கேட்காமலே சொல் பூத்தது : முகக்கவசம்

author
0 minutes, 32 seconds Read
This entry is part 8 of 22 in the series 19 ஏப்ரல் 2020

கோ. மன்றவாணன்

      கொரோனா என்ற தீநுண்மியின் பரவலால் சாவு அச்சத்தில் உலகமே உறைந்து கிடக்கிறது. இதற்கு முன்தடுப்பு மருந்து இல்லை. இந்நோய் தொற்றிய பின்னும் அதிலிருந்து மீளவும் மருந்து இல்லை. இந்நிலையில் இந்தத் தீநுண்மி தொற்றாமல் இருப்பதற்கான வழிமுறைகளைப் பின்பற்றுவதே தற்போதைய அறிவார்ந்த ஏற்பாடு. அதற்காக விழித்திரு விலகிஇரு வீட்டிலிரு என்று தமிழ்நாடு அரசு வேண்டுகோள் விட்டிருக்கிறது. தனிமனித இடைவெளியும் கைகழுவுதல் உள்ளிட்ட தூய்மை ஒழுக்கங்களைப் பேணவும் சொல்கிறார்கள். இன்றியமையாத காரணங்களுக்காக வெளியில் வரும்போது Face Mask ஐ கட்டாயமாகப் பயன்படுத்தச் சொல்கிறார்கள். தற்போது வீட்டில் இருக்கும்போதும்கூட அதனைப் பொருத்திக்கொள்ளச் சொல்கிறார்கள்.

      இந்த Face Mask என்ற சொல்லுக்கு முகக்கவசம் என்ற சொல்லை ஊடகங்கள் பயன்படுத்துகின்றன. இதனால் பட்டிதொட்டி எங்கும் இந்த முகக்கவசம் என்ற சொல் பரவி உள்ளது. இந்தச் சொல்மீது சிலருக்கு ஏன் ஒவ்வாமை ஏற்பட்டது என்று தெரியவில்லை. முகநூல் பக்கங்களிலும் வினவி (Whatsapp) பதிவுகளிலும் Face Mask என்ற பிறமொழி சொல்லுக்குத் தமிழ்ச்சொல் கண்டுபிடிக்கப் பலரும் முயன்று வருகின்றனர் என்பதை வளவ. துரையன் அய்யா அவர்கள் வழியாக அறிந்தேன். அவற்றுள் முகக்கவசம் என்ற சொல்லையும் தாண்டி அழகான செறிவான சொல்கிடைத்தால் நம் தமிழுக்கு நல்வரவுதானே.

       முகமூடி, முகத்திரை, முகக்கவசம், முகவணி, முகமி ஆகிய சொற்களைப் பேராசிரியர் வ. ஜெயதேவன் பரிந்துரைத்து இருக்கிறார்..

       முகக்காப்பு, முகமறைப்பு, முகவட்டு, முகவுறை, முகழி, மூக்குமூடி, சுவாசக் கவசம், சுவாசக் காப்பு, எச்சில் சளிக்கவசம், எச்சில் சளித் தொற்றுக் காப்பான்,  ஆகிய  சொற்களையும் பலர் தெரிவித்துள்ளனர். மேலும் பல அருமையான சொற்களைப் பலர் உருவாக்கி முகநூலில் வலம் வந்துகொண்டு இருக்கலாம்.    

      பேராசிரியர் மதிவாணன் பாலசுந்தரம் அவர்கள் மேற்கண்ட சொற்களைப் பார்க்கையில் அவருக்குப் பதிற்றுப்பத்து என்ற சங்க இலக்கிய நூலில் இடம்பெற்ற மெய்ம்மறை என்ற சொல் நினைவுக்கு வந்துள்ளது. அச்சொல் போர்புரியும்போது மெய்யை மறைத்துப் பாதுகாக்கும் கவசத்தைக் குறிக்கிறது. அச்சொல்லில் இருந்து முகமறை என்ற சொல் Face Mask என்பதற்குப் பொருத்தமாக உள்ளது என்று தெரிவித்திருக்கிறார். இச்சொல்லுக்குத் தமிழ்அறிஞர்கள் தமிழ்ஆர்வலர்கள் இடையே வரவேற்பு கிடைத்திருக்கிறது.

      புதுச்சொல் ஆக்கங்களில் பலரையும் ஈடுபடுத்தி வருகிற சங்கரன்கோவில் அருணகிரி என்பவர் வாய்மூக்கு மூடி என்று பாமர மக்களுக்குப் புரியும்படி சொல் ஆக்கியுள்ளார். சுவாசக் கவசம், சுவாசக் காப்பு எனப் பலர் தெரிவித்துள்ள நிலையில் மூச்சுக் காப்பு என்ற மிகுபொருத்தமான சொல்லை இலக்குவனார் திருவள்ளுவன் அவர்கள் பரிந்துரைத்துள்ளார்.

      தற்காலத்தில் புதுச்சொல் கண்டறிவதில் மக்கள் ஈடுபாடு உள்ளது என்பது தமிழின் வளர்ச்சிக்கு உகந்த நற்போக்குதான். மக்களில் ஒருவனாக நானும் Face Mask என்பதற்கு வேறு ஏதேனும் சொற்கள் கிடைக்குமா என்று சிந்தித்துப் பார்த்தேன்.

      ஊறுகாய் போடும்போதோ வேறு பயன்பாட்டுக்கோ பாத்திரத்தின்… பானையின் வாயைத் துணியால் மூடிக் கட்டி வைப்பதற்கு வேடு கட்டுதல் என்பர். வேடு என்ற சொல்லே மறைத்தலைக் குறிப்பதுதான். அதனால் முகவேடு என்று சொல்லலாமா என்று நினைத்தேன். அச்சொல் பொருத்தமாகத்தான் இருக்கிறது. அச்சொல் முக வேடு என்றும் முக ஏடு என்றும் பிரிந்து பொருள்தருகிறது. முக ஏடு என்றாலும் அதுவும் ஒருவகையில் பொருந்திதானே வருகிறது எனக் கருதினேன்.

      அடுத்ததாக மார்புக்கச்சை, இடுப்புக்கச்சை நினைவுக்கு வந்தன. அதனை அடியொற்றி முகக்கச்சை என்ற சொல்லும் மிகச்சரியாகப் பொருந்தும் என்று அறிந்தேன். மேலும் முகச்சீலை என்ற சொல்லைப் பயன்படுத்தலாம் எனவும் கருதினேன். ஆனால் இவையாவும் தற்காலப் பேச்சாடலுக்கு எளிதாக  இல்லை.

      முகமூடி, முகத்திரை ஆகிய சொற்கள் புழக்கத்தில் உள்ளன. இச்சொற்களும் Face Mask என்பதற்கு முழுமையாகப் பொருந்தும். ஆனால் முகமூடி என்ற தற்கால வழக்கில் நல்லவர்களைக் குறிக்காமல் திருடர்களை, வஞ்சகர்களைக் குறிக்கவே பயன்படுகின்றன. அதுபோலவே முகத்திரை என்ற சொல்லும். “உன் முகத்திரையைக் கிழிப்பேன்” என்று நடித்து ஏமாற்றுவோரைப் பலர் எச்சரிப்பதைக் கேட்கலாம். ஆகவே புழக்கத்தில் வேறு பயன்பாடுகளுக்கு வந்துவிட்ட அந்தச் சொற்களைத் தவிர்க்கலாம். முகவணி என்ற சொல்லில் அணி என்பது காதணிபோல் அழகியல் சார்ந்தவற்றை அணிவதாகப் பொருள்படுகிறது. மாஸ்க் என்பது அழகியல் சார்ந்த அணிகலன் இல்லை.

      இப்படி முடிவுக்கு நான் வருகையில் நண்பர் ஒருவர் கேட்டார். கவசம் என்பது உலோகம் போன்ற கடினமான பொருளால் உருவாக்கப்பட்டதைத்தான் குறிக்கும். அதனால் அதைப் போரில் தமிழர்கள் பயன்படுத்தினார்கள். ஆனால் மாஸ்க் என்பதில் மென்மையான வளைந்து கொடுக்கும் தன்மையினான துணி போன்ற பொருள்களால் ஆனது என்றார். அதுகுறித்தும் ஆராய்ந்து அவரிடத்தில் தெரிவித்தேன். போரில் பயன்படுத்தப்பட்ட கவசம் அப்படிப்பட்டதுதான். சென்னைப் பல்கலைக் கழகம் உருவாக்கிய தமிழ்ப்பேரகராதியில் கவசம் என்பதற்கு மெய்புகு கருவி, இரட்சை, காயத்திற்கு இடும் கட்டு, மருந்தெரிக்கும் பாண்டங்களை மூட இடும் சீலைமண் எனப் பொருள்கள் தரப்பட்டுள்ளன. மந்திரங்களால் உருவாகும் பாதுகாப்பைக் குறிப்பதாகவும் சுட்டப்பட்டுள்ளது. அதற்கு எடுத்துக்காட்டாக “உளத்தாற் கவசமுரைத்து” என்ற சைவ சமய நெறியில் குறிப்பு உள்ளது. ஆக மேலே சொன்னவாறு கவசம் என்பது உலோகத்தால் ஆன கருவியாகவும், துணியாலான ஆடையாகவும் மண்ணாலான ஏடாகவும், சஷ்டி கவசம்போல் உள்ளத்தால் உணரும் பாதுகாப்புக்கு உரியதாகவும் உள்ளது. எனவே கவசம் என்ற அச்சொல் வளைந்துகொடுக்கக் கூடிய பொருள்களால் உருவாகும் மாஸ்க் என்பதற்கும் பொருந்தும்.

      ஊடகங்களில் முகக்கவசம் என்ற சொல் பரவலாகிவிட்டது.  பயன்பாட்டிலும் வந்துவிட்டது. எனவே முகக்கவசம் என்ற சொல்லே இருந்து விட்டுப் போகட்டுமே என்று நான் சொன்னேன். அதற்கு எதிர்ப்புரை எழுதியவர்கள் உண்டு. அவர்கள் அனைவரும் சொல்லும் காரணம் கவசம் என்பது வடசொல். சமஸ்கிருதச் சொல்லைத் தவிர்ப்பதற்காகவே வேறு புதுச்சொல் தேடுகிறோம் என்றனர்.

      கவசம் என்ற சொல்,  வடமொழிச் சொல்தானா என அறிய முயன்றேன். கலசம் என்ற வடசொல் இருப்பதால் கவசம் என்பதும் வடசொல்லாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறார்கள். மேலும் கந்தசஷ்டி கவசம், கண்ணதாசன் எழுதிய கிருஷ்ண கவசம் போன்ற நூல்களைக் காணும் போது கவசம் வடமொழிச் சொல்லாகத்தான் இருக்கும் என்று மயங்குகிறார்கள். மறைமலை  அடிகளின் மகள் நீலாம்பிகை அவர்கள் தொகுத்த வடமொழி தமிழ் அகர வரிசை என்ற நூலிலும், மொழியாய்வு அறிஞர் ப. அருளி அவர்கள் தொகுத்த அயற்சொல் அகராதி என்ற நூலிலும் கவசம் என்ற சொல்லைத் தேடினேன். அச்சொல் அந்த அகராதிகளில் இல்லவே இல்லை. இரண்டாயிரம் ஆண்டு பழமையான சங்க இலக்கியங்களில் கவசம் என்ற சொல் உள்ளதா என்றால் உள்ளது. புலிநிறக் கவசம் பூம்பொறி சிதைய என்ற வரி புறநானூறு 13 ஆவது பாட்டில் உள்ளது.

      செந்தமிழ் சொற்பிறப்பியல் அகர முதலியில் கவசம் குறித்துத் தேடினேன். அதில்      கவ்வு – கவ்வியம் – கவயம் – கவசம் என அச்சொல் உருவான முறை சொல்லப்பட்டு உள்ளது. ஆகவே கவசம் என்பது தமிழ்ச்சொல்லாக இருக்கும் என்றே நம்புகிறேன். இச்சொல் வடமொழிக்குச் சென்று புழங்கி இருக்கலாம். ஆகவே தலைக்கவசம் எனச்சொல்லலாம். அச்சொல்லில் தமிழ்த்தாய் பாதுகாப்பாகவே இருக்கிறார்.

      இதில் ஓர் ஐயம் யாருக்கேனும் இருக்குமானால் அவர்களுக்கு நான் பரிந்துரைப்பது. கவசம் என்பதற்கு இணையான ஒருசொல் காப்பு என்பதாகும். காப்புக் கட்டுதல் என்ற சொல்வழக்கையும் இங்கே ஒப்பீடு செய்துகொள்ளலாம். ஒன்றை மறைத்தலைவிட, காப்பது சரியான பொருளுணர்த்தல் ஆகும். ஆகவே தலைக்கவசத்தைத் தலைக்காப்பு என்றும் முகக்கவசத்தை முகக்காப்பு என்றும் சொல்லலாம்.

      “அங்க என்னாங்க பண்றீங்க”ன்னு என் மனைவி தொலைவில் நின்று கேட்டார். “மாஸ்க் என்பதற்குத் தமிழ்ச்சொல் கண்டுபிடிக்கிறேன்” என்றேன். “அவனவன் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கான். நீங்க சொல்லக் கண்டுபிடிக்கிறீங்களா? மொதல்ல உங்க சொல்லப் பேசறதுக்கு மக்கள் உயிரோட இருக்கணும்” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றார். நானும். உள்ளே போய்ப் பார்த்தேன். மறந்து எங்கோ வைத்துவிட்ட தொலைஇயக்கியைக் (ரிமோட்) கண்டுபிடிக்க முயன்றுகொண்டிருந்தார்.

Series Navigationபுலம்பெயர் ஈழத்து படைப்பாளர்களின் விபரத்திரட்டுஅறியாமை அறியப்படும் வரை….
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *