தக்கயாகப்பரணி [தொடர்ச்சி]

This entry is part 13 of 13 in the series 6 செப்டம்பர் 2020

                                                                  

                   பொய்கைசூழ் புகலிப் பெருந்தகை

                        பொன்னி நாடு கடந்துபோய்

                  வைகை சூழ்மதுரா புரித்திரு

                        வால வாயை வணங்கியே.                 [171]

[பொய்கை=குளம்; புகலி=சீர்காழி; பொன்னி=காவிரி; ஆலவாய்=மதுரை; ஆலம்=நஞ்சு]

      திருக்குளங்கள் பல நிறைந்த சீர்காழிப் பதியில் அவதரித்த திருஞானசம்பந்தர் பொன்னி ஆறு என்னும் காவிரி பாயும் சோழநாட்டை விட்டுப் புறப்பட்டு, வைகை ஆறு பாய்கின்ற பாண்டிய நாட்டின் திருஆலவாய் என்னும் மதுரையை அடைந்து வணங்கினார். மதுரையை வணங்குவது என்பது அங்கே அருள்செய்து வரும் மீனாட்சி சுந்தரேஸ்வரரை வணங்குவதாகும்.

=====================================================================================                 

                  ஞாயில் கொண்ட மதிற்புறம் பர

                        சமய கோளரி நண்ணியே

                  கோயில் கொண்ட மடத்தை வெங்கனல்

                        கொண்டு குண்டர் கொளுத்தவே.         [172]

[ஞாயில்=மதில்; கோளரி=ஆண்சிங்கம்; குண்டர்=இங்கு இது சமணரைக் குறிக்கும்]

மதுரை மதிலின் வெளிப்புறத்தில் வேற்று சமயங்களை வாதில் வென்று அழிக்கக் கூடிய ஆண்சிங்கமான திருஞானசம்பந்தர் தங்கி இருந்த திருமடத்தைச் சமணர்கள் தீயிட்டுக் கொளுத்தினார்கள்.

=====================================================================================                 

                   திருமடத்தெரிஇட்டகுண்டர்

                        கிடக்கஅவ்வெரிதென்னலில்

                  பெருமடத்தரசைச்சுடத்திரு

                        வாய்மலர்ந்ததுபிள்ளையே.              [173]

[தென்னலில்=பாண்டியனின்; பிள்ளை=திருஞானசம்பந்தர்]

அவர் தங்கி இருந்த திருமடத்திற்குச் சமணர்கள் மூட்டிய நெருப்பு அவர்களுக்கு ஆதரவாக இருந்த பாண்டியனின் அரசைச் சென்று சுடட்டும் என்று திருஞானசம்பந்தர் திருவாய் மலர்ந்தருளினார்.

=====================================================================================                 

                   பிள்ளை கொண்ட சினத்தொடு அக்கனல்

                        சென்று தென்னர் பிரான்உயிர்

                  கொள்ளை கொண்டு உடலம் கிளர்ந்து

                        கொதிப்ப வந்து கொளுத்தவே.              [174]

[தென்னர்பிரான்=பாண்டியன்; உடலம்=உடல்; கிளர்ந்து=சூழ்ந்து; கொதிப்ப=வருத்த

திருஞானசம்பந்தர் மிகுந்த கோபத்துடன் சொன்னவுடன் அந்த நெருப்பு சென்று பாண்டிய மன்னனின் உயிரைக் கொள்ளையிட்டு, உடலில் சூழ்ந்து பெரும் வெப்ப நோயாகி வருத்தியது.

=====================================================================================

                   யந்திரங்கள் வரைந்து கட்டி

                        விரைந்து குண்டர் எடுக்கும் மா

                  மந்திரங்களின் மிக்க பேரழல்

                        மாதி ரங்களில் மண்டவே.                   [175]

[யந்திரம்=மந்திரத்தகடு; மாதிரம்=திசை; மண்டவே=நிறைந்த்து]

சமணர்கள் மன்னனின் நோயைப் போக்க மந்திர எழுத்துகளை, யந்திரத் தகடுகளில் எழுதி அவன் கழுத்தில் கட்டினர். மந்திர நீர் தெளித்து அவன் உடலை மயில்  தோகையால் விசிறினார்கள். அப்படியும் அந்நோய் தணியவில்லை. அந்நோயின் வெப்ப அழல் எல்லாத் திசைகளிலும் நிறைந்து பரவியது.

=====================================================================================                 

                  ஆவி வெந்து மந்திரம் வெந்து

                        யந்திரம் வெந்து அமைந்தோர்

                  பீலி வெந்து பாயும் வெந்தது

                        பிண்டி ஏற மண்டவே.                         [176]

[ஆவி=நீர்த்துளி; பீலி=மயில்தோகை; பிண்டி=அசோகம்; மண்டுதல்=நெருங்குதல்;

சமணர்கள் மந்திரங்கள் சொல்லித் தெளித்த நீர் ஆவியாகி மறைந்து போனது; மந்திரங்கள் எழுதி வைத்தத் தகடுகளும் வெந்து போயின. அவர்கள் வீசிய மயில் தோகையும் வெந்தது. சமணர்கள் ஆடையாக உடுத்தியிருந்த பாயும் வெந்தது. அவர்கள் வணங்கித் தொழும் அசோகமரத்தைச் சுற்றிலும் நெருப்பு நெருங்கியது.

=====================================================================================

                  ஒருவரும் பொருவாத தென்னன்

                        இரண்டு கண்களும் ஒத்தபேர்

                  இருவரும் பெரிது அஞ்சி யாம்இனி

                        என்செய்வோம் என எண்ணியே.                [177]

[பொருவாத=ஒப்பிலாத; எண்ணியே=ஆலோசித்து]

        வேறு ஒருவரைத் தனக்கு ஒப்புமை கூற இயலாத பாண்டிய மன்னனும். அம்மன்னனின் இரு கண்களைப் போல்திகழும் அரசி மங்கையர்க்கரசியாரும், அமைச்சர் குலைச்சிறையாரும் மிகவும் பயந்து போய், இனி என்ன செய்யலாம் என்று ஆலோசித்தனர்.

=====================================================================================

                 விலங்கினார் இலர்வெம்மை; எம்மையும்

                        மேல் முனிந்திடுவான்; மிகக்

                  கலங்கினான் இறை; பிள்ளை யாரை

                        அழைத்து மேல்இது காலமே.                  [178]

முனிதல்=கோபித்தல்; கலங்குதல்=வருந்துதல்; இறை=அரசன்;காலம்=ஏற்ற தருணம்]

மன்னனுக்கு வந்த வெப்ப நோயைச் சமணர்களின் மந்திரத்தால் போக்க முடியவில்லை; இனி அரசன் நம்மீது சினம் கொள்வான்; எனவே மதுரையம்பதி வந்திருக்கும் ஆளுடையப்பிள்ளையாரான திருஞானசம்பந்தரை அழைத்து இந்நோயைத் தீர்க்கக்கூடிய தருணம் இது எனத் தீர்மானித்தனர்.

=====================================================================================

என்றுபோய் அதிகாரி வைதிக

                        ராச சிங்கம் இருந்துழிச்

                  சென்று முன்னர் விழுந்து பின்னர்

                        எழுந்து தம்குறை செப்புமே.                     [179]

[அதிகாரி=அமைச்சர் குலச்சிறையார்; வைதிக ராசசிங்கம்=திருஞானசம்பந்தர்; இருந்துழி=இருக்குமிடம்; குறை=கவலை]

அதன்படி அமைச்சர் குலச்சிறையாரை, வேதநெறிப்படி ஒழுகும் ஆண்சிங்கமான திருஞானசம்பந்தர் இருக்குமிடத்திற்கு அனுப்பி வைத்தனர். அவர் சென்று சம்பந்தரை வணங்கித் தங்கள் மனக்கவலையைக் கூறினார்.

=====================================================================================

                         ”கச்சைக் கிரிநேரியர் பாவைதிருக்

                              காவற்கிறைவா! இதுகாலம்” எனக்

                        கொச்சைப்பெரு மான்அடி தன்முடியில்

கொண்டான்அதிகாரி குலச்சிறையே.      [180]

[கச்சைக்கிரி=யானையின் கழுத்தில் கட்டப்படும் கயிறு; நேரியர்=நேரி எனும் மலைக்குரிய சோழர்கள்; பாவை=சோழ அரசி மங்கையர்க்கரசியார்; கொச்சை=சீர்காழி]

      ”கழுத்தில் கயிறு கட்டப்பட்டுள்ள பல யானைகளைக் கொண்ட சோழநாட்டுப் பாவையின் மாங்கல்யத்தைக் காக்கவேண்டிய காலம்இது” என்று சொல்லிச் சீர்காழிப் பெருமான் திருஞான சம்பந்தரின் திருவடிகள் தன் தலைமீது படியுமாறு குலச்சிறையார் விழுந்து வணங்கினார்.

Series Navigation’ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *