யாப்பிலக்கண நூல்கள்: ஓர் அறிமுகம்

author
0 minutes, 36 seconds Read
This entry is part 6 of 17 in the series 27 செப்டம்பர் 2020

 

சு.பசுபதி, கனடா  

1. அறிமுகம்

யாப்பிலக்கண நூல்களின் வரலாறு தமிழிலக்கிய வரலாற்றுடனும், கவிதை வடிவங்களின் வளர்ச்சியுடனும் இணைந்து நடைபோடும் ஒரு களம். சங்க காலத்தின் ஆசிரியப்பாக்கள், நீதிக் காலத்தின் வெண்பாக்கள், காப்பிய காலத்தின் விருத்தங்கள், சிற்றிலக்கிய காலங்களின் சந்தங்கள், பிரபந்தங்கள் முதலியவற்றின்  வளர்ச்சிகள் புதிய யாப்பு நூல்கள் எழக் காரணங்களாய் இருந்தன. கால வரிசைப்படி அத்தகைய வரலாற்றை ஒரு பருந்துப் பார்வையாய்ப் பார்ப்பதே இந்தக் கட்டுரையின்  முக்கிய நோக்கம். நூல்களில் ஏற்பட்ட வளர்ச்சிகளும், மாற்றங்களும்  யாப்பின் வள்ர்ச்சியை மட்டுமின்றி,  காலத்திற்கேற்றபடி யாப்பிலக்கணக் கல்வியில் ஏற்பட்ட  மாற்றங்களையும் குறிப்பிடும். 

யாப்பிலக்கண நூல்களை யாப்பருங்கலக் காரிகை வரை தோன்றியவை, காரிகைக்குப் பின் எழுந்தவை என்று பட்டியலிடுவது ஒரு வசதியான முறை. இந்த நூல்களையும் முழுதும் கிட்டியவை, கிட்டாதவை, செய்யுள் வடிவில் உள்ள மூல நூல்கள், அவற்றின் உரைகள், தமிழிலும், ஆங்கிலத்திலும் தோன்றிய ஆய்வு நூல்கள், உரைநடையில் உள்ளவை, இலக்கணச் சுருக்கங்கள் என்றெல்லாம் பிரிக்கலாம். தொல்காப்பியம் போன்ற மூல நூல்களின் உரைகள் காரிகைக்குப் பிந்தைய காலத்தில் எழுந்தன என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.   

2. தொல்காப்பியம்

காரிகை வரை தோன்றிய நூல்களில், இன்றும் நமக்கு வழிகாட்டும் மூன்று நூல்கள் : தொல்காப்பியம், யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை.

தொல்காப்பியத்தில் மிகப்பெரிய பகுதி பொருளதிகாரம்; மிகப் பெரிய இயல் செய்யுளியல்.

அக்காலத்திற்கு முந்தைய யாப்பிலக்கண மரபுகளைத் தொகுத்து நமக்கு அளித்துள்ளது தொல்காப்பியத்தின் ஒரு சிறப்பு. இந்தச் சிறப்பை   நோக்கி, செய்யுளியலை யாப்பதிகாரம் என்றே கூறும் வழக்கமும் எழுந்தது. மேலும், அந்தக் காலத்தில் யாப்பைத் தனியாகப் பார்க்காமல், பொருளின் தன்மை அல்லது பொருண்மையுடன் சேர்த்தே பார்க்கும் வழக்கம் இருந்தது என்பதைப் பதிவு செய்கிறது செய்யுளியல்.  பிற்காலத்தில் தோன்றிய யாப்பிலக்கண நூல்கள் பெரும்பாலும் செய்யுள் வடிவங்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளன என்பதும் எண்ணத் தகுந்தது.  பொருண்மைக்கு அதிகமான முக்கியத்வம் கொடுக்காவிடினும், புதிய பா வடிவங்கள் புதிய பொருள்களுக்கும், காலத்திற்கேற்ற கருத்துகளுக்கும்  தகுந்தபடி பயன்படுத்துவதை இலக்கியச் சான்றுகள் நமக்கு  நன்கு காட்டுகின்றன.

இன்றும், பொருண்மைக்கேற்ற பாவடிவத்தைத் தேர்வு செய்வது என்பது இலக்கண நூல்களில் எழுதப்படாத ஒரு கலைநுட்பம் கொண்ட விஷயமாகவே இருக்கிறது. கம்பனின் காப்பியத்திற்கு விருத்தங்கள்  தேர்வு செய்யப்பட்டதே  இதனால் தானே? மே;லும் சில சான்றுகளைப் பார்ப்போம். சிறப்பான வெண்பாக்களை இயற்றுபவர் என்று கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை பெயர் பெற்றிருந்தா;லும் , உமர் கய்யாம் பாடல்களை மொழிபெயர்க்க அவர் விருத்தத்தையும், புத்தரின் வரலாற்றைக் கூற ஆசிரியப்பாவையும் தாம் தேர்ந்தெடுத்தார். மேலும், பிற்காலத்தில் எழுந்த பலவகைப் பிரபந்தங்கள்  எந்தெந்த  வகை நூலுக்கு எந்தெந்த பாவோ, பாவினமோ பயன்படுத்தலாம் என்று வரையறுப்பதையும் நாம் படிக்கிறோம்.

 இயற்பாவில் மட்டுமின்றி, இசைப் பாடலிலும் இந்தச் சிரமம் இருப்பதைப் பார்க்கலாம். பாரதியார் இசைபற்றிய ஒரு கட்டுரையில் ஒரு பிரபல இசையாசிரியரின் பாடலின் ராகம் பாட்டின் பொருளுக்கேற்றதாய் இல்லை என்று விமர்சித்தார். இன்றும் ஓர் இசைப்பாடலுக்கு ஏற்ற ராகத்தைத் தேர்வு செய்வது சிரமமான காரியமாகவே இருக்கிறது. பாரதிதாசனின் “துன்பம் நேர்கையில்” என்ற பாடலைப் பலகாலம் யோசித்துத்  தண்டபாணி தேசிகர் “தேஷ்” ராகத்தில் அமைத்தார் என்று படிக்கிறோம்.  புதிய முறையிள்  சிந்துப்பாக்களால் தன் ” பாஞ்சாலி சபதம்”  அமைத்த பாரதி , எப்படி பகடையாட்டத்தை விவரிக்க ஒரு குறத்திப் பாட்டை முன்னுதாரணமாய் எடுத்துக் கொண்டார் என்றும் பார்க்கிறோம்.   பொருளுக்கேற்ற பாடல் வடிவம் அமைப்பதில் உள்ள சிரமத்தை  எண்ணும்போது தொல்காப்பியத்தில் பொருண்மையுடன் தொடர்புபடுத்திச் செய்யுளியல் அமைக்கப் பட்டிருப்பதை எண்ணி வியக்காமல் இருக்க முடியாது.

3. யாப்பருங்கலம், காரிகை

தொல்காப்பிய  காலத்திற்கும்  யாப்பருங்கலக் காலத்திற்கும்  இடையில் 15-க்கும் மேற்பட்ட  பல நூல்கள் தோன்றியதை யாப்பருங்கல விருத்தியுரையில் உள்ள பல நூற்பாக்களால் நாம் அறியமுடிகிறது. அவிநயம், பல்காயம், காக்கைபாடினியம் போன்றவற்றுள் எந்த நூலும் நமக்கு முழுமையாய்க் கிட்டவில்லை. கிட்டிய நூற்பாக்களைத் தொகுத்து ‘அவிநயம்’,’காக்கைபாடினியம்’  என்ற நூல்களை அறவாணனும், இளங்குமரனும் அளித்துள்ளனர். இவற்றில் காக்கைபாடினியம் ஒரு சிறந்த இடத்தை வகிக்கிறது. ஏனெனில் யாப்பருங்கலமும், காரிகையும்  இலக்கண நெறிகளில் பெரும்பாலும்  காக்கைபாடினியத்தையே பின்பற்றுவதை நாம் காணலாம்.  முக்கியமாகப் பாவினக் கொள்கைகள் பெரும்பாலும் இன்று கடைபிடிக்கபட்டு, மேலும் வளர்ச்சி அடைவதற்குக் காக்கைபாடினியத்தைப் பின்பற்றிய யாப்பருங்கலமும், காரிகையுமே முக்கிய காரணங்கள் எனலாம்.

தொல்காப்பியத்திற்குப் பின்  நமக்கு முழு நூலாய்க் கிட்டிய யாப்பிலக்கணப் பொக்கிடம் யாப்பருங்கலம். இது 10-ஆம் நூற்றாண்டில் அமிதசாகரர் இயற்றிய நூல். இதன் சிறப்பைப் பற்றித் தி.வே.கோபாலையர்

” மக்களிடையே பாவினம் பற்றிய யாப்புச்செய்திகள் பலவும் காக்கைபாடினியார் முதலியோரால் தம்நூல் வாயிலாகப் பரப்பப்பட்ட பிறகு யாப்பருங்கலத்தில் அவை குறிப்பிடாத தனிச் சிறப்புடைய செய்தி எதுவும் இல்லை. இந்நூலுக்குச் சிறப்புத் தருவது இந்நூலாசிரியரின் மாணாக்கரான குணசாகரர் இயற்றிய பேருரையே.  ” என்று  சொல்வது எண்ணத் தகுந்தது.  இளங்குமரனாரும், ” யாப்பு இலக்கணத்திற்கென அமைந்த ஒரு கலைக்களஞ்சியம் யாப்பருங்கல விருத்தி என்பது புனைந்துரை அன்று” என்றும் கூறியுள்ளார்.

அமிதசாகரர் கட்டளைக் கலித்துறைப் பாக்களால் ( அல்லது காரிகை யாப்பில் ) இயற்றிய நூலே யாப்பருங்கலக் காரிகை. காரிகையின் சிறப்பைப் பற்றி வ.சுப.மாணிக்கம்

” பிற்கால யாப்புக் கல்விக்கு யாப்பருங்கலக் காரிகை போல் வேறொரு நூல் துணையானதில்லை.  முறையாலும், அடக்கத்தானும், சுருக்கத்தானும் காரிகைப்புகழ் நிலையானது. மாணவர்க்கு யாப்பு கற்பிக்கும் ஒரு நோக்கத்தோடு இயற்றப்பட்ட பாடநூல் இது” என்று சொல்வது  குறிப்பிடத்தக்கது.

இந்நூலுக்குக் குணசாகரர் இயறிய உரையுள்ளது. எப்போதேனும் இந்த உரையில் உள்ள விளக்கம் போதுமானதாக இல்லாதபோது  யாப்பருங்கல விருத்தியுரை நமக்குப் பெரும் துணையாய் உள்ளது. இரண்டு நூல்களிலும் உள்ள சான்றுப் பாடல்கள் பிற்கால நூல்களின் அமைப்பிற்கு முன்னோடியாய் உள்ளன.

4. காரிகைக்குப் பின்

காரிகைக்குப் பின் எழுந்த நூல்களைப் பலவகைகளில் பிரிக்கலாம்.  யாப்பைப் பற்றிக் கூறும் பொது இலக்கண நூல்கள், தனி யாப்பிலக்கண நூல்கள், ஆய்வு நூல்கள்,பாட்டியல்-யாப்பு இலக்கணங்களைச் சேர்த்துக் கூறும் நூல்கள், ஒரு பாவினத்தைப் பற்றியோ, யாப்பின் ஒரு அங்கத்தை மட்டுமோ விளக்கும் நூல்கள், உரைநடையில் வந்த யாப்பிலக்கண நூல்கள் என்றெல்லாம் அலசலாம். விரிவுக்கஞ்சி, இவற்றில் சிலவற்றை மட்டும் இங்குப் பார்ப்போம்.

* சொல், எழுத்து, பொருள், யாப்பு, அணி என்று விளக்கும்  வீரசோழியம் போன்ற சில ஐந்திலக்கண நூல்கள்  முதலில் எழுந்தன .  பின்னர் ஆறாம் இலக்கணமாகப் ‘புலமை’ யைச் சேர்த்து,  ‘அறுவகை இலக்கண’மும்.      ‘தவவியல்பு’ என்று கூட்டி ‘ஏழாம் இலக்கணமும்’ வெளியிட்டார் தண்டபாணி சுவாமிகள்.

பள்ளிகளில் பயன்பட உதவும்படி, காரிகையைச் சுருக்கி வெளியிட்ட பல நூல்களும் இந்தக் காலத்தில் வந்தன. சான்றுகள்; விசாகப் பெருமாளையரின் பால போத இலக்கணம், திரிசிரபுரம் முத்துச்சிதம்பரம் பிள்ளையின் யாப்பிலக்கணச் சுருக்கம். 

*  ஆய்வு நூல்கள்: 1941-இல் , அ.சிதம்பரநாதனார் எழுதிய ” Advanced Studies in Tamil Prosody”  ,  சி.சுப்பிரமணியன் எழுதிய ” The Commonness in the Metre of the Dravidian Language”,  சோ.ந.கந்தசாமியின் ‘ தமிழ் யாப்பியலின் தோற்றமும் வளர்ச்சியும்”, ய. மணிகண்டனின் ” தமிழின் யாப்பிலக்கண வளர்ச்சி” போன்றவை குறிப்பிடத் தக்கவை.

* யாப்பு-பாட்டியல் இலக்கண நூல்கள்; பரஞ்சோதியாரின் சிதம்பரப் பாட்டியல், கவி பாலபாரதியின் இலக்கணச் சூடாமணி போன்றவை. எந்தெந்த வகை இலக்கியத்தில் எந்தந்த பா, பாவினம் இடம் பெற வேண்டும் என்று இவை சொல்வது பொருண்மைத் தொடர்புடன் செய்யுளியல் செய்த தொல்காப்பியரின் வழியை நினைவு படுத்துகின்றது.

* யாப்பின் ஒரு பகுதிக்குச் சிறப்பான இலக்கணம் கூறும் நூல்கள்;

 இவற்றில் முக்கியமான சில :  சி. வை.தாமோதரம் பிள்ளையின் ‘ கட்டளைக் கலித்துறை”, வீரபத்திர முதலியாரின் “விருத்தப் பாவியல்”,   தண்டபாணி சுவாமிகளின் ” வண்ணத்தியல்பு” , புலவர் குழந்தையின், ” தொடையதிகாரம்”,  இரா.திருமுருகனின் , ” சிந்துப் பாவியல்”. 

* உரைநடையில் வந்த நூல்கள்;  இன்று பெரிதும் பயன்படும் பல நூல்கள் வந்துள்ளன. சில சான்றுகள்; புலவர் குழந்தையின் ” யாப்பதிகாரம்” ( இது கல்லூரியில் பாடநூலாகவும் இருந்தது.), கி.வா.ஜகந்நாதனின் ” கவி பாடலாம்” ( இத்தொடர் முதலில் ‘மஞ்சரி’ இதழில் வந்தது.)-, அ.கி. பரந்தாமரின் ” கவிஞராக” . 

5. நிறைவுரை:

அண்மையில் தோன்றிய யாப்பிலக்கண நூல்களின் போக்குகள், அல்லது  செல்திசைகள் என்ன என்பதைச் சுருக்கமாய்ப் பார்ப்போம்.

காரிகைக்குப் பின் சான்றிலக்கிய நூல்கள் பல தோன்றின. இரு உதாரணங்கள்: குமரகுருபரரின் ” சிதம்பர செய்யுட் கோவை”, பாம்பன் குமரகுருதாச சுவாமிகளின் ” திருவலங்கற்றிரட்டு”,  நிகழ்காலத்தில் வெளியான பல யாப்பிலக்கண நூல்களும் இந்த வழியைப் பின்பற்றி, இலக்கணத்துடன் பல முன்னோடிக் கவிஞர்களின்  பாடல்களையும் கொடுக்கின்றன.  சில நூல்கள் யாப்பிலக்கணப் பயிற்சிகளையும் உள்ளடக்கி யுள்ளன. ஓசைக்கு முக்கியத்வம் கொடுக்கும் மரபுக் கவிதைகளில் சற்றுக் கடினமான சந்தப் பாடல்களும், வண்ணப் பாடல்களும் பல நூல்களில் இடம் பெறுவதையும் பார்க்கிறோம். பல யாப்பிலக்கண நூல்கள் சுருக்கமாகத் தமிழிலக்கணத்தில் யாப்புக்கு அவசியமான புணர்ச்சி விதிகள் போன்ற பல தமிழிலக்கண விதிகளையும் உள்ளடக்கி உள்ளன.

பழம் நூல்களில் உள்ளன போல்  பாக்கள், பாவினங்கள் என்ற வரிசையில் இலக்கணங்களைக் கூறாமல், எளிதாக இயற்றக் கூடிய செய்யுள் வகைகளில் தொடங்கி, பின்னர் கடினமான சந்தம், வண்ணம் போன்றவை, இசைப் பாடல்கள் என்று விளக்கும் சில நூல்கள் தோன்றியுள்ளதும் ஒரு வளர்ச்சி என்று கூறலாம்.  பல இதழ்களிலும், இணைத்தில் உள்ள  மின்னிதழ்களிலும் , சமூக வலைத் தளங்களிலும்  யாப்பிலக்கணம் கற்பிக்கப் படுவதையும் , மரபுக் கவிதைப் போட்டிகள் நடைபெறுவதையும். இவற்றில் உற்சாகத்துடன் பலர் கலந்துகொள்வதையும் நாம் பார்க்கிறோம். அண்மையில்  பல யாப்பிலக்கண ஆய்வேடுகள் தோன்றி வருவதும்  யாப்பிலக்கண ஆய்வில் ஓர் ஆரோக்யமான வளர்ச்சியைக்  காட்டுகிறது. மேலும், எப்படித் திரைப்படப் பாடல்களை உயர்தரத்தில் பாடக் கர்நாடக இசைப் பயிற்சி உதவுகிறதோ, அதுபோலவே  நல்ல  ‘திரைப்படப்  பாடலை இயற்ற யாப்பிலக்கணப் பயிற்சி அவசியம் என்பதையும் பல இளைஞர்கள் அறிந்து வருகிறார்கள் என்று தோன்றுகிறது.    இவற்றையெல்லாம்  ஆராயும்போது,  செந்தமிழையும், தமிழிலக்கணத்தையும் இக்காலத்தில் வலியுறுத்தும் முயற்சிகளில் யாப்பிலக்கணப் பயிற்சியும், மரபுக் கவிதைகள் இயற்றலும் முக்கியப் பங்கேற்கின்றன என்று கூறலாம்.

=====

Series Navigationஅதென்ன நியாயம்?நிர்மலன் VS அக்சரா – சிறுகதை
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *