முனைவர் நா.ஜானகிராமன்
தமிழ்த்துறைத்தலைவர்
பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கலை அறிவியல் கல்லூரி,
திருச்சிராப்பள்ளி-27
புறநானூற்றுப்பாடல்கள் அறங்கள் போதிப்பனவாகும். அறமின்றி உலகில்லை என்பதற்கு இந்த புறநானூற்றுப்பாடல்களில் நிறைய காட்டுகள் உள்ளன. அறநெறிமுதற்றே அரசின் கொற்றம் என்றும் அறநெறிபிழைத்தால் அதற்கு அறமே கூற்று என்றும் மக்களும் அரசனும் நம்பி வந்தனர். அறம் எங்கிருந்து வருகின்றது என்றால் அது வாழ்வியலில் இருந்துதான் என்கின்றனர் அறிஞர்கள். ஒருவன் அன்றாட வாழ்வில் அறநெறி தவறாமல் இருக்க வேண்டும் என்பதற்கும் , எதிர்கால இலட்சியப்பாதையைச் சரிவர அமைத்துக்கொள்ளலுக்கும் அறம் துணை செய்கின்றது. இம்மை மாறி மறுமையிலும் ஒருவனுக்குப் பிறப்பறுப்பது அறமே ஆகும். அறமின்றி வாழ்க்கை அர்த்தமற்றதாகிவிடுகின்றது. ஆற்று மணவினும் பலவே என்பது வாழ்ந்த மனிதர்களின் எண்ணிக்கையை குறிக்கின்றது. நல்லவன் தீயவன் என்பது அவனது அறத்தின் அளவுகோலே ஆகும். இவற்றையெல்லாம் வைத்து புறநானூற்றை மதிப்பீடு செய்து ஆராயலாம்.
புறநானூற்று வாழ்வியலும் அறமும்
‘உண்டிகொடுத்தோர் உயிர்கொடுத்தோரே’ என்ற பாடல் உணவே இந்த உலகத்திற்கு முதன்மையானது என்பதை உணர்த்துகின்றது. அரசர்களுக்கும் புலவர்களுக்கும் உள்ள உறவு மனவுணர்வு அடிப்படையிலானதாக இருந்தது. எத்திசைச் செலினும் அத்திசைச்சோறே என்று மழுவுடைக்காட்டகத்து கையில் வாளொடு செல்லும் எவருக்கும் விறகு கிடைப்பது போலவே புலமையுள்ள எவருக்கும் எங்கு சென்றாலும் வேண்டிய பொருள் கிடைக்கும் என்ற கோபத்துடன் புலவர் ஒருவர் பாடுகின்றார். மற்றொரு புலவர் அரசன் காலம் நீட்டித்தாலும் யானையின் கோட்டிடை வைத்த கவளம் போன்றது எமது பரிசுப்பொருள் என்று கூறுகின்றார். மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு என்பது போல புலவர்கள் வாழ்ந்துள்ளனர். இன்னா செய்தாருக்கும் இனியவே செய்யவும் நம்பி வந்தவர்களுக்கு நன்மை செய்யவும் நம்பிக்கையை எஞ்ஞான்றும் காப்பாற்றுவதும் புறநானூற்றின் பாடுபொருளாக இருக்கின்றது. வாய்மையன்றி ஒரு போதும் வாக்கில்லை. பொய்மை ஒருபோதும் எழவில்லை. உணர்வும் அறிவும் இணைந்த வாழ்க்கையும், அன்பும் அறிவும் ஆழ்ந்த பண்பும் பகைதவிர்ப்பும் பொன்னும் பொருளும் போகத்திற்கு அடுத்தும் இருந்த காலம் சங்ககாலம். மாணெழில் சிதையாமல் இருந்தது என்பது வாழ்க்கையின் அறிவூற்றிலும் பண்பின் மறக்காற்றிலும்தான் என்பது பாடல்கள் காட்டும் உண்மைத் தத்துவம். ‘ஞாலம் கருதினும் கைகூடும் காலம்கருதிச் செயலுக்குரிய திட்டமும் படைவீரமும் கொடுத்தல் தொழிலும், கோடான கோடி கொடுப்பினும் தன்னுடைய நா கோடாமையும் புறப்பாடலின் அகக்கூறாகும் (தமிழண்ணல் (2009:75). வானும் வையமும் மாறிய போதிலும் தம் வாழ்நாள் கொள்கையும் குறிப்பும் மாறாமையே சங்கப்பாடலின் சொத்தாக விளங்குகின்றது.
நல்லதும் அல்லதும்
நல்லதும் அல்லதும் இரண்டு பிரிக்கவியலாத நாணயப் பக்கங்களாகும். சான்றோர்கள் என்பவர்கள் யார் என்ற வினாவிற்கு விடையளித்தலில் நல்லது செய்யாவிடினும் அல்லது செய்யாதவர்களே யென்று பாடல் பகர்கின்றது.
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
அல்லது செய்தல் ஓம்புமின் அதுதான்
எல்லாரும் உவப்பது அன்றியும்
நல்லாற்றுப் படூஉம் நெறியுமார் அதுவே (பாடல்-195)
அனைவரும் வாழ்ந்து முடிந்தபின்பு வரவுசெலவு கணக்கைப் பார்க்கின்றோம். நாம் பார்க்காவிட்டாலும் மேலுலக நம்பிக்கையில் உள்ளோர் பார்க்கின்றனர். அவ்வாறு பார்க்கின்ற போது நீங்கள் நன்மை செய்திருக்காவிட்டாலும் தீமையாவது செய்யாமல் இருந்திருந்தால் அதுவே உங்களை நன்மைப் பாதையில் கொண்டுசேர்க்கும் என்பதைப் பாடல் பகர்கிறது.
ஊரும் உறவும் , வியத்தலும் இகழ்தலும்
யாவரும் ஓரினம் யாவரும் ஓர் நாடு. யாவரும் ஓரின மக்கள் என்பதில்தான் எத்தனை மகிழ்ச்சி. இன்ப துன்பம் என்பது நமக்கு நாமே விளைவிக்கும் ஓர் விளைபொருள். இதற்கு மற்றவர்கள் காரணம் கிடையாது. வாழ்க்கை இனிமையானது என்ற சொல்வதற்கும் இல்லை. துன்பமானது என்ற தூற்றுவதற்கும் இடமில்லை. எனவே அனைத்தும் சம்மனதே ஆகும். பணத்திலும் பதவியிலும் பெரியவர் என்பதற்காக ஒருவனைப் புகழ்வதும், இது இவனிடம் இல்லை என்ற இகழ்வதும் தமிழ்ப்பண்பாடு அல்ல. வாழ்க்கை என்பது அதுவதன் ஓட்டத்தில் செல்லக்கூடியதாகும். அது வருகின்றபோது வந்தவழி தெரியவில்லை. போகின்றபோது சென்றவழியும் தெரிவது இல்லை (பெ.மாதையன் (2004) எனவே, அனைத்தையும் ஒன்றாகக் கருதவேண்டும் என்ற மனநிலையைத் தருவது புறப்பாடல்.
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே (பாடல்-192)
எனவே, யாவரோடும், சுற்றத்தோடும் சேர்ந்து வாழும் வாழ்க்கை இனிதானது. துறவு வாழ்க்கையைவிட இல்வாழ்க்கையே சிறந்தது என்று குறிக்கின்றது.
உயிர் வாழ்வின் சிறப்புகள்
உயிர்வாழ்க்கையனது பலவகைகளில் சிறப்புறுகின்றது. உயிரின் தன்மையறிந்த பின் மற்றொரு உயிரை மதிக்கவேண்டும் என்பதும், உயிர்களின் இழப்பு எத்தகைய வாட்டத்தை உண்டாக்கும் என்ற செய்தியும் புறநானூற்றில் உள்ளது. தொல்காப்பியர் உயிர்ப்பாகுபாட்டை ஆறு வகையாகப் பகுத்துள்ளார். எனினும் உயிரின் மதிப்பு அனைத்திற்கும் ஒன்றுதான். (வ.சுப.மாணிக்கம்(2007) அதனால் தான், மோசிகீரனார், நெல்லும் உயிரே நீரும் உயிரே வேல்மிகு படையுள்ள அரசனுக்கு நான் உயிர் எனப்பாடுகின்றார். (பாடல்-186) நீரின்று அமையா யாக்கை, உண்டிகொடுத்தோர் உயிர்கொடுத்தோர் உண்டிமுதற்றே உணவின் பிண்டம், உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே, நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு உடம்பும் உயிரும் படைத்திசினோரே (பாடல்-18) என்றது. உயிர் பிறத்தலும் உயிர்காத்தலும் உயிர் போக்கலும் உயிர் வாங்குதலும் என அனைத்து நிலைகளையும் புறநானூறு பேசுகின்றது. உயிர் வாழ்ந்தால் போதுமா? போதாது. காரணம் ஆயிரம் பொருட்கள் அனைத்து பதவிகள் இருந்தும் ஓர் மழலைச்செல்வம் இல்லையென்றால் வாழ்க்கை முழுமையாகாது. மழலைச்செல்வமே சிறந்த அறமாக்கத்திற்கு எடுத்துக்காட்டாகின்றது. பயக்குறை இல்லாத வாழ்வு என்பது மழலைச்செல்வமற்றது.
“படைப்புப் பலபடைத்துப் பலரேடு உண்ணும்
உடைப்பெருஞ்செல்வர் ஆயினும், இடைப்படக்
குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்ப்படவிதிர்த்தும்
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லை தாம் வாழும் நாளே” (பாடல்-188)
என்கிறது புறநானூறு.
உண்பது நாழி, உடுப்பவை இரண்டே
பிறவும் எல்லாம் ஓரொக்கும்மே
செல்வத்துப்பயனே ஈதல்,
துய்ப்போம் எனின் தப்புந பலவே (பாடல்-189) எனவே,
நிலையாமை தத்துவம், மழலைச்செல்வச் சிறப்பு போன்றவற்றை மிகத்தெளிவாக எடுத்துச் சொல்லி வாழ்க்கை அறம் புகட்டும் இந்த புறநானூற்று வரிகள் என்றும் நிலைத்திருப்பனவாகும்.
கல்வி அறமும், உலக நியதியும்
பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் எனும் அரசன் புலவனாக இருந்து பாடுகின்றான். அப்பாடல், கல்வியின் சிறப்பைப் போற்றிநிற்கின்றது. ஒருவருக்கொருவர் உதவி வாழ்தல் வேண்டும். தன்னிடம் உள்ள பொருளை மற்றவர்கள் கேட்கையில் கொடுத்து வாழ்தல் வேண்டும்.தன் ஆசிரியரிடம் வெகுளாது, ஆசிரியரின் வெகுளிக்கும் முனியாது இருந்து கற்றல் வேண்டும். இது கற்றலுக்குரிய அறமாகும் (மு.சண்முகம் பிள்ளை(2004) . அவ்வாறு கற்றுத்துறைபோகிய ஒருவனை அரசனும் விரும்புவான். ஒருகுடியில் பிறந்தாலும் மூத்தோன் என்றால் மதிப்பு வராது. அவருள் யார் கல்வியில் சிறந்து விளங்குகின்றார்களோ அவர்களுக்குத்தான் கற்றவர்கள் அவையில் சிறப்பு உண்டாகும். பல்வேறு வகையில் வேறுபாடுகளை இந்தச் சமூகம் சுமந்திருந்தாலும் கல்வியால் கீழ் உள்ளவன் மேலாக கருதப்படுவதும் கல்வி என்ற கருவியால் தான் என்பதை உணரமுடிகிறது.
“உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே
பிறப்பு ஓர் அன்ன உடன் வயிற்றுள்ளும்
சிறப்பின் பாலால் தாயும் மனம் திரியும்
ஒரு குடிப்பிறந்த பல்லோருள்ளும்
மூத்தோன் வருக என்னாது அவருள்
அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்
வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே” (பாடல்-183) என்ற பாடலடிகள் உணர்த்துகின்றது. அரசனுக்கு செவியறிவுறுவாக எண்ணற்ற பாடல்களைப் புலவர்கள் பாடியுள்ளனர். பாண்டியன் குடிமக்களிடம் நிறைய வரி வசூலிக்கின்றான் என்பதை இலைமறைகாயாக உணர்த்துகின்றார். ‘அறிவுடை வேந்தன் நெறி அறிந்து கொளினே, கோடி யாத்து நாடு பெரிது நந்தும்’வயல் வயல் நிறைய நிறைந்துள்ள நெல்மணிகளை யானைகள் கூட்டாய் சென்று அழிப்பதைப்போல வரி என்ற யானையை அவிழ்த்துவிட்டால் நாட்டுமக்கள் நிம்மதியிழப்பார்கள் என்ற கருத்தை பாண்டியன் அறிவுடை நம்பியிடம் பிசிராந்தையார் பாடுகின்றார். மக்களது வாழ்வு சிறக்க அதிக வரிச்சுமையற்ற நாடு தேவைப்படுகின்றது. அதிக வரி விதிக்காமல் நாட்டை ஆள்வதே மக்களைத் துன்புறத்தாத அறவழியாகும்.
புகழ் அறம்
புகழில் புதைந்த வாழ்க்கையை மக்கள் விரும்புவர். தோன்றிற் புகழொடு தோன்றுக அதுவல்லாமல் தோன்றாமல் இருப்பதே நன்று என்றார் வள்ளுவர். இளையோர் என்று இகழக்கூடாது என்றார் ஔவையார். அவன் வீரத்தில் சிறந்தவன். மைந்து என்ற சொல்லிற்கு இலக்கணமானவன். ஒருவர் இறந்தும் உயிர்வாழ்தல் புகழுக்கே உரியது. பாரி என்ற மன்னனை மக்கள் எல்லோரும் ஏத்திப்புகழ்கின்றனர். அந்த பாரி மட்டும்தானா இவ்வுலகில் உள்ளான். அவனை விட வள்ளல் ஒன்று உண்டு. அதுதான் இந்த உலகைக் காக்கும் மழை. அந்த மழையைவிடவா பாரி சிறந்தவன் என்கிறார் கபிலர். ஆனால் மழையைப் போன்றவன் பாரி. அதனால்தான் பாரிவள்ளல் என்கின்றோம். மாரி எவ்வாறு கைம்மாறு கருதாது மக்களுக்கு மழைதருகின்றதோ அதனைப்போன்ற பண்புள்ளவன் பாரி.
‘பாரி பாரி என்ற பலர் ஏத்தி
ஒருவர் புகழ்வர் செந்நாப்புலவர்
பாரி ஒருவனுமல்லன்
மாரியும் உண்டு, ஈண்டு உலகு புரப்பதுவே’ (பாடல்-107)
அறம்புரி கொள்கை நான்மறை
அறம்புரி கொள்கையோடு வாழ்தல் மிகவும் அரிது. நான்மறையில் சிறந்தது அறம்புரி கொள்கையாகும். அதியமானுக்கும் தொண்டைமானுக்கும் போர் நடக்கவிருப்பதை அறிந்த ஔவையார் அதனைத்தடுக்க முற்படுகின்றார் . இது பாடாண்திணையில் அமைந்த பாடல் வாள்மங்கலத்தில் வைக்கப்பெறுவது. தொண்டைமானிடம் சென்ற ஔவையார் அவனது படைக்கலக் கொட்டிலைக் காட்ட அதனைக்கண்டு பாடுகின்றார். இங்கு தூது செல்லலின் உண்டான அறம் காட்டப்படுகின்றது. அதியமான் பேரில் உண்டான அன்பால். தொண்டைமானின் படைக்கலக்கொட்டிலில் உள்ள கருவிகள் புதியதாக உள்ளன. மாறாக அதியமானின் உலைக்கருவிகளோ, பகைவர்களைக் குத்தியும் கோடுநுனி சிதைந்தும், முனைமழுங்கியும் காணப்பெறுகின்றது என்கிறார்.
‘இவ்வே பீலியணிந்து மாலைசூட்டி
கண்திரள் நோன் காழ் திருத்தி நெய் அணிந்து
கடியுடை வியல் நகரவ்வே அவ்வே
பகைவர்க் குத்தி கோடு நுனி சிதைந்து
கொல் துறைக் குற்றிலமாதோ- என்றும் ‘(பாடல்-95)
செல்வம் அதிகமாய் இருக்கையில் நிறைய வழங்கும் வள்ளல். செல்வம் குறைவாக இருக்கையில் இருப்பதை பிறருக்குப் பகிர்ந்தளித்து உண்ணும் தன்மை கொண்டவன் அதியமான் என்ற ஔவையார் அதியனைப் புகழ்கின்றார். இந்த அறநெறி வாழ்வு என்பது என்றும் மேலுலகம் செல்வதற்கு வழிவகுக்க கூடியதாகும். (புலவர் ஆ.பழனியப்பன் 2001). எத்தகைய விழாவாக இருந்தாலும் படை அரசர்களுக்கு ஊன்கொடுத்துப் பரிமாறும் பண்புடையவன்.
தொகுப்புரை
புறநானூற்றுப்பாடல்கள் வாழ்வியல் அறங்களை எடுத்தோதுகின்றன. வாழ்வியலும் போர்மறமும், குழந்தைச்செல்வச் சிறப்பும் சங்கப்பாடல்கள் காட்டுவன போல் எவையும் காட்டுவனவல்ல. நல்லது செய்வதும் அல்லது செய்வதும் அதனால் வருகின்ற விளைவும் பாடல்களில் இடம்பெற்றுள்ளன. சமுதாயமும் வாழ்வியலும் ஒருங்கிணைந்து செல்ல அறம் முக்கியமானதாகும். அறத்தின் வழியே வாழ்க்கை பயணிக்கவேண்டும். மறந்தும் பிறன்கேடு சூழக்கூடாது. தீமை பயத்தல் என்றும் தீமையே தரும் என்பதை விளக்க புறப்படல்கள் சான்றுகள் பல உள்ளன. புலவர்களும் அரசர்களும் அறத்தின் பாதையைக் கடந்து செல்லக்கூடியதாகும். புகழ்அறம், கல்விஅறம் போன்றவை வாழ்வியல் அறத்தை மெருகூட்டுவனவாகும். அரசர்களிடையே மூளும் சண்டையும் அதனை சந்துசெய்துவைத்தலும் பண்பாட்டு அறமாக இருந்து வந்தது. இதனை நாளும் வளர்த்தும் வளர்வித்தும் வருவது நமது பண்டைய இலக்கியமாகும்.
——————–
சான்றாதாரங்கள்
- சங்கமரபு (2009), தமிழண்ணல், சிந்தாமணிப் பதிப்பகம், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை.
- சங்கத் தமிழர் வாழ்வியல் (2004), மு.சண்முகம் பிள்ளை, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை
- சங்கத்தமிழ் (2009), ச.அகத்தியலிங்கம், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை
- சங்க கால இனக்குழு சமுதாயமும், அரசு உருவாக்கமும் (2004), பெ.மாதையன், பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை.
- தமிழர் பழக்கவழக்கங்களும் நம்பிக்கைகளும் (2003), க.காந்தி, உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை
- தமிழ்க்காதல் (2007), வ.சுப.மாணிக்கம், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்
- பழந்தமிழ் இலக்கியம் ஓர் ஆய்வு (2001), புலவர் ஆ.பழனியப்பன், நியூ செஞ்சுரி பதிப்பகம், சென்னை
- யாப்புக் கவிதைகளின் எதிர்காலம்?
- புறநானூற்றுப் பாடல்களில் அறநெறிகள், வாழ்வியல் கூறுகள்
- தொலைத்த கதை
- மீளாத துயரங்கள்
- ஆவி எதை தேடியது ?
- கோவர்த்தமென்னும் கொற்றக் குடை
- கவிதை
- நகுலனிடமிருந்து வந்த கடிதம்
- அயலக இலக்கியம் : சிங்கப்பூரிலிருந்து சித்துராஜ் பொன்ராஜ் படைப்பிலக்கியச் சாதனை சமீபத்திய இரு நூல்களை முன் வைத்து …
- தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – -9 குளிர், 10 வேண்டாம் பூசனி
- செப்டம்பர் 2020 – வாரம் ஒரு சிறுகதை – சால்வை
- ’ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- தக்கயாகப்பரணி [தொடர்ச்சி]