தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 18

This entry is part 2 of 13 in the series 25 அக்டோபர் 2020

 

ஸிந்துஜா 

பாப்பாவுக்குப் பரிசு 

குழந்தைகளின் உலகத்தில் உள்ளே நுழைவதே கஷ்டம். அதிலும் அவர்கள் சற்று விவரம் அறிந்து கொண்ட பருவத்தில் இருக்கும் போது அவர்களின் பார்வை,எண்ணம் எல்லாம் திகைக்கும் வண்ணம் மாறி விடுவது ஆச்சரியத்தை சதா அள்ளித் தெளிக்கும் 

விஷயம்தான். எட்டு வயதுப் பாப்பாவின் (பாப்பாவின் பெயரே பாப்பாதான் !) உள்ளத்தில் ஜானகிராமனைப் போன்ற எழுத்தாளர் நுழைந்து விடும் போது என்னென்ன சாகசங்கள்,நிகழ்ந்து விடுகின்றன ! குழந்தையின் மனோலயத்தைப் புரிந்து கொண்டு அவள் மீது பரிவுடன் ஜானகிராமன் சித்தரிக்கும் செயலோடு இணைந்த தோற்றம் சிலிர்ப்பு, சத்தியமா ஆகிய அவரது கதைகளை 

நினைவில் கொண்டு வருகிறது.  

பாப்பாவும் அவள் அம்மாவும் அன்று வீட்டில் தனியாகப் படுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவள் அப்பா வெளியூர் போயிருக்கிறார்.

நடுநிசியில் அவளுக்கு முழிப்பு ஏற்பட்டு விடுகிறது. அம்மாவுக்கோ நல்ல தூக்கம்.! பாப்பா பார்க்கிறாள்:  ‘வானத்தில் தங்கம் இறைந்து கிடந்தது. கொய்யா மரங்கள் சளசளவெனச் சிரித்தன. பாப்பாவுக்கு இரவுத் தேவதையின் சிரிப்பாகத்தான் தோன்றிற்று அந்தச் சலலப்பு. தென்னை மரங்கள் இரண்டும் சிறு காற்றில் ஆடி ஆடித் தூங்கி வழிந்தது, முற்றத்தில் தெரிந்தது. எங்கேயோ 

நெடுந் தொலைவிலிருந்து தமுக்கு ஓசை அடக்கமாகக் கேட்டுக் கொண்டே இருந்தது.காளியாட்டமா? ஊர் எல்லையில் புதுக்குளத்தியம்மனுக்குப் பச்சை படைக்கிறார்களா? அந்தத் தமுக்கு ஓசையில் பச்சைக்காளி பாபுக்காளிகளின் தித்திப்பல்லும் பளிங்கு விழியும் கூட மிதந்து வந்தன… ஒருபக்கம்  ஙிஙிஙி என்று சுவர்க்கோழியின் மெல்லிய இசை எங்கிருந்து என்று தெரியாமல் ஓயாமல் இசைத்தது. சுவர்க்கோழியின் சத்தமா அல்லது நக்ஷத்திரங்கள் சீட்டியடிக்கின்றனவா?” 

இது எட்டு வயதுக் குழந்தையின் வர்ணனை என்பது ஆச்சரியத்தை உண்டாக்குகிறது. நம்பும்படியாக இல்லை!ஜானகிராமன் பாப்பாவுக்குள் புகுந்து கொண்டு விட்டார் போல.

பாப்பா கண்ணை மூடப் போகும் நேரம் ஒரு திருடன் வீட்டுக்குள் நுழைவதைப் பார்த்து விடுகிறாள். திருடன் அவளது அம்மாவைக் கத்தியைக் காட்டிப் பயமுறுத்த அவள் கல்லாக உறைந்து போகிறாள். பக்கத்தில் படுத்திருக்கும் பாப்பாவைத் திருடன் பார்க்கும் போது அவள் நல்ல தூக்கத்தில் இருக்கிறாள். கண்ணின் இடுக்கு வழியாக அவள் திருடனைப் பார்ப்பது அவனுக்குத் தெரியவில்லை. பெட் ரூம்  விளக்கின் ஒளி அவனது கூர்மையை மழுக்கி விடுகிறது. திருடன் சாமான்கள் இருக்கும் அறைக்குள் 

போய் விடுகிறான்.

பாப்பா மெல்ல எழுந்து அறையருகில் சென்று உள்ளே பார்க்கிறாள். திருடன் பாப்பாவின் பட்டுப் பாவாடையும், அம்மாவின் இரண்டு பட்டுப் புடவைகளும் இருக்கும் பெட்டியைத் திறக்க முயன்று கொண்டிருக்கிறான். பாப்பா சட்டென்று பாய்ந்து தாழிடும் வளையத்தை இழுத்துக் கதவைப் படீரென்று சாத்தி நிலையில் இருந்த நாதாங்கியில் வளையத்தை மாட்டி விடுகிறாள். கூடத்தில்

கிடந்த விசிறியை எடுத்து வந்து கொக்கியில் சொருகுகிறாள்  இனிமேல் கதவைத் திறக்க முடியாது.

பாப்பா அடுத்த வீட்டுக்குச் சென்று வீட்டு வாசலில் கட்டிலில் உறங்கிக் கொண்டிருக்கும் ஐயாத் தேவரை எழுப்பி ‘திருடன் திருடன்’ என்று கத்துகிறாள். சத்தம் கேட்டு அண்டை அசலில் உள்ளவர்கள் கம்பு, அரிவாள், விறகுக் கட்டை, தலைக்கு வைத்துக் கொள்ளும் மணை என்று ஆளாளுக்குக் கையில் எடுத்துக் கொண்டு திரண்டு விடுகிறார்கள். அவர்கள் கட்டளையில், திருடன் வெளியில் வருகிறான். அவனைப் போட்டுத் துவைத்து எடுத்துப்  பின்னி விடுகிறார்கள். அவன் பிள்ளைகுட்டிக்காரன் என்று கெஞ்சுவதை யாரும் கேட்பதில்லை. பாப்பாவுக்கு அழுகை வந்து விடுகிறது. “தேவர் மாமா, விட்டுடுங்க மாமா அவரை.  இனிமே செய்ய

மாட்டேன்னுட்டாரே, விட்டுடுங்க” என்று தொண்டை அடைக்கக் கெஞ்சுகிறாள். அதை யாரும் காதில் வாங்குவதில்லை. 

“கையைக் கட்டிப்போட்டு அடிக்கிறீங்களே, அவுத்து விட்டு அடிங்க பாப்பம்” என்று ஆத்திரம் தாங்காமல் தொண்டை விரியக் கத்துகிறாள். திருடனைப் பிடித்துக் கொடுத்த அவளே அந்தத் திருடனை விட்டு விடுமாறு கெஞ்சும் குழந்தை மனம் அழகாக வடிக்கப்பட்டிருக்கிறது. அவன் படும் துயரம் அவளின் குழந்தை நெஞ்சைக் கரைக்கிறது. “உங்களுக்குத்தான் பாவம். இதுக்கெல்லாம் சாமி கொடுப்பாரு” என்று அவள் கறுவுகிறாள் ! 

கோர்ட்டில் விசாரணை நடக்கையில் பாப்பா சாட்சி சொல்லுகிறாள். பாப்பா ஒன்றையும் விடவில்லை. ஓட்டுக்கூரை மீது பார்த்தது முதல் யார், யார், எதனால் எப்படி எங்கெங்கு அடித்தார்கள் திட்டினார்கள் – எல்லாவற்றையும் சொல்லிக் கொண்டே வருகிறாள்.

“செத்த பாம்பை அடிக்கிற மாதிரி கையைக் கட்டிப் போட்டுப்பிட்டு எல்லோரும் அடி அடின்னு அடிச்சுக்கிட்டேயிருந்தாங்க.

அவரு பச்சைப் புள்ளே மாதிரி அழுதார். இவங்க அப்பத்தான் இன்னும் நாலு குடுப்பாங்க. இம்மாம் பெரிசி , பெரிசிக்கு அவரு உடம்பெல்லாம் வீங்கிப் போயிடுச்சு. ஐயோ ஐயோன்னு அவுரு பள்ளிக்கூடத்துப் பையன் மாதிரி கத்தினாரு. பாவம்…..கட்டை அவுத்துப்பிட்டு அடிச்சிருந்தாங்கன்னா அப்ப தெரிஞ்சிருக்கும்” என்று கோர்ட்டில் கூடியிருந்த மனித வர்க்கத்தையே கண்டு கறுவுகிறாள்.

பாப்பாவின் நியாய புத்தி நம்மைத் தூக்கி வாரிப் போடச் செய்கிறது. தப்பு செய்தானா, ரெண்டு அடி போடு, எதுக்கு கொலை அடி 

அடிச்சுக்  கொல்லணும் என்பது அவளது லாஜிக். ஜட்ஜ் சிரிக்கிறார். “நீ ஏன் அவரைப் பிடிச்சுக் கொடுத்தே ? எல்லோரும் அப்படி அடிச்சா இவங்க எல்லாரையும் பிடிச்சு நீ ரூமுக்குள் தள்ளி பூட்டி வச்சிருக்கணும்” என்கிறார்.” “இவங்களா, இவங்க அத்தினி பேரையுமா?” என்று பாப்பா கேட்கிறாள். ஜட்ஜ் அவளிடம் ” நீயே பாரு, அடிக்கிறதெல்லாம் அடிச்சிட்டு அவன் மேலே கேஸை வேறே போட்டுட்டாங்க. மனிசங்கன்ன அப்பிடித்தான்”என்று சொல்லிச் சிரிக்கிறார்,

திருடனுக்கு ஜட்ஜ் கடுங்காவல் தண்டனை கொடுத்து விடுகிறார்.  பாப்பாவின் துணிச்சலைப் பாராட்டி அவளுக்கு சர்க்காரி

டமிருந்து இருபது ரூபாய் சன்மானம் வருகிறது. அதைத் தந்தையிடம் வேண்டாம் என்று ரூபாய் நோட்டைக் கசக்கி எறிகிறாள். அவளுக்கு வந்த பணம் பட்டுப் பாவாடையும் சட்டையுமாக மாறி வருகிறது. அதையும் அவள் வேண்டாம் என்கிறாள். அவள் அம்மா “சீச்சீ, தீவளிச் சட்டையை வாணாமுங்கப்படாது.பாவம் கிஷ்ணரு கோவிச்சுப்பாரு” என்று பாப்பாவுக்கு கட்டி விட்டு ஒத்திகை பார்க்கிறாள்.

அவ்வளவுதான். அதையும் அவிழ்த்தெறிந்து விட்டுப்  பிறந்த மேனிக்கு நிற்கிறாள் பாப்பா.

“சீச்சீ, வெட்கம் கெட்ட நாயி….சொரணையில்லே உனக்கு>”

“அப்படித்தான்” என்று பாப்பா பழம் பாவாடையை எடுக்கிறாள்.

அவள் அம்மா அவளை போட்டுத் திட்டுகிறாள். அவளிடம் ஆத்திரம் குமுறைக் கத்தி விட்டுப்  பாப்பா வீல் என அழுகை வைக்கிறாள்.

பாப்ப்பாவின் பார்வை மூலம் ஜானகிராமன் பல கேள்விகளை முன்னே வைக்கிறார். ஒரு திருடனைப் பிடிக்கும் ஊர்க்காரர்கள் அவன் மேல் கை  வைக்கலாமா?அவன் மீது வன்முறை செலுத்த அவர்களுக்கு உரிமை உண்டா?  அவர்கள் செய்ய வேண்டிய

தெல்லாம் காவலர்களிடம் திருடனை ஒப்புவிப்பது மட்டும்தானே? ‘அடித்த எல்லோரையும் உள்ளே தாழ்ப்பாள் போட்டு அடைத்திருக்க வேண்டும்’  என்று  ஜட்ஜ் பாப்பாவிடம் சொல்லுவது ஊராரின் அடிதடிச் செய்கைகளை அவரும் மனதார ஒப்புக் கொள்வதில்லை, அவர்கள் எல்லோரும் தண்டனைக்குரியவர்களே என்று நினைக்கிறார் என்பதுதானா? ஆனால் சட்டம் என்னும் கழுதையை மேய்க்கும் உரிமை மட்டும்தான் அவருக்கு இருக்கிறது என்பதால் ஜட்ஜ்  திருடனுக்குத் தண்டனை அளிப்பதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாதவர்தான் என்று இக்கதை சுட்டிக் காட்டுகிறதா?  பாப்பாவைப் போன்ற நியாயத்துக்கு மன்றாடும் 

சாதாரண ஜனம் அவள் அறைக்குள் உடையை அவிழ்த்துப் போட்டுத் தன் இயலாமையை நினைத்து எரிச்சல் படுவது போலத்  தமக்குள் மருகிச் சாவது தவிர வேறு ஒன்றும்  செய்ய இயலாத காலத்தில் வாழ்கிறதா? .

Series Navigationசி.சு.செல்லப்பா என்னும் விமர்சன ஆளுமைசொல்வனம் இணையப் பத்திரிகையின் 233 ஆம் இதழ்
author

ஸிந்துஜா

Similar Posts

Comments

  1. Avatar
    jananesan says:

    குழந்தையின் உள்ளத்துள் நுழைந்து சமூகத்தின் அத்துமீறலை , நீதிமன்றத்தின் கையறு நிலையை தி.ஜா உணர்த்தியதை உணர்த்தியவாறே குறுகத் தரித்து தந்த சிந்துஜாவுக்கு பாராட்டுகள். விரித்துச் சொல்வது எளிது, கதையின் உயிர்ப்பு கெடாமல் சுருக்கி சொல்வது கடினம்.சிந்துஜா தொடர்ந்து இந்தப் பணியைச் சிறப்பாகச் செய்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *