தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம். 13

This entry is part 2 of 17 in the series 27 செப்டம்பர் 2020

 

காவலுக்கு 

ரு நடைச்சித்திரத்தை அழகிய சிறுகதையாகக் கொண்டு வருவது எப்படி?  மனிதர்களில்தான் எத்தனை வகை? ஆனால் எல்லோரையும் எல்லாவற்றையும் இருவரின் பேச்சில் வெளிக் கொணரும் கலைத்திறமை தி. ஜானகிராமனிடம் பளிச்சிடுகிறது. வெத்திலைக்கார வேதாந்தி (மனுஷன் பாம்பாட்டிச் சித்தரின், சிவவாக்கியரின் சிந்தனைத் தெறிகளை உள்வாங்கிக் கொண்ட சாயபு !) வாடிக்கையாளரின் வீட்டுக்கு வெத்திலை கொடுத்து விட்டுப் போக வருகிறார். அங்கே அவர் சந்திப்பது,பொல்லென்று வெளுத்த தலை, நெற்றியில் சந்திர வளையம் போல் திருமண், தள்ளாடித் தள்ளாடி முந்தானை பக்கம் தொங்கத்  தொங்க ஆடுசதை என்று  நடந்து வந்து வாசல் திண்ணையில் உட்காரும் வீட்டுக்காரரின் தாய்க் கிழவியை. 

வந்தவரிடம் பேச்சுக் கொடுக்கும் கிழவி சாயபுவிடம் “நேத்திக்கு கூட நினைச்சிண்டேன் உன்னை. தினமும் குரல் கேக்கும், செத்துப் போயிட்டானோ இருக்கானோ தெரியலியேன்னு நினைச்சிண்டிருந்தேன் !” என்கிறாள். என்னமாய் ஒரு அமங்கலமான விஷயத்தை இப்படித் தூக்கி வாரிப் போடும்படியாகக் கேட்கிறாள் இந்தக் கிழவி என்று நாம் திடுக்கிடுகிறோம். 

“இப்ப தெரிஞ்சுதா இல்லியா இருக்கேனா, செத்திட்டேனான்னு.”

“எதுக்காக செத்துப்  போகணும்? மகாராஜன் இன்னும் நூறு வருஷம் இரு. உன்  தம்பி சடையன் குத்தகைக்கு வச்சிண்டுருந்தானே, அவன் செத்துப் போயிட்டானோ இருக்கானோ ?”மறுபடியும் அதே மாதிரிக் கேள்வியா?

சாயபு கிழவியிடம் அவன் ஐந்து வருஷங்களுக்கு முன்பு ஊருக்கு வந்திருந்த போதும் சாயபுவின் தம்பி இருக்கின்றானா  என்று கேட்ட கேள்வியை நினைவு படுத்துகிறார். ‘அவன் இப்போதும் நல்லாத்தான் இருக்கிறான். என் தம்பின்னா எனக்கு அப்புறம்தானே  செத்துப் போகணும் ?’ என்கிறார் வேதாந்தி. என்ன ஒரு லாஜிக் !! 

கிழவி தன் பிள்ளையுடன் கான்பூரில் இருப்பதைப் பற்றிச் சொல்கிறாள். எப்போதாவது இரண்டு அல்லது நாலு வருஷத்துக்கு ஒரு முறை ஊருக்கு வருவதைப் பற்றிச் சொல்லுகிறாள்.”ஒவ்வொரு தடவையும் கேக்கற சேதியெல்லாம் தூக்கி வாரிப் போடறது. என் மச்சினன் புள்ளே ஆராமுது  பொண்டாட்டி மேலே கோச்சிண்டு கொளத்திலே விழுந்து ப்ராணனை விட்டுட்டானாம். போன தரம் வந்து ஒரு நாழிக்கெல்லாம் இந்தச் சேதியைச் சொன்னா. சொரேர்னுது. எனக்கு. அத்தோடவா, ராதா பொண்டாட்டி என்னோட பரமசிநேகிதி. அவளைப்  பாத்துட்டு வரணுமேடின்னேன் பெரிய மாட்டுப் பொண்ணுக்கிட்டே. அவ கான்சர் வந்து செத்துப் போயிட்டாளேம்மான்னாளே பாரு. நாலு நாளைக்கு சோறு எறங்கலெ. இந்த மாதிரிதான் ஒவ்வொரு தடவையும்…..” என்கிறாள். 

“அது சரி. அப்படின்னா, செத்துப் போயிட்டாங்களா, இருக்காங்களான்னு ஏன் கேக்கறீங்க?   இருக்காங்களா,  செத்துப் போயிட்டாங்களான்னு கேக்கப்படாதா?”

அப்படி மாற்றிக் கேட்டால் மட்டும் செத்துப் போனவர்கள் பிழைத்து விடப் போகிறார்களா என்று கிழவி கேட்கிறாள். அதே வேகத்தில் “இப்ப செட்டியார் செத்துப் போயிட்டாராமே?” என்கிறாள். 

“பாத்தீங்களா, மறுபடியும் அப்படியே கேட்டுட்டீங்களே” என்கிறார் வேதாந்தி. 

“ஆமா, நான் கேட்டுத்தான் எசைகேடா ஆயிடுமாக்கும் !”

பேச்சு, கிழவியின் கான்பூர் வாழ்க்கை பற்றித் தொடர்கிறது. அவளது பேரன்கள் ஜாதி விட்டு (ஐயர்-ரெட்டி), மதம் விட்டுத் (இந்து முஸ்லீம்) திருமணம் செய்து கொண்டதைப் பற்றிக் கிழவி சொல்கிறாள். அதைக் கேட்டு வேதாந்தி, பாம்பாட்டிச் சித்தரின் ‘சாதிப்பிரிவினிலே தீயை மூட்டுவோம், சந்தை வெளியினிலே கோலை நாட்டுவோம்’ என்ற பாடலைப் பாடுகிறார்.  தொடர்ந்து சிவவாக்கியரின் ‘மீன் இறைச்சி தின்றதில்லை, அன்றும் இன்றும் வேதியர் மீன் இருக்கும் நீரல்லோ மூழ்வதும் குடிப்பதும்’ என்ற பாடலைப் பாடி ஆடுகிறார். “போரும் போருமே’ என்று கிழவி காதைப்  பொத்திக் கொள்கிறாள்.

அப்போது கிழவியின் மாட்டுப் பெண் கஸ்தூரி என்ன அமர்க்களம் என்று கேட்டுக் கொண்டு வருகிறாள். ” என்னய்யா ஆட்டத்துக்கு இப்ப?”

“ஒண்ணுமில்லே. சந்தோசமா  சேதி சொல்றாங்க. சின்னப் பேரன் எங்களவங்க பொண்ணை கலியாணம் செஞ்சிக்கப் 

போறங்களாமே கான்பூர்லே . யாரா இருந்தா என்ன? எங்கிருந்தா என்ன?” என்று பாடி உட்காருகிறார் வேதாந்தி.

“வேதாந்தி கிட்டவும் சொல்லியாச்சா – பெரிய சமாச்சாரத்தை?” என்று மாமியாரைப் பார்த்துப் பல்லைக் கடிக்கிறாள் கஸ்தூரி அம்மாள். “ஏந்துண்டு உள்ளே போங்களேன்.  வெத்திலைக் காராட்டல்லாம் ஆத்து சமாச்சாரத்தை யெல்லாம் 

கொட்டணுமா? ஊர் சிரிக்கணுமா?”

வேதாந்தியிடம் அவள் பேரனைப் பற்றிப் பகிர்ந்ததை மருமகள் கேள்விக்குள்ளாக்கையில் “இப்பதான் தந்தி ரேடியோவெல்லாம் வந்து அலகாபாத்தில்லே மூச்சு விட்டா அம்மா சத்திரத்தில் வந்து கேக்கிறதே” என்று ஒரு போடு போடுகிறாள்.  கிழவி ஊரில் உள்ள பலரும் இதைப் பற்றித் தன்னிடம் வெளிப்படையாகவும் மறைமுகவும் சொன்னார்களே, அவர்களுக்கு எப்படித் தெரிந்தது என்று கேட்கிறாள்.  ‘நான் சொன்னேன்னு சொல்றேளா?’ என்கிறாள் மருமகள். கிழவி அவளைப் “போடி..போ” என்கிறாள். அவள் கணவர் உப்பிலி  – கிழவியின் பிள்ளை – வெளியேயிருந்து வந்ததும் கஸ்தூரி அம்மாள் அவரை உசுப்பி விடுகிறாள். அவர் கிழவியைப் பார்த்து “நீ எதுக்கு வாசலுக்கு வருகிறாய்? உள்ளேயே இருக்க வேண்டியதுதானே” என்று கத்துகிறார். கிழவி “போடா, அங்கெ புழுங்கறது. நான் ரேழியிலேதான் படுத்துப்பேன்” என்கிறாள்.

அன்று மாலை உப்பிலியும் கஸ்தூரி அம்மாளும் கடைத்தெருவுக்குக் கிளம்புகிறார்கள். “காமிரா உள்ளை நன்னாப் பூட்டிண்டு வா” என்றபடி உப்பிலி வாசல் பக்கம் போகிறார். ரேழியைக் கடக்கும் போது “எல்லாம் பூட்டியாச்சு. ரேழியிலே காவலுக்கு நாய் படுத்திண்டிருக்கே” என்று கிழவி காதில் மட்டும் கேட்கும்படி கஸ்தூரி சொல்லிக் கொண்டு போகிறாள்.

“சின்ன நாய் வெளியே போனா, பெரிய நாய்தான் காவல் காக்கணும்” என்கிறாள் கிழவி. கஸ்தூரி அம்மாள் கணவனிடம் புகார் செய்கிறாள். உப்பிலி  தாயிடம் என்னம்மா சொன்னே என்று கேட்கிறார். அவள் மருமகள் தன்னைக் காவல் நாய் என்று சொன்னதால் தானும் அவளை நாய் என்று அழைத்ததாகச் சொல்கிறாள். 

“ராட்சசிக்குப் ப்ரோக்ஷசின்னு சொல்லணும் போல இருக்கு. நீ எனக்கு அம்மா. அவ பொண்டாட்டி. பத்து புலி சேர்ந்து விளையாடும். ரெண்டு பொம்மனாட்டி…” என்றபடி மனைவியை அதட்டுகிறார்.இருவரும் போகிறார்கள்.

“நீங்க சண்டை போடாம சௌஜன்யமா இருங்கோ. ஆண்  நாயும் பெண் நாயும்” என்று கிழவி முணுமுணுக்கிறாள்.

சிறுகதை முழுவதும்  கிழவியின் பாய்ச்சல் தீர்மானமாகத் தெரிகிறது. தனது வார்த்தைதான் கடைசி வார்த்தையாக இருக்க வேண்டும் என்று பிடிவாதத்துடன் ஓவ்வொரு முறையும் அதை சாதித்துக் கொண்டு வரும் அவளது வாய்ச்சாலகம் வாசகரை அயர  அடிக்கிறது.  .  

Series Navigationபதிப்பகச் சூழலில் செம்மையாக்குநர்கள்அக்கா
author

ஸிந்துஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *