பயங்கரவாத செயல்களின் பின்புலமும், இடதுசாரி அரசியலும்

author
0 minutes, 2 seconds Read
This entry is part 10 of 10 in the series 28 ஏப்ரல் 2019


ஸர்மிளா ஸெய்யித்

முஸ்லிம்களே இஸ்லாத்தை கைவிட்டால் கூட இங்குள்ள இடதுசாரிகள் அதை விரும்ப மாட்டார்கள் போலானதொரு நிலையை ஈஸ்டர் ஞாயிறு குண்டு வெடிப்புக்குப் பின்னரான அவர்களில் சிலரது நிலைப்பாடுகள் காண்பிக்கின்றன. இவர்களே முஸ்லிம்களிடம் சென்று “இஸ்லாம் உங்கள் மதம், நீங்கள் அதை பின்பற்ற வேண்டும், தீவிரமாக பின்பற்றும் உரிமை உங்களுக்கு உள்ளது. தற்கொலைத் தாக்குதல்கள், குண்டுவெடிப்புகளை நிகழ்த்துவதா இல்லையா என்பதை முடிவுசெய்யும் உரிமை உங்களுடையது. பேரினவாத சக்திகளோ, முதலாளிகளோ எண்ணெய் அரசியலோ வல்லரசுகளோ அதனை செய்ய அனுமதிக்கக்கூடாது” என்று போதனை செய்யத் தொடங்கிவிடுவார்களோ என்று அச்சமாக உள்ளது.

இடதுசாரி அரசியல் வாசிப்போடு மட்டுமே நின்றிருந்த எனக்கு, இந்திய இடதுசாரிகளே முதலில் நேரடிப் பழக்கத்திற்கு வந்தவர்கள். குறிப்பாக தமிழ்நாட்டிலுள்ள இடதுசாரி செயற்பாட்டாளர்கள், கம்யூனிஸ்ட்டுகளோடு நேரடியான அறிமுகமும் பரிச்சயமும் ஏற்பட்டபிறகு அதன்பால் இயல்பாகவே ஈர்க்கப்பட்டேன். ஐயா நல்லக்கண்ணு போன்றவர்களை நேரடியாகப் பார்த்து அறிய நேர்ந்தபோது என்னையும் ஒரு இடதுசாரி என்றெண்ணி பெருமிதமடைந்தேன். இந்தியாவின் தமிழ்நாடு தவிர்ந்த வேறு மாநில இடதுசாரி கொள்கையுடையோரும் இப்போது அறிமுகம். நேபாள் நாட்டில் பெருமலவான இடதுசாரி நண்பர்கள் உள்ளார்கள்.

இலங்கையில் வெகு சில தமிழ் இடதுசாரிகளோடும் சில சிங்கள இடதுசாரிகளோடும் தொடர்பில் இருக்கிறேன். இவர்களை சந்தித்த பின்னர் இடதுசாரிகள் பற்றியிருந்த எனது நல்லெண்ணத்தில் நம்பிக்கையில் விரிசல் உருவாகி வருவதைக் கவலையுடன் உணர்கிறேன். முக்கியமாக, ஈஸ்டர் ஞாயிறு குண்டு வெடிப்புக்குப் பின்னரான இவர்களது நிலைப்பாடுகளைக் காணுகிறபோது விரைவில் எதிரிகளாகப் பார்க்க நேர்ந்துவிடுமோ என்று வருத்தமாக உள்ளது.

மனித குலத்தின் பெறுமானங்களைச் சிதைக்கும் மத அடிப்படைவாத ஓநாய்களை இவர்கள் வளர்க்க நினைக்கிறார்கள். அப்பாவி முஸ்லிம்களுக்கு ஆதரவென்று சொல்லிக் கொண்டு புண்ணை இலேசாக்காமல் அதனை கடித்துப் பெரிசாக்கும் கொசுக்களை மட்டுமே குறிவைக்கிறார்கள். கொசுக்களிடமிருந்து இவர்கள் காப்பாற்ற நினைப்பது அடிப்படைவாதம் என்ற முற்றிய புண்ணையா?


2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி பார்ப்பது ”ஹராம்” என்று பிரச்சாரம் செய்யத்தொடங்கியது. இந்தச் செயல்பாடு பிரச்சாரத்தோடு நின்றுவிடவில்லை. வீடு வீடாகச் சென்று அன்டனாக்களை உடைப்பது, சீடி விற்பனை செய்யும் கடை உரிமையாளர்களை எச்சரிக்கை செய்து, கடைகளை எரிப்பது என்று வன்முறையாக மாறியது.

கறுப்பு அபாயாக்களையும், நீண்ட அங்கிகளையும் கொண்டுவந்து இதுதான் இஸ்லாமிய உடை என்று யாரோ சில வியாபாரிகள் அறிமுகம் செய்தார்கள். எங்கள் இறுதித் தூதர் முஹம்மத் நபி அவர்கள் வாழ்ந்த மண்ணில் பெண்கள் எல்லாம் இதைத்தான் அணிகின்றார்கள். இது எங்கள் கலாசாரம் என்று ஏற்பதற்கு பெண்களையும் பிள்ளைகளையும் பழக்கப்படுத்தினார்கள். இது பெண்களுக்குப் பாதுகாப்பான கௌரவமான உடை என்பதான உணர்வை வலிந்து உருவாக்கிப் பெண்கள் வாயாலேயே சொல்லும்படி மூளைச்சலவை நடந்தது. பாடசாலை மாணவிகளும், பல்கலைக்கழகம் செல்லும் மாணவிகளும் கறுப்பு அங்கியை மட்டுந்தான் கட்டாயமாக அணியவேண்டும் என்று வெள்ளிக்கிழமை ஜூம்மாக்களில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்துப் பிரச்சாரம் செய்யப்பட்டது.

இது எங்கள் ஊரில் மட்டும் நிகழ்ந்த சம்பவமில்லை. பெரும்பாலாக முஸ்லிம்கள் வாழும் எல்லா ஊரிலும் இப்படித்தான் நடந்தது.

திடீரென்று முளைத்த சிந்தனைப் பள்ளிகளுக்கு அரபு நாடுகளிலிருந்து நிதி வசூலாகி வந்தது. வெறும் நூறு இருநூறோ ரூபாய்களை மட்டும் நன்கொடையாக செலுத்தி நாங்கள் கற்ற குர்ஆனை மாதாந்தம் மூவாயிரம் செலுத்திக் கற்கும் நிலை உருவாக்கப்பட்டது. மத கல்வி அவசியமேயின்றி முன்னிறுத்தப்பட்டது. வியாபாரமானது. கிலாபத் பற்றிய எண்ணங்கள் இளைஞர்களிடையே விதைக்கப்பட்டு இந்த பூமி முஸ்லிம்களால் ஆழப்படவேண்டியது என்ற பிரம்மை திணிக்கப்பட்டது. சில உலமாக்கள் சொத்துக்கள் சேர்த்தார்கள். எங்களுக்குத் தெரிய பாங்கு முழங்கிக் கொண்டிருந்த சம்பளமே இல்லாத மௌலவிகள் வெளிநாடுகளுக்குப் போய் வந்தார்கள். அவர்கள் வீடுகளுக்குப் பாக்கிஸ்தானிலிருந்தும் மத்திய கிழக்கிலிருந்தும் நண்பர்கள் வந்து தங்கிச் சென்றார்கள். அவ்வப்போது ஆடு மாடு அறுத்து விருந்துகள் நடத்தினார்கள். கஞ்சாவை அம்மியில் அரைத்து இறைச்சிக் கறி சமைத்த வாசம் எங்கள் மூக்குத் துவாரங்களை அரித்துக் கொண்டு காற்றிலேறிப் போனது.

இவர்களுக்குள் இந்த சிந்தனை மாற்றங்கள் எப்படித் திடிரெனத் தோன்றின என்று சிந்திப்பதில் யாருக்கும் ஆர்வம் இருக்கவில்லை.

சிங்கள மக்கள் சீத்தையையா அணிகின்றார்கள்? அவர்களது கலாசாரத்தில் மாற்றம் உண்டாகவில்லையா, நாங்கள் அபாயா அணிந்தால் தீவிரவாதமா என்று அபாயா திணிக்கப்பட்ட அரசியலுக்கு முட்டுக் கொடுப்பதை வெட்கமேயின்றி நிகழ்த்தி வெற்றி கண்டவர்கள் முகங்கள் எல்லாம் வரிசையாக கண்களில் வந்து போகின்றன.

மதத்தின் பெயராலான இத்தகைய சின்னச்சின்ன எக்ஸ்ட்ரீம் செயல்பாடுகளின் ஊற்றுக்கண்களை ஆழமாக நோக்கத் தவறியதோடு, அமெரிக்கா 9/11 தாக்குதலுக்குப் பின்னர் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாகப் பார்க்கும் சூழ்நிலையை, இஸ்லாமோபோபியா போன்ற அரசியல்களைப் பேசுவதை மனிதாபிமானச் செயற்பாடாக கருதியவர்கள் எல்லாம்கூட இன்றைய இலங்கை முஸ்லிம்களின் அரசியல் நிலைக்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்களே.

இஸ்லாமிய தீவிரவாதம் குறித்து பேசுகின்ற எழுதுகின்றவர்களை மேலைத்தேய கைக்கூலிகள் என்றவர்கள், உண்மையையை உரக்கப் பேசிய எழுதியவர்களின் கழுத்துகள் நெறிக்கப்பட்டும், சமூக ஊடகங்களிலும், வாழ்விலும் அவமானப்படுத்தப்பட்டபோதும் மௌனித்திருந்தவர்கள்கூட இதன் பின்னால் இருக்கிறார்கள்.

இப்போது வெள்ளம் தலைக்கு மேல்! நாடகங்களின் அரங்குகளை மாற்றவேண்டிய தருணம்.

இலங்கை முஸ்லிம்களின் எதிர்வினைகளை மூன்று வகையாகப் பார்க்க முடிகின்றது. 
1) தப்பிக்கும் தந்திரம்
2) குற்றஞ்சுமத்துதல் 
3) எதிர்காலம் குறித்த அச்சம்

இலங்கை முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதத்திற்கு எதிராக அழத் தொடங்கியிருக்கி(றோம்)றார்கள். இது தப்பித்தல், அச்சம் சார்ந்தது.

குண்டு வைத்தவர்கள் தீவிரவாதிகள், கொல்லப்படவேண்டியவர்கள், அவர்கள் முஸ்லிம்கள் அல்ல, இஸ்லாம் தீவிரவாத மார்க்கமல்ல என்பதெல்லாம் தப்பித்தல் மற்றும் குற்றச் சுமத்தல் உளவியல் சார்ந்தவை.

தீவிரவாதிகளுக்கு மதமில்லை. அவர்கள் யாராக இருந்தாலும் கொல்லப்படவேண்டும் என்று தப்பிக்க முற்படும் பச்சோந்திகளாக முஸ்லிம்கள் மாறவேண்டியது காலத்தின் தேவையாகியிருக்கிறது.

தீவிரவாதக் கருத்துக்களுக்கு எதிராக கடந்த காலங்களில் எதிர்வினையாற்றி இருக்கிறோமா என்று நீங்கள் ஒவ்வொருவரும் உங்களைக் கேளுங்கள். மௌனமாக இருந்தவர்கள்கூட தீவிரவாதத்தை ஆதரித்தவர்கள் என்பேன். சமூக ஊடகங்களில் வெளியான மத தீவிரவாத கருத்துக்களை நமக்கென்ன என்றும், யாரோ ஒருவன் உளருகிறான் என்றும் பொறுப்பற்று இருந்த நீங்கள் இப்போது நல்லிணக்கம் பேசுகிறீர்கள். தீவிரவாதிகளைக் கொல்லவேண்டும் என்கிறீர்கள். முளையிலேயே கிள்ளி எறியவேண்டியதை, அதற்கான வாய்ப்புகள் இருந்தும் நீங்கள் செய்ய முன்வரவில்லை. கழுத்திற்கு கத்தி வந்துவிட்ட பிற்பாடே தீவிரவாதம் ஒழிக்கப்படவேண்டும் வன்முறைகளுக்கு மார்க்கத்தில் இடமில்லை என்று கத்துகிறீர்கள். தேவைக்கு அதிகமாக சிந்தனைப் பள்ளிகள் வந்தபோது, அபாயா, முகமூடிகள் வந்தபோது அதனைக் கலாசார மாற்றம் என்பதாக அங்கீகரித்தவர்கள், அவற்றை எல்லாம் நம் கைகளில் கொணர்ந்து சேர்த்த அதே மனிதர்களால் தீனுக்கான போர் நடத்தப்படும்போது தனித்து நிற்கப் பார்ப்பது அறிவு முரணில்லையா? வழக்கம்போல அரசாங்கத்தின் சதி, மேலைத்தேய சதி என்றெல்லாம் புலனாய்வு விசாரணைகளை நமக்கு நாமே செய்து திருப்திப்பட்டுக் கொள்ள விளைவதால் எவ்வளவு தூரம் நம்மை நாம் நியாயப்படுத்திக் கொள்ளமுடியும்? அரசும் மேலைத்தேயமும் இயக்கும் பொம்மைகளாக நம் இளைஞர்களை இழுத்துச் சென்ற காரணிகளைத் தேட ஏன் தயங்குகிறோம்?

இந்தப் பதிவு உங்களில் பலருக்கு உவப்பாக இராதென்று தெரியும். எப்போதும்போல காட்டிக் கொடுப்பவள், கைக்கூலி என்று உங்கள் இயலாமைகளைக் கோபங்களாக கொட்டிவிட்டுக் கடந்துபோவீர்கள் என்பதை அறிந்தே இருக்கிறேன்.

இந்த உண்மைகள் கசப்பானவைதான் மருந்துகள் போல. நோய் தீரவிரும்பினால் நீங்கள் ஒவ்வொருவரும் சிகிச்சையளிப்பட்டே ஆகவேண்டும். உங்கள் நோயைக் கண்டறிந்து குணப்படுத்துங்கள். நோய்க்கூறுகளுக்கு சிகிச்சையளிப்பதும், சுகதேகிபோல நடித்திருப்பதும் உங்கள் தெரிவு.


கடுமையான காய்ச்சல். லேசானதாக இருந்து சிகிச்சையளிக்கப்படாமல் முற்றிவிட்டது. உயிர் போகும் நிலை. வேறு சிலர் இதே வகை காய்ச்சலினாய் இறந்தேவிட்டார்கள். மிச்சமிருப்பவர்களில் காய்ச்சலில் பாதிக்கப்பட்டவர்களும் உள்ளார்கள், படாதவர்களும் உள்ளார்கள். இரு வகையினரும் ஒன்றுபட்டு சிகிச்சையளித்துக் காப்பாற்ற நினைத்து முன்வந்து செயற்படுகிறார்கள்.

அப்போது ஒரு கோஷ்டி வருகிறது. இந்தக் காய்ச்சல் வெளிநாட்டு மருத்துவர்களும் முதலாளிகளும் சேர்ந்து பரப்பியது. திட்டமிட்ட சதி. வளர்ந்துவரும் நாடுகளில் அப்பாவி மக்களைக் குறிவைத்தே இந்த வகை காய்ச்சல் பரப்பபட்டுள்ளது என்கிறார்கள்.

மெய்தான் என்று காய்ச்சல் பீடித்தவர்களும், சிகிச்சை அளிக்க முனைவோரும் உடன்படுகிறார்கள்.

இதோடு சுபம் என்று முடித்துக் கொண்டு நடையைக்கட்டுங்கள். சிகிச்சையோ, பாதுகாப்பு நடவடிக்கையோ எல்லாம் தேவையில்லை; அது உள்ளூர் மருத்துவர்களின் வியாபாரத்திற்கு நாம் உதவுவதாகும் என்கிறது கோஷ்டி.

காய்ச்சல் என்னவென்று கண்டறிந்துவிட்டதோடு, அதன் வரலாற்றை அறிந்து கொண்டதோடு இருந்துவிட்டால் காய்ச்சல் தீருமா? காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருந்து கொடுக்கிறோம் என்று வரலாற்றுப் பாடம் நடத்துவதால் நோய் குணமாகுமா?


இலங்கை குண்டுவெடிப்புகள் தொடர்பான எனது கருத்துக்கள் பார்ப்பனிய அரசியலை ஒத்தது; காலச்சுவடு அரசியலை ஒத்தது என்பதாக சாம்பிராணி எனத் தன்னைத் தானே அழைத்துக் கொள்ளும் ஜமாலன் தமிழ் கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

எனது கருத்துக்களைத் தெளிவாக எனது அனுபவங்களோடு, வெளிப்படுத்த, ஆய்வுக்குட்படுத்த, கேள்விக்குட்படுத்த நானொரு காலச்சுவடு தயாரிப்பாக இருக்கவேண்டியதில்லை. வெளிநாட்டில் இருந்து கொண்டோ, ஆண்களின் நிழலில் தஞ்சமடைந்து கொண்டோ எனது கருத்துக்களை நான் முன்வைக்கவுவில்லை. அவை முற்றிலுமாக, ஒரு முஸ்லிமாக, முஸ்லிம் பெண்ணாக, இன்னும் அதே சமூகத்தினுள் வாழுகிறவளாக, சம்பவங்கள் நடந்த இடத்திற்கு அருகிலாக இருந்து கொண்டு உண்மையாக மனத்திலிருந்தே வருகின்றன.

எங்கு அடிபட்டாலும் காலை உயர்த்தும் நாய்களைப்போல பார்ப்பனிய அரசியலை தூக்கிப் பிடித்துத் திரியும் ஜமாலனும் ( Jamalan Tamil ) அவரைப்போன்றோரும் எனது கருத்துக்களில் பிழை கண்டால் அதனை நிரூபியுங்கள். விவாதிக்கவோ உரையாடவோ முயலுங்கள். அதைவிட்டு உங்கள் நாட்பட்ட காயத்திற்கு என்னைக் கொண்டு நிவாரணம் தேட முயலவேண்டாம்.

காலச்சுவடுவில் நூல்களைப் பதிப்பித்ததற்காக அதன் அரசியல் நிலைப்பாடுகளுக்கு நானோ, எனது அரசியல் நிலைப்பாடுகளுக்கு அவர்களோ பொறுப்பில்லை. அப்படியொரு சாயமடித்து எனது குரலுக்கு அதிகார முகம் தந்து ஒதுக்க முயற்சிப்பது, Jamalan Tamil இனதும் அவரது சாகாக்களினதும் நோய் முற்றிய நிலையையே காட்டுகிறது. உங்களது முற்றிப் போன வியாதிக்கு மருந்து தடவ இது நேரமில்லை என்று சில இடங்களில. மௌனமாக கடந்துவந்தேன். உங்கள் மனத்தில் உள்ள குற்றச்சாட்டுக்களுக்கு நானோ எனது நிலைப்பாடுகளோ எந்த வகையிலும் ஒத்தவை அல்ல என்று உங்களுக்கு நிரூபிக்கவேண்டிய அவசியம் எனக்கில்லை; என்றாலும் உங்கள் கர்ப்பத்தை என்னைக் கொண்டு பிரசவிக்க முற்படும் உங்கள் கெட்ட நோக்கத்தை வெளிச்சமிட்டுக் காட்ட எண்ணியே இதனை எழுதுகிறேன். பார்ப்பனிய அரசியலை எங்கே எதற்காக விற்றால் விலையாகும் என்று உங்களைப்போன்ற சாம்பிராணிகளுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. அதனால்தான் “இந்த சந்தர்ப்பம்” இதனைப் பேச உங்களுக்கு முக்கியமாகிறது.

இஸ்லாமிய அடிப்படைவாதத்தை யாரும் சொல்லித் தந்து கேள்வி எழுப்பும் அவசியம் எனக்கில்லை. அதனை மற்றவர்களுடன் பேசித் தெரிந்து கொள்கிறளவு நான் இலங்கையின் தெற்கில் பிறந்தவளோ மேற்குலகில் வாழ்கிறவளோ இல்லை. எனது கழுத்துக்கு அருகாக உள்ள கத்தியின் கூர்மையை என் கண்களுக்குத் தெரிகிறபடி பேச யாரும் எனக்குச் சொல்லித்தர வேண்டாம். அதோடு, நான் யாருக்கும் விலைபோகும் அரசியல் கொள்கைகள் உடையவளில்லை. எந்தவொரு அதிகார தளங்களும் என்னைப் பயன்படுத்த அனுமதிக்கிறவளும் இல்லை. காலச்சுவடு என்னை எந்த வகையிலும் பயன்படுத்த முற்பட்டதுமில்லை. எனது புத்தகங்களைப் பதிப்பிப்பதை மட்டுமே அது இதுவரை செய்துள்ளது. ஜமாலன் தமிழ் ஒரு பதிப்பகம் தொடங்கினால், ராயல்டியை முறையாக கணக்குப் பார்த்து செலுத்துவதாகப் பொருந்தினால் எனது புத்தகமொன்றை எதிர்காலத்தில் அதனூடு பதிப்பிப்பேன்.


Series Navigationமூன்றாம் உலகப் போர்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *