ராசி. அழகப்பன் கவிதைகள் – ‘ கும்மிருட்டு ‘ தொகுப்பை முன் வைத்து …

This entry is part 16 of 17 in the series 11 அக்டோபர் 2020

   

   

    ராசி. அழகப்பன் திரைத்துறையில் இயக்குனர், பாடலாசிரியர், இலக்கியத்தில் கதை , கவிதை , கட்டுரைகள் எழுதுபவர். இத்தொகுப்பு இவரிடைய ஏழாவது கவிதைத்தொகுப்பு. ஒருவர் இருட்டை

நேசிக்கிறார் என்றால் அவர் மனம் சற்று வித்தியாசமானதுதான். இதுவே கவிமனம் எனலாம்.

செல்லும் வழி இருட்டு

செல்லும் மனம் இருட்டு

சிந்தை அறிவிலும்

தனி இருட்டு

   — என்ற புதுமைப்பித்தன் வரிகளும் ராசி.அழகப்பனுக்குத் தூண்டுகோலாக இருக்கலாம். இத்தொகுப்பில் இருட்டு பற்றிய பல புதிய அழகான கருத்துக்கள் காணப்படுகின்றன.

‘ இருள் ‘ என்ற கவிதையில் நமக்கு , கவிஞர் இருளை அறிமுகப்படுத்துகிறார்.

இருள் இயற்கை

இருள் உணர்

இருள் நேசி

இருள்பயம் தீர்

இருள் தாய்மை

இருள் வலிமை

இருள் லிபியற்ற மொழி

இருள் உயிர் வழி

வெளிச்சம்

விழுவதும்

இருள்

எழுவதும்

மேற்குத் திசையின்

பரவசக்கூத்து

   — இயற்கை முன்வைக்கும்   அற்புதமான கணங்கள் இவை !

இருளை ஓர் இடத்தில் ‘ அமைதியின் ஆழ்கடல் ‘ என்கிறார்.

இருளை மனம் அப்படியே உள்வாங்கும் பரவச நொடிகள் இவை. உலகத்தின் மொத்த இருளையும் முன்

வைத்துப் பார்த்தால் இருட்டு ஆழ்கடல்தான்.

நிறங்களின்

சரணாலயம்

   — என்கிறார் அழகப்பன். ‘ இருள் நிறங்களின் சரணாலயம் ‘ என்பதுபற்றி அறிவியல் என்ன சொல்லும்

என எனக்குத் தெரியவில்லை. ஆனாலும் அறிவியலுக்குக் கட்டுப்படாமல் நிற்பதுகூட கவிஞருக்கு அனுமதிக்கப்பட்ட ஒன்றுதான்.

குழந்தைப் பருவத்தில் பயம். பள்ளியில் படிக்கும் போது பயம். எப்பொழுதுதான் பயம் தெளியும் ?

மீசை வந்த பின்னால்தான்

பயம் தெளிந்த இரவு எனக்கு

   — என்கிறார் அழகப்பன். ‘ பயம் ‘ என்ற கவிதை இப்படி முடிகிறது.

இப்போது இரவென்றால் பயமில்லை

பகல் வேளை பயமிருக்கு

பகல் வேஷம் போட்டபடி

பல நூறு இதயங்கள்

    ‘ அறியாமை இருளன்று ‘ என்று ஒரு கவிதை.

இருட்டை நேசிக்க

அடர்த்தி மனம் வேண்டும்

அடிபட்ட உணர்வுக்கு

ஒத்தடமே இருள்மடிதான்

   — என்ற தொடக்கமே இருளின் உயர்வைப் பேசுகிறது.

இருளுக்கு முகமுண்டு

பகைவனையும் அரவணைக்கும்

தாம்பத்தியத் தொடக்கமெனில்

முதல் இரவே இருளில்தான்

   — இதைவிடவும் இன்னும் உயரத்தில் போய் சிந்திக்கிறார் ராசி.அழகப்பன்.

ஆகாயம் ஒளிர்வதெனில்

இருள் ஒன்றே வழிகாட்டி

    ‘ இராக்கும்மி ‘ என்ற கவிதையில் ‘ தத்தங்கி ‘ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. வட்டாரவழக்குச்

சொல் என்று நினைக்கிறேன்.

தத்தங்கி தத்தங்கி

தலைமேல் தத்தங்கி

ஆவாரம் பூவாரம்

அழகான தத்தங்கி

   — என்று கவிதை தொடங்குகிறது. ஒரு பெண் தன் கூடல் அனுபவத்தைச் சொல்வது போல் கவிதை

அமைந்துள்ளது.  ‘ நட்சத்திர முகம் ‘ என்ற கவிதையில் ….

நட்சத்திரங்களோடு

வாழ்வதில்

ரணம்

மனசெங்கும்

   — என்று கவிதை தொடங்குகிறது.

பசிக்கும் போது புரிகிறது

நட்சத்திரங்கள் நிஜமாகவே

உயரத்திலேயே ஜொலிக்கின்றன

   — இந்த வரிகளுக்கு என்ன அர்த்தம் ?இப்படி இன்னும் சில வரிகள் காணப்படுகின்றன.

   ‘ கருத்த ஒளி’ கவிதையில் …

நிழல்

சிறுத்த ஒளி

இரவு கருத்த ஒளி

   — கவிஞரின் இருள் நேசம் தொடர்கிறது.

‘ ஒளியின் இடம் ‘  — கவிதையில் சில படிமங்கள் காணப்படுகின்றன.

வான வெளியின்

வர்ண மயக்கம்

பிரெய்லி மொழியின்

வெளிச்சப் பாதை

           நிறைவாக , ராசி.அழகப்பன் கவிதைகளில் பல புதிய சிந்தனைகள் வாசகனை மகிழ்விக்கும் என்பதால்

இத்தொகுப்பைப் படித்து மகிழலாம்.

Series Navigationபுதுப்புது சகுனிகள்…காந்தி பிறந்த ஊர்
author

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *