அந்தநாள் நினைவில் இல்லை…..

author
0 minutes, 0 seconds Read
This entry is part 13 of 21 in the series 2 ஆகஸ்ட் 2020

மெர்லின் சுஜானா

உன் கண்களில் விழுந்து நான் சிதைந்த நாள்
என் நினைவில் இல்லை;
ஆனால் அந்த நாளின் தாக்கம் சற்றும்
என் நினைவை விட்டு அகலவில்லை
உன் ஒளிமிகு கண்களைப் பார்க்கத் துணிவின்றி
வெட்கத்துடன் தலைகுனிந்து நான் நகர்ந்து சென்ற தருணங்கள்
என் கண்ணினுள் உன்னைத் தேட பொறுமையுமின்றி
எனது கண்கள் பார்த்து ரசித்து ஏற்று
நீ நகர்ந்த பல கணங்கள்
உன் நிழலென நான் திரிந்த
பல நாட்களின் அதிர்வுகளும்,
உன் பெயரெனத் துடிக்கும்
என் இதயத்தின் ஏக்கங்களும்
ஆறடி உயரம் வெள்ளைநிறம்
கட்டுத் தசையுடைய ஆணழகன் இல்லை அவன்,
ஆனால் தன் மெல்லிய சிரிப்பால்
என் மனதை உருக்கும் அடக்கம் கொண்டவன்.
என்னை ரகஸியமாக ரசித்தவன்,
என் உண்மைப் பெண்மையை’ அசைத்தவன்;
என் காதலின் பாரம் சுமந்தவன்,
அந்த சுகத்தைக் கனிவுடன் கடந்தவன்.
நம் இருவருக்கும் உள்ளது என்ன உறவு?
கண்டு கொண்டேன் அந்த அதீத அன்பை.
ஆசிரியர் மாணவி மீது கொண்ட உன் அன்புமாய்
பெண்ணவள் ஆண்மகன் மீது கொண்ட என் காதலும்
காற்றுடன் கலைந்து செல்கிறது
நம் இனம் புரியா நேசம்
என்றும் இணையாத கரங்கள் இருப்பினும்
என்றோ இணைந்த நம் மனங்களின் சாட்சியாய்
என்றென்றும் காத்திருப்பேனடா!
உன் காதலியாக அல்ல!
உன் நலம் விரும்பியாக
கொஞ்சம் கண்ணீர், கொஞ்சம் காதலுடன்.

ஐஐ
துயர் போயின… போயின துன்பங்கள்…..

அவள் உயிரும் சக்தியும் கண்ணீராய் வெளியேறிக் கொண்டிருந்தது,
வலியின் உச்சம் அவள் உடல் முழுவதும் படர்ந்திருந்தது.
பத்துமாதம் அவள் கொண்ட தவத்தின் முடிவுகாலம்,
வெற்றிதன் உயிரைக் கண்களால் காண
அவளின் பொறுமையும் கனவும்
நம்பிக்கை முற்றிலும் குன்றி
உணர்ச்சியற்ற மிருகம் போல் கிடக்கிறாள் மெத்தையில்
மரணம் அமைதியானதென
அதன் கைகளை எட்டிப்பிடிக்கும் கடினமான வேளையில்
அவள் காதினுள் துளைத்துச் சென்ற மழலையின் மொழி
தன் வயிற்றின் பாரம் இறங்கி அவள் கதறும் ஒலி,
தன்னைத் தாயென உணர்ந்த ஒருகணம்,
ஆயிரம் இன்பங்கள் கண்ட ஒரு சுகம்
தன் பாதி உயிரும் சாயலையும் கொண்ட சிறு உருவம்
அதைப் பார்த்துத் தன் உடலுக்குள் அடக்கிக்கொள்கிறான்.
அரும்புகள் பூவாவது செடியின் வெற்றிபோல்
தொப்புள் உறவின் பாசம் உணர்வது
பெண்ணின் வெற்றி

மெர்லின் சுஜானா

Series Navigationபவளவண்ணனும் பச்சைவண்ணனும்குழந்தைகளை என்னிடம் வரவிடுங்கள்!
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *