பிராயச்சித்தம்

author
7
0 minutes, 7 seconds Read
This entry is part 3 of 23 in the series 26 ஜூலை 2020

சிவகுமார் 

கதை சொல்வதென்பது ஒரு கலை, எல்லாருக்கும் அது வராது, இதை எத்தனை முறை எத்தனை பேரிடமிருந்து கேட்டாச்சு! ஆனால் இன்னிக்கு அப்பா என் கதையைத் தட்டிக் கழிப்பதற்கென்று சொன்ன போது எனக்குக் கொஞ்சம் பொறுக்கலைதான். அவருக்கருகில் சுந்தர ராமசாமியின் “ஒரு புளியமரத்தின் கதை”. அங்கங்கே சில பக்கங்களைப் படித்து விட்டுத்தான் இந்த அங்கலாய்ப்போ என்று எண்ணிக் கொண்டேன். ஆனானப்பட்ட சுந்தரராமசமியே அவ்வப் போது தாமோதர ஆசானின் உதவியை அல்லவா நாடியிருக்கிறார். அங்கங்கே அவரே கதை சொல்பவராக மிக நாசூக்கக டேக் ஓவர் பண்ணியிருக்கிறார். இதை நான் புரிந்து கொண்டு அப்பாவிடம் சண்டை கூட்டவில்லை.

”அப்பன்னா நான் சொல்ற கதையைக் கேட்க மாட்டீங்களா?”

”அப்பனே! திரும்பியும் சொல்றேன். இட் இஸ் ஆல்டுகெதர் என் அர்ட்!”

”கேட்டுத்தான் பாருங்களேன்” இது நான்.

”எவ்ளோ டயம் பிடிக்கும்?”

”ஒரு, ஒரு மணி நேரம்.” எதற்கும் பெரிய அளவிலான அனுமதி பெறுவது உசிதம் என்று எண்ணினேன்.   

”ஆ..ங்க். இடையில் பாத்ரூம் போக…..”        

ஏதோ பெரிய விஷயம் போல இதைக் கிளப்பினார்.

ஒரு நிமிட அமைதி நிலவியது.

நான் கதை சொல்ல ஆரம்பிச்சாச்சு.

வழக்கமாக இளம் பிராயத்தில் என் பிறந்த நாளைக் கொண்டாடுவார்கள். கோவிலுக்கு போணும், பெரியவர்களை நமஸ்கரிக்கணும். எழுந்திருக்கும் போது கை நீட்டம் உண்டு.  அப்பறம் சாயங்காலத்தில். என்னை வாசற்படியில் உட்கார வைத்து, எலந்தைப் பழம், கொஞ்சம் முந்திரி, வறுத்த கடலை, மிகவும் பிரயத்தனம் செய்து பெற்ற கரும்புத் துண்டுகள், கிஸ்மிஸ் எல்லாவாறையுமாய் என் தலையிலிருந்து பொழிவார்கள். சுற்றியுள்ள குழந்தைகள் அதைப் பொறுக்கிக் கொள்ளும். காசுகள் இந்த “மிக்சரில்” இருந்தனவா என்று சரியாக நினைவில்லை. இருந்திருக்கலாம். எந்த வருடம் இந்த மாதிரியான ஒழுங்கீனத்திலிருந்து எனக்கு விடுதலை கிடைத்தது என்பதும் நினைவில்லை. இப்பொழுது அதை நினைத்தாலே வெட்கம் பிடுங்கித் தின்கிறது.. என்ன நடக்கிறது இங்கே என்று. என் அளவில் கேள்வி கேட்டிருக்கிறேன். அதோடு சரி. “எல்லாம் குழந்தைக்கு திருஷ்டி. கழிக்கறதுக்குத்தான். வருஷம் பூரா யார் யார் கண்ணெல்லாம் பட்டுதோ? வாசற்படியில் ஒக்காற வவைக்கறது எல்லாருக்கும் தெரியட்டுன்னுதான்” என்று அங்குள்ள பெரியவர்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்த ஏகோபித்த குரலுடன் என் வாயை அடைத்து விடுவார்கள். என்னுள்ளே அந்த அறியாப் பருவத்திலேயே வெட்கத்தைத் தாண்டி, ஒரு குற்ற உணர்வு ஆழமாக, மிக மிக ஆழமாகக் குடிகொண்டு விட்டது என்று நினைக்கிறேன். பாபுவும், கோபுவும், ராணியும், பக்கத்து வீட்டு பத்தாவும், சொர்ணகுமாரியும், கோமதியும் இது போன்ற பல சிறுவர் சிறுமியரும் என் உடல் மீது பட்டுச் சென்றதை எடுத்துத் தின்பதா? இப்பொழுது கேட்பதற்கே மிகக் கேவலமாக இருக்கிறது?

இதை நினைக்குந்தோறும் இரண்டு விஷயங்கள் எனது மனக்கண் முன் வந்து நிற்கும். ஒன்று, ஜான் ஆர்லட்(John Arlott) என்ற கிரிக்கெட் விமர்சகர் சொன்ன ஒரு வாக்கியம்: மேன்ஸ் இன்ஹ்யூமானிடி டு மேன்! (Man’s inhumanity to man! மனிதனே மனிதனுக்கிழைக்கும் மனிதாபிமானமற்ற செயல்). இரண்டாவது, மிருணால் சென்னின் “பரசுராம்” படத்தில் வரும் ஒரு காட்சி. இதே போல பிறந்த நாளன்று செல்வந்தர் ஒருவர் குளத்தங்கரைப் படியில் நின்று கொண்டு காசுகளை சரமாரியாக விட்டெறிவார். அங்குள்ளவர்கள் அதைச் சதிர் தேங்காய் சில்லுக்களைப் பொறுக்குவதைப் போல் அவற்றின் பின் சென்று எடுத்துப் பாக்கெட்டுக்குள் அவசரமாகத் திணித்துக் கொள்வார்கள். இவ்விரண்டு காட்சிகளும் என்மீது நிகழ்த்திக் கொண்ட இந்தப் பிறந்தநாள் அநாகரிகத்தை எனது ஆழ்மனதில் எங்கோ ஒரு ஓரத்தில் குடிகொள்ளச் செய்து விட்டது. யாரோ விசிறி கொண்டு அதை வீசி ஒரு அணையாத் தன்மையை அதற்குக் கொடுத்துக் கொண்டு இருந்தார்கள். அதற்கான பிராயச்சித்தத்தைத் தேடி அலைந்து கொண்டிருந்தேன்.

அதற்கான நாள் தானா இது? நடந்த விஷயம் அப்படி!

வீட்டின் அருகே ஐசிஎஃப் பஸ் நிறுத்தத்தின் பக்கத்தில் ரயில்வே ரிசர்வேஷன் கவுண்டர் இருந்தது. வரிசைக் கிரமமாக உட்கார்ந்திருப்பதற்கு இருக்கைகள் உண்டு. உட்கார இடம் கிடைத்து விட்டால், காத்திருப்பதில் உண்டான அலுப்பு அவ்வளவாகத் தெரியாது. மிஞ்சிப் போனால் ஒரு முப்பது அல்லது நாற்பது நிமிடங்களில் டிக்கெட்டை வாங்கிக் கொண்டு வந்து விடலாம். (இப்பொழுது போல் ஆன்-லைன் முறை வராத காலம்). வழக்கமாக ஒரு புத்தகத்தை எடுத்துச் செல்வது வழக்கம். விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்த பிறகு இருக்க இடம் கிடைத்ததால் புத்தகத்தில் ஆழ முயன்றேன்.

என்னுடைய டர்ன் வருவதற்கு சற்று முன் சுதாரித்துக் கொண்டு, மறுபடியும் விண்ணப்பத்தைச் சரிபார்த்து விட்டு கவுண்டருக்கு முன் ஆஜராக என்னைத் தயார் படுத்திக் கொண்டேன். டிக்கெட் கிடைத்து விட்டது இனி என்ன என்று நான் இருக்கையில் எனக்கு முன் டிக்கெட் வாங்கி விட்டு பக்கத்தில் நின்று கொண்டிருந்தவர் பொசுக்கென்று கீழே விழுந்து விட்டார். இது க்ஷணநேரத்தில் நிகழ்ந்து விட்டதால் யாராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. அருகில் இருந்த அவரது மனைவியின் கண்களில் ஒரு அதிர்ச்சியைக் கண்டேன். மனைவியாகத்தான் இருக்க வேண்டுமென்று நான் நினைத்தேன். உடனே அருகில் சென்று அவரைத் தூக்கிப் பிடித்து, — ஒன்றிரண்டு பேர் உடனே அங்கு ஆஜர், — அங்கு தனியாகக் கோணலாக சுவரோரம் சாய்த்து வைக்கப்பட்டு எந்த விதத்திலும் உதவாதிருந்த நாற்காலியை இழுத்து வரச்சொல்லி அவரை மெதுவாக அமரச் செய்தேன். அதற்குள் எனக்கு வியர்த்து விட்டது.  அவரது மனைவி ஸ்தம்பித்து நின்றிருந்தாள்.

”காலையில டிபன் சாப்பிடாம கிளம்பிட்டோம். டிக்கெட் வாங்கணும்னுதான். கூட்டம் சேர்ந்துடுத்துன்னா ரொம்ப லேட் ஆயிடுது” என்ற அந்த அம்மாள் இருக்கும் உலகத்திற்கு தான் வந்துவிட்டதை அறிவித்தாள்.

“ஓ! ஒண்ணுமில்லை. கொஞ்சம் ஒக்காந்து போனா சரியாயிடும். எப்டி வந்திருக்கீங்க?” என்றேன்.

“டூ வீலர்லதான்”

விழுந்தவருக்கு ஒரு அறுபத்தி ஐந்து வயதிருக்கலாம். நினைவு இருந்தது. ஆனால் சட்டை முழுவதும் நனைந்து போகும் அளவிற்கு வியர்த்துக் கொட்டியிருந்தது.

”தண்ணி வேணுமா சார்” என்றேன்.

வாங்கி ஒரு மடக்குக் குடித்துவிட்டு அவர் போலாம் என்பதை சமிக்ஞை மொழியாகக் கையசைத்ததிலிருந்து, முதலில் வீட்டுக்குப் போயாக வேண்டும் என்று சொல்வதாக எனக்குப் பட்டது.

”எங்கேம்மா வீடு?”

“இங்கே தான் அண்ணாநகர்லே. கந்தசாமி நாயுடு காலேஜ் பின்னாலே”

ஃபார்மைப் பூர்த்தி செய்து கொண்டிருந்த ஒரு ஜீன்ஸ் பையன் “ஆட்டோ கூப்பிடட்டுமா?” என்றபடி என்னை நோக்கி வர, நானும் தலையசைத்தேன்.

ஆட்டோ ட்ரைவரின் உதவியுடன் அவரை ஆட்டோ வரை நடத்திக் கொண்டு போய் உள்ளே உட்கார வைத்தோம். அந்த ஜீன்ஸ் பையன் பெரிதும் உதவினான். ஆள் நல்ல கனம். தனியாக என்றால் நான் கொஞ்சம் கஷ்டப்பட்டிருப்பேன். மனைவியும் உடன் ஏறிக் கொண்டார். மனிதர் நிதானத்தை இழக்கவில்லை. ”அப்போ வண்டி” என்பதை எங்களுக்குப் புரியும்படி இரண்டு கைகளால் டூ வீலர் ஓட்டுவதைப் போல் பாவனை செய்து காட்டினார்.

“நீங்க ஆட்டோல போங்க. நான் வண்டியை ஓட்டிண்டு வந்துடறேன்.” நான் இதைச் சொன்னதும் ஒரு பக்கமாக நகர்ந்து பாக்கெட்டிலிருந்து சாவியை எடுக்க முயன்றார். முடியவில்லை. பக்கத்திலிருந்த மனைவி சாவியை எடுத்து என்னிடம் கொடுத்தாள். ”வண்டி நம்பர் 2256 சார்” என்றாள். அவர் கண்ணாலேயும் சற்று லேசாக தலைய ஆட்டியும் எனக்கான நன்றி நவிலலை நிறைவேற்றினார்.  

ஆட்டோ கிளம்பக் கிளம்ப நானும் பின் தொடர்ந்தேன். வழி நெடுக விழுந்தவருக்கு என்ன நடத்திருக்கும் என்ற சிந்தனைதான். பார்த்தால் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர் மாதிரி இருந்தது. அட்டாக் என்பது எனது அனுமானம். எவ்வளவோ படித்திருந்தும் அடிப்படை முதலுதவி கூடக் கொடுக்காமல், இப்படி அழைத்து வந்து விட்டோமே என்று நினைத்துக் கொண்டேன். இருந்தாலும் அவரது விருப்பம் போல வீட்டில் கொண்டு சேர்ப்பது இது மாதிரி சந்தர்ப்பத்தில் செய்யக் கூடிய முதல் அவசியச் செயல் என்று எண்ணி என்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டேன்.

சொன்னது மாதிரியே கந்தசாமி நாயுடு காலேஜிற்குப் பின்புறம் தான் அவர்கள் வீடு. இறங்கி எவ்வளவு என்று அந்த அம்மாள் கேட்டதும் எவ்வளவாவது குடுங்க என்றார் ட்ரைவர்.

பார்த்தால் அவரது பையன் மாதிரித் தோற்றமளித்த ஒருவன் ஆட்டோவில் இவர்கள் வந்து இறங்குவதைப் பார்த்துத் திடுக்கிட்டவனாய் “என்ன ஆச்சுப்பா?” என்று குரல் கொடுத்துக் கொண்டே கிழே இறங்கி ஓடி வந்து கொண்டிருந்தான். அவனிடமும் அதே தலையசைத்தலின் மூலம் என் திசையைக் காட்டி என்னமோ சொல்ல எத்தனித்தார். பாவம் அவரால். ஒன்றும் முடியவில்லை.

இதற்குள் “எல்லாம் அப்பறம் சொல்றேன். முதல்ல வண்டி எடுத்துண்டு போயி இவரை ட்ராப் பண்ணிடு. எங்க சார் போகணும் நீங்க?” என்று அவர் மனைவி ஒரு ஆர்டரைப் பிறப்பித்தாள்.

“ரொம்ப தேங்ஸ், சார். உட்காருங்க உடனே போய்டலாம். வண்டில பயப்டாம ஒக்காருவீங்கல்ல?.எங்க சார் வீடு” என்றான் அனுசரணையுடன் அவன்.

”ஏ…..அப்பாவோட வண்டிய ஓட்டிட்டு வந்ததே அவர்தான்டா.” என்றாள் அந்த அம்மாள்.

நான் என் பங்கிற்கு “மைல்ட் அட்டாக்னு தோணுது. தம்பி நீ இங்கே இரு. நான் ஆட்டோ பிடித்துப் போய்க்கறேன். உடனே அவர் டாக்டரைப் பாத்தாகணும்.” என்றேன்.

அந்த அம்மாள் “அதெல்லாம் இல்லை. உங்களைக் கொண்டு விட்டுட்டு வந்துடட்டும். நீங்க சொன்ன மாதிரி டாக்டரிடம் உடனே நான் பேசிடறேன்” என்றாள்.

பைக்கில் அவனுடன் சென்று கொண்டிருந்த போது எனது வீடு அயனாவரத்தில் இருக்கிறது என்பதையும் நானும் டூ வீலரை ரிசர்வேஷன் கவுண்டருக்கு வெளியில் நிறுத்தி வைத்துள்ளதாகவும் சொன்னேன். தம்பி என்னைக் கவுண்டர் வரையில் கொண்டு விட்டான். வண்டியை விட்டிறங்கி அதை பார்க் செய்து விட்டு, நான் என் வண்டியை எடுத்து கிளப்பிச் செல்லும் வரை காத்திருந்தான். மனிதனை மதிக்கத் தெரிந்தவன்.

டூ வீலரை நான் ஓட்டிச் செல்லச் செல்ல, அந்த எதிர் காற்றும் என்னைத் தழுவத் தழுவ எனது தோளில் பல காலங்களாக நான் சுமந்திருந்த ஏதோ ஒன்று நீங்கியதைப் போன்றுணர்ந்தேன். கங்கையில் ஒரு முக்கெடுத்தால் ஏழு ஜன்மங்கள் செய்த பாவச்செயல்களெல்லாம் களைந்து போய்விடுமாமே? அத்தகைய பரிசுத்தமாக்கும் பணியைத் தான் என்மீது வீசும் எதிர்காற்று நடத்திக் கொண்டிருந்தது. நானும் இனி பாரதியுடன் “விட்டு விடுதலையாகி” பாடலைப் பாடலாம். ஒரு பெரிய தெம்பு எனக்கு வாய்க்கப் பெற்றது. ஆம். வண்டியை நேராக நிமிர்ந்தமர்ந்து ஓட்டலானேன். ஏதோ ஒரு கணக்குத் தீர்ந்து விட்டது, பட்டுவாடா நடந்து விட்டது போன்ற உணர்வு, என்னுள்! நான் சுமந்து வந்திருந்த அந்தச் சிலுவையைக் கடைசி நாள் வரை சுமக்கத் தேவையில்லை போலும். ஏதோ ஒரு நிறைவு என்னைச் சூழ்ந்து கொண்டது. தேமேனென்று நான் இருந்திருந்தால் ஒரு உயிரே கதிமாறி போயிருக்கக் கூடும் தானே?  

எழுந்திருக்க முயன்ற அப்பாவை “இருப்பா!” என்றேன்.

அவரின் கையைக் குலுக்குவது போல் அருகில் வந்து கையை அழுத்திப் பிடித்துக் கொண்டேன். நீண்ட, மிக நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு இவ்வளவு நெருங்கியிருக்கிறோம்.

“அப்பா! தெரியுமா உனக்கு! அன்னிக்கு என்னோட பிறந்த நாளாக்கும்!”

கண்ணாடியைக் கழட்டி விட்டு வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு அவர் எழுந்து போய்க் கொண்டிருந்தார்! ஒண்ணும் சொல்லக் காணும்!

அடுத்த நாள் இதை அம்மா என்னிடம் சொன்னார்கள். ”நேற்றைக்கு கோவில் போனோம். உங்கப்பா செருப்பைக் கழட்டி வைக்கும் போது ஒம் பையன் பரவாயில்லை! கற்பனையையும் கதையையும் சேர்த்துக் குழைத்து……..நல்லாத்தான் போச்சு! ஒரு வார்த்தை அவன்ட போடு!”  

Series Navigationஇருமைவாசிப்பு வாசகப்பிரதி வாசிப்பனுபவம்
author

Similar Posts

7 Comments

 1. Avatar
  ரமேஷ் says:

  அற்புதம். மூடத்தனமான நம்பிக்கையிலிருந்து விடுபடும் சுகமே தனி. இது அநேகருடைய வாழ்க்கையில் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கு. ( நாம் உணர்ந்தபோது)

 2. Avatar
  Narayanan says:

  நமஸ்தே,
  கதை துவக்கமே சுந்தரம்.சுந்தர ராமசாமியை கொண்டுவந்து விட்டார் கதை ஆசிரியர் சிவக்குமார். கதையின் காலத்தை காட்சியாக, ராமசாமி சாட்சியாக காட்டிவிட்டார் .குமாரன் அப்பாவுக்கு ‌‌‌கதை…இல்லை இல்லை ..உண்மை சம்பவத்தை சொல்கிறார்.அப்பாவோ அதை கதையாகவே கருதினாலும் பாராட்டுகிறார்.அன்று என் பிறந்த நாள் என்று முடிவில் சொல்வது ஒரு முதிர்ந்த எழுத்தாளனுக்கு தான் முடியும்.இங்கே ஒரு பாராட்டு. குழந்தை களுக்கு இன்னும் அதே போல் பிறந்தநாள் விழாக்கள் நடைபெறுகிறது. இந்த கலாச்சாரத்தை பழிக்கலாம் .பாவச்செயல் என்று கடித்திருக்க வேண்டாம்.பிராயச்சித்தம் ஆசிரியருக்கு மட்டும் தான்.சமுதாயம் மாறவில்லை.மகனிடம் கண்டுகொள்ளாமல் இருந்து மறுநாள் மனைவியிடம் கூறுகிறாரே தன் சந்தோஷத்தை அந்த கால அப்பாக்களின் செயலும், மனமும் கண்ணெதிரே. தன் ரயில் டிக்கட் வேலை என்னாச்சு என்று சொல்லலை.சிவக்குமார் இப்படி பல கதைகள் எழுதவேண்டும்.

  வாழ்த்துகள்.

  1. Avatar
   sivakumar SIVAKUMAR says:

   “நடுவில் தலையை இப்படி அப்படிக் கூட ஆட்டாமல்” “மனநெருடலுக்கு நல்ல பிராயச்சித்தமாக” இப்போது தான் படித்தேன். மேலே குறிப்பிட்டுள்ள இரண்டும் என் மனதை வருடியது. நன்றி!

   “ஆழமான கதைகளைப் படித்து அனுபவித்தவரின் அனுபவம்” ஆம் முற்றிலும் உண்மை! நன்றி சார்!

   “மூடத்தனமான நம்பிக்கையிலிருந்து” எதிர்பார்த்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது! நன்றி!

   மிக்க நன்றி! நிதானித்து வாசித்திருக்கிறீர்கள்!

 3. Avatar
  G Swaminathan says:

  நல்ல அழுத்தமான கதை; பல பிரபல, சிறந்த எழுத்தாளர்களின் ஆழமான கதைகளைப் படித்து அனுபவித்தவரின் அனுபவம் கதை சொல்லியிருக்கும் விதத்தில் தெரிகிறது. வாழ்த்துக்கள்.

 4. Avatar
  Rani says:

  பிரமாதமாக எழுதி இருக்கிறீர்கள். கதையைப் படிக்கும்போது நடுவில் தலையை இப்படி அப்படிக் கூட ஆட்டாமல் மூழ்கிப் போய் படித்தேன். இத்தனை நாட்களாக மனதில் சுமந்து கொண்டிருந்த ஒரு மனநெருடலுக்கு நல்ல பிராயச்சித்தமாக அமைந்தது உங்கள் செயல் என்று நினைக்கிறேன்.

  1. Avatar
   sivakumar SIVAKUMAR says:

   “நடுவில் தலையை இப்படி அப்படிக் கூட ஆட்டாமல்” “மனநெருடலுக்கு நல்ல பிராயச்சித்தமாக” இப்போது தான் படித்தேன். மேலே குறிப்பிட்டுள்ள இரண்டும் என் மனதை வருடியது. நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *