதி தனக்குத்தானே சில சமயம் கேள்விகளைக் கேட்டுக்கொண்டு அதற்கான பதில்களைப் பதிவு செய்துள்ளார். எது மேலானது? எவன் மேலானவன்? என்ற கேள்விக்குப் பாரதி தரும் பதில்.
வையகம் காப்பவ ரேனும்-சிறு
வாழைப் பழக்கடை வைப்பவ ரேனும்
பொய்யக லத்தொழில் செய்தே-பிறர்
போற்றிட வாழ்பவர் எங்கணும் மேலோர்
பொய்யில்லாமல் தொழில் செய்தால் வல்லரசு நாட்டை ஆளுவதும் மேலானது, வாழப்பழக் கடை வைப்பதுவும் மேலானது என்று குறிப்பிட்டு , மேன்மையின் அடிப்படை நாணயம், நாணயத்தின் அடிப்படை பொய் அகற்றல் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார் சிந்தனையாளர் பாரதி.
இவ்வாறு அன்றாட வாழ்க்கை, பக்தி, அரசியல், தொழில், பெண்ணின் நிலை முதலிய பல துறைகளில் பொய்யை அகற்றவேண்டும் என்று பாரதியார் விரும்பினார். எழுதினார். நூறாண்டுக்கு முன் எழுதிய இந்த எழுத்துக்கள் இன்றைய இந்தியாவிற்குப் பொருந்துமா? நிச்சயம் பொருந்தும். பாரதி இறந்து 25 ஆண்டுகளிற்குப்பின் பாரதி எதிர்பார்த்தபடியே இந்தியா சுதந்திரம் பெற்றது. பின் வந்த 70 ஆண்டுகளில் வியக்கத்தக்க முன்னேற்றத்தைப் பாரதியே மகிழும்வண்ணம் பல துறைகளில் இந்தியா கண்டுள்ளது. இருப்பினும் இன்றைய அரசியல், அரசாங்க அலுவலகங்கள், முனிசிபாலிடி, பஞ்சாயத்து, மக்கள் தினந்தோறும் ஈடுபடும் வியாபாரம் முதலிய துறைகளில் பொய்யும், பொய்யிலே பிறந்த ஊழலும் மலிந்துள்ளன. இது வளர்ச்சிக்கு நல்லதல்ல.இந்தியா வளர்ந்த நாடாக மாற வேண்டுமானால், பொருளாதாரத்திலும், விஞ்ஞானத்திலும் சமூகம் வளர்ச்சி பெறவேண்டுமானால் பாரதி போற்றிய “பொய் அகல்” மந்திரத்தை பல துறைகளில் பயிற்சி செய்ய வேண்டும். அதற்கான சூழ்நிலையைத் தலைவர்களிடமிருந்தும், அரசு ஊழியரிடமிருந்தும், வியாபாரிகளிடமிருந்தும் குடிமக்கள் எதிர்பார்க்க வேண்டும். அதற்காக ஜனநாயக முறையில் போராட வேண்டும். தேர்தலைப் பயன்படுத்த வேண்டும். நாடுகள் நாள்தோறும் உலகமயமாகிக் கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில், வளர்ந்த நாடுகளுக்குப் போகும்போதெல்லாம் கண்ணில் படுவது அங்கு ஊழல் குறைவாய் இருப்பதும், நேர்மை அதிகமாயிருப்பதும் தான். இதன் காரணம் உண்மையை மதித்து, பொய்யை அவமதிக்கும் நடைமுறை அங்கு இருப்பதே என்று நம்புகிறேன்.
அமெரிக்காவில் பல ஆண்டுகளாய் வசிக்கும் நான் என் அனுபவத்தில் கண்டது, இங்கு வாழும் சராசரிக் குடிமகன் பொதுவாகவே நம்பத்தகுந்தவன் என்பது. அவன் பொய் சொல்லத்தயங்குபவன். பொய் சொல்லாமல், உண்மையே பேசி சராசரி மனிதன் சுயமரியாதையோடு வாழ முடியும், சாதாரண மனிதன் ஜீவனம் நடத்த முடியும் என்ற முறையில் அரசியல், சமூக, அரசாங்க, தொழிலக அமைப்புகள் இங்கு உள்ளன. இதை மீறுபவர்களும் உண்டு. ஆனால் அவர்களைக் கண்டுபிடித்துத் தண்டனை வழங்கச் சட்டம் காத்திருக்கிறது. இன்றில்லையென்றாலும் நாளை ஒரு நாள் பொய்கள் அம்பலாமாகும். இதற்கான வழிகூறுகள் சட்டத்தில் உள்ளன. அமெரிக்க ஜன நாயகமும், அமெரிக்க ஜூரி முறைத் தீர்ப்பும் இதை நடை முறைக்குக் கொண்டு வந்துள்ளன. செய்தித்தாள்கள், டி.வி., மற்றும் பத்திரிகைகள் பொய் பேசும் தலைவர்களைக் காட்டிக் கொடுப்பதைத் தமது தொழிலாய், தர்மமாய்க் கருதுகின்றன. இங்கு உண்மை பேசினால் லாபம்; பொய் பேசினால் நஷ்டம். இதனால் ஊழல் குறைவு . நேர்மை அதிகம். இது போன்றே மற்ற வளர்ச்சி பெற்ற நாடுகளில், வளர்ச்சியின் அளவுகோலாய் “உண்மை” இருக்கிறது.
எனவே மகாகவியின் பொய் அகல், பொய் அகலெனும் அறிவுரை அன்று போல் இன்றும், இன்று போல் என்றும் பயன் தருவது. எங்கும் பயன் தருவது. எவர்க்கும் பயன் தருவது. இதை தர்க்கரீதியாய் உணர்ந்தே மந்திரம் போல் பலமுறை சொல்லியுள்ளார் பாரதியார். இது பயன் தரும் மந்திரம். இது பலிக்கும் மந்திரம்!
(கட்டுரையின் பெரும்பகுதி, நான் உடுமலை மின்சாரவாரிய இலக்கிய வட்டத்தில், நவம்பர் 4, 2000-இல், சுப்பிரமணிய பாரதி டாக்குமெண்டரி திரையிடுவதற்கு முன் பேசிய உரையிலிருந்து எழுதப்பட்டது)

Series Navigationமனுஷங்கடா – டிரயிலர்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *