கோபுரமும் பொம்மைகளும்

This entry is part 5 of 13 in the series 25 அக்டோபர் 2020

ஜோதிர்லதா கிரிஜா

(கல்கியின் 24.10.1971 இதழில் வெளியானது: “கோபுரமும் பொம்மைகளும்” எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் தொகுப்பில்

இடம் பெற்றது.)

      தங்கள் பொருள்களை யெல்லாம் மூட்டை கட்டிக்கொண் டிருந்த இரண்டாம் மகனையும் மருமகளையும் பார்க்கப் பார்க்கப் பரமசிவத்தின் நெஞ்சம் வேதனையால் கசந்தது. கசப்போடு கனத்து வலித்த அந்தப் பாழாய்ப்போன மனசைக் கழற்றி வைத்துவிட முடிந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும் என்று எண்ணிப் பார்த்த அவரிடமிருந்து நீண்ட பெருமூச்சொன்று வெளிப்பட்டது.

       “வேலாயி! கடைசியிலே இப்படியாயிடிச்சு, பார்த்தியா? பிள்ளைங்க ரெண்டும் சின்ன வயசிலே இணை பிரியாமெ நேசமா யிருந்ததைப் பார்த்துட்டுப் பெரியவங்களான பெறகும் அதுங்க அப்பிடியே ஒத்துமையா யிருக்குமுன்னு கெனவு கண்டோமே, இப்ப என்னா நடக்குதுன்னு பாரு.,” என்று அவர் பொருமினார். சொல்லி முடித்த பிறகும் வயோதிகத்தால் தொங்கலுற்ற அவர் கீழுதடு துடித்த துடிப்பினின்று அவர் உள்ளமும் துடியாய்த் துடித்துக்கொண்டிருந்ததை உணர்ந்த வேலாயியிடமிருந்து ஒரு நெட்டுயிர்ப்பு சினங்கொண்ட பாம்பின் சீற்றத்துடன் வெளிவந்தது.

       “நான் அன்னைக்கே சொல்லலையா? இந்தக் காலத்து அண்ணந்தம்பிகளாவது சேர்ந்து இருக்குறதாவது! எனக்கு அப்பமே தெரியும், கல்யாணமான பெறகு இதுங்க எங்கே ஒத்துமையா இருக்கப் போகுதுங்கன்னு.”

       “சேர்ந்து இருந்தாங்கன்னா ரெண்டு பேருக்குமே லாபம். இந்தக் காலத்துக் குட்டிங்களுக்கு அது எங்கிட்டுத் தெரியுது? கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும் அனுசரிச்சுக்கிட்டுப் போகுற தன்மை இருந்தா குடும்பம் நல்லா நடக்கும். ஒருத்தருக்

கொருத்தர் விட்டுக் கொடுத்து அனுசரிச்சுக்கிட்டுப் போகுற கொணம் இந்தக் காலத்துப் பொண்ணுங்களுக்கு ஏது?”

       “கண் முன்னால நடக்குற இந்த அக்குரமத்தப் பாத்துக்கிட்டு நாம ரெண்டு பேரும் இப்படிக் கையாலாகாதவங்களா நின்னுக்கிட்டுக் கெடக்குறோம். கெளவன் கெளவி பேச்சு இந்தக்  காலத்துல எடுபடுதா, பாத்தீங்களா?”

       “நான் சொல்ல வேண்டியதையெல்லாம் சொல்லியாச்சு. பிரிஞ்சு போறதுனால, நன்மையில்லே, தீமைதான்னு எவ்வளவோ எடுத்துப் பேசியாச்சு.  ஆணவமும் பணத்தாசையும் கண்ணை மறைக்கிறப்போ பெரியவங்க பேச்சு அவங்க மண்டையிலே ஏறுமா? விட்டுத்தள்ளு.”

        “கடைசிக் காலத்துல ரெண்டு புள்ளைங்க கிட்டேயும் இருக்கலாம், ரெண்டு பேரையும் பார்த்துக்கிட்டுக் கன்ணை மூடலாம்னு பார்த்தா, … எல்லாம் தலை கீளாவில்ல நடக்குது?” – வேலாயியின் சொற்கள் அது வரை தமக்குத் தோன்றாத ஒரு பிரச்சினையைத் தம் முன் கிளப்பிவிட்டதைப் பரமசிவம் உணர்ந்தார். ‘சின்னவன் பிய்த்துக்கொண்டு கிளம்புகிறான் … தாமும் தம் மனைவியும் பெரியவனிடம் தான் இருக்க வேண்டி வருமோ?’

       “வேலாயி! அதைப் பத்தி நான் இன்னும் நெனச்சுப் பார்க்கல்லே.”

       “எதைப்பத்தி?”

       “கந்தப்பன் கெளம்பிப் போறானே? அவனை அப்பப்போ நாம போய்ப் பாத்துட்டு வரணுமில்லியா?”                        

       வேலாயி சிரித்தாள்.

 “என்ன சிரிக்கிறே?”

       “பெரியவன் கிட்ட இருக்குறதுன்னு தீர்மானிச்சுட்டீங்களே, அதை நெனச்சு சிரிச்சேன்.”

       “அதுலே சிரிக்கிறதுக்கு என்னா இருக்குது?”

       “ஏன் இல்லாமெ? நாம ரெண்டு பேரும் யார் கிட்ட இருக்கிறதுங்கிறது அவங்க தீர்மானிக்க வேண்டிய வெசயம். … நாம தீர்மானிக்கிற வெசயமா அது? மருமவளுங்க ரெண்டு பேருக்கும் வந்த சண்டை அவங்க புருசங்களுக்குப் பரவியிருக்குது. லாபநஸ்டக் கணக்குப் போட்டு அதனாலே ஏற்பட்ட தகராறுலேதானே அதுங்க பிரிஞ்சுடணும்னு முடிவு பண்ணியிருக்குதுங்க? நாம ரெண்டு பேரும் எந்தப் பிள்ளை கிட்ட இருந்தாலும், அது அவனுக்குச் சொமைதானே? அநாவசியச் செலவுதானே?”

       “அடி பைத்தியமே …நீ அவ்வளவு மட்டமாவா நம்ம புள்ளைங்களைப் பத்தி நினைக்கிறே/? நம்ம ரெண்டு பேரையும் கூட வெச்சுக்குறதுனால ஆகக்கூடிய செலவுக்காக அவங்க சண்டை போடுவாங்கன்னு நீ நினைக்கிறது தப்பு.”

       “நம்ம புள்ளைங்களைப் பத்தி நீங்க புரிஞ்சுக்கிட்டிருக்குற லெச்சணம் அம்புட்டுத்தான்.”

       “உனக்கு எப்பவுமே சின்ன புத்திதான். …”

       “இருந்துட்டுப் போவட்டும்.”    

       அதற்கு மேல் சிறிது நேரம் இருவரும் பேசிக்கொள்ளவில்லை. இரேழிக்கட்டிலில் உட்கார்ந்திருந்த இருவரும், அங்கிருந்தவாறே, கூடத்தில் தாறுமாறாக இறைந்து கிடந்த சாமான்களை அடுக்கிக் கயிறுகளால் கட்டிக்கொண்டிருந்த கந்தப்பனையும் அவன் மனைவியையும் பார்த்தபடி இருந்தார்கள்.

      திடீரென்று கூடத்துக்கு வந்த மூத்தவன் முத்து, “ ஒரு விஷயத்தை நாம் இன்னும் முடிவு செய்யல்லியே?” என்று தம்பியை நோக்கிக் கூறினான். செய்துகொண்டிருந்த வேலையை விட்டுவிட்டுத் தலைநிமிர்ந்த கந்தப்பன், “என்ன?” என்றான்.

       “அப்பாவையும் அம்மாவையும் யாரு வச்சுக்குறது?”

       “ஏன்? நீதான் வச்சுக்கணும். நீதானே குடும்பத்துக்கு மூத்தவன்?” – கந்தப்பன் இபப்டிக் கேட்டதும், “பார்த்தீங்களா உங்க அருமந்துப் புள்ளைங்க பவிசை? என்னமோ பீத்திக்கிட்டீங்களே?” என்று வேலாயி பரமசிவத்தின் காதில் அருவருப்போடு கிசுகிசுத்தாள். கிழவரின் முகத்தில் ஈயாடவில்லை.

       “அப்பா அம்மாவை மூத்தவன்தான் வச்சுக்  காப்பத்தணுமுன்னு எந்தச் சட்டத்துலே எழுதி வெச்சிருக்குது?”

       “இதுக்குச் சட்டம் வேணுமா? அதுதான் உலக வழக்கம்.”

       “ஓகோ! உலக வழக்கமா?… சர்தான். நல்லாருக்குது உன் நியாயம்! என்னயெப் படிக்க வெச்ச மாதிரிதான் உன்னையும் படிக்க வெச்சங்க அப்பாவும் அம்மாவும். மூத்தவனுக்கு மட்டுந்தான் கடமை, எளையவனுக்கு இல்லைன்னு நினைக்காதே. இத்தினி நாளு ஒண்ணா இருந்துப்போட்டு, இப்போ நிறைய சம்பளத்துக்குப் பெரிய வேலை கெடச்சதும் தனியாப் போறேன்னு கெளம்பிட்டே!”

       “எனக்குப் பெரிய வேலை கெடச்சுச்சுன்னா அது என் அதிர்ஷ்டம். … அதுக்கு என்னை என்னா பண்னச் சொல்றியாம்? உனக்குப் பொறாமையா இருந்தா சுவத்துல முட்டிக்க.”

       “டே, வாயிலே வந்தபடி பேசாதே. மரியாதை கெட்டுப் போகும். உனக்குத்தான் நிறையச் சம்பளமாச்சே, அப்பாவும் அம்மாவும் உனக்கு ஒரு சுமையாத் தெரியமாட்டாங்க, அதனால கூட்டிக்கிட்டுப் போங்குறேன். அவ்வளவுதான்!”

       “மூத்தவன் நீ இருக்கையிலே நான் ஏன் அவங்களை வச்சுக்கிடணும்னுதான் கேக்குறேன்.”

       “மூத்தவன் எளையவன்னு பேசாதே. எல்லாருக்கும் கடமை உண்டு. … நீ படிச்சு முடிச்சு வேலைக்கு வர்ற வரையிலே நான் தானே அவங்களெ வெச்சுக் காப்பாத்தினேன்? கிட்டத்தட்ட மூணு வருஷம் சோறு போடிருக்கேன். அதே மாதிரி ரெண்டு பேரையும் கூட்டிக்கிட்டுப் போய் மூணு வருஷம் நீ வச்சுக்க.”

       “அதுக்குப் பெறகு?”

       “அதுக்குப் பெறகு, ஓங்கிட்ட கொஞ்ச நாள், ஏங்கிட்ட கொன்ச நாள்னு மாத்தி மாத்தி ரெண்டு பேரும் இருக்கட்டும்.”

       வேலாயி,  ‘பார்த்தீங்களா? நான் சொல்லல்லே?’ என்பது போல் பரமசிவத்தின் விலாவில் குத்தினாள்.

       பிள்ளைகள் இருவரிடையே நிகழ்ந்துகொண்டிருந்த பேச்சு இந்தக் கட்டத்தை அடைந்த போது, இளையவனின் மனைவி குறுக்கிட்டாள்: “ரெண்டு பேரையும் மாத்தி மாத்தி வச்சுக்கிட்றதுக்குப் பதிலா ஒண்ணு செய்யலாம். உங்கம்மா நம்ம கிட்ட இருக்கட்டும். அப்பா பெரியவர் கிட்ட இருக்கட்டும்.” – கணவனுக்கு ஆலோசனை கூறிய இளைய மருமகளின் கெட்டிக்காரத்தனத்தை வேலாயியால் வியக்காமல் இருக்க முடியவில்லை.

       “வேலாயி! உன் சின்ன மருமகளுக்கு உன் மேலதான் பிரியம்,” என்று பரமசிவம் குறுக்கிட்ட போது, வேலாயி தலையில் அடித்துக்கொண்டாள்.

       “உங்களுக்குத் தெரிஞ்ச லச்சணம் அம்புட்டுத்தான். என்னைய வச்சுக்கிட்டா கூடாமாட வீட்டுவேலை செஞ்க்கிட்டு அவளுக்கு ஒத்தாசையாய் இருப்பேன்குறது அவளோட நெனப்பு. அதுக்குத்தான் என்னைய வச்சுக்குறேனு சொல்றாளே தவிர, பிரியமாவது, பிரியம்! மண்ணாங்கட்டி!”

        ‘ஒகோ! அதுவும் அப்படியா?’ என்று எண்ணமிட்ட பரமசிவத்தால் தன் மனைவியின் சூட்சும புத்தியை எண்ணி வியக்காதிருக்க முடியவில்லை. தங்களை யார் வைத்துக்கொள்ளுவது என்பது குறித்துப் பிள்ளைகள் இருவரும் தகராறு செய்துகொள்ளுவார்கள் என்பதை முன்கூட்டியே கணிக்கிற அளவுக்குப் பிள்ளைகளின் தன்மைக் குறைவுகளை அறிந்து வைத்திருந்த அவள் கெட்டிக்காரத்தனம் அவரை அயரவைத்தது. ‘பெண்களுக்கு மூளை கிடையாது’ என்று நினைத்துக்கொண்டிருக்கிற ஒரு சராசரி ஆண்பிள்ளை தன் மனைவி தன்னைவிடக் கெட்டிக்காரி என்பதைத் தெரிந்து கொள்ள நேருகையில் அவனுக்கு ஏற்படும் அதிர்ச்சியும் பொறாமையும் அவருக்கும் ஏற்பட்டன.

       இளைய மருமகளுக்குத் தான் ஒன்றும் குறைந்தவள் அல்லள் என்று காட்டிக்கொள்ள விரும்பியவள் போன்று சமையலறையினின்று வெளிப்பட்டு வாசற்படி யருகில் வந்து நின்ற மூத்த மருமகள், “அம்மா நம்ம கிட்டவே இருக்கட்டும். அப்பா அவுங்க கிட்ட இருக்கட்டும்,” என்றாள் அழுத்தமாக.

       “வேலாயி! பார்த்தியா உன் அதிர்ஷ்டத்தை! ரெண்டு பேருமே என்னைய வேணாங்குறாங்க,” என்று பரமசிவம் வேதனையோடு சிரித்தார்.

       ‘அம்மா ஏங்கிட்டவே இருக்கட்டும்’ என்று இளைய மருமகளும் மூத்த மருமகளும் மாறி மாறிச் சொன்னதைக்

கேட்டவாறு அந்தக் கிழவர் இடிந்து போய் உட்கார்ந்திருந்தார். கனவனின் முகத்தில் அப்பிக்கிடந்த துயரம் வேலாயியின் மனத்தை வருத்தியது. ‘சேச்சே! என்ன புள்ளைங்க! பெத்தவங்க எதிர்லேயே அவங்களை யாரு வச்சுக்கிட்றதுன்னு சண்டை போட்டுக்குற இந்தப் புள்ளைங்க பொறக்கல்லைன்னு யாரு அளுதாங்க?’

      கூடத்திலிருந்தபடி மாறி மாறி அவர்கள் பேசிச் சண்டையிட்டுக் கொண்டிருந்ததை அதற்கு மேலும் காது கொடுத்துக் கேட்கப் பிடிக்காதவளாய் எழுந்து நின்ற வேலாயி, “எம்புட்டுப் பணம் வச்சுருக்கீங்க?” என்று கேட்டாள்.

       “ஏன், வேலாயி! ஐந்நூறு ரூபா வெச்சிருக்கேன்.”

       “அப்ப கெளம்புங்க.’

 “எங்கிட்டு?”

       “நீங்க எளுந்திருங்க, சொல்றேன். நாம சோறு திங்கிறவங்களா யிருந்தா, இனி ஒரு நிமிசங்கூட இந்த இடத்துல தங்கக்கூடாது… மொதல்ல கெளம்புங்க. பெறகு பேசிக்கிடலாம்… எங்கே போறது, என்னா செய்யிறதுங்குறதைப் பத்தியெல்லாம்.”

       பரமசிவம் பேசாமல் எழுந்து நின்றார். இரேழியறைக் கதவைத் திறந்து அதிலிருந்து துருப்பிடித்த தம் ‘டிரங்குப்பெட்டி’யை அவர் எடுத்து வந்தார். நல்ல வேளையாக வாசல் திண்ணைக் கொடியிலேயே வேலாயியின் இரண்டு புடைவைகளும் உலர்த்தப்பட்டிருந்ததால், அவற்றை எடுப்பதற்காக இரேழியைக் கடந்துசென்று கூடத்துக்குப் போய் அவர்கள் மூஞ்சிகளிலெல்லாம் முழிக்கவேண்டிய அவசிய மில்லாமற் போனதற்காக அவள் மகிழ்ச்சி யடைந்தபடி அந்தப் புடைவைகள் இரண்டையும் கொடியிலிருந்து உருவி எடுத்து மடித்து அந்தப் பெட்டியிலேயே வைத்தாள்.

       “வாங்க, போலாம்.”

       “அவங்ககிட்ட சொல்லிக்கக் கூட வாணாங்குறியா?”

       “வேணாம். … நாய்க்கு இருக்குற நன்றியிலே நாலிலே ஒரு பங்குகூட இல்லாத அவுங்க மொகரையிலே கூட நாம முளிக்க வேண்டாம்.”

       “வேலாயி! சொல்லிட்டு வேணாப் போக வேண்டாம்,. ஆனா சுடச்சுட ரெண்டு வார்த்தை.யாச்சும் கேட்டுட்டுப் போவமே?”

       “ஈவிரக்கமில்லாத அந்தக் களுதைங்களோட நமக்கென்னா பேச்சு? அவுங்களுக்குச் சரியா நாம பேசினோமுன்னா நமக்குத்தான் அசிங்கம். அவுங்க கிட்ட சொல்லிக்கிட்டுப் போறதை விட, சொல்லிக்காம போறதே மேலு. அப்பத்தான் அதுங்களுக்குக் கொஞ்சமாச்சும் உறைக்கும் …” என்றவாறு, தாங்கள் படியிறங்கிப் போவதைக் கூடத்தில் நின்று ஒருவர் மீதொருவர் வார்த்தைகளை வாரி இறைத்துக்கொண்டிருந்த பிள்ளைகளும் அவர்களின் மனைவிகளும் பார்த்துவிடக் கூடாதென்பதற்காகவும், அவர்கள் போய்விட்டதைப் பிறகு கண்டு அவர்கள் அதிர்ச்சியுற வேண்டுமென்பதற்காகவும் இரேழி நடைக் கதவை ஒருக்களித்துச் சாத்திய வேலாயி, “வாங்க, போவோம்,” என்று பரமசிவத்தைக் கூட்டிக்கொண்டு இறங்கித் தெருவில் நடக்கலானாள்.

      இருவர் கன்களிலும் கண்ணீர் ததும்பி நின்றது.

      ”வேலாயி! இது மாதிரி ஒரு நெலமை வரும்னு கனவுலயாவது நாம நெனச்சிருப்பமா? நம்ம காதுபட அப்பாவையும் அம்மாவையும் யாரு வச்சுக்கிட்றதுன்னு துளிக்கூடப் பண்பில்லாம பேசிக்கிட்டாங்க, பார்த்தியா?”

       “பாசமில்லாதவங்க கிட்ட பண்பு எங்கிட்டிருந்து வரும்?”

       “அப்பாவையும் அம்மாவையும் யாரு வச்சுக்கிட்றதுன்னு முத்து கேட்டதுமே எனக்கு அவன் மேல இருந்த நம்பிக்கை போயிடிச்சு. சின்னவனாது, ‘ஏன்? நானே வச்சுக்கிட்றேன்’னு  சொல்லுவான்னு எதிர்பார்த்தேன். அவனும் அதே சரக்குதான்னு தெரிஞ்சதும் எனக்கு மனசே முறிஞ்சு போயிடிச்சு,”

       “நம்ம தொழிலை இவங்க செய்யக் கூடாது, கை நெறைய நம்ம பயலுக சம்பாதிக்கணுமுன்னு படிக்க வச்சீங்கல்லே, படிப்பு அவங்க மூளையெ வளர்த்திச்சே ஒழிய மனசை வளர்த்திச்சா, பாத்தீங்களா?”

       “வேலாயி! ஒரு மனுசனுக்கு இருக்க வேண்டிய நல்ல கொணங்க வெறும் படிப்புனால வர்றதுன்னா நெனச்சுக்கிட்டு

இருக்கே? அடி, பைத்தியக்காரி! நல்ல கொணம்குறது ரத்தத்துல இருக்கணும்டி, ரத்தத்துல இருக்கணும். … படிப்புனால அதை வாங்கிட முடியுமா? ஏதோ கொஞ்சமாச்சும் நல்ல அடிப்படை இருந்தா ஓரளவுக்கு நம்மள மாத்திக்கலாமே ஒழிய அடிப்படையையே மாத்திக்கிறதுங்குறது நடக்குற காரியமா?”

       “எல்லாம் நம்ம தலை எளுத்து. இவுங்களெப் படிக்கவெச்சு முன்னுக்குக் கொண்டாரணும்னு நாம எப்படியெல்லாம் கஸ்டப்பட்டோம்? எப்படி உளைச்சீங்க நீங்க? … உடம்பை உடம்பாவா பார்த்தீங்க? துளியாச்சும் அன்பிருந்தா வயசு காலத்துலே தாயையும் தகப்பனையும் பிரிச்சு ஆளுக்கொருத்தராப் பங்கு போட்டுக்கணும்னு நினைப்பானுங்களா? அயோக்கியப் பயலுங்க!”

 “பணமில்லே பெரிசாப் போயிறுச்சு இவங்களுக்கு?”

       “இதுதான் உலகம்., தெரிஞ்சுக்குங்க.”

       இருவரும் மேற்கொண்டு பேசிக்கொள்ளாமல் நடந்தனர். சிறிது தொலைவு நடந்த பிறகு, “அம்மாடி! வெயில் மண்டையப் பொளக்குது. இந்த மரத்தடியிலே கொஞ்ச நேரம் உக்காருவம்,” என்ற பரமசிவம் வழியில் ஒரு வேப்ப மரத்தடியில் உட்கார்ந்தார். வேலாயியும் ‘டிரங்குப் பெட்டி’யைக் கீழே வைத்துவிட்டு அதன் மீது அமர்ந்துகொண்டாள்.

       “ஒரு வேகத்திலே திடும்னு முடிவு பண்ணி, ரெண்டு பேருமா இப்படிக் கெளம்பி வந்துட்டமே, மேற்கொண்டு என்னா செய்யிறதாம்?”

       “புள்ளைங்க தலை எடுக்குறதுக்கு முந்தி என்னத்தைச் செய்துக்கிட்டிருந்தோமோ அதைச் செய்யிறது … ஒரு குடிசையை வாடகைக்குப் பிடிச்சுக்கிட வேண்டியதுதான். அங்கே இருக்குறது… அம்புட்டுத்தான். பளையபடி உங்க வேலையை நீங்க செய்யுங்க. கூடமாட நான் ஒத்தாசை செய்யிறேன். ரெண்டு பேருமா காலத்தை இப்படியே ஓட்டிப்புடுவம். … வேறென்னத்தைச் செய்யிறதாம்?”     

       “இந்த ஊர்லேயே இருக்கலாம்குறயா? இல்லாட்டி வேற எங்கேயாச்சும் போயிறலாமா?”

       “அஞ்சு கல் தொலவுலே இருக்குதே ஒரு ஊரு, அதுக்கு என்னா பேரு?”

       “மல்லணம்பட்டியெச் சொல்றியா?”

       “ஆமா. … அங்கிட்டுப் போயிறுவம். இந்த ஊர்லே இருந்தோமுன்னா நமக்கும் அசிங்கம், நம்ம பசங்களுக்கும் அசிங்கம்.”

       தங்கள் நிகழ்காலத் தலை எழுத்தை வாய்விட்டு நொந்துகொண்டவண்ணம் சற்று நேரம் வேப்பமரத்தடியில் இளைப்பாறிய பின்னர், தங்கள் வருங்காலத் தலை எழுத்தைத் தீர்வு செய்வதற்காக இருவரும் மல்லணம்பட்டியை நோக்கிப் புறப்பட்டுச் சென்றார்கள்.

       மல்லணம்பட்டிக்குப் போய்ச் சேர்ந்த பின் சிறிதே நேர அலைச்சலில் சாலையை ஒட்டினாற்போல் இரண்டு ரூபாய் வாடகையில் அவர்களுக்கு ஒரு குடிசை கிடைத்தது. குடிசை வாசலில் இருந்த வேப்பமரம், அதன் நிழலில் பரமசிவம் தன் தொழிலைச் செய்தவாறு சாலையில் போவோர் வருவோரின் பார்வையில் விழும்படி உட்காருவதற்குத் தோதாக இருந்தது.

       தன் பிள்ளைகள் படித்துவிட்டு வேலை பார்க்கிறவர்கள் என்கிற நிலையில் தன் சமூக அந்தஸ்து ஒரு படி உயர்ந்துவிட்டதாய்க் கருதி, அந்தக் கருத்தால் விளைந்த செருக்கில், ‘இனிமேல் நான் எதுக்காக வேலை செய்யணும்?’ என்கிற இறுமாப்போடு இடைக்காலத்தில் தான் நிறுத்தி வைத்திருந்த தன் தொழிலைப் பரமசிவம் செய்யத் தொடங்கியதற்குப் பிறகு ஒரு வாரங்கழித்து ஒரு நாள், ‘அதோ பாருங்களேன், யாரு வர்றதுன்னு … நம்ம முத்துதான். யாரோ சிநேகிதனோடு பேசிக்கிட்டு வந்துக்கிட்டிருக்கான். அறுந்து போன செருப்பை எடுத்துக்கிட்டு உங்க கிட்டதான் வர்றான் போலிருக்குது… பேச்சு சுவாரசியத்துல நம்ம மொகத்தை சரியாக் கவனிக்கல்லே… நான் போய்க் குடிசைக்குள்ளாற இருக்கேன். கூட ஒருத்தன் வர்றதை ஞாபகம் வச்சுக்கிட்டு கண்ணியமா நடந்துக்கிடுங்க. அவனைக் கண்டுக்கிட்டதாவே காட்டிக்கிடாதீங்க…ஏறுமாறா எதுனாச்சும் பேசி வச்சுடப் போறீங்க…” என்று அவசர அவசரமாக எச்சரித்துவிட்டு அவள் சட்டென்று குடிசைக்குள் நுழைந்துவிட்டாள்.

      தம்மை நோக்கி வந்துகொண்டிருந்தவன் தம் மகன்தான் என்பதை ஓரக்கண்ணால் பார்த்துத் தெரிந்துகொண்ட பரமசிவம் தலையைத் தாழ்த்திக்கொண்டார். வெயிலுக்காகத் தலையில் அவர் கட்டியிருந்த பெரிய முண்டாசு காரணமாகவோ அல்லது நண்பனோடு பேசிக்கொண்டு வந்த மும்முரத்தாலோ அவரை இனங்கண்டுகொள்ளாத முத்து அறுந்து போன தன் செருப்பைக் கையில் பற்றியபடி அவருக்கு மிக அருகில் வந்த பிறகு அவர் சட்டென்று தலை நிமிர்ந்ததும் அசந்து போய்விட்டான். மகனின் திடுக்கீட்டால் சிறிதும் பாதிக்கப்பட்டதாய்க் காட்டிக்கொள்ளாத பரமசிவம் மனைவியின் நாகரிகமான எச்சரிக்கைக்கு மதிப்பளித்தவராய் அதை அவன் கையிலிருந்து வாங்கிக்கொண்டார்.     

      அறுந்து போய்விடுகிற செருப்புத் தோலைச் செப்பனிட முடிவதைப் போல் அறுந்து போன உறவைச் செப்பனிட முடியுமா என்று தமக்குள் எண்ணி வேதனையுடன் நகைத்துக்கொண்ட அவர் செருப்பைத் தைத்துவிட்டுத் தலை நிமிராமலே அவனுக்கு முன் வைத்தார்.

       “எவ்வளவு கொடுக்கணும்?” என்று கூடக் கேட்காமல் முத்து ஒரு ரூபாய்த்தாளை வைத்துவிட்டுச் செருப்பை மாட்டிக்கொண்டு ஓரடி எடுத்து வைத்துவிட்டன்.

       “இந்தாங்க. மீதிச் சில்லறை வாங்காம போறீங்களே!” என்று பரமசிவம் அவனைக் கூப்பிட்டார்.

        திரும்பிப் பாராமலே ஒரு கணம் திகைத்துப்போய் நின்ற முத்து,“பரவாயில்லை. நீங்களே வச்சுக்கிடுங்க,” என்று அடைக்கும் குரலில் பதில் சொல்லிவிட்டு விரைந்து சென்றுவிட்டான். நண்பன் உடனிராதிருந்திருந்தால், அவன் தம்மோடு பேசியிருந்திருப்பான் என்று அவர் நினைத்துக்கொண்டார். ‘நாமும் சுடச்சுட நாலு கேள்வி கேட்டிருக்கலாம்’ என்கிற எண்ணமும் அந்த நினைப்பைத் தொடர்ந்து வந்தது.

      மகன் போன பிறகு குடிசையிலிருந்து வெளிப்பட்ட வேலாயி, “கொஞ்சம் இளைச்சுப்போன மாதிரி தெரியல்லே?” என்றாள்.

       “ஆமாமா. இளைச்சுத்தான் போயிருக்கான். ஏன்னா, உன் கைச்சோறு சாப்பிடாம இருக்கானில்லே, அதனாலேதான் … போடி, போக்கத்தவளே … பெரிய ஜமீந்தார் கணக்கா, மீதிச் சில்லறைய வாங்காம, ‘நீயே வச்சுக்க’ ன்னு சொல்லிட்டுப் போறாண்டி உன் மகன். கவனிச்சியா?”

       “கவனிச்சேன்.”

       … சற்றுப் பொறுத்து முத்து அவர்கள் எதிரில் வந்து நின்றான். அவன் கண்கள் கலங்கியிருந்தன.

       “வாடா, முத்து. சொகமாயிருக்கியா?” என்று வேலாயிதான்  அவனை வரவேற்றாள்.

       “நீங்க ரெண்டு பேரும் சொல்லாம கொள்ளாம கெளம்பிப் போயிட்டீங்களே … எங்கிட்டெல்லாம் தேடியலைஞ்சேன்?”

       “ஏண்டா! எதுக்காகத் தேடினே? தேடிக் கண்டுபிடிச்சு ரெண்டு புள்ளைங்களுமாச் சேர்ந்துக்கிட்டு அப்பனையும் ஆத்தாளையும் ஆளுக்கொருத்தராப் பங்கு போட்டுக்கிட்றதுக்கா?” என்று இடக்காகக் கேட்ட பரமசிவம், தலை நிமிர்ந்து தம் சிவந்த விழிகளால் அவனைக் கண்கொட்டாமல் ஊடுருவிப் பார்த்தார்.

       “தப்புதாம்ப்பா. என்னை மன்னிச்சுக்கிடுங்க. நடந்ததை யெல்லாம் மறந்துட்டு இப்பவே ரெண்டு பேரும் கெளம்பி என்னோடெ வந்திடுங்க… இந்தக் கேவலமான தொழிலை நீங்க இந்த வயசுலே ஏம்ப்பா செய்யணும்?”

        பரமசிவம் உடம்பு பதற எழுந்து நின்றார்.

       “என்னடா சொன்னே? கேவலமான தொழிலா! எதுடா கேவலமான தொழில்? செருப்புத் தைக்கிறது கேவலமான தொழிலா? ஏண்டா, டேய்! அந்தத் தொழில்லே எனக்குக் கெடச்ச வருமானத்துலேதாண்டா ரெண்டு பேரும் நாலு எழுத்துப் படிச்சீங்க. அதை என்னிக்கும் மறக்காதீங்க. கேவலம் தொழில்லே இல்லேடா. உன் மனசிலேதான் இருக்குது. … அன்னைக்கி நீங்க ரெண்டு பேருமாச் சேந்ர்துக்கிட்டு எங்க ரெண்டு பேரையும் யாரு வச்சுக்கிட்றதுன்னு போட்டி போட்டீங்களே, அதுதாண்டா கேவலத்துலேயும் கேவலம்…. சுடுகாட்டிலே குத்திக்குத்தி வேக விட்றானே அவன் தொழில்லே ஆரம்பிச்சு ரேடியோப் பெட்டி செய்யிறானே அவன் தொழில் வரையிலே எல்லாத் தொழிலும் ஒண்ணுதாண்டா. இது ஒசத்தி, அது கேவலம்குற பேச்சே கிடையாது. படிப்பு உன்னை இவ்வளவு கேவலமாக்கிடும்னு தெரிஞ்சிருந்தா நான் உன்னைப் படிக்க வெச்சிருக்கவே மாட்டேன். நீங்க ரெண்டு பேரும் இங்கிலீஷ் படிக்கணும், கை நெறையச் சம்பாதிக்கணும், நாலு பேரைப் போலப் பெரிய மனுசங்களாகணும்னு உங்களைப் படிக்க வெச்சேனே தவிர, என் தொழில் கேவலம்னோ, அதை நீங்க செய்யக் கூடாதுன்னோ இல்லைடா. … தெரிஞ்சுக்க. … போடா, போடா….என் கண் முன்னாலே நிக்காதே. …” என்று சாமி ஏறியவர் போல் கூச்சலிட்ட பரமசிவம் அவன் கொடுத்துச் சென்ற ஒரு ரூபாய்த்தாளை அவனிடம் நீட்டி, “இந்தாடா உன் பிச்சைக்காசு. பிடி.  ஏண்டாலே, அப்பனுக்குத் தருமமா செய்யறே?” என்று கூறியவாறு விழிகள் சிவக்க நின்றார்.

      முத்து தலை குனிந்தபடி பேசாது நின்றான்.  அவன் கண்களில் விளிம்புகட்டி நின்ற கண்ணீரைக் கண்டதும் வேலாயியின் உள்ளம் உருகிற்று.

       “செஞ்சது தப்புன்னு அவந்தான் மன்னிப்புக் கேக்குறானே? அவனை ஏன் குத்திக் குத்திப் பேசறீங்க?”

       “மன்னிப்புக் கேட்டுட்டா மட்டும் செஞ்ச தப்பு போயிடுமாடி? செஞ்சது செஞ்சதுதானே? …  நீ வேணாப் போயி அவங்கிட்ட இரு. நான் தடுக்கல்லே. ஆனா, நான் வர்றதாயில்லே. அப்பனை நீ வச்சுக்க, ஆத்தாளை நான் வச்சுக்குறேன்னும், நீ அவங்களை ஆறு மாசம் வச்சுக்க, நான் ஆறு மாசம் வச்சுக்குறேன்னும் பங்கு போட்டவங்க இன்னொரு சமயத்துலே நம்மள அடியோட கைவிட மாட்டாங்கன்னு என்ன நிச்சயம்? … ஏலே! நீ சோறு போடல்லேன்னா நாங்க பட்டினி கிடந்து அப்படியே பரிதவிச்சுப் போயிறுவம்னு நெனச்சுக்கிடாதே. இந்தக் கையும் தொழிலும் இருக்கிற வரையிலே நான் உங்ககிட்ட வரவே மாட்டேண்டா. … அப்படியே விதிவசத்தாலே கையாலாகாமப் போயிட்டாக்கூட, பிச்சை எடுத்தாச்சும் சாப்பிடுவேனே தவிர, உங்க கிட்ட வந்து கையேந்தி நிக்க மாட்டேன். … தெரிஞ்சுக்க… எனக்கும் தன்மானம்னு ஒண்ணு இருக்குடா – நான் உன் மாதிரி படிக்காட்டியும் கூட …”

      வேலாயி, “முத்து! பேசாம போயிறுடா. உங்கப்பாரு கோவந்தான் உனக்குத் தெரியுமே. போயிறு… ஊரு கூடி அசிங்கமாகுறதுக்கு முந்திச் சட்னு போயிறு …” என்று கண்ணீருடன் மகனை எச்சரித்தாள்.

       முத்து தன் மேல் வந்து விழுந்த ஒரு ரூபாய்த் தாளை எடுத்துக்கொண்டு மெதுவாக நடந்து சென்றான்,

       “கேவலமான தொழிலாமில்லே! கேவலத்தையும் இன்னொண்ணையும், கண்டுப்புட்டவன் மாதிரித்தான். …வேலாயி! நீ சொல்லு …இப்படிப்பட்ட புள்ளைங்க கையை எதிர்பார்த்து  நீயும் நானும் போயி நின்னா அதில்லே கேவலம்?” என்று முணுமுணுத்த பரமசிவம் தோலைப் பதப்படுத்தும் வேலையில் முனைந்தார்.

…….

Series Navigationஇந்திரா பார்த்தசாரதியின் சூசைம்மாவும் அத்வைதமும்தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Comments

  1. Avatar
    noel Nadesan says:

    மனிதர்கள் வாழும்வரையும் வாழக்கூடிய கதை ஒவ்வொரு வீட்டிலும் எப்போதாவது நடக்கும். 50 வருடங்கள் பின்பு கூட மனத்தில் ஆழமாக புதையும். எழுத்தாளராக என்னைப் பொறாமைப்பட வைக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *