தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

This entry is part 12 of 13 in the series 3 மே 2020

                          

                                                 

                         ஈடுபடும் இறைமகள் பொறாமைகொல்

                              இதுபொறாமை கொல்! இறைவர் தம்

                        காடுபடு சடை ஊடும் உருவு

                              கரந்து வருவது கங்கையே.               [61]

[ஈடு=ஒப்பு; இறைமகள்=பார்வதி; பொறாமை=எரிச்சல்; பொறாமை=தாங்க முடியாமை; காடுபடு=காடுபோன்ற; ஊடு=உள்ளே; உருவு கரந்து=ஒளிந்துகொண்டு; கங்கை=நதிப்பெண்]

      பார்வதியின் மீது கொண்ட பொறாமையால் எரிச்சலடைந்து கங்கையானவள் சிவபெருமானின் காடு போன்ற சடையில் ஒளிந்து வாழ்வதாகச் சொல்கிறார்காள். இல்லை. அது காரணம் இல்லை. கங்கை இப்பாலையின் வெப்பத்துக்கு அஞ்சித்தான் சிவனின் தலையில் மறைந்து இருக்கிறாளாம். இப்படிக் கங்கை சிவபெருமானின் தலையில் இருப்பதற்கு ஒரு காரணத்தைக் கூறி இருப்பது நல்லதோர் இலக்கிய நயமாகும்.

=====================================================================================

                        வெம்பு கருநடர் வந்த வனமெனும்

                              விந்த வனமென வேவவும்

                        கொம்பு விடுவன கொங்கு கமழ்வனஅக்காட்டுக்குத் தீ

                              கொந்து சொரிவன கொன்றையே.   [62]

[கொங்கு=தேன்; கொந்து=மலர்க்கொத்து]

      சோழ அரசனிடம் தோற்ற கருநாடக நாட்டு மன்னன், விந்திய மலையைச்சார்ந்த காட்டுக்குள் போய் ஒளிந்துகொண்டான். சோழன் அக்காட்டுக்குத் தீ வைத்தான். அக்காடு எரிந்ததுபோல இப்பாலை வனம் எரிகிறது. ஆனால் இங்கே குடிகொண்டுள்ள துர்க்கை சூடி உள்ள கொன்றைப் பூங்கொத்து மட்டும் வாடாமல் வதங்காமல் மலர்ந்து மணம் வீசிக் கொண்டிருக்கின்றன.

=====================================================================================

                          கண்டம் மலைவனசண்ட தருநிரை

                              கந்துள் எழமிசை கதுவவும்

                          சண்ட எரியினுள் நின்று குளிர்வது

                              தங்கள் ஒருசிறு திங்களே             [63]

[கண்டம்=நிலப்பகுதி;தருநிரை=மரக்கிளை; கந்துள்=கரி; கதுவ=பற்றி எரிய;

சண்ட எரி=பெரு நெருப்பு; சிறு திங்கள்=பிறை நிலவு]                               நிலம், மலை, மற்றும் காடெல்லாமே தீப்பற்றி எரிகின்றன. மரக்கிளைகள் எல்லாமே கரியாகின்றன. எரியும் தீ வானத்தைத் தொடும் அளவிற்கு உயர்ந்து எழுகிறது. எங்கும் எரியும் வெப்பமான அப்பெருநெருப்பினுள் குளிர்ச்சியாக இருப்பது துர்க்கையோடு குடிகொண்டுள்ள சிவபெருமான் தம் தலைமுடியுள் சூடியிருக்கும் திங்களேயாகும்.

====================================================================================

                         படப்படப் பொடியாக எங்குள

                              பாதவாதிகள் ஆதவம்

                        சுடச்சுடப் பொடியாய் எழச்சுழல்

                              சூறை புகுவன பாறையே!              [64]

[பாதவம்=மரம்; ஆதவம்=வெயில்; சுழல்=சுழலும். புகுவன=நுழை [புரட்டு] வன]

      வெப்பத்தின் தாக்கத்தினால் மரங்களெல்லாம் பொடிப்பொடியாக உதிர்ந்து விழுகின்றன. வெயிலின் தாக்கத்தினால் மண்முழுதும் சுடுகின்றது. மரம் செடிகொடிகளெல்லாம் தீய்ந்து போனதால் வீசுகின்ற சூறைக்காற்றால் புரட்டிப் போடப்படுவன இங்குள்ள பாறைகளே!

=====================================================================================                        ]

                        புறச்சோலை பூதங்களும் பேயும் யாவும்

                              புகும் சோலையே;

                       அறச்சோலை தானும் பிரானும் பயின்றாடும்

                               அச் சோலையே.                       [65]

[புறம்=வெளி; புகும்=வசிக்கும்; அறம்=நன்மை; தான்=துர்க்கை; பிரான்=சிவபெருமான்; பயின்றாடும்=நடமிடும்]

      இப்பாலையில் எல்லா இடங்களிலும் வெப்பம் மிகுந்திருந்தாலும் பேயும் பூதங்களும் வசிக்கும் சோலை ஒன்று இருக்கிறது. மற்றொரு சோலை நன்மை தரும் அறச்சோலை.  சிவபிரானுடன் துர்க்கை ஆனந்த நடனமாடும் கற்பகச் ஓலையே அச்சோலையே.

=====================================================================================

                         வெற்பு அநேக சிகரத்துடன் மிடைந்தன எனக்

                        கற்ப கோடி விழநீடுவன கற்பதருவே.              [66]

[வெற்பு=மலை; சிகரம்=உச்சி; மிடைந்தன=நெருங்கி நிறைந்தன; கற்பகோடி=பல யுகங்கள்; கற்பதரு=கற்பக மரம்]

      ஊழிக்காலத்தின் முடிவில் உயர்ந்த சிகரங்களுடன் கூடிய மலைகளும் விழுந்து போகின்றன. ஆனால் துர்க்கை குடிகொண்டுள்ள கற்பகச்சோலையில் உள்ள மரங்கள் தாம் வீழாது உயர்ந்து ஓங்கி நிற்கின்றன.

====================================================================================

                   வாரி ஆலயனும் ஆலயம் நமக்கு எனவரும்

                  பாரிசாதம் உள சாதகர் பராவுவனவே.            [67]

[வாரி=கடல்; ஆலயன்=வருணன்; சாதகர்=துர்க்கையை வழிபடுவோர்; பராவுவன=துதிப்பதான]

      அந்தக் கற்பகச்சோலையில் பாலை வெப்பத்திலிருந்து விடுபட மழைக்கடவுள் வருணன் அங்கு வந்து தங்குவார். அங்கே துர்க்கையை வழிபடுவோர் விரும்பும் பாரிசாத மலர்கள் நிறைய பூக்கும்.

=====================================================================================                     

                   பாலைதாழ மதுமாரி சொரியும் பருவநாள்

                  மாலை தாழ்வன அநேகம் உள மந்தாரமே.           [68]

[தாழ=குறைய; மது=தேன்; பருவம்=காலம் உள=உண்டு]

      அங்கே மந்தார மரங்களும் நிறைய உள்ளன. அவற்றில் பாலையின் வெப்பம் குறைந்தவுடன். மழைபோலத் தேனப் பொழிகின்ற, கார்காலத்தில் பூத்துக் குலுங்குகின்ற மாலையாகக் கூடிய மலர்களை உடைய மலர்க்கொத்துகள் இருக்கும்.

=====================================================================================

                   மீதெடுத்த பணை யாவையும் விழுங்க எழுசெந்

      தாதெடுத்தன அநேகம் உள சந்தனமே.               [69]

[பணை=கிளை; விழுங்க=மறைக்க; தாது=பூவிதழ்]

அச்சோலையில்  கிளைகளே தெரியாதபடி பூவிதழ்களை உடைய பூக்கள் பூத்துக் குலுங்கும் சந்தன மரங்கள் நிறைய உள்ளன.

=====================================================================================

                   சுவடு கொண்ட பொழில் ஏழின் ஞிமிறுந்துறும் ஒரோர்

                  கவடு கொண்ட அரிசந்தன வனம் கவினவே.          [70]

சுவடு=வாசனை; பொழில்=சோலை; ஞிமிறு=வண்டு; கவடு=கிளை]

      அச்சோலையில் ஏழுதீவுகளிலிருந்தும் வண்டுகள் வந்து மொய்க்கும் கிளைகள் உள்ள சந்தனமரங்கள் நிறைய உள்ளன.

[ஏழு தீவுகள்: சம்புத்தீவு, பிலத்தீவு, குசத்தீவு, கிரவுஞ்சத்தீவு, சாகரத்தீவு,                                                                         சான்மாலித்தீவு, புட்கரத்தீவு,

=========================================================================

Series Navigationகுறளில் கல்வியியல் சிந்தனைகள் – ஒரு பார்வைபுலியோடு வசிப்ப தெப்படி ?
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *