கந்தசாமி கந்தசாமிதான்…

கந்தசாமி கந்தசாமிதான்…
This entry is part 10 of 16 in the series 9 ஆகஸ்ட் 2020

07.08.2020 

அழகியசிங்கர்

            போன வெள்ளிக்கிழமை காலை நேரத்தில் மொட்டை மாடியில் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது நண்பர் கிருஷ்ணமூர்த்தியிடமிருந்து (கசடதபற ஆசிரியர்) போன் வந்தது.  காலை 7.30 மணிக்கு சா. கந்தசாமி இறந்து விட்டதாகத் தகவல் கூறினார்.

         போன  மாதம் சில தினங்களுக்கு முன்னால்தான் கந்தசாமி 80வது வயதை முடித்திருந்தார்.  அப்போது அவர் மருத்துவ மனையில் தீவிர கண்காணிப்பிலிருந்தார்.  “

         அவருடைய பிறந்தநாள் பற்றி முகநூலில் எழுதலாமா என்று சந்தியா நடராஜனைக் கேட்டேன்.  அவர் வேண்டாம் என்று சொன்னார்.  அவர் சொன்னது நியாயமாகப் பட்டது.  அவர் மருத்துவமனையிஙலிருந்து மீண்டு வரட்டும் என்று காத்திருந்தோம்.

          என் முக்கியமான எழுத்தாளர் வரிசையில் அவரும் ஒருவர்.  பல ஆண்டுகளாக நட்புடன் பழகி வருகிறேன்.  உற்சாகி.  தோன்றுவதைச் செய்து முடித்து விட வேண்டுமென்று நினைப்பவர். அவரைப் போல் சுறுசுறுப்பானவரைப் பார்க்க முடியாது.       

         அவருடன் பழகினால் முதுமையே நமக்குத் தோன்றாது. நாமும் எழுதுபவராக இருந்தால் நம்மை விட மூத்த எழுத்தாளரிடம் புத்தகங்களைப் படிக்கக் கொடுப்போம்.  அப்படிக் கொடுக்கிற புத்தகங்களைப் பற்றி சிலசமயம் மூத்த எழுத்தாளர்கள் அபிப்பிராயம் சொல்வார்கள்.  இல்லை பேசாமலிருந்து விடுவார்கள்.  நான் அப்படித்தான் கந்தசாமியிடம் என் புத்தகங்களைப் படிக்கக் கொடுப்பேன்.  அவர் உடனே படித்து விட்டு அடுத்தநாள் போன் செய்து தன் அபிப்பிராயத்தைச் சொல்லி விடுவார். அந்த அளவிற்குப் புத்தகம் படிப்பதில் தீவிரமானவர்.  

         பெரும்பாலும் இலக்கியக் கூட்டங்களில்தான் அவரைப் பார்த்திருக்கிறேன்.   நான் நடத்திக்கொண்டு வந்த மூகாம்பிகைக் கூட்டத்திலும் உற்சாகமாகக் கலந்துகொண்டு உரையாற்றியிருக்கிறார்.  

         அவருடைய பிறந்ததினத்தை ஒட்டி அவருக்குப் பிடித்த அவருடைய சிறுகதைகளைத் தொகுத்து ஒரு புத்தகமாகத் தயாரித்து விட்டேன். அவருடைய நெருங்கிய நண்பர்   நா. கிருஷ்ணமூர்த்தியிடம் அனுப்பி முன்னுரை எழுதும்படி கேட்டுக்கொண்டேன்.   ஆனால் அதற்குள் அவர் மரணம் முந்திக்கொண்டது.

         ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டிலுள்ள அவருடைய இரண்டாவது புதல்வன் வீட்டிற்குச் செல்வார்.  திரும்பி வரும்போது நிச்சயமாக ஒருபுத்தகம் எழுதிக்கொண்டு வருவார்.  

         நான் அமெரிக்கா செல்லும்போது அவரிடம் சொல்லிக் கொண்டு போனேன். 

 பொழுதை வீணடிக்காதைய்ய…நிறையா புத்தகங்கள் படி…உன் பயணத்தைப் பற்றி எழுது,” என்றார்.  

         ஒரு முறை சாகித்திய அக்காதெமியின் தேனாம்பேட்டை அலுவலகத்தில் அவரைச் சந்தித்தபோது அவர் ரவீந்திரநாத் தாகூரின் சிதைந்த கூடு என்ற புத்தகத்தை வாங்கச் சொன்னார்.  அதில் சிதைந்த கூடு என்ற குறுநாவலைப் படித்துவிட்டு கருத்துச் சொல்லச் சொன்னார்.

         அதன்பின் ஒவ்வொரு முறையும் அவரைச் சந்திக்கும்போது சிதைந்த கூடு படித்தியா? என்று கேட்காமல் இருக்க மாட்டார்.  இன்னும் படிக்கவில்லை என்று சொல்வேன். லேசாகக் கோபித்துக்கொள்வார்.  பிறகு கேட்பதையே விட்டு விட்டார்.  இதோ இன்னும் இரண்டு மூன்று பக்கங்கள்தான் அந்தக் கதையைப் படித்துமுடிக்க  இருக்கின்றன.  படித்து முடித்தவுடன் அவரிடம் சொல்லலாமென்றிருந்தேன்.

         எழுதுவதையும் படிப்பதையும் தொடர்ந்து செய்து கொண்டே இருந்தார்.  அசோகமித்திரன் கூட டைப் அடித்து படைப்புகளை அனுப்புவார்.  கந்தசாமி கையாலேயே எழுதுவார்.  இந்திய இலக்கியச் சிற்பிகள் என்ற வரிசையில் அசோகமித்திரன் பற்றி ஒரு புத்தகம் அவர் வெளிநாடு போவதற்கு முன் முடித்து விட்டுப் போயிருந்தார்.   அவ்வளவு சீக்கிரமாக முடித்தது எனக்கு ஆச்சரியம்.  இப்போது கூட ரயில் பயணத்தை வைத்துக்கொண்டு ஒரு சிறுகதைத் தொகுப்பைத் தொகுத்துள்ளார்.  அது தான் அவருடைய கடைசிப் புத்தகமாக இருக்குமென்று நினைக்கிறேன்.  

         சா.கந்தசாமி ஒவ்வொருவரைப் பற்றி வெளிப்படையாகப் பேசுவார்.  ஜெயகாந்தன் நெடுங்காலம் அவருடைய நெருங்கிய நண்பர்.  கந்தசாமி அவர் எழுதிய புத்தகங்களைப் படிக்க அவரிடம் கொடுத்ததில்லை.  ஜெயகாந்தனைப் பற்றி அவர் இன்னொரு தகவலையும் சொல்லியிருக்கிறார்.  ஜெயகாந்தன் அவருக்கு வருகிற எல்லாப் புத்தகங்களையும் படித்து விடுவாராம்.  இதைக் கந்தசாமி சொன்னபோது என்னால் நம்ப முடியாமலிருந்தது.

         ஜெயகாந்தன் ஒரு முறை ஜெயமோகன் புத்தகம் ஒன்றின் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசும்போது அந்தப் புத்தகத்தைப் படிக்கவில்லை என்று வெளிப்படையாக மேடையில் கூறியிருக்கிறார்.

         ஒரு விதத்தில் கந்தசாமி ஜெயகாந்தன் சாயலில் தென்பட்டாலும் தொடர்ந்து வாசிக்கும் பழக்கமும் எழுதும் பழக்கமும்  கடைசி வரை அவரிடம் இருந்தது.  அவரிடம் யாராவது கட்டுரையோ கதையோ எழுதும்படி சொன்னால் உடனே எழுதித் தந்துவிடுவார்.  ஆனால் கேட்டாலும் கேட்காவிட்டாலும் தொடர்ந்து எதாவது எழுதிக்கொண்டே இருப்பார்.

         32வருடங்களாகக் கொண்டு வரும் நவீன விருட்சத்திற்குக்கூட அவர் கதைகளும் கட்டுரைகளும் எழுதியிருக்கிறார்.

         ஒரு சமயம் அவரிடம் விருட்சத்திற்கு ஒரு சிறுகதைத் தருமாறு கேட்டுக்கொண்டேன்.  கந்தசாமியும் எழுதிக் கொடுத்து விட்டார்.  அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கலந்துகொண்ட மகாமகம் நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட ஒரு துயரமான சம்பவத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.  அக் கதையில் முதலமைச்சரைப் பற்றிய விமர்சனம் இருந்ததால்   அந்தக் கதையைப் பிரசுரிக்கத் தயக்கமாக இருந்தது. பிரசுரிக்கவுமில்லை.  அதைப் பற்றி கந்தசாமி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.  வேற யாராவது இருந்தால் நட்கைபயே முறித்துக் கொண்டிருப்பார்கள்.  அவர் கதைகளில் உலாவரும் மனிதர்கள் சாதாரண மனிதர்கள்.  அவரும் அப்படிப்பட்டவர்தான். சைக்கிளைக் கூட அவர் பயன் படுத்தி நான் பார்த்ததில்லை.  

         சாயா வனம் என்ற நாவலைத் திரும்பவும் எடுத்துப் படித்துப் பார்த்தேன்.  சுற்றுப்புறச் சூழல் குறித்து பெரிதாகச் சிந்தனை இல்லாத சமயத்தில் எழுதப்பட்ட நாவல்.  1966 ஆம் ஆண்டு வெளிவந்தது.  அந்த ஆண்டில் எழுதப்பட்ட மிகச் சிறந்த நாவல் அது.   இன்றைய தேதியில் திரும்பவும் வாசிக்கும்போது அந்த எண்ணம் வலுக்கிறது.

         வனத்தை அழிக்கிற நிகழ்ச்சியைப் பிரதானமாகக் கொண்டு நாவல் எழுதப்பட்டுள்ளது.  அந்த நாவலில் சில இடங்களைத் தொடாமல் எழுதியிருக்கிறார்.  அறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நாவல் அது. அழுத்தமாக உணர்வை வெளிப்படுத்தும் நிகழ்ச்சியே வரவில்லை.

         அந்த நாவல் ஆரம்பித்த வேகத்தில் டப்பென்று முடிந்து விடுகிறது.  திட்டமிட்டு முடிக்க வேண்டுமென்று முடிக்கவில்லை.  படிப்பதற்கு ஆசையைத் தூண்டுகிற நாவல்.

         1994ஆம் ஆண்டு வெளிவந்த  ‘சொல்லப்படாத நிஜங்கள்’  என்ற சிறுகதைத் தொகுப்பைப் பார்த்தேன்.  அதில் கந்தசாமியின் பேட்டி வந்திருந்தது.  சுபமங்களாவில் பேட்டி எடுத்திருந்தார்கள்.

          அதில் எனக்குப் பிடித்த அம்சங்களை இங்கே தர விரும்புகிறேன்.  

.

            உங்கள் கதைகளில் கதைகளே இல்லை என்ற குற்றச் சாட்டு இருக்கிறதே?

          நிச்சயமாக அதுதான்.  கதையிலிருந்து கதையை வெளியேற்றுவதுதான் என் வேலை.  கதை சொல்வது என் வேலை இல்லை.  எல்லாரும் கதை சொல்வது போல, கற்பனையாக போலியாகக் கதை சொல்ல முடியாது.  நான் வாழ்க்கையை எழுதுகிறேன்.  வாழ்க்கை என்பது கதை அல்ல.  நான் தனிப்பட்ட மனிதனுடைய வாழ்க்கையைப் பற்றியும் சொல்வது இல்லை.  தனிப்பட்ட மனிதனை முன் நிறுத்தி மனித சமுதாயத்தின் வாழ்க்கை முழுக்க  சொல்ல முடியுமா என்று பிராயாசைப்படுகிறேன்.  

          உங்கள் நாவல் வெளிவந்த ரொம்ப நாளைக்குப் பிறகு க.நா.சு அதைப் பற்றி மிகவும் உயர்வாக எழுதியதால் தானே அதற்கு ஒரு மரியாதை ஏற்பட்டது?

          க.நா.சு விற்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை.  எனக்கு ஏதாவது புகழ் ஏற்பட்டது என்றால் அது என் படைப்புகள் மூலம் எனக்கு ஏற்பட்டதுதான்.  ஆனால் வாசகர் வட்டம் லட்சுமி கிருஷ்ணமூர்த்தி இந்த நாவலை இனம் கண்டு புத்தகமாப் போட்டார்களே அவர்களுக்கு நன்றி சொல்லணும் புத்தகமாக வெளிவந்தவுடன் பலரும் பாராட்டினார்கள் ரொம்ப நாள் கழிச்சுதான் க.நா.சு விமர்சனம் எழுதினார். 

          இலக்கியத்திற்கு ஒரு பயன் உண்டு என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா?

          நிச்சயமாக ஒப்புக் கொள்கிறேன்.  ஆனால் நாவலின் கடைசிப்பாராவில் அந்தப் பயன் ஏற்பட வேண்டும் என்று தேடிப் பார்க்கக் கூடாது.  சொல்லப் போனால் அங்கிருந்து அது தொடங்க வேண்டிய இடமாகக் கூட இருக்கலாம்.  இலக்கியத்தில் சமூக உணர்வு வேண்டும் என்பதும் உண்மைதான். புத்தக வெற்றி தோல்விகள் போலித்தனமானவை.  அந்த வெற்றி எனக்கு முக்கியமல்ல.

          சாயா வனம் என்கிற உங்கள் முதல் நாவலை நீங்கள் எழுதத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் என்ன?

          விவசாயம் நமக்கு ஒரு வாழ்க்கையாக இருந்து வந்தது.  ஆனால் பத்தென்பதாவது நூற்றாண்டில், அதை விட்டு விட்டு பணம் தரும் பயிர்களை, நெல்லுக்குப் பதில் உற்பத்தி செய்ய ஆரம்பித்தோம்.  பணப்பயிர் வாழ்க்கையை மாற்றுவதை எனக்குப் பழக்கமான வாழ்க்கையோடு இணைத்துப் பார்க்க சாயா வனம் எழுதினேன்.

          நீங்கள் சென்னைக்கு வந்தபிறகு நீங்களும் சில நண்பர்களும் இலக்கிய இயக்கமாகச் செயல்பட்டீங்க, அதைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்.

நான் க்ரியா ராமகிருஷ்ணன் ராஜாராம் ந.கிருஷ்ணமூர்த்தி போன்றவர்கள் சேர்ந்து இயங்கினோம்.  எங்களோடு ஞானக்கூத்தனும் ந.முத்துசாமியும் பின்னால் வந்து சேருகிறார்கள். 

         1963ருந்து ஒரு நாலு வருஷம் எல்.எல்.ஏ கட்டிடத்தில் கூட்டம் நடத்தினோம்.அந்தக் கூட்டத்தில் கட்டுரை எழுதிக் கொண்டு வந்து படிக்க வேண்டும்.  கேள்வி கேட்டால் பதில் சொல்ல வேண்டும்.  க.நா.சு, அழகிரிசாமி எல்லோரும் பேசி இருக்கிறார்கள்.  சி.சு செல்லப்பா கூட்டத்தில் கலந்து கொள்வார்.  அப்படி ஒரு கூட்டத்தில்தான் மௌனி ஒரு பம்மாத்து என்று கு.அழகிரிசாமி சொன்னார்.  அதற்கு க.நா.சு கம்பனைப் பம்மாத்துன்னு சொன்னா அழகிரிசாமிக்குக் கோபம் வரும்.  இதுதான் இதற்குப் பதில் என்று சொன்னார்.

          கசடதபறவின் சாதனைகள் என்ன?

          அசட்டுத்தனம் என்பது இல்லாமல் சமரசம் செய்து கொள்ளாமல் மூன்று வருடம் ஒரு பத்திரிகை நடத்தியதே சாதனை.  நல்ல கதைகள், நல்ல கவிதைகள் அதில் பிரசுரமாயின.  

          இப்படித் தெளிவாகப் பேட்டி அளித்த சா. கந்தசாமி இன்று நம்மிடம் இல்லை.  ஆனால் அவர் எழுத்து மூலம் நம்மிடம் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

      (06.08.2020 அன்று இரங்கல் கூட்டத்தில் வாசித்தக் கட்டுரை)

Series Navigationகாற்றுவெளியின் ஆவணிமாத இதழ்(2020)ஸ்ரீமான் பூபதி

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *