திருமணத்துக்கு அழைக்கத் திலகவதியுடன் அவளது பையன் முத்து, மருமகள் சித்ரா, பேரன் என்று சிரிப்பும் கூச்சலுமாக உள்ளே வந்தார்கள். அனைவரும் சாரங்கபாணியையும், நாகலட்சுமியையும் கீழே விழுந்து வணங்கினார்கள்.
“புவனத்துக்குக் கலியாணம். போன மாசமே உங்களுக்கு போன் பண்ணி சொல்லிட்டேன் மாமா. நீங்க ரெண்டு பேரும் அவசியம் முன்னாடியே வந்து கலியாணத்தை நடத்திக் கொடுக்கணும்” என்றாள் திலகவதி குங்குமத்தை நாகலட்சுமியிடமும் பத்திரிகையை சாரங்கபாணியிடமும் நீட்டியபடி.
சல்வார் கமீஸ் அணிந்திருந்த திலகவதியைப் பார்த்து “இந்த டிரஸ் உனக்கு நல்லா இருக்கு. புடவையைக் கட்டித்தானே இவ்வளவு நாளா பாத்திருக்கேன்” என்றாள் நாகலட்சுமி சிரித்தபடி. “உன்னையக் கடைசியாப் பாத்து பத்து வருசத்துக்கு மேலே ஆச்சே?”
“ஆமா .பத்து வருசமாச்சு. தேனு கிட்டயும் நேத்தி பேசினேன். கலியாணத்துக்கு எல்லாரும் குடும்பமா வந்து முன்னால நின்னிரணும்னு” என்றாள் திலகவதி.
“பின்னே? இது நம்ம வீட்டுக் கலியாணம் இல்லியா?” என்றாள் நாகலட்சுமி.
இவ்வளவுக்கும் சென்னையில் திலகவதிக்குப் பக்கத்து வீட்டில் சாரங்கபாணி தன் பெண்ணின் குடும்பத்துடன் பல வருஷங்களுக்கு முன்பு குடியிருந்தார். மற்றபடி திலகவதிக்கு அவர் நெருங்கிய சொந்தம் எதுவும் இல்லை. ஆனால் திலகவதியின் புருஷன் தனசேகர் ‘நீங்க சொந்தத்துக்கும் மேலே அங்கிள்’ என்று அவரைக் கொண்டாடுவான். படுபாவி. திடீரென்று ஒரு நாள் அநியாயமாகச் செத்துப் போனான். ‘நல்ல விஷயம் பற்றிப் பேசுகையில் எதற்கு இந்தத் துக்க விஷயத்தைக் கிளறுகிறாய்?’ என்று அவரது மனது அவரைக் கடிந்து கொண்டது. புதிதாய்க் கல்யாணமாகி இரண்டு குழந்தைகளுடன் கணவனும் மனைவியுமாக சாரங்கபாணியின் பக்கத்து வீட்டுக்குக் குடி வந்தார்கள். அவரது மனைவி நாகலட்சுமிக்குத் திலகவதியைத் தன் இன்னொரு பெண் போல் பார்த்து மகிழ்வதும் குழந்தைகளைச் சீராட்டுவதும் இயல்பாகி, அதுவே இரு குடும்பத்துக்கும் நெருங்கிய பழக்கத்தை ஏற்படுத்தி விட்டது.
“அடேய், வாடா என் கிட்டே” என்று திலகவதியின் பேரனைத் தன் பக்கம் இழுத்து வாரி அணைத்துக் கொண்டார். சிறுவன் வெட்கத்துடன் சிரித்தபடி அவரின் பிடியிலிருந்து நழுவ முயன்றான்.
“இன்னா பேரு?”
“சொக்கன்” என்றான் பொடியன்.
“அட, அது நம்ம பிரெண்டு பேருல்ல?” என்றார் அவர்.
“பிரெண்டா?” என்று ஆச்சரியத்துடன் பொடியன் அவர் முகத்தைப் பார்த்தான்.
“அதானே? நாங்கூட கல்யாணமாயி இவ்வளவு வருசத்திலே பாக்காத கேக்காத பிரெண்டு பேரால்ல இருக்கு!” என்று நாகலட்சுமியும் அவரை ஆச்சரியத்துடன் பார்த்தாள்.
“அதான் நம்ம மீனாச்சி புருசன்” என்று பூஜை அறையைப் பார்த்தார்.
அதைக் கேட்டு எல்லாரும் சிரித்தார்கள்.
“இப்ப எத்தனாங் கிளாஸ்? ரெண்டாப்பா?” என்று சொக்கனிடம் கேட்டார்.
அவன் “செகண்ட் ஸ்டாண்டர்ட் ” என்றான்.
அவர் முத்துவிடம் “நான் பிரெஞ்சில கேக்கறேன். அவன் சமுஸ்கிருதத்துல பதில் சொல்றான்” என்றார். முத்து புன்னகை செய்தான்.
சாரங்கபாணி திலகவதியின் பக்கம் திரும்பி “அப்பிடியே தாத்தாவை உரிச்சு வச்சிருக்கான் பாரு” என்றார்.
.
திலகவதி நாகலட்சுமியிடம் “தேனுவும் போன மாசம் இங்க வந்துச்சாமே?” என்றாள்.
“ஆமா. மகனுக்கு ஒரு கால்கட்டைப் போட்டுறனுங்குது.”
“அதுக்குள்ளியா? அவனுக்கு இருபது வயசு இருக்குமா இப்ப?”
“இருபத்திரண்டு. ஒருக்கா அவனுக்கு புவனத்தைப் பாக்கலாமான்னு கூட நினைச்சோம். அப்புறம் அவனை விட அதுக்கு வயசு சாஸ்தின்னு விட்டுட்டோம்” என்றாள் நாகலட்சுமி.
“ஆமா. ஆனா அதெல்லாம் இந்தக் காலத்துல யாரு பாக்குறாங்க?”என்றார் சாரங்கபாணி. அவர் தன் மனைவியின் கருத்தோடு ஒத்துப் போகவில்லை என்று காண்பித்தபடி. ஒருவேளை அவருக்குப் புவனத்தைப் பேரனின் மனைவியாக ஏற்றுக் கொள்வதில் விருப்பம் இருந்ததோ என்னவோ?
“மாப்பிள்ளை என்ன பண்ணறாப்பில?” என்று சாரங்கபாணி கேட்டார்.
“பிசினசு நடத்துறாரு” என்றான் முத்து.
“பிசினசா?”
திலகவதி சாரங்கபாணியைப் பார்த்து “மூணு தலைமுறையா தொழில் பண்ணறாங்க. அதனால அது அவுங்க ரத்தத்துல ஊறின பொழப்புதான்” என்று சிரித்தாள்.
உள்ளே சென்று குளிர்பானங்களுடன் திரும்பிய நாகலட்சுமி “இதைக் குடிங்க. மதியம் சாப்பிட்டு விட்டுத்தான் போகணும்” என்றாள்.
“நீங்க சொல்லாட்டாலும் எங்கம்மா இங்கதான் சாப்பிடணும்னு அவங்களை மட்டுமில்ல எங்களையும் தயார் பண்ணி மெட்றாஸ்ட்லேந்து கூட்டிட்டு வந்திருக்காங்க” என்றாள் சித்ரா. மின்னும் கண்களிலும் சிரிக்கும் உதடுகளிலும் மட்டுமில்லாமல் பேசும் வார்த்தைகளிலும் அன்பைத் தெரிவிக்கிறவளாக இருக்கிறாள் திலகவதியின் மருமகள் என்று
நாகலட்சுமிக்குப் பொங்கிற்று.
“மெனு?” என்று சாரங்கபாணி சிரித்தார்.
“எனக்கு என்ன பிடிக்கும்னு அம்மாவுக்குத் தெரியாதா என்ன?” என்றாள் திலகவதி. “சரி, அப்ப நாங்க கம்மனஹள்ளி
வரைக்கும் போயி எங்க பெரியம்மா வீட்டில பத்திரிகை வச்சுக் கொடுத்திட்டு வந்திர்றோம்” என்று எழுந்தாள்.
சாரங்கபாணி அவர்களை வாசல் வரை சென்று அனுப்பி வைத்தார். திரும்பி வந்து ஹாலில் உட்கார்ந்து கொண்டார்.
நாகலட்சுமி அவரிடம் “பிசினசுன்னு சொன்னதும் எதுக்கு உங்களுக்கு அப்பிடித் தூக்கி வாரிப் போட்டுச்சு?” என்றாள்.
“பின்னே? அதுதானே தனசேகர் கண்ண மறைச்சு ஒளிச்சு கட்டிச்சு? எப்படியாப்பட்ட பொண்ணு இந்த திலகம்? அவளை நடுத் தெருவில கொண்டு வந்து விட்டிருச்சே அது?”
“உலகத்துல பிசினசு பண்ணுற எல்லாருமா நடுத்தெருவுக்கு வந்திடறாங்க?”
“ஆசதான். பேராசதான். வீட்டுக்கு அஸ்திவாரம் போட்டவன் நாயக்கர் மகால் கட்டுறேன்னு போனா?” என்றார் சாரங்கபாணி.
நாகலட்சுமி சமையலைக் கவனிக்கிறேன் என்று உள்ளே போனாள். அவர் திலகவதியின் குடும்பத்தைப் பற்றிய
பழைய நினைவுகளில் ஆழ்ந்தார்.
&&&&&
சாரங்கபாணி சென்னையில் இருந்த போது அவரது பக்கத்து வீட்டுக்குத் தனசேகர் குடி வந்த போது அவன் ஒரு ஜெர்மன் கம்பனியில் நல்ல வேலையில் இருந்தான். திலகமும் வேலைக்குப் போய்க் கொண்டிருந்தாள். ஆறுமாதம் கழித்து ஒரு நாள் திடீரென்று வேலையை விட்டு விட்டு சொந்தத் தொழில் செய்யப் போகிறேன் என்று கிளம்பி விட்டான். அவனும் அவன் கூட வேலை பார்த்த பன்னீர்செல்வமும் கூட்டாகச் சேர்ந்து தொழில் செய்ய ஆரம்பித்
தார்கள். பெரிய அளவில் அரசாங்கக் காண்டிராக்ட் எடுத்து ரோடு போடுவது, பாலம் உருவாக்குவது, கோடவுன் கட்டுவது என்று தொழிலில் இறங்கி ஒரு வருஷத்தில் தனசேகர் கார் வாங்கி விட்டான். புதுக் காரில் அவன் தன் குடும்பத்தையும் சாரங்கபாணியையும் நாகலட்சுமியையும் திருப்பதிக்கு அழைத்துக் கொண்டு போனான். தங்குவது சாப்பிடுவது என்று எல்லா செலவையும் அவனே செய்தான். நன்றாக நடந்து வரும் தொழிலை இன்னும் விருத்தி செய்ய எடுக்கும் முடிவுகளைப் பற்றிப் பெருமையுடன் பேசினான்.
“கேக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா” என்றார் சாரங்கபாணி நிறைவுடன். “மேல மேல வியாபாரம் விருத்தி
யாகணும். குடும்பம் அமோகமா இருக்கணும்.”
“எல்லாம் உங்க ஆசீர்வாதம் மாமா” என்றான் தனசேகர்.
“அரசாங்கம்னா எப்பவும் பண விசயத்துல பிசுநாறியா நடந்துக்குவாங்களே?” என்றார் சாரங்கபாணி.
“ஆமா. அதுக்குதான் நம்ம பார்ட்னர் பன்னீர்செல்வம் இருக்காரு” என்றான் தனசேகர்.
அவர் சற்றுப் புரிபடாத பார்வையை அவன் மீது செலுத்தினார்.
“காண்டிராக்ட் வேலைல டெக்னிக்கல் விசயத்தை எல்லாம் நான் பாத்துக்கிறேன். கவர்மெண்டு ஆபீசு,
ஆபீசருங்களைக் கவனிக்கிறது எல்லாம் பன்னீருதான். அவங்கப்பா முன்னால எம்.எல்.ஏ.வா இருந்தாருல்லே? அதுலயே அவருக்கு ஐ ஏ எஸ் ஆபீசருங்க, கவர்மெண்டு இன்ஜினீயருங்க , கஜானால இருக்கறவங்க எல்லாரையும் நல்ல பளக்கம். அதையே பன்னீரும் நல்லா கத்துக்கிட்டாப்புல. கொடுக்க வேண்டியவங்களுக்குக் கொடுத்து பில் செட்டில் மென்டு எல்லாம் கரெக்டா வாங்கிட்டு வந்துடறாரு நம்ம பார்ட்னரு.”
“ஆபீசுல கணக்கு வளக்கு பாக்கறதெல்லாம்?”
“அது பன்னீரோட மச்சான் இருக்கான். பி.காம். படிச்சிட்டு. அவனுக்கு ஒரு வேலையைப் போட்டுக் குடுத்துட்டோம்.”
“ஜாக்கிரதையா இருந்து பாத்துக்கணும்” என்றார். ‘அப்படி ஏன் சொன்னோம்?’ என்று பிறகு தோன்றிற்று. அவரது உள்ளுணர்வின் எச்சரிக்கையை அவர் அவனிடம் வெளிப்படுத்தினாரா? ‘தப்பாக எடுத்துக் கொண்டு விடுவானோ?’ என்ற அவரது பயத்தை ஒரு சிரிப்பால் தூக்கிப் போட்டு விட்டுச் சென்று விட்டான் தனசேகர்.
நாள்கள் செல்லச் செல்ல, தனசேகரைப் பார்ப்பதே அரிதாகி விட்டது. ‘வேலைப்பளு அதிகமாகி விட்டது’ என்றும் ‘அவர்களது தொழிலை விஸ்தரித்துக் கொண்டே போவதாகவும்’ திலகவதி சொன்னதிலிருந்து அவர் தெரிந்து கொண்டார். அவன் வாங்கிக் கொடுத்த புதிய நகைகளை அவள் மகிழ்ச்சியுடன் நாகலட்சுமியிடம் கொண்டு வந்து காண்பித்தாள். வீடு கட்டலாம் என்ற எண்ணத்தில் புறநகரில் தனசேகர் இடம் வாங்கிப் போட்டிருப்பதாகவும் அவள் ஒரு நாள் பேச்சு வாக்கில் சொன்னாள்.
“நல்ல செய்தியா சொன்னாலும் நீங்க எல்லோரும் எங்களை விட்டு வேற இடத்துக்குப் போயிடுவீங்கன்னு நினைச்சா மனசுக்குக் கஸ்டமா இருக்கு திலகா” என்று நாகலட்சுமி சொன்னாள். திலகவதி தன் கையை நாகலட்சுமியின் கையுடன் சேர்த்து இறுக்கிக் கொண்டாள்.
&&&&&
பெரிய இடியைப் போலத்தான் அந்த அடி தனசேகர் மேல் விழுந்தது. சுருண்டு படுத்து விட்டான் அவன். ஒரு நாள் மாலை சாரங்கபாணியும் நாகலட்சுமியும் வீட்டில் உட்கார்ந்து டி.வி.பார்த்துக் கொண்டிருந்தார்கள். விளக்கு வைத்த நேரம் சுபமுகூர்த்தம் என்று நினைத்தவள் போல டி வி யில் ஒரு பெண் விடாமல் அழுது கொண்டிருந்தாள். அப்போது அவர்கள் வீட்டுக்குள் வந்த தனசேகர் அவரிடம் “மாமா, ஒரு நிமிஷம் என் கூட வரீங்களா?” என்று பதட்டத்துடன் கேட்டான். அவன் முகம் வெளுத்துக் கிடந்தது. கைகள் லேசாக நடுங்கிக் கொண்டிருந்தன.
“என்ன ஆச்சு? என்ன ஆச்சு?” என்று நாகலட்சுமி எழுந்தாள்.
சாரங்கபாணி அவளை அமைதியாக இருக்கச் சொல்லி விட்டு தனசேகருடன் வீட்டுக்கு வெளியே வந்தார். அவன் நடந்து செல்ல அவரும் அவன் கூடச் சென்றார். வீட்டின் அருகே இருந்த விநாயகர் கோயில் உள்ளே சென்று ஒதுக்குப் புறமாக இருந்த ஓரிடத்தில் உட்கார்ந்தார்கள். மாலையில் பெய்த மழையின் காரணமாக அவர்கள் தலைக்கு மேல் எரிந்து கொண்டிருந்த மின்விளக்கைச் சுற்றி விட்டில்கள் பறந்து கொண்டிருந்தன.
தனசேகர்தான் பேச்சை ஆரம்பித்தான். “மாமா, பெரிய பிரச்சினைல மாட்டிகிட்டு இருக்கேன்.”
“ஏன்? என்ன ஆச்சு?”
“பன்னீர் என்னை ஏமாத்திட்டான். கவர்மெண்ட் டிபார்ட்மென்டுலேந்து பணம் வர லேட்டாயிட்டு இருக்குன்னு நினைச்சிட்டு இருந்ததெல்லாம் ஏற்கனவே பைசல் பண்ண கணக்குகளாம்” என்றான் தனசேகர்.
“அப்படின்னா?”
“அவன் அங்கேர்ந்து வாங்கின செக்கு, கேஷ் எல்லாத்தையும் இன்னொரு பாங்கு கணக்குல போட்டு சுருட்டிட்டான், நம்ம புஸ்தகத்துல அதை எல்லாம் இன்னும் வசூல் பண்ணாத பணம்னு ஒரு பக்கம் காமிச்சுக்கிட்டே.”
“அப்ப ரெண்டு பேங்க் அக்கவுண்ட் வச்சிருந்தது உனக்கும் தெரியுமா?”
அவன் தயக்கத்துடன் தலையாட்டினான். “ஆரம்பத்துல ரெண்டா தொறந்தோம். கேஷ் டிரான்சாக்சனுக்கு தனியே ஒண்ணு வச்சுக்கணும்னு பன்னீர் சொன்னான். பணம் கைமாறாம கவர்மெண்டுல நம்ம சொந்தப் பணத்தையே எடுக்க முடியாதுன்னு உங்களுக்கும்தான் தெரியுமே? அதனால கேஷ் கலெக்சன் எல்லாம் அதுல போட்டோம். திடீர்னு ஆறு மாசத்துக்கு முன்னலேர்ந்து வந்த முக்காவாசி செக்கு கலெக்சனை எல்லாம் முதல் அக்கவுண்டுக்கு போட்டு பிசினஸ் நடத்தறதுக்கு பதிலா ரெண்டாவது அக்கவுண்டுல போட்டு ஏமாத்திட்டான். நாலு மாசத்துக்கு முன்னால. எனக்கு சந்தேகம் கொஞ்சம் வந்திச்சு ஆனா நான் சுதாரிக்கிறதுக்குள்ள கீள விளுத்தாட்டிட்டு ஓடிட்டான்.”
அப்போது விட்டில் பூச்சி ஒன்று அவர் மீது விழுந்தது. அதைத் தள்ளி விட்டு அவர் மேலே விளக்கைப் பார்த்தார். மோதிக் கீழே விழும் விட்டில்களைப் பற்றிக் கவலைப்படாமல் மேலும் புதியவை விளக்கின் மீது பாய்ந்து கொண்டிருந்தன.
.
அங்கிருந்து பார்வையை விலக்கி சாரங்கபாணி மறுபடியும் தனசேகரைப் பார்த்தார்.
“இப்ப தலைக்கு மேலே வந்து கழுத்துல இறங்கறதுக்குத் தயாரா கத்தி நிக்குது. பிசினசுக்குன்னு பாங்கில வாங்கின கடனுக்கு அடமானமா பிளாட்டு, நகை, காரு எல்லாம் வச்சேன். இப்ப அதையெல்லாம் ஜப்தி பண்ண வரப் போறாங்க”
என்றான்.
“பன்னீருக்கும் சொத்து பிராப்ளம் வந்திருக்கும்ல?’
“இல்ல. அவன் அடமானம் வச்சது கொஞ்சமாத்தான். நான்தான் ஒவ்வொரு தடவையும் பிசினசை மேல கொண்டு வரணும்னு கண்மூடித்தனமா எல்லாத்தையும் கொண்டு வச்சேன்” என்றான் தனசேகர்.
அவருக்குத் தூக்கி வாரிப் போட்டது. தனசேகரின் கூட்டாளி அவனை ஏமாற்றி விட்டான் என்று கேட்ட போது அவர்கள் தொழில் இனிமேல் நடக்கப் போவதில்லை என்றுதான் அவர் நினைத்தார். ஆனால் இப்படி நடுக் கிணற்றில் அவனை இறக்கிப் புதைக்க பன்னீர் முயன்று விட்டான் என்பதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. பன்னீர் கெட்டிக்
காரனில்லை. தனசேகர் இவ்வளவு பெரிய ஏமாளியாக இருக்கும் வரை.
அடுத்த ஒரு வாரம் சாரங்கபாணி தனசேகருடன் அலைந்து திரிந்தார். ஆனால் வங்கியில் ஒன்றும் செய்ய இயலாது என்று கையை விரித்து விட்டார்கள். பன்னீர் மீது மோசடிக் குற்றம் சாற்றக் கூட தனசேகரின் பொருளாதாரம் இடம் கொடுக்கவில்லை. ஒரு மாதத்தில் தனசேகரின் சொத்துக்கள் அவன் கையை விட்டு அகன்றன. நல்ல வேளையாக,
திலகவதியின் வேலை குடும்பத்தின் அஸ்திவாரம் சரிந்து விடாமல் காத்தது.
நாகலட்சுமியும் சாரங்கபாணியும் திலகவதிக்கு ஆறுதலாய் அவர்களால் முடிந்த உதவிகளைச் செய்தார்கள். ஆனால் கீழே விழுந்த தனசேகர் தன்னால் இனிமேல் எழுந்திருக்கவே முடியாது என்று நினைத்து விட்டவன் போல நடந்து கொண்டான். திலகவதியின் மீதும் குழந்தைகள் மீதும் தேவையற்ற கோபத்தைக் காட்டி அவர்களை வதைத்தான்.
வேறு எங்கும் போய் வேலை கிடைக்க முயற்சி எதுவும் செய்யாமல் குடும்பப் பாரத்தை அதிகரித்தான். நீந்தத் தெரியாதவன் தண்ணீரில் விழுந்து விடுவது பிரச்சினையில்லை. ஆனால் தெரிந்து கொண்டே அங்கே கீழே கிடக்கப் பார்ப்பதுதான் மூழ்கிப் போவதற்கு வழி செய்கிறது. ஒரு கட்டத்துக்கு மேல் அவனுக்கு அறிவுறுத்துவதை சாரங்கபாணி நிறுத்திக் கொண்டார். ஆனால் திலகவதிக்கு வாழ்க்கை நரகமாகிக் கொண்டிருந்ததை கணவனும் மனைவியும் மிகுந்த மனச் சோர்வுடனும் சோகத்துடனும் பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதாக இருந்தது.
திடீரென்று சாரங்கபாணியின் மாப்பிள்ளைக்கு அவனைப் பெங்களூருக்கு மாற்றி விட்டார்கள் என்று
சென்னையைக் காலி பண்ணிக் கொண்டு வர வேண்டியதாயிற்று. இருந்தாலும் திலகவதியுடனான தொடர்பு அறுந்து விடவில்லை. அவர்கள் பெங்களூர் வந்த ஒரு வருஷத்தில் தனசேகரின் மரணச் செய்தி கேட்டு கணவனும் மனைவியும் சென்னைக்கு ஓடினார்கள். திலகவதியைப் பார்த்துத் திடுக்கிட்டார்கள்.சாயம் போன நூல் புடவை தறியில் கிடந்தது போன்றிருந்தாள் அங்கிருந்த போது மிகுந்த குடியின் காரணமாக தனசேகரன் மரணம் ஏற்பட்டது என்று தெரிந்தது. குடிகாரனாக அவன் திலகவதியை எல்லையில்லாமல் துன்புறுத்தினான் என்றும் தெரிய வந்தது.
@@@@@
மாலை நான்கு மணிக்கே குளிருடன் சூரியன் இரவைக் கொண்டு வர முயன்று கொண்டிருந்தான். வாசலில் நாற்காலிகளைப் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள் திலகவதியும், சாரங்கபாணியும், நாகலட்சுமியும். திலகவதியும் மற்றவர்களும் மதிய உணவுக்கு வரும் போதே இரண்டு மணியாகி விட்டது. சாப்பிட்டவுடன் மற்றவர்கள் ரெஸ்ட் எடுக்கிறேன் என்று போய் விட்டார்கள்.
“ரொம்பக் குளுருதே?” என்றாள் திலகவதி. அவள் நீலமும் பச்சையும் கலந்த சால்வையைக் கழுத்து வரைக்கும்
குளிருக்கு அடக்கமாகச் சுற்றிக் கொண்டிருந்தாள்.
“ஆமா. இதைச் சுத்திக்கிட்டா உடம்புக்குக் குளிரும் வெய்யிலாயிடும்” என்றார் சாரங்கபாணி சிரித்தபடி.
“மூடி மறைச்சிருதுன்னு சொல்றீங்களா மாமா?” என்று திலகவதி சிரித்தாள். நாகலட்சுமியும் அந்தச் சிரிப்பில் கலந்து கொண்டாள்.
“நீ ஒரே ஆளா நின்னு குழந்தைகளை வளர்த்து ரொம்ப நல்லாப் படிக்க வச்சு நல்ல இடத்தில சம்பந்தம் பார்த்துக்
கலியாணம் கட்டிக் கொடுக்கறதை நினைச்சா மலைப்பா இருக்கும்மா” என்றாள் நாகலட்சுமி
“நாம என்ன செய்யறோங்கிறீங்க அத்தை? மேலே இருக்கற பெரியவன் பூவைக் கொண்டு வந்து கொட்டறான் .மாலையைக் கட்டிக்கோன்னு சொல்லி. ஒளுங்கா பூவை எடுத்து சரியா மாலையைக் கட்டுறமா? அதான் நாம செய்ய வேண்டிய காரியம். நல்ல வேளையா எனக்குக் கையில ஒரு வேலை இருந்திச்சோ தெருவுக்கு வராம தப்பிச்சமோ?’ என்றாள் திலகவதி.
“தனசேகரும் இருந்து இந்த அளவுக்கு நீங்க மேலே வந்திருக்கிறதைப் பாத்தா ரொம்பவே சந்தோசப்பட்டிருப்பான்” என்றார் சாரங்கபாணி.
“அப்படீன்னா நினைக்கிறீங்க?’ என்றாள் திலகவதி.
சாரங்கபாணி அவளைப் பார்த்தார். இப்போது அந்தச் சால்வை கழுத்துக்கு மேலே ஏறி முகத்திலும் படர்ந்திருந்தது போல அவருக்குத் தோன்றிற்று.
————————————–
- யாப்புக் கவிதைகளின் எதிர்காலம்?
- புறநானூற்றுப் பாடல்களில் அறநெறிகள், வாழ்வியல் கூறுகள்
- தொலைத்த கதை
- மீளாத துயரங்கள்
- ஆவி எதை தேடியது ?
- கோவர்த்தமென்னும் கொற்றக் குடை
- கவிதை
- நகுலனிடமிருந்து வந்த கடிதம்
- அயலக இலக்கியம் : சிங்கப்பூரிலிருந்து சித்துராஜ் பொன்ராஜ் படைப்பிலக்கியச் சாதனை சமீபத்திய இரு நூல்களை முன் வைத்து …
- தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – -9 குளிர், 10 வேண்டாம் பூசனி
- செப்டம்பர் 2020 – வாரம் ஒரு சிறுகதை – சால்வை
- ’ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- தக்கயாகப்பரணி [தொடர்ச்சி]