சொல்லும் செயலும்

This entry is part 1 of 11 in the series 8 செப்டம்பர் 2019

லதா ராமகிருஷ்ணன்

”எங்கள் அலுவலகத்திற்கு ஓர் எழுத்தாளர் (பெண்) வந்திருந்தார். அவர் எங்களை யெல்லாம் பார்த்து எளிமையாக இருக்கச் சொன்னார். ஆனால் அவர் கெட்டிச் சரிகை பட்டுப்புடவையணிந்து தங்க நகை களோடு வந்திருந்தார்” என்று அம்மா வேலையிலி ருந்த சமயம் ஒருமுறை கூறினார்.

“எழுந்து நின்று கேட்கவேண்டியதுதானே” என்றேன்.

’ஏதோ, எங்கள் அழைப்பின் பேரில் விருந்தினராக வந்தவராயிற்றே என்று என்னைப்போல் சிலர் வாளா விருந்தார்கள். நிறைய பேர் அவரை வாயைப்பிளந்து பார்த்துக்கொண் டிருந்தார்கள். ஆனால், எளிமையாயிருப்பவர்கள் எளிமையைப் பற்றிப் பேசினால்தான் யாரிடமும் எடுபடும்’, என்றார் அம்மா.

அது உண்மைதான். நம் சொல்லுக்கும் செயலுக்கும் முரண்பாடு இல்லாமல் இயங்கு கிறோமா என்று நமக்குத் தெரியாத பலர் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள்.

பெரிய பதவி, பொறுப்பிலிருப்பவர்கள், படைப்பா ளிகள் பொதுவெளியில் தங்களை Present செய்யும் விதம் – நடை உடை பாவனைகளில் – பார்ப்பவர்கள் மனங்களில் கண்டிப்பாகத் தாக்கத்தை ஏற்படுத்தும். நான் இயல்பாகத்தான் நடந்துகொள்வேன் – எனக்கு நடிக்கத்தெரியாது என்று சொல்பவர்களைப் பார்த்து அப்படியென்றால் உங்கள் இயல்பே இத்தனை ஒவ்வாததுதானா என்ற கேள்வியெழவும் வழியுண்டு.

முன்பெல்லாம் நம் முன்னாள் பாரதப் பிரதமர் இந்திரா காந்திக்கு நான்கே நான்கு பருத்திப்புடவைகள்தான் உண்டு என்றே நான் நம்பியிருந்தேன்.

பருத்திப்புடவைகள் தான் இருப்பதிலேயே அதிக விலை என்று பின்னாளில் தான் தெரிந்துகொண் டேன்.

மக்களை சந்திக்கப் போகும்போதெல்லாம் அவர் அந்த எளிய உடையைத் தான் உடுத்தியிருப்பார். மக்களோடு ஒருவராக இருப்பதாகக் காட்டிக்கொள் ளும் பாசாங்கு என்று இதை நாம் புறமொதுக்கி விட முடியாது.

எளிய மக்களிடம் செல்லும்போது இப்படி ஏகத்துக்கு ஒப்பனை செய்துகொண்டு செல்பவர்கள் அந்த மக்களால் பிரமிப்போடு பார்க்கப்பட்டாலும்கூட ஏதோவொரு விதத்தில் அவர்களிடமிருந்து அந்நியப்பட்டுப் போகிறார்கள்.

ஆனால், இப்பொழுது, நன்கு படித்த, பெண்ணியம் பேசும் பெண்கள் கூட பொது மேடைகளில் எக்கச் சக்கமாய் அலங்காரம் செய்துகொண்டு வருகி றார்கள். ’பெண் என்ன போகப்பொருளா?’ என்று மேடைக்கு மேடை கேட்டுக்கொண்டே தங்கள் முகநூல் பக்கங்களில் விதவிதமாய் ‘போஸ்’ கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இது தேவையா?

அவர்கள் ஆபாசமாக ‘போஸ்’ கொடுக்கிறார்கள் என்று சொல்லவில்லை நான். தங்கள் புகைப்படங் களை விதவிதமாய் பதிவேற்றிக்கொண்டு ‘எத்தனை அழகு தோழி நீங்கள்!’, ‘என் கண்ணே பட்டுவிடும் சகி’ என்றெல்லாம் கமெண்ட்டுகள் வருவதை ஊக்குவிப்பதன் மூலம் அவர்களே தங்களை ஒருவிதத்தில் அலங்காரப்பொருளாகத் தானே காட்டிக்கொள்கிறார்கள் என்று எண்ணத் தோன்று கிறது.

அதேபோல்தான், முன்பெல்லாம் மாற்றுக்கருத்தைச் சொல்வதிலும் ஒரு கண்ணியம் இருந்தது. குறிப்பாக, அரசியல்வாதிகள், படிப்பாளிகள், சமூக சிந்தனை யாளர்கள், பெண்ணியவாதிகள் போன்ற, பொதுவெளியில் இயங்கும் பிரிவினரிடம். ஆனால், இப்போது சமூக சிந்தனையாளர்களாக அறியப்படும் சில படைப்பாளிகளின் பதிவுகளைப் பார்க்கும்போது எத்தனைக்கெத்தனை கொச்சையாக, குதர்க்கமாக, குரூரமாக, பட்டவர்த்தனமாகப் பேசுவதான பெயரில் அசிங்க அசிங்கமாகப் பேசுகிறோமோ அத்தனைக்கத்தனை தமக்கு அறிவுசாலி, சிந்தனையாளர் என்ற பட்டங்கள் கிடைக்கும் என்று அவர்கள் திடமாக நம்புவதாகத் தோன்றுகிறது.

அற்புதமான நாத்திகவாதங்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் வாசித்திருக்கிறேன். ஆனால், இங்கே, கோயிலில் தீபாராதனை காட்டிக்கொண்டு நிற்கும் குருக்கள் படத்தைப் பதிவேற்றி ’அரைநிர்வாணமாக நின்றுகொண்டிருந்தால் பெண்களுக்கு மட்டும் கிளர்ச்சி வராதா’ என்று கேவலம் செய்கிறார் பெண்ணியவாதியாக அறியப்படும் ஒரு படைப்பாளி.

ஒரு குறிப்பிட்ட மதத்தை, ஒரு குறிப்பிட்ட மதத்தின் சில குறிப்பிட்ட பிரிவுகளைப் பற்றி மட்டுமே எத்தனை கொச்சையாகப் பேச முடியுமோ அத்தனை கொச்சையாகப் பேசி தங்களைக் கனிந்த சிந்தனையாளர்களாகக் காட்டிக்கொள்ளப் பிரயத்தனப் படுவோர் இங்கே நிறையவே.

இன்னொரு பெண்ணியப் படைப்பாளி உளவியல் மருத்துவராக இருக்கும் சக பெண்ணை, ‘உளவியல் மருத்துவர் என்பதோடு பெண்ணியவாதியாகவும் சமூக சிந்தனையாளராகவும் அறியப்படுபவரை பீச்சாங்கை வீச்சாகப் புறமொதுக்கி அவர் படத்தைப் பதிவேற்றி ஏசிப் பேசுகிறார். அவர் சொன்ன கருத்து பிடிக்கவில்லை யென்றால் அதை மறுத்துப் பேச இதுவா வழி? எழுத்தாளர்கள் கையாளவேண்டிய மொழியா இது?

Issue-based ஆக நியாயமான கருத்துரைப்பது இப்போது பெரும்பாலும் பிற்போக்குத்தனமாகவே பார்க்கப்படுகிறது எனலாம்.

பொருளாதார நிலையில் நலிந்துள்ள சமூகப் படித்தட்டில் உயர்ந்த நிலையில் இருக்கும் சாதியைச் சேர்ந்தவர்களுக்கு இட ஒதுக்கீடு இருக்கலாகாது என்ற கருத்துடையவர்கள் அந்தக் கருத்தை உரிய தரவுகள், வாதங்களோடு நிறுவலாம். (அவரவர் வாழ்க்கைக்கான அடிப்படை உரிமைகளுக்காகப் போராடும் உரிமை எல்லோருக்குமே உண்டு). ஆனால், ஒரு கட்சியின் ஊடகவியலாளராகப் பணியில் இருக்கும் படைப்பாளி ஒருவர் ‘முந்தைய தலைமுறை எழுத்தாளர் களைப்போல் இந்தத் தலைமுறையில் உயர்சாதி எழுத்தாளர்கள் அதிகமில்லை. எனவே, அவர்கள் இலக்கியத்துறையிலும் இட ஒதுக்கீடு கேட்கலாமே’ என்று அத்தனை எகத்தாளமாக எழுதுகிறார்.

தாங்கள் சார்ந்திருக்கும் கட்சி மட்டுமே இலட்சிய இயக்கம் போலவும் மற்றெல்லாக் கட்சிகளும் ‘மூடர்களின் கூடாரம்’ போலவும் சில இலக்கியவாதிகள் ‘அறச்சீற்றத்தோடு’ பொங்கியெழுவது அபத்தமாக இருக்கிறது.

ஒரு கட்சியின் ஊடகவியலாளராக இருக்கக்கூடிய ஒரு படைப்பாளி தன் முகநூல் ‘டைம் லைன்’ முழுக்க கொச்சையான வார்த்தைப்பிரயோகங்களில் எதிர்க்கட்சியினரை வசைபாடுவதையே முழு மும்முரமாகச் செய்துவருகிறார். எழுத்துச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம் என்ற பெயரில் தற்போதைய நிதியமைச்சரோடு உரையாடிக்கொண்டிருக்கும் மூன்று ஊடகவியலாளர்களை அவர்களுடைய சாதியைக் குறிப்புணர்த்திக் கேவலமாகப் பதிவு செய்து அதைவிடக் கேவலமாக அந்த ஊடகவியலாளர்களைப் பற்றி ‘கமெண்ட்’கள் வர வழிவகுத்துத் தருகிறார். தான் சொன்னால் அது கருத்துச் சுதந்திரம்; தெளிந்த சிந்தனை. ஆனால், மற்றவர்கள் தங்கள் கருத்துரைத்தால் அது ‘சொம்பு தூக்கல்’  முட்டாள் பேச்சு’..

எத்தனைக்கெத்தனை கொச்சையாக ஒரு கருத்தை முன்வைக்கிறோமோ அதுவே புரட்சிகரமான செயல்பாடு என்பதாய் சிலர் வெகு சுலபமாக சேகுவேராவோடு தங்களை சம தட்டில் வைத்துக் காட்டிக்கொள்வது மிகவும் சுலபமான களச்செயல்பாடாக இன்று நடந்தேறிக்கொண்டிருக்கிறது,

எதைப் பற்றியுமே அசட்டையாக, மேம்போக்காகப் பேசுவதும், ஒற்றை வரியில் தீர்ப்பளிப்பதும்தான் இப்போதைய Trend என்பதைப் பார்க்க வருத்தமாயிருக்கிறது.

முன்பு எண்பதுகளில் அலுவலத்தில் வேலைசெய்து கொண்டிருந்த போது அருகிலிருந்த காவல்நிலையத் திலிருந்து ஒரு கான்ஸ்டபிள் சிறுமி ஒருத்தியை இரவு எங்கள் அலுவலகத்திற்கு அழைத்துவந்தார். எங்கள் அலுவலகத்தில் இரவுப்பணியில் பெண்கள் மட்டுமே என்பதாலும் இரவில் காவல்நிலையத்தில் பெண் களை இருக்கச்செய்யலாகாது என்பதாலும் எங்கள் அதிகாரியை அணுகி அந்தப் பெண் வீட்டை விட்டு ஓடிவந்துவிட்டதாகவும், அவளுக்கு குடும்பம் என்று எதுவும் இல்லை என்றும் அவளை ஏதாவது பாது காப்பான இல்லத்தில் சேர்த்துவிடும்படியும் கேட்டுக் கொண்டார். அன்றிரவு அந்தச் சிறுமி எங்கள் அலுவலகத்திலேயே உறங்கினாள்.

மறுநாள் எங்கள் உயர் அதிகாரி என்னைக் கூப்பிட்டு விவரம் சொல்லி அந்தப் பெண்ணை ஏதாவது பாதுகாப்பான சிறுவர் இல்லத்தில் சேர்த்துவிடச் சொன்னார். நான் சமூகப்பணியாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த நண்பர் – எழுத்தாளர் கோபிகிருஷ்ண னிடம் கேட்டு அப்படியொரு இடத்தைத் தெரிந்து கொண்டு அங்கே அந்தப் பெண்ணைக் கூட்டிக் கொண்டுபோய் சேர்த்துவிட்டேன்.

அலுவலகத்தில் மூன்று மணிநேரம் பர்மிஷன் கொடுத்திருந்தார்கள். அன்று நான் வீடு திரும்ப மிகவும் தாமதமாயிற்று. அந்தப் பெண்ணுக்கு நல்லது செய்கிறோமா, கெட்டது செய்கிறோமா என்று நிறைய மன உளைச்சல் வேறு பாரமாக இறங்கியது.

அதற்கு மறுநாள் அந்த அதிகாரி ‘அந்தப் பெண்ணை சேர்த்தாச்சா?” என்று அனைவர் முன்னிலையிலும் கேட்டார். அலுவலக நேரத்திலேயே சிறப்பு அனுமதி தந்து என்னை அனுப்பிவைத்தாரே என்ற நன்றியுணர்வில், என்ன நடந்தது என்று விரிவாகச் சொல்ல ஆரம்பித்தேன். ”ராமாயணமெல்லாம் வேண்டாம். சேர்த்தாச்சு – இல்லை – அதை மட்டும் சொல்லு போதும்” என்று எரிச்சலோடு அதிகாரமாகக் கூறி னார் அதிகாரி. கேட்டுக்கொண்டிருந்த சிலர் இளக்காரமாய் சிரித்தார்கள்.

இப்படித்தான் எந்தவொரு விஷயத்தையும் அகல்விரிவாகப் பார்க்கவோ, பேசவோ நம்மில் பெரும்பா லோர் தயாராக இல்லை.

அவரவர் கருத்துரைக்க உரிமையுண்டு என்று உதட்டளவே கூறுகிறோமே தவிர மாற்றுக்கருத்து டையவர்களை முட்டாள்களாக பாவிப்பதும், பரிகசிப்பதுமே நம்மில் பெரும்பாலோரின் அணுகுமுறையாக இருக்கிறது. இந்தப் போக்கு வருத்தத்திற் குரியது.

சமீபத்தில் புதிய தலைமுறை தொலைக்காட்சிச் சேனலில் ஏதோவொரு விஷயம் குறித்து வாதப்பிரதி வாதங்கள். அதில் பங்கேற்ற இருவர் ‘குருட்டு நம்பிக்கை’, குருட்டுத்தனமான வெற்றி’ என்பதாய் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தது நாராசமாய் ஒலித்தது.

மாற்றுத்திறனாளியை மதிப்பழிக்கும் இத்தகைய வார்த்தைப்பிரயோகங்கள் ஊடகங் களில் பயன்படுத்தப்படுதல் வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டியது.

தொலைக்காட்சி மெகா சீரியல்களில் பெண் குறித்த அத்தனைப் பிற்போக்குக் கருத்துகள், சொல்லாடல்கள் (வாழாவெட்டி, மலடி, பொட்டச்சிறுக்கி, (அநா தைப் பயலே, ’அப்பன் பேரு தெரியாத நாயே’ போன்ற இருபாலருக்கும் பொதுவான, பயன்படுத்த லாகாத இழிவுச்சொற்களும் வெகு சரளமாகப் பயன்படுத்தப் படுகின்றன.) இதைப்பற்றியெல்லாம் நான் மேற் குறிப்பிட்ட ‘அசாதாரண சமூக சிந்தனையாளர் கள்’ அதிகமாகப் பேசுவதில்லை. அப்படியே பேச எடுத்துக்கொண்டாலும் அதில் சில HIDDEN AGENDAக் கள் இருப்பதைக் காணமுடிகிறது.

விஜய் டி.வியில் இசைப்போட்டி நடத்துகிறோம் என்ற பெயரில் கிராமத்துப் பாடகர்களை, ஆங்கிலம் தெரியாதவர்களை ‘நகைச்சுவை’ என்ற பெயரில் மதிப்பழிப்பதும், ஒருவருடைய உருவத்தைக் காட்டி அவரை ‘நகைச்சுவை’ என்ற பெயரில் கேலிசெய்வதும் தொடர்ந்து நடந்தேறிக்கொண்டிருக்கிறது. இப்பொழுதுதான் கிராமப் பஞ்சாயத்துகளில் பெண்கள் பங்கேற்பது ஓரளவாவது நடக்கத் தொடங்கியிருக்கிறது. உடனே, விஜய் டி.வி.யில் கதாநாயகியை ஊர்த்தலைவராகக் காட்டி ‘தமாஷ்’ செய்கிறார்கள்.

மாநிற அல்லது கருப்புநிறப் பெண் கதாநாயகியாக எந்த சீரியலிலும் இடம்பெறுவதில்லை. அப்படியே வந்தாலும் அந்தப் பாத்திரத்தை சோகம் ததும்பும் அவலப் பாத்திரமாக்கிவிடுகிறார்கள். இத்தகைய போக்குகள் சமூகப் பொதுப்புத்தியில், பிஞ்சு மனங்களில் எத்தகைய எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும் என்பது பற்றியெல்லாம் எந்தவிதமான கவலையும் இல்லாமல், ஏதாவது பிரச்னை வருமோ என்பதை மட்டுமே கவனத்தில் கொண்டு முன்கூட்டியே பொறுப்புத்துறப்பு வாசகங்களை ஒளிபரப்பி, இது பொழுதுபோக்கு நிகழ்ச்சி மட்டுமே என்று சொல்லித் தப்பித்துக்கொள்கிறார்கள். பொழுதுபோக்கு என்ற பெயரில் எந்த அபத்தத்தையும் அராஜகத்தையும் காண்பித்துக்கொண்டே யிருக்கலாமா?

எல்லாவற்றுக்கும் ஒற்றைக்காரணியையே திரும்பத்திரும்ப முன்னிறுத்துவதும், அப்பட்டமான சுயலாபங் கருதி ஒருவர் மொழியும் சொல்லுக்கும், செய்யும் செயலுக்கும் அவரைப் பொறுப்பேற்கச் செய்யாமல் அவரையும் ‘victim’ ஆகக் காட்டும் போக்கும் எந்தவொரு சமூகப் பிரச்சினைக்கும் தீர்வாக அமையாது.

ஏற்கனவே குறிப்பிட்டதுபோல், நம் சொல்லுக்கும் செயலுக்கும் முரண்பாடு இல்லாமல் இயங்குகிறோமா என்று நமக்குத் தெரியாத பலர் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற பிரக்ஞை நமக்கு இருக்கவேண்டியது அவசியம்.

அதைவிட முக்கியம், இந்த விஷயத்தில் நம்மை நாமும் அப்படி சுய அலசலுக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டிய தேவையிருக்கிறது என்ற புரிதல்.

Series Navigationமுடிச்சுகள்
author

லதா ராமகிருஷ்ணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *