5. பாசறைப் பத்து

This entry is part 1 of 9 in the series 27 அக்டோபர் 2019

                            

போருக்காகச் சென்றிருக்கும் அரசரும், படைத்தலைவர்களும் தங்கியிருக்கும் இடமே பாசறையாகும். அங்கே போர் குறித்த திட்டங்கள் தீட்டப்படும். போருக்கான பயிற்சிகளும் அளிக்கப்படும். அங்கே இருப்பவர்கள் போரில் புறங்கொடாமல் வீழ்ந்தாலும் புகழை விரும்புவோரே ஆவார். இப்பத்துப் பாடல்களும் பாசறையில் நிகழ்வும் நிகழ்ச்சிகளைக் காட்டுவதால் இப்பெயர் பெற்றது.

=====================================================================================1. ஐயஆயின, செய்யோள் கிளவி;

கார்நாள் உருமொடு கைஅயறப் பிரிந்தென,

நோய்நன்கு செய்த எமக்கே;

யாம் உறு துயரம் அவள் அறியினோ நன்றே.

      [ஐ=அழகு; செய்யோள்;செம்மையானவள்; கிளவி=தூதிடம் சொல்லி விட்ட சொற்கள்; உரும்=இடி; கையற=செயலற]

      அவன் அரசனோட படையிலே சேந்து போருக்குப் போனான். போர் முடியாததால சொன்னபடிக்குக் கார்காலத்துல அவகிட்டத் திரும்ப முடியல; அவன் பாசறையிலே தங்கிட்டான். அவளோ அங்க வாடறா. தன் நெலமயைச் சொல்லித் தூது அனுப்பறா. அந்தத் தூதருங்ககிட்ட அவன் சொல்ற பாட்டு இது.

      ”இந்தக் கார்காலத்துல பெரிய சத்தத்தோட இடிக்கற இடியோட பெரிசா மழையும் பெய்யுது. அவளத் தனியா உட்டுட்டு நானும் பிரிஞ்சு வந்துட்டேன். ரொம்பவும் நல்ல குடும்பத்துப் பொண்ணான அவ ஒங்ககிட்ட அவளோட வருத்தத்தை எனக்குச் சொல்லும்படியா நல்லாத்தான் சொல்லி அனுப்பி இருக்கா. ஆனா அதைக் கேட்ட எனக்கு இப்ப பிரிஞ்சிருக்கற துன்பம் பெரிசா ஆயிடுச்சு. நானும் அவளப் போலவே துன்பத்திலதான் இருக்கேன்னு அவளுக்குத் தெரிஞ்சா நல்லது. நீங்க அவகிட்டப் போயி இதைச் சொல்லுங்க”

=====================================================================================2. பெருஞ்சின வேந்தன் அருந்தொழில் தணியின்,

விருந்துநனி பெறுதலும் உரியள் மாதோ!

இருண்டுதோன்று விசும்பின் உயர்நிலை உலகத்து

அருந்ததி அனைய கற்பின்,

குரும்பை மணிப்பூண் புதல்வன் தாயே.

      [சினம்=கோபம்; அருந்தொழில்=போர்த்தொழில்; தணியின்=முடிந்தால்; விருந்து=கூடலின்பம்; மாதோ=சுவைநிலை; உயர்நிலை உலகம்=உம்பர் உலகம்; குரும்பை=தென்னம் பிஞ்சு]

      அவன் அவள உட்டுப் பிரிஞ்சு வந்து பாசறையிலிருக்கான். அவ இருக்கற எடம் ரொம்ப தூரத்துல இருக்கு. கார்காலம் வந்திடுச்சு. அப்ப அவன் தனக்கே சொல்லிக்கற பாட்டு இது.

      ”இந்தக் கார்காலத்துல வானம் ரொம்ப இருட்டா இருக்கு; உயரமான எடத்துல இருக்கற தேவர் ஒலகத்துல வசிக்கற அருந்ததி போலக் கற்பு கொண்டவ அவ. தென்னம்பிஞ்சு போல இருக்கறக் கிண்கிணியைப் போட்டிருக்கற என் புள்ளயோட அம்மா அவ. இங்க அரசனோட போர் முடிஞ்சு வெற்றி கெடச்சு அவன் கோபமும் தணிஞ்சா அவளுக்குக் கூடல் இன்பம் கிடைக்கும்.

=====================================================================================3. நனிசேய்த்து என்னாது, நல்தேர் ஏறிச்சென்று,

இலங்கு நிலவின் இளம்பிறை போலக்

காண்குவெம் தில்லஅவள் கவின்பெறு சுடர்நுதல்

விண்உயர் அரண்பல வௌவிய

மண்ணுறு முரசின் வேந்துதொழில் விடினே.

      [சேய்த்து=தொலைவில் உள்ளது; நனி=மிகுதி; என்னாது=என்று கருதாது; காண்குவெம்=காண்போம்; கவின்=அழகு; சுடர்நுதல்=ஒளிபொருந்திய நெற்றி; இலங்கு=ஒளி பொருந்திய;வௌவிய=கவர்ந்து கொண்ட; மண்ணுறு=மாட்சிமை கொண்ட; வேந்து தொழில்=போர்; தில்ல=அசைநிலை]

      போன பாட்டு மாதிரிதான் இதுவும் அவன் சொல்லிக்கிறது.

“பகையரசருங்களோட ஒசரமான மதில் எல்லாம் கடந்து போயி அவங்களோட வெற்றி மொரசு எல்லாத்தயும் எடுத்துக்கிட்டு வந்தவன்தான் எங்க அரசன். அவன் இந்தப் போரைக் கைவிட்டுட்டா எங்க ஊரு ரொம்பத் தூரத்துல இருக்கறதுன்னு நெனக்காம நான் நல்ல தேருல ஏறிக்கிட்டுய்ப் போயி அவளோட ஒளி வீசற  நெலவோட இளைம்பிறைபோல இருக்கற நெத்தியைப் பாப்பேனே”

=====================================================================================4, பெருந்தோள் மடவரல் காண்குவெம் தில்ல;

நீள்மதில் அரணம் பாய்ந்தெனத் தொடிபிளந்து

வைந்நுதி மழுகிய தடங்கோட்டு யானை,

வென்வேல், வேந்தன் பகைதணிந்து,

இன்னும் தன்நாட்டு முன்னுதல் பெறினே.

      [பெருந்தோள்=பெருத்ததோள்கள்;மடவரல்=தலைவி; நீண்மதில்=நீண்ட கோட்டைச் சுவர்; அரணம்=கோட்டை;  காண்குவெம்=காண்போம்; தொடி=யானைத் தந்தத்தில் அணிந்துள்ள கிம்புரி என்னும் வளையம்; வை=கூர்மை; நுதி=முனை; மழுகிய=மழுங்கிய; தடம்=பெரிய  வெற்றி பொருந்திய வெள்வேல்; முன்னுதல்=செல்ல நினைவு கொள்ளல்]  

      போன பாட்டு மாதிரிதான் இதுவும். அவன் தனக்குள்ளயே சொல்லிக்கறது.

      ”எதிரியோட ஒசரமான மதில் அரண்களையெல்லாம் தாக்கினாதால கொம்பில இருந்த கிம்புரியெல்லாம் ஒடைஞ்சு போக கூர்மையெல்லாம் மழுங்கிப் போன தந்தங்கள வச்சிருக்கற யானைகளைப் படையா கொண்டவரு நம்ம அரசரு. அவரு கோபம் கொறைஞ்சு நம்ம நாட்டுக்குப் போகறத நெனச்சா நானும் பருத்த தோள்களை வச்சிருக்கற அவளப் போயிப் பாப்பேன்.

===================================================================================== 

5. புகழ்சால் சிறப்பின் காதலி புலம்பத்

துறந்துவந் தனையே; அருந்தொழில் கட்டூர்,

நல்ஏறு தழீஇ நாகுபெயர் காலை

உள்ளுதொறும் கலிழும் நெஞ்சம்!

வல்லே எம்மையும் வரஇழைத் தனையே!

      [புலம்ப=வருந்த; துறந்து=பிரிந்து; அருந்தொழில்=போர், கட்டூர்=பாசறை; தழீஇ=தழுவி; நாகு=இளமையான பசு; ஏறு=காளை; கலிழும்=கலங்கும்; உள்ளுதொறும்=நினைக்கும் தோறும்; இழைத்தனி=செய்தனை]

      அவன்  இப்போ பாசறையிலத் தங்கியிருக்கான். கார் காலம் வந்திடுச்சு. இப்ப அவனுக்கு அவநெனப்பு வந்து துன்பப்படுத்துது. அப்ப அவன் தனக்குள்ளயே சொல்லிக்கற பாட்டு இது.

      ”நல்ல பலமான காவல்லாம் இருக்கற இந்தப் பாசறையிலப் பசுக்கள் எல்லாம் காளைகளைத் தழுவிக்கிட்டுப் போகும்போதெல்லாம் நெனச்சுத் தவிக்கிற மனசே! ரொம்ப நல்லவளான அவள பொலம்பித் தவிக்க வச்சுட்டு நீ பிரிஞ்சு வந்துட்ட. இப்ப என்னையும் வேகமா போருக்கு வரச் செஞ்சுட்ட. ஆனா இப்ப ஏன் வருந்தறையோ?”

=====================================================================================6. முல்லை நாறுங் கூந்தல் கமழ்கொள

நல்ல கண்குவம் மாஅ யோயே!

பாசறை அருந்தொழில் உதவிநம்

காதல் நல்நாட்டுப் போதரும் பொழுதே.

      [நாறும்=மணக்கும்; மாஅயோய்=மாமை நிறத்தவள்;அருந்தொழில்=போர்; போதரும்=போகும்]

      அவன் தனியாப் பாசறையில இருக்கான். அவ அங்க தன்னை எதிர்பாத்து ஏமாத்தம் அடைஞ்சு துடிப்பாளேன்னு நெனக்கறான். அப்ப அவன் கண்முன்ன அவளே சோகத்தோட நிக்கறமாதிரி தெரியுது. அவளத் தேத்தற மாதிரி சொல்றான்.

      ”மாயமா வந்து நின்னுக்கிட்டு என்னை வருத்தறவளே! இந்தப் பாசறையில இருந்து போருக்கான எல்லா ஒதவிகளும் செஞ்சு முடிச்சுட்டு, நம்ம காதலுக்கான நாட்டுக்கு வரும்போது ஒன்னோட முல்லப் பூ வாசனை வீசற கூந்தல்ல இன்னும் புது வாசனை வர்ற மாதிரி நான் செய்வேன்.”

=====================================================================================7. பிணிவீடு பெறுக, மன்னவன் தொழிலே!

பனிவளர் தளவின் சிரல்வாய்ச் செம்முகை,

ஆடு சிறைவண்டு அவிழ்ப்ப,

பாடல் சான்ற; காண்குவம், வாள்நுதலே!

      [பிணித்தல்=கட்டுதல்; பனிவளர் தளவு=பனிக்காலத்தில் பூக்கும் செம்முல்லை; சிரல்=சிச்சிலிப்பறவை; ஆடு சிறை=அசைகின்ற சிறகுகள்]

அவனோட அரசருக்கு ஒதவப் போனவன் அங்க மத்த வீர்ருங்களோடப் பாசறையிலத் தங்கியிருக்கான். அப்ப பிரிஞ்சிருக்கற அவளப் பத்திய நெனப்பு வருது. அப்ப அவன் நெஞ்சினுக்குச் சொல்ற பாட்டு இது.

“பனியில வளர்ற செம்முல்லையோட அரும்புகள் எல்லாம் சிச்சிலிப் பறவையோட வாயைப் போல செவந்து இருக்கு. அதுங்கள வண்டுக வந்து மொய்க்கறதால கட்டவிழ்ந்து விடுதலை அடைஞ்சுப் பூக்குதுங்க. நானும் அழகான நெத்தி இருக்கறவளப் போயிப் பார்ப்பேன்.”

=====================================================================================8. தழங்குரல் முரசம் காலை இயம்பக்

கடுஞ்சின வேந்தன் தொழில்எதிர்ந் தனனே;

மெல்அவல் மருங்கின் முல்லை பூப்பப்

பொங்குபெயல் கனைதுளி கார்எதிர்ந் தன்றே;

அஞ்சில் ஓதியை உள்ளுதொறும்,

துஞ்சாது அலமரல் நாம்எதிர்ந் தனமே.

      [தழங்கு குரல்=ஒலிக்கின்ற ஓசைவகை; இயம்ப=ஒலிக்க; அவல்=பள்ளம்; மருங்கு=பக்கம்; அலமரல்=மனம் வருந்தல்; ஓதி=கூந்தல்; எதிர்ந்தனன்=கடமையை மேற்கொள்ளுதல்; உள்ளுதொறும்=நினைக்கும் தோறும்]

      அரசனோட சேந்து போருக்கு வந்த அவன் பாசறையில இருக்கான். கார்காலத்துலயுய்ம் திரும்பிப் போக முடியல். அவன் மனசு அவள நெனச்சு ரொம்ப வாடுது. அப்ப அவன் மனசுக்குச் சொல்ற பாட்டு து.

      ”காலத்தைக் காட்டற மொரசெல்லாம் பெரிசா ஒலிக்க ஆரம்பிச்சிடுச்சுங்க. போருக்காக வந்திருக்கற அரசனும் அதுக்கான ஏற்பாடெல்லாம் செய்ய ஆரம்பிச்சுட்டான். மெலிசான பள்ளத்துல இருக்கற முல்லைக் கொடி பூக்கறதுக்காக பெரிய மழையும் பெய்ய ஆரம்பிக்குது. இந்த வேளையில நான் என் அழகான கூந்தல் இருக்கற அவள நெனச்சு தூங்காம இரவைக் கழிச்சுக்கிட்டுருக்கேன்”

=====================================================================================9. முரம்புகண் உடையத் திரியும் திகிரியொடு

பணைநிலை முணைஇய வயமாப் புணர்ந்து

தின்னிதின் மாண்டன்று தேரே;

ஒண்ணுதல் காண்குவெம், வேந்துவினை விடினே.

      [முரம்பு=கற்கள் உடைய மேட்டு நிலம்; திரியும்=சுழன்றுகொண்டே செல்லும்; திகிரி=தேரின் உருள்; பணை=குதிரைப் பந்தி; புணர்ந்து=பூட்டிய; காண்குவெம்=காண்போம்; திகிரி=தேர்க்கால்]

      அவன் அரசனோட போருக்கு வந்து பாசறையிலத் தங்கியிருக்கான்.  எதிரி அரசன் சமாதானத்துக்காகத் தூது அனுப்பறான். இவனும் ஒத்துக்கறான். அதால வந்திருக்கறவனும் தன்னோட ஊருகுத் திரும்ப தேரெல்லாம் தயார் செய்யறான். ஆனா அதுக்குள்ள அரசன் மனம் மாறிடறான். போரையே செஞ்சிடலாம்னு முடிவெடுக்கறான். அதால அவனும் பயணத்தைக் கைவிட்டுட்டு தனக்குள்ளயே வருத்தமாச் சொல்லிக்கற பாட்டு இது.

      ”நெறயக் கல்லெல்லாம் இருக்கற மேட்டு நெலம் ஒடைஞ்சு போற மாதிரி  உருளைங்க இருக்கற தேரிலக் குதிரையெல்லாம் பூட்டித் தயராக இருக்குது. நம்ம அரசன் இப்ப போர் வேணாம்னு எதிரி கொண்டுவந்து தர்ற திரையை வாங்கிக்கிட்டு சமாதானத்துக்கு ஒத்துக்கிட்டு போர் வேண்டாம்னு முடிவு செஞ்சா அழகான நெத்தி இருக்கற அவளச் சீக்கிரமா போயிப் பாப்பேன்”

====================================================================================

10.  முரசுமாறு இரட்டும் அருந்தொழில் பகைதணிந்து

நாடுமுன் னியரோ, பீடுக்கெழு வேந்தன்;

வெய்ய உயிர்க்குநோய் தணியச்

செய்யோள் இளமுலைப் படீஇயர் என் கண்ணே!

[இரட்டும்=ஒலிக்கும்; முன்னியரோ=கருதுவோர்; பீடு=பெருமை; கெழு=மிக்க; வெய்ய=வெப்பம் மிகுந்த; படீ இயர்=தாங்குதல்]

அவன் பாசறையில இருந்துக்கிட்டுத் தன் மனசுக்குச் சொல்றது.

      ”போர் மொரசெல்லாம் மாறிமாறி ஒலிக்குது. பெருமையா இருக்கற நம்ம அரசன் போரை விட்டுட்டு நம்ம நாட்டுக்குத் திரும்பினா நான் என்னோட வெப்பமான பெருமூச்சு தணிஞ்சு போறமாதிரி அவளோட மாரில சாய்ஞ்சுக்கிட்டுத் தூங்குவேன்.

=========================================================================================================================================================================

Series Navigationநாளைய தீபாவளி
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *