‘ கடைசிப் பறவையும் கடைசி இலையும் ‘ தொகுப்பை முன்வைத்து — சிறீ.நான்.மணிகண்டன் கவிதைகள்

This entry is part 11 of 13 in the series 25 அக்டோபர் 2020

    சிறீ.நான்.மணிகண்டன் கவிதைகள் பெரும்பாலும் எளியவை. வாசிப்பு அனுபவத்தை மிகவும் ரசிக்கலாம். சிறப்பான சொல்லாட்சிக்குச் சொந்தக்காரர். இவர் கவிதை இயல்புகளில் முன் நிற்பது

அழகான கட்டமைப்பாகும். இதற்கு புதிய சிந்தனைகள் துணைபுரிகின்றன. இந்த நூலில் 36 கவிதைகளும் 3 உரைநடைப் பகுதிகளும் உள்ளன.    ‘ வண்ணத்துப் பூச்சியின் பயணம் ‘ — ஒரு வண்ணத்துப் பூச்சி பறக்கிறது. அது முடிவில் சிலந்தி வலைக்குள் விழுந்துவிடுமோ என்று ஒரு சந்தேகம். இதுதான் கவிதைக்கரு. இந்த சாதாரண இயற்கைக்

காட்சியை நன்றாக முன் வைக்கிறார் சிறீ.நான்.மணிகண்டன்.

மரம் காற்று மற்றும்

பச்சையம் சூடிக்கொண்ட

வயல்களின் மேற்பரப்பில்

காலங்களைக் கடந்து

நீந்திக் களிக்குதொரு வண்ணத்துப்பூச்சி

   — சொற்கள் காட்சிகளாக விரிகின்றன. சொற்சிக்கனம் நல்ல கட்டமைப்பை உருவாக்குகிறது.

எதற்காகப் பறக்கிறது ?

வேண்டுகிற வரம்

அடைந்து தவிக்கிற தாகம்

நிகழ்கால வாழ்வைக் கிழித்துக்கொண்டு

வெளியேறத் துடிக்கின்ற

எண்ணங்களின் தேவை

எதுவென்பது குறித்துப் பறக்கிறது

   — யார் அறிவார் ? வண்ணத்துப் பூச்சிக்குத் துறவு மனமும் உண்டு போலும் …

பூக்கள் தேன் கனி என்று

எதுவுமே பற்றாது

முடிவுகளற்ற கணங்களின் வெளியில்

சுற்றித் திரிந்தபடி …

தெளிந்த இருப்பில் நிலை கொள்ளாமல்

எங்கும் படபடக்கிறது

   — நல்ல சொல்லாட்சி. மீண்டும் மீண்டும் படித்தாலும் கவிதையில் அடுத்த நகர்வை யூகிக்க முடியாமல்

வாசகனை விரல் பிடித்து அழைத்துச் செல்கின்றன சொற்கள்.

தொலை தூரச்சிறகடிப்பில்

அலுப்பிற்குப் பிறகான சலிப்பில்

வந்து விழுமோ

ஒரு சிலந்தியின் வலைக்குள்

   — என முடிகிறது கவிதை. மேற்கண்ட பகுதியில் மூன்றாம் வரி இல்லாமல்கூட கவிதை முடியலாம்.

ஆனால் இருப்பது சிறப்பு.அதனால் ஒரு துல்லியத்தன்மை சேர்கிறது.

   ‘ கடவுளின் பீடங்கள் ‘ என்ற கவிதையில் நாத்திகம் ஓங்கி நிற்கிறது. கவிஞரின் கையில் கடவுள்

படாதபாடு படுகிறார்.

கடவுளின் பீடங்கள்

கரயாங்களால் அரிக்கப்பட்டதிலிருந்து

அவனதிகாரங்கள்

சரிந்து விழுந்தன உலகில்

அதிர்ச்சியில் உதிரத்தைத் துப்பினான்

கடவுள் எங்கும்

   — இது கவிதையின் தொடக்கம். ஒன்றன்பின் ஒன்றாக இரண்டு படிமங்களின் அழுத்தத்தில் கடவுளின்

பிம்பம் சிதைக்கப்படுகிறது. சாத்தான்களின் சதியால் கடவுளுக்கு கிரீடங்கள் நழுவுகின்றனவாம்.  எனவே அரச தந்திரிகளின் கூட்டம் நடக்கிறது.

மூளை பிசகிப்போன தவிப்போடு

நடுக்கூடத்தில் நடைபயில்கிறான்

கைகளைப் பிசைந்தபடி

   — பின்னர் சூழ்ச்சி நடக்கிறது.

தன் கொடுங்கோலாட்சி முடிவுக்கு

வருவதை யெண்ணி

மதுபானங்களைப்

அள்ளிப் பருகுகிறான் கடவுள்

அடிக்கொருதரம் ஆத்திரத்தில்

கண்ணாடிக் குப்பிகள் மேசையின் மேல்

அடித்துடைக்கிறான்

   — கவிஞரின் கோபம் கொப்பளிக்கிறது. கவிதை சிவக்கிறது.

கடவுளுக்குப் பைத்தியம் பிடித்ததைக் கண்டு

பீதியில் மூழ்குகிறது அரண்மனை

   — எனக் கவிதை முடிகிறது. ஏனிந்தக் கோபம் ? கடவுள் மக்களின் துயர் தீர்க்காததால்தான் என யூகிக்க முடிகிறது. நாத்திகம் அழுத்தமாகப் பதிவான கவிதையிது .

    புத்தகத் தலைப்பக் கவிதை , ‘  கடைசிப் பறவையும் கடைசி இலையும் ‘ என்ற கவிதை. இதில் சிந்தனைத் தடம் புதிது. சொல்லாட்சி திருப்தியளிக்கிறது.

உடல் சுண்டச் செய்யும்

வெப்பத்திலிருந்து

விடுவித்துக் கொள்ளும் காரணத்தில்

நிலம் பெயர்ந்து வந்திருக்கிறாய் போல

   — என்பது கவிதையின் தொடக்கம்.மரத்தடியில் ஆறுதல் தேட விரும்புகிறான் ஒருவன். ஆனால் அந்த

மரமே பட்டுப்போய் இறுதி நிலைக்கு வந்துவிட்டது. இருவர் நிலையும் ஒன்றாக இருக்கிறது. மரத்தைக்

குறியீடாகக் கொண்டால் உதவி தேவையான ஒருவர் உதவ இயலாத ஒருவரை அணுகியிருக்கிறார் என்றும் பொருள் கொள்ளலாம்.

கடைசிப் பறவையும்

கடைசி இலையும்

உதிர்ந்துவிட்ட பிறகு

வாழ்தலின் தேவையற்று

சரியவிருக்கிற மரத்தின் கீழ்

புரண்டழுகிறது உன்னுடல்

   — மனத்தைப் பிசையும் படிமம். எதுவும் செய்ய முடியாத நிலையில் மனம் தவிக்கிறது.

காலவெளியின் கண்களில்

நீர் பெருக்கெடுத்து வழிகிறது

   — கவிதையின் எடுப்பில் ஒவ்வொரு சொல்லும் முக்கியமாகிறது. இதுவே சிறந்த கட்டமைப்பிற்கு வழிவகுக்கிறது.

    ‘ வெளவால்கள் தொங்கும் என்னுடல் ‘ என்ற தலைப்பே மாய யதார்த்தம் கொண்ட படிமத்தை முன் வைக்கிறது. வெளவால் என்பது துன்பத்தின் குறியீடு என்ற கோணத்தில் இக்கவிதையைப் பார்க்க வேண்டும்.

ஊடுவெளியெங்கும் நூலாம்படை பின்னி

என்னுடல் ஒரு நாளில்

வெளவால்கள் வசிக்கின்ற

வீடாக மாறிக்கொண்டிருக்கிறது

   — உடல் மாற்றம் பயங்கரமான , புதிய படிமம் ஒன்றைப் பதிவு செய்துள்ளது. வீடெல்லாம் வெள்வால்கள் தொங்கும் கூடாகியது எப்படி ?

வெள்ளியொளிரும் சிறகுகளில் அலைந்த

பட்டுப் பூச்சிக்களையும்

உடம்பில் பெருநதியெனப் பாய்ந்த

இரத்தத்தையும்

தின்று குடித்த வெளவால்கள்

குட்டிகள் ஈன்று பெருகி

   — மனத்துயரம் , உடலைச் சிதைத்துப் பாடாய்ப் படுத்துகிறது. வாசகன் மனத்தில் அனல் காற்றுவீசச்செய்யும் வெளிப்பாடு திகைக்க வைக்கிறது.

கூடடைகின்ற வெளவால்களின் அலறல்கள்

என்னுடலை அண்டவிருக்கிற

மரணத்தின் கணங்களைச் சொல்லி

அந்தரத்தைக் கிழிக்கின்றன

   — சொல்ல முடியாத துயரம் என்பதைச் சொல்ல , உவமைகள் தெறித்துப் படிமங்களாய் விழுகின்றன.

   ‘ உன் பாடல் ‘ — ஒரு காதல் சோகக் கவிதை. எல்லா திசைகளிருந்தும் கவிஞர் துயரக் காற்றைச் சுவாசிக்கிறார்.

துர்தேவதைகளால் சபிக்கப்பட்டவனாக

நான் இருக்கக் கூடும்

சூறைக் காற்று வீசும் மணல்வெளியில்

ஒரு காகிதத்துண்டு போல்

சுழல்கிறது என் காலம்

   — எளிய உவமை நன்றாக இருக்கிறது.கவிஞர் அடுத்த வரிகளில் தன்னிலை விளக்கம் ஒன்றைத் தருகிறார் துயரம் பொங்கி வழிய வழிய …

குருதி உறிஞ்சும் தாவர பூமிகளைத் தாண்டி

கொடிய விசப்பூச்சிகள்

அரித்துத் தின்றுவிட்ட மீதிவுடலை

தூக்கிக் கொண்டு கடக்கிறேன்

என்னுடைய நாட்களை

   — இனிய காதல் பாடல் ஒன்றை இழக்கிறான் ஒருவன். எப்படி ? கணமெங்கிலும் உன்னை நினைந்துருகும்

சாயங்கால  வேளையொன்றில்

வானம்பாடிகள் பிடுங்கிப் போய்விட்டன

நீ சொல்லித்தந்த பாடலை

   — மிகப் புதிய கற்பனை. தனித்தன்மை கொண்ட படிமம். இதையும் தாண்டி அடுத்து ஒரு படிமம் தருகிறார். மாய யதார்த்தம் சார்ந்த அழகான படிமம்.

அப்பாடலின் கடைசி வரியைப் பிடித்தவாறு

திசையெங்கும் அலைவுறுகிறேன்

உன் பாடலைத்

திரும்பப் பெற்றுவிடும் பேராவலோடு

   — ஜெட்டில் பயணிப்பது போல் உணர முடிகிறது. கவிதை முடிகிறது. காதல் சோகம் ததும்புகிறது.

   ‘ காற்றினில் சாம்பலாகிற காடு ‘ , ‘ சுருக்கி நெளிகிற வெளி ‘ போன்ற சில கவிதைகள் சலிப்பைத் தருகின்றன.இருண்மை வாசகனை விரட்டுகிறது. ‘ பிய்ந்து வீழ்கின்ற நிலம் ‘ , ‘ நிலம் ‘ ஆகிய கவிதைகள்

இலங்கைத் துயரத்தை நினையூட்டுகின்றன.

   இப்புத்தகத்தில் ஆகச்சிறந்த கவிதை என ஒன்றுக்கும் மேற்பட்ட கவிதைகளைக் குறிப்பிட வேண்டும்.

    ‘ மொழியிலிருந்து ஓர் மரம் ‘ என்ற தலைப்பில் ஓர் உரைநடைப் பகுதி உள்ளது. அது கவிதை நடையில்

இருக்கிறது. மாய யதார்த்த வகை சார்ந்ததுதான்.

   ” என் மொழியிலிருந்து வேர்விடுகிறது ஓர் மரம் [ ஒரு மரம் என்று எழுதுவதே சரி ]. மரம் காலவோட்டத்தில் உப்புகிறது.” எனத் தொடர்ந்து கற்பனை சிறகடித்துப் பறக்கிறது.இதிலும் துயரம்தான்

பதிவாகியுள்ளது.

    சிறீ. நான்.மணிகண்டன் பற்றி ஆசிரியர் குறிப்பு ஏதுமில்லை.’ மினுங்கும் ‘ என்ற ஒரு கவிதையில் பயன்படுத்துயுள்ளார். எனவே இவர் இலங்கையைச் சேர்ந்தவராக இருப்பார் என நான் யூகிக்கிறேன்.

நிறைவாக மணிகண்டன் சிறந்த கவிஞர். தேர்ந்த சொல்லாட்சி திருப்தி அளிக்கிறது. அவசியம் வாசகர்கள்

படிக்க வேண்டும் .

          ________

Series Navigationவளவதுரையனின் கவிதைத்தொகுப்பு அப்பாவின் நாற்காலி2 மொழிபெயர்ப்புக் கவிதைகள்
author

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *